என்னுள் யாவும் நீயாக – 22

அத்தியாயம் – 22

“கிளம்பிட்டியா வசு?” என்று கேட்ட குரலில் கண்ணாடியைப் பார்த்துத் தலைவாரிக் கொண்டிருந்த வசுந்தரா திரும்பிக் கணவனைப் பார்த்தாள்.

“கிளம்பிட்டே இருக்கேன்ங்க… இன்னும் ஒரு ஃபைவ் மினிட்ஸ் ப்ளீஸ்…” என்றாள்.

“ஓகே…” என்ற பிரசன்னா ஏற்கனவே கிளம்பித் தயாராகி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் பையில் தன் பொருட்கள் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

“முதலில் எங்கே போவதாக இருக்க?” என்று கேட்டான்.

“முதலில் அப்பா ஷோரூம் போயிட்டு சில கணக்கு எல்லாம் பார்த்துட்டு, மதியத்திற்குப் பிறகு நம்ம ஷோரூம் போறேன்…” என்றாள்.

“அப்பாகிட்ட பேசிட்டியா? அப்பா என்ன சொன்னார்?”

“மாமா உன் விருப்பம் போல நம்ம ஷோரூம் வாமா… அது எந்த நேரம் என்றாலும் சரின்னு சொல்லிட்டார்…” என்றாள்

“ஓ!” யோசனையாக இழுத்தான் பிரசன்னா.

“என்னாச்சுங்க?” அவனின் குரலில் ஸ்ருதி இறங்கியதைப் பார்த்துக் கேட்டாள்.

“எனக்கு மதியம் ஒரு மணிவரை தான் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கும். மதியம் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துட்டு திரும்ப ஈவ்னிங் ஐந்து மணிக்குத் தான் ஹாஸ்பிட்டல் போவேன். மதியம் நீயும் வீட்டுக்கு வந்திட்டால் நல்லா இருக்குமேனு யோசிச்சேன்…” என்றான்.

“ஓ!” என்று இப்போது தான் யோசனையானாள் வசுந்தரா.

“நானும் வேணும்னா மதியம் அப்பா ஷோரூமில் இருந்து நேரா வீட்டுக்கு வந்திட்டு, ஈவ்னிங் நம்ம ஷோரூம் போறேன். நைட் ஏழு மணிக்குக் கிளம்பி வீட்டுக்கு வந்துடுறேன்…” என்றாள்.

அவள் சொன்ன பதிலில் பிரசன்னாவின் முகம் பிரகாசித்தது.

அவளே தான் அந்தப் பதிலைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தான். அது நிறைவேறியதில் புன்னகைத்துக் கொண்டான்.

“ஓகே வசு… எனக்கு என்னைக்காவது எதுவும் எமர்ஜென்சி இருந்தால் மட்டும் தான் மதியம் வீட்டுக்கு வர மாட்டேன். அப்போ மட்டும் தேவையென்றால் நீ மதியம் போல ஷோரூம் போ…” என்றான்.

“ம்ம்… சரிங்க…” என்று உடனே சம்மதம் சொல்லியிருந்தாள் வசுந்தரா.

பிரசன்னா, வசுந்தராவின் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியிருந்தது.

கடந்த ஒரு மாதத்தில் உறவினர்களின் வீட்டில் விருந்து, வேலை, வசுந்தரா வீட்டைப் பழகிக் கொள்வது என்று நாட்கள் ஓடிச் சென்றுவிட இன்றுதான் முதல் முறையாக வசுந்தரா மீண்டும் ஷோரூமிற்குச் செல்வதாக இருந்தாள்.

அதனால் தான் அதைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான் பிரசன்னா.

அவன் திருமணத்திற்கு எடுத்திருந்த விடுமுறை அனைத்தும் முடிந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான்.

அதோடு, அவன் செய்ய வேண்டிய அறுவைச் சிகிச்சைகள், வழக்கமாக அவனிடம் வரும் நோயாளிகளின் முன்னேற்பாடு அட்டவணை என்று எல்லாம் வரிசை கட்டி இருந்ததால், கடந்த நாட்களில் அதிகமாக மருத்துவமனையில் தான் நேரம் செலவழித்தான்.

இப்பொழுது சற்று ரெகுலரான வேலை முறை வந்திருக்க, அதைத்தான் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

இருவருக்கும் இடையே இன்னும் ஒட்டியும் ஒட்டாத அளவில் தான் அவர்களின் திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

அதாவது மனதளவில் அவ்வப்போது ஒட்டியும், உடலளவில் முழுமையாக ஒட்டாமலும் தான் இருந்தனர்.

வழக்கம் போல, உணவைப் பரிமாறிக் கொள்ளுதல், இரவு தலை கோதுவது தொடர்ந்து கொண்டுதானிருந்தது. அதோடு அவனுக்கான சில வேலைகளை அவள் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

அது மட்டுமில்லாமல் தினமும் சிறிது நேரம் இரவு பால்கனியில் அமர்ந்து ஏதாவது பேசுவது, காலையில் இருவரும் மாடியிலேயே இருந்த உடற்பயிற்சி அறையில் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது என்று முடிந்த வரை வீட்டில் இருக்கும் நேரம் இருவரும் ஒன்றாக, ஒரே இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வான் பிரசன்னா.

வசுந்தரா முன்பு போல் ஒட்டாத தன்மையுடன் பேசுவது போல் இல்லாமல் இப்பொழுதெல்லாம் ‘ஏங்க, என்னங்க’ என்று அழைத்துப் பேச ஆரம்பித்திருந்தாள்.

மிகவும் சகஜமாக அவனிடம் பேசினாள் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஆரம்பத்தில் இருந்த தயக்கம், தடுமாற்றம் சிறிது அவளிடம் குறைந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

“நான் கிளம்பிட்டேங்க…” என்று தான் அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை நேராகப் போட்டுக் கொண்டே அவனின் அருகில் வந்து நின்றாள்.

அவளைத் தலை முதல் கால் வரை நிதானமாகப் பார்த்தான் பிரசன்னா.

வெள்ளை நிறத்தின் மேல், பெரிது பெரிதாகச் சிகப்பு ரோஜாக்கள் பூத்த மேலாடையும், சிகப்பு நிற கீழ் ஆடையும் அணிந்திருந்தாள். துப்பட்டாவின் ஓரத்தில் சிறிது சிறிதாக ரோஜாக்கள் பூத்துச் சிரித்துக் கொண்டிருந்தன.

அவள் திரும்பியதற்கு ஏற்ப காதுகளில் இருந்த ஜிமிக்கிகள் ஆடிக் கொண்டிருந்தன. நெற்றி வகிட்டில் மிகச் சிறியதாகக் குங்குமம் வைத்திருந்தாள்.

புருவங்களின் மத்தியில் சிறிய ஒட்டுப் பொட்டு வைத்திருந்தாள். அதற்குக் கீழ் சிறு கீற்றாகத் துளி குங்குமம் இருந்தது.

அவளின் தோற்றத்தை ரசித்துப் பார்த்தவன், தன் இரு கைகளையும் தன் கால் சட்டையின் பையினுள் நுழைத்துக் கொண்டான்.

உரிமை அனைத்தும் இருந்தும் உரிமையாக மனைவியைத் தொட முடியாத தன் நிலையை அந்நேரம் அவன் அறவே வெறுத்தான்.

“உனக்கு இந்த ட்ரஸ் நல்லா இருக்கு…” என்றவன் குரல் கரகரத்தது.

அவனின் பார்வையில் இருந்த மாற்றத்தைக் கவனிக்காமல் துப்பட்டாவின் இருபுறமும் பின் குத்தி விட்டு நிமிர்ந்தவள் “தேங்க்ஸ்…” என்றாள்.

அவள் ‘தேங்க்ஸ்’ என்றதில் பிரசன்னாவின் முகம் ஒரு நொடி மாறிப் பின் இயல்புக்குத் திரும்பியது.

“நான் ரெடி. இப்போ போகலாமாங்க?” என்று வசுந்தரா கேட்க,

பிரசன்னா அப்போது தான் நிதானமாக இருப்பது போல் அங்கிருந்த மேஜையின் மீது சாய்ந்து கைகளை இன்னும் கால் சட்டையில் வைத்த படியே அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

அவனின் பார்வையின் அர்த்தம் புரியாது “என்னங்க… உங்களுக்கு ஹாஸ்பிட்டலுக்கு நேரமாச்சுன்னு சொன்னீங்களே?” என்று கேட்டாள்.

“நேரமாச்சு தான்… ஆனா…” என்று மேலும் சொல்லாமல் நிறுத்தினான்.

“ஆனால்?” என்று புரியாமல் இழுத்தாள்.

“இன்னைக்குத் தானே நீ முதல் முறையா நம்ம வீட்டிலிருந்து வேலைக்குப் போற? சோ…” என்று மீண்டும் நிறுத்தினான்.

“சோ?” என்று கேட்டவளின் புருவங்களும் சுளித்து வளைந்து ‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’ என்று கேட்டன.

“சோ… எனக்குப் பரிசு கொடுத்துட்டுப் போ…” என்றான் நிதானமாக.

“பரிசா? என்ன பரிசு? நான் எதுவும் வாங்கலையே…” என்று கையை விரித்தவளுக்கு ‘நான் இங்கிருந்து முதல் முறையா வேலைக்குப் போறதுக்கு இவருக்கு எதுக்குப் பரிசு கொடுக்கணுமாம்? இதென்னடா லாஜிக்?’ என்று தோன்ற தான் செய்தது.

தோன்றியதை வெளிப்படையாகக் கேட்டுவிடவில்லை அவள்!

அந்த அளவிற்கு இன்னும் அவனிடம் பேச ஆரம்பிக்கவில்லை. அவன் கேள்விக்கு, பேச்சுக்கு ஏதுவாகத் தான் அவளின் பதிலும், பேச்சும் இருக்குமே தவிர, மனதில் தோன்றியதை இன்னும் உரிமையாகப் பேசும் நிலைக்கு அவள் வரவில்லை.

பிரசன்னா சிறு சிறு செய்கைகள் மூலம் அவளைத் தன்னிடம் நெருங்க வைத்துக் கொண்டிருந்தானே தவிர, மொத்தமாக அவளை நெருங்கவில்லை.

இருவருக்கும் இடையே இடைவெளியைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தான். அதுவே அவளையும் அவனை நெருங்க விடாமல் செய்து கொண்டிருந்தது.

வசுந்தரா கூடப் பல நேரங்களில் நினைத்திருக்கிறாள். ‘எவ்வளவு ஆசையாகத் தன்னைத் திருமணம் முடித்துக் கொண்டான். ஆனால் அப்படி இருந்தும் எப்படி அவளை விட்டு முழுமையாக விலகி, விலக்கி வைத்திருக்கிறான்?’ என்று தோன்றும்.

அவனின் கட்டுப்பாடு அவளை வியக்க வைத்தது.

அதே நேரம் அப்படி விலக்கி வைத்திருக்கின்றான் என்றால் இன்னும் அவளின் மீது அவனுக்குக் கோபம் இருக்கிறது என்று தானே அர்த்தம்?

அதோடு இன்னும் அவன் பழைய படி ‘தாரா’ என்றும் அழைக்கவில்லை. ‘வசு’ என்று தான் அழைத்தான். அந்த அழைப்பே கணவன் இன்னும் தன் மேல் கோபமாகத் தான் உள்ளான் என்று அவளை நினைக்க வைத்தது.

அவனின் கோபம் இன்னும் இருக்கிறது என்று புரியும் போது அவளால் எப்படி இயல்பாகப் பேச முடியும்?

“உன்கிட்ட ரெடியா இருக்குற பரிசு கொடு போதும்…” என்றவன் கண்கள் சிரித்து அவன் கள்வனாக மாறிவிட்டான் என்று காட்டிக் கொடுத்தன.

“என்கிட்டயா? நான் தான் எதுவும் வாங்கலைனு சொன்னேனே…” என்றாள் மீண்டும்.

“அது வெளியில் போய் வாங்க முடியாது. உன்கிட்ட மட்டும் தான் இருக்கு. உன்கிட்ட மட்டும் தான் அதை என்னால் வாங்க முடியும்…” என்றான்.

“நீங்க என்ன சொல்றீங்க கேட்குறீங்கனே எனக்கு நிஜமா புரியலை. ப்ளீஸ்… என்ன கேட்க வந்தீங்களோ அதை நேராவே கேட்டுருங்க…” என்றாள்.

“நேராவே கேட்டு விடவா? ஓகே… கொடு…” என்றவன் தன் கன்னத்தை அவளின் புறம் திருப்பிக் காட்டினான்.

அவன் கன்னத்தைக் காட்டினாலும் அவனின் செய்கை இன்னும் அவளுக்குப் புரியவே இல்லை. விழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“என்ன இன்னும் புரியலையா? கன்னத்தில் கிஸ் பண்ணு வசு…” என்றான் பட்டென்று.

“ஹான்! என்ன?” எதை எதிர்பார்த்தாலும் இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்று அவளின் அதிர்ச்சியே காட்டிக் கொடுத்தது.

“ஹான்… இல்ல… ஆஹான்! ம்ம் கொடு!” என்றான்.

இருவருக்கும் இடையே இதுவரை நடந்த அதிகபட்ச தொடுகையே தினமும் இரவு தூங்குவதற்கு முன் அவனின் தலையை அவள் கோதுவது தான்.

முத்த பரிமாற்றம் என்பது இதுவரை அவர்களுக்குள் நடக்கவே இல்லை. அவன் நடக்க விட்டதும் இல்லை!

அவனே இப்பொழுது ஆரம்பித்து வைக்க, வசுந்தரா தவித்துத் தான் போனாள்.

“நீ இப்போ கொடுக்கலைனா நான் கொடுப்பேன் வசு. ஆனா கன்னத்தில் இல்லை…” என்றவன் அழுத்தமாக அவளின் இதழ்களைப் பார்த்தான்.

கணவனின் பார்வையைக் கண்டு மிரண்டு விழித்தாள் வசுந்தரா.

“என்ன நான் மிரட்டுறேன்னு தோணுதா? பரவாயில்லை அப்படியே கூட நினைச்சுக்கோ. ஆனா என்னைக் கிஸ் பண்ணிட்டு நினைச்சுக்கோ…” என்றான் அசால்டாக.

‘கொடுத்தே ஆக வேண்டும்’ என்று அவன் பிடிவாதமாகக் கன்னத்தைக் காட்டிக் கொண்டு நிற்க, வசுந்தரா அவனின் பிடிவாதத்தின் பொருட்டுத் தயக்கத்துடன் தன் இதழைக் கணவனின் கன்னத்தில் பதிக்கச் சென்றாள்.

அவளின் இதழுக்கும், அவனின் கன்னத்திற்கும் இடையே இன்னும் நூலளவு இடைவெளி தான் என்ற நிலை இருந்த போது சட்டென்று தன் முகத்தைப் பின்னால் இழுத்துக் கொண்டான் பிரசன்னா.

“வா, கிளம்பலாம் வசு. அம்மா கீழே நமக்காகக் காத்துக்கிட்டு இருப்பாங்க…” என்றவன் அவளின் அருகில் இருந்து விலகி எதுவுமே நடக்காதது போல் தன் பையை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல ஆரம்பித்தான்.

‘இங்கே இப்போ என்ன நடந்தது? அவரா கிப்ட் கொடுன்னு கேட்டார். கிஸ் கேட்டார். ஆனா நான் கொடுக்கப் போனதும் ஏன் விலகி போனார்? ஏன்? திடீர்னு என்னாச்சு?’ கணவனின் விலகலின் காரணம் புரியாமல் விக்கித்து அப்படியே சிலையாக நின்றாள் வசுந்தரா.

‘ஏன்? ஏன்?’ ஏன் என்ற கேள்வி மட்டுமே அவளின் மனதில் சுழன்றடிக்க, அசையாமல் நின்று போனாள்.

ஏதோ சொல்ல முடியாத, வார்த்தைகளின் வடிக்கத் தெரியாத தவிப்புத் தன்னைச் சூழ்ந்து கொண்டது போல் உணர்ந்தவள் கண் சிமிட்டவும் மறந்து போனாள்.

சில நொடிகளா? பல நிமிடங்களா? எவ்வளவு நேரம் கடந்தன என்று அறியாமல் அவள் நின்றிருக்க, மீண்டும் உள்ளே வந்த பிரசன்னா கண்களில் தோன்றிய வலியுடன் அவளைச் சில நொடிகள் பார்த்தான்.

பின் தன் தலையை வேகமாகக் குலுக்கி வலியை விரட்டி, உதட்டில் புன்னகையைக் கொண்டு வந்தவன், “ஹேய் வசு… என்ன அப்படியே நின்னுட்ட? கீழே வா! அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க…” என்று நிதானமாக அழைத்தான்.

அவனின் அழைப்பில் மரத்த பார்வையுடன் கணவனின் புறம் திரும்பியவள் ‘ஏன் இப்படி?’ என்று கண்களால் கேள்வி கேட்டாள்.

அவளின் கேள்வியைப் புரிந்தவன் போல் சில நொடிகள் மௌனம் காத்தவன், “சாரி வசு… கிஸ் கேட்டுட்டு நான் அப்படிப் போயிருக்கக் கூடாது. ஆனா… ம்ப்ச்… ம்ப்ச்…” என்று விரக்தியாய் உச்சுக் கொட்டியவன் பின் தன் தலையை அழுந்த கோதிக் கொண்டு “என்கிட்ட நிறைய ஆனாக்கள் இருக்கு வசு. ஆனால் எதுக்குமே இப்போ என்கிட்ட பதில் இல்லை. சாரி…” என்றான்.

அவனின் பேச்சைப் புரியாமல் பார்த்தவள் பின் ‘என் உணர்வுகளுடன் விளையாட நினைக்கிறாயா?’ என்பது போல் பார்த்தாள்.

“இல்லை வசு… கண்டிப்பா இல்லை. நான் ஒன்னு நினைச்சு உன்கிட்ட கிஸ் கேட்டேன். ஆனால் அதை நீ கொடுக்க வந்தப்ப அந்தக் கிஸ் இப்போ வேண்டாம்னு தோணுச்சு. அவ்வளவுதான். வா, கீழே போவோம்…” என்று அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டவன் அவளின் கையை மென்மையாக பற்றித் தன்னுடன் அழைத்தான்.

அவன் கையைப் பிடித்ததும் ‘என்னை விடு! என்னைத் தொடாதே!’ என்று அவனின் கையை உதறி விடும் உத்வேகம் அவளிடம் வந்தது.

ஆனால் ‘அதற்கான தகுதி உனக்கு இருக்கா?’ என்று அவளின் மனசாட்சியே அவளைக் கேள்வி கேட்பது போல் தோன்ற, கணவனின் இழுப்பிற்கு ஏற்ப அவனுடன் நடந்தாள் வசுந்தரா.