உயிரூற்றாய் வந்தாய் – 1

அத்தியாயம் – 1

சாலையில் சென்ற அத்தனை வாகனங்களையும் தாண்டி, அதிவேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருந்தது அந்த உயர்ரகக் கார்.

வேகம்! வேகம்! அதிவேகம்!

யாராலும் கட்டுப்படுத்த முடியாத வேகம்!

யாரோ துரத்துவது போல்!

எதைக் கண்டோ அஞ்சி ஓடுவது போல்!

ம்கூம், இந்த வேகம் பற்றாது! இன்னும்! இன்னும்! என்பது போல் காரை விரைந்து செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.

தங்களைத் தாண்டி அதிவேகமாகச் செல்லும் அந்த உயர்ரகக் காரை ஒரு நொடி திடுக்கிட்டுத்தான் பார்த்தனர் மற்ற வாகனக்காரர்கள்.

ரேஸ் எதுவும் நடக்கிறதா? என்ற எண்ணமும் சிலருக்குத் தோன்றாமல் இல்லை.

சாலையில் செல்பவர்கள் பற்றியோ, அவர்களின் எண்ணங்கள் பற்றியோ எதையும் பொருட்படுத்தாமல் கண்மண் தெரியாமல் காரை செலுத்தினான்.

போ…! போ…! போய் விடு! இன்னும், இன்னும் தொலைவில்! எங்கேயாவது போய் விடு!

அரற்றியது அவன் மனம்.

எங்கே போக வேண்டும்? எங்கே நிறுத்த வேண்டும்? என்ற எந்தச் சிந்தனையும் இல்லாமல் இலக்கில்லாமல் பறந்து கொண்டிருந்தான்.

கலைந்த தலை, கசங்கிய உடை, உறக்கத்தைக் கண்டே பல நாட்கள் ஆனது போல் சிவந்து போயிருந்த கண்கள்.

ம்கூம்! உறங்காததால் மட்டுமே அந்தச் சிவப்பு என்று சொல்லி விட முடியாது.

ஆத்திரம், இரவுத்திரம், வெறி, இயலாமை, வலி, வேதனை என அத்தனையையும் பிரதிபலித்ததால் வந்த சிவப்பும் கலந்தே இருந்தது.

எதற்கு? எப்படி? என்ன நடந்தது?

அவனுக்கு அவனே கேள்விகள் கேட்டுக் கொண்டான்.

பதில்! பதில்! அதுதான் கிடைக்கவில்லை.

ஆனால்…

இப்படித்தான்! இதற்குத்தான்! இதுதான்! என்று அவன் முகத்திற்கு நேராகவும், முதுகிற்குப் பின்னாலும் வந்து விழுந்த பல பதில்களை ஏற்றுக் கொள்ள முடியாமல், இல்லை… இல்லை… என்றான்.

ஆனால், ‘இருக்கிறது! இருக்கிறது!’ என்ற பதில்கள் தொடர்ந்து வந்து, அவனின் முகத்தில் அறைந்தது.

இதோ இப்போது சற்றுமுன் கூட இருக்கிறது என்று சாதித்த இருவரை, இல்லாமல் ஆக்கும் வெறியுடன் அடித்து நொறுக்கி விட்டுத்தான் வந்திருக்கிறான்.

ஆனால், மனம் இன்னும் அடங்க மறுத்துத் திமிறிக் கொண்டிருக்க, ஆத்திரம் அடங்காமல் தன் வேகத்தைக் கூட்டினான்.

காரின் வேகத்தை விட, மனம் அதிவிரைவாக எங்கெங்கோ ஓடிக் கொண்டிருந்தது.

கட்டுப்பாட்டிற்குள் அடங்கவில்லை மனம்!

அலைபாய்ந்த மனதையும் அடக்க முடியவில்லை.

உள்ளுக்குள் சீறி வரும் சினத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இடைவிடாமல் அழைத்துக் கொண்டிருக்கும் அலைபேசி வேறு அவனின் கோபத்தைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தது.

எரிச்சலுடன் கலைந்த தலையை அழுந்த கோதிக் கொண்டான்.

அவனின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது போல் சாலையின் குறுக்கே ஒரு நாய் ஓடி வர, காரை வளைத்துத் திருப்பினான்.

ஆனால், காரின் வேகம் அவனின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போக, சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதினான்.

***

“ச்சோ… ச்சோ… அழாதேடா செல்லம். இதோ உன் சின்னப் பாட்டி பால் எடுத்துட்டு வந்திருவாங்க…” என்று அழுத பேத்தியைச் சமாதானம் செய்து கொண்டிருந்தார் கவிதா.

“சரளா, பால் ரெடியா? இவளைச் சமாதானம் செய்ய முடியலை…” என்று பேத்தியைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டே குரல் கொடுத்தார்.

“அம்மா, பாலை ஆத்திட்டு இருக்காங்க பெரியம்மா. என்கிட்ட பாப்பாவை குடுங்க. நான் பார்த்துக்கிறேன்…” என்று வந்தாள் பிரகதி.

“இந்தா… உன் கையிலாவது அழாமல் இருக்காளா பார்ப்போம்…” குழந்தையைப் பிரகதியிடம் கொடுத்தார்.

“என் செல்லம்ல… என் கண்ணுல… என் பட்டுல… என் புஜ்ஜு குட்டில… அழாமல் இருப்பீங்களாம். அத்தை உங்களுக்கு லாலிபாப் வாங்கித் தருவேணாம்…” குழந்தையைக் கொஞ்சி சமாதானம் செய்ய முயன்றாள் பிரகதி.

“ஆமா, அவளுக்கு லாலிபாப் வாங்கிக் கொடுக்குற வயசு பாரு. நீ கொடுத்ததும் வாங்கிச் சப்சப்ன்னு சப்பு கொட்டி சாப்பிட…” நக்கலாகச் சொல்லிக்கொண்டே அங்கே வந்தான், பிரகதியின் தம்பி பிரவீன்.

“டேய், பேசாமல் இருடா. குழந்தையோட அழுகையை நிறுத்தத்தானே சொல்லிக்கிட்டு இருக்கேன். அதுல வந்து லாஜிக் பார்த்துட்டு இருக்கான். போடா அங்கிட்டு…” என்று தம்பியை விரட்டினாள்.

“எங்க போக? பாப்பா அழற சத்தத்தில் என்னால் படிக்க முடியலை. இப்படி அழறாளேன்னு மனசுக்குக் கஷ்டமா இருக்கு. கொடு, நான் வேடிக்கை காட்டுறேன்…” என்று குழந்தையைத் தான் வாங்க கை நீட்டினான் பிரவீன்.

“அவள் பசியில் அழறாள். இப்ப நீ வேடிக்கை காட்டினால் அவள் பார்த்துடுவாளா? இப்ப மட்டும் நீ லாஜிக்காவாடா பேசுற?” என்று தம்பியை முறைத்தாள்.

“ஏய் லூசு, இந்தச் சித்தப்பா தூக்கினால் என் பட்டுக்குட்டி அழுவதை நிறுத்தி விடுவாள். நீ கொடு முதலில்…” அக்காவின் கையிலிருந்து குழந்தையை வாங்கினான்.

“சண்டை போடாம குழந்தையைப் பார்த்துக்கோங்க. நான் போய்ச் சரளா பால் ரெடி பண்ணிட்டாளான்னு பார்த்துட்டு வர்றேன்…” அங்கிருந்து சென்றார் கவிதா.

பிரவீனின் கைகளுக்கு மாறியதும், குழந்தை இன்னும் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள். அதில் தம்பியைக் கேலியாகப் பார்த்து சிரித்தாள் பிரகதி.

“அழாதீங்க பட்டிக்குட்டி. இங்க பாரு, உங்க அத்தை நம்மைப் பார்த்து சிரிக்கிறாள். வா, நாம வெளியே போவோம்…” என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாசலுக்குச் சென்றான்.

பிரகதியும் பின்னால் சென்றாள்.

இருவரும் மாறி மாறி சமாதானம் செய்தும், அந்த ஐந்து மாத குழந்தை தன் அழுகையை நிறுத்தவில்லை.

“ஏய், இரண்டு பேரும் உங்க கரடி மூஞ்சியைக் காட்டி ஏன் என் செல்லத்தை அழ வச்சிட்டு இருக்கீங்க?” என்று கேட்டபடி எதிர் வீட்டிலிருந்து வந்தவளை, உக்கிரமாய்ப் பார்த்தனர் உடன்பிறப்புகள்.

“ஓய், என்ன கொழுப்பா? நாங்க கரடி மூஞ்சியா? நீதான் பாண்டா கரடி மூஞ்சி. மூஞ்சை பாரு. வெள்ளை அடிச்சது போல வெளுத்துப் போய் இருந்துகிட்டு, எங்களைச் சொல்ல வந்துட்டியா?” சிலிர்த்துக் கொண்டு சண்டைக்குத் தயாரானாள் பிரகதி.

“என்ன, நான் பாண்டா கரடியா?” பதிலுக்குச் சிலிர்த்துக் கொண்டு சண்டைக்குத் தயாரானவளை அடக்கியது, இன்னும் ஓங்கி ஒலித்த குழந்தையின் அழுகை.

“உங்க இரண்டு பேரையும் அப்புறம் பார்த்துக்கிறேன்…” என்றவள், குழந்தையை வாங்கித் தன் தோளில் போட்டு, தட்டிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

“வேண்டாம்டா செல்லம், அழாதீங்க. இதோ அந்தக் கரடிங்ககிட்ட இருந்து சித்தி தூக்கிட்டேன்…” என்றவளை உடன்பிறப்புகள் முறைத்தனர்.

அவர்களைக் கண்டுகொள்ளாமல் குழந்தையைச் சமாதானம் செய்வதில் முனைந்தாள் யதுநந்தினி.

அவளிடம் போனதும் சிறிது சிறிதாகத் தன் அழுகையைக் குறைத்தாள் குழந்தை.

அக்கா, தம்பி இருவருக்குமே வியப்பு!

குழந்தை அந்த வீட்டிற்கு வந்த நாள் முதலாக, அது என்னவோ யதுநந்தினி தூக்கினால், குழந்தை அவளுடன் ஒட்டிக் கொண்டு அழுகையை நிறுத்திவிடும்.

“பாப்பாவுக்குச் சொக்குப்பொடி எதுவும் போட்டியா என்ன? உன்கிட்ட மட்டும் எப்படி அழாமல் இருக்காள்?” என்று கேட்டாள் பிரகதி.

“அதுக்கு எல்லாம் என்னைப் போல வெள்ளை மூஞ்சியாக இருக்கணும். உங்களைப் போலக் கரடி குட்டிகளாக இருந்தால் அப்படித்தான்…” என்று நக்கல் அடித்தாள் யதுநந்தினி.

“குழந்தை உன்கிட்ட மட்டும் அழாம இருக்கிறாள்னு ரொம்ப அலட்டிக்காதே! எங்ககிட்ட மட்டும் அவள் அழாமல் இருக்கும் காலம் வரும். அப்போ உன்னைப் பார்த்துக்கிறேன். என்னடா தம்பி?” என்று தம்பியையும் தன் துணைக்கு அழைத்துக் கொண்டாள் பிரகதி.

“ஆமா அக்கா. ரொம்பத்தான் பண்றாங்க இவங்க…” என்றான் பிரவீன்,

“ஓஹோ! அக்காவும், தம்பியும் கூட்டா? எத்தனை பேர் வந்தாலும் நான் ஒன்னும் அசர மாட்டேன். பார்ப்போம்… பார்ப்போம்… அந்த நேரம் வரும் போது பார்ப்போம்…” என்று அலட்டிக் கொண்டாள் யதுநந்தினி.

“ஓய், என்ன?” என்று பிரகதி இன்னும் சிலிர்த்துக் கொள்ள,

“வீட்டுக்கு வெளியே வச்சு எதுக்குச் சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க? பாப்பா அழறதை நிறுத்திட்டாளா? நல்லதா போச்சு…” என்றபடி கையில் பால் டப்பாவுடன் வந்தார் சரளா.

“நான் தூக்கவும் அழுகையை நிறுத்திவிட்டாள் அத்தை…” யதுநந்தினி சொல்ல,

“பால் ஆற்ற இவ்வளவு நேரமா அம்மா?” என்று கேட்டாள் பிரகதி.

“நான் முதலில் ஆற்றிய பால் பதற்றத்தில் கை தவறிக் கொட்டிருச்சு. அதுதான் திரும்ப ஆற்ற நேரமாகிருச்சு…” என மகளிடம் சொன்னவர், “குழந்தையைக் கொடு நந்தினி. நான் பாலை கொடுக்கிறேன்…” என்றார்.

“நானே கொடுக்கிறேன் அத்தை. கை மாறினால் திரும்ப அழப் போறாள்…” என்ற யதுநந்தினி வீட்டிற்குள் வந்து, சோஃபாவில் அமர்ந்து, குழந்தையை மடியில் இருத்தி, பால் பாட்டிலை வாங்கிக் குழந்தைக்குப் புகட்ட ஆரம்பித்தாள்.

“சரி, நான் போய்ச் செமஸ்டர் எக்ஸாமுக்கு படிக்கிறேன்…” என்று பிரவீன் அவன் அறைக்குச் சென்று விட, பிரகதி யதுநந்தினியின் அருகில் அமர்ந்தாள்.

“தாய்ப்பால் குடிக்க வேண்டிய வயதில், பிள்ளை பால் பாட்டிலில் குடிக்குது. இந்த அநியாயத்தை எங்கே போய்ச் சொல்ல?” என்று புலம்பினார் சரளா.

அவர் அப்படிச் சொன்னதும் யதுநந்தினி, பிரகதியின் முகங்கள் அவ்வளவு நேரமிருந்த கலகலப்பு மறைந்து இருளடைந்தது போல் ஆனது.

பசியில் அவசர அவசரமாகப் பாலை சப்பிக் கொண்டிருந்த குழந்தையின் முகத்தைப் பரிவுடன் பார்த்தாள் யதுநந்தினி.

அருகில் அமர்ந்திருந்த பிரகதி குழந்தையின் தலையை வாஞ்சையுடன் வருடிவிட்டாள்.

சரளா கலங்கியிருந்த கண்களை லேசாகத் துடைத்துக் கொண்டார்.

“அத்தான் இன்னும் கம்பெனியிலிருந்து வரலையா அத்தை?” என்று பேச்சை மாற்றினாள் யதுநந்தினி.

“ரொம்ப நாளைக்குப் பிறகு இன்னைக்குத்தானே கம்பெனிக்குப் போனான். வேலை நிறைய இருக்கும் போல, இன்னும் வரலை…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வீட்டின் தொலைபேசி அழைத்தது.

எடுத்துப் பேசினார் சரளா.

“ஹலோ, நான்தான் சொல்லுங்க…”

“விஷ்வா வீட்டுக்கு வந்தானா சரளா?” என்று கேட்டார் சரளாவின் கணவர் கலையரசன்.

“விஷ்வாவா? இல்லையேங்க… கம்பெனிக்குத்தானே வந்தான். அங்கே இல்லையா?”

“இங்கேதான் இருந்தான். ஆனால், இங்கே கொஞ்சம் பிரச்சினை ஆகிடுச்சு. அதில் சண்டை போட்டு கோபமா வெளியே போயிட்டான்…”

“என்னங்க சொல்றீங்க? சண்டையா? ஏன், என்னாச்சு?” பதற்றமாகக் கேட்டார்.

அவரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த இரு பெண்களின் முகங்களும் பதற்றத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

“சண்டையா? என்ன சண்டை? யார் கூட?” அப்போதுதான் சமையலறையிலிருந்து வந்த கவிதாவும் பதற்றத்துடன் கேட்டார்.

“இருங்க அக்கா, அவர்கிட்ட விசாரிச்சு சொல்றேன்…” என்ற சரளா, கணவரிடம் விசாரித்தார்.

“அவன் வொய்ப் பற்றி இரண்டு பேர் தப்பா பேசியிருப்பாங்க போல. அதில் கோபமாகி அவங்களை அடி வெளுத்துட்டு வெளியே கிளம்பி போயிட்டான். அவன் போய் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிருச்சு.

“இங்கே அவன் அடிச்சதுல லேபர்ஸ் எல்லாம் பிரச்சினை பண்ணிட்டு இருக்காங்க. நானும் விஷ்வாவுக்குப் போன் போட்டுப் பார்க்கிறேன். ஆனால், எடுக்க மாட்டேங்கிறான். அதுதான் வீட்டுக்கு வந்துட்டானான்னு கேட்டேன். அவன் வீட்டுக்கு வந்தால் உடனே கம்பெனிக்கு வர சொல்லு…” என்றார் கலையரசன்.

“என்னங்க சொல்றீங்க? பெரிய பிரச்சினை ஆகிடுச்சா?”

“ம்ம், ஆமா. என்னால் சமாளிக்க முடியலை. அத்தான்தான் லேபர்ஸ்கிட்ட பேசி சமாதானம் பண்ண முயற்சி செய்துட்டு இருக்கார். எனக்குப் பேச நேரமில்லை. விஷ்வா வந்தால் சொல்லு…” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் கலையரசன்.

“என்னாச்சு சரளா, என்ன பிரச்சினை?” என்று கேட்ட கவிதாவிடம், கணவர் சொன்னதைச் சொன்னார்.

“ஐயோ! என் பிள்ளைக்கு எத்தனை பிரச்சினைதான் வரும்? இப்போ விஷ்வா எங்கே போனானாம்?” என்று கவலையுடன் கேட்டார்.

“அதுதான் தெரியலை அக்கா. ரொம்பக் கோபமா போனானாம். போனை எடுக்க மாட்டிங்கிறான்னு சொல்றார்…” என்று சரளா சொன்னதும், தொலைபேசியை வேகமாக எடுத்து மகனுக்கு அழைக்க ஆரம்பித்தார் கவிதா.

அவரின் அழைப்பையும் ஏற்கவில்லை மகன்.

“எங்கே போனான்னு தெரியலையே. போனையும் எடுக்க மாட்டிங்கிறானே…” புலம்பினார் கவிதா.

“அமைதியா இருங்க பெரியம்மா. நான் அண்ணனுக்குப் போன் பண்ணி பார்க்கிறேன்…” என்ற பிரகதி, தான் அழைக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கும் அதே பதில்தான் கிடைத்தது.

பேச்சுச் சப்தம் கேட்டு நாளைய பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த பிரவீனும் கீழே இறங்கி வந்து, அவனும் அண்ணனுக்கு அழைத்துப் பார்த்தான்.

யாரின் அழைப்புமே ஏற்கப்படவில்லை.

அனைவரிடமும் பதற்றமும், பயமும் தொற்றிக் கொண்டது.

புலம்பி அழுத கவிதாவை சரளா சமாதானம் செய்ய, பிரகதியும், பிரவீனும் மாறி மாறி அண்ணனுக்கு அழைத்து ஓய்ந்து கொண்டிருந்தனர்.

பாலை குடித்ததும் வயிறு நிரம்பியதால் உறங்க ஆரம்பித்திருந்த குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கவலையுடன் அமர்ந்திருந்தாள் யதுநந்தினி.

அப்போது அவளின் அன்னை கற்பகமும் எதிர் வீட்டிலிருந்து வந்து விட, விவரம் அறிந்து அவரின் அண்ணி கவிதாவை தேற்ற முயன்று கொண்டிருந்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டு தொலைபேசி அழைக்க, அனைவரும் பரபரப்பாகப் பார்த்தனர்.

பிரவீன் சென்று தொலைபேசியை எடுத்துப் பேசினான். அடுத்த நிமிடம் அவன் முகம் இருளடைந்தது.

“எப்போ? எந்த ஹாஸ்பிட்டல்?” என்று கேட்டான்.

ஹாஸ்பிட்டல் என்றதும், அங்கிருந்த பெண்களின் முகங்கள் பயத்தில் வெளுத்துப் போயின.

“இதோ… இதோ… இப்ப வர்றோம்…” என்று அவன் தொலைபேசியை வைத்த அடுத்த நிமிடம் ஐந்து பெண்களும் அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்.

“போனில் யார் பிரவீன்? என்ன ஹாஸ்பிட்டல்னு சொல்லிட்டு இருந்த?” கவிதா வேகமாக விசாரித்தார்.

“அண்ணாவுக்கு ஆக்சிடென்ட்டாம் பெரியம்மா. ஹாஸ்பிட்டல் அழைச்சுட்டு போயிருக்காங்களாம்…” என்று சொன்னதும்,

“ஐயோ! விஷ்வா…” என்று ஓங்கி குரல் கொடுத்து அழ ஆரம்பித்தார்.

அவரின் சத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அரண்டு எழுந்து அழ ஆரம்பித்தாள்.

“ஒன்னுமில்லடா, ஒன்னுமில்லடா…” குழந்தையை அமைதி படுத்த முயன்றாள் யதுநந்தினி.

“நாம ஹாஸ்பிட்டல் கிளம்பலாம் பெரியம்மா. வாங்க…” என்றழைத்தான் பிரவீன்.

“நீங்க இரண்டு பேரும் வீட்டில் இருங்க. பிரகதி, நீ அப்பாவுக்கும், மாமாவுக்கும் சொல்லி ஹாஸ்பிட்டல் வர சொல்லு…” என்றார் சரளா.

“குழந்தையைப் பார்த்துக்கோமா…” என்று யதுநந்தினியிடம் சொன்ன கவிதா, “வாங்க போவோம்…” என்று பிரவீனுடன் மூன்று மூத்த பெண்களும் கிளம்பினார்கள்.

“என்ன யது இப்படி ஆகிடுச்சு. அண்ணா பாவம்! ஏற்கெனவே ரொம்பக் கஷ்டப்பட்டுட்டார். இப்ப இப்படி…” என்று புலம்பினாள் பிரகதி.

“கவலைப்படாதே பிரகதி. அத்தானுக்குப் பெருசா எதுவும் இருக்காது. சரியா போயிடும். நீ அப்பாவுக்கும், மாமாவுக்கும் போன் போட்டு சொல்லு…” என்றாள் யதுநந்தினி.

உடனே தன் தந்தைக்கு அழைத்து விவரத்தை சொல்ல, அவரும் பதற்றத்துடன் மருத்துவமனை செல்வதாகச் சொன்னார்.

“அப்பாகிட்ட சொல்லிட்டேன் யது. மாமாகிட்ட அப்பாவே சொல்லிக்கிறாராம்…” என்றாள்.

“சரி வா, குட்டியைத் தூங்க வைப்போம்…” என்ற யதுநந்தினி, அழுது கொண்டிருந்த குழந்தையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

நந்தகோபால், கற்பகம், கலையரசன் மூவரும் உடன்பிறப்புகள். நந்தகோபால்தான் மூத்தவர். அவரின் மனைவிதான் கவிதா. நந்தகோபால், கவிதா தம்பதியருக்கு ஒரு மகன் மட்டுமே. 

அடுத்ததாகக் கற்பகம், சோமசுந்தரம் தம்பதிக்கு யதுநந்தினி என்ற ஒரே மகள் மட்டுமே. கல்லூரியில் இறுதியாண்டுப் படித்துக் கொண்டிருந்தாள்.

தன் நண்பனான சோமசுந்தரத்திற்கே தனது தங்கை கற்பகத்தைத் திருமணம் முடித்துக் கொடுத்து, எதிர்வீட்டில் குடி வைத்தார் நந்தகோபால். 

இளையவர் கலையரசன், சரளா தம்பதியருக்கு பிரகதி, பிரவீன் என்ற இரண்டு பிள்ளைகள். இருவரும் கல்லூரி படிப்பில் இருந்தனர். 

நந்தகோபால் இறைவனடி சேர்ந்திருக்க, அவர் இருந்த போது வாழ்ந்த கூட்டுக் குடும்பத்தை அவரின் மனைவி கவிதா கட்டிக்காத்தார்.

கவிதா, சரளா, கற்பகம், பிரவீன் நால்வரும் மருத்துவமனை சென்ற போது அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான் விஷ்வா.

உள்ளே சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாகச் சொல்ல, மருத்துவர் வெளியே வர காத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் மருத்துவர் வெளியே வர, “டாக்டர், அண்ணனுக்கு எப்படி இருக்கு?” விசாரித்தான் பிரவீன்.

“காலில் பிராக்ஸர் ஆகியிருக்கு. தலையில் லேசா அடி. கையிலும் சின்ன அடிபட்டிருக்கு. ட்ரீட்மெண்ட் பார்த்திருக்கோம். ஆனால், காலுக்கு ஆப்ரேஷன் பண்ணி ஆகணும். பேஷண்டோட நெருங்கிய சொந்தக்காரங்க சைன் பண்ணிட்டா ஆப்ரேஷன் ஆரம்பிச்சிடலாம்…” என்றார் மருத்துவர். 

கவிதா கையெழுத்துப் போட்டு கொடுக்க, உடனே அறுவைசிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. 

சிகிச்சை முடித்து வெளியே வந்த மருத்துவரிடம் விவரம் கேட்க, “ஆப்ரேஷன் முடிந்தது. பயப்படும்படி ஒன்னுமில்லை…” என்றார்.

“நாங்க பார்க்கலாமா டாக்டர்?” கவிதா கேட்க,

“இல்லை, இப்ப பார்க்க முடியாது. தலையில் அடிபட்டதால் ஒரு ஸ்கேன் பார்க்க வேண்டியது இருக்கு. அது முடிந்ததும் ஒன்னும் பிரச்சினை இல்லனா, காலையில் ரூமுக்கு மாத்திருவோம். அப்போ பாருங்க…” என்று சொல்லி விட்டு சென்றார்.

பதற்றமாக அங்கே வந்த கலையரசனுக்கும் விவரம் சொல்ல பட, அவரும் கவலையாக நின்றார்.

“கம்பெனி பிரச்சினை என்ன ஆச்சுங்க?” என்று விசாரித்தார் சரளா.

“அத்தான் பேசிட்டு இருக்கார். ஆனால், லேபர்ஸ் விஷ்வா வந்து மன்னிப்பு கேட்கணும்னு பிடிவாதமா பிரச்சினை பண்ணிட்டு இருக்காங்க. அத்தான்கிட்ட விஷ்வாவுக்கு ஆக்சிடெண்ட் ஆனதை சொல்லிட்டு வந்திருக்கேன். அதைச் சொல்லி அவங்களைச் சமாளிச்சுட்டு வர்றேன்னு சொல்லிருக்கார்…” என்றார்.

“அடுத்தடுத்து பிரச்சினையா இருக்கு. ஏன்தான் இப்படி நடக்குதோ?” என்றார் சரளா.

“எல்லாம் அந்தப் பெண்ணால்தான். நல்லா இருந்த குடும்பத்தில் குழப்பம் பண்ணி விட்டுப் போயிட்டாள்…” என்றார் கற்பகம்.

“ஆமாம், எல்லாம் அவளால்தான். இப்ப விஷ்வா இப்படிக் கிடக்கவும் அவள்தான் காரணம். என் பையனை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டுட்டாளே…” என்று கதறி அழுதார் கவிதா.

இங்கே ஆளாளுக்குப் புலம்பிக் கொண்டிருக்க, உள்ளே எந்தப் பிரக்ஞையும் இன்றி மயக்கத்தின் வசமாகியிருந்தான் விஷ்வா என்ற விஷ்வமித்ரன்.