அவ(ன்)ள் 7

ஒரு பக்கம் செண்பகம் மணப்பெண்ணை தேடும்  தேடுதல் வேட்டையை  தீவிரமாக தொடர்ந்திருக்க, இன்னொரு பக்கம் கிருஷ்ணாவிற்கு பிருந்தாவை காணும் ஆவல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. 

“ஏங்க தரகர் இரண்டு மூனு பொண்ணுங்க போட்டோவை இன்னைக்கு எடுத்துட்டு வறேன்னு சொல்லி இருந்தாரு… அவரு வரும்போது நீங்க இருந்தா நல்லா இருக்கும்” என்று கணவருக்கு தன் எண்ணத்தை உரைத்தார் செண்பகம்.

அண்ணன் கோவித்துக் கொண்டு செல்லவும் இரண்டு மூன்று நாட்கள் சோகமாக திரிந்தவர் அதன் பிறகு நாம் இப்படி இருந்தாலும் மாறப்போவது ஏதுமில்லை என்ற நிதர்சனம் உரைக்க மடமடவென்று அடுத்தகட்ட  வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார். அதன் முதல் படலமே இந்த தரகரின் வரவு…

காலை உணவை உண்டு கொண்டிருந்த சுவாமிநாதன் “தரகர் வரும்போது இருக்க முடியுமான்னு தெரியல செண்பகம்…  அவர் கிட்ட அப்புறமா நானே பேசிக்கிறேன்… வரன்களை பத்தி மட்டும்  விவரமா கேட்டு வை” என்றார்.

செண்பகத்திற்கு மனதில் மகனை பற்றி சிறு சுணக்கம் எழுந்தாலும்  அதை மறைத்தவராய் “என்னமோ பண்ணுங்க… கல்யாணம் நல்லபடியா  நடந்தா சரிதான்” என்று முனுமுனுத்தபடி  கணவருக்கு  காபியை கலக்க அடுக்கலைக்கு சென்றார். 

சுவாமிநாதனுக்கு மனைவியின் எண்ணம் புரிந்தாலும் மகனின் விருப்பத்திற்கு தடையாய் நிற்க அவருக்கு விருப்பமில்லை… ஆக செண்பகம் நடந்துக் கொள்வதை  கண்டும் காணமலும்  இருந்தார்

……

உன் விழிகளில்

விழுந்து நான் எழுகிறேன்

எழுந்தும் ஏன் மறுபடி

விழுகிறேன் உன் பாா்வையில்

தோன்றிட அலைகிறேன் அலைந்தும்

ஏன் மறுபடி தொலைகிறேன் ஓா்

நொடியும் உன்னை நான் பிாிந்தால்

போா்களத்தை உணா்வேன் உயிாில்

என் ஆசை எல்லாம் சோ்த்து ஓா்

கடிதம் வரைகிறேன் அன்பே

என்று மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவனின் கார் சிடி பிளேயரில் ஜிவி பிராகஷின் இசையில் மெல்லிய சாரலாய் மனதை வருடியது அந்த பாடல்…

ஒவ்வொரு வாரியும் பிரேத்தியேகமாக  தனக்கே எழுதியது போன்று இருக்க…  பிருந்தாவின் கருவிழி வண்டுகளில் மீண்டும்  மீண்டும் விரும்பி தொலையவே   ஆசைக் கொண்டான் கிருஷ்ணா.

மெல்லிய பூந்தூரலாய் மண்ணோடு உறவாடிய மழைதுளிகள் இப்போது வலுத்து  பெய்துக் கொண்டிருக்க அன்று அலர்ந்த மலரைப் போன்று பஸ் நிறுத்ததில் நின்றுக் கொண்டிருந்தாள் அவன் எண்ணத்தின் நாயகி. 

அடிக்கடி வாட்சை பார்ப்பதும் பேருந்து வரும் திசையை பார்ப்பதுமாக இருந்தவள், மழையில் மாட்டிக் கொண்டதன் அறிகுறியாய் வெந்தய நிறத்தில் ஆங்காங்கே சிறுசிறு பூக்கள் பூத்திருந்தது போல இருந்த அவளது புடவை பாதி நனைந்தும் நனையாமலும் இருக்க… சிறிதாய் கலைந்து முன் நெற்றியில் உறவாடிய முடி கற்றைகள் அவளை ஓவியமாய் காட்டியது.

ஒருவேலை இது  தன் பிரம்மையோ என்று எண்ணியவனை இல்லை என்று அழைத்து நிருபித்தது அவன் அலைபேசி…  எடுத்து பார்க்க கிரி தான் அழைத்திருந்தான்.  ‘எப்படி டா சொல்லி வைச்சா மாதிரி டிஸ்டர்ப் பண்ற?’  என்று சிரித்தவன் அதை அமர்த்திவிட்டு அப்புறம் போன் பண்ணுவதாக குறுந்தகவளை அனுப்பியவன் பேருந்து நிறுத்தத்தை ஒட்டியது போல சிறுது தூரம் சென்று காரை நிறுத்தினான். 

அவளை கண்ட நொடி முதல்  கடிகார முள்ளை விட வேகமாக துடிக்கும் காதல் மனதை தட்டி அடக்கியவன்  தன் உணர்வுகளை வெளிக்காட்டாதபடி காரிலிருந்து இறங்கி அவளை நோக்கி நடந்தான்.  

காதல் அவனை படாய் படுத்தியது, அவளை பார்த்ததும் இறங்கி விட்டானே தவிர அவளிடம் எப்படி பேசுவது என்ன பேசுவது என்று யோசனையாய் இருக்க அதற்குள்  சடசடவென பெய்த மழையின் வேகம் அவனையும் நனைத்து குளிர்வித்திருந்தது.

தூரத்தில் தன்னை நோக்கி வரும் உருவத்தை கண்டதும் இவர் ஏன் இங்கு வருகிறார் என்ற எண்ணம் தான் பிருந்தாவிற்கு முதலில் தோன்றியது. 

தன் பக்கத்தில் யாரும் இல்லை எனும் போது தன்னை நோக்கித்தான்

வருகிறான் என்று புரிய, தெரிந்தவன் என்ற முறையில் சம்பிரதாயமாக உதட்டில் ஒட்ட வைத்த புன்னகையுடன் அவனை எதிர்க் கொண்டாள்.

காரிகையின் கருமணிகளில் விழுந்து எழ முடியாது இருந்தவனை பெண்ணவளின் மௌவல் புன்னகை அடியோடு வீழ்த்தியது… பேச வந்தததையும் மறந்து சிற்பமாய் நின்றவனை  “ஹலோ டாக்டர்” என்ற பிருந்தாவின் அழைப்பு நிகழ்விற்கு கொண்டு வந்தது.

அவள் அழைப்பில் தெளிந்தாலும் அவள் அறியா வண்ணம் அதை மறைத்தவன்  “ஹாய் பிருந்தா… என்ன இங்க நிக்குறிங்க?” என்றான் முகத்தை சாதரணமாக வைத்துக் கொண்டு

“இன்டர்வியூ வந்தேன் டாக்டர்… மழையில் மாட்டிக்கிட்டேன்” என்று தன் நிலையை விளக்கியவள் நீங்க “இங்க என்ன பண்றிங்க?” என்றாள் அவன் ஏன் வந்தான் என்று தெரிந்து கொள்ளும் நோக்கில்

“எனக்கும் ட்யூட்டி முடிஞ்சிடுச்சி பிருந்தா… போகும் வழியல உங்கள பாத்தேன் அதான் இறங்கி வந்தேன்… வாங்களேன் கார்ல போலாம்”.

“இல்ல டாக்டர் பரவாயில்லை நான் ஆட்டோல போய்கிறேன்… என் ட்ரெஸ் வேற நனைஞ்சிடுச்சி கார்ல எப்படி உட்கார்றது”  என்று அவனோடு செல்ல மறுத்தவள். ஆட்டோவிலாவது போகலாம் என்று நினைத்தாள்.

“இங்க பாருங்க பிருந்தா, நானும் நனைஞ்சி தான் இருக்கேன்… இதெல்லாம் ஒரு காரணமா   வாங்க போகலாம்… மழைய பார்த்த இப்போ விடுறா மாதிரி இல்லை” என்றான் வெளியே பார்த்து.

அவன் சொல்லுவதும் உண்மை தான் இப்போதைக்கு மழை விடுவது போல் இல்லை… இன்னும் வலுத்துக் கொண்டே தான் சென்றது… இதற்கு மேலும் மறுக்க முடியாது என்று தோன்ற, சரி என்ற தலை அசைப்போடு கையில் இருந்த பையிலை நெஞ்சோடு இருக்கி பிடித்து நடக்க முயன்றவளிடம் “ஒரு நிமிஷம்” என்று, மழையில் நனைந்தபடி காருக்குள் ஏறி ரிவர்ஸ் எடுத்தவன் அவள் பக்கத்தில் நிறுத்தினான்.

கிருஷ்ணாவின் உள்ளம் அவ்வளவு குதுகலித்து கொண்டது… தான் விரும்பிய பெண்ணுடன் முதல் பயணம் அதுவும் மழை பயணம் தன் வாழ்க்கையில் முதல் காதல் அத்தியாயத்தை எழுத தொடங்கியது அவனது இதயம்.

அதே புன்னகையுடன் முன் இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணா “கெட் இன் பிருந்தா…” என்று கதவை திறந்து விட.

காரில் ஏறியவள் “அச்சோ…  சாரி டாக்டர்… நீங்க என்னால மறுபடி மழைல நனைஞ்சிட்டிங்க…” என்றாள் பதற்றம் கொண்டவளாக

அவளுக்கு இதெல்லாம் பார்க்க சங்கடமாக இருந்தது… ஒருவன் தனக்காக இப்படி இறங்கி வந்து அழைப்பது கூட படபடப்பாக இருந்தது. 

அதில் மெலிதாக சிரித்தவன் “இதுக்கு போய் சாரியா… எப்படி இருந்தாலும் நான் காரை எடுக்க அந்த பக்கம் போய் தானே ஆகனும் பிருந்தா… அப்பவும் நனையத்தானே செய்வேன் இதுக்கு ஏன் பதட்டமாகுறிங்க? ” என்றான் அவள் நெற்றியில் இருந்து கன்னம் இறங்கிய மழை நீரை ரசித்தபடி… அதனை தீண்ட கரங்கள் பரபரத்தாலும் தன்னை கட்டுக்குள் வைத்தபடியே காரை செலுத்தினான்.

ம் என்ற தலை அசைப்போடு சரி என்று சொன்னவளை கண்களுக்குள் நிறைத்துக்கொண்ட கிருஷ்ணா அவள் ஏதாவது பேசுவளா என்று எதிர்ப்பார்த்தபடி வந்தான்.

பிருந்தா இருந்தா நிலையில் பேச்சாவது மண்ணாவது… கடவுளே சீக்கிரமே வீடு வந்துவிடவேண்டும் என்று வேண்டுதலோடு தானே அமர்ந்திருந்தாள். அவளுக்கு  இது நல்லதிற்கா இல்லை கெட்டதிற்கா என்று பிரித்தரிய முடியா நிலை…  அதுவும் மழையில் நனைந்த நிலையில் அவள் உடலோடு ஒட்டிய ஆடையில் கிருஷ்ணாவின் அருகில்  இருப்பது அவளுக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்க பையிலை நெஞ்சோடு இருக்கிய படி சாலையில் கண்களை பதித்தபடி வந்தாள்.

அவள் அங்க லாவண்யங்களை எடுத்து காட்டும் ஈர ஆடையின் காரணமாகத்தான் அவள் இப்படி அமர்ந்திருக்கிறாள் என்று  கிருஷ்ணா உணர்ந்தானோ என்னவோ  அவள் புறம் அதிகம் பார்வையை திருப்பாமல் அவளுக்கு சங்கடத்தை அளிக்காமல் பிருந்தாவின் எண்ணத்தை மாற்றுவதற்கு சாதரணமாக அவன் பேச்சை ஆரம்பித்தான். 

“எப்படி இருக்காங்க பிருந்தா அம்மா?”

மனதின் உள்ளே பல ஓடினாலும் “ம் நல்லா இருக்காங்க டாக்டர் இப்போ பரவாயில்லை?”  என்று அவன் கேள்விக்கு பதிலை கொடுத்தாள்.

“அதென்ன என் ப்ரபஷன் எனக்கு மறந்துடுமா அடிக்கடி நியாபகம் படுத்தறா மாதிரி டாக்டர் டாக்டர் சொல்றிங்க ஹாஸ்பிட்டலதான் டாக்டர்…  வழியில பாத்த கூட வாங்க டாக்டர்னு கூப்பிடுறீங்க, என் பெயர் தெரியும்ல உங்களுக்கு” என்றான் விளையாட்டு போலவே

“அப்படியில்ல  டாக்டர் ….  என்று மறுபடி அவனை அழைத்ததற்காக நாக்கை கடித்தவள் எனக்கு அப்படியே பழக்கமாகிடுச்சி என்றாள் கண்களில் சிறு கெஞ்சலுடன்.

“பிருந்தா…  நீங்க என்னை கிருஷ்ணான்னே கூப்பிடுங்க….   ஹாஸ்பிட்டல தான் டாக்டர்… இங்க இல்ல…” அவனும் சிறு கண்டிப்போடு கூற சரி என்று புன்னகை முகமாக கூறினாள்.

அவள் இதழில் தோன்றிய அழகிய சிரிப்பில் அவன் மனம் அலைபாய ‘அய்யோ தயவு செய்து அப்படி எல்லாம் சிரிக்காதம்மா… நானே நல்லவன் மாதிரி மெய்ன்டெய்ன் பண்ணிட்டு வறேன்… உன் பார்வை என்னை ரொம்ப சோதிக்குது… இதுல சிரிச்சா நான் டோட்டலா காலி’என்று மனதிற்குள்ளே கூறிக்கொண்டவன்

“சரி உங்க இன்டர்வியூ என்ன ஆச்சி?” என்றான் முயன்று வரவழைத்த சாதாரண குரலில்

“நான் ஏற்கனவே வேலை பார்த்த கம்பனியோட பிராஞ்ச் தான்… இரண்டு நாள் கழிச்சி ஜாப் லெட்டர் வரும்னு சொல்லி இருக்காங்க” என்றாள்.

“ஓ… சூப்பர் அப்போ ட்ரீட் எப்போ வைக்க போறிங்க?”

“எதுக்கு டாக்…”  என்று கூற வந்தவள் அப்படியே “கிருஷ்ணா…” என்று மாற்றிக் கூறினாள்.

“தட்ஸ் குட்” என்று அவள் முயற்சியை பாரட்டியவன் “உங்களுக்கு வேலை கிடைச்சிருக்கு எனக்கு டீரீட் வைக்க மாட்டிங்களா?” என்றான் கண்களில் சிறு எதிர்ப்பார்ப்போடு

அவன் கண்களில் எதிர்ப்பார்பை உணராது “கண்டிப்பா தறேன்” என்றவள் கார் செல்லும் சாலையை பார்த்துவிட்டு  “இதுக்கு அடுத்த ஸ்டிரீட்ல இறங்கிக்குறேன்” என்றாள் அவசரமாக.

“அட அதுக்குள்ள வீடு வந்துடுச்சா?” என்று நினைத்தவன் அதை வாய் விட்டு கூறியும்  இருந்தான்

அவன் கேட்டதும் ஒருமாதிரியாக அவனை பார்த்தவள் “வீடு வரல…. ஆனா பரவாயில்லை நான் இங்கேயே இறங்கிக்கிறேன்” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு…  

இதற்கும் மேலும் அவன்  காரில் கொண்டு போய் விட்டால் அழுதாலும் அழுதிருப்பாள் பிருந்தா. கிருஷ்ணாவின் பேச்சு எப்போதும் போல இருந்தாலும் அவன் தன்னை பார்க்கும் பார்வை  இன்று புதிதாய் தெரிய ஒருவகையான பீதியுடன் இருந்தாள் அவள்.

அவள் பாவமான முகம் பார்த்ததும் மேலும் அவளை சோதிக்க நினைக்காதவன் “சரி இப்படி நனைஞ்சிக்கிட்டேவா போவிங்க யாரையாவது குடை எடுத்துட்டு வரச்சொல்லுங்க” என்றான் அக்கரையாக 

பரவாயில்லை என்று கூறினாலும் விடமாட்டான் என்று நினைத்தவள்  “தம்பியை எடுத்துட்டு வரச்சொல்றேன்” என்று கூறி விட்டு அவனை அழைத்தாள்.

“அக்கா உனக்கு தான் பேச போன் எடுத்தேன்… நீயே பண்ணிட்ட எங்க இருக்க?”

“நான் நம்ம தெருவுக்கு முன்னாடி தெருவுல இருக்கேன்… குடை எடுத்துட்டு வாடா”

“எப்படிக்கா வந்தா?” 

“அது கிருஷ்ணா கூட்டிட்டு வந்தாரு”

“எந்த கிருஷ்ணா? அவர் யாருக்கா?” 

“அது நம்ம அம்மாக்கு டீரிட்மெண்ட் பண்ணாறே… அதான் நீ கூட” என்று கூற வந்தவள் கிருஷ்ணா அருகில் இருப்பாதை உணர்ந்து “நீ வாடா” என்றாள் சட்டமாக.

“ஹேய் அவரா… அவரா… வந்து இருக்காரு” என்று உற்சாகமானவன் “வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதானே கா” என்றான்.

டேய் நீ வேற ஏண்டா என்னை படுத்துற என்று உள்ளுக்குள் தம்பியை வறுத்தவள் “இல்லாடா…  அவருக்கு வேலையாம்” என்றதும் அதுவரை வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கிருஷ்ணா  அவளை உறுத்து பார்த்தான்.

அவன் பார்வையை உணர்ந்தவள் போனை கையால் மூடியபடி “இல்ல வீட்டுல அப்பா” என்று தயக்கமாக கூறிட “புரியுது” என்று இதழ் அசைத்தவன் தலையை வேறுபக்கமாக திரும்பிக்கெண்டான்.

அய்யோ கடவுளே இன்னைக்கு இவர்கிட்ட என்னை மாட்டி விட்டு ஏன் வேடிக்கை பாக்குற என்று நொந்துபோனாள் அவன் கூர் பார்வையில்

போனில் மறுபுறம் “சரி சரி நானே வறேன் வை” என்று கூறிய விஷ்ணு  அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு இருந்தான்.

தூரத்தில் விஷ்ணு வருவதை பார்த்தவள் “இதோ வந்துட்டான் நான் கிளம்புறேன் டாக்…” என்று கூற வந்தவள் “சாரி கிருஷ்ணா நான் கிளம்புறேன்” என்றவள் கதவை திறந்தாள்.

அவள் கிளம்புவும்  சஞ்சலப்பட்ட மனதை மறைத்தபடி “சரி” என்று தலையசைப்பு தர விஷ்ணு பிருந்தாவிடம் செல்லாமல் காரை சுத்திக்கொண்டு கிருஷ்ணாவிடம் வந்து நின்றான்.

“ஹாய் சார்… எப்படி இருக்கிங்க நான் தான் விஷ்ணு… உங்களை ஹாஸ்பிட்டல்ல பார்த்து இருக்கேன் வீட்டுக்கு வாங்களேன் சார்” என்றான் சரளமான பேச்சிக்களுடன் மகிழ்ச்சியாய்

“ஹலோ விஷ்ணு…” என்று கை குலுக்கியவன் “ஒரு முக்கியமான வேலை இன்னொரு நாள் நான் கண்டிப்பா வறேனே…” என்று பிருந்தா கூறியதையே அவளுக்காக விஷ்ணுவிடம் கூறினான். அவள் மறுக்கும் போது தான் எப்படி அவள் வீட்டிற்கு செல்வது என்ற எண்ணத்தில் அடுத்த முறை வருவதாக கூறினான்.

“ஓகே சார் கண்டிப்பா வரனும்” என்ற வேண்டுகோளை வைத்துவிட்டு,  அக்காவை அழைத்துக் கொண்டு விஷ்ணு செல்ல

கிருஷ்ணாவிற்கு தான் அவள் தன்னை ஒதுக்குகிறாளோ என்ற எண்ணம் எழுந்தது… மழையில் செல்லும் அவளையே பார்த்திருந்தவன்  தன் மனதில் இருப்பதை அவளிடம் சொல்லும் நாளை எதிர்ப்பார்த்து காத்திருந்தான்.

கிருஷ்ணாவின் வீட்டிலோ தரகர் கொடுத்து விட்டு சென்ற பெண்களின் போட்டோ அவனை எதிர்க்கொண்டு அழைத்திருந்தது..