என்னுள் யாவும் நீயாக – 31

அத்தியாயம் – 31

“சாரி… சாரிங்க… எல்லாம் என் தப்புத்தான். கல்யாணம் ஆகுற வரை என் மனசைக் கண்ட்ரோலில் வச்சுக்காம தடுமாறி காதலில் விழுந்தது என் தப்புத்தான். இப்போ என் தப்பினால் தான் உங்களுக்கு இந்த வலி. சாரி…” என்று மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டு வருந்தினாள் வசுந்தரா.

“நீ ஏன் இவ்வளவு மன்னிப்புக் கேட்குற தாரா? நீ மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை…” என்றான் பிரசன்னா.

“இல்லை.. நான் என் மனசை அலைப்பாய விட்டது தப்புத்தானே?” என்று அவள் மீண்டும் வருந்த, “போதும் தாரா!” என்று அவளின் பேச்சை நிறுத்தியவன்,

“உன் மேல் வைத்த காதலில் நான் தோற்றுப் போனேன்னு சொன்னது நீ முன்னாடி காதலித்ததால் இல்லை…” என்றான் அழுத்தமாக.

“என்ன சொல்றீங்க? அதுக்காக இல்லையா?” என்று வியந்து கேட்டாள்.

“ஆமா அதை வைத்து நான் சொல்லலை. கொஞ்சம் நிதானமாக நம்ம பர்ஸ்ட் நைட் அன்னைக்கு நடந்ததை யோசித்துப் பார்த்தாலே நான் சொல்ல வர்றது புரியும்…” என்று பிரசன்னா சொல்ல, அவன் சொல்ல வருவதைச் சரியாகக் கிரகிக்க முடியாமல் தடுமாறினாள் அவனின் மனைவி.

“நீ உன் முன்னால் காதலைச் சொன்னதும் ‘நீ காதலித்தாய். அதனால் என்ன?’ என்ற அர்த்தத்தில் ‘சோ?’ என்று தான் நான் உன்னிடம் கேட்டேன்…” என்றான் விளக்கமாக.

அவன் சொன்னதை ஞாபக அடுக்கில் யோசித்துப் பார்த்தாள் வசுந்தரா. “சோ?” என்றுதான் கணவனும் கேட்டான் என்று ஞாபகத்தில் வந்தது.

“அந்தக் கேள்வி எப்படிக் கேட்டேன்னு தெரியுமா? இந்தக் காலத்தில் காதல் எல்லாம் சர்வசாதாரணமாக நிறையப் பேருக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தக் காதல் எல்லோருக்கும் வெற்றியைத் தருகிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை தான்.

பத்து ஜோடி காதலிச்சா அதில் இரண்டு ஜோடி காதல் தான் கல்யாணத்தில் முடியும். அந்த நிலை தான் நாட்டில் நிறைய நடக்குது. அதுபோல் உன் காதலும் தோற்று விட்டது. அவ்வளவுதான்! என்று நினைத்துத் தான் சொன்னேன்..” என்றான்.

“அப்போ… அப்போ அதனால் என் மேலே உங்களுக்குக் கோபம் இல்லையா?” என்று நம்பமுடியாத வியப்புடன் கேட்டாள்.

“கோபம் இல்லை. ஆனால் வருத்தம் நிறைய இருந்தது. நாட்டு நடப்பைப் புரிந்து என்னைத் தேற்றிக் கொண்டாலும் நானும் சாதாரண மனிதன் தானே? அதனால் அந்த வருத்தம் வருவதையோ, அதனால் உண்டான வலியையோ என்னால் தவிர்க்க முடியலை…” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு ‘எப்படிப்பட்டவன் என் கணவன்!’ என்று வியப்பாகத் தான் வசுந்தராவிற்குத் தோன்றியது.

அவன் கோபமில்லை என்று சொன்னது அவளை ஆச்சரியப்படுத்தியிருந்தது.

மனைவியின் ஆச்சரிய விழிகளைக் கண்டவன் “ஓவரா பெருமைப்படாதீங்க மேடம்…” என்றான் நக்கலுடன்.

“ஏன்?”

“முதலில் எனக்கு வருத்தம் மட்டும் தான் இருந்தது. ஆனால் அதைக் கோபமாக மாற்றியது நீதான்…” என்றான்.

“என்ன?” என்று அவள் பதட்டமாகக் கேட்க,

“பின்ன என்ன? என் வருத்தத்தை நான் ஜீரணித்துக் கொள்ள முயன்று கொண்டு இருந்தபோது நீ வந்து என்கிட்ட மனைவியாக வாழத் தயார் என்று சொன்னாய். அதைக் கேட்டு எனக்கு எக்கச்சக்கக் கோபம். எனக்கு இருந்த கோபத்தில் அப்படியே உன்னை அறையணும் போல இருந்தது…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.

“என்ன…” என்றவள் இப்போது முகத்தைச் சுருக்கினாள்.

“என்ன நொன்ன? பின்ன என்னவாம்? கடமைக்கு உன் கூட வாழவா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்?” என்று இப்போதும் கோபம் குறையாமல் கேட்டான்.

“நீங்க அப்படியே தோற்றுப் போனது போல நின்றிருந்தது எனக்குக் கஷ்டமா இருந்தது. அதனால் உங்களுக்காகத் தான் சொன்னேன்…” என்று தயக்கத்துடன் இழுத்தாள்.

“எனக்காகச் சொன்னாலும் கடமைக்கு வாழும் வாழ்க்கை நமக்கு இனித்து விடுமா?” என்று கேட்டான்.

“கண்டிப்பா இல்லை தான்!” என்று உடனே ஒத்துக்கொண்டாள் வசுந்தரா.

“ஆனா அந்த விஷயத்தில் எனக்கு ரொம்பப் புடிச்சது நான் கடமையாக வாழத் தயார் என்று சொல்லியும் நீங்க விலகிப் போனது. அது என் மனசை உங்க பக்கம் இழுத்துட்டு வந்துச்சு…” என்றாள் வசுந்தரா.

“ஆமா, அப்படியே இழுத்துட்டு வந்ததால் தான் என்னை உரிமையாக என்னங்க இல்லைனா பேர் சொல்லிக் கூடக் கூப்பிடாமல் மூன்றாம் மனிதரிடம் பேசுவது போல் பேசினாயா?” என்று கோபமாகக் கேட்டான்.

அவள் அப்படி மூன்றாம் மனிதனாக அவனை நடத்தியது இன்னும் அவனுக்கு வலிக்கத்தான் செய்தது. அந்தக் கோபத்தை இப்போது மனைவியிடம் காட்டினான்.

“சாரிங்க தப்புத்தான். அப்போ எனக்கு ரொம்பக் குற்றவுணர்வா இருந்தது. அதான் அப்படி நடந்துகிட்டேன்…” என்று உடனே மன்னிப்புக் கேட்டாள் வசுந்தரா.

“ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ தாரா! உன் மேல நான் கோபப்பட்டதும், எரிச்சல் பட்டதும், அப்பப்போ குத்திக் காட்டியதும், என் காதல் தோற்றுவிட்டதுன்னு சொன்னதும் எல்லாத்துக்குமே காரணம் நீ. நீ என் மேல் பிடித்தம் இல்லாமல் இருந்ததும், என்னை யாரோ போல நினைச்சதும், என்கிட்டே உரிமையைக் காட்டாம கடமையைக் காட்ட நினைச்சதும் மட்டுமே தான் காரணமே தவிர உன் முன்னால் காதல் விஷயம் இல்லை…” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவனைக் கண்டு எப்போதும் விழிகளை விரிப்பவள் இப்போது விழிகள் தெரித்து விடுவதைப் போல் பார்த்தாள்.

தான் வேறு ஒருவனைக் காதலித்ததால் அப்படித் தன்னைக் குத்திக் காட்டிக் கோபப்படுகின்றான் என்று அவள் நினைத்திருக்க, அவனோ அவள் முற்றிலும் நினைத்துக் கூடப் பார்க்காத காரணத்தைச் சொன்னால் அவளால் எப்படி வியக்காமல் இருக்க முடியும்?

அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் போல் “ஆமாம், அதுதான் உண்மை. நீ யாரோ போல் இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அதில் என் காதல் தோற்றுப் போனது போல் உணர்ந்தேன். அந்தத் தோல்வியின் வெளிப்பாடு தான் கோபப்பட்டதும், குத்திக் காட்டியதும். ஆனால் அதே நேரம் ‘என்ன இப்படியெல்லாம் அவளைக் குத்திக்காட்டிப் பேசுகிறாய்?’ என்று கேட்டு என் மனசாட்சியே என்னைக் குத்திக் கிழிக்கும்.

“ஆனாலும் என் தோல்வியின் வலி ‘என் மனைவி என்னை ஏன் காதலிக்கலை’ன்னு நினைக்க வைத்தது. அதனால்தான் அப்படி அப்பப்போ கொஞ்சம் கடுமையா பேசிட்டேன். ஆனாலும் நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது தான். அதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன்…” என்றான்.

“இல்லை… இல்லை… சாரி எல்லாம் வேண்டாம்…” என்று வேகமாக மறுத்தாள் வசுந்தரா. அவனின் வலி தான் அவளுக்கு நன்றாகப் புரிந்ததே!

“ஒருத்தரோட மனசைக் காயப்படுத்துற அளவுக்குத் தப்புப் பண்ணினா கண்டிப்பா சாரி கேட்கணும். அதனால் என்னைத் தடுக்காதே! அதை விட்டுடு. வேறு பேசுவோம்…” என்று பேச்சை மாற்றினான்.

“என் காதல் தோற்றுப் போய்விட்டதுன்னு உள்ளுக்குள் ஒரு வலி இருந்து கொண்டே இருந்தாலும் இன்னும் ஒன்றும் தோன்றியது. நான் உன்மேல் வைத்த என் காதலுக்குச் சிறு தோல்வி தான். ஆம்! சிறு தோல்வி தான்! அதுவும் என் பக்கம் மட்டுமே!

ஆனால் என் மீதான உன் காதல் இன்னும் ஏற்படவே இல்லையே? அப்புறம் எப்படி என் காதல் தோல்வி அடைந்து விட்டதுன்னு நினைக்க முடியும்னு தோன்றியது. நீ என்னைக் காதலிக்கவே இல்லை என்னும் போது நான் அதற்குள் தோல்வின்னு நினைச்சது என் முட்டாள் தனமாகத் தோன்றியது. அப்போத்தான் உனக்கு என் மேல் காதலை வர வைத்து என் காதலை நான் வெற்றி அடைய வைக்கணும்னு நினைச்சேன்…” என்றான்.

அவனின் எண்ணத்தைக் கேட்டு வாயடைத்துப் போனாள் வசுந்தரா. அவனின் ஆசையும், எதிர்பார்ப்பும், தீவிரமும் தன் மீது உண்டான காதலால் அல்லவா?

“உனக்கும் என் மீது காதல் வர வைக்கணும்னு ரொம்பத் தீவிரமா எப்போ முடிவு எடுத்தேன் தெரியுமா?” என்று கேட்டான்.

‘தெரியாது’ என்று தலையை அசைத்தாள் வசுந்தரா. அவளால் பேசவே முடியவில்லை. ஏனோ அவன் தன் மீது வைத்திருக்கும் காதல் வாயடைத்துப் போக வைத்தது.

“நாம ஊட்டி போனபோது உன்னைத் தனியா ரூமில் விட்டுட்டு நான் மட்டும் வெளியில் போயிட்டு வந்தேன் இல்லையா? அப்போது யோசித்து எடுத்த முடிவுதான் இது!” என்றான்.

“இதை யோசிக்கத்தான் வெளியில் போனீங்களா? நீங்க திரும்பி வரும்வரை நான் எவ்வளவு பயந்து போய் இருந்தேன் தெரியுமா?” என்று சலுகையுடன் கேட்டாள்.

“நான் வெளியில் போனதால் நீ பயந்து மட்டும்தான் போனாய் தாரா. ஆனா நான் ரூமில் இருந்திருந்தால் நீ காயப்பட்டுப் போயிருப்பாய்…” என்றான்.

“என்ன சொல்றீங்க?”

“உண்மையைச் சொல்றேன் தாரா. நம்ம ஹனிமூன் அப்போ என்னென்ன செய்யணும்னு நான் எவ்வளவு கனவுகளோடு திட்டம் போட்டுருந்தேன் தெரியுமா?” என்று ஊட்டிக்கு என்ன காரணத்துக்காக டிக்கெட் எடுத்தான். அவளுடன் எப்படியெல்லாம் நேரம் செலவழிக்க முடிவு எடுத்திருந்தான் என்பதை எல்லாம் சொன்னான்.

“உன் கூட இணைபிரியாத தம்பதிகளாக நாம வாழணும்னு ஆசைப்பட்டு நாம ஏற்கனவே போன ஊராக இருக்கணும்னு ஊட்டி போகணும்னு அங்கே போனால் உன்னைச் சாதாரணமாகத் தொட்டுக் கூட என்னால் பேச முடியவில்லை. நீயோ மூன்றாம் மனிதருடன் இருப்பதுபோல் ஒட்டாமல் இருந்தாய். அப்படி இருக்கும் போது என்னால் எப்படி உன்னை நெருங்க முடியும்? உன்னை நெருங்க முடியாமல் விரகத்தில் தவித்து எங்கே நான் உன்னை வார்த்தையால் காயப்படுத்தி விடுவேனோ என்று எனக்கே என் மீது பயம் வந்துருச்சு.

அதனால் தான் நாம வெளியில் சுற்றிவிட்டு வந்ததும் உன்னை விட்டுவிட்டு நான் மட்டும் வெளியில் ஓடினேன். வெளியில் சென்று இதே யோசனைதான். அடுத்து என்ன செய்வது? உன்னை எப்படி என் பக்கம் பார்க்க வைப்பது? உன் மனதை எப்படி மாற்றுவது? என்று யோசித்துக்கொண்டே உடல் வலிக்கும் அளவிற்குச் சாலையில் யோசனையுடன் நடந்து கொண்டே இருந்தேன். அவ்வளவு நடந்ததால் தான் என்னால் ரூமுக்கு வந்து படுத்ததும் தூங்க முடிந்தது. இரவிலும் உன்னைக் காயப்படுத்தாமல் தப்பிக்க எனக்கு அந்த வழி தான் தெரிந்தது…” என்று சொன்னவனை வேதனையுடன் பார்த்தாள் வசுந்தரா.

‘இப்படி என்னைத் தனியே தவிக்க விட்டு வெளியில் சென்றுவிட்டு வருகிறானே’ என்று அவனைப் பற்றிக் குறைவாக அவள் நினைத்துக் கொண்டிருக்க, அவனோ தன்னைக் காயப்படுத்தக் கூடாது என்று கால் வலிக்கும் அளவிற்கு நடந்திருக்கிறான்.

அவனின் மீதான அவளின் பெருமை மட்டுமில்லை. காதலும் கூடித்தான் போனது.

“நான் எடுத்து வைத்த முடிவின்படி ஊட்டியில் இருந்து வந்த மறுநாளிலிருந்து என் முயற்சியைத் தொடங்கினேன். என்னைச் சொந்தத்துடன் நீ பார்க்க வேண்டும். அதுக்காக… உன் பார்வை மாற, என்னைக் கவனிக்க வைக்க, நாம கணவன், மனைவின்னு உனக்கு உணர்த்தன்னு ஆரம்பித்து வைத்தது தான் உணவுப் பரிமாற்றம். நாம் என்ன சாப்பிட்டாலும் பகிர்ந்து சாப்பிடணும்னு நினைச்சது, உன் கூட நேரம் செலவழிச்சது, உன்னோட சாதாரணமா பேசிப் பழகியது எல்லாம்!”

“நான் செய்தது எல்லாமே ரொம்ப ரொம்பச் சாதாரணச் செய்கை தான்! ஆனால் உன்னோடு இருக்கும் அந்த ஒவ்வொரு மணித்துளிகளையும் ரசித்து அனுபவித்தேன். மனைவியின் மனம் கவர பெரிது பெரிதாக, நகை கொடுக்கணும், வீடு வாங்கிக் கொடுக்கணும், நிலம் வாங்கிக் கொடுக்கணும் என்பதை விட, இந்த ஓடும் உலகத்தில் எளிதில் கிடைக்காத அளவுக்கு உயர்ந்தது ‘நேரம் செலவிடுதல்’ ஒன்றே போதும்னு எனக்குத் தோணுச்சு. அதனால் அந்த வழியை நான் தேர்ந்தெடுத்தேன்…” என்ற கணவனைக் காதலுடன் பார்த்த வசுந்தரா,

“நீங்க என் கூட நேரம் செலவழித்தது எனக்கு ரொம்பப் பிடிச்சது…” என்றாள்.

“ம்ம்… ஆனா உனக்குப் பிடிக்க வச்ச அதே நேரத்தில் உன்னை வலிக்கவும் வச்சேன். என்னோட திட்டத்தில் அடுத்தக் கட்டமா இருந்தது அவ்வப்போது முத்தமிட்டு நமக்குள் நெருக்கத்தைக் கூட்டணும் என்பது தான். ஆனா…” என்றவன் சில நொடிகள் பேச்சை நிறுத்தினான்.

‘என்னாச்சு?’ என்பது போல் கணவனைப் பார்த்தாள் வசுந்தரா.

தன் கைகளுக்குள் இருந்த அவளின் கையை மென்மையாக விட்டவன், தன் கைகளால் அவளின் கன்னங்களைத் தாங்கிப் பிடித்து மனைவியின் முகத்தைக் காதலுடன் பார்த்தான்.

அவனின் பார்வை வீச்சு அவளை அப்படியே முழுங்குவது போல் இருந்தது.

அந்தப்பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் வசுந்தரா தவிக்க, அவளின் தவிப்பை அதிகரிக்க வைப்பது போல, “நான் வலுக்கட்டாயமா முத்தம் கேட்டு நீ என் பக்கத்தில் வந்து கன்னத்தில் முத்தம் கொடுக்க வந்தாய்ப் பார்… அப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? எனக்குக் கன்னத்தில் மட்டும் முத்தம் போதாது இங்கேயும் வேணும்னு தோணுச்சு…” என்றவன் அவளின் கன்னத்தைத் தாங்கியிருந்த கையின் பெருவிரலை மட்டும் சிறிது நகர்த்தி உதடுகளை நோக்கிக் கொண்டு வந்தவன் அந்த விரலால் அப்படியே அவளின் செவ்விதழ்களை வருட ஆரம்பித்தான்.

“எனக்கு இப்பயும் இங்கே கொடுக்கணும்னு தோணுது…” என்று கரகரப்பான குரலில் சொன்னவன் ‘கொடுக்கட்டுமா?’ என்று மனைவியிடம் கண்களால் வினவினான்.

அவனின் கேள்வியின் கணம் தாங்காமல் உதடுகள் நடுங்க, கண்களைச் ‘சம்மதம்’ என்பது போல் மூடிக் கொண்டாள் அவள்.

மனைவியின் சம்மதம் கிடைத்ததும் மெதுவாக அவளை நோக்கிக் குனிந்து அவளின் பட்டிதழ்களைத் தன் அதரங்களால் மென்மையாகப் பற்றிக்கொண்டான் பிரசன்னா.