உறவாக அன்பில் வாழ – 14

தன்னிடமிருந்த கார் சாவியை வாங்கி தானே காரை ஓட்டிக்கொண்டு வந்த சிவபாலனின் செயல் ஷான்விக்கு  சுத்தமாகப் பிடிக்கவில்லை.

தன் காரை அவன் ஓட்டுவதை பார்க்கப் பிடிக்காதவளாக ஜன்னல் வெளியே சென்னையின் ஜனத்திரளை கண்டபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“நீங்க நல்லா பேசுவிங்கன்னு எங்கப்பா சொன்னாரு. ஆனா ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்கறீங்க? என்னாச்சு? என்னைப் பிடிக்கலையா? இல்ல இந்த கல்யாணம் பிடிக்கலையா?” என்று கேட்ட அவனிடம்,

இப்பொழுது உள்ள மனநிலையில் எதையும் சொல்லப் பிடிக்காதவளாக மௌனத்தை பதிலாகக் கொடுத்தாள்.

சரண் செய்திருந்த செயலில் இதயம் இரம்பத்தை வைத்து அறுத்தது போல வலியில் துடித்துக்கொண்டிருக்க, இவன் காதில் போடும் இரம்பத்தை நினைக்க எரிச்சல் வந்தது ஷான்விக்கு.

“பதில் சொல்லாம இருக்கிறதைப் பார்த்தா கல்யாணம் தான் பிடிக்கல போல.எனக்கும் இப்போ கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை ஷான்வி. கொஞ்ச வருஷம் என் பீல்டுல நான் ஸ்டடியா ஆனதும் கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன். ஆனா உன் போட்டோ பார்த்ததும் சரி கல்யாணம் பண்ணிக்கிட்டே செய்வோமேன்னு ஒரு எண்ணம்.” என்று அவன் நிறுத்த,

அதற்கும் பதில் தராமல் அமைதியாக இருந்தாள் ஷான்வி.

“இப்படி பேசாமலே இருந்தா எப்படி? இந்த ஹாஸ்பிடல்ல கொஞ்ச நாள் செட்டில் ஆனதுக்கு அப்பறம் கல்யாணத்தை வச்சுக்கலாம்ன்னு உங்கப்பா கிட்ட பேச நினைச்சேன்.உன்கிட்ட கேட்டுட்டு பேசினா இன்னும் பெட்டர்ன்னு தான் ரெண்டு நாளா உன்னை தேடிட்டு இருக்கேன்.” என்று விளக்கினான்.

ஷான்வி மனதில் பெருத்த நிம்மதி பரவியது. இப்பொழுது உடனே இவன் திருமணம் என்று நிற்கவில்லை. அவனுக்கே தெரியாமல் அவளுக்கு உதவியாகத் தான் ஏதோ செய்ய நினைக்கிறான் என்று எண்ணியவள்,

“எனக்கு பீடியாட்ரி தான் பிடிச்சிருக்கு. ஸ்டடீஸ் முடிச்சிட்டு மேரேஜ் பண்ணிக்க நினைச்சேன். ஆனா அப்பா..” என்று இழுத்தவள்,

“இப்போதைக்கு எனக்கு கல்யாணத்துல இண்டரஸ்ட் இல்ல மிஸ்டர் சிவபாலன்.” என்று நினைத்ததை மறைக்காமல் கூறிவிட்டாள்.

“கிரேட். உங்க அப்பா மாதிரி நீங்களும் ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட் தான் போல. ஓகே நான் அங்கிள் கிட்ட பேசுறேன். மெதுவா கல்யாணத்தை வச்சுக்கலாம். அதுவரைக்கும் லவ் பண்ணுவோமே!” என்று இலகுவாக அவன் கூறிவிட,

ஷான்விக்கு உள்ளே திக்கென்று இருந்தது. காதலா? தானா? இனி ஒருமுறை அவ்வார்த்தையால் ஏற்பட்ட வலியை மீண்டும் தாங்க தன்னிடம் வலிமை இருக்கிறதா என்று யோசித்தாள்.

இப்போதைய தேவை இவனுடனான திருமணம் தள்ளிப்போவது தான். தான் தன் மனதை சற்றேனும் ஆற்றிக்கொள்ள இடைவெளி தேவை என்று எண்ணியவள்,

“எனக்கு இப்போதைக்கு படிப்புல தான் கவனம் இருக்கு.” என்று அறிவிப்பது போல அவள் கூற,

“ஓ அதான் நைட்டெல்லாம் வீட்டுல படிச்சிட்டு இங்க வந்து அப்பப்போ தூங்கிட்டு இருக்கீங்களா மேடம்?” என்று கேலி செய்ய,

ஐயோ எப்பொழுது இவனிடமிருந்து விலகி தனிமை கிடைக்கும் என்று ஏங்கினாள் ஷான்வி. ஆனால் மனதின் ஒரு மூலையில்,

உன் பெத்தவங்க நினைச்சபடி எல்லாம் நடந்தா அவனோட தான் நீ காலம் பூரா இருக்கணும். கொஞ்ச நேர பயணத்துக்கே இந்த அளவுக்கு வெறுப்பு காட்டினா வாழ்க்கை பூரா இதை எப்படி சகிப்ப ஷான்வி என்று கேள்வி எழ, பயம் மனதை கவ்வியது.

கண்களில் பயம் தெறிக்க சாலையை வெறித்துக்கொண்டிருந்தாள் ஷான்வி.

“ஹே ஷான்.. என்ன கனவா?” என்று அவளது வலது தோளை தொட்டு அவன் கூப்பிட தன்னிசையாக இடதுபுறமாக அவள் உடல் நகர்ந்தது.

சிவபாலன் அதை கவனித்துவிட்டான்.

“நீ லண்டன்ல படிச்ச பொண்ணு, லேசா விரல் பட்டதுக்கே இப்படி தள்ளி போற?” என்று மனதில் நினைத்ததை அவளிடம் வினவ,

“நான் படிக்க தான் லண்டன் போனேன் சிவபாலன். வேற எதுக்கும் இல்ல. வெளிநாடு போய் படிச்ச பொண்ணுனா எல்லார் மேலையும் விழுந்து பழகணும், குடிக்கணும், நிறைய பேசணும்,பாய் ப்ரெண்ட் வச்சிருக்கணும்னு எந்த சட்டமும் இல்லையே! இதென்ன யாரா இருந்தாலும் வெளிநாடு போய் படிச்ச பொண்ணு மாதிரியா இருக்கன்னு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?” பலர் அவளிடம் பலநாட்களாகக் கேட்ட கேள்விக்கெல்லாம் சேர்த்து வைத்து வட்டியோடு வாங்கிக்கட்டிக்கொண்டான் சிவபாலன்.

“ஓகே கூல்.. கூல்.. நான் சாதாரணமா தான் ஷான் கேட்டேன்” என்று அவளை சமாதானம் செய்தான்.

அவளுக்கோ மனம் அவளிடமே இல்லை. சரண் என்ன செய்து கொண்டிருப்பான்? அவன் இனி தன்னை எப்படி முகம் பார்த்து பேசுவான்? அவனுடைய குடும்பம் குழந்தை என்று இத்தனையும் தெரிந்த பின்னும் அவனின் அழைப்பான ஷானுமா என்ற வார்த்தை பாறையாக அவள் மனதை அழுத்தியது. அதில் பொய்மை இருந்ததா என்று தாரசை எடுத்து கணிக்க அவள் முயல,

அதற்குள் சிவபாலன் அவளை பலமுறை ‘ஷான் ஷான்’ என்று அழைத்திருந்தான்.

அவனது விளிப்பில் அவளுக்கு எரிச்சல் பொங்கி வந்தது.

“நாளைக்கு எனக்கு செமினார் இருக்கு மிஸ்டர் சிவபாலன். நான் மனசை க்ளாஸ் பக்கம் தான் வச்சிருக்கேன். என்னால காதல் வசனமெல்லாம் கேட்கவோ பேசவோ முடியாது. சொல்லப்போனா காதல்ன்னு சொன்னாலே எனக்கு கடுப்பா இருக்கு. நீங்க என் டாடிக்கு அடுத்த நிலைக்கு வரப்போறீங்க. கொஞ்சம் அதுல கவனம் வைங்க. எங்கப்பா நல்லா பேசுற மாதிரி தான் இருக்கும். அவருக்கு பிடிக்கலன்னா சொந்த பொண்ணுன்னு கூட பார்க்காம என்னையே வெளில போன்னு சொல்ல தயங்கமாட்டாரு. அவருக்கு ஹாஸ்பிடலுக்கு அப்பறம் தான் உறவெல்லாம். சோ.. உங்க முடிவு என்ன? என் பின்னாடி வந்து என் அப்பா கிட்ட பேரை கெடுத்துக்க போறீங்களா இல்ல, நேரத்தை உபயோகமாக்கி அவர் கிட்ட நல்ல பேர் வாங்கபோறீங்களா? முடிவு உங்க கையில” என்றவள் பேச்சு முடிந்தது என்பது போல தன் மொபைலை எடுத்து ஆராய ஆரம்பித்திருந்தாள்.

சிவபாலனுக்கு அவள் சொல்ல வருவது நன்றாகவே புரிந்தது. ஏனெனில் இந்த நான்கு நாட்களில் அவனும் கிருஷ்ணமூர்த்தியை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான். மருத்துவமனை மேல் அவருக்கு இருக்கும் பெருமை. தான் தேர்தெடுப்பது எல்லாமே முதல் தரமுள்ளவை என்ற அவரின் பெருமை பீற்றல். கூடவே தவறென்று தெரிந்த நொடி இடம்பொருள் பார்க்காமல் கிழித்து விடும் அவரின் கோபம் என்று கவனிதவனுக்கு ஷான்வி சொன்னது சரி என்று பட்டது. கூடவே அவனது எண்ணமும் இந்த மருத்துவமனை குழுமத்தை மொத்தமாக அவனுக்கு சொந்தமாக்கி கொள்வது தானே.

தன் தந்தையின் மருத்துவமனையை விட இவருடையது மிக்பெரிது, அதை விட நான்கு கூடுதல் மருத்துவமனைகள். ஒரே பெண். அவனுக்கு மட்டும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் இப்படி அவனுக்கே அவனுக்கென்று நாளை சொல்லிக்கொள்ள இத்தனை சொத்துடன் கூடிய பெண் கிடைக்குமா? அதை காதல் ஊதல் என்று கெடுத்துக்கொள்ள அவனென்ன கிறுக்கனா?

“யூ ஆர் ரைட். நான் அங்கிள் கூட செட் ஆகறேன் முதல்ல” என்று அவன் பதிலளிக்க அது ஷான்வி மனதில் பாலை வர்த்தது.

இனி காதல் என்ற பெயரில் இவன் எந்த ரோமியோ வேலையையும் தன் பின்னால் பார்த்துக்கொண்டு அலையமாட்டான் என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

கிட்டத்தட்ட அறுவைசிகிச்சை முடிந்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து முடித்து பன்னிரெண்டு மணி நேரத்திற்கு பின் தான் ஷிவானியை சாதாரண அறைக்கு மாற்றினார்கள்.

சரண் தவிப்போடு அறைக்குள் இருக்கும் அவளை கண்ணாடி கதவு வழியே பார்த்துக்கொண்டு நிற்க, உள்ளே சித்ராவும் முத்துலட்சுமியும் சென்று பார்த்துவிட்டு அவள் இன்னும் கண் விழிக்கவில்லை என்று வெளியே வர இருந்தனர்.

அப்பொழுது அவள் மெல்ல விழி மலர்த்தி பார்க்க, அவளது அசைவை உணர்ந்த சரண் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தவன் அவளது இடது கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான்.

“ஏய் பைத்தியக்காரி என்ன டி பண்ணித்தொலைச்சிருக்க?” என்று கண்ணீரும் கோபமுமாக வினவினான்.

அதற்குள் பெரியவர்கள் நால்வரும் வர, அவர்கள் பக்கம் தலையை லேசாக திருப்பிப் பார்த்தாள் ஷிவானி.

தன் அருகில், தள்ளி இருந்த தொட்டில் எதிலும் குழந்தை இல்லாததை கவனித்தவள் அதிர்வுடன், “மாமா… மாமா.. குழந்தை.. குழந்தை..” என்று பதற,

முத்துலட்சுமி வேகமாக வென்பிலான் சொருகி இருந்த வலது கையை பற்றிக்கொண்டு, “பத்திரமா இருக்கா உன் பொண்ணு” என்று ‘கண்டேன் சீதையை’ என்பது போல சொல்ல ஷிவானி கண்களில் கண்ணீர் சேர்ந்தது.

சித்ரா தன் மகளுக்கு அருகில் வந்தவர், “என்ன டி இப்படி பண்ணிட்ட, கவனமா இருந்திருக்கலாம்ல, போன வாரமே உன்னை வீட்டுல கொண்டு வந்து விட சொல்லி மாமா, சரண் கிட்ட சொல்லி இருக்காரு. இவன் தான் கேட்காம இருந்திருக்கான். எங்களோட இருந்திருந்தா உனக்கு இப்படி ஆகி இருக்குமா?” என்று சித்ரா மனம் பொறுக்காமல் கேட்க,

“இத்தனை நாளா இல்லாத கரிசனம் இன்னிக்கு என்ன? என்னை இத்தனை நாளும் பார்த்தது என் மாமா தான். அவரை குறை சொல்ற மாதிரி இருந்தா தயவுசெஞ்சு என் கண்ணு முன்னாடி நிற்காத.” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

சமரன் அவளுக்கு அருகில் வர சரண் எழுந்து அவருக்கு இடம் கொடுத்தான்.

“ஏன் டா மா என்ன அவசரம்?” என்று பொறுமையோடு அவளிடம் கேள்வி கேட்க, கண்களில் கண்ணீர் கொப்பளிக்க,

“இன்னிக்கு இவ்ளோ பொறுமையா கேட்குறியே அப்பா அன்னைக்கு என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா பா? அட்லீஸ்ட் என்னமா இதெல்லாம்ன்னு கேட்டியா? உனக்கு என்னை விட உன் பிரெண்ட் கோபம் தானேப்பா பெருசா தெரிஞ்சது? ப்ளீஸ் பா எழுந்து போய்ட்டு. இல்லன்னா நான் உன்னை ஹர்ட் பண்ற மாதிரி பேசிடுவேன்.” என்று சொல்ல,

“இதான் டி கொழுப்புன்னு சொல்றது. கீழ விழுந்து செத்து பிழைச்சு பிள்ளை பெத்து இருக்காளேன்னு உயிர் துடிச்சு போய் நாங்க நாலு பேரும் வந்திருக்கோம். நாங்க உங்களை மன்னிச்சது கூட உங்களுக்கு புரியல. இப்பவும் நீ எவ்ளோ திமிரா பேசுற? என் அண்ணன் கோவப்பட்டப்ப ஏன் இப்படி இருக்காருன்னு எனக்கு கோவம் வந்துச்சு. ஆனா இப்போ உன் பேச்சை கேட்டா அவர் கோவிச்சத்துல எந்த தப்பும் இல்லன்னு தோணுது” என்று கோபமாக சித்ரா பேசினார்.

“சித்ரா நீ அமைதியா இருக்க மாட்டியா ரெண்டு மாசமா பொண்ணை பார்க்கணும், வளைகாப்பு போடணும்னு எங்க எல்லார் கூடவும் சண்டை போட்டுட்டு இப்போ உன் பொண்ணுகிட்டையே சண்டை போடுற?” என்று முத்துலட்சுமி சீறினார்.

“புரியுது அண்ணி. ஆனா என்னை என்ன பண்ண சொல்றீங்க? தப்பு பண்ணினது அவங்க. ஆனா நாம மன்னிச்சாலும் பெரிய இவ மாதிரி பேசினா கோபம் வராதா?” என்று அவரும் மனத்தாங்கலுடன் கூறினார்.

“என்ன சொன்ன? தப்பு பண்ணினோமா? யாரு நாங்களா? என் மாமா தப்பு பண்ணினார் ன்னு உனக்கு தெரியுமா? நீ வந்து பார்த்தியா? மன்னிப்பாம் மன்னிப்பு.. யாருக்கு வேணும் உன் மன்னிப்பு? என் மாமா தப்பே பண்ணலன்னு சொல்றேன் என்னமோ பெருந்தன்மையா மன்னிக்கிறது மாதிரி பேசிக்கிட்டே போற?” என்று வேகமாக குரலெடுத்து கத்த ஆரம்பித்தாள் ஷிவானி. அவள் கத்த கத்த உடல் குலுங்க ஆரம்பித்தது.

அவள் குரல் கேட்டு அந்த அறைக்கு பொறுப்பாக இருக்கும் செவிலியர் ஓடிவந்தார்.

“ஏன் மா என்னாச்சு? ஏன் இப்படி சத்தமா பேசுறீங்க? உங்களுக்கு ஆபரேஷன் ஆகி இருக்கு தெரியுமா தெரியாதா? கையை காலை ஏன் அசைக்க பாக்கறீங்க?” என்று கேட்டபடி அவளை சரியாகப் படுக்க வைத்தார்.

“நீங்க அசங்கவே கூடாது. நாங்க தான் உங்களை நகர்த்தி, திரும்பி படுக்க வச்சு எல்லாம் செய்வோம். நீங்க எழுந்து நிற்கவே இன்னும் ரெண்டு நாள் ஆகும். அதுவும் உங்க இடுப்புல எந்த காயமும் இல்லாம இருந்தா தான். சொல்றது புரியுதா?” என்று அவளுக்கு கண்டிப்புடன் கூறிவிட்டு,

“ஏன் இத்தனை பேர் இருக்கீங்க? ஒருத்தர் மட்டும் தான் இருக்கணும். மத்தவங்க விசிட்டிங் அவர்ஸ்ல வாங்க.” என்று சொன்னவர்,

“சார் நீங்க வாங்க” என்று சரணை அழைத்தார்.

அவருடன் சரண் நடக்க,அவர்கள் பின்னாலேயே பெரியவர்களும் சென்றனர்.

“இங்க பாருங்க சார், அவங்களுக்கு சடனா அடிபட்டு குழந்தை ப்ரீ டேர்ம் ல பிறந்திருக்கு. இப்போ வரை அவங்ககிட்ட குழந்தையை கூட காட்டல. அவங்க இப்போ அழுத்தமான மனநிலையில் இருப்பாங்க. இந்த நேரத்துல ஹார்மோன் மாற்றங்கள் நிறைய இருக்கும். குடும்ப பிரச்சனை, சண்டை எல்லாத்தையும் கொஞ்ச நாள் ஒதுக்கி வச்சிட்டு அவங்களுக்கு ரெகவர் ஆக டைம் கொடுங்க. இதை நான் நார்மலா டெலிவரி ஆனவனங்களுக்கே சொல்லுவேன். ஏன்னா ஒரு பொண்ணோட இந்த நேர மனநிலை தெரியாம இப்போ தான் எங்க இருந்தோ தேடி எடுத்து குடும்ப சண்டை எல்லாம் போடுவாங்க. இது அவங்களை ரொம்ப பாதிக்கும்ன்னு சொன்னா படிச்சவங்களுக்கே கூட புரியறது இல்ல. நீங்களாவது புரிஞ்சுக்குங்க சார்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

சரண் எதுவும் பேசாமல் காத்திருப்போர் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அவனருகில் வந்து அமர்ந்த விநாயகம், “நான் அன்னைக்கு நீ சொல்ல வந்தப்ப கேட்டு இருக்கணும்ன்னு இப்ப தோணுது சரண். அன்னைக்கு ராஜராஜன் ஏதேதோ போன்ல சொல்லவும் ஏற்கனவே அவன் மேல இருந்த வெறுப்புல கோவிலுக்கு ஓடி வந்தா, நீங்க ரெண்டு பேரும் அப்படி நின்னதை பார்த்ததும் எனக்கு கேள்வி கேட்க கூட தோணால.” என்று பொறுமையாக பேசினார்.

கிட்டத்தட்ட பல ஆண்களுக்குப் பிறகான பொறுமையான நிதானமான உரையாடல் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்தது.

“என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்க நான் இப்போ தயாரா இருக்கேன். சொல்றியா?” என்று அவனது கையை தன் மடி மீது வைத்து அழுத்தம் கொடுத்து கேட்டார் விநாயகம்.

முத்துலட்சுமி அவனின் தோளில் கைவைத்து, “என்ன நடந்திருந்தாலும் சொல்லு சாய். அப்பா பழைய மாதிரி கோபப்படுறது இல்ல. தைரியமா சொல்லு” என்று ஊக்கினார்.

ஒரு பெருமூச்சுடன் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்க தயாரானான் சாய்சரண்.