என்னுள் யாவும் நீயாக! – 19

அத்தியாயம் – 19

மறுநாள் வசுந்தராவின் வீட்டில் பிரசன்னா வீட்டாருக்கு விருந்து என்பதால் இருவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

காலை உணவிற்கே புதுமண தம்பதிகள் இருவரும் கிளம்புவதாக ஏற்பாடு.

மதியம் போல் பிரசன்னாவின் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் வருவதாக இருந்தனர்.

காலையில் எழுந்ததும் நேற்று ஆரம்பித்த பழக்கமாகக் காஃபியை இருவரும் பகிர்ந்து அருந்திவிட்டுக் குளித்துத் தயாராகும் வேலையில் இறங்கினர்.

முதலில் சென்று குளித்துவிட்டு வந்த பிரசன்னா அடுத்துக் குளிக்கச் சென்றவளை, “வசு…” என்றழைத்து நிறுத்தினான்.

“சொல்லுங்க…” என்று அவனின் முன் வந்து அவள் நிற்க, “குளிச்சுட்டு எந்த ட்ரெஸ் போட போற?” என்று கேட்டான்.

“அதோ அந்தச் சாரி தான் கட்டப் போறேன்…” என்று கட்டிலின் மேல் எடுத்து வைத்திருந்த புடவையைக் காட்டினாள்.

ஆரஞ்சு நிறத்தில் இருந்த அந்தப் புடவையைப் பார்த்தான் பிரசன்னா.

“அது வேண்டாம் வசு. அதை எடுத்து உள்ளே வச்சுடு…” என்றான்.

“அப்போ நான் வேற எதைப் போடுவது?” என்று கேட்டாள்.

“நீ போய்க் குளிச்சுட்டு வா சொல்றேன்…” என்றவன் தான் உடை மாற்ற ஆரம்பித்தான்.

வசுந்தரா குளித்து விட்டு இரவு உடையுடன் வெளியே வந்த போது அவளின் முன் ஓர் அட்டைப் பெட்டியை நீட்டினான்.

அடர் நீல நிறத்தில் ஓரத்தில் பச்சை நிறத்தில் பார்டர் இருந்த புடவை அழகாக வீற்றிருந்தது.

“இதைக் கட்டு…” என்று கொடுத்தான்.

அடர் நீல நிறம் வசுந்தராவிற்குப் பிடித்த நிறம். அந்நிறத்தில் புடவையைப் பார்த்ததும் அவளின் கண்கள் பெரிதாக விரிந்தன.

அதைக் கண்டு மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.

“அழகாக இருக்கு சேலை… எப்போ வாங்கினீங்க?” என்று கேட்டாள்.

“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே வாங்கினது…”

“இப்பவே கட்டணும்னா இதுக்கு ஜாக்கெட் வேணுமே?”

“முதலில் சேலையைக் கையில் எடுத்துப் பார்…” என்று அவளின் கையில் அட்டைப் பெட்டியைத் திணித்தான்.

கையில் வாங்கியவள் புடவையை வெளியில் எடுத்துப் பார்க்க, அதற்கு அடியில் ஜாக்கெட் இருந்தது.

“கல்யாண சேலைக்கு நீ தைக்கக் கொடுத்த இடத்தில் தான் இதையும் தனியா கொடுத்துத் தைச்சு வாங்கினேன். நம்ம கல்யாணம் அன்னைக்கு நைட் கொடுக்கலாம்னு இருந்தேன். ஆனா…” என்று மேலும் எதுவும் சொல்லாமல் பேச்சை நிறுத்தினான்.

அங்கே சில நொடிகள் அமைதியான சூழல் நிலவியது.

வசுந்தராவிற்கு முகம் வாடிப் போனது.

அவனின் ஆசை நிராசை ஆனதற்குக் காரணம் அவள் அல்லவா?

“நான் வெளியே இருக்கேன். புடவையைக் கட்டிட்டு கூப்பிடு…” என்று அவளை மேலும் சிந்திக்க விடாமல் அறையை விட்டு வெளியே சென்றான்.

அந்த ஜாக்கெட்டைக் கையில் எடுத்துப் பார்த்தாள். ஜாக்கெட்டின் பின் பக்கத்திலும், கையிலும் அதிகமான வேலைபாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதிலும் பின்பக்க டிசைன் கண்ணை மட்டுமில்லை கருத்தையும் கவரும் வகையில் இருந்தது.

கழுத்தைச் சுற்றிலும் இருந்த டிசைனில் எழுத்துகளும் கலந்து இருந்தன.

‘என்ன இது?’ என்று அதைக் கவனித்துப் பார்க்க ஆங்காங்கே சிறியதாக இதய வடிவம் இருக்க, அதன் உள்ளே PV என்று ஆங்கில எழுத்து வளைத்து நெளித்து டிசைனாக வரைப்பட்டிருந்தது.

அந்த எழுத்துக்கள் தங்கள் இருவரின் முதல் எழுத்து என்று புரிய, மெல்ல விரலால் அந்த எழுத்துக்களை வருடிப் பார்த்தாள்.

சிறுசிறு விஷயமும் பிரசன்னா தன் மேல் எவ்வளவு பிரியத்துடன் இருக்கிறான் என்று அவளுக்குப் புரிய வைப்பதாக இருந்தது.

ஆனால் தான் அவன் முற்றிலும் எதிர்பாராத ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறோம். அப்படி இருந்தும் இப்போது தன்னுடன் கோபம் மறந்து நன்றாகப் பழக விரும்புகிறான். இவன் எவ்வளவு நல்லவன் என்று நினைத்துக் கொண்டாள்.

யோசித்துக் கொண்டே உடையை மாற்றி விட்டுக் கதவைத் திறந்து, வெளியே சோஃபாவில் அமர்ந்திருந்தவனை உள்ளே அழைத்தாள்.

“வாவ்! இந்தச் சாரி உனக்கு ரொம்ப நல்லா இருக்கு வசு. உன் சிவந்த நிறத்திற்கு டார்க் புளூ நல்லா சூட் ஆகுது…” என்று அவளை மேலிருந்து கீழ் வரை ரசனையுடன் பார்த்தான்.

அவனின் பார்வை அவளுக்குக் கூச்சத்தைத் தர, “எனக்கு இந்தக் கலர் பிடிக்கும். பிடித்த கலரில் சாரி வாங்கினதுக்குத் தேங்க்ஸ்…” என்று பேச்சை மாற்றினாள்.

“தேங்க்ஸா?” என்று அவன் அதிருப்தியுடன் பார்க்க,

“எனக்குப் பிடிச்சது வாங்கிக் கொடுத்ததுக்கு நான் ஒரு தேங்க்ஸ் கூடச் சொல்லக் கூடாதா?” என்று கேட்டாள்.

“உன் அம்மாகிட்ட உனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு தான் இந்தக் கலரில் புடவை எடுத்தேன். சோ… அது பெரிய விஷயம் இல்லை. ஆனா தேங்க்ஸ்? கண்டிப்பா நமக்கு இடையே பெரிய விஷயம் தான்…” என்றான்.

“ஏன் அப்படி?” என்று மெதுவாகக் கேட்டாள்.

“ஏன்? இந்தக் கேள்விக்குப் பதில் இப்போ நான் உனக்குச் சொன்னா புரியாது. ஒரு நாள் உனக்கே புரியும். அப்போ இந்த ஏன் என்பதற்கான அர்த்தம் நீயே எனக்குச் சொல்லுவாய்…” என்றான்.

‘ஹான்! என்ன இது ஒரு ஏன்னுக்கு இவ்வளவு பெருசா பேசுறார்’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.

அவளின் பார்வையைக் கவனிக்காமல் மெதுவாக அவளின் அருகில் வந்தவன் அவள் தோள் தொட்டு மெல்லத் திருப்பினான்.

“எ… என்ன? என்ன செய்றீங்க?” அவள் நினைவெல்லாம் எங்கோ ஓடத் தடுமாற்றத்துடன் கேட்டாள்.

“ஜாக்கெட்டில் ஏதாவது வித்தியாசம் பார்த்தாயா?” என்று கேட்டான்.

“ம்ம்… பார்த்தேன். டிசைன் ரொம்ப நல்லா இருக்கு…” என்று முனகலாகச் சொன்னாள்.

அவளின் முதுகின் புறம் நின்றவன் தான் சொல்லி வைத்து டிசைன் செய்து வாங்கிய அந்த ஜாக்கெட்டின் டிசைனை ரசித்துப் பார்த்தான்.

முதுகை ஊடுருவும் அவனின் பார்வை வசுந்தராவை ஏதோ செய்தது. என்ன செய்தது? சொல்லத் தெரியவில்லை அவளுக்கு!

பார்வைக்கே இப்படி என்றால்? அவன் அடுத்துச் செய்யப் போவதில் என்ன ஆவாளோ?

டிசைனை ரசித்துப் பார்த்தவன் விரல்கள் மெல்ல உயர்ந்து தங்கள் இருவரின் பெயரின் முதல் எழுத்தும் இணைந்து பொறிக்கப்பட்டிருந்த டிசைனை வருட ஆரம்பித்தன.

அவன் வருடியது டிசைனாக இருக்கலாம். ஆனால் அதை அவள் அல்லவோ அணிந்திருந்தாள்.

அவனின் வருடல் அவளின் முதுகை வருடும் உணர்வை அவளுக்குத் தர, “ஹா… வேண்டாம்…” என்று விலகிக் கொள்ள முயன்றாள்.

அவளின் சிறு விலகலில் அவனின் விரலுக்கும், அவளின் முதுகிற்கும் இடையே இடைவெளி விழுந்தது.

“ஏன்? நான் டிசைனைத் தானே தொட்டுப் பார்த்தேன்?” லஜ்ஜையே இல்லாமல் கேள்விக் கேட்டான்.

‘அந்த டிசைன் இப்போது என் முதுகை உரசிக் கொண்டல்லவா உள்ளது. உங்கள் விரல் டிசைனை மட்டுமில்லை… என் முதுகை அல்லவா வருடுகிறது…’ என்று வாய்விட்டுச் சொல்ல முடியாமல் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

அவளின் செந்நிற உதடுகள் வெண்பற்களின் மாட்டிக் கொண்டு படும் பாட்டைக் கண்டவனுக்கு அவளின் நிலை புரிந்ததோ?

கள்ளத்தனமாய்ச் சிரித்துக் கொண்டான் அந்தக் கள்ளன்!

அவனின் உதட்டோரம் லேசாகத் துடித்துக் கொண்டிருந்த துடிப்பைக் கண்டவள் அவன் தன்னிடம் விளையாடுகிறான் என்று புரிந்து “நான் கீழே போறேன்…” என்று முணுமுணுத்து விட்டு அறையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

அவள் சென்ற வேகத்தைப் பார்த்து “ஹா…ஹா…” என்று பிரசன்னா வாய்விட்டுச் சிரிக்க, அவனின் சிரிப்புச் சப்தம் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தவளைத் துரத்தியது.

“வாங்க மாப்பிள்ளை… வாங்க… வா வசு…” என்று மகளையும், மருமகனையும் கல்பனாவும், எத்திராஜூம் சந்தோஷமாக வரவேற்றார்கள்.

“வர்றோம் மாமா, அத்தை…” என்று பிரசன்னா அவர்களின் வரவேற்பை ஏற்று உள்ளே செல்ல,

“அப்பா… அம்மா… எப்படி இருக்கீங்க?” வீட்டிற்குள் நுழைந்ததும் இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டாள் வசுந்தரா.

“நாங்க நல்லா இருக்கோம் வசு. நீ எப்படி இருக்க? ஊட்டிக்கு நல்லபடியா போயிட்டு வந்துட்டீங்களா?” என்று விசாரித்தார் கல்பனா.

“நல்ல இருக்கேன்மா… நல்லபடியா போயிட்டு வந்துட்டோம்மா…” என்ற படி வசுந்தரா அன்னையின் பின் சமையலறைக்குச் செல்ல,

“உட்காருங்க மாப்பிள்ளை…” என்று பிரசன்னாவை உபசரித்த எத்திராஜ் அவனிடம் பொதுவாகப் பேச ஆரம்பித்தார்.

“இந்தச் சேலை எப்ப எடுத்தது வசு. புதுசா இருக்கே? நாம இப்படி எதுவும் கல்யாணத்துக்கு எடுக்கலையே?” என்று மகளிடம் கேட்டார் கல்பனா.

“அவர் எடுத்துக் கொடுத்தார்மா. எனக்கு இந்தச் சாரி எப்படி மா இருக்கு?” என்று கேட்டாள்.

“ரொம்ப நல்லா இருக்கு வசு… ஜாக்கெட் கூட நிறைய டிசைன் வச்சு தச்சுருக்கே. அதுவும் சூப்பரா இருக்கு…” என்று பாராட்டினார் கல்பனா.

“எல்லாம் அவரே டிசைன் சொல்லி தச்சதுமா…” என்று சொல்லும் போது வசுந்தராவிற்குப் பூரிப்பாக இருந்தது.

கணவன் தனக்காக ஒன்றை பார்த்துப் பார்த்துச் செய்தான் என்பதே எந்த ஒரு மனைவிக்கும் பூரிப்பாக விஷயம் தான் அல்லவோ!!

“அக்காவும், மாமாவும் எங்கே மா காணோம்? நேத்தே இரண்டு பேரும் பாண்டியில் இருந்து வந்துட்டாங்கனு சொன்னீங்க?” என்று கேட்டாள் வசுந்தரா.

“பக்கத்துல இருக்கிற பார்க்குக்கு வாக்கிங் போய் இருக்காங்க. இப்போ வர்ற நேரம்தான்…” என்றார் கல்பனா.

“அக்கா பேசாம என் கல்யாணம் முடிஞ்ச கையோட இங்கேயே இருந்திருக்கலாம் இல்லம்மா. ஊருக்குப் போயிட்டு விருந்துக்குக் கிளம்பி வந்தால் அலைச்சல் தானே…” என்று கேட்டாள்.

“உன் அக்கா தானே? அப்படி இருந்து விடுவாள். அவளுக்கு எங்க போனாலும் அவளோட வீட்டுக்காரரோட போகணும், வரணும். தனியாக எங்கேயும் இருக்க மாட்டாள்னு உனக்குத் தெரிஞ்சது தானே.

இப்பயும் அது தான் உன் கல்யாணம் முடிஞ்ச பிறகு மாப்பிள்ளை வேலை இருக்குன்னு கிளம்பவும், இவளும் பின்னாடியே கிளம்பிட்டாள். விருந்துக்கு அழைக்கவும் கிளம்பி வந்து இருக்காங்க. இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு சேர்ந்தே கிளம்பிடுவாங்க…

இவள் இப்பயே இப்படிச் செய்கிறாள். பிரசவத்துக்கு இங்க கூட்டிட்டு வந்து நாம பார்க்கும்போது எப்படித்தான் அவளோட புருஷனை விட்டுவிட்டு இருக்கப் போறாளோ தெரியல…” என்று அலுத்துக் கொண்டார் கல்பனா.

“அக்காவுக்கு மாமா மேல அவ்வளவு லவ்வுமா. அதான் இப்படி எல்லாம் செய்கிறாள்…” என்று வசுந்தரா சிரித்துக் கொண்டே கிண்டலுடன் சொல்ல…

“நீ என்னைக் கிண்டல் செய்கிறாயா? நாளைக்கு நீயும் இதையேதான் செய்யப் போகிறாய். உன் புருசன் கூடயே நீயும் ஒட்டிக்கிட்டு திரிய போகிறாய். அதையும் நான் பார்க்கத்தானே போறேன்…” என்று சொல்லியபடி அங்கே வந்தாள் காஞ்சனா.

“வாக்கா… எங்க குட்டி பேபி என்ன செய்றாங்க?” என்று ‌அக்காவின் வயிற்றில் மெதுவாகக் கை வைத்து கேட்டாள்.

“நீயே பேபி கிட்ட கேட்டுக்கோ…” என்று காஞ்சனா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வயிற்றில் லேசாகத் துடிப்பை உணர்ந்த வசுந்தரா “அக்கா!” என்று ஆச்சரியமாக விழிகளை விரித்தாள்.

“ஆறு மாசம் ஆயிருச்சு இல்ல. பேபி அசைய ஆரம்பிச்சிருச்சு…” என்று பூரிப்பாகச் சொன்னாள் காஞ்சனா.

“வாவ்! சோ ஸ்வீட் பேபி…” என்று வியந்தவள் வயிற்றைத் தொட்டு தன் உதட்டில் ஒற்றி எடுத்து முத்தமிட்டாள்.

முதல் முறையாக வயிற்றிக்குள் இருக்கும் ஒரு குழந்தையின் அசைவை உணர்ந்ததால் வசுந்தரா ஆச்சரியம், வியப்பு, சந்தோசம் என்று கலவையான உணர்வில் சிக்கியிருந்தாள்.

தான் உணர்ந்ததை யாரிடமாவது பகிர வேண்டும் என்று ஆசை வர, வேகமாகச் சமையலறை விட்டு வெளியே வந்தவள் வரவேற்பறையில் அமர்ந்திருந்த மூன்று ஆடவர்களில் யாரிடம் முதலில் சொல்வது என்று ஒரு நொடி தடுமாறி நின்றாள்.

ஒருவர் அப்பா, ஏனோ அவரிடம் சொல்ல முடியாமல் தடுமாற்றம் வந்தது. அடுத்ததாக அக்காவின் கணவர். அவரின் குழந்தையின் அசைவு தான் என்றாலும்கூட அவரிடம் சொல்ல முடியாமல் சங்கடமாக உணர்ந்தாள்.

எந்தத் தடுமாற்றமும், தயக்கமும் இல்லாமல் அவள் சகஜமாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால் அது கணவனிடம் தான் என்று உள்ளுணர்வு உந்த “ஏங்க… குழந்தை அசையுது. எனக்கு அப்படியே புல்லரிச்சு போச்சு…” என்று பிரசன்னாவின் எதிரே வந்து படபடப்பாகச் சொன்னாள்.

அவள் படபடப்பு இப்போது பிரசன்னாவிடமும் ஒட்டிக் கொண்டது. அது மனைவியின் “ஏங்க…” என்ற அழைப்பில்!

எப்போதும் வசுந்தரா பிரசன்னாவிடம் பேசும் போது ஓர் அந்நியத் தன்மை இருக்கும். இன்று தான் முதல் முறையாக உரிமையாக அழைத்திருக்கிறாள். அந்த அழைப்பு தான் பிரசன்னாவை முதலில் கவர்ந்தது.

அதன் பிறகு தான் அவள் சொன்ன விஷயத்தின் சாராம்சத்தை உள்வாங்கினான்.

“ஹேய்… அப்படியா? குழந்தை அசைய ஆரம்பிச்சுருச்சா…” என்று தானும் வியந்து கேட்டவன் கமலேஷின் புறம் திரும்பி “கங்கிராட்ஸ் அண்ணா…” என்றான்.

“தேங்க்ஸ் பிரசன்னா…” என்று கமலேஷும் பூரிப்பாகச் சொன்னான்.

“இந்த வசுவைப் பாருங்கமா எவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றாள்னு…” என்று அன்னையிடம் சலுகையாய்ச் சொன்னாள் காஞ்சனா.

“அவளைப் பார்த்தியா காஞ்சனா… நான் கூட மாப்பிள்ளை கூட எப்படிப் பழகுவாளோனு பயந்து போயிருந்தேன். அவர் கிட்ட உண்மையை வேற சொல்ல போறேன்னு அடம் பிடிச்சுட்டு இருந்தாள். நல்லவேளை அவள் இதுவரை அப்படி எதுவும் செய்யலை போல. மாப்பிள்ளை கிட்டயும் நல்லா பேசுறாள். எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு…” என்று தாயாய் அவர் பட்ட கவலை எல்லாம் தீர்ந்தது போல் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

அதேநேரம் மனைவி நினைத்தையே தான் தன் எதிரே மாப்பிள்ளையுடன் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்த மகளைப் பார்த்து நினைத்துக் கொண்டார் எத்திராஜ்.

மகள் அவளின் வாழ்க்கையில் செய்து வைத்த குளறுபடிகள் பற்றி அறியாமல் பெற்றவர்கள் இருவரும் சந்தோஷப்பட்டுக் கொண்டனர்.

அதே நேரத்தில் மனைவி தன்னை முதல் முறையாக உரிமையுடன் அழைத்ததை எண்ணி பிரசன்னா பரவசப்பட்டுப் போனான்.

அவள் தன்னை உரிமையுடன் கூட அழைக்கவில்லையே என்று அவன் எவ்வளவு வருந்தியிருப்பான்? அந்த வருத்தத்திற்கு எல்லாம் அவளின் அழைப்பின் மூலம் மருந்து தடவிவிட்டது போல் உணர்ந்தான்.

காலை உணவாக இட்லியும், மீன் குழம்பும் வைத்திருக்க, முதலில் ஒரு விள்ளை இட்லியைப் பிய்த்துக் குழம்பில் தொட்டு எடுத்த பிரசன்னா அதை மெதுவாக மனைவியின் இலையின் ஓரத்தில் வைத்தான்.

அதைப் பார்த்ததும் முகம் மலர எடுத்துச் சுவைத்து உண்ண ஆரம்பித்த வசுந்தரா, பின்பு தன் உணவில் இருந்து எடுத்துக் கணவனின் இலையில் வைத்தாள்.

நேற்று போல் யாருமறியாமல் ரகசியமாகத்தான் உண்ண நினைத்தார்கள்.

ஆனால் அத்தனை பேரும் சுற்றி இருக்க இவர்கள் எப்படி ரகசியம் காப்பார்களாம்?

அவர்கள் ரகசியம் காக்க முயன்றும் காஞ்சனாவின் கண்களில் அவர்களின் உணவு பரிமாற்றம் பட்டுவிட, உடனே தன் அருகே நின்று பரிமாறிக் கொண்டிருந்த அன்னையின் கையைச் சுரண்டி அவர்களைக் காட்டினாள்.

தானும் அதைக் கண்டுவிட்ட கல்பனாவின் முகத்தில் அவ்வளவு பூரிப்புப் பிரகாசித்தது.

ஏற்கனவே சிறிது நிம்மதி அடைந்திருந்தவர், அவர்களின் இந்தச் செயலைக் கண்டு முழுத் திருப்தி பட்டுக் கொண்டார்.

இனி மகளின் வாழ்வைப் பற்றிக் கவலையில்லை. அவள் நன்றாக வாழ்ந்து விடுவாள். பழைய கசடுகள் அவளுக்கு இனி எந்தத் தொந்தரவும் தராது என்று மகிழ்ந்து கொண்டார் கல்பனா.

காலை உணவு முடிந்ததும் ஆண்கள் மூவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பெண்கள் சமையலறைக்குச் சென்று மதிய உணவிற்கான ஏற்பாட்டில் இறங்கினர்.

“ஏய் வசு, என்னடி… டைனிங் டேபிளில் வைத்து இரண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்று தங்கையை வம்பிழுத்தாள் காஞ்சனா.

“ரொமான்ஸா? என்னக்கா சொல்ற? அப்படி ஒன்னும் இல்லையே…” என்று வசுந்தரா சமாளிக்கப் பார்க்க,

“நான் தான் பார்த்தேனே.‌.. நீ அவர் இலையில் சாப்பாடு வைக்க, அவர் உன் இலையில் சாப்பாடு வைக்க, ஒரே ரொமான்ஸா இருந்தது…” என்று கேலி செய்தாள் காஞ்சனா.

‘அச்சோ! அக்கா பார்த்துட்டாளா?’ என்று உதட்டைக் கடித்துக் கொண்டாள் வசுந்தரா.

‘ஒருவேளை அம்மாவும் தங்களைப் பார்த்து விட்டாரோ?’ என்று அன்னையின் முகத்தைச் சட்டென்று நிமிர்ந்து பார்க்க, கல்பனாவோ இளைய மகள் சங்கடப்படுவாள் என்று நினைத்து மகள்களின் பேச்சுக் காதில் விழுந்தாலும் விழாதது போல் திரும்பி நின்று வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘நல்லவேளை அம்மா பார்க்கலை…’ என்று திருப்தி பட்டுக்கொண்டாள் வசுந்தரா.

“அதெல்லாம் அம்மாவுக்கும் தெரியும்…” என்று கண்சிமிட்டி ‘ரொம்பத் திருப்தி பட்டுக்காதே!’ என்று காஞ்சனா சொல்லாமல் சொல்லிக் காட்ட,

“ஷ்ஷ்…” என்று நாக்கைக் கடித்துக் கொண்டாள் வசுந்தரா. அவளின் முகம் வெட்கத்தை வெளிப்படுத்தியது.

தங்கையின் வெட்கத்தைப் பார்த்து மனம் குளிர்ந்தாள் காஞ்சனா.

“உன் ஜாக்கெட்டில் இருக்குற டிசைனை மட்டும் தான் அம்மா இன்னும் பார்க்கலை போல. நான் வேணும்னா உதவி பண்ணட்டுமா?” என்று கேலியாகக் கேட்டு ‘அதையும் நான் பார்த்துவிட்டேன்’ என்று பறைசாற்றினாள்.

“அய்யோ! அக்கா போதும்‌‌. ரொம்ப ஓட்டாதே…” என்று அக்காவின் வாயை வேகமாக மூடினாள்.

“என்னமோ அக்கா, மாமா மேல லவ்வாகி சுத்துகிறாள் என்று சொன்னாய்? கல்யாணமாகி ஒரு வாரத்திலேயே இப்போ நீ சுத்த ஆரம்பிச்சிட்ட பார்…” என்று தொடர்ந்து சீண்டினாள் காஞ்சனா.

‘லவ்வாகி சுத்துகிறேனா? நானா?’ என்று தன்னையே உள்ளுக்குள் கேட்டுக் கொண்டாள் வசுந்தரா.

‘இனி ஒரு முறை எனக்கு லவ் வருமா என்ன? அதெப்படி வரும்? பிரசன்னாவைக் கணவனாக வேண்டுமானால் ஏற்றுக் கொள்வேன். ஏற்கனவே ஒரு முறை காதலித்த எனக்கு அதெப்படித் திரும்பக் காதல் வரும்? காதலிக்கும் அளவுக்குச் செல்வேனா என்ன?’ என்று ஏதேதோ நினைத்துக் குழம்பிக் கொண்டாள்.

தங்கை திடீரென அமைதியாகி விட, ‘அவளின் கணவனை நினைத்துக் கனவில் இருக்கிறாள் போல’ என்று எண்ணி அவளை அப்படியே விட்டுவிட்டு தன் கேலியையும் கை விட்டாள் காஞ்சனா.

காதல் ஒரு முறை மட்டும் தான் வரும் என்று வசுந்தராவிற்குச் சொன்னவர் யாரோ?