உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 17

மாலை ஆறு மணியளவில் மூணாரிலுள்ள அந்த ஹோட்டல் அறையை அடைந்திருந்தனர் இளாவும் வேணியும்.

வந்ததும் கட்டிலில் படுத்துக் கொண்டாள் வேணி. களைப்பில் உறங்குகிறாள் என இவன் எண்ணியிருக்க, ஒரு மணி நேரம் கழித்து அவளிடம் சிறு அசைவு தென்பட அவளை எழுப்பலாமென அருகே சென்றவன் விழித்து சிவந்திருந்த அவளின் கண்களை தான் பார்த்தான்.

“என்னடா ஆச்சு அம்மு?” என இளா கேட்டதும் அவனை நிமிர்ந்து நோக்கியவள்,

காலை சுருங்க மடித்து வைத்து வயிறை இறுக்கி பிடித்துக் கொண்டு முகத்தில் வலியைத் தேக்கி, “வயிறு வலிக்கிது இளா” என்றாள்.

சட்டென மெத்தையிலமர்ந்து அவளை தன் மடியில் தாங்கியவன்,

“எதனாலடா வலிக்குது. மதியம் சாப்பிட்டது எதுவும் செட் ஆகலையா?” என்றவன் கேட்க,

அவனின் கரிசனத்தில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.

அவன் மடியில் தலை சாய்த்து அவன் இடையை கட்டிக்கொண்டு கண்ணீர் உகுத்தாள்.

இது மாதந்தோறும் பெண்களுக்கு வரும் பிரச்சனையே. திருமண அலைக்கழிப்பில் மூன்று நாட்கள் முன்பே வந்திருக்க அதுவும் அறைக்கு வந்ததும் தான் உணர்ந்தாள்.

இதைப் பற்றி தன் வீட்டின் ஆண்களிடம் கூட பேசி வளர்ந்திடாத நிலையில் இவனிடம் கூற சங்கடமாயிருந்தது அவளுக்கு.

“ஒன்னுமில்லை இளா. இது எப்பவும் வர வலி தான் சரியாயிடும்” என்றவள் கூற,

“என்னது எப்பவும் வர வலியா? ஹாஸ்பிட்டல் போய் பார்க்காம வச்சிருக்கீங்க… வா ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றவன் அவளை கிளப்ப,
தன் துணியில் ஈரத்தை உணர்ந்தவள் சட்டென அவன் மடியிலிருந்து எழுந்து பாத்ரூம் செல்ல,

“என்னடா ஆச்சு? வாமிட் வருதா?” என அவள் பின்னோடேயே அவன் செல்ல, குளியலறைக் கதவை அடித்து சாத்தியிருந்தாள்.

மெத்தையில் அமர்ந்தவன் இதுவரை அவள் உடல் நலத்தில் குறைப்பாடு ஏதும் தாம் கண்டதில்லையே. எவ்வாறு இந்த வயிறு வலி அதுவும் வெகுநாளாய் இருப்பதாய் கூறுகிறாளே என தன் மூளையை குடைந்தவனுக்கு பதிலேதும் கிடைக்காமல் போக, அழைத்திருந்தான் வாணியை. அவள் நைட் ஷிப்டில் அலுவலகத்தில் இருந்தாள்.

இவன் கூறியதை கேட்டு முதலில் குழம்பிய வாணி பின் தெளிந்து எதனால் இவ்வயிற்று வலியென விளக்கமாய் கூறி தெளிய வைத்தாள் அவனை.

“அய்யோ அண்ணா. இதுக்கா இந்த அலப்பறை. அது அவளுக்கு மாசா மாசம் முதல் நாள் இப்படி தான் வலிக்கும். நீங்க நான் சொன்னா மாதிரி செய்யுங்க. சரியாயிடும்” என்றுரைத்து விட்டு போனை வைத்திருந்தாள்.

வாணியின் வீட்டில் ஆண்களிடம் இதைப் பற்றி சகஜமாய் பேசிக் கொள்வார்கள். அத்தகைய நேரத்தில் ஆண்கள் பெண்களுக்கு உதவிப் புரிவார்கள் அவளின் இல்லத்தில். ஆகையால் இயல்பாய் பேச முடிந்தது இளாவிடத்தில்.

அவள் வந்ததும், “ஏன் அம்ஸ். என்னை உன் மனசுல இருந்து அவ்ளோ தள்ளி தான் வச்சிருக்கியா?” என இளா கேட்க,
அவன் கூறியது விளங்காது விழித்தவள்,

“ஏற்கனவே வலில இருக்கேன். நீயும் ஏன்டா புரியாத மாதிரி பேசி படுத்துற” என்றவள் கேட்க,

அவளின் வலியை சரி செய்வதே இப்பொழுது பிரதானமாய் தோன்ற அப்பேச்சை நிறுத்தினானவன்.

மீண்டும் அவனின் கேள்வியை தனக்குள்ளே அசைப்போட்டவள், இளா எனப் பதறி எழுந்தாள்.

வயிறு வலியை விட அவன் கேள்வியின் வலி மனதை வதைத்தது அவளுக்கு.

“என்னாச்சு அம்மு? ரொம்ப வயிறு வலிக்குதா? கொஞ்சம் பொறுத்துக்கோ. நான் ரூம் சர்வீஸ் பையன் கிட்ட ஓம தண்ணீர், வெந்தயம் லாம் கொண்டு வர சொல்லிருக்கேன். கொஞ்சம் வெதுவெதுனு குடிச்சா வலி குறையும்னு வாணி சொன்னா” இளா உரைக்க,

“ஹோ வாணி எல்லாத்தையும் சொல்லிட்டாளா? அதான் என் கிட்ட அப்படி கேட்டானா?” என மனதில் எண்ணிக் கொண்டவள்,

“உன் கிட்ட சொல்ல கூடாதுனு இல்ல இளா. எங்க வீட்ல இதை பத்தி வெளிபடையா பேசி பழக்கமில்லடா. அதுவும் ஜென்ட்ஸ் கிட்ட இதை பத்தி பேசி சுத்தமா பழக்கமில்லடா” என்றவள் கூறியதும்,

தான் பேசியதை எண்ணி நொந்துக் கொண்டவன், “சாரி அம்ஸ். கோவத்துல பேசிட்டேன். ஒரு உயிர் உருவாக நிகழ்கின்ற இந்த மாற்றத்துல பெண்களை தூக்கி வச்சி கொண்டாடுலனாலும் அவங்களுக்கு அனுசரணையா இருக்கனும்டா இந்த நேரத்துல. எங்கம்மா இதை எனக்கு சொல்லி கொடுத்தாங்க அம்ஸ். எனக்கு டீன்ஏஜ் வந்ததும் இந்த நேரத்துல உடல்ல நடக்க கூடிய மாற்றங்கள், அப்ப பொண்ணுங்ககிட்ட எப்படி நடந்துக்கிடனும். எவ்ளோ அனுசரணையா பாத்துக்கனும்னு அம்மா தான் சொல்லி கொடுத்தாங்க” என்றவனுரைக்க,

வேணியின் மனதில் சொல்லொண்ணா நிம்மதி படர்ந்தது. இது எப்பொழுதுமே அவள் மனதை அழுத்தும் விஷயம். ஆனால் அவளின் தந்தையிடம் இதை பற்றி பேசும் தைரியம் இல்லாத காரணத்தால், தன்னை கட்டிக்கொள்பவனிடமாவது இதை பற்றி இவ்வலியைப் பற்றி மனம் விட்டு பேச வேண்டும் என்றெண்ணிக் கொள்வாள்.

அவ்வாறாக இளா இருப்பதில் பூரித்தது அவளின் மனம். அதன் காரணம் சிந்தியது துளி நீர்.

அவளின் கண்ணீரை கண்டவன், “என்னடா ரொம்ப வலிக்குதா?” என்று தன் தோளில் சாய்த்துக் கொண்டான் அவளை.
ரூம் சரிவீஸ் பையன் கதவை தட்ட,
அவனளித்த நீரை பருக வைத்தான் வேணியை.

சற்று மட்டுப்பட்டிருந்தது அவளின் வலி.
இரவுணவு அறைக்கே வரவழைத்து அவளை உண்ண வைத்தான்.

அவள் மெத்தையில் படுத்ததும் அவளருகில் வந்தவன், அவள் தலையை தூக்கி தன் மடியில் வைக்க, “இல்ல இளா, இப்படி வயித்த கொஞ்சம் இறுகி பிடிச்சிட்டு படுத்தா வலி தெரியாது. நான் அப்படியே அந்த பொசிஷன்லயே தூங்கிடுவேன் இந்த மாதிரி நேரத்துல” என்றுரைத்து தலையணையில் தலை வைத்து முழங்கால் வயிற்றுக்கு வருவது போல் இறுக்கி அவள் படுக்க, அவளருகில் நெருங்கி அவள் முகத்தை தன் நெஞ்சில் புதைத்து தன்னுடன் அவளை இறுக்கிக் கொண்டானவன். குழந்தையின் வலியைப் போக்கும் தந்தையின் செயலே தெரிந்தது அவனின் இவ்வணைப்பில்.

தன் முகத்தை நிமிர்த்தி அவனின் முகம் இவள் பார்க்க, அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “தூங்குடா அம்முகுட்டி” என்றவள் தலையை வருடினான்.

அவனின் அந்த வருடல் தந்த இதத்தில் சுகமாய் உறங்கிப்போனாள்.

மறுநாள் காலை கண் விழிக்கையில் அவள் கண்டது குழந்தைப்போல் உறங்கிக் கொண்டிருந்த அவளவனின் முகத்தை தான். இன்னும் அவனின் அணைப்பிலேயே இருந்தாள். அவளின் வயிறு வலி இருந்த இடம் காணாமல் போயிருந்தது.

நேற்றைய நிகழ்வுகளை மனதில் அசைப்போட்டவளின் மனம் அவளவனின்பால் பாகாய் உருகி கரைந்தது.

தன் தந்தை தாயை இத்தகைய நேரத்திலும் தனியறையில் படுக்க செய்து பார்த்திருந்து வளர்ந்தவளவள்.

ஆகையால் அவனின் இச்செயல் அவளின் மனதில் அவனை காதலனாய் தன்னவனாய் தன் கணவனாய் மனச்சிம்மாசனத்தில் இருத்தியது.

அது ஏற்படுத்திய பூரிப்பில் மனம் சிலிர்க்க, “என் அழகு புருஷன்டா நீ” என மனதில் கொஞ்சிக் கொண்டவள், அவள் முகம் புதைத்திருந்த அவன் நெஞ்சிலேயே கொடுத்திருந்தாள் தன் முதல் முத்தத்தை.
இவை ஏதும் அறியாது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் இளா.

பின் சிறிது நேரம் கழித்து ரிஃப்ரெஷ் ஆகிவந்தவள், ரூம் சர்வீசிடம் டீ ஆர்டர் செய்துவிட்டு அவனை எழுப்பினாள்.

“டேய் இளா!! எழுந்திரிடா”

“ம்ப்ச் போ அம்ஸ். சீக்கிரம் எழுந்திரிச்சி என்ன பண்ண போறோம்” என்றுரைத்து மீண்டும் அவன் உறக்கத்திற்கு செல்ல,

அவனை சீண்ட எண்ணியவள், கையில் சிறிது நீர் எடுத்து அவன் முகத்தில் தெளித்தாள்.

பதறியடித்து எழுந்தவன், “அறிவிருக்காடி உனக்கு” எனக் கத்தியவன்,

“மனுஷன தூங்கவிடாம செய்ற நீ. உன்னை என்ன பண்றேன் பாரு” என்றுரைத்து ஒரு பாட்டில் நீரை எடுத்தவன் அவள் மீது ஊற்றப் போக,

“வேண்டாம் இளா…” என கட்டிலை சுற்றியபடி ஓடினாளவள். இவனும் அவளை பின் தொடர்ந்து ஓடியவன் ஒரு கட்டத்தில் அவளை பிடித்து சுவற்றோடு சாய்த்து அவளின் இரு கைகளையும் தன் ஒரு கைக்குள் வைத்துக் கொண்டு மறுகையிலிருந்த பாட்டிலை அவள் மீது ஊற்றப் போக,

“இளா இளாஆஆஆ… என் செல்ல புருஷன்ல. என் அழகு புருஷன்ல. என் செல்லம்டா நீ. என் பட்டுடா நீ. உன் அம்முகுட்டி பாவம்ல” என முகத்தை சுருக்கிக் கொண்டு கெஞ்சலாய் வேணி பேச, அவளின் புருஷன் என்ற விளிப்பில் மெய் மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், அம்முகுட்டி பாவம் என்ற வார்த்தையில் சிரித்து,”சரி அப்ப என் மேல தண்ணீர் ஊத்தினதுக்கு நான் சொல்றதை நீ செஞ்சீனா நான் விட்டுறேன்” என ஒப்பந்தம் போட்டான் அவளிடம்.

“என்ன சொல்லு? செஞ்சிடலாம்” என அசால்டாய் அவள் உரைக்க,

“உன் அழகு புருஷனுக்கு கன்னத்துல ஒரு உம்மா குடுப்பியாம்” என கண் சிமிட்டி உரைத்தானவன்.

“ஹான்ன்ன்அஅஅஅ… அதெல்லாம் முடியாது” என அவன் கைகளிலிருந்து தன் கைகளை அவள் உறுவ முயல, சரியாய் அந்நேரம் கதவைத் தட்டி டீ என ரூம் சர்வீஸ் பாய் கூற,

தன் கையிலிருந்த பாட்டில் நீரை அவள் தலையில் ஊற்றியிருந்தான் இளா.
ஊற்றிய மறுநொடி “கம் இன்” என கூற, அந்த பையனின் முன் ஏதும் கூற முடியாது அமைதியாய் நின்றவள்,

அவன் சென்ற மறுநொடி இளாவை நீரால் நனைத்திருந்தாள்.

மீண்டும் இளா அவளை முறைக்க,
“இளா போதும் விளையாட்டு. நீ செஞ்சதுக்கு நான் செஞ்சது சரியா போச்சு. இதோட நிறுத்திப்போம். வா டீ குடிப்போம்” என்றுரைத்து கப்பில் இருவருக்குமாக அவள் டீ ஊற்ற,

துண்டை எடுத்து வந்து அவள் தலையை துடைத்துவிட்டான்.

“ஏற்கனவே வயிறு வலி. இதுல இன்னும் ஈரத்துல இருந்தா ஏதாவது ஆகிடப்போகுதுடா. தலையை நல்லா துடைச்சிக்கோ” என்று துண்டை அவளிடம் நீட்டி, டீ கப்பை கையில் எடுத்தவன்,

“இன்னிக்கு எங்கயும் போக வேண்டாம். நீ நல்லா ரெஸ்ட் எடு. அது போதும்” என்று கூறி விட்டு குளிக்க சென்றுவிட்டான்.

அன்றைய நாள் ரூமிலேயே கழிய மறுநாள் மதியம் வெளியே சுற்றிப் பார்க்க சென்று இரவு வந்தனர்.


மதி மஹா மற்றும் இளா வேணி அனைவரும் திருமண விடுப்பு முடிந்து தங்களது பெங்களுர் அலுவலகத்தில் வேலைக்கு வந்திருந்தனர்.

நால்வரும் அலுவலகத்தில் அனைவரும் அளித்த பெரும் கல்யாண வாழ்த்துடன் கூடிய உபசரிப்பில் மகிழ்ச்சியுடன் உலா வந்தனர்.

வேணியும் இளாவும் ஒரே அலுவலகமாகையால் அனைவரும் கிண்டல் கேலியில் அவர்களை அசடு வழியச் செய்தனர்.

வேணி இளா தங்கியிருந்த வீட்டில் முதல் ஒரு வாரம் இவர்களுடன் அவனின் குடும்பத்தினர் தங்கியிருந்து அனைத்தையும் சீரமைத்துக் கொடுத்துவிட்டுக் கிளம்பினர்.

மதியும் மஹாவும் அவர்கள் பார்த்திருந்த வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.

வரும் ஜனவரி மாதத்தில் ஆஷிக் ரஹானா திருமணம் என முடிவு செய்திருந்தனர் அவர்கள் வீட்டு பெரியோர்கள்.

வேணிக்கு ஓரளவே சமைக்கத் தெரியும். மஹாவும் வாணியும் நன்றாக சமைப்பார்கள். அதனால் வேணி காய் நறுக்கி தருவது போன்ற இன்ன பிற வேலையுடன் நிறுத்திக் கொள்வாள். ஆக வேணியின் சமையல் டெஸ்டிற்கு எலியாகி இருந்தது இளா தான்.

வேணி சுழற்சி முறை ஷிப்டில் தான் திருமணத்திற்கு பின்னும் வேலை செய்துக் கொண்டிருந்தாள்.

அவள் செகண்ட் ஷிப்டில் நெடுநேரம் கழித்து வீடு வரும் வேளையில் அவனே இரவுணவு சமைத்துவிடுவான்.

காலை அவள் நேரமாய் கிளம்பும் வேளைகளில் இருவரும் ஆபிஸில் மதிய உணவு உண்டுக் கொள்வர்.

எனவே இருவரும் முடிந்தவரை தங்களின் வேலைக்கேற்றார் போல் வீட்டு வேலையை பகிர்ந்துச் செய்தனர்.

வேணி வாணி இருவரும் ஒரே ப்ராஜக்ட் என்பதால் வேணிக்காக இரண்டு மாதம் வேணியின் இரவு ஷிப்ட்டையும் தானே பார்த்துக் கொள்வதாய் உரைத்துவிட்டாள் வாணி.

ஆக வாணி மாதத்திற்கு இரு வாரம் இரவு ஷிப்ட் பார்க்க வேண்டியதாயிற்று.

அதனால் தான் அடைய போகும் உபாதைகளை அப்பொழுதறியவில்லை வாணி.


வாணியை கைபேசியில் அழைத்திருந்தனர் வேணியும் மஹாவும்.

இரவு ஷிப்ட் முடித்து வந்திருந்தவள் நன்றாக உறங்கி மாலை எழுந்து பார்க்க இவர்களின் மிஸ்ட் கால் இருந்தது அவளின் கைபேசியில்.

அவள் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர் இருவரும்.

குறுஞ்செய்தியின் சுருக்கம் இதுவே. தங்களின் வீட்டிற்கு வாரயிறுதி நாளில் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர் வாணிக்கு இருவரும்.

இருவரையும் கான்ஃபரன்ஸ் காலில் அழைத்தவள், “என்னடி சாப்பாடு போட்டு என்னை கொல்ல பார்க்குறீங்களா?” என்றவள் கேட்ட நொடி பொங்கி எழுந்த வேணி,

“அடியேய் ஃப்ரண்ட் தனியா இருக்காளே… அவளை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வைப்போம். வீக்கெண்ட் நம்ம கூட ஸ்பெண்ட் பண்ண மாதிரி இருக்கும் அவளுக்குனு ஆசை ஆசையா கூப்பிட்டா என்ன பேச்சு பேசுற நீ” என சீறினாள் வேணி.

“நான் மஹா பொங்கி போட்டதைக் கூட சாப்பிட்டுடுவேன்டி. உன் சமையலை சாப்பிடனும்னு நினைச்சாலே வயிறு என்னமோ பண்ணுதுடி” என்று வராத கண்ணீரைத் துடைத்தபடி அவள் கூற,

“உன்னலாம் சாப்பிட கூப்டேன் பார். என்னை சொல்லனும்” என பல்லைக் கடித்துக் கொண்டே கூறிய வேணி தன் தலையில்  அடித்துக் கொண்டாள்.
கலகலவென சிரித்தனர் வாணியும் மஹாவும்.

“போதும் நிறுத்துங்கடி உங்க சண்டைய. சரி இப்ப அட் எ டைம் இரண்டு பேர் வீட்டுக்கும் நீ வர முடியாதனால ஒன்னு பண்ணலாம். வர்ற சனிக்கிழமை நம்ம எல்லாரும் சேர்ந்து ஒன்னா ஒரு ஹோட்டல் போகலாம் லஞ்சுக்கு. நான் மதிக்கு ஏதும் ப்ளான் இருக்கானு பேசி கண்ஃபர்ம் பண்றேன். நீயும் இளா அண்ணா கிட்ட பேசிட்டு சொல்லு அம்மு” என்று அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தாள் மஹா.
பின் மூவரும் கிண்டல் கேலியாய் அரட்டை அடித்து அரை மணி நேரம் பேசிய பின்பே ஃபோனை வைத்தனர்.

அந்த சனிக்கிழமை மதியம் ஹோட்டல் எம்பயரில்(Empire) அமர்ந்திருந்தனர் இளா வேணி, மஹா மதி மற்றும் வாணி.

ஆஷிக் ஊருக்கு சென்றிருந்ததால் இவர்களுடன் கலந்துக் கொள்ளவில்லை.

உணவை ஆர்டர் செய்திருந்தவர்கள் அவை வரும் வரை அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

“எங்களுக்கு சென்னை டிரான்ஸ்பர் கிடைச்சிடுச்சுடி” என்று ஆனந்தமாய் கூறினாள் மஹா.

“வாவ் செம்ம சூப்பர்டி. கங்கிராட்ஸ் மதி அண்ணா” என்று வாழ்த்துரைத்தாள் வாணி.

இளா வேணியுமே வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

“அங்க எங்க ஸ்டேயிங் மதி அண்ணா. உங்க வீடு ஆபிஸ்க்கு ரொம்ப தூரம்ல” என்று வாணி கேட்க,

“ஆமா வாணி. அதான் ஆபிஸ் பக்கத்துலேயே ஒரு ப்ளாட் வாங்கி வச்சிட்டேன்” என்று மதி கூறியதும்,

“சொல்லவேயில்லை மஹா” என அவளை பிடித்துக் கொண்டனர் வாணியும் வேணியும்.

“அது நான் மஹா லவ் பண்ணும் போதே ப்ளான் செஞ்சி வாங்கினது. மஹாக்கு இதை பத்தி எதுவும் தெரியாது” என்றுரைத்தான் மதி.

“ஹோ” என வாணியும் வேணியும் அமைதியாக, வேணியின் முகமாறுதலை கண்டுகொண்டான் இளா.

“லோன்ல தான்டி வாங்கிருக்காங்க. நாங்க இரண்டு பேரும் சேர்ந்து வேலை செஞ்சி அடைப்போம். எல்லாரும் சென்னை வரும் போது கண்டிப்பா வீட்டுக்கு வரனும்” என்றாள் மஹா.

“அது சரி. நீ எப்ப மதி அண்ணாவ இவ்ளோ மரியாதையா வாங்க போங்கனு பேச ஆரம்பிச்ச?” என்று புருவத்தை உயர்த்தி வாணி கேட்க,

“அது மேரேஜ் ஆனதும் தானா வந்துடுச்சு” என மஹா கூற, நம்பாத பாவனை பார்த்த வாணி,

“அண்ணா எங்க கிட்ட மட்டும் ஆக்டிங் கொடுக்கிறாளா உங்களுக்கு மரியாதை தரமாதிரி” என நேரடியாய் மதியிடம் அவள் கேட்க,

மென்மையாய் சிரித்தவன், “அதை உன் ஃப்ரண்டையே கேளுமா” என்றான் மதி.

“அய்யோ அவ உண்மைய சொல்ல மாட்டானு தானே உங்களை கேட்கிறேன்”

“அது சரி எந்த பொண்ணுங்க கல்யாணத்துக்கு அப்புறம் கணவனை விட்டுக் கொடுத்து பேசியிருக்காங்க. அவங்களுக்கு பஞ்சாயத்து பண்றவங்களைல கிறுக்காக்கி விட்டுறுவாங்க” என வாணி கண்ணை உருட்டி பேச, அனைவரும் கலகலவென சிரித்தனர்.

“நீ எப்ப மேரேஜ் செஞ்சிக்க போற வாணி” என்று இளா கேட்க,

“இப்போதைக்கு இல்லணா. இன்னும் இரண்டு வருஷம் போகட்டும்னு சொல்லி வச்சிருக்கேன்” என்றாள் வாணி.

உணவு வரவும் அனைவரும் உண்டுவிட்டு சிறிது நேரம் அளவளாவி விட்டு அவரவர் இல்லம் சென்றனர்.

அன்றிரவு இளா வேணி இல்லத்தில்,
இரவுணவு உண்டுவிட்டு கட்டில் மெத்தையில் அமர்ந்திருந்த வேணி தன் கைபேசியில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க, உள் நுழைந்த இளா,

“நைட் பெட்ரூம்குள்ள போன் வரக்கூடாது சொல்லியிருக்கேன்ல. ஹால்ல வச்சிட்டு வா அம்ஸ்” என்றான்.

அமைதியாய் போய் வைத்துவிட்டு வந்தவள் படுத்துக் கொண்டாள்.

இது இளாவின் ஐடியா. இரவு போன் முகப்பறையில் வைத்துவிட்டு அவர்கள் அறையில் இருவரும் அன்றைய நாள் முழுவதும் நடந்ததை பகிர்ந்துக் கொள்ள வேண்டும். சோகம் துக்கம் இன்பம் துன்பம் மகிழ்ச்சி எதுவாயினும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அதை இருவரும் கடைபிடிக்க வேண்டும். இதனால் தங்களுக்குள் புரிதலும் அன்யோன்யமும் பெருகும் என நம்பினான் இளா.

அவளருகில் படுத்தவன், “என்னாச்சு என் அம்முகுட்டிக்கு? இந்நேரம் நான் சொன்னதுக்கு உன் பேச்சை நான் ஏன்டா கேட்கனும்னு சண்டைக்குல நின்னுருக்கனும் என் அம்ஸ்” என்று அவள் தாடைப் பற்றி தன் பக்கமாக அவள் முகத்தை திருப்ப, வேதனை நிறைந்திருந்தது அவளின் முகத்தில்.

— தொடரும்