அவ(ன்)ள்

அவ(ன்)ள் 1

 

வானம் நீல நிறத்தை விடுத்து மையிருட்டை பூசிய கருப்பு நிற ஆடையை அணிந்திருக்கும் இரவு வேளை, அவளைச் சுற்றி மின்மினிப் பூச்சிக்கள் பறப்பது போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரு விளக்குகள் எரிந்துக் கொண்டு, தூரத்தில் நடந்து வருபவளை தைரியப் படுத்தியிருந்தது.  இருள் படர்ந்த அந்த நட்ட நடு இரவில் பத்து முறைக்கும் மேல் விஷ்ணுவை அழைத்து விட்டாள் , 

லைன் கிடைக்கவே இல்லை… மழை வேறு சிறிதும் விடாது  அடித்து பெய்து கொண்டிருந்தது. அந்த மழையிலும் பதட்டத்தின் காரணமாய் அவள் முகத்தில் துளிர்த்த வியர்வையை துடைக்கக்கூட  தோன்றாமல் “இந்த முறையாவது போனை எடு விஷ்ணு” என்றவளது குரல் கேட்டது  போல இம்முறை உயிர்ப்பித்தது அவனது அலைபேசி

“டேய் விஷ்ணு எங்கடா போன…? லைனே கிடைக்கலை… இன்னும் எனக்கு டிக்கட் கன்பார்ம் ஆகலைடா அதனால பஸ்ல தான் வறேன்” என்றாள் படபடக்கும் மனதுடன்

“இந்த நைட் வேலையில நீ ஏன் வர கா… நான் பாத்துக்குறேன் நீ நாளைக்கு காலையிலயே வண்டில வா இப்போ நீ வர்றது அவ்வளவு சேப் இல்ல கா என்றான் விஷ்ணு”  சிறிது பயத்துடன்.

தம்பியின் பயம் அறிந்தவள் “நான் பாத்துக்குறேன் டா…  பஸ்ல நிறைய பேர் இருப்பாங்க தைரியமாதான் வறேன்… எனக்கு அம்மாவை பாக்கனும் போல இருக்கு… இப்போ எப்படி இருங்காங்க விஷ்ணு?” என்றவளது குரல் கலங்கியிருந்தது.

“எந்த முன்னேற்றமும் இல்லைன்னு சொல்றாங்க… இன்னும் ட்ரீட்மெண்ட் கொடுத்துக்கிட்டு தான் இருக்காங்க” என்றான்  தாயின் நிலையை மறைக்காது 

“அப்பா என்னடா பண்றார்?” என்று தயக்கத்துடன் வினவினாள்.

“அவரை பார்க்கத்தான் பயமா இருக்கு கா… வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்றார் எங்கேயோ வெறிச்சி பாத்துட்டு உட்கார்ந்து இருக்கார்” என்றான் வருத்தத்துடன்.

தாய் தந்தையரின் நிலையை தம்பியிடம் இருந்து அறிந்து கொண்டவளுக்கு மனது கனத்து போனது. எப்படி வாழ்ந்த குடும்பம் யாருடைய கண் பட்டதோ இப்போது யாருக்கும் நிம்மதியில்லாமல் ஒரு வாழ்க்கையை வாழ்கிறோமே என்று வாடிய மலரை போல சோர்ந்து தாயின் கவலையில் இருந்தாள் பிருந்தா.

சென்னையில் ஒரு பெரிய தனியார் நிருவனத்தில்  பணிபுரிகிறாள்.

சொந்த ஊர் திருச்சி  இவளுக்கு ஒரு தம்பி பெயர் விஷ்ணு பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவன் தாய் திடீரென நெஞ்சு வலி என்று கூற மருத்துவமனையில் சேர்த்தவன் செய்வதறியாது அக்காவிற்கு அழைத்து விஷயத்தை கூறி இருந்தான்.  அவளும் சொன்ன அரைமணி நேரத்தில் கிளம்பி விட்டவள், டிக்கெட் பிரச்சனையில் ரயிலை விடுத்து பஸ்ஸில் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தாள்.

மழை விட்டதன் அறிகுறியை அங்காங்கே சொட்டிய நீர்துளிகளும் தேங்கி இருந்த தண்ணீர் குட்டைகளும்  கூறியது… ஒரே ஒரு கைபையுடன் திருச்சி நோக்கி செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள்.

இன்னும் கால் மணி நேரத்தில் பஸ் எடுக்கப்பட்டுவிடும் மனம் படபடவென அடித்துக்கொண்டது. ஒரு பாட்டில் தண்ணீரை வாங்கி வைத்துக் கொண்டவளின் மனதில் தாய்க்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று விடாது பிராத்தனை மட்டும் ஓடிக் கொண்டிருந்தது..  

பேருந்தும் புறப்பட்டு விட அரை மணி நேரத்திற்கு ஒரு முறை விஷ்ணுவிடம் விசாரித்துக் கொண்டே இருந்தாள் பிருந்தா. ஜன்னலின் புறம் பார்வையை பதித்தவளுக்கு தாயின் நிலையை எண்ணி வருத்தமாகவும் ஒரு பக்கம் கவலையாகவும் இருந்தது.

 பாவம் ஒற்றையாளாய் விஷ்ணு என்ன செய்கிறானோ என்று தவித்தாள். முழுதாய் முன்று மணி நேரம் கடந்திருந்தது. இருநாட்களாக  அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக கண்கள் ஓய்வில்லாது  உழைத்திருக்க அசதியில் சற்று நேரத்தில் விழிகள் தானாய் முடிக் கொண்டது.

ஆழ்ந்த உறக்கத்தில் சென்றிருந்தவளுக்கு சட்டென பேருந்து நின்றதில் முழிப்பு வந்துவிட விஷ்ணுவிடமிருந்து போன் வந்ததா என்று அவசரமாக போனை எடுத்து ஆராய்ந்தாள். 

“மேடம்” என்ற நடத்துனரின் அழைப்பில் தலையை உயர்த்தியவளது கண்கள் தனக்கு எதிரில் நின்றவனை கேள்வியாக நோக்கியது..

“மேடம்” என்று மீண்டும் நடத்துனரின்  அழைப்பில் என்ன என்பதை போல அவரை பார்த்தாள் பிருந்தா..

“உளுந்தூர்பேட்டையில ஒரு டிக்கெட் இறங்கிடும் அதுவரை சார் இங்க உட்காரட்டும்” என்று கூறியதும்  பஸ்ஸை சுற்றி ஒரு முறை பார்வையை சுழலவிட்டாள் பிருந்தா.

வேறு எங்கேயும் இருக்கைகள் காலி இல்லை என்பது தெரியவும் அவர் அருகில் நின்றிருந்தவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அரைமனதுடன் தலை அசைத்துவிட்டு   முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவளுடைய சங்கட பார்வையை அறிந்த நடத்துனரும் “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கமா வேற சீட் காலியானதும் அங்க போயிடுவாரு” என்று பிருந்தாவிடம் கூறியவர்

“சார் நீங்க உட்காருங்க அதோ அந்த டிக்கெட் உளுந்துர்பேட்டையில் இறங்கிட்டதும் நீங்க அங்க மாத்திக்கோங்க” என்று அவனையும் விட்டுவிட்டு சென்றார். 

அவள் பார்வையிலும்  செய்கையிலும் சற்று சங்கடமாக உணர்ந்தவன் அங்கே உட்காருவதா  வேண்டாமா என்ற எண்ணத்தில் அவள்  முன் நின்றிருந்தான் கிருஷ்ணா…  சராசரி உயரம் கோதுமை நிறம் அடர்ந்த கேசம்… முழுவதும் மழிக்கப்படாத தாடியுடன்…. மலையாள நடிகர் பிரித்விராஜின் சாயலில் இருந்தான்.

நண்பனின் கல்யாணத்திற்கு சென்றிருந்தவன் ஒரு அவசர அழைப்பின் காரணமாக ஊருக்கு திரும்பும் வழியில் கார் பிரேக் டவுன் ஆகவும் அந்த சாலை வழியாக வந்த பேருந்தில் ஏறி இருந்தவனுக்கு அவள் பக்கத்தில் அமர்வதை தவிர வேறு மாற்று வழி இல்லாமல் போனது.

எவ்வளவு நேரம் நின்றுக் கொண்டே பயணிப்பது என்ற எண்ணம் தோன்ற அரைமனதுடனே தனது பயணப்பையை எடுத்து சீட்டின் மேல் புறம் வைக்கும் சமயம் பேக் சரிந்து அவள் தலையில் இடித்து அந்த பேகின் ஜிப் அவளுடைய முடியிலும் சிக்கிக் கொண்டது.

பிருந்தாவின் முடியில் சிக்கிய பேகின் ஜிப்பை எடுக்க முடியாமல் எடுத்தவன் “சாரி மிஸ்… தெரியாம பட்டுடுச்சி” என்றான் சற்று சங்கடமான பார்வையில். 

இந்த இரவு வேலையில் அவன் அருகில் அமர்வதையே விரும்பாதவளுக்கு அவன் செய்கை எரிச்சலையும் வலியையும் தர “பரவாயில்லை மிஸ்டர்…  அடுத்தவங்களை டிஸ்டர்ப் பண்ணாம டீசன்டா உட்காருங்க” என்று கடுப்பாக பேசியவள்  சற்று நகர்ந்து அமர்ந்துக்கொண்டாள்.

கட்டியவனையே நம்ப முடியாமல் இருக்கும் இந்த நிலையில் தெரியாத ஒருவனை நம்பி இந்த இராத்திரி வேளையில் அவனுடன் எப்படி பயணிப்பது ஏதாவது சில்மிஷம் செய்தால் என்ன செய்வது என்று பல்வேறு யோசனையில் இருந்தவள் சேப்டி பின்னை எடுத்து கையில் தயாராக வைத்துக்கொண்டாள்..

அவன் அருகில் அமர்ந்தவுடன் இன்னும் ஜன்னலை ஒட்டினார் போல் தன்னை உடலை குறுக்கிக் கொண்டவளை பார்த்து தோள்களை குலுக்கியவன் காதில் இயர் போனுடன் ஐக்கியமாகி விட்டான். ஜன்னலில் தெரிந்த இருட்டை வெறித்திருந்த பிருந்தாவை  விஷ்ணுவின் அலைபேசி அழைப்பு கலைத்தது.

அவசரமாக அதை ஏற்று காதில் வைத்தவள் “சொல்லு விஷ்ணு” என்றாள் அங்கு என்னவோ ஏதோ என்ற பதட்டத்தில்.

“ஒன்னுமில்லை கா… பதட்டப்படாத நீ சாப்பிட்டியா அதுக்குதான் கால் பண்ணேன்” என்றான் அக்கறையாக

“இ… இல்ல விஷ்ணு பிஸ்கட் இருக்கு நான் பாத்துக்குறேன். நீ  சாப்பிட்டியா?” 

“ம் என்றவன் “இப்போ எங்க கா இருக்க?” 

“தெரியலடா வண்டி போயிட்டு இருக்கு… தெரிஞ்சதும் சொல்றேன்” என்றவள் போனை அமர்த்தி விட்டு ஜன்னலின் புறம் சாய்வாக அமர்ந்தாள். 

அவளுடைய பதட்டத்தையும் செய்கையையும் கவனித்த கிருஷ்ணா  பாடலை  ரசித்தபடி பிருந்தாவை தொந்தரவு செய்யாமல் கண்களை மூடி அமர்ந்து கொண்டான். 

அவள் நினைத்தது போல இல்லாமல் இரண்டு மணி நேரம் எந்த இடையூறுமின்றி போயிருக்க அசதியில் தலைசாய்த்து விழி முடியிருந்தவளை “எம்மா… ஊளுந்தூர்பேட்டை ஸ்டாபிங் மா…ஏமா… என்ன தூங்கிட்டியா?” என்ற நடத்துனரின் குரலில், கண்களை திறந்தாள் பிருந்தா. “

“சார் அந்த சீட் காலியாகிடுச்சி… நீங்க அங்க உட்கார்ந்துக்கங்க” என்று  நடந்துனர் காட்டிய இருக்கையில் கிருஷ்ணா அமர்ந்துக்கொண்டான்.

அதுவரை ஏதோ நெருப்பின் மீது நிற்பதை போன்று இருந்தவளுக்கு, கிருஷ்ணா அங்கிருந்து விலகியதும் ஆஸ்வசமாக உணர்ந்தவள்  போனை பார்க்க மணி நான்கை காட்டியது. ஒரு நடுத்தர வயது பெண்மணி அப்போது அவள் பக்கத்தில் அமரவும் எப்போதும் போல் ஜன்னலின் புறம் பார்வையை திருப்பிக்கொண்டவள் இருளை வெறிக்க… தாயின் நினைவில் விழிகள் லேசாக கலங்கியது..

அந்த பெண்மணி உட்கார்ந்த பத்து நிமிடங்களில் கழுத்தில் எதோ ஊர்வதை போல இருக்க கைகளால் அங்கு தட்டிவிட்டவள் முந்தானையை எடுத்து முழுவதுமாக போர்த்திக் கொண்டாள்.

“ஏம்மா நான்தான் கழுத்துல ஏதோ இருந்தது அதான் என்னன்னு பார்த்தேன்”  என்றிட அந்த பெண்மணியை  முறைத்தவள் “என்ன இருந்தா உங்களுக்கு என்னங்க?” என்றாள் கோவமாக

“இல்ல பூச்சா இருக்கப்போகுதுன்னு பார்த்தேன்… எதாவது பிரச்சனையாமா முகமெல்லாம் அழுதது போல இருக்கு” என்று அந்த பெண்மணி துருவி துருவி கேள்வி மேல் கேள்வி கேட்க எரிச்சலாய் இருந்தது அவளுக்கு. தாயின் வேதனையில் இருப்பவளை கோபமாக்கி கொண்டிருந்தார் அந்த பெண்மணி.

“இல்ல கண்ணுல தூசி விழுந்துடுச்சி” என்றவள் மறுபடி கண்களை மூடி  கொள்ள 

அந்த பெண்மணியும் விடாது “நான் எதுக்கு கேட்டேன்னா இந்த காலத்து பொண்ணுங்க வீட்டுல ஒன்னு சொல்லக் கூடாது, உடனே பொட்டிய தூக்கிட்டு வந்துடுவாங்க அதான் ஒரு பாதுகாப்புக்கு கேட்டேன்… நீ வேற வயசு பொண்ணா இருக்க… என்றதும் கடுப்பானவளுக்கு 

‘இவ்வளவு நேரம் ஒரு ஆண் என் பக்கத்துல உட்கார்ந்து இருந்தான் எந்த தொந்தரவும் இல்லை…  ஆனா பொண்ணா இருந்துகிட்டு  இப்படி நச்சரிக்கிறியே’ என்று அந்த பெண்மணியை நினைத்து உள்ளுக்குள் எரிச்சல் பரவியது.

“என்னை பத்தி நீங்க கவலைப்படாதிங்க மேடம்” என்று பல்லிடுக்கில் பேசியவளை தூரத்தில் இருந்து கவனித்தான் கிருஷ்ணா…

அதே நேரம் அவள் பார்வையும் அவன் புறம் சென்றது. தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல் என்பது போல அவனை பார்த்தாள்.

 இரண்டு மூன்று முறை அந்த பெண்மணி மீண்டும் மீண்டும் அவளிடம்  பேச்சு கொடுப்பதை கவனித்தவனுக்கு அவள் பார்வை ‘ப்ளீஸ் தயவு செய்து இந்த பொம்பளைய இங்கிருந்து துரத்தேன்’ என்பது போல் தோன்றியது.

சட்டென தன் இருக்கையை விட்டு எழுந்து அவர்கள் அருகில் வந்தவன் “ஹாய் ஆண்டி இவங்க எனக்கு  தெரிஞ்சவங்க… நீங்க என் சீட்டில் உட்கார்த்துக்குறிங்களா? நான் அவங்களோட இங்க உட்கார்ந்துக்குறேன்…”  என்று கூறியதும்  

அந்த பெண்மணியோ “ஹோ உனக்கு தெரிஞ்ச பொண்ணாப்பா? ரொம்ப கோவம் வருதுப்பா.. பாத்து பேசு ஏதோ அழுவுதுன்னு கேட்டா பொசுக்கு பொசுக்குன்னு திட்டுது இந்த பொண்ணு” என்று அந்த  இருக்கையை விட்டு எழுந்து சென்று அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

பிருந்தாவின் அருகில் கிருஷ்ணா அமர்ந்ததும்  “ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.

“இட்ஸ் ஓகே… அங்க இருந்து பார்க்கும் போது அவங்க அன்வாண்டடா பேசிட்டு இருந்தாங்கன்னு தோணுச்சி… சோ அதான் உங்களை கேட்காமலே வந்துட்டேன்… ஆயம் சாரி… முதலிலேயே என்னை பார்த்து தயங்கினிங்க… இப்போ நான் வந்தா என்ன சொல்லுவிங்களோன்னு யோசனையா வேற இருந்துச்சி” என்றான் அவளிடம் நினைத்ததை மறைக்காமல்.

“என் விதி… எங்க போனாலும் என்னை துரத்தி வருது… உங்களால தான் பிரச்சனை வரும்னு நினைச்சேன்… ஆனா இப்படி ஒரு பிரச்சனைய நான் எதிர்ப்பாக்கல” என்று அவளும் தான்  நினைத்ததை கூறி “இப்போ ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணி  இருக்கிங்க… அவங்க கேக்குற கேள்விக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் நேரம் போயிருந்த பஸ்ஸுன்னு கூட பாக்காம கத்தி இருப்பேன்” என்றாள் எரிச்சலாக

“இப்படித்தான் நிறைய பேர் அடுத்தவங்களோட பர்சனலை தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வம் காட்டுவாங்க” என்றவன் பேச்சு முடிந்தது என்பது போல தன் இயர் போனை காதில் மாட்டிக்கொள்ள அவளும் ஜன்னலை வெறிக்க ஆரம்பித்தாள்.  

அடுத்த இருபது நிமிடத்தில் பேருந்து ஒரு சிறு உணவகத்தின்  முன் நின்றது. பேருந்தில் இருந்த நடத்துனர் “பதினைந்து நிமிஷம் பஸ் இங்க நிக்கும்… சீக்கிரம் வெளியே போய்ட்டு வர்றவங்க எல்லாம் போயிட்டு வந்துடுங்க” என்று உரக்க குரல் கொடுத்தவர் தானும் இயற்கை உபாதையை கழிக்கவும் டீ குடிக்கவும் சென்றார்.

அனைவரும் இறங்கிவிட பிருந்தா  மட்டும் இறங்காது பேருந்திலேயே இருந்தாள். அவள் அமர்ந்திருப்பதை பார்த்த கிருஷ்ணா “உங்களுக்கு டீ காபி” என்றான் கேள்வியாக

“வேண்டாம் பழக்கம் இல்லை” என்று அவள் மறுத்ததும்  சரி என்று தலையசைத்து பஸ்ஸிலிருந்து இறங்கியவன்  காபியை குடித்து கொண்டிருந்த சமயம் போனில் பேசி அழுது கொண்டிருந்த பிருந்தாவை கவனித்தான். 

அவளுக்கு ஏதோ பிரச்சனை என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் பேருந்தை இயக்கிவிட “வாங்க வாங்க” என்று குரலை கொடுத்த நடத்துனர் “எல்லாரும் வந்தாச்சா” என்று விசாரித்து விட்டு பேருந்தை அங்கிருந்து கிளப்பினார்.

“நீங்க திருச்சிதான் போறிங்களா…?”என்று கேட்டான் கிருஷ்ணா.

“ம் ஆமா…” என்றவள் இந்த கேள்வி ஏன்? என நினைத்திருந்தாள்.

“நீங்க ஏதோ பெரிய கஷ்டத்துல இருக்கிங்கன்னு மட்டும் தெரியுது…” என்றதும்  சட்டென அவனை பார்த்தாள்.

“பட் டோன்ட் வொரி அதெல்லாம் என்னன்னு கேட்டு உங்களை ஹர்ட் பண்ண மாட்டேன்… எதுவா இருந்தாலும் அது சரியாகிடும்…” என்று கிருஷ்ணா கூறியதும் தாயை நினைத்து  சற்று ஆறுதலாக உணர்ந்தாள் பிருந்தா. 

“அப்புறம்  கொஞ்ச நாளா நீங்க சரியா தூங்கலன்னு நினைக்கிறேன்” என்றான் அவளை  கணித்தவன் போல

” சொல்லாமலேயே என் நிலையை புரிஞ்சிக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்…. ஆனா  நான் தூங்கலன்னு உங்களுக்கு எப்படி தெரியும்” என்றாள் வியப்பாக.

“அதுக்குன்னு  தனியா ஆள்  வரனுமா என்ன உங்க கண்ணை சுத்தி இருக்க டார்க் சர்க்கல்ஸ்ல தெரியது… அதுவே சொல்லுது  இப்ப உங்களுக்கு ரெஸ்ட் தேவைன்னு  .. சோ நீங்க நிம்மதியா தூங்குங்க திருச்சி வந்தா நான் எழுப்புறேன்” என்றான் சகமனிதனாக

“இல்ல…சார்…   பரவாயில்லை… எனக்கு தூக்கம் வரலை…” என்று அவள் மறுக்கவும்

அதில் சன்னமாக சிரித்தவன்  “பயப்படாதிங்க மிஸ்  நான் உங்களை எதுவும் பண்ணிடமாட்டேன்… என்னை நம்பி நீங்க தாராளமா தூங்கலாம் ஊர் வந்தா எழுப்பி விடுறேன்” என்றான்.

அவனிடம் பேசியதில் ஏதோ மனதை அழுத்திய பாரம் சற்று விலகினாற் போல இருந்தது பிருந்தவிற்கு. அவன் கூறியதற்கு “சரி” என்றவள் சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். 

காலை 7.மணி “என்னங்க என்னங்க” என்று பிருந்தாவை  எழுப்பிக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. இருவருக்குள்ளும் பேச்சிகள் தொடர்ந்தாலும் அவர்களை பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வமும் அவசியமும் இருவருக்குமே ஏற்படவில்லை…

மெல்ல இமைகளை திறந்தவள் அருகில் இருந்தவனை பார்த்ததும் “சாரி சாரி ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல” என்றாள் இறைஞ்சுதலாக

“இல்லங்க ஊர் வந்துடுச்சின்னு தான் எழுப்பினேன்”. என்றவன் அவனுடைய பயணப்பையை எடுத்துக் கொண்டிருந்தான்.

“தேங்க்ஸ்” என்றவள் அவளுடைய பேகையும் எடுத்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினாள். 

“சரிங்க அப்போ நான் கிளம்புறேன்” என்றாள் பிருந்தா 

“ஓகே…  நானும் கிளம்புறேன்” என்று  கூறிய கிருஷ்ணாவும் வெவ்வேறு ஆட்டோக்களில் தங்களின்  பயணத்தை தொடர்ந்தனர்…