உயிரூற்றாய் வந்தாய் – 5

அத்தியாயம் – 5

“எங்கே அத்தை யது? இன்னைக்கு லீவ் நாளில் கூட அப்படி என்ன வெட்டி முறிக்கிறாள்? காலையிலிருந்து வீட்டு பக்கமே வரலை…” என்று கேட்டபடி உள்ளே வந்தாள் பிரகதி.

“அவள் ரூமில்தான் இருக்காள். போய்ப் பார். இன்னைக்கு என்னாச்சுன்னு தெரியலை ரூமுக்குள்ளயே அடைஞ்சி கிடக்காள். எதுக்கு அப்படி இருக்காள்னு கேட்டு எனக்கும் சொல்லு. நான் விடிஞ்சதிலிருந்து கேட்டு கேட்டு அலுத்துப் போயிட்டேன்…” என்றார் கற்பகம்.

“உங்களையே இப்படிப் புலம்ப விட்டுட்டு அப்படி என்ன பண்றாள் அவள்?” என்று கேட்டுக் கொண்டே யதுநந்தினியின் அறைக்குள் நுழைந்தாள் பிரகதி.

மேஜையின் மீது புத்தகத்தை விரித்து வைத்து அதன் முன் அமர்ந்திருந்த யதுநந்தினியின் கண்களோ புத்தகத்தைப் பார்க்காமல், சுவரை வெறித்துக் கொண்டிருந்தன.

அவளை அப்படிப் பார்த்ததும் வியப்புடன் புருவத்தை உயர்த்தியவள், பூனை போல் மெல்ல நடந்து அவளின் பின்னால் நின்று, “பே…” என்று பிரகதி கத்தியதும், “அம்மா…” என்று கத்தியபடி நெஞ்சில் கை வைத்து அரண்டு போனாள் யதுநந்தினி.

“ஹாஹா…” என்று பிரகதி சிரிக்க,

“எருமை மாடே! இப்படியா பயமுறுத்துவ?” என்று பிரகதியின் கையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

“ஆஆ… நாயே… இப்படியா கிள்ளுவ?” என்று பதிலுக்குப் பிரகதி கத்த,

“அடியேய்! என்னடி பண்றீங்க? மாத்தி மாத்தி எதுக்குக் கத்திக்கிட்டு இருக்கீங்க?” என்று கற்பகம் சத்தம் கொடுக்க,

“இவள்தான் மா…”

“இவள்தான் அத்தை…”

இருவரும் ஒரே நேரத்தில் கத்தினார்கள்.

“அடிக் கழுதைகளா! இப்ப வந்து இரண்டு பேர் முதுகுலயும் தோசை கரண்டியால போட போறேன் பாருங்க…” என்று கற்பகத்தின் பதில் வந்ததும் இருவரும் கப்சிப்பென்று ஆகினர்.

பின் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர்.

பின் அப்படியே அவர்களின் உதடுகள் புன்னகையில் விரிந்தன.

“சரி, சொல்லு… சுவருக்கும், உனக்கும் என்ன சண்டை?” என்று தீவிரமாகக் கேட்டாள் பிரகதி.

அவள் கேள்வி புரியாமல் குழம்பிய யதுநந்தினி, “என்ன லூசு மாதிரி உளர்ற?” என்று கேட்டாள்.

“நான் வரும் போது சுவரையே முறைச்சிட்டு இருந்தியே… அதுதான் உனக்கும், அதுக்கும் என்ன சண்டைன்னு சொல்லு. நான் பேசி தீர்த்து வைக்கிறேன்…” என்றவள் குரல் தீவிரமாக ஒலித்தாலும் முகத்தில் கேலி இழைந்தோடியது.

“போடி எருமை! லூசு மாதிரி உளறிக்கிட்டு…” என்று கையை அலட்சியமாக விசிறினாள்.

“க்கும், சுவரை முறைச்ச நீ லூசா? இல்லை, நானா?”

“சும்மா இரு பிரகதி. நான் சும்மா ஏதோ யோசனையில் இருந்தேன்…” என்றவளுக்கு என்ன யோசனை என்பது ஞாபகத்தில் வந்துவிட, அவளின் முகம் சோர்ந்து போனது.

“என்ன யது, என்னாச்சு? எதுவும் பிரச்சினையா?” அக்கறையுடன் கேட்டாள்.

“எனக்கென்ன பிரச்சினை இருக்கப் போகுது? ஒன்னுமில்லையே…” என்று வேகமாக மறுத்தாள்.

அவள் மறுத்த வேகத்தைப் பார்த்து பிரகதிக்கு இன்னும்தான் சந்தேகம் வந்தது.

“என்ன யது? என்ன இருந்தாலும் சொல்லு…” என்று பிரகதி கேட்க,

‘எதைச் சொல்வது? எப்படிச் சொல்வது?’ என்றுதான் யதுநந்தினிக்குத் தோன்றியது.

நேற்று ரூபிணியைத் தூங்க வைத்து, விஷ்வமித்ரனின் அருகில் படுக்க வைத்து விட்டு, வீட்டிற்குச் செல்லலாம் என்று நினைத்து வெளியேறிய நேரத்தில், நந்தினியிடம் இனி குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்ல வேண்டாம் என்று அவன் சொன்னது அவளை மிகவும் பாதித்திருந்தது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவள் வீட்டில் இருக்கும் போது பெரும்பாலான நேரம் குழந்தையுடன்தான் அவளுக்குச் சென்றிருக்கிறது.

தாயைப் பிரிந்த குழந்தை என்ற இரக்கம் ஒரு பக்கம் என்றால், தனது அத்தானின் குழந்தையைத் தானும் தவிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையும் சேர்ந்துதான் முன்பு குழந்தையைப் பார்த்துக் கொள்வாள்.

ஆனால், அந்தக் குழந்தையின் ஸ்பரிசமும், அவள் இவளிடம் ஒட்டிக் கொண்ட பாசமும் குழந்தையின்பால் அவளை ஒன்ற வைத்திருந்தது.

அதனால்தான், கல்லூரி படிப்பில் இறுதி வருடத்தில் இருந்தும், குழந்தைக்காக இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து பார்த்துக் கொண்டாள்.

ஆனால், இனி குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டாம் என்று அத்தான் சொல்லிவிட்டாரே என்று மிகவும் வருந்தினாள்.

அவளின் முகத்திற்கு நேராகச் சொல்லவில்லை என்றாலும், அவள் அவன் சொன்னதைக் கேட்டு விட்ட பிறகு, அங்கே செல்ல அவளுக்கு மனது வரவில்லை.

ஒருவேளை அவனோ, தன் அத்தையோ, தன் முகத்திற்கு நேராகத் தன்னைக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டால், அதைத் தன்னால் தாங்க முடியாது என்று நினைத்தாள்.

அவர்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கொடுக்காமல், தான் செல்லாமல் இருப்பதே நல்லது என்று நினைத்து நேற்றிலிருந்து அதன் பிறகு அந்த வீட்டு பக்கமே செல்லவில்லை.

பிரகதி மாதிரி தானும் அவர்கள் வீட்டுப் பெண்தானே? நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டால் என்ன குறைந்து விடுமாம்? என்று விஷ்வாவின் மீது கோபமும் வந்தது.

ஆனாலும், அவன் சொன்னதைப் பற்றிப் பிரகதியிடம் சொல்ல அவளுக்கு மனது வரவில்லை.

ஏனோ, ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.

“என்ன யது, எதுவும் சொல்ல மாட்டிங்கிற?” என்று பிரகதி கேட்க,

“ஒன்னுமில்லை பிரகதி. படிக்க நிறைய இருக்கு. பைனல் இயர் வேற. அதுதான் எப்படிப் படிச்சு முடிக்கிறதுன்னு யோசித்துக் கொண்டு இருந்தேன். வேற எதுவுமே இல்லை…” என்று சமாளித்தாள் யதுநந்தினி.

பிரகதி அவளை நம்பாமல் பார்த்தாள்.

ஆனாலும் யதுநந்தனி அசரவில்லை.

“என்னமோ சொல்ற, நம்பத்தான் முடியலை…” என்றாள் பிரகதி.

“அட! நம்புடி பிரகதி…” என்று சிரித்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே ரூபிணி அழும் சத்தம் இங்கே வரை கேட்டது.

“அச்சோ! ரூபி திரும்ப அழ ஆரம்பிச்சிட்டாள். வா, வா போவோம். அது என்னன்னு தெரியலை. நேத்து நான் காலேஜ் விட்டு வந்ததிலிருந்து பார்க்கிறேன், சும்மா அழுதுட்டே இருக்காள். நீயும் வரலையா… அவள் அழுகை யார் சமாதானம் செய்தாலும் ஓயவே இல்லை. இப்பத்தான் நான் இங்கே வருவதற்கு முன்னாடி பெரியம்மா அவளைக் கஷ்டப்பட்டுத் தூங்க வச்சாங்க. அதுக்குள்ள எழுந்துட்டாள். அவள் ரொம்ப அழ ஆரம்பிக்கும் முன் போகலாம் யது…” என்றழைத்தாள் பிரகதி.

“நீ முன்னாடி போ பிரகதி. நான் பின்னாடி வர்றேன்…” என்று யதுநந்தனி சொல்ல,

“சீக்கிரம் வந்திடு…” என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு ஓடினாள் பிரகதி.

அவள் சென்றதும் தலையில் கைவைத்து தளர்ந்து அமர்ந்து விட்டாள் யதுநந்தினி.

வீல், வீல் என்று குழந்தையின் குரல் அவள் காதிற்குள் விழுந்து அவளை இம்சை செய்தது.

கூடவே,”யது, சீக்கிரம் இங்கே வாடி…” என்று பிரகதியின் குரலும் கேட்டது.

ஆனாலும், இருந்த இடத்தை விட்டு அசையவில்லை அவள்.

விடாமல் வீறிட்டு அழுது கொண்டிருந்தாள் குழந்தை.

“இந்தப் பிள்ளை ஏன்தான் இப்படிக் கத்துதோ தெரியலை. அதுவும் நேத்து இருந்து ரொம்பத்தான் கத்துறாள். யார் கையிலும் இருக்கிறதும் இல்லை. அண்ணியும், சரளாவும் எவ்வளவு நேரம்தான் சமாளிக்க முடியும்?” என்று அவளின் அம்மா புலம்பும் சத்தம் கேட்டது.

இப்போது வீட்டிற்கு வெளியே வந்து குழந்தையுடன் நின்றிருப்பார்கள் போலும். இப்போது இன்னும் அதிகமாகக் குழந்தையின் வீறிடல் கேட்டது.

யதுநந்தினியின் மனம் பிசைந்தது. குழந்தையின் சத்தம் காதில் விழ விழ, ஓடிச் சென்று அள்ளி அரவணைத்துக் கொள்ளக் கைகள் துடித்தன.

ஆனாலும், என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டாம் என்று அவளின் தந்தை சொன்னான்தானே… அவனே சமாளிக்கட்டும் என்று வீம்பும் சேர்ந்து கொள்ள, மனதை கல்லாக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“யது, எழுந்து போய் என்னன்னு பாருடி. நான் இங்கே வேலையா இருக்கேன். இப்ப விட்டுட்டுப் போனால் காய் கருகிடும்…” என்று கற்பகம் சமையலறையிலிருந்து குரல் கொடுத்தும் யதுநந்தினி அசையவில்லை.

இரண்டு காதுகளையும் மூடிக் கொண்டு, மேஜையில் சாய்ந்து கொண்டாள்.

அதையும் மீறி குழந்தையின் அழுகுரல் கேட்க, அதற்கு மேல் முடியாமல் பட்டென்று எழுந்து வெளியே ஓடினாள்.

பிரகதி குழந்தையைச் சமாதானம் செய்யப் போராடிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் கவிதா, சரளா வேறு இருந்தனர்.

அவர்களும் என்னென்னவோ செய்தும், குழந்தை அழுகையை நிறுத்தாமல் இருக்க, “இங்கே கொடு!” என்று வேகமாகக் குழந்தையைப் பிரகதியின் கையிலிருந்து தான் வாங்கிக் கொண்டாள் யதுநந்தினி.

“என் பட்டு, என் செல்லம், ஏன்டியம்மா அழறீங்க?” என்று கொஞ்சிக் கொண்டே குழந்தையைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.

தன்னை யார் தூக்கியிருப்பது என்பது போல், அவள் முகத்தைப் பார்த்த குழந்தை, யதுநந்தினி என்று தெரிந்ததும் தன் பிஞ்சு கைகளால் அவள் முகத்தைத் தடவி கொண்டே சில நொடிகள் அழுது தேம்பலில் நிறுத்தி, அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள்.

“சரிடா, சரிடா… என் ரூபி குட்டி சமத்து ஆச்சே. இதோ அழுகையை நிறுத்திட்டாங்க…” என்று குழந்தையின் முதுகை தட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்க, தேம்பலும் நின்று போனது.

“பார்த்தீங்களா அக்கா, இந்தக் குட்டியை? நம்மகிட்ட என்ன ஆட்டம் காட்டினாள்? இப்ப யது தூக்கியதும் எப்படிப் பெட்டிப்பாம்பாக அடங்கிட்டாள் பாருங்க…” என்று சரளா, கவிதாவிடம் சொல்ல,

“அப்படி என்ன சொக்குப்பொடி போட்டடி நீ? இந்தக் குட்டி இப்படி உன்கிட்ட மயங்கிப் போய் இருக்கு?” என்று கேட்டாள் பிரகதி.

“ஆமா, போடுறாங்க சொக்குப்பொடி… போடி அங்கிட்டு. பிள்ளையைச் சமாதானம் பண்ண தெரியாம மூனு பேரும் சேர்ந்து அழ வச்சிக்கிட்டு இருக்கீங்க…” என்று நொடித்துக் கொண்டாள் யதுநந்தினி.

“எங்களுக்கு அவளை அழ வைக்கணும்னு வேண்டுதல் பாரு. எனக்கு என்னமோ உன்னைத் தேடித்தான் அழுதிருப்பாள் என்று தோன்றுது. இப்ப நீ வந்து தூக்கியதும் அழுகையை நிறுத்திட்டாள் பாரு…” என்றாள் பிரகதி.

“அப்படித்தான் இருக்கும் போல…” என்றார் சரளா.

அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கவிதா மட்டும் அமைதியாக இருந்தார்.

நேற்றுக்குப் பிறகு யதுநந்தினி வீட்டிற்கு வரவில்லை என்றதுமே, அவளும் மகன் பேசியதை கேட்டுவிட்டாள் என்று அவருக்குப் புரிந்து போனது.

அதுவும் குழந்தை இவ்வளவு நேரம் அழுத பிறகும், அவள் வராமல் இருக்கவும், ‘மனது ரொம்பக் காயப்பட்டுவிட்டாளோ? அதனால்தான் வரவில்லையோ?’ என்று வருந்திக் கொண்டிருந்தார்.

இப்போது அவளே வந்து குழந்தையைத் தூக்கி சமாதானம் செய்யவும், அவரிடம் ஒருவித ஆசுவாசம் உண்டானது.

அதேநேரம் மகன் பேசியதை கேட்டவள் மனதில் இப்போது என்ன ஓடுகிறது? என்ற எண்ணத்துடன் அமைதியாக, அதே நேரம் சங்கடத்துடன் யதுநந்தினியை பார்த்தார் கவிதா.

“இந்தக் குட்டி என்னை எதுக்குத் தேடப் போறாள்? அவளோட அம்மாவை வேணும்னா தேடியிருப்பாள்…” என்று பிரகதிக்கு, யதுநந்தினி பதில் சொல்ல, மூன்று பெண்களின் முகமும் வாடி போனது.

“இனிமே அவளைப் பத்தி இங்க பேசாதே யது…” என்று அதட்டிய சரளா,

“தான் பெத்த பச்ச பிள்ளையை விட்டுட்டு போனவளை பத்தி பேசாதே. குழந்தையும் அவங்க அம்மாவை இனி தேட மாட்டாள். அவள் உன்னைத்தான் தேடியிருக்கிறாள்னு நான் நினைக்கிறேன். பாரு, இவ்வளவு நேரம் எப்படி உயிரே போற மாதிரி கத்தினாள்? இப்போ உன் தோளில் தூங்கவே ஆரம்பிச்சிட்டாள்…” என்றார்.

அடுத்து என்ன பேசுவது என்று அறியாமல் அங்கிருந்த பெண்களுக்கிடையே மௌனம் சூழ்ந்துகொண்டது.

“சரி, சரி… பிள்ளையைக் கொடு யது. அவளைக் கொண்டு போய் உள்ளே படுக்க வைக்கிறேன்…” என்று அந்த மௌனத்தைக் கலைத்தார் கவிதா.

“இருக்கட்டும் அத்தை. நானே கொண்டு வந்து பாப்பாவை உள்ளே படுக்க வைக்கிறேன். கை மாறினால் இன்னும் அழப் போகிறாள்…” என்றாள் யதுநந்தினி.

மீண்டும் கவிதாவிற்குச் சங்கடமாகப் போனது. இவள் உள்ளே வந்து குழந்தையைப் படுக்க வைத்தால், மகன் என்ன சொல்வானோ? என்று அவருக்குத் தயக்கமாக இருந்தது. ஏற்கெனவே மனதளவில் உடைந்து போயிருக்கும் மகனை மேலும் மேலும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று நினைத்தார்.

அதேநேரம் அவரும் அறிந்துதான் இருந்தார் மகன் பேசுவது சரியில்லை என்று.

“இல்லம்மா, என்கிட்ட கொடு…” என்றவரை தீர்க்கமாகப் பார்த்தாள் யதுநந்தினி.

“நான் பார்த்துக்கிறேன் அத்தை…” என்று அழுத்தி சொன்னவள், முதல் ஆளாக வீட்டிற்குள் நுழைந்து விறுவிறுவென்று விஷ்வமித்ரன் படுத்திருந்த அறைக்குச் சென்றாள்.

அங்கே அவன் வாசலையே பார்த்து, தவிப்புடன் படுத்துக்கொண்டு இருப்பதைக் கண்டாள். ஆனாலும், அவனைப் பொருட்படுத்தாமல் அவனின் அருகில் சென்று குழந்தையைப் படுக்க வைத்தாள்.

யதுநந்தினி குழந்தையைத் தூக்கி கொண்டு வந்ததைச் சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வமித்ரன்.

அவனின் அருகில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு நிமிர்ந்தவள், “ரூபிணி என் அத்தானோட குழந்தை அத்தான். அவளை என்னால் பார்த்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. அவள் அழும்போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவும் முடியாது. அவளுக்குத் தேவையானதை என்னால் முடிந்த போது நான் கவனிக்கத்தான் செய்வேன்.

அப்படி நான் செய்வது உங்களுக்குப் பிடிக்கலைனா அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. நான் இப்படிச் செய்வது பிடிக்கலைன்னு ரூபிணியோட அம்மா வந்து என்கிட்ட சொல்லட்டும். அதுக்குப் பிறகு நான் நிறுத்திக்கிறேன்…” என்று அவனின் கண்களைப் பார்த்து சொன்னவள், நிதானமாக அறையை விட்டு வெளியே சென்றாள்.

விஷ்வமித்ரனுக்குச் சுருக்கென்று இருந்தது. அவளின் ஒவ்வொரு வார்த்தையும் அவனைச் சென்று தாக்கியது. பாசத்தோடு தன் குழந்தையைப் பார்த்துக் கொண்டவளை காயப்படுத்தி இருக்கக்கூடாது என்று மனதோரம் குறுகுறுத்தது.

நேற்று ஏன் அப்படிச் சொன்னான் என்று அவனுக்கே தெரியவில்லை. மனைவியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவன், அவள் இடத்தில் யதுநந்தினி அமர்ந்து குழந்தையைக் கவனித்துக் கொண்டதை கண்டதும், அந்தக் காட்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் ஏதோ அவசரப்பட்டுச் சொல்லியிருந்தான்.

ஆனால், இப்போது தன் தவறு புரிய, தவிப்புடன் உதட்டை கடித்தான்.

யதுநந்தினி அப்படிச் சொல்லி சென்றபிறகு, அவள் குழந்தையைப் பார்த்துக் கொள்வதை அதன்பின் அவன் தடுக்கவில்லை.

அதோடு யதுநந்தினியும் முடிந்தவரை அவனின் முன் நின்று குழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல், வரவேற்பறையில் குழந்தையை வைத்துக் கொள்வாள். அல்லது தனது வீட்டிற்குச் சென்று, தனது அறையில் வைத்து பார்த்துக் கொள்வாள். அதனால் குழந்தையின் அழுகை இப்போதெல்லாம் சற்று மட்டுப்பட்டிருந்தது.

கவிதாவும், ‘யதுநந்தினி நம்ம வீட்டுப் பெண் விஷ்வா. அவளை இனி எதுவும் சொல்லாதே!’ என்று கடிந்து கொண்டிருந்தார்.

ஒரே நாளில் குழந்தை அழுத அழுகையை அவனும் பார்த்துக் கொண்டுதானே இருந்தான். அவன் தூக்கி வைத்திருந்த போதும் கூட, மகளை அவனால் சமாளிக்க முடியவில்லை. பெற்ற தகப்பன் தூக்கியுமே குழந்தை தன் அழுகையை நிறுத்தவில்லை என்றதுமே அவன் அன்று மிகவும் தவித்துப் போயிருந்தான். அதனால் அதன்பிறகு அவள் போக்கில் விட்டுவிட்டான்.

நாட்கள் செல்ல… அவன் கை காயமும், தலைக்காயமும் குணமாகி கால் கட்டு மட்டும் இருந்தது. ஆனாலும், அதனுடனேயே மெல்ல மெல்ல காலை ஊன்ற முயன்று கொண்டிருந்தான்.

காலை ஊன்ற முடியாமல் வலி உயிர் போனது. இன்னும் சிறிது நாட்கள் பொறுத்து இருக்கும்படி மருத்துவர்கள் சொல்ல, படுக்கையிலிருப்பது அவனுக்குப் பெரும் அவஸ்தையாக இருந்தது. கம்பெனிக்கும் செல்ல முடியவில்லை. அவனின் முக்கியமான தேடலுக்கும் செல்ல முடியவில்லை என்பதில் உடைந்து போயிருந்தான்.

சில நாட்களில் கால்கட்டு அவிழ்க்கப்பட்டு, பிசியோதெரபிஸ்ட் மூலம் கால்களுக்கு அசைவு கொடுக்கப்பட்டு மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தான் விஷ்வமித்ரன்.

அவன் கால்கள் குணமாக ஒரு மாதம் ஆகியிருந்தது. உடல் நிலையைச் சீராக்கிக் கொண்டதும், கம்பெனிக்குச் செல்வதாக முடிவு செய்திருந்தான்.

நாளை கம்பெனிக்கு செல்ல வேண்டும் என்ற முடிவுடன், அன்று இரவு படுக்கப்போகும் முன், அன்னையின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து விட்டு, தனது அறைக்குச் சென்றான்.

‘தூங்கலாம்’ என்று படுக்கையில் விழுந்த போது அவனின் அலைபேசி அழைத்தது.

தொடு திரையில் தெரிந்த ‘சமர்’ என்ற பெயரைப் பார்த்ததும் பரபரப்பாகப் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான்.

உடனே அழைப்பையேற்று, “ஹலோ, என்ன சமர் இந்த நேரம் போன் பண்ணி இருக்கீங்க? எதுவும் முக்கியமான விஷயம் தெரிஞ்சிருக்கா?” என்று ஆவலுடனும், பரபரப்புடனும் விசாரித்தான்.

அவனின் ஆவலில் அந்தப் பக்கம் சமர் ஒரு வினாடி அமைதி காத்தான்.

“ஹலோ, என்ன சமர். எதுக்குக் கூப்பிட்டீங்க? சீக்கிரம் சொல்லுங்க…” என்று விஷ்வா அவசரப்படுத்த,

“சார், நீங்க கொஞ்சம் இங்க கிளம்பி வர முடியுமா?” என்று கேட்டான் சமர்.

“எங்கே சமர் வரணும்? சொல்லுங்க, இப்பவே வர்றேன்…” என்று உடனே எழுந்து இரவு உடையைக் களைந்து விட்டு, வெளியே செல்லும் உடையை மாற்ற ஆரம்பித்தான்.

நம்ம ஆபீஸ் வந்துடுங்க சார். நீங்க அங்கே வந்த பிறகு என்ன விஷயம்னு நான் சொல்றேன்…” என்று சமர் லேசான தயக்கத்துடன் சொல்ல, அவனின் குரலில் இருந்த வேறுபாட்டில் விஷ்வா ஒரு வினாடி புருவம் சுருக்கி யோசித்தான்.

“சமர், என்ன விஷயம்னு இப்பவே சொல்லுங்க. உங்க குரலே சரியில்லை. என்னாச்சுன்னு எனக்கு இப்பவே தெரிந்தாகணும்…” என்று அழுத்தமாகக் கேட்டான்.

“நீங்க வாங்க சார், பேசிக்கலாம்…” என்ற சமர் மேலும் பேசும் வாய்ப்பை கொடுக்காமல் அழைப்பை துண்டித்து விட்டான்.

என்னவோ? ஏதோ? என்று விஷ்வாவின் இதயம் படபடத்துப் போனது.

ஆனாலும், தன்னைச் சமாளித்துக் கொண்டு, வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் காரை எடுத்துக்கொண்டு சமரின் அலுவலகத்தை நோக்கி காரை பறக்கவிட்டான்.

அலுவலக வாசலிலேயே நின்றிருந்த சமர், விஷ்வா கதவை திறந்து இறங்கும் முன், அவனைக் காத்திருக்கச் சொல்லி கையைக் காட்டிவிட்டு, அவனின் காரில் விரைந்து வந்து ஏறிக்கொண்டான்.

“என்ன சமர், என்ன விஷயம்? எதுக்கு இந்த நேரம் பாக்கணும்னு சொன்னீங்க? ஏதாவது தகவல் கிடைத்ததா? என்னவென்று சொல்லுங்க…” என்று விஷ்வா லேசான பதற்றத்துடன் கேட்க,

“சார், நான் சொல்ற ரூட்டில் போங்க. நான் விஷயத்தைச் சொல்றேன்…” என்றவன், வழியை மட்டும்தான் சொல்லிக்கொண்டே வந்தான் சமர்.

அவன் சொல்ல சொல்ல அந்தப் பாதையில் காரை செலுத்திக் கொண்டிருந்தாலும், ‘இப்பொழுது எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? எதற்காகச் சமர் பதில் சொல்லாமல் வருகிறான்?’ என்று புரியாத குழப்பத்துடன் காரை செலுத்தினான் விஷ்வமித்ரன்.

“சார், இந்த இடம்தான். காரை நிறுத்துங்க…” என்று ஒரு இடத்தில் சமர் காரை நிறுத்த சொல்ல,

விஷ்வா காரை நிறுத்தி அது என்ன இடம் என்று நிமிர்ந்து பார்த்தான்.

அரசு மருத்துவமனை! சவக்கிடங்கு! என்று எழுதி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு கேள்வியுடன் சமரை பார்த்தான்.

“சாரி சார்…” என்றான் சமர்.

“எதுக்குச் சாரி சொல்றீங்க சமர்? எதுக்கு நாம இப்போ இங்கே வந்திருக்கோம்?” என்று விஷ்வாவின் குரல் கடினத்துடன் ஒலிக்க,

“உங்க வொய்ப்பை கண்டு பிடிச்சுட்டோம் சார். உங்க மனைவி விதுலா இப்போ இங்கேதான் இருக்காங்க…” என்ற சமரின் கைகள் சவக்கிடங்கை சுட்டிக் காட்டின.

“நோ…” என்று நம்ப முடியாத ஆத்திரத்துடன் வீறிட்டான் விஷ்வமித்ரன்.