உயிரூற்றாய் வந்தாய் – 3

அத்தியாயம் – 3

“என்னாச்சு மாப்பிள்ளை? ஆக்சிடெண்ட்னு கேள்விப்பட்டோம்…” என்று விசாரித்தார் விஷ்வமித்ரனின் மாமனார் ராஜசேகர்.

“என்ன மாப்பிள்ளை காலில் இவ்வளவு பெரிய கட்டு?” என்று வருத்தத்துடன் கேட்டார் அவரின் மனைவி மீனாட்சி.

“உங்க மகளை என் பையன் கட்டிக்கிட்டான் இல்ல… அதுதான் இப்படி வந்து கிடக்குறான்…” அவர்களுக்குப் பின்னால் கோபமாகச் சொல்லியபடி வந்தார் கவிதா.

கணவன், மனைவி இருவரின் முகமும் வாடிப்போனது.

பதில் பேச முடியாமல் மௌனமாகினர்.

“அம்மா…” என்று அதட்டினான் விஷ்வா.

“நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்?”

“இருக்கிறதையும் சொல்லலை. என்னோட கவனக்குறைவினால் நடந்த ஆக்சிடெண்ட்டுக்கு அவங்களை எதுக்குக் குறை சொல்றீங்க?”

“நான் என்ன தப்பு செய்தேன்னு என் மேல் கோபப்படுற? தப்பு செய்தது அவங்க மகள். அவங்களைத் தாங்குற…” என்றார் ஆதங்கமாக.

“என் பொண்டாட்டி எந்தத் தப்பும் செய்யலைன்னு உங்களுக்கு எத்தனை முறைதான் சொல்வது?” என்றான் கடுமையாக.

“பூனை கண்ணை மூடிக்கிட்டால் உலகம் இருண்டு விடாது தம்பி. இவ்வளவு நடந்தும் இன்னும் எப்படி அவளுக்கு ஆதரவா உன்னால் பேச முடியுது?” இயலாமையுடன் கேட்டார்.

“ஏன்னா என் பொண்டாட்டியை நான் நம்புறேன்மா…” என்றான் அழுத்தம் திருத்தமாக.

ராஜசேகர், மீனாட்சியின் கண்கள் பனிந்து போயின.

“ரொம்ப நன்றி மாப்பிள்ளை. என் பொண்ணு எந்தத் தப்பும் செய்திருக்க மாட்டாள்னு நீங்க நம்புறீங்களே! அதுவே எங்களுக்குப் போதும்!” என்றார் ராஜசேகர்.

“என் பொண்டாட்டியை நம்புவதற்கு நீங்க ஏன் மாமா நன்றி சொல்றீங்க? விடுங்க…” என்றான் இலகுவாக.

அவர்கள் பேசுவதைக் கேட்க சகிக்க முடியாமல் கவிதா வெளியே சென்றுவிட்டார்.

அவரின் கோபம் புரிந்தாலும் அன்னையைத் தடுக்க முயலவில்லை விஷ்வா.

“உடம்பை பார்த்துக்கோங்க மாப்பிள்ளை…” என்றார் மீனாட்சி.

“சரிங்க அத்தை. நீங்க இரண்டு பேரும் எப்படி இருக்கீங்க?”

“இருக்கோம் மாப்பிள்ளை. குழந்தை எப்படி இருக்காள்?”

“நல்லா இருக்காள் அத்தை. ஆனால், அப்பப்ப ரொம்ப அழறாள். சமாதானம் பண்ணத்தான் கஷ்டமா இருக்கு…” என்றவன் முகம் லேசாகச் சுருங்கியது.

அவனின் வருத்தம் அவர்களுக்கும் புரிந்தது.

ஆனால், என்ன ஆறுதல் சொல்ல முடியும்? எதுவும் முடியாதே? என்ற இயலாமை பெரியவர்களைக் கட்டிப் போட்டது.

பேச எத்தனையோ வார்த்தைகள் இருந்தும், பேசினால் எங்கே வார்த்தைகள் பிசக்கிவிடுமோ என்ற தயக்கம் அங்கிருந்த மூவரையும் ஒரே நேரத்தில் தாக்க, மௌனத்தைத் தங்களின் ஆயுதமாக்கிக் கொண்டனர்.

மௌனம் கூடச் சில நேரங்களில் கூர்மையான ஆயுதம்தான்.

மௌனத்தால் கூர்மையாகக் குத்தவும் முடியும். குடைவாள் போல் வெட்டி சாய்க்கவும் முடியும்.

தங்கள் மாப்பிள்ளையின் மெளனம் கூட அந்தப் பெரியவர்களுக்கு அந்த நேரம் அப்படித்தான் இருந்தது.

தங்களை வார்த்தை என்னும் ஆயுதத்தால் அவன் தாக்கியிருந்தாலும் இவ்வளவு வலித்திருக்காது போலும். ஆனால், அவர்களைக் குற்றம் சொல்லாமல் அவன் காட்டிய மெளனம் அவர்களைக் கூர்வாளாய்க் குத்தியது.

அதற்கு மேலும் அந்த அறைக்குள் சூழ்ந்திருந்த மௌனத்தைத் தாங்க முடியாமல், “சரிங்க மாப்பிள்ளை, உடம்பை பார்த்துக்கோங்க. நாங்க கிளம்புறோம் …” என்றார் ராஜசேகர்.

“போயிட்டு வாங்க மாமா. நீங்க எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க. யார் என்ன சொன்னாலும், என் வொய்ப் எப்படிப்பட்டவள் என்று எனக்குத் தெரியும்…” என்றான் அழுத்தமாக.

“மாப்பிள்ளை…” என்று சட்டென்று அவன் அடிபடாத கையை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார் ராஜசேகர்.

அவர் கண்களில் படர்ந்த ஈரம் அவன் கையைத் தொட்டது. மீனாட்சியும் சேலை தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“என்ன மாமா இது கண்கலங்கிக்கிட்டு?” என்று மென்மையாகக் கடிந்து கொண்டான் விஷ்வா.

“இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணிட்டாளேன்னு அவளைப் பெத்த நாங்க கூட ஒரு செகண்ட் நினைச்சிருக்கோம் மாப்பிள்ளை. ஆனால், நீங்க…? அவள் மேலே நீங்க வச்சிருக்கிற நம்பிக்கை! எங்களையே கூச செய்திருச்சு மாப்பிள்ளை…” என்றவர் குரல் தெளிவில்லாமல் கரகரத்தது.

“என் விதுவை பற்றி நீங்களும் தவறா நினைச்சீங்களா? என்ன மாமா இது? உங்ககிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை…” என்றான் ஒவ்வாமையுடன்.

“அது… அது… அவளை நாங்களும் நம்புறோம் மாப்பிள்ளை. ஆனால்…” என்று அவர் தடுமாற,

“போதும் மாமா! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்…” என்று அவரின் பேச்சை நிறுத்தியவன், “யார் தப்பா நினைச்சாலும், நான் என் விதுவை தப்பா நினைக்க மாட்டேன். எனக்கு அதுபோதும்!” என்று முடித்துக் கொண்டான்.

அதில் அந்தப் பெரியவர்கள் இன்னும் உடைந்து போனார்கள்.

“இப்படிப்பட்ட உங்க கூட வாழாமல்…” என்று மீனாட்சி ஏதோ சொல்ல வர, தன் கண்களில் கடுமையைக் காட்டி அவரின் பேச்சை நிறுத்தினான்.

“மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை…” என்று முனகினார் மீனாட்சி.

“இனி என்ன பேசினாலும் வார்த்தைகள் பிசக்கத்தான் செய்யும் அத்தை. நீங்க கிளம்புங்க. நான் எதுவும் தகவல் கிடைத்தால் உங்களுக்குச் சொல்றேன்…” என்று பேச்சை முடித்துக் கொண்டான்.

“மாப்பிள்ளை…” என்று தயங்கி அழைத்தார் மீனாட்சி.

இன்னும் என்ன? என்பது போல் அவன் பார்க்க,

“குழந்தையைப் பார்க்கணும் போல இருக்கு மாப்பிள்ளை. பிள்ளை கண்ணுக்குள்ளயே இருக்கிறாள்…” என்றார்.

“வீட்டுக்கு வந்து பார்க்க வேண்டியதுதானே அத்தை? அவள் உங்கள் பேத்தி. நீங்க எப்ப வேணுமானாலும் வீட்டுக்கு வந்து அவளைப் பார்க்கலாம்…” என்றான்.

“இல்லை மாப்பிள்ளை, அது வந்து…” என்று தயங்க, நெற்றியைச் சுருக்கி அவரைப் பார்த்தான்.

அவரின் தயக்கம் ஏன் என்று அவனுக்கு நொடியில் பிடிப்பட்டுப் போனது.

“வீட்டில் யாரும் எதுவும் சொல்லுவாங்கன்னு நினைக்கிறீங்களா? அப்படி எதுவும் நடக்காமல் நான் பார்த்துக்கிறேன். நீங்க எப்ப குழந்தையைப் பார்க்க நினைக்கிறீங்களோ அப்ப தயங்காமல் வாங்க…” என்றான்.

அவன் வார்த்தைகள் தைரியம் கொடுக்க, சந்தோஷத்துடன் தலையை ஆட்டினார்.

அதே சந்தோஷத்துடன அவர்கள் விடைபெற்று சென்றனர்.

அவர்கள் வெளியே சென்றதும் கோபத்துடன் உள்ளே வந்தார் கவிதா.

“நீ செய்தது ஒன்னும் சரியில்லை விஷ்வா. இப்ப எதுக்கு உன் மாமியார், மாமனாரை நம்ம வீட்டுக்கு குழந்தையைப் பார்க்க வரச் சொன்ன? அந்த அம்மா குழந்தையைப் பார்க்க ஒரு நாள் வீட்டுக்கு வர்றோம்னு என்கிட்டயே சொல்லிட்டுப் போகுது. கொஞ்சம் கூடக் கூச்சமில்லாம…” என்று பொரிந்தார் கவிதா.

அன்னையைக் கூர்மையுடன் பார்த்தவன், “அது அவங்க மகளோட வீடும்தான்மா. அவங்க மகள் வீட்டுக்கு வர, அவங்களுக்கு எதுக்குக் கூச்சம் வரணும்?” என்று கேட்டான்.

அதில் அவருக்கு இன்னும்தான் கோபம் வந்தது.

“மகளே அந்த வீட்டில் ஒழுங்கா வாழலை. ஒழுக்கம் கெட்டுப் போய்…” என்றவர், மேலும் என்ன சொல்லியிருப்பாரோ?

“அம்மாமா….” என்ற மகனின் கடுமையான அதட்டலில், அவரின் பேச்சு அப்படியே அடங்கிப் போனது.

அவனின் கண்கள் சிவந்து ரத்த நிறம் கொண்டது. நெற்றி பொட்டு புடைத்து அவனின் கோபத்தின் அளவை காட்டியது. தாடைகள் ஆத்திரத்தில் இறுகின. உணர்ச்சி வேகத்தில் அவன் கைகள் நடுங்கின.

அவனின் இரவுத்திரத்தை கண்ட அந்த அன்னையே நடுங்கி ஒரு அடி பின்னால் நகர்ந்தார்.

“இப்ப நீங்க பேசியது ராஜசேகர் மகளை இல்லை. என் மனைவியை! இப்படிப் பேக்டரியில் இரண்டு பேர் என் மனைவியைப் பற்றித் தவறாகப் பேசியதால்தான் அவங்களை அடிச்சிட்டு வந்து, நான் இங்கே வந்து படுத்திருக்கேன்…” என்றான் கடுமையாக.

“அப்ப என்னையும் அடிச்சிடுவேன்னு சொல்றீயா?” என்று குரல் நடுங்க கேட்டார்.

மகனின் பேச்சை அவரால் தாங்கவே முடியவில்லை. அவனின் வாழ்க்கையையே நிர்மூலமாக்கி சென்ற மனைவியைக் குறை சொன்னதற்காக என்னையே அடிப்பானா? என்ற எண்ணம் அவரை அடியோடு அடித்து வீழ்த்தியது.

மகன் அடிக்காமலேயே அடி வாங்கியதாக உணர்ந்தார் அந்தத் தாய்.

அவரின் கண்களிலிருந்து கடகடவென்று கண்ணீர் இறங்கி வந்தது.

அன்னையின் மிரண்ட பாவத்தையும், கண்ணீரையும் கண்ட பிறகும் கூட அவனுக்குக் கோபம் அடங்கவில்லை.

அதனால் அவருக்கு எந்தச் சமாதானமும் சொல்லாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

மகனின் அந்தச் செயலில் இன்னும் நெஞ்சிலே பலமாக அடிவாங்கியது போல் உணர்ந்தவர், அங்கே இருக்கப் பிடிக்காமல், வெளியே சென்று அமர்ந்து விட்டார்.

அவரின் கண்களிலிருந்து கண்ணீர் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்தது.

தன் ஒரே மகனின் வாழ்க்கை பட்டுப் போனதே என்ற ஆதங்கத்தில் பேசினால், ‘என்ன வார்த்தை சொல்லிவிட்டான்? என்று அவரின் மனம் புலம்பித் தள்ளியது.

இனி மகன்தான் தன் ஆதாரம் என்று இதுவரை நினைத்திருந்தவருக்கு இப்போது அவ்விடத்தில் அவரின் மகன் தெரியவில்லை. ஒரு மனைவியின் கணவனாக மட்டுமே தெரிந்தான்.

அதன் பிறகு வந்த நாட்கள் இயந்திரகதியில் நகர்ந்தது. மருத்துவமனையில் மகன் கூடவே இருந்து அவனுக்கு வேண்டியதை செய்தாலும், அவனிடம் பேச மறுத்தார் கவிதா.

ஏனோ அவனும் அவரைக் கவனித்துச் சமாதானம் செய்யும் நிலையில் இல்லை.

அவன் மனம் முழுவதும் வேறு சிந்தனைகள் ஆக்கிரமித்திருந்தன.

படுக்கையில் இருந்தாலும் வேலைகள் அவனைச் சூழ்ந்திருந்தன. கம்பெனி வேலைகளைப் போனிலேயே கவனித்துக் கொண்டான்.

அவனின் சித்தப்பாவும், மாமாவும் கம்பெனியைப் பார்த்துக் கொள்வதால் அவனால் சமாளிக்க முடிந்தது. கூடவே சமருக்கு அழைத்து அவன் கொடுத்த வேலை எந்த அளவில் இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டான்.

இதற்கிடையே அவனின் குழந்தையையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

அன்னை தன்னிடம் பேசாததால் அவரிடம் கேட்காமல், அவனுக்கு வீட்டிலிருந்து அன்று காலை உணவை எடுத்து வந்த அத்தையிடம் கேட்டான்.

“மதியம் சாப்பாடு எடுத்துட்டு வரும் போது குழந்தையையும் தூக்கிட்டு வாங்க அத்தை. பார்க்கணும் போல இருக்கு. நாலு நாள் ஆச்சு அவளைப் பார்த்து…” என்றான்.

“சரிப்பா, மதியம் நான் வர முடியுமா தெரியலை. வீட்டில் கொஞ்சம் வேலை இருக்கு. இன்னைக்கு மதியம் சரளா வருவாள். அவளைத் தூக்கிட்டு வரச் சொல்றேன்…” என்றார் கற்பகம்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…” என்று உடனே மறுத்தார் கவிதா.

விஷ்வா அன்னையை ஏன் என்பது போல் பார்க்க, “ஏன் அண்ணி?” என்று கற்பகம் வாய் விட்டு கேட்டார்.

மகனைப் பார்க்காமல், “நீதானே குழந்தைக்கு நேத்து நைட் காய்ச்சல் வருவது மாதிரி இருக்குன்னு சொன்ன கற்பகம்? அதோட இங்கே அழைச்சுட்டு வந்தால் அவளுக்குச் சேராம போயிடும். அதுதான் நாளைக்கு இவனை வீட்டுக்கு அனுப்பிடுவோம்னு டாக்டர் சொல்லிட்டாரே. நாளைக்குப் பார்த்தால் போதும்…” என்றார்.

“ரூபிக்கு காய்ச்சலா? ஏன் அத்தை இதை என்கிட்ட சொல்லவே இல்லை?” என்று கேட்டான் விஷ்வா.

“காய்ச்சல் இல்லை விஷ்வா. பிள்ளை உடம்பு கொஞ்சம் கதகதன்னு இருந்தது. வேற ஒன்னுமில்லை. அதை நைட் தூங்கப் போறதுக்கு முன்னாடி அண்ணிகிட்ட சொல்லிட்டேன். அவங்க உனக்குச் சொல்லலையா?” என்று திருப்பிக் கேட்டார்.

அவனின் பார்வை இப்போது கூர்மையாக அன்னையின் புறம் திரும்பியது.

“அவன் மாத்திரை போட்டு தூங்கிய பிறகுதான் நீ போன் போட்ட கற்பகம். அதுதான் சொல்ல முடியலை. காலையில் மறந்துட்டேன்…” மகனின் பார்வைக்கு நாத்தனாரிடம்தான் பதில் சொன்னார் கவிதா.

“ஓ, சரி அண்ணி. குழந்தை இப்ப நல்லா இருக்காள் விஷ்வா. நைட் தூங்கி எழுந்த பிறகு பிள்ளைக்குச் சரியாகிடுச்சு. நீ கவலைப்படாதே விஷ்வா! நாளைக்கு நீ நேரிலேயே பார்க்கலாம். சரி, நான் கிளம்புறேன்…” என்று இருவரிடமும் பொதுவாகப் பேசி விட்டுக் கிளம்பினார் கற்பகம்.

அவர் சென்றதும், இன்னும் கூர்மையுடன் அன்னையைத் துளைத்தது விஷ்வாவின் பார்வை.

“நிஜமாவே காலையில் என்கிட்ட சொல்ல மறந்துட்டீங்களாமா? இல்லை, இவன்கிட்ட எதுக்குச் சொல்லணும்னு விட்டுட்டீங்களா? அவள் என் பொண்ணுமா. அவளுக்கு உடம்பு சரியில்லாம போனதை கூட என்கிட்ட இருந்து மறைச்சிருக்கீங்க. இது சரியில்லைமா…” என்றான், குற்றம் சாட்டும் குரலில்.

கூடவே ஆதங்கமும் அவனிடம்! எப்படிச் சொல்லாமல் இருக்கலாம் என்ற கோபமும் கூட.

அதை அவனின் கேள்வியிலேயே நன்றாகப் புரிந்து கொண்டார் கவிதா.

இப்போது பார்வையைத் திருப்பாமல் மகனின் பார்வையை நேருக்கு நேராக எதிர்கொண்டார் கவிதா.

அவரின் கண்கள் தீவிரத்துடன் அவனைத் துளைத்தன.

“உன் பிள்ளைக்கு லேசா காய்ச்சல் வந்த மாதிரி இருந்ததை மறைத்ததற்கே உனக்கு என் மேல் இவ்வளவு கோபம், ஆதங்கம், எரிச்சல் வருது. அதே கோபம், ஆதங்கம், எரிச்சல்தான் உன் வாழ்க்கையையே பாழாக்கிட்டு போன உன் பொண்டாட்டி மேல எனக்கு இருக்கு விஷ்வா.

உன் பிள்ளைக்கு நீ துடிக்கிற போலத்தான் என் மகனுக்காக நான் துடிப்பேன் விஷ்வா. என்னைச் சுற்றி பல உறவுகள் இருந்தாலும், எனக்கு இருக்குற ஒரே உறவு என் மகன் நீ மட்டும்தான். அதுவும் உன் அப்பா என்னை விட்டு போனப்பிறகு, நீ மட்டும்தான் எனக்கு எல்லாம்.

உன் வாழ்க்கை இப்படிப் பட்டமரமா போயிருச்சேன்னு தினமும் நான் உறங்க கூட முடியாமல் தவிச்சிட்டு இருக்கேன். என்னோட தவிப்புக்கும், உன்னோட துடிப்புக்கும், உன் பிள்ளையை இப்ப யாரோ பார்த்துக்க வேண்டிய சூழ்நிலையையும் கொடுத்து விட்டுப் போனது உன் பொண்டாட்டி விஷ்வா.

அவளை ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னு நீ என்னையே அடிச்சிடுவேன்னு சொல்ற? அப்படியே பெத்த மனம் குளிர்ந்து போயிருச்சு விஷ்வா. ரொம்ப ரொம்பக் குளிர்ந்து போயிருச்சு…” அதுவரை தைரியமாகக் கேள்வி கேட்ட கவிதா, கடைசியில் பேச முடியாமல் கண்கள் கலங்க பேச்சை நிறுத்தினார்.

அன்னையின் நியாயமான கேள்வியும், அவரின் ஆதங்கமும் அவனின் வாயடைக்க வைத்தது.

தன் வார்த்தைகள் அவரைப் பலமாகத் தாக்கியுள்ளதை நினைத்துக் கீழ் உதட்டை லேசாகக் கடித்துக் கொண்டான்.

அடிபடாத கையை இறுக மூடித் திறந்தான்.

“ஸாரிமா…” என்று மெல்ல முணுமுணுத்தான்.

“அடிப்பேன்னு சொல்லலைமா. நீங்க அப்படிப் பேசுவது பிடிக்கவில்லை என்றுதான் சொன்னேன்…” என்றவன், கண்களை மூடிக் கொண்டு எதையோ நினைத்து மறுகினான்.

அவனின் தொண்டைக்குழி அவஸ்தையுடன் ஏறி இறங்கியது.

“யார் என்ன சொன்னாலும், என் விதுவை என்னால் தப்பா நினைக்க முடியாதுமா. விதுவை எல்லாரும் தப்பு பண்ணிட்டாள்னு சொல்றீங்க. ஆனால், அவள் தப்புப் பண்ணிருக்க மாட்டாள்னு என் உள் மனசு கூவி கூவி சொல்லுதுமா. அவளைப் பெத்தவங்க கூட அவளை விட்டு ஒரு அடி தள்ளி நின்னுதான் பழகியிருப்பாங்கமா.

ஆனால், அந்த ஒரு அடி கூடத் தள்ளி இல்லாமல், அவள் கூட ஊனும், உயிருமா வாழ்ந்தவன்மா நான். முழுசா ஒன்றரை வருஷம் அவள் கூட வாழ்ந்திருக்கேன். அவளின் ஒவ்வொரு அணுவும் எனக்கு அத்துப்படி. அவள் கண் பார்வை கூட என்ன பேசும்னு எனக்குத் தெரியும்மா.

அவளுக்கு என் மேல் எவ்வளவு பாசம் இருக்குன்னு எனக்கு நல்லாத் தெரியும். இதோ இப்படிப் படுத்திருக்கேனே, இப்படி ஒரு நிலையில் அவள் என்னைப் பார்த்திருந்தால் அப்படி உடைந்து போயிருப்பாள்மா. என்னைப் பார்த்துக்கிறதை விட அவளைச் சமாளிப்பதுதான் பெரும்பாடா இருந்திருக்கும்.

அவ்வளவு என் மேல் உயிரையே வச்சுருந்தாள்மா. அப்படிப்பட்டவளை இப்ப எல்லாரும் தப்பு செய்துட்டாள்னு சொல்லும் போது என்னால் எப்படிம்மா நம்ப முடியும்? முடியாதும்மா. என்னால் முடியாது! என் விது தப்பு பண்ணிருப்பாள்னு என்னைப் பெற்ற அம்மா நீங்க சொன்னால் கூட நம்ப மாட்டேன்…” என்று கண்களைத் திறக்காமலேயே உறுதியுடன் சொன்னான் விஷ்வமித்ரன்.

அவன் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருந்த தன் மனைவியின் மீதான காதல், வார்த்தைகளாய் வழிந்தோடியிருந்தது.

அவன் மூடியிருந்த இமையின் ஓரம், சூடாய் துளிர்த்து வெளியேறியது நீர் துளிகள்.

தன் மனைவியின் மேல், தன் மகன் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்து உறைந்து போனார் கவிதா.

இவ்வளவு நாட்களும், அவளைப் போய் மகன் இப்படி நினைத்து உருகுகிறானே என்று மருகியவர்தான். ஆனால், காரணம் இல்லாமல் மகன் உருகவில்லையோ என்று இந்த நொடி அவருக்குத் தோன்றியது.

இத்தனை நாட்களும் தனக்குள்ளயே இறுகி யாரிடமும் சரியாகப் பேசாமல் இருந்தவன், இன்று தன் மனதை அன்னையிடம் மொத்தமாகக் கொட்டியிருந்தான்.

மகனின் கண்ணீர் துளிகளைக் கண்டவர், அவன் அருகில் சென்று கண்ணீரை துடைத்துவிட்டார்.

அப்படியே அன்னையின் கையில் கன்னத்தை அழுத்திக் கொண்டான் விஷ்வா.

ஒரு குழந்தைக்குத் தகப்பனானவன், இப்போது அன்னையின் கையில் மழலையாய் மாறிப் போனான் அந்த ஆண்மகன்.