அத்தியாயம் – 03

தன் கத்தை மீசையை முறுக்கிவிட்டவாறு, புருவம் சுருக்கி, சன்ன சிரிப்புடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் மனோரஞ்சன்.

வேஷ்டியை இறக்கிவிட்டு, அவனின் கடையின் முன்பு நின்றிருந்தவனை, ‘அய்யோ கொல்லுறானே’ என்றபடி தான் பார்த்து நின்றனர் எதிர்புற பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண்கள்!

ஆனால், புறத் தோற்றத்தை வைத்து மட்டும் ஒருவரை கணித்துவிட முடியுமா என்ன?

“சேரி, சொன்னத அப்படியே ஃபாலோ பண்ணிக்கோ, மாத்தி சொல்லிடாத” என்றவன் மனதில் கோபம் இருந்தாலும் முகத்தில் ஒரு கேளிப் புன்னகையும் நிறைந்திருந்தது.

“டேய் காளிஸ், இன்னிக்கி நான் இருக்க மாட்டேன். ஸ்டாக் எல்லாம் சரியா இருக்கா பார்த்துக்கோ, தேவைனா குடோன்ல ராமர்கிட்ட சொல்லி எடுத்துக்க. வேலுவோட பில் மட்டும் அந்த பெண்ணுகிட்ட சொல்லி முதல்ல போட்டுவிட சொல்லிடு. ஏதாவது இருந்தா, என்னைய கூப்பிடாத. பூர்ணாக்கு அழச்சு கேட்டுக்க, வரேன்” என்றவன் கடைக்கு வந்த தாமரை மாலையை எடுத்துக் கொண்டு திருவரங்கம் நோக்கி அத்தனை கோபத்தோடும் காதலோடும் பயணித்தான்.

பல்லை கடித்தபடியே அவன் வண்டியை ஓட்ட, தாடை இறுகி முகத்தில் ஒருவித அழுத்தம் நன்றாகவே தெரிந்தது.

நெகிழ்ந்த மனதை கடினப்படுத்த முயன்றான். அவளை பார்த்து இளகினால் காரியமே கேட்டுவிடும் என்று தெரிந்தே, தன் காதல் மனையாளைக் காணச் செல்கிறான் மனோரஞ்சன்.

காவேரி ஆறும் அதன் கிளை ஆறான கொள்ளிடத்தின் நடுவே ஒரு தீவைப் போல் காட்சித் தரும் ஒரு அழகான, அமைதியான பகுதி தான் திருவரங்கம் என்னும் ஶ்ரீரங்கம்.

காவேரி பாலத்தை அடைந்ததுமே மனோவின் மனதில் பல கலவையான நிகழ்வுகள். அதில் பெரிதானவை கசப்புகளாகவே இருந்தாலும் ‘இப்போது அதை நினைக்காதே’ என்ற மனதின் கூப்பாடு எல்லாம் அவன் சட்டை செய்யாது அந்த நினைவுகளின் ஊடே மோகினியின் வீட்டை அடைந்திருந்தான் அவன்.

சற்று நெருக்க நெருக்கமாகக் கட்டப்பட்டிருந்த கல் தூணினால் எழுப்பப்பட்ட திண்ணை வீடுகள் சொல்லியது அதனின் வயதை.

முன்னர் ஓடும் பின்பக்கம் தார்ஸுமாக அமைக்கப்பட்ட தொட்டிக் கட்டு வகை வீடுகளே அங்கு அநேகமாக இருந்தாலும் இடையே நவீன ரக வீடுகளும், சற்று மேல்தட்டு பராமரிப்பு செய்த வீடுகளும் காட்சியில் பட்டன.

தெருவின் தொடக்கத்தில் மனோவின் வண்டி சப்தம் கேட்டவுடனேயே இங்கு பூர்வியின் வயிற்றில் ஏதோ பிசைந்தது. சொல்ல முடியா உணர்வு ஒன்று நெஞ்சை தாக்க, விருட்டென்று எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள்.

‘இப்படி என் ராஜாத்திய வதைக்கிறீயே முருகா’ என்று அவள் நிலை புரிந்து அழுத சங்கரத்தம்மாளுக்கு வாழ்க்கை இத்தனை நரகமானாதா என்ற கேள்வி அந்த வயதிலும் எழாமல் இல்லை.

சாணம் தெளித்த வாசலில் பெரிய தேர் கோலம் மனோவை வரவேற்றது.

சிறிய இரும்பு கேட், அதனின் இரு பக்கமும் ரோஜாவும் ஜாதி மல்லி பந்தலும் ஆக்கிரமிப்பு செய்திருக்க, அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அழகுடன் நெடுநெடு வென்று நின்றிருந்தது பவளமல்லி மரம்!

பார்த்தவுடன் கண்களை நிறைக்கும் அதன் தோற்றமும் பூக்களும் இன்றுமே மனோவின் மனதை நிறைத்து நின்றது.

தாராளமாக பூக்கள் பூத்து, அதை கீழே பூமா தேவிக்கும் பரிசளித்து, ஒரு தெய்வீக கலையுடன் வீட்டின் பக்க சுவற்றின் அருகே தன்னகத்தே தனி இடத்தையும் மணத்தையும் கொண்டு நிறைத்திருந்தது.

மனதில் அந்த பூவைப் பார்த்தவுடனே, பூர்வியின் பிரத்தியேக மணம் மனோவின் நாசியை நிமிண்டியது.

‘அய்யோ, அவள பார்க்கறதுக்குள்ளையே இப்படியா’ என்றவன் மூளையே அவனை எள்ளி நகையாட,

“மனோ குட்டி, உள்ளார வா” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றார் மோகினி.

“க்கும்.. அவனே ஒரு குட்டி போடுற வயசுக்கு வந்துட்டான்.. இன்னும் குட்டியாம் குட்டி” என்று பின்னால் வந்த சங்கரத்தம்மாள் கூற,

“உனக்கு வாய் தாஸ்தி ஆகிடுச்சு, பாட்டீ” என்ற முறைப்புடன் வீட்டிற்குள் வந்தவனை வெற்றுக் கூடமே வரவேற்றது.

எதிர்பார்த்த ஒன்றானாலும் கோபத்தை அழுத்த வைத்தான் மனதில், முகத்தில் இருந்த சிரிப்பை பாதிக்காது.

“அப்புறம் எங்க நீங்க பெத்த ரத்தினங்க” என்று கேலியாக கேட்டவன் குரலில் இருந்த காரம் புரியாமல் இல்லை பெண்களுக்கு.

“வீட்டுல தான் இருக்காங்க, நீ உட்கார் உனக்கு பிடிக்கும்னு அக்காரவடிசல் பண்ணினேன். கொண்டு வரேன் இரு” என்று குழந்தையாய் துள்ளி கிச்சனுள் சென்றவரை பார்த்த இருவரின் மனதும் கனத்துப் போனது.

“எங்க உங்க ராஜாத்தி” என்று அழுத்தமாய் கேட்டவனின் முகம் பாராது,

“இது என்னடா ஆதிவாசி கணக்கா இப்படி முடி வளர்த்து வெச்சிருக்க. மழிக்க மாட்டியா?” என்று அவன் சிகை கோதிக் கேட்க,

“பேச்ச மாத்தாமா, எங்க அவனு சொல்லுங்க சங்கரத்தம்மா” என்றுவன் பேச்சு அவரை பயமுறுத்தியது.

“ஆஞா, ராஜாத்திய இன்னிக்கு எதுவும் திட்ட செய்யாதடா” என்று முக சிவந்து பரிதாபமாக கேட்டவரை நிமிர்ந்து பார்த்தவன்,

“அவ என் பொண்டாட்டி, அவள திட்டினாலும் அடிச்சாலும் எனக்கும் வலிக்கும். இப்போ எங்க அவ?” என்று கேட்டவனுக்கு உறவினர் அறையை கைக் காட்டினார்.

புருவம் சுருங்க அந்த அறையை பார்த்தவன், “அவ ரூம்?” என்று இழுக்க,

“அத.. அத.. இப்போ உபயோகம் செய்யறதில்லை” என்று மென்று விழுங்கியவரை ஒரு ஏளன சிரிப்புடன் பார்த்தவன்,

“ஏன், என் கூட குடும்பம் நடத்துன ரூம்ம என்னைப் போல ஒதுக்கிட்டாலாக்கும்” என்று கேட்டான் கோபம் போகாது.

‘உன்னை அவ ஒதுக்குவாளா ஆஞா! ‘ என்று மனதூடு அரற்றியவர், வெளியே ஒன்றும் சொல்லாது நின்றிருந்தார்.

சங்கரத்தம்மாள் ஏற்கனவே ஒல்லியான உடல்வாகு தான். இப்போது முதுமையும் சேர்த்து அவரை இன்னும் மெலிந்து போக வைத்திருக்க, முகத்தில் இருந்த அதிகப்படியான சுருக்கங்களும் கலங்கிய கண்களும் அவனை இம்சித்தது.

வயதுக்கே உண்டான தளர்வு என்றாலும் அவருக்கு அது மிகுதியாக வெளிப்பட்டது.

அவன் மனதிலும் அவர் முகம் ஏதோ கலக்கத்தை விதைக்க, நீண்ட வருடங்களுக்கு பின் “சங்கரு” என்ற சங்கரத்தம்மாளை ஆதூரமாய் அணைத்துக் கொண்டான் மனோரஞ்சன்.

“என் ஆஞா!” என்று அவரும் கதறியேவிட்டார் அவர் பேரப்பிள்ளைகள் படும் பாடு தாங்காது.

“ஒன்னுமில்ல பாட்டி, எதுக்கு இப்போ அழற?” என்று மனோவின் எந்த சமாதானமும் அவரிடம் எடுபடவில்லை.

அவனுக்குத் தெரியாது நடந்த பல நிகழ்வுகளின் மிச்சங்கள் சங்கரத்தம்மாளை பூதாகரமாக பயமுறுத்தியிருந்தது. அதுவும் இன்றைய நாளின் நினைவுகள், அதை நினைக்க நினைக்க அவர் மனதே அவரிடம் இல்லை எனலாம்.

“பாட்டீ, என்னாச்சு” என்று வந்த முராரி, மனோவை முறைக்க,

“வந்து பிடியேன்டா, நல்லா அய்யனார் மாதிரி வந்து நிக்கறத பாரு” என்றவன் சொல்லியும் அசையாது நின்றிருந்தான் முராரி.

“ம்ப்ச், இவனோட” என்று சலித்தவாறு பக்கத்தில் இருந்த இருக்கையில் அவரை அமர வைத்தவன் முயன்று வரவழைத்த பொறுமையூடு,

“என்ன ஆச்சு உனக்கு? இப்படி அழற கேஸ் இல்லையே நீ? யாராவது வந்தாங்களா இல்லை ஏதாவது சொன்னாங்களா பாட்டி?” என்றான் வார்த்தையில் கூர்மை கொண்டு.

அவர் மௌனம் கொண்டு அழ, “டேய், நீயாவது சொல்லித் தொலையேன்” என்று வீடே அதிர கத்தியிருந்தான் மனோ.

அத்தனை கோபம். காலையில் வந்த தொலைபேசி செய்தி தந்த தாக்கத்தின் விளைவால் வந்த கோபத்தைத் தேக்கியது இப்போது அது மடையுடைத்து பாய்ந்திருந்தது.

அவன் கத்தியதின் எதிரொலியாய் படுக்கையில் அமர்ந்திருந்த பூர்வியின் உடல் நடுங்கியது. இதுதானே அவளும் பயப்படும் விஷயம்.

மனோவின் கோபத்தின் அளவு தெரிந்த காரணம் தானே இத்தனை ஆண்டுகளாய் அவனை புறக்கணிப்பு செய்கிறாள்.

ஆனால், அது எதனால் என்ற உண்மை தெரியும் தருணம் அவனின் எதிர்வினையை நினைக்க, கொலைநடுங்கியது அவளுக்கு!

“என்ன மனோ” என்று சற்று அதட்டலாக வந்த மோகினியை பார்த்தவன்,

“இன்னும் எத்தன நாளுக்கு எல்லாரும் இப்படி இங்க இருக்கப் போறதா உத்தேசம்?” என்று அவன் பல்லைக் கடிக்க,

“கல்யாணிய பார்த்தியா?”

“பேச்ச மாத்தாதீங்க. கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றவன் அழுத்த,

“முதல்ல உன் பொண்டாட்டிய பார்த்துட்டு ரெண்டு பேரும் சேர்ந்து வாங்க, என் முடிவை சொல்லுறேன்” என்றவரை அதிர்ந்து பார்த்திருந்தனர் அனைவரும்.

இத்தனை வருடங்களாக எந்த ஒரு வார்த்தையை மனோவும் சங்கரத்தம்மாளும் ஏன் முராரியும் கூட எதிர்பார்த்திருந்தனரோ அது மோகினியிடம் வெளி வரும் என்று அதுவும் இன்று வரும் என்று துளியும் கூட அவர்கள் நினைத்திருக்கவில்லை.

அதிர்ந்து நின்றிருந்த மனோவின் கையில் சூடான அக்காரடிசிலை வாழையிலையில் நெய்யொழுக கொடுத்தவர்,

“ரெண்டு பேரும் சாப்பிட்டு பொறுமையா வாங்க, கோவிலுக்கு போகனும்” என்றவர் முராரியிடம்,

“கார் எடு முரா, மூனு பேரும் பெருமாள சேவிசிட்டு வரலாம்” என்று அவரின் அறைக்கு சென்றவரை தான் பார்த்து நின்றிருந்தான் மனோ.

அதற்குள் சங்கரத்தம்மாள் முகத்தை துடைத்தபடி மனோவிடம், “ஆஞா, பாட்டி போய் பெருமாள பார்த்துட்டு வரேன். அதுக்குள்ள நல்லபடியே பேசிட்டு என்கிட்ட சொல்லு ராசா” என்று அவன் முகம் பற்றி அவர் கேட்க, என்ன பதில் சொல்லமுடியும் அவனால்.

பெயருக்கு தலையசைத்தவனின் தோளில் தட்டியபடி இரு பெண்களையும் அழைத்துச் சென்றான் முராரி.

வெறும் இலையில் வைத்திருந்த அக்காரவடிசல் இப்போது அவன் கையை சுட, தடதடக்கும் மனதுடன் பூர்வியின் அறை நோக்கி சென்றான் அவன்.

இரு கையிலும் மாற்றிய படி அவன் அந்த அறை வாயில் நிற்க, ஓவியமாய் படுக்கையில் அமர்ந்து ஜன்னல் வழி வெளிய பார்த்தவாறு அவனுக்கு தரிசனம் கொடுத்தாள் அவன் மனைவி.

கதிரவனின் ஒளிப்பட்டு அவள் முகமும் பாதி உடலும் தங்கத்தை ஒத்தார் போல் மினுங்க, அந்த அழகை கணவனாய் பார்க்கும் ஆசை உந்தியதை அவனை.

ஆனால், மனதில் அத்தனை நேரம் ‘கோபம்’ என்ற முகமூடியை போட்டிருந்தவன் அதை முற்றும் மறந்தவனாய் அறைக்குள் நுழைந்தான், பூர்வியின் ரஞ்சனாக!

அவள் சூடியிருந்த ஜாதி மல்லியும், அவன் கையில் வைத்திருந்த அக்காரவடிசலின் நெய் மணமும், வீட்டில் கமழ்ந்த தசாங்கமும் அவனின் மரிந்த உணர்வுகளை தட்டிவிட, அவளை நோக்கி அழுத்த எட்டு வைத்து சென்றான் மனோ.

அவளோ, அவன் அருகாமையில் எங்கே தனது உறுதியை தொலைத்து விடுவோமோ என்று பயத்தில் கண்களை மூடியவாறு அமர்ந்திருக்க, கையில் பூத்த வியர்வையும், படபடக்கும் நெஞ்சமும், பயத்தில் ஏறியிறங்கும் தொண்டை குழியும் அவளுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்தன.

சட்டென்று அவள் வாயருகே சூடாக ஏதோ உறுத்த, கண் திறந்து பார்த்தவளை விழிகளில் நிறைத்துக் கொண்டு, கையில் வைத்திருந்த அக்காரவடிசலை அவளுக்கு ஊட்டிய படியே, “ஹாப்பி ஆனிவர்சரி, செல்லம்மா” என்று சிரித்தப்படி நின்றிருந்த கணவனைப் பார்த்ததும் கண்ணீரே வந்துவிட்டது அவளுக்கு.

வாயில் இருந்து இனிப்பு கசந்து போய் கண்களில் உவர்நீரை சிந்தியவளிடம், “ம்ம்” என்று சற்று முறைத்தவாறு வலது கையால் கண்ணீரை துடைக்க, அத்தனை நேரம் அவள் காத்த வைராக்கியம் தூளானது.

“மாமா” என்ற கேவலுடன் அவன் வயிற்றோடு அவனை அணைத்துக்கொண்டாள், மனோவின் பூவி!

கீர்த்தனங்கள் தொடரும்…