அடங்காத அதிகாரா 35

அதிகாரம் 35

திருமூர்த்தி இரண்டு மூன்று முறை அழைத்தும் அஞ்சனா அழைப்பை ஏற்கவில்லை. உள்ளாட்சி தேர்தலில் கவனமாக இருந்த தான் தன் மகள் விலகிச் செல்வதை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்று வருந்திய திருமூர்த்தி மீண்டும் ஒருமுறை அவளது எண்ணுக்கு அழைக்கலானார்.

இம்முறை அழைப்பை ஏற்ற அஞ்சனா “ரொம்ப சந்தோஷம்பா. உள்ளாட்சி தேர்தல்ல நிறைய இடத்துல நம்ம கட்சி ஜெயிச்சிருக்கு. கண்டிப்பா அடுத்த தேர்தல்ல நாம ஆட்சியை பிடிச்சிடலாம். இன்னும் உங்க பேட்டி எதுவுமே டிவில வரலையே? ஏம்பா?” என்று நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

“உனக்கு ஒன்னும் அப்பா மேல கோவம் இல்லையே?, உள்ளாட்சி தேர்தல் வேலைல எதுலயும் நீ கலந்துக்கலன்னு நான் ரொம்ப பயந்து போயிட்டேன். கட்சி ஆபீஸ்க்கு கிளம்புனேன். ஆனா நீயும் கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதான் உன்னையும் வர சொல்லலாம்னு போன் பண்ணினேன்.” என்று மகளிடம் அன்புடன் கூறினார்

“இந்த ராக்கி கீழ விழுந்து கையை கால ஒடச்சிகிட்டு ஆஸ்பத்திரில விழுகவும் நான் சும்மா பார்த்துட்டு போகலாம் என்று தான் வந்தேன். ஆனா எனக்கும் கொஞ்சம் முடியல. இங்க இருந்த டாக்டர் என்னைய ஏற்கனவே செக்கப் பண்ண கைனகாலஜிஸ்ட். அதனால அப்படியே இருந்து அவங்க கிட்ட ட்ரீட்மென்ட் பாத்துட்டேன். தனியா எனக்குன்னு ட்ரீட்மென்ட்டுக்கு வந்தா, இந்த பத்திரிகைக்காரங்க சும்மா எதையாவது எழுதுவாங்க. இவர் படுத்திருக்கும் போது நானும் ட்ரீட்மென்ட் பண்ணிட்டா வெளியே தெரியாது இல்லையா? அதனால தான் இங்கேயே இருந்துட்டேன்.”என்று தந்தைக்கு பதிலளித்தாள்.

“சரிமா உடம்புக்கு இப்ப பிரச்சனை இல்லையே?” என்ற அக்கறையுடன் விசாரித்தவர் மகளை கட்சி அலுவலகத்திற்கு வரும்படி கட்சித் தலைவராக கட்டளையும் பிறப்பித்தார்.

“வரேன் பா. கண்டிப்பா வரேன்” என்று சிரித்த மகளிடம்

“இன்னொரு விஷயம் உன்கிட்ட கேட்கணும், அந்த இரட்டை கொலை விஷயம் ஞாபகம் இருக்கா?”என்று தயங்கியே கேள்வி எழுப்ப,

இத்தனை நேரம் சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்த அஞ்சனாவின் முகம் துணி கொண்டு துடைத்தார் போல உணர்ச்சிகளற்று சுருங்கியது.

“அதுக்கு என்னப்பா இப்ப” என்றவள் குரலில் இது வேண்டாத பேச்சு என்ற பாவனையே மிகுந்திருந்தது.

“நாலு நாள் முன்னாடி கன்னியாகுமரி கோர்ட்டில் யாரோ ரெண்டு பேர் சரண்டர் ஆகி இருக்காங்க. என்ன ஏதுன்னு விசாரிக்க சொல்லி கன்னியாகுமரி கட்சி ஆபீஸ்ல கேட்டிருக்கேன். உனக்கு எதுவும் தெரியுமா?” என்று மகளிடம் சற்று குடைவது போலவே கேள்விகளை எழுப்பினார்.

“அப்பா நம்ம கட்சி ஜெயிச்சிருக்கு. இது எவ்வளவு பெரிய விஷயம்? இப்ப போயி தேவையில்லாத ஏதோ பழைய குப்பை எல்லாம் கிளறிக்கிட்டு இருக்கீங்க? யார் சரண்டர் ஆனா நமக்கு என்ன? இப்ப வெற்றியை கொண்டாடுவது மட்டும் தான் பா தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அடுத்த தேர்தலில் ஜெயிக்கிறது தான் நம்மளோட குறிக்கோளா இருக்கணும்.”

மகள் பேச்சை மாற்றுவதை உணர்ந்து கொண்ட திருமூர்த்திக்கு லேசான அதிருப்தி ஏற்பட்டது. இது அவரது ஆட்சி காலத்தில் அவருக்கு மிகப்பெரிய கரும்புள்ளியாக கருதப்பட்ட இரட்டை கொலை வழக்கு ஆகும்.

இன்று தான் ஜெயித்திருக்கும் நிலைமையில் அதே கொலை வழக்குக்கான குற்றவாளிகள் சரணடைந்திருப்பது அவருக்கு லேசான நெருடலை கொடுத்திருந்தது. இந்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைத்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் அவர்கள் எப்படி விசாரித்தும் அந்த வழக்குக்கான சரியான பதில் கிடைக்கவில்லை. இத்தனை நாட்கள் நீண்ட வழக்கு இன்று திடீரென்று எப்படி இத்தனை சுலபமாக முடிந்திருக்க முடியும்? என்ற அவரின் எண்ணமே மகளிடம் கேள்வியை கேட்க வைத்தது. ஆனால் அவள் பேச்சை மடை மாற்றுவதை புரிந்து கொண்ட பின் இது இவளுடைய வேலை இல்லை என்று உணர்ந்தார்.

இனியும் வீட்டில் இருப்பது வேறு விதமான குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்று வேகமாக தன்னுடைய கட்சி தலைமை அலுவலகத்தை நோக்கி புறப்பட்டார் திருமூர்த்தி.


தமிழகமே மறுமலர்ச்சி மக்கள் கழகத்தின் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்க நீரூபன் மட்டும் யோசனையுடன் தாடையை தேய்த்தபடி அலுவலகத்தில் அமர்ந்திருந்தான்.

காலை முதல் பள்ளியின் புதிய கட்டிடத்திற்கான வேலைக்காக அவனும் ஆனந்தும் அலைந்து திரிந்து விட்டு அலுவலகம் வந்தபோது பூமிகா ஆனந்தின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாகவும், அவளது வாகனத்தை வைத்துவிட்டு சாவியை கொடுத்துவிட்டு சென்று இருப்பதாகவும் வரவேற்பு பெண் கூறியதிலிருந்து ஆனந்த் மிகவும் கவலையுடன் காணப்பட்டான்.

என்னவென்று நீரூபன் விசாரித்ததற்கு “சாதாரணமா உள்ளூர்ல சுத்துறதுனா அவளுக்கு அவ வெஸ்பாவே போதும். ஆனா என் வண்டி தூக்கிட்டு போய் இருக்கான்னா கண்டிப்பா லாங் டிரைவ் போறா. யார் கூட போறா என்னன்னு தெரியலையே! எப்பயும் என்கிட்ட சொல்லாம இப்படி எல்லாம் போக மாட்டா. இப்ப போன் பண்ணாலும் நாட் ரீச்சபிள்ன்னு தான் வருது. எனக்கு ரொம்ப கவலையா இருக்கு சார்” என்று தன் மனதில் இருந்ததை மறைக்காமல் ஆனந்த் வெளியிட்டான்.

“நானும் கால் பண்ணேன். நாட் ரீச்சபிள்ன்னு தான் வருது இப்பதான் வசீகரன் போன் பண்ணான்.நேத்ரா போனும் நாட் ரீச்சபிள்ன்னு தான் வருதுன்னு சொன்னான் நான் ட்ரை பண்ணேன் எனக்கும் அதே தான் வருது. மே பி ரெண்டு பேருமா சேர்ந்து எங்கேயாச்சும் வெளியே போயிருக்கலாம்.”என்று ஆனந்தை நீரூபன் சமாதானம் செய்தான்.

“எப்படி சார் இவ்வளவு கூலா இருக்கீங்க? ரெண்டு பொண்ணுங்க தனியா இவ்வளவு தூரம் சொல்லாம போறாங்க, ஏதாவது ஒன்னுனா என்ன பண்ண முடியும்? ஏன் இப்படி செய்கிறா? நான் கூட இருந்தா இப்படி செய்ய மாட்டா. நான் இங்க வேலைக்கு சேர்ந்ததுல இருந்து அவ தனியாவே வெளியே போனதுனால என்ன பண்ற என்னன்னு எனக்கு தெளிவா தெரிய மாட்டேங்குது” என்று வருந்தினான்.

“அவளும் சரி நேத்ராவும் சரி சின்ன பிள்ளைங்க இல்ல. ரெண்டு பேருக்குமே தன்னை தற்காத்துக்க. தெரியும் வண்டி எடுத்துட்டு போயிருக்காங்கனா ரொம்ப தூரம் போக மாட்டாங்க. பக்கத்துல பாண்டிச்சேரிக்கோ இல்ல இந்த பக்கம் பெங்களூருவுக்கோ ஒரு லாங் டிரைவ் பிளான் பண்ணி போயிருப்பாங்க.

ஒரு வாரமா நானும் பூமி கூட சரியா பேசவே இல்ல. வசியும் கடைசி கட்ட பிரச்சாரம் அதுக்கான விளம்பரம்னு ரொம்பவே பிஸியா இருந்ததுனால அவனும் நேத்ரா கூட பேசி இருக்க மாட்டான். ரெண்டு பேரும் கோவத்துல எங்க ரெண்டு பேரையும் கடுப்படிக்கலாம்ன்னு ஒன்னா கிளம்பி வெளியே போயிருப்பாங்க.

இதனால ஒன்னும் இல்ல. சந்தோஷமா அவங்களோட நேரத்தை செலவழிச்சுட்டு வரட்டும். நமக்கு தான் ஆயிரம் வேலை இருக்கு. இப்படி சந்தோஷமா இருக்க முடிய மாட்டேங்குது. அவங்களாவது அப்படி இருக்கட்டுமே!” என்று இலகுவாக கூறிவிட்டு தன் அலுவலக பையுடன் கிளம்பினான்.

ஆனந்த் வேகமாக “சார் ஆபீஸ் வந்ததும் முருகப்பன் சார் போன் பண்ணி இருந்தாரு. உங்கள இன்னைக்கு நைட் டின்னருக்கு வீட்டுக்கு வரச் சொல்லி சொன்னாரு. அப்பவே என்ன பேசணுமோ பேசலாம்னு உங்ககிட்ட சொல்ல சொன்னாரு. இந்த பூமி பண்ணின விஷயத்துல உங்ககிட்ட நான் சொல்ல மறந்துட்டேன்” என்று மன்னிப்பு வேண்டிய படி தகவலை தெரிவித்தான்.

“இட்ஸ் ஆல் ரைட். நான் நேரா பெரியப்பா வீட்டுக்கு போயிட்டு அப்புறம் வீட்டுக்கு போயிக்கிறேன். நீ ஒன்னும் டென்ஷன் ஆகாத. அவங்களுக்கு சிக்னல் கிடைக்கும்போது கண்டிப்பா நம்மளுக்கு கால் பண்ணி பேசுவாங்க.” என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு அலுவலகத்தை விட்டு கிளம்பினான் நீரூபன்.

நேராக முருகப்பனின் வீட்டுக்கு தன் காரை செலுத்தியவன் காரில் இருந்து இறங்கி உள்ளே நுழைய பார்க்க கட்சி ஆட்கள் அங்கே நிறையவே குழுமி இருந்தனர் அனைவரும் கடைநிலை தொண்டர்கள் என்பது அவர்களது உடையிலேயே நன்றாக தெரிந்தது தங்களுடைய கட்சி வெற்றி பெற்றதை அவர்கள் மகிழ்ச்சியோடு அங்கே கொண்டாடிக் கொண்டிருந்தனர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு செல்லாமல் முருகப்பன் வீட்டில் அவர்கள் கொண்டாடுவதில் இருந்தே அவர்களுக்கு முருகப்பன் எத்தனை முக்கியமானவர் என்பதை அவர்கள் அங்கே காட்டுவதாக நீரூபனுக்கு தோன்றியது.

வீட்டினுள் சென்று அங்கிருந்த மேனேஜரிடம் தான் வந்திருப்பதை முருகப்பனுக்கு தெரிவிக்கும்படி நீரூபன் கேட்டுக்கொள்ள அடுத்த ஐந்தாவது நிமிடம் மாடியில் இருக்கும் அவரின் பிரத்தியேக உணவறைக்கு அவனை அழைத்துச் சென்றார் அந்த மேலாளர்.

இரண்டு வாரத்தில் மிகவும் உடல் மெலிந்து போயிருந்தார் முருகப்பன் சவரம் செய்யப்படாத அவரது முகமும் சோர்வுடன் தெரிந்த அவர் உடல் மொழியும் இன்னும் அவர் அந்த காய்ச்சலில் இருந்து தேறவில்லை என்பதை அவனுக்கு எடுத்துரைக்க

“என்ன பெரியப்பா சாதாரண காய்ச்சல்னு என்ன பாக்க கூட வர வேண்டாம்னு சொன்னிங்க. ஆளு இப்படி பாதியா போயிட்டீங்க. வாங்க நம்ம ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் போய் என்னன்னு பாத்துட்டு வந்துரலாம்” என்று பதட்டத்துடன் நீரூபன் அவரை அழைக்க.

“ஒன்னும் பதட்டப்படாத. டைபாய்டு வந்தா அப்படித்தான் இருக்கும்.” என்று சாதாரணமாக கூறிவிட்டு அவனை அமரச் சொல்லி தானும் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

“டைபாய்டா? என்ன பெரியப்பா ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் அன்னைக்கே வந்து உங்கள பார்த்திருப்பேன்ல?” என்று மனத்தாங்கலுடன் கேட்டவனை கண்டு மெலிதாக புன்னகைத்தார்.

“மருந்து மாத்திரை ட்ரிப்ஸ் எல்லாம் போட்டாச்சு. சாப்பாடும் கட்டுப்பாடாக தான் இருக்கிறது. இன்னொரு பத்து நாள்ல தேறிடுவேன். நீ முதல்ல எதுக்காக என்ன அவ்ளோ அவசரமா பாக்கணும்னு நினைச்சே? அதை சொல்லு .” என்று ஆர்வமும் இவன் என்ன கேட்க போகிறானோ அதற்கு தன்னால் பதில் அளிக்க முடியுமோ முடியாதோ என்ற சிறு தவிப்பும் கலந்து அவனை நோக்கினார்.

தன் கைபேசியில் இருந்து வசீகரன் அனுப்பிய அந்த வலைதள முகவரி மூலமாக வீடியோவை ஒளிபரப்பிய நீரூபன் “இது என்னன்னு பாருங்க பெரியப்பா” என்று அவரிடம் கொடுத்தான்.

அதை வாங்கி பார்த்தவர் “நீரூபா” என்று பதட்டத்துடன் எழுந்தார்.

“இது.. இது.. மணிவாசகத்தோட கார் தானே? அதான்பா ஆளும் கட்சில தொழில்துறை அமைச்சர் தானே?” என்று பதட்டத்துடன் வினவினார்.

“எனக்கும் அப்படி தான் தோணுச்சு பெரியப்பா. நியூஸ்ல அவரோட கார் பெட்ரோல் டேங்க் வெடிச்சு இறந்துவிட்டதா தான் தகவல் வந்தது. ஆனா இதைப் பார்த்தால் காரை ஒரு லாரி இடிச்சுட்டு போயிருக்கு. அதுக்கு அப்புறம் அந்த கார்ல பெட்ரோல் டேங்க் வெடிச்சிருக்கு. எனக்கு இதை எப்படி எடுத்துக்கறதுன்னு தெரியல பெரியப்பா.” என்று சிந்தனையுடன் கூறினான்.

“சரி இந்த புட்டேஜ் உன்கிட்ட எப்படி?” என்று அவரும் புரியாமல் அவனிடம் வினவ,

“கட்சியோட தலைமை ஆபீஸ்ல இருக்குற சர்வரில் இருந்து ஒரு என்க்கிரிப்டட் போல்டர் கண்டுபிடிச்சு எடுத்தோம். அதுல நிறைய இதே மாதிரி என்க்கிரிப்டட் வீடியோ ஃபைல்ஸ் இருந்துச்சு. ஒவ்வொன்னா டீகிரிப்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அப்படி பண்ணதுல இதுதான் முதல் வீடியோ.

பாத்தப்ப எனக்கு பெருசா ஒன்னும் தெரியல. ரெண்டு மூணு தடவ பார்த்த பின்னாடி தான் இது அமைச்சர் மணிவாசகத்தோட கார் ஆக்ஸிடெண்ட்ன்னு புரிஞ்சது.

அவர் தன்னோட சொந்த வேலையா ஏதோ பள்ளிக்கூடத்துல இருந்து அப்படியே கிளம்பிட்டாருன்னு கதை சொன்னாங்க. ஆனால் அடுத்த ரெண்டு நாள் கழிச்சு ரோடு ஆக்ஸிடென்ட்ல இறந்துவிட்டதா நியூஸ் வந்தது. அதுவும் ஆக்சிடென்ட் இல்ல மர்டர்ன்னு இந்த வீடியோ பார்த்தா தெரியுது. ஆனா இந்த வீடியோ கட்சி ஆபீஸ்ல எப்படி வந்துச்சுன்னு தான் புரியல. இத சீக்ரெட்டா என்க்கிரிப்ட் பண்ணி வச்சது யாருன்னும் எனக்கு தெரியல” என்று அவன் அவரிடம் எடுத்துரைத்தான்.

அவரோ அவன் எதிர்பார்க்காத சில விஷயங்களை தெரிவித்தார் “சாதாரணமா வெளியிலிருந்து பார்க்கிறப்ப ஆளுங்கட்சி எதிர்க்கட்சின்னு அடிச்சு புடிச்சு சண்டை போடுறாங்கல்ல? உண்மையில எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா தான் இருப்பாங்க. இவங்க தப்பு பண்ற விஷயம் அவங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அவங்க தப்பு பண்ணா இவங்களுக்கு தெரியும். அவங்களுக்கு சாதகமான விஷயங்களை இவங்க சேகரிச்சு வச்சுக்குவாங்க. அப்பதான் வேற ஏதாவது ஒரு சூழ்நிலை வரும்போது எதிர்க்கட்சியோ ஆளு கட்சியோ தங்களுக்கு சாதகமான விஷயங்களை செஞ்சுக்க முடியும்.

அப்படி கட்சி தலைமையில் இருக்கிற ஒரு சிலருக்கு இது மாதிரி ஆதாரங்கள் கிடைக்கிறப்ப அதை வச்சுப்பாங்க. இது அடுத்தடுத்து கட்சியோட தலைமை பொறுப்புக்கு வர்றவங்களுக்கு கைமாறும். என் அப்பா இது மாதிரி அவரு ஆளுங்கட்சியா இருந்தப்ப எதிர்க்கட்சி ஆட்களோட தவறுகளை சேகரிச்சு வச்சப்ப ஏன் நடவடிக்கை எடுக்கலன்னு நான் கேட்டு சண்டை போட்டேன். அப்பதான் அவரு இதெல்லாம் அவங்கள தண்டனைக்கு உள்ளாகிறதுக்காக உபயோகப்படுத்திட்டா நாளைக்கு நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது நமக்கு சாதகமா உபயோகப்படுத்த முடியாது. இதெல்லாம் அவங்களுக்கு எதிரா நம்ம கிட்ட இருக்கிற லிவரேஜ்.

தேவைப்படும்போது தேவையான நேரத்துல அதை உபயோகப்படுத்த தெரிஞ்சவன் தான் சரியான தலைவன்னு என்கிட்ட சொன்னாரு அதிலிருந்து தான் எனக்கு அந்த தலைமை பொறுப்பு மேல இருந்த ஆசையே போச்சு” என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

“அப்போ இது எங்க அப்பாவுக்கு வந்து எங்க அப்பா அடுத்து வரவங்களுக்கு கொடுப்பதற்காக சேமிச்சு வச்ச பைலா இருக்கலாம். இல்ல எங்க அப்பாவுக்கே தெரியாம யாரோ சில விஷயங்களை சேகரிச்சு ஒளிச்சு வச்சு இருக்கலாம் இல்லையா?”  என்று தன் தாடையை லேசாக தேய்த்தபடி நீரூபன் யோசித்துக் கொண்டிருக்க

“திருமூர்த்தி ஆட்களை மேனுப்புலேட் பண்ணுவான் தான் நினைக்கிற பதிலை அவங்கள சொல்ல வைக்கிறதுல அவன் கில்லாடி. ஆனா அடிச்சு காயப்படுத்தி, கொலை செஞ்சு தான் காரியத்தை சாதித்துக்கொள்கிற குணம் அவகிட்ட கிடையாது அதனால இது திருமூர்த்தி ஓடதா இருக்க வாய்ப்பு இல்ல. நீ வேற விதங்கள்ல இதை விசாரி. ஒரு ஆளும் கட்சி அமைச்சரையே கொல்ல செய்ய முடியுதுன்னா அதுவும் கொன்ன வீடியோவை தைரியமா ஒரு சர்வரில் போட்டு வைக்க முடியுதுன்னா அவங்க சாதாரணமான ஆளா இருக்க முடியாது. அப்பா மேலையும் அக்கா மேலயும் ஒரு கண்ணு வச்சுக்கோ. பாதுகாப்புக்கு ஆட்கள் அதிகப்படுத்து.” என்று முருகப்பன் பதட்டத்துடன் நிறுவனத்திற்கு அறிவுரைகளை வழங்கினார்.

“சரிங்க பெரியப்பா. நான் பாத்துக்குறேன். நீங்க இதெல்லாம் போட்டு மனச குழப்பிக்காதீங்க. ரெஸ்ட் எடுத்து உடம்ப தேத்துங்க. நாளைக்கு பண்ணையில் இருந்து பிரெஷா காய்கறி எல்லாம் குடுத்து விட சொல்றேன். இனிமேல் எப்பயும் பண்ணையில் இருந்து உங்களுக்கு காய்கறி வரும் முன்னாடியே கொடுக்க நினைச்சேன். நீங்க வேண்டாம்னு சொன்னீங்க அப்போ உங்க வார்த்தையை நான் மதிச்சேன். இப்ப இவ்வளவு உடம்பு சரியில்லாம இருக்கும்போது நான் சொல்றதை நீங்க கேட்கணும். தட்டி பேசக்கூடாது.”  என்று அன்புடன் கட்டளையிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

வெளியே வந்து காரில் ஏற நினைத்தவன் சிந்தனையுடன் ஒரு நொடி நின்றான். தன் தந்தையும் இல்லை என்றால் இது மாதிரி காரியங்களை அந்த கட்சிக்குள் இருந்து செய்து கொண்டிருப்பவர் யார் என்ற கேள்வி அவனது மூளையை குடைய துவங்கியது.