உயிரூற்றாய் வந்தாய் – 2

அத்தியாயம் – 2

“விஷ்வா… தம்பி…” மகனை வாஞ்சையுடன் அழைத்தார் கவிதா.

அன்னையின் அழைப்புச் செவியை நிறைக்க, மெல்ல இமைகளைப் பிரித்தான் விஷ்வமித்ரன்.

இரவே அவனுக்கு எடுக்க வேண்டிய பரிசோதனைகளை எடுத்திருந்தனர்.

தலையில் சின்னக் காயம்தான் என்பதால் வேற எந்தப் பாதிப்பும் இல்லையென அவனை அறைக்கு மாற்றியிருந்தனர்.

மயக்கமும், உறக்கமுமாக இருந்தவன் இப்போதுதான் விழித்தான்.

கண் விழித்துப் பார்த்தவன் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையை உள்வாங்கினான்.

மருத்துவமனை சூழ்நிலை உறைக்க, நெற்றியைச் சுருக்கி யோசித்தான்.

தொழிற்சாலையில் இருவர் தன் மனைவியைப் பற்றிக் கேலியாகப் பேசிக் கொண்டதும், தான் அவர்களை அடித்ததும், கோபத்துடன் காரை எடுத்துக் கொண்டு சாலையில் பறக்க, நாய் குறுக்கே வந்ததால் காரை திருப்பி மரத்தில் மோதியதும், யார் யாரோ வந்து உதவி செய்ததும், அவர்கள் தன்னை ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்ததும் என அனைத்தும் ஞாபகம் வந்தது.

தன்னைச் சுற்றி நிற்கும் குடும்பத்தினரைப் பார்த்தான்.

“இப்ப எப்படி இருக்கப்பா?” என்று விசாரித்த அன்னைக்கு லேசாகத் தலையை அசைத்தான்.

தலையில் இருந்த காயம் சுருக்கென வலித்தது. ஆனாலும், அவன் தன் வலியைச் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை.

கை, கால்களை அசைத்துப் பார்த்தான்.

ஒரு கையில் அடிபட்டதால் கட்டு இருந்தது. இன்னொரு கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது.

வலது காலை சிறிதும் அசைக்க முடியவில்லை.

“பார்த்துக் கார் ஓட்ட கூடாதா விஷ்வா? நமக்கு ஏற்கெனவே நேரம் சரியில்லை. இப்ப நீ வேற இப்படி ஹாஸ்பிட்டலில் வந்து இருக்க…” ஆதங்கமாகச் சொன்னார் சரளா.

“இப்படி எல்லாம் நடக்கணும்னு நம்ம தலையில் எழுதியிருக்கு. என்ன செய்ய?” என்று புலம்பினார் கற்பகம்.

“அமைதியா இருங்க எல்லாரும். விஷ்வா இப்பத்தான் கண் முழிச்சிருக்கான். போய் டாக்டரை கூப்பிட்டு காட்டுவதை விட்டுவிட்டு எதுக்குத் தேவையில்லாத பேச்சு?” என்று பெண்களை அடக்கினார் கற்பகத்தின் கணவர் சோமசுந்தரம்.

“நான் போய் டாக்டரை கூட்டிட்டு வர்றேன்…” என்று வெளியே செல்ல போனான் பிரவீன்.

“நில்லு…” அவனை நிறுத்தினான் விஷ்வமித்ரன்.

“என்ன அண்ணா?”

“இன்னைக்கு உனக்குச் செமஸ்டர் எக்ஸாம் இருக்குத்தானே? காலேஜ் போகாம இங்கே என்ன பண்ற?”

“மணி ஏழுதான் ஆகுதுண்ணா. எட்டு மணிக்கு கிளம்பிடுவேன்…” எனத் தம்பி சொன்னதைத் தலையை அசைத்து ஏற்றுக் கொண்டான்.

“ரூபி குட்டி எப்படி இருக்காள்?” அன்னையிடம் கேட்டான்.

“நைட் எல்லாம் ஒரே அழுகையாம். உன்னைத் தேடியிருப்பாள் போல. நந்தினிதான் பார்த்துக்கிட்டாள்…” என்றார்.

“ம்ப்ச்…” என்று முனகி கொண்டவன், “நீங்க வீட்டுக்குப் போய்ப் பார்க்கலையா?” என்று கேட்டான்.

“நீ இங்கே கண் திறக்காம இருக்கும் போது, எப்படி என்னால் அங்கே போய் நிம்மதியா இருக்க முடியும்?” என்று கேட்டார்.

“எனக்கு என்ன, செத்தா போயிட்டேன்? குழந்தையைப் போய்ப் பார்க்காமல்…” என்று எரிந்து விழுந்தான்.

மகனின் வார்த்தையில் கவிதாவின் கண்களில் சட்டென்று நீர் கோத்துக் கொண்டது.

“எதுக்கு அண்ணியைத் திட்டுற விஷ்வா? நான் நைட் வீட்டுக்குப் போயிருந்தேன். நான், நந்தினி, பிரகதி எல்லாம் பார்த்துக்கிட்டோம். ரூபி நல்லா இருக்காள். என்ன அப்பப்ப சிணுங்கிட்டே இருந்தாள். அதையும் ரொம்ப அழ விடாமல் நந்தினி சமாளிச்சுட்டாள்…” என்றார் கற்பகம்.

“சரி, எல்லாரும் கொஞ்சம் வெளியே இருங்க. மாமாகிட்ட நான் கொஞ்சம் பேசணும்…” என்றான்.

சோமசுந்தரத்தை தவிர மற்றவர்கள் வெளியே சென்றனர்.

“நேத்து நான் வெளியே போன பிறகு கம்பெனியில் என்ன நடந்தது மாமா?” எனக் கேட்டான்.

“பெருசா ஒன்னும் ஆகலை விஷ்வா. இப்ப எதுக்குக் கம்பெனி பற்றி நினைத்து அலட்டிக்கிற? ரெஸ்ட் எடு!” என்றார்.

அதிருப்தியுடன் தலையை அசைத்தவன், “பெருசா எதுவும் நடக்கலைனா… அப்ப சின்னதாகப் பிரச்சினை நடந்ததா?” என்று கேட்டான்.

“பிரச்சினை சின்னதோ, பெருசோ… எதுவா இருந்தால் என்ன விஷ்வா? அதுதான் கலையும், நானும் இருக்கோம்ல… பார்த்துக்கிறோம். நீ கவலைப்படாதே!”

“மாமா…” அழுத்தமாக அழைத்தவன், “நீங்க பார்த்துக்க மாட்டீங்கன்னு நான் சொல்லலை. கம்பெனியில் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியணும்…” என்றான் உறுதியுடன்.

“நீ முதலில் சொல்லு, எதுக்கு லேபர்ஸ் மேல கை வச்ச?” என்று அவர் கேட்டதும் அவனின் முகம் இறுக்கத்தின் வசமானது.

“அது எதுக்கு இப்போ?” என்றவன் சொல்ல மறுத்துவிட்டான்.

சோமசுந்தரத்திற்கு அவனின் மனநிலை புரிந்தது.

அதைப் பற்றி அவன் பேச விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டதால், அதைப் பற்றி மேலும் கேட்காமல், அவன் கிளம்பிய பிறகு தொழிற்சாலையில் நடந்ததைப் பகிர்ந்து கொண்டார்.

“நீ மன்னிப்பு கேட்கலைனா வேலை செய்ய மாட்டோம்னு ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நானும் பேசி சமாளித்துப் பார்த்தேன். கலைந்து போக மாட்டோம்னு பிடிவாதம் பிடித்தாங்க. அப்புறம் உனக்கு ஆக்சிடெண்ட் ஆனது தெரிந்ததும், நீ திரும்பக் கம்பெனிக்கு வரும் போது பேசிக்கிறோம்னு கலைந்து போனாங்க…” என்றார்.

“திரும்பி வரும் போது பேசுவதா? ஹா…” என்று அலட்சியமாகத் தலையை அசைத்தான்.

“இனி எந்தத் பேச்சு வார்த்தையும் இல்லை. நான் அடிச்ச இரண்டு பேரையும் வேலையை விட்டு தூக்குங்க. நான் திரும்பி வரும் போது அவங்க அங்கே இருக்கக் கூடாது…” என்றான் உத்தரவாக.

“அவசரப்படாதே விஷ்வா! அப்படித் திடீரென்று வேலையை விட்டுத் தூக்கினால் பிரச்சினை இன்னும் பெருசாகத்தான் செய்யும்…” அவனை அமைதிப்படுத்த முயன்றார்.

“எவ்வளவு பெரிய பிரச்சினை ஆனாலும் பரவாயில்லை, நான் பார்த்துக்கிறேன். நீங்க வேலையை விட்டுத் தூக்குங்க…”

“ஏன் இந்தப் பிடிவாதம் விஷ்வா? உன் பக்கமும் தப்பு இருக்கு. என்ன பிரச்சினையாக இருந்தாலும் நீ பேசி தீர்த்திருக்கணுமே தவிரக் கைநீட்டி இருக்கக் கூடாது…”

“என்ன? பேசித் தீர்த்திருக்கணுமா? நெவர்! அவங்க பேசிய பேச்சிற்கு நான் அவங்களை உயிரோட விட்டு வச்சிருப்பதே பெரிய விஷயம்…” என்றவன் தாடை ஆத்திரத்தில் இறுகியது.

“அப்படி அவங்க இல்லாததை ஒன்னும் பேசலையே விஷ்வா?” என்று சொல்லியபடி அங்கே வந்தார் கலையரசன்.

அவரை உக்கிரமாகப் பார்த்து, “சித்தப்பா…” என்று அதட்டி அழைத்தான்.

“கோபப்படாதே விஷ்வா! எதார்த்தத்தைக் கொஞ்சம் புரிஞ்சிக்கப் பழகு…” என்றார் நிதானமாக.

“எது எதார்த்தம்? என் பொண்டாட்டியைப் பற்றிக் கண்டவனெல்லாம் தப்பா பேசுவான், அதை நான் பொறுத்துக் கொண்டு போகணுமா?” ஆத்திரமாகக் கேட்டான்.

“தப்பா பேசுற மாதிரி நடந்துகிட்டது யார் தப்பு விஷ்வா?” கலையரசனின் கேள்வி கூர்மையாக வந்து விழுந்தது.

“சித்தப்பா, போதும்!” ஆத்திரமாகக் கத்தினான்.

“விஷ்வா, அமைதியாக இரு!” என்று அவனை அடக்கிய சோமசுந்தரம், “கலை, இதைப்பற்றி இனிமே நாம பேச வேண்டாம்…” என்றார்.

“இல்லை அத்தான், கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ளாம…” சலிப்பாகக் கலையரசன் ஏதோ சொல்ல வர,

“கலை, வேண்டாம் விடு! ஏற்கெனவே விஷ்வா அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கான். இந்த நேரத்தில் அவனுக்கு டென்ஷன் வேண்டாம். நீ அமைதியா இரு!” என்றார் சோமசுந்தரம்.

இருவரையும் பார்க்கப் பிடிக்காமல், கண்களை இறுக மூடிக் கொண்டான் விஷ்வமித்ரன்.

அப்போது மருத்துவர் உள்ளே வர, அவனைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்.

“நான் எப்போ வீட்டுக்குப் போகலாம் டாக்டர்?”

“உங்களுக்குக் காலில் பிராக்சர் ஆகி அதுக்கு ஆப்ரேஷன் பண்ணிருக்கோம். இப்போ நீங்க பெட் விட்டு நகரக் கூட முடியாது. ஒரு வாரம் இங்கேதான் இருக்கணும்…”

“ஒரு வாரமா?” என்றவன் யோசனையுடன் நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.

“எனக்கு வேலை இருக்கு டாக்டர். நான் உடனே போயாகணும்…”

“உங்க அவசரத்துக்கு உங்க கால் ஒத்துழைக்காதே மிஸ்டர்? ரெஸ்ட் எடுங்க. வலிக்கு டேப்லெட் நர்ஸ் கொடுப்பாங்க. சாப்பிட்டு விட்டு போடுங்க…” என்ற மருத்துவர் கிளம்பிவிட்டார்.

அவனுக்கு எரிச்சலாக வந்தது.

ஏற்கெனவே சில நாட்களாக தொழிற்சாலைக்குச் செல்லவில்லை. நேற்றுதான் சென்றான். உடனே பிரச்சினை, விபத்து. இப்போது இங்கே இருக்கிறான்.

நிறைய வேலைகள் இருந்தன. அதை விட முக்கியமான வேலை ஒன்றும் இருந்தது.

அதைப் பார்க்கவாவது எழுந்து நடமாட வேண்டுமே. இப்போது என்ன செய்வது? என்று யோசித்தான்.

“ரொம்ப யோசிக்காதே விஷ்வா. நானும், அத்தானும் கம்பெனியைப் பார்த்துக்கிறோம். நீ ரெஸ்ட் எடு…” என்றார் கலையரசன்.

“ம்ம்…” முனகினான். ‘வேறு வழி இல்லையே?’ என்ற இயலாமை கலந்த கோபம் வந்தது.

“வீட்டில் இருந்து சாப்பாடு வந்திருக்கு தம்பி…” என்று சாப்பாட்டுடன் உள்ளே வந்தார் கவிதா.

‘அவன் சாப்பிடட்டும்’ என்று சோமசுந்தரமும், கலையரசனும் வெளியே சென்றனர்.

“சாப்பாடு எல்லாம் அப்புறம். எனக்கு இப்போ என் போன் வேணும். எங்க இருக்கு?” என்று கேட்டான்.

“முதலில் சாப்பிட்டு விடு விஷ்வா. கால் வலிக்க ஆரம்பிக்கும். சாப்பிட்டால் மாத்திரை போடலாம்…” என்றார்.

“இந்த வலி ஒன்னும் எனக்குப் பெருசு இல்லைம்மா…” என்றான் இறுக்கமாக.

வேறு எந்த வலி பெரியது என்று அவன் சொல்லாமலே அவருக்குப் புரிந்தது. அது அவரின் கண்களைக் கலங்க வைத்தது.

“அம்மா, ப்ளீஸ்! என் முன்னாடி அழாதீங்க. போனை கொடுங்க…” என்றான்.

முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனின் கைபேசியை எடுத்துக் கொடுத்தார்.

இடது கையில்தான் அடிபட்டிருந்தது.

வலது கையில் குளுக்கோஸ் ஏற்ற போடப்பட்டிருந்ததைச் சற்று நேரத்திற்கு முன்தான் செவிலி வந்து எடுத்து விட்டிருந்தார்.

ஆனாலும், ஊசி இன்னும் கையில்தான் இருந்தது. கைபேசியைப் பிடிக்கச் சிரமப்பட்டான்.

ஆனாலும், இப்போது பேசியே ஆக வேண்டும் என்ற உந்துதலில் அவனின் சிரமத்தை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை.

“கை வலித்தால் விட்டுவிடு விஷ்வா. அப்புறம் பேசிக்கலாம்…” என்றார் அன்னை.

ஆனால், அவரின் பேச்சை காதில் வாங்காதவன் பிடிவாதமாகத் தான் அழைக்க நினைத்த எண்களைத் தேடினான்.

அவனின் பிடிவாதத்தில் அவருக்குப் பெருமூச்சுதான் வந்தது.

“ஹலோ சமர், எதுவும் தகவல் கிடைத்ததா?” என்று போனில் பேச ஆரம்பித்தான்.

“இல்லை சார். நாங்களும் முயற்சி செய்துட்டுதான் இருக்கோம். தகவல் கிடைத்தால் அப்டேட் செய்றேன் சார்…” என்று சமர் சொல்ல,

“ஒரு மாதம் ஆகப்போகுது சமர். இன்னும் தகவல் கிடைக்கலைனா எப்படி?” கோபம் துளிர்த்தது விஷ்வாவிற்கு.

“என்ன செய்வது சார்? எங்களால் முடிந்த எல்லா ஸ்டெப்பும் எடுத்துட்டுதான் இருக்கோம்…” பொறுமையாகவே பதிலளித்தான் சமர்.

“ம்ப்ச், எப்ப கேட்டாலும் இதே பதில்…” என்று சலித்துக் கொண்டவன், அழைப்பைத் துண்டித்தான்.

“ஏற்கெனவே என்ன நடந்ததுன்னு தெரிந்ததுதானே விஷ்வா? அதை எதுக்கு விடாமல் விசாரிச்சுட்டு இருக்க?”

மகன் என்ன பேசினான் என்று புரிந்து கொண்ட கவிதா கேட்க, அன்னையை வெறுமையாக வெறித்தான்.

“விஷ்வா?” மகனின் பார்வை அவரைத் தடுமாற வைத்தது.

“நீங்க எல்லாரும் நம்புவதை நான் நம்பவில்லையென அர்த்தம்!” என்று அழுத்தமாகச் சொன்னான்.

அந்த அழுத்தம் இனி இதைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள் என்பதாகும்.

பேசினாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மகனை என்னதான் செய்வது? என்ற அலுப்புதான் கவிதாவிற்கு வந்தது.

அதற்கும் மேல் அதைப் பற்றிப் பேசாமல் ஒரு பவுலில் இட்லியைப் பிய்த்துப் போட்டு, சாம்பார் ஊற்றி, சாம்பார் இட்லியாக மாற்றி ஸ்பூன் போட்டு அவனிடம் கொடுத்தார்.

லேசாகச் சாய்ந்து அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தான்.

உண்ணும் போதே பழைய நினைவொன்று மனதில் சுறுசுறுவெனப் பொங்கி வர ஆரம்பித்தது.

“அச்சோ! என்னங்க இது, கையில் காயம்? இதோட எப்படிச் சாப்பிடுவீங்க?”

“சும்மா சின்னக் காயம்தான் விதுமா…”

“எது, இது சின்னக் காயமா? உள்ளே இருக்கும் சதை வரை தெரியுது. இதோட எப்படிச் சாப்பிடுவீங்க?”

“ஒரு பவுலில் போட்டு பிசைந்து ஸ்பூன் போட்டு கொடு. சாப்பிட்டு விடுவேன்…”

“ஸ்பூன் எதுக்கு? நானே ஊட்டி விடுறேன், இருங்க…”

சாதத்தைத் தட்டில் போட்டுக் குழம்பு ஊற்றி பிசைந்து, தனக்கு ஊட்ட நீண்ட கை, இப்போதும் நேரில் இருப்பது போல் தோன்றியது.

“ரொம்பப் பண்ணாதேடி. நானே சாப்பிடுவேன்…”

“கொஞ்சம் கூட ரசனை இல்லாத மனுஷன். பொண்டாட்டி அவளே ஊட்டி விடுறேன்னு சொல்றாளே. ஆசையா வாங்கிச் சாப்பிடுவோம்னு இல்லாமல் நாங்க ரொம்பப் பண்றோமாம்ல…” என்று அவள் சலித்துக் கொள்ள, அவளைப் பார்த்து குறும்பாகச் சிரித்தான்.

“சரிதான், ரொம்பச் சலிச்சுக்காதே! ஊட்டி விடு!”

மனைவி ஊட்டியதை வாயைத் திறந்து வாங்கிக் கொண்டவன், அவளின் விரல்களையும் சேர்த்தே ருசிக்க ஆரம்பித்தான்.

“என்னங்க இது, விடுங்க!” மனைவி சிணுங்க,

“நீதானேடி ஊட்ட ஆசைப்பட்ட? எனக்கு இப்படித்தான் சாப்பிட தெரியும்…” என்றவன் ஒவ்வொரு வாய் உணவு கொடுக்கும் போதும், அவளின் விரல்களையும் சேர்த்தே சுவைத்தது நினைவில் வர, விஷ்வாவின் கண்கள் உணர்ச்சி வேகத்தில் சிவந்து போயின.

‘கையில் விழுந்த லேசான கீறலுக்கே பதறினாயே விதுமா. இப்ப காலில் அடிபட்டு நடக்க முடியாமல் இருக்கேன். ஆனால், இப்ப நீ…?’ என்று நினைத்தவனுக்கு உணவு தொண்டையில் இறங்க மறுத்தது.

“என்னப்பா சாப்பிடாமல் நிறுத்திட்ட? சாப்பிடு…” என்றார் கவிதா.

“போதும்!” என்றவன் பவுலை அன்னையிடம் நீட்டினான்.

“கை வலிக்குதா? நான் வேணுமானால் ஊட்டி விடட்டுமா?” பரிவுடன் கேட்டார்.

“இல்லம்மா, போதும்! மாத்திரை கொடுங்க…” என்றான்.

“பாதிக் கூடச் சாப்பிடலை விஷ்வா…”

கவிதாவிற்கு மகனை சாப்பிட வைத்து விட வேண்டுமென்ற தவிப்பு!

ஆனால், அவரின் தவிப்பை விட, அவனின் தவிப்பு உள்ளுக்குள் அலைகடலெனப் பொங்கிக் கொண்டிருந்தது.

ஏதேதோ நினைவுகள்! ஏதேதோ கேள்விகள்! ஏதேதோ எண்ணங்கள்! அவனை அலைக்கழிக்கும் போது, எங்ஙனம் அவனால் உண்ண முடியும்?

முடியவில்லை அவனால்!

நெஞ்சை அடைப்பது போல் இருந்தது.

இந்த வலி, வேதனை என்று தீரும் எனக்கு?

மீண்டும் அவனுக்குள் கேள்விகள்.

பதில்? வழக்கம் போல் கிடைக்கவில்லை.

என்ன செய்யப் போகிறேன் நான்? 

விடையறியவில்லை அவன்!

அவனின் மனநிலை அறியாமல் அன்னை சாப்பிட வைக்க முனைப்பாக இருக்க, அவரிடம் பதில் சொல்ல மனமற்றுச் சரிந்து படுக்கப் போனான்.

மகனுக்காகக் கவிதாதான் இறங்கி வர வேண்டியதாக இருந்தது.

அவன் படுக்கும் முன் மாத்திரையை எடுத்து வந்து கொடுத்தார்.

அதை வாங்கி விழுங்கினான்.

“மாமா வெளியே இருக்காரா, கிளம்பிட்டாரா?” எனக் கேட்டான்.

“இரு, போய்ப் பார்த்துட்டு வர்றேன்…” என்று வெளியே எட்டிப் பார்த்துவிட்டு வந்தார்.

“இருக்கார். சித்தப்பாவும் சித்தியும், பிரவீனும் வீட்டுக்கு கிளம்பிட்டாங்க…” என்றார்.

“மாமாவை வரச் சொல்லுங்க…” என்றதும் கவிதா வெளியே சென்று சோமசுந்தரத்தை அழைத்து வந்தார்.

“என்ன விஷ்வா?” சோமசுந்தரம் கேட்க,

“நான் சொன்னதைச் செய்துடுங்க மாமா. அந்த லேபர்ஸ் இனி கம்பெனியில் இருக்கக் கூடாது. உடனே செட்டில் செய்து அனுப்பி விடுங்க…”

“விஷ்வா, சொல்வதைக் கேள்!” என்றவரை நிறுத்த சொல்லிக் கை காட்டியவன், கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டான்.

இனி என்ன பேசினாலும் பிரயோஜனம் இல்லை என அவருக்குத் தெரியும்.

விஷ்வமித்ரன் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து அவன் பின்வாங்குவதே இல்லை.

அதை நன்கு அறிந்தவர், “சரி, நான் கம்பெனிக்கு கிளம்புறேன்…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

கவிதாவும், கற்பகமும் மட்டும் அவனுக்குத் துணையாக மருத்துவமனையில் இருந்தனர்.

அன்று மாலை விஷ்வா கம்பெனி விஷயமாக யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, கவிதாவும், கற்பகமும் வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே ஒரு தம்பதி வர, பெண்கள் இருவரின் முகமும் மாறிப்போனது.

“மாப்பிள்ளைக்கு ஆக்சிடெண்ட்னு கேள்விப்பட்டோம். என்னாச்சு? எப்படி இருக்கார்?” என்று கேட்டார் அந்தப் பெண்மணி.

அவருக்குப் பதில் சொல்ல விருப்பமற்று கவிதா முகத்தைத் திருப்ப, கற்பகம் கோபமாக முறைத்தார்.

“எந்த முகத்தை வச்சுக்கிட்டு நீங்க இங்கே வந்தீங்க? என் மருமகன் இப்ப இப்படி அடிபட்டுப் படுத்திருக்கக் காரணமே நீங்கதானே? இப்ப என்னமோ ரொம்ப அக்கறை போல வந்துட்டீங்க…” கோபமாகக் கேட்டார் கற்பகம்.

“நாங்க… நாங்க…” என்று அந்தப் பெண்மணி திணற,

“அம்மா, வெளியே யார் வந்திருக்காங்க? ஏன் அத்தை கோபமா பேசிட்டு இருக்காங்க?” உள்ளிருந்து கேட்டான் விஷ்வமித்ரன்.

கவிதாவும், கற்பகமும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, அந்தப் பெண்மணியின் கணவர் லேசாகத் திறந்திருந்த கதவை நன்றாகத் திறந்து, “நாங்கதான் மாப்பிள்ளை…” என்றார்.

“மாமா, வாங்க… உள்ளே வாங்க…” என்று விஷ்வமித்ரன் ஆர்வமாக அழைத்தான்.

கணவன், மனைவி இருவரும் உள்ளே செல்ல,

கடுகடுத்துப் போயின கவிதா, கற்பகத்தின் முகங்கள்.