என்னுள் யாவும் நீயாக – 21

அத்தியாயம் – 21

பிரசன்னாவின் கோபத்தில் வாய் வரை கொண்டு சென்ற பஜ்ஜியை அப்படியே நிறுத்தி கணவனைப் பயத்துடன் பார்த்தாள் வசுந்தரா.

“என்ன பண்றன்னு கேட்டேன்…” என்று மீண்டும் அதட்டினான்.

‘இதென்ன கேள்வி?’ என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

‘அட! தெளிவு வந்திடுச்சு போல? கண்ணாலேயே கேள்விக் கேட்கிறாள்’ என்று உள்ளுக்குள் நினைத்தவன், வெளியே முறைத்துக் கொண்டு தான் இருந்தான்.

கணவனின் முறைப்பில் “பஜ்ஜி சாப்பிட போறேன்…” என்று தன்னால் வாய் திறந்திருந்தாள் வசுந்தரா.

“அது தெரியுது. அதுக்கு முன்னாடி என்ன செய்யணும்னு தெரியலையா?” என்று முறைத்துக் கொண்டே கேட்டான்.

“அதுக்கு முன்னாடி என்ன செய்யணும்?” என்று புரியாமல் குழப்பத்துடன் கேட்டாள்.

“நீயே யோசிச்சுப் பார். நான் சொல்ல மாட்டேன்…” என்றான் விறைப்பாக.

‘என்னடா இது?’ என்று தான் அவளுக்குத் தோன்றியது. அவனின் கோபத்திற்கான காரணம் சட்டென்று அவளுக்குப் பிடிபடவில்லை.

ஆனால் கணவன் கண்களில் இருந்த கோபமும், முகத்தில் இருந்த இறுக்கமும் அவளை யோசிக்க வைக்க, பஜ்ஜியையும், அவனையும் மாறி மாறி ஒரு பார்வை பார்த்தாள்.

சில நொடிகள் யோசனைக்குப் பின் நேற்றில் இருந்து தாங்கள் உணவைப் பரிமாறிக் கொண்டது ஞாபகத்தில் வர, ‘ஓ! அப்ப பஜ்ஜியையும் பகிர்ந்து சாப்பிடணும் என்று நினைக்கிறாரா?’ என்று நினைத்தவள் “யாதவ் உங்களுக்குச் சுண்டல் தான் பிடிக்கும்னு சொன்னாரே… அதான் நீங்க பஜ்ஜி சாப்பிட மாட்டீங்கன்னு நினைச்சேன்…” என்று சமாளிப்பாகச் சொன்னாள்.

“சுண்டல் பிடிக்கும் தான். அதுக்காகப் பஜ்ஜி பிடிக்காதுனு நான் ஒன்னும் சொல்லலையே…” என்று கேட்டவனை மலங்க விழித்தபடி பார்த்தாள்.

அவளின் விழியைப் பார்த்து “பஜ்ஜி பிடிக்கும். ஆனால் அவ்வளவாக நான் சாப்பிடுவதில்லை. கொலஸ்ட்ரால், நிறைய எண்ணெய் இருக்கும். வெளியிடங்களில் என்றைக்காவது ஒரு நாள் தான் இப்படி எல்லாரும் சாப்பிடுவதால் மற்றவர்களை நான் ஒன்றும் சொல்வதில்லை. இல்லைனா அவர்களுக்கும் தடா தான்…” என்றான் நீண்ட விளக்கமாக.

‘அட! டாக்டர் என்று நிரூபிக்கிறார் பா…” என்று உள்ளுக்குள் நினைத்தவள் பின் அமைதியாக அவனுக்கான பஜ்ஜியைப் பிய்த்து அவனிடம் நீட்டினாள்.

ஆனால் அவனோ வாங்காமல் மீண்டும் அவளை உறுத்துப் பார்த்தான்.

‘இப்ப என்ன?’ என்று மீண்டும் அவள் கண்களால் கேள்விக் கேட்க, அவனும் கண்களால் தன் நிலையைக் காட்ட, அப்போதுதான் அவனின் நிலையை நன்றாகக் கவனித்தாள்.

மயூரி பிரசன்னாவின் மடியில் அமர்ந்திருக்க, அவளை அவனின் ஒரு கை அணைத்துப் பிடித்திருக்க, இன்னொரு கையில் சுண்டல் இருந்தது.

மயூரி சுண்டலை இழுக்கப் போராடிக் கொண்டிருக்க, அதை அவளின் கைக்கு எட்டாமல் அவளையும் சமாளித்துத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான்.

அப்படி இருந்தபடியே தான் அவ்வளவு நேரமும் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அதைக் கவனித்தவள் “என்கிட்ட மயூ குட்டியைக் கொடுங்க. நான் பார்த்துக்கிறேன்…” என்று அவளைத் தூக்க முயன்றாள்.

“இல்ல… அவள் என்கிட்டயே இருக்கட்டும். ஆனால் அதைவிட ஈஸியான வேலை நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்று கேட்டான்.

அதனைச் சொல்லும் போது அவனின் கண்கள் கள்ளத்தனமாய்ச் சிரித்தனவோ?

அவனின் கள்ளத்தனத்தைக் காணாமல் கர்ம சிரத்தையாக ‘என்ன?’ என்பது போல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

‘இவளை முதலில் கண்ணால் பேசுவதை நிறுத்த வைக்கணும். முடியலைடா சாமி…’ என்று முணுமுணுத்துக் கொண்டான்.

அவளுக்குப் பதிலை வாயால் தான் சொன்னான். ஆனால் அவன் சொன்ன பதிலில் வசுந்தரா தான் திகைத்துத் திணறிப் போனாள்.

அப்படி என்ன பதில் சொன்னான்?

பிரசன்னா வாயைத் திறந்து காட்டி ‘ஊட்டு!’ என்று கண்களால் கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.

“ஹான்! இங்கேயா?” என்று தங்களைச் சுற்றிலும் பார்த்தாள்.

சுற்றிலும் திரளான ஜனங்கள், சற்றுத் தள்ளி தங்கள் குடும்பத்தார் அனைவரும் அருகில் இருக்கும் போது ஊட்டி விடுவதா?

“அவங்கவங்க வேலையை அவங்க பார்க்கவே நேரம் சரியா இருக்கும். நாம நம்ம வேலையைப் பார்க்கலாம். ம்ம்… கொடு…” என்றவன் மீண்டும் வாயைத் திறந்து காட்டினான்.

‘விடமாட்டான்’ என்று உறுதியாகி விடத் தயக்கத்துடன் பஜ்ஜியை அவனின் வாயில் வைத்தாள்.

அவனின் உதடுகளில் அவளின் கை மென்மையாக உரசி ஜில்லென்று உணர்வு தாக்க, அவனுக்கு ஊட்டி விட்டுவிட்டு வேகமாகக் கையைப் பின்னால் இழுத்துக் கொண்டாள் வசுந்தரா.

மனைவி கொடுத்ததைக் கண்ணில் சிரிப்புடன் ரசித்து உண்ண ஆரம்பித்தான் பிரசன்னா.

அவனுக்கு அவள் ஊட்டி விட்டதைப் பார்த்து மயூரியும் தன் குட்டி வாயைத் திறந்து காட்டி ‘எனக்கும் ஊட்டு’ என்பது போல் அவளின் அத்தையைப் பார்த்து வைத்தாள்.

“எங்க மயூ குட்டிக்கும் வேணுமா?” என்று அவள் வாய் திறந்த அழகில் சொக்கி, பஜ்ஜியின் சதை பகுதியை எடுத்து ஊட்ட போனாள்.

“வேண்டாம் வசு… அவளுக்கு அதைக் கொடுக்காதே…” என்று வேகமாகத் தடுத்தான் பிரசன்னா.

“ஏன்? பாவம் குட்டி அப்போ இருந்து சாப்பிட கேட்குறா பாருங்க…” என்று குழந்தையைப் பாவமாகப் பார்த்துச் சொன்னாள்.

“பஜ்ஜி தான் வேண்டாம்னு சொன்னேன். இந்தா பேபியைத் தூக்கு…” என்றான்.

‘இப்போ மட்டும் இவளை நான் தூக்கலாமா?’ என்று கணவனை ஒரு பார்வை பார்த்து விட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

மனைவியிடம் இருந்த பஜ்ஜியையும் தான் வாங்கிக் கொண்டு குழந்தையை மட்டும் கொடுத்தவன், தன் கையில் இருந்த சுண்டலை எடுத்து அதில் இருந்த தோலை உரித்துவிட்டு உள்ளிருந்த சதை பகுதியை எடுத்து அதை விரல்களால் நன்றாக மசித்து மயூரியின் வாயில் வைக்க ஆவலுடன் வாங்கிச் சப்புக் கொட்டி கடைவாய் ஓரம் எச்சில் ஒழுக உண்ண ஆரம்பித்தாள் குழந்தை.

அவளின் ஆர்வத்தைப் பார்த்து இன்னும் சிறிது ஊட்டி விட்டவன் அடுத்து சில சுண்டல்களைக் கையில் அள்ளி மனைவியின் வாயின் அருகே நீட்டினான்.

மீண்டும் “ஹான்…” என்று கண்களை விரித்துக் காட்டினாள் வசுந்தரா.

“சும்மா கண்ணை உருட்டி உருட்டிப் பார்க்காம வாங்கு வசு. இனி இதெல்லாம் நமக்குள் அடிக்கடி நடக்கும். பழக்கப்படுத்திக்கோ…” என்று மென்மையாகக் கடிந்து அவளின் வாயைத் திறக்க வைத்து அவளுக்கு ஊட்டி விட்ட பிறகே விட்டான்.

அதன் பிறகும் சில வாய் அவளுக்கு ஊட்டி விட்டு குழந்தைக்கும் ஊட்டி விட்டான்.

“நான்… நானே சாப்பிட்டுகிறேன்…” என்று அவனைத் தடுக்க முயன்றாள்.

“நீ பேபியை நல்லா பிடிச்சுக்கோ. நானே ஊட்டி விடுறேன்…” என்று அவள் மறுக்க முடியாத குரலில் சொன்னவன், பஜ்ஜியையும் அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்.

அவன் கொடுத்ததை அவளால் அமைதியாக வாங்கிக் கொள்ள மட்டுமே முடிந்தது.

‘இதுக்குத் தான் குட்டியை என்கிட்ட கொடுத்தார் போல…’ என்று நினைத்தாலும், அவன் ஊட்டுவதில் தயக்கம் ஒரு புறம் இருந்தாலும் உள்ளூர ஒரு வித இதம் பரவத்தான் செய்தது.

அந்த இதம் மேலும் அவளை மறுக்க விடாமல் தடுத்தது.

“குட்டிக்கு ஏன் பஜ்ஜி வேண்டாம்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

“பெரியவங்களையே நான் பஜ்ஜி சாப்பிட வேண்டாம்னு தான் சொல்லுவேன். குட்டிக்கு எப்படிக் கொடுக்க விடுவேன்? அந்த மாவு, எண்ணெய் எல்லாம் குழந்தைக்குச் சேராமல் போகும். சுண்டல் பரவாயில்லை. ஆனாலும் அதையும் அளவா தான் கொடுக்கணும்…” என்று சொல்லிக்கொண்டே இருவருக்கும் கொடுத்து தானும் உண்ண ஆரம்பித்தான்.

கணவனின் அக்கறை, அவனின் பார்த்துப் பார்த்துச் செய்யும் விதம் எல்லாம் வசுந்தராவைக் கவர்ந்தது.

அவன் மருத்துவராகத் தான் அப்படிச் சொல்கிறான் என்று தெரிந்தாலும் மருத்துவனையும் தாண்டி அவனிடம் அன்பின் செயல் இருப்பதை உணர்ந்து கொண்டாள்.

தன் அக்காவிடம் கூட வெளியே கிளம்ப வேண்டும் என்றதும் அவளின் உடல்நிலையை அக்கறையுடன் விசாரித்தானே… என்றும் நினைவில் வர அவனை ஓர் உரிமையுடன் பார்த்தாள்.

அவளின் பார்வையைக் கண்டவன் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டான்.

‘ஒன்றுமில்லை’ என்று அவள் தலையை அசைத்தாள்.

“கல்யாணம் ஆனதும் கண்ணாலேயே பேசணும்னு எதுவும் சபதம் எடுத்திருக்கியா?” என்று கிண்டலுடன் கேட்டான்.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்து வைத்தாள்.

என்ன சொல்வாள்? ‘என் குற்றவுணர்வும், ஒரு நல்ல மனைவியாக நடந்து கொள்ள முடியாமல் போவதும், அதனால் உண்டான தயக்கமும் என் பேச்சுக்குத் தடை விதிக்கின்றன’ என்று சொல்ல முடியாமல் திணறிப் போனாள்.

மனைவியின் திண்டாட்டத்தை அவளின் முகப்பாவனையில் கண்டவன், அவளை மேலும் தூண்டித் துருவாமல் விட்டான்.

“வா… குட்டியோட வாட்டர் பாட்டில் தீபாகிட்ட இருக்கும். வாங்கிக் கொடுப்போம்…” என்று எழுந்து கொண்டான்.

அதன் பிறகு குடும்பத்துடன் சேர்ந்து சற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு அனைவரும் கிளம்பினர்.

இரவு உணவை அருகிலிருந்த ஓர் உணவகத்தில் முடித்துக் கொண்டனர்.

தீபாவும், சரணும் குழந்தையுடன் அப்படியே தங்கள் வீட்டிற்குக் கிளம்பி விட, பிரசன்னாவின் பெற்றவர்களும், யாதவும் அங்கிருந்தே தங்கள் வீடு சென்றனர்.

பிரசன்னாவும், வசுந்தராவும் அவளின் வீட்டில் நாளை வரை இருப்பதாக ஏற்கனவே முடிவாகி இருக்க, அவர்கள் வசுந்தராவின் பிறந்த வீட்டிற்கே சென்றனர்.

உணவை முடித்து விட்டதால் அவரவர் அறைக்குப் படுக்கச் சென்று விட்டனர்.

வசுந்தராவும், பிரசன்னாவும் மேலே அறைக்குச் செல்ல, “பீச்சுக்குப் போய்ட்டு வந்தது கசகசன்னு இருக்கு வசு. நான் போய்க் குளிச்சுட்டு வர்றேன். என் பேக்ல இருந்து எனக்கு மாத்து ட்ரஸ் எடுத்து வைச்சுடு…” என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

“என்ன நானா? ஏன் என்னை எடுத்து வைக்கச் சொல்றார்?” என்று முணுமுணுத்துக் கொண்டே அவனின் பையை எடுத்து இரவில் அவன் உடுத்தும் இலகுவான உடையை எடுத்து வெளியே வைத்தாள்.

பிரசன்னா எப்போதும் இப்படி யாரையும் வேலை வாங்கும் பழக்கம் உடையவன் அல்ல.

அவன் வேலையை அவன் தான் பார்த்துக் கொள்வான். காலையில் கூட அவனுக்குத் தேவையான துணிகளை அவனே தான் எடுத்து வைத்துக் கொண்டான்.

இப்போதும் அதனை அவனே செய்திருக்க முடியும். ஆனால் மனைவி அவ்வப்போது அவளின் குற்றவுணர்ச்சிக்குள் சிக்கிக் கொள்வதை உணர்ந்து கொண்டவன் அவளை அதில் இருந்து மீட்கும் முயற்சியில் ஒன்றாக அவனுக்கான வேலையில் அவளைப் பங்கு கொள்ள வைத்துக் கொண்டிருந்தான்.

ஆம்! அவளின் குற்றவுணர்வுவை அவன் உணர்ந்தே வைத்திருந்தான். அவளின் மனநிலையும் அவனுக்குப் புரிய தான் செய்தது.

மனைவியின் முன்னால் காதல் விஷயம் தெரிந்து அவளைக் கடித்துக் குதறாமல் வேறு வகையைக் கையாண்டு கொண்டிருந்தான் பிரசன்னா.

பிரசன்னா குளித்து விட்டு வர, அடுத்ததாக வசுந்தராவும் குளித்து விட்டு வந்தாள். இருவரும் வழக்கம் போல் இடைவெளி விட்டு படுத்துக் கொண்டனர்.

வெளியே சுற்றி விட்டு வந்தாலும் இருவருக்குமே உறக்கம் என்பது சிறிதும் அண்டவில்லை. வசுந்தரா ஏதோ ஒரு யோசனையில் இருக்க, பிரசன்னாவும் யோசனையில் தான் இருந்தான்.

யோசனையின் முடிவில் மெல்ல மனைவியின் புறம் திரும்பிப் பார்த்தான்.

அவளோ கண்களை மூடியிருந்தாலும் கண்ணின் மணிகள் உருண்டோட உறக்கம் தொலைத்து நின்றதைக் கண்டவன், தான் செய்யப் போவதை நினைத்து மீண்டும் கள்வனாக மாறி சிரித்துக் கொண்டான்.

உதட்டை மீறி வரத் துடித்த அவனின் புன்னகையும், கண்களில் கணக்கில்லாமல் வழிந்த குறும்பும் அவனை அந்த நேரம் மேலும் பேரழகனாகக் காட்டிக் கொண்டிருந்தது.

வசுந்தரா ஒரு கையைத் தன் வயிற்றின் மீதும் இன்னொரு கையைத் தலை அருகிலும் வைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.

தலை அருகில் இருந்த அவளின் கையைப் பார்த்தவன் மெல்ல தன் கையை நீட்டி அவளின் கையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தான்.

அவனின் இந்தத் திடீர் செய்கையை எதிர்பாராமல் யோசனையில் இருந்த வசுந்தரா திடுக்கிட்டு விழித்தாள்.

அவளின் கையைக் கணவன் பற்றி இருப்பதைக் கண்டவள் அதிர்ச்சியுடன் எழுந்து அமரவும் செய்தாள்.

“ஏய்… ஹேய்.. வசு மெதுவா… எதுக்கு இவ்வளவு பதட்டம்? நான் தானே உன் கையைப் பிடிச்சுருக்கேன்…” என்றவன் கண்கள் அவளைத் தீர்க்கமாகத் துளையிட்டது.

‘மனைவியாகவே நடந்து கொள்ளத் தயார்’ என்று முன்பு சொல்லிவிட்டு இப்போது கை பிடித்ததற்கே பயந்தால் அவன் அப்படிப் பார்க்காமல் என்ன செய்வான்?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவள் தன் பதட்டத்தை அவனிடம் இருந்து மறைக்க முயன்றாள்.

அவள் முயன்றாலும் அவளின் நடுக்கம் கையில் தெரியத்தான் செய்தது.

ஆனால் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இன்னும் அழுத்தமாக அவளின் கையைப் பற்றி இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் எழுந்து அமர்ந்திருந்தவள் மீண்டும் படுக்கையில் விழுந்தாள்.

“என்ன… என்ன பண்றீங்க?” அவளின் கையை இழுத்துச் சென்றவன் அவனின் தலையின் மீது வைக்கத் திணறலுடன் கேட்டாள்.

“தலையைக் கோதிக் கொடு…” என்றான் செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியான குரலில்.

“இ… இல்ல…” என்று அவள் திக்க,

“இப்போ நீ கோதிக் கொடுக்கலைனா உன் மடியில் படுத்துக் கோதிக் கொடுக்கச் சொல்லுவேன். எனக்கும் உன் மடியில் படுக்கத்தான் ஆசை. ஆனா முதல்முறையே உன்னைப் பயமுறுத்த வேண்டாம்னு பார்க்கிறேன்…” என்றவன் குரலில் மிரட்டல் தொனித்ததோ?

“ஏன் இப்படி மிரட்டுறீங்க?” என்று தயங்கியபடியே என்றாலும் கேட்டுவிட்டாள்.

“என்ன மிரட்டுறேனா? நான் ஆசையா கேட்டது உனக்கு மிரட்டுவது போலத் தெரிஞ்சா நீ ஒன்னும் செய்ய வேண்டாம். போ…” என்றவன் தன் தலையில் வைத்திருந்த அவளின் கையை எடுத்துப் படுக்கையில் போட்டுவிட்டு அவளுக்கு முதுகைக் காட்டி திரும்பிப் படுத்துக் கொண்டான்.

அவனின் கோபத்தில் மாலையிலிருந்து பரவியிருந்த ஓர் இதம் அவளை விட்டுச் சென்றது போல இருந்தது.

‘அவன் பெரிதாக என்ன கேட்டான்? தலையைத் தானே கோதிக் கொடுக்கச் சொன்னான். அது கூட உன்னால் முடியாதா?’ என்று உள்ளுக்குள் இருந்து ஒலித்த குரல் உந்தித் தள்ள, படுக்கையில் இருந்த தன் கையையும், அவனின் தலையையும், கோபத்தில் இறுகி இருந்த அவனின் வலுவான தோள்களையும் பார்த்தாள்.

பின் தயக்கத்துடன் தன் கையை உயர்த்தி அவனின் தலையில் வைத்தாள். அவளின் கை லேசாக நடுங்கியது.

கட்டிய கணவன் தான்! ஆனாலும் முதல் முறை உண்டான தயக்கம் இருக்க மெதுவாகவே அவனின் தலையைக் கோதிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

அவளின் வருடலை உணர்ந்து அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்திருந்த பிரசன்னாவின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.

அவன் சிரித்ததில் அவனின் தோள்கள் இறுக்கத்தைத் தொலைத்து இலகுவாக, அதைக் கண்ட வசுந்தராவின் முகத்திலும் நிம்மதி பரவியது.