உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 2

பெங்களூரில் முதல் நாள் பயிற்சிக்காக அங்கே வகுப்பு தொடங்கிய அதே நேரம்,
சென்னையில் அழகுக் கண்ணாடி மாளிகையான அந்த மென்பொருள் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான அந்த கட்டிடத்தின் பயிற்சி அறையில் தன் பேட்ச் மக்களுடன் அமர்ந்து அன்றைய வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தான் இளங்கோவன்.

அச்சமயம் ஒளிர்ந்து அதிர்ந்தது அவனின் கைப்பேசி குறுஞ்செய்தி வந்ததற்கான அடையாளமாய்.

“ஐம் ஃபீலிங் வெரி லோன்லி ஹியர் (நான் இங்கு தனிமையை உணர்கிறேன்)”
தன் தோழி அம்சவேணி அனுப்பிய இக்குறுஞ்செய்தியில் இவன் மனம் வருந்திட,

“இன்னிக்கு தானே முதல் நாள் அப்படி தான் இருக்கும். போக போக அதுவே பழகிடும்” எனப் பல டங் அவுட் ஸ்மைலிக்களுடன் தேறுதல் கூறினான்.
அதைக் கண்டதும், “ஹா ஹா ஹா. உண்மை தான்” என அவள் பதிலுரைத்திருந்த நேரம்,
ஒலித்தது அவளின் கைப்பேசி இளாவின் அழைப்பில்.

பயிற்சியின் வகுப்பில் இடைவேளை விட்டிருந்த நேரம் அவளுக்கும் இடைவேளை என்றறிந்ததினால் அழைத்திருந்தான் அவளை.

“என்னங்க மேடம், தனியாவே நாங்க ஊரு உலகத்தை சுத்திட்டு வருவோம்னு சவால் விட்டுப் போன எங்கச் சூறாவளி அம்சவேணிக்கு இப்ப என்னாச்சு?” என்று கேலியாய் இளா வேணியைக் கேட்க,

“இல்லடா இங்க வந்து இன்னும் யாரும் ப்ரண்ட்ஸ் ஆகலை. அதான் அப்படி இருக்கு. உன்கிட்ட பேசினப்புறம் நார்மல் ஆயிட்டேன். இப்ப நோ ப்ராப்ளம் இளா. நீ உன் க்ளாஸ் கவனி” என படு சீரியஸாகவே வேணி பதிலளிக்க,

“என்னடா சிங்கம் கூண்டுக்குள்ள சிக்கின மாதிரி பேசுது. இந்நேரம் நான் சொன்ன வார்த்தைக்கு சிலுப்பிக்கிட்டு என்னை சிதைச்சிருக்கனுமே” என வார்த்தையில் வியப்பு மேலிட விளையாட்டாய் அவன் வினவ,

“என்னடா ஓவரா பேசுற…. ஆமா நான் சூறாவளி தான். என்னால ஊரு உலகத்தை தனியா சுத்தி வர முடியும். எனக்கு யாரோட இரக்கமும் அனுதாபமும் தேவையில்லை… புரிஞ்சுதா? போய் உன் வேலையை பாரு” சிலுப்பிவிடப்பட்டச் சிங்கமாய் மொழிந்தாள் வேணி.

“இது இது தான் என் அம்ஸ். அவளுக்கு இப்படி சோக மூஞ்சிலாம் செட் ஆகாது. இப்ப ஃபார்ம்க்கு வந்துட்டடா” என அவளை அவளாய் மாற்றிய பூரிப்பில் இளா உரைக்க,

“சரி டா, பை” என இதழில் புன்னகை இழையோட அலைப்பேசியைத் துண்டித்து வேணி திரும்பிப் பார்க்க தூரமாய் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாள் வாணி.

“சாரி, உங்களை ஹர்ட் பண்ணனும்னு நான் அப்ப பேசாம இருக்கல. அம்மா அப்பா இன்னிக்கு ஊருக்கு போறாங்க, அந்த நினப்புலயே இருந்துட்டேன். அதான் சொல்ல டைம் எடுத்தேன். அதுக்குள்ள கோவிச்சிட்டுப் போய்டீங்க… சாரி” என வருத்தமாய் வாணி மன்னிப்புக் கேட்க,

“அட விடு இதுக்குப் போய் சாரி லாம் கேட்டுக்கிட்டு… இன்னிக்கு தான் அங்கிள் ஆன்டி ஊருக்குப் போறாங்களா? அப்ப சரி சாய்ந்திரம் உன் கூடவே வரேன் க்ளாஸ் முடிஞ்சதும் அங்கிள் ஆண்டி செண்ட் ஆஃப் செய்த மாதிரியும் இருக்கும்” என்றான் ஆஷிக்

“அடக்கடவுளே, அப்பாக்கிட்ட எனக்கு உதை வாங்கிக் கொடுக்காம இவன் போக மாட்டான் போலயே… கோபமாவே இருந்துட்டுப் போகட்டும்னு விட்டிருக்கனும்” என மனதிலேயே அவனை வறுத்தவள்,

ஞாபகம் வந்தவளாய், “உங்க பேர் என்ன?? சாரி க்ளாஸ்ல இன்ட்ரோ(அறிமுகம்) கொடுக்கும் போது கவனிக்கலை”

“ஹ்ம்ம் இன்னும் என் பேர் தெரியாமத் தான் சுத்திட்டு இருக்கியா நீ!! பரவாயில்லை இப்பவாவது கேட்கனும்னு தோணுச்சே. இருந்தாலும் நானா சொல்ற ஐடியா இல்ல. முதல் நாள்ங்கிறனால எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை நம்ம இன்ட்ரோ தான் எல்லா டிரைனர்ஸூம் கேட்பாங்க. அப்ப கேட்டுத் தெரிஞ்சுக்கோ” என்றுரைத்து விட்டு ஆஷிக் நகர,

இவன் என்ன லூசா என்கின்ற பாவனையில் வாணி அவனைப் பார்த்து நிற்க, அம்சவேணி வாணியினருகில் வந்து சேர சரியாகயிருந்தது.

மீண்டும் அன்றைய வகுப்புகள் தொடர, அதில் மூழ்கிப் போயினர் அனைவரும்.
மதிய உணவு இடைவேளைக்கு பின்பான அன்றைய வகுப்பின் இரண்டாம் பாதியில் வாணியின் மனம் சற்றாய் சஞ்சலிக்கத் தொடங்கியது.

‘இதுவரை தனியாய் வீட்டின் வாசல் படியைக் கூட தாண்டாதத் தான் எவ்வாறு இப்புதிய ஊரில் வாழப் போகிறேன்? பெற்றோரைப் பிரிந்து எங்கும் ஒரு நாள் கூடத் தங்கிடாதத் தான் எவ்வாறு மூன்று மாதங்கள் தனியாய் இவ்வூரில் நாட்களைக் கடத்தப்போகிறேன்? இவ்வெண்ணம் மனதில் உதிக்கும் போதே கண்ணில் நீர் துளிர்க்கிறதே! பாரமாய் மனதை ஏதோ அழுத்துகிறதே! பெருந்துக்கம் தொண்டையை அடைக்கிறதே!’ இவ்வாறாக இன்றிரவு தன்னை விட்டு சென்னைக்கு கிளம்பிச் செல்லப் போகும் தாய் தந்தையை எண்ணி அவளின் மனதில் பெரும் பீதி சூழ, மனங்கொள்ளாத் துயரத்தில் கண்ணில் அடக்கப்பட்ட நீருடன் அம்சவேணி, மகாலட்சுமி மற்றும் ஆஷிக் புடைச் சூழ தன் பிஜியை வந்தடைந்தாள் வாணி.
அங்கே கிளம்புவதற்கு தயார் நிலையில் காரில் அமர்ந்திருந்தனர் வாணியின் பெற்றோர்.

மஹாவும் வேணியும் வாணியின் அறையிலேயே தங்குவதாய் கூறித் தங்களை வாணியின் பெற்றோரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள, ஆஷிக்கும் வாணியின் பெற்றோரிடம் மரியாதை நிமித்தமாய் பேசிக் கொண்டிருக்க, வாணி சிறு பிள்ளையாய் கண்ணை மறைத்த நீருடன் அடக்கப்பட்ட அழுகையால் துடித்த உதடுகளும் சிறு தேம்பலுமாய் தன் அழுகையை பிறருக்குக் காட்டாமல் மறைக்கப் பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தாள்.

“மதும்மா, அப்பா கிளம்புறேன்” என்றுரைத்து அவளுக்கு அறிவுரைகள் கூறி மதுரவாணியின் தந்தை சற்றவளை அணைத்த நொடி கண்ணிமை விட்டு நீர் அவள் கன்னங்களில் வழிந்தோட, அதே நிலையில் தான் இருந்தார் வாணி தந்தை செல்வமும்.

என் கண்ணையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மாப்பிள்ளையிடம் கூறும் தகப்பனைப் போல் வாணியின் கைகளை வேணி மற்றும் மஹா கைகளில் ஒப்படைத்து, “அவளுக்கு வெளியுலகம் சுத்தமா தெரியாதுமா…. கைக்குள்ளேயே வளர்ந்தப் பொண்ணு பத்திரமா பாத்துங்கோங்க. ஒருத்தருக்கொருத்தர் உதவிச் செஞ்சிக்கோங்க” என்று செல்வம் உரைக்க,

“நாங்க பத்திரமாய் பாத்துப்போம் அங்கிள். நீங்க பயப்படாம தைரியமா போய்ட்டு வாங்க” என பெரிய ஆறுதல் மொழியுரைத்தனர் வாணியின் தந்தையிடத்தில்.

அச்சமயம், “இனி வாணி என் பெஸ்ட் ப்ரண்ட். நீங்க கவலைப்படாம போங்க. நாங்க அவளை நல்லாப் பார்த்துப்போம்” என ஆஷிக் உரைக்க,

“அய்யோ நீ இப்படி பேசுறது தான்டா என் அப்பாக்கு கவலையாகப் போகுது. இவன் அப்பாகிட்ட இன்னிக்கு வாங்கிக் கட்டிக்காம போக மாட்டான் போலயே. வாயை மூடிட்டு இருடா குரங்கு” என மனதிற்குள் கௌண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள் வாணி.

இவற்றையெல்லாம் கவலை தோய்ந்த முகத்துடன் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தார் வாணியின் அம்மா நீலாமதி.

ஒருவாராய் பிரியா விடைக்கொடுத்து வாணியின் பெற்றோர் தங்களின் சென்னைப் பயணத்தைத் துவங்க, அன்றிரவு போர்த்திய போர்வையின் அடியில் அழுது வீங்கிய கண்களுடன் உறங்கிப் போனாள் வாணி.

மறுநாள் வாணி வழமைப் போல் ஐந்து மணிக்கே எழுந்தவள், தன் துணிகளைத் துவைத்துக் குளித்து முடித்து ஏழு மணி வாக்கில் மஹாவையும் வேணியையும் எழுப்பத் தொடங்கினாள்.

அந்நேரம் வேணியின் கைப்பேசி சத்தம் கொடுக்க அதை தூக்கக் கலக்கத்தில் வேணி எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க, “அலாரம் வச்சிருந்திருக்காங்கப் போல… அப்ப அவங்களே எழுந்திருப்பாங்க” என நினைத்துக் கொண்டே பால்கனியில் தன் துணிகளை காயப் போடச் சென்றாள்.

வாணி தனக்கு ஃபிட்டாக இருக்கும் சல்வாரை அணிந்து துப்பட்டாவை இரு பக்கமும் பின் செய்து நீளமான முடியை லேசாக எண்ணெய் தடவி நன்றாகப் பின்னி மிதமாய் பவுடர் பூசி நெற்றியில் மீடியம் சைஸ் பொட்டும் அதன் மேல் சந்தனம் வைத்து என கிளம்பித் தன் மெத்தையில் அமர்ந்திருந்தாள்.
குளித்து முடித்து வெளி வந்த மஹா கிளம்பத் தயாராக, வேணி குளிக்கச் சென்றாள்.

மஹா மற்றும் வேணி அலங்காரம் செய்வதையே மெத்தையிலமர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வாணி.

நெடு உயரமான மஹா, அவளுக்கேற்ற ஜீன்ஸ் அதன் மேல் ஷாட் குர்தி அணிந்திருந்தவள், ஃபெதர் கட் செய்திருந்த தன் முதுகு வரை நீண்ட கூந்தலை காதின் இரு பக்கமும் சிறு முடிகள் எடுத்து சிறிய கேட்ச் க்ளிப்பில் அடக்கியவள் பின்னால் மீதம் இருந்த கூந்தலை நேர்த்தியாய் ஃப்ரீ ஹேரில் விட்டாள். பின் ஐ லைனர்,கண் மை,காம்பாக்ட் பவுடர்,லிப் க்ளாஸ் என மிதமாய் அலங்காரம் செய்யலானாள். நெற்றியில் ஒரு புள்ளி அளவு பொட்டு வைத்தவள் திருப்தியாய் தன்னை ஒரு முறை கண்ணாடியில் முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

மஹா தன்னை அலங்கரிக்க எடுத்துக் கொண்ட அரை மணி நேரத்தில் குளித்து முடித்து நேர்த்தியாய் இஸ்த்திரி போட்டு மடித்து வைத்திருந்த லெக்கின் டாப்ஸ் அணிந்த வேணி, கண்ணாடிக்கூடப் பார்க்காது முதுகு வரை நீண்ட கூந்தலை குதிரை வால் போல் தூக்கி மொத்த முடியையும் பேண்டிற்குள் அடக்கியவள், லேசாய் பவுடர் அடித்து சிறு பொட்டு வைத்துக்கொண்டாள்.

இவற்றையெல்லாம் முடித்தப் பிறகே கண்ணாடியை பார்த்தாள்.

கல்லூரி ஹாஸ்ட்டலில் காலையில் அவசர அவசரமாய் இவ்வாறு கண்ணாடி பார்க்காமல் தயாராவது வேணியின் பழக்கம். அதுவே இங்கேயும் தொடர்ந்தது. ஆனால் உடுத்தும் உடை இஸ்த்திரி போடாமல் உடுத்த மாட்டாள்.

“வேணி நான் உன்னை அம்முனு கூப்பிடவா?” இவ்வாறு கிளம்பிக் கொண்டிருந்தச் சமயம் மஹா வேணியிடம் கேட்டாள்.

ஆச்சரியத்தில் விழி விரித்த வேணி,”ஹே எங்கப்பா என்னை அப்படி தான் கூப்பிடுவாங்க. ப்ரண்ட்ஸ் தான் வேணினு கூப்பிடுவாங்க… நீங்க எப்படி கூப்பிட்டாலும் எனக்கு சந்தோஷம் தான்” என்றாள்.

“வாணி வேணி ரைமிங்கா இருக்குல கன்பூஸ் ஆயிடும். அதான் இப்படி யோசிச்சேன். அப்புறம் இந்த வாங்க போங்கலாம் வேண்டாம். வா போ னே பேசலாம்” என வாணி வேணி இருவருக்கும் பொதுவாய் உரைத்து சகஜமாய் பழக வழிவகைச் செய்தாள் மஹா.

“ஹே அப்ப நானும் அம்முனே கூப்பிடுகிறேன்” என வாணி உரைத்தாள்.
ஒருவாறாகக் கிளம்பி  தன் பயிற்சி வகுப்பிற்குச் சென்றார்கள் அவர்கள்.

இவ்வாறாக நாட்கள் செல்ல…

பெற்றோரை நினைக்கும் போதெல்லாம் அழுகையுமாய், படிப்பு வேலை என்று வந்ததும் வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற துடிப்புமாய் வாணி படிப்பில் மட்டுமே தன் முழு கவனத்தையும் வைத்திருந்தாள்.

அம்சவேணியும் மகாலட்சுமியும் ஏற்கனவே கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படித்தக் காரணத்தினால் இப்பெங்களூர் பயிற்சி வகுப்பையும் கல்லூரியில் நடக்கும் வகுப்பினைப் போல் கிண்டலும் கேலியுமாய் கவனித்துக் கொண்டு கல்லூரி புறாக்களாகவே சந்தோஷ முகத்துடன் நாட்களை இன்பமாய் நகர்த்திக் கொண்டிருந்தனர்.

விடியற்காலையில் விழிப்பு பின் படிப்பு இரவு வரை அலுவலகத்தில் பயிற்சியென அதில் மட்டுமே கவனத்தை செலுத்தித் தன் கூட்டைவிட்டு வெளிவராது அனைவரிடமும் ஒதுங்கியே பழகினாள் வாணி.

காலைச் சூரியன் முகத்தில் அடிக்கும் போது விழித்து பயிற்சி வகுப்பின் போதுக் கொடுத்த வீட்டுப் பாடத்தை அலுவலகம் கிளம்பும் நேரம் அவசர அவசரமாய் வாணியைப் பார்த்து காப்பி அடித்துப்பின் இரவு வரை பயிற்சி வகுப்பில் அரட்டையடித்துக் கொண்டே பயிற்சி பாடங்கள் செய்தென தங்கள் நாட்களை கல்லூரி நாட்கள் போலவே இன்பமாய் கழித்தனர் அம்சவேணியும் மகாலட்சுமியும்.

அம்சவேணியின் பூர்வீகம் பிறப்பு வளர்ப்பு அனைத்தும் சேலம் தான். மஹாவின் பூர்வீகம் பிறப்பு வளர்ப்பு அனைத்தும் சென்னை.

அம்முவுக்கும் மஹாவுக்கும் உடன் பிறந்தவர்கள் என்றால் ஓர் அக்கா மட்டுமே. இருவரின் அக்காக்களும் சென்னையில் ஓர் மென்பொருள் நிறுவனத்தில் வேலைச் செய்துக்கொண்டிருந்ததால், இத்துறை அவர்களுக்கு சிறிது பரிச்சயமானதாய் இருந்தது.

அம்சவேணியின் தந்தை கிராமத்துத் தலைவர் மற்றும் அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர். மஹாவின் தந்தை மத்திய அரசாங்கப் பணியில் இருப்பவர்.எனவே இருவரும் உயர் மத்திய குடும்பத்தை சேர்ந்தவர்களாயிருந்ததால் செல்வத்துக்கு பஞ்சமில்லை இரு குடும்பத்தினருக்கும்.

பதினோராம் வகுப்பிலிருந்தே ஹாஸ்ட்டலில் தங்கிப்படித்தவர்கள் வேணியும் மஹாவும். ஆகவே பெற்றோரை விட்டுப் பிரிந்திருப்பது பழகிய ஒன்றாய் இருந்தது அவர்களுக்கு. எனினும் புது இடமாகையால் நட்புக்கள் அமையும் வரை அவர்களையுமே சில நேரம் வீட்டை நினைத்து ஏங்க வைத்தது.

கல்லூரி காலங்களில் பெரும் நட்பு படை உண்டு இருவருக்கும். வேணிக்கு பத்து பெண்கள் சேர்ந்தப் படை தோழிக்களாயிருக்க, மஹாவிற்கு மூன்று தோழர்கள் நான்கு தோழிகளென பெரும் நட்புக் குழு கல்லூரியில் இருந்தது.
இவ்வாறு வேணிக்கும் மஹாவுக்கும் இருந்த ஒற்றுமைகளால் அவர்கள் சிறிது நாட்களிலேயே தோழிகளாய் மாறிப்போயினர்.

மதுரவாணியின் குடும்பமும் செல்வந்தர்களே. அவர்கள் பரம்பரையாய் வணிகத்தில் பொருளை ஈட்டும் குடும்பத்தவர்கள். ஆகையால் பத்தாவது பன்னிரெண்டாவது மேல் படிக்கவில்லை அவளின் தந்தைத் தலைமுறையில். அவளின் தலைமுறையிலுள்ளோர்களோ டிப்ளமோ படித்து அதற்கேற்றத் தொழில் ஈடுபட்டனர். வாணிக்கு உடன்பிறந்தவர்கள் எவருமிலர். ஆக வாணித் தான் அக்குடும்பத்தில் முதல் பட்டதாரி மற்றும் வெளி அலுவலகத்தில் பணியிலமர்ந்த முதல் மென்பொருளாளினி.
மூன்று மாத பயிற்சிக்குப் பின் எவ்வாறேனும் சென்னையில் ப்ராஜக்ட் பணி வாங்கிக்கொண்டு சென்னைக்கு மாற்றலாகிவிட வேண்டுமென்ற எண்ணத்தில் திண்ணமாய் வாணி இருந்ததுமே ஒரு முக்கிய காரணம் இவர்களிடமிருந்து ஒதுங்கிப் பழகியதற்கு.
மற்றொரு காரணம் தாழ்வு மனப்பான்மை.

அழகாய் இருப்பவர்கள் மட்டுமே ஐ.டியில் வேலை செய்வார்கள் என்றொரு பேச்சு அப்போது உண்டு. ஆகையால் தன்னுடைய படிப்புத் திறமையின் மேல் வாணிக்கிருந்த நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்கள், அவளின் உருவெளித்தோற்றத்தின் மேல் அவளுக்கில்லை. எங்கேனும் அதற்காய் தாம் கேலிச் செய்யப்பட்டு விடுவோமோ என்கின்ற எண்ணம் அவள் மனதின் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு எவரிடமும் அவளை நெருங்கிப்பழக அனுமதிக்கவில்லை.

வேணியும் மஹாவும் வாணியிடம் பழகும் விதத்தில் அந்த தாழ்வு மனப்பான்மை சிறிது குறைந்திருந்தாலும், அலுவலகத்தில் அவ்வெண்ணம் அவளிடம் தலைத்தோங்கியே இருந்தது.
பெங்களூரில் பயிற்சி நாட்கள் அதன் போக்கில் நகர்ந்துக் கொண்டிருக்க, ஒரு நாள் இரவு வாணிக்குத் தூக்கத்தில் தொண்டை வறண்டுப் போக, தண்ணீர் அருந்துவதற்காக அவள் விழிக்க, அங்ஙனம் கேட்டதோர் விசும்பல் சத்தம் வாணிக்கு. யாரென்று தன் அறையின் இருட்டில் சுற்றும் முற்றும் பார்க்க, அம்சவேணியின் போர்வையின் உள்ளே கைப்பேசி ஒளிர்ந்துக் கொண்டிருக்க யாருடனோ பேசிக் கொண்டே விசும்பிக் கொண்டிருந்தாளவள்.

வேணியின் சொந்த விஷயத்தில் தலையிட விரும்பாத வாணி, அன்று அவளிடம் ஏதும் கேட்காது உறங்கி விட்டாள்.

வேணி மஹா நெருங்கிய தோழிகளாகி விட்டதால் அவள் அழுததைப் பற்றி மறுநாள் மஹாவிடம் வாணி உரைக்க, வேணி அவளின் கல்லூரித் தோழன் இளாவுடன் தினமும் இரவு தூங்கும் நேரம் பேசுவாளென்றும், ஹோம் சிக் வரும்போதெல்லாம் இப்படி தான் அவனிடம் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பாளென்றும் அவள் தன்னை மறந்து தூக்கம் வரை அவனும் இவளிடம் பேசுவானென்றும் உரைத்தவள், காலையில் தினமும் ஓர் அழைப்பு வந்து அவளை எழுப்பி விடுமே அது கூட அவன் தான். தினமும் காலை கைப்பேசியில் அலாரம் போல் அழைத்து அவளை எழுப்பி விடுவானென்றுக் கூற இப்படியும் நண்பனானென வியப்பில் வாய் பிளந்தவள், இது நட்பு மட்டும் தானா?? என்கின்ற கேள்வியுடன் திருதிருத்து நின்றாள் வாணி, பின்னாளில் தனக்கும் ஒரு நண்பன் இவ்வாறு வாய்க்கப் போகிறான் என அறியாது.

“இளா காலேஜ் ப்ரண்ட்னா, இப்ப என்ன வேலை செஞ்சிட்டு இருக்காங்க?” என்று வாணி வினவ,

“ஹ்ம்ம் தினமும் நம்ம வேணியை காலைல எழுப்புற வேலைய செஞ்சிட்டு இருக்கான்”எனக் கூறி மஹா வாய் விட்டுச் சிரிக்க,

பின் வாணியின் திருதிரு முழியைப் பார்த்து, இளாவும் நாம் வேலை செய்யும் அதே மென்பொருள் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் பயிற்சியிலிருக்கிறானென்று கிண்டலைக் கைவிட்டு உண்மையை உரைத்தாள் மஹா.

இவ்வாறாக முதல் இரண்டு மாதம் பயிற்சி முடிவடைந்த நிலையில், முதல் பயிற்சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட அதில் வாணி மற்றும் மஹா C கிரேடு வாங்கிருக்க, அம்சவேணி B கிரேடு வாங்கியிருந்தாள். அம்மு மட்டுமல்ல இரவு நேர பயிற்சி நேரங்களில் ஆனந்தமாய் ஆட்டம் போட்டுக்கொண்டே பயிற்சியைக் கற்ற பல பேஜ்ட் மேட்ஸ் முதல் மதிப்பெண் பெற்று A கிரேடு பெற்றிருக்க, முதலில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாணி, நண்பர்களுடம் இன்பமாய் கிண்டலடித்து ஆரவாரமாய் விளையாடிக் கொண்டு வாழ்வை சுகமாய் ரசித்துக் கொண்டுப் படித்தாலும் வாழ்வின் குறிக்கோளை அடைய முடியும். இப்படி கட்டுப்பாட்டுடன் படிப்பில் மட்டும் முழுக்கவனமாய் மகிழ்ச்சியில்லாது வாழ்வை ரசிக்காது இறுக்கமான மனதுடன் படித்தால் தான் தன் லட்சியத்தை அடைய முடியும் என்றில்லை என்கின்ற வாழ்வின் முக்கியமான பாடத்தைப் படித்தாளன்று வாணி.

குறிக்கோளை அடைய வேண்டும். அதற்கான முழு கவனமும் அந்த லட்சியத்திலேயே இருக்க வேண்டும். ஆனால் இறுக்கமாய் அல்லாது திறந்த மனதுடன் தனக்கு பிடித்தவாறு வாழ்வை ரசித்துக் கொண்டே, மகிழ்ச்சியுடன் வாழ்வை அனுபவித்துக் கொண்டே காரியத்தில் கண்ணாய் இருந்தால் போதும் வாழ்வின் இலக்கை இன்பமாய் அடையலாம் என்ற வாழ்வின் பெரும் தியரியை கற்றுக் கொண்டாளன்று.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இனி வரும் நாட்களில் பயிற்சியில் குழுக்களாய் செயல்பட வேண்டிவருமென உரைத்து, 5 மக்கள் ஒரு குழு அக்குழுவிற்கு ஒரு தலைவன்/தலைவி என குழுக்களை பிரிக்களானார் அவ்வகுப்பு பயிற்சியாளர்.
இப்பயிற்சி முறை தான் ஐடி கல்சர்(culture) என்றுக் கூறப்படும் கலாச்சாரத்தை அவர்களே அறியாமல் அவர்களுக்குள் புகுத்துவிக்கும் பயிற்சியாய் அமைந்தது.

ஆம் இரண்டு மாதம் வரை கல்லூரியைப் போல் ஆண்கள் ஒருப் பக்கம் பெண்கள் ஒருப் பக்கமென அமர்த்தப்பட்டிருக்க, இப்பொழுதோ‌ ஆண்கள் பெண்களென கலவையாய் குழுக்களைப் பிரித்து, இனி குழுக்களாய் தான் அமர வேண்டுமெனக் கூறிவிட்டனர்.

ஒன்றாய் அமர்ந்திருந்த வாணி மஹா மற்றும் வேணியைப் பிரித்து விட்டிருந்தனர் இக்குழுக்களுக்கிடையில்.
மஹா, ஆஷிக் மற்றும் வாணி ஒரு குழுவாய் பிரிக்கப்பட சற்று ஆசுவாசமடைந்தாள் வாணி.

வேணி மட்டும் தனித்து பிரிக்கப்பட்டு வேறுக்குழுவில் இணைக்கப்பட்டிருந்தாள்.
இருபாலரும் படிக்கும் பள்ளியில் படித்திருந்தாலும், கட்டுப்பாடான வளர்ப்பில் நெருங்கிய நண்பர்களோ தோழிகளோ இல்லாது வாழ்ந்த வாணிக்கு இவ்வாறு ஆண் பெண் அருகருகில் அமர்ந்து வேலைப் பார்ப்பது அவளை வளர்க்கப்பட்ட முறையில் வாணிக்கு பெரும் சங்கடத்திற்குள் ஆழ்த்தியது. ஆண் பெண் நட்புகளுடன் இயல்பாய் வளர்க்கப்பட்ட வளர்ந்த மஹா மற்றும் வேணிக்கு இம்மாற்றம் ஏதும் பெரியதாய் பாதிக்கவில்லை.

ஆகையால் இயல்பாய் ஆண்களிடம் பேசினாலும் எந்நிலையிலும் தன்னிலை இழக்காது தூர வைத்து பழகும் விதத்தைக் கற்பித்து அவளின் அச்சங்கடத்தை தங்களின் அறிவுரை மூலம் அன்றைக்கு களைந்தனர் அத்தோழிகள்.

தியரியாய் அவர்களின் அறிவுரையை ஏற்ற வாணி, செயல்முறையாய் இவ்விஷயத்தை கையாளும் போது அப்புது பழக்கங்களை கையாளத் தெரியாமல் திண்டாடித்தான் போனாள்.

— தொடரும்