அடங்காத அதிகாரா 34

முருகப்பன் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை சந்தித்து அந்த வீடியோக்கள் மற்றும் பைல்களை பற்றி விசாரிக்க கால தாமதம் ஏற்பட்டது.

வசீகரனும் நேத்ராவும் தேர்தல் பிரச்சார வேலைகளை திரை மறைவில் இருந்து செய்து முடிக்க அவர்களது நேர்மறையான பிரசார முறை மக்களை அந்த கட்சியை நோக்கி திருப்பியது.

நீரூபன் பள்ளி, பண்ணை என்று அவனது வேலைகளில் கவனமாக இருந்திட அதற்குள் உள்ளாட்சித் தேர்தல் நாளும் வந்தது.

மக்கள் வரிசையாக நின்று தங்கள் வாக்குகளை வாக்கு சாவடிகளில் பதிவு செய்ய அவர்களை காவல் துறையினர் பாதுகாப்புடன் கண்காணித்தனர்.

இரண்டு நாட்களில் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

கடைசி நேர ஆயுதமாக திருமூர்த்தியின் ஆட்சி காலத்தில் நடந்தேறிய இரட்டை கொலையை தற்போதைய ஆளும் கட்சி குறிப்பிட்டு பிரசாரம் செய்ய நினைக்க, அதையும் நீரூபனின் யோசனைப்படி இருவரை கன்னியாகுமரி நீதிமன்றத்தில் சரணடைய வைத்து அதையும் நமுத்துப் போல செய்து விட்டனர்.

முடிவுகள் இரண்டு கட்சிகளில் எதற்கு சாதகமாக இருக்கும் என்று கூற முடியாது என்று பொதுவான செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு கொண்டிருக்க, முடிவு வெளிவரும் நாளும் விடிந்தது.

காலையில் எப்போதும் போல நீரூபன் எழுந்து அவனுடைய அலுவலகத்துக்கு கிளம்பி கொண்டிருந்தான். காலை உணவை முடித்துக் கொண்டு வாகனத்தை நோக்கி அவன் செல்லும் பொழுது வீட்டின் கூடத்தில் அவனைக் கண்ட நாகரத்தினம் மகனின் கையை பற்றி கொண்டு,

“நீ அப்பாவுக்காக நிறைய செய்திருக்க. இந்த தேர்தல்ல அப்பாவுக்கு வெற்றி கிடைக்குதோ இல்லையோ அதுக்காக நீ எடுத்த முயற்சிகள் கண்கூடா எனக்கு தெரிஞ்சது. இத்தனை நாளும் எந்த பிரச்சனையும் வேண்டாம், யார்கிட்டயும் மனஸ்தாபம் ஏற்படுத்திக்க கூடாதுன்னு சொல்லி வளத்த நானே இந்த முறை என்ன நடந்தாலும் பரவாயில்லை உன் மனசுக்கு என்ன பிடிக்குதோ அதை பண்ணுன்னு சொல்றேன். உனக்கு அரசியல் தான் பிடிச்சிருக்குனா அஞ்சனாவை பத்தி நினைக்காம நீ அதுக்கான வேலையை பாரு” என்று கூறினார்.

அன்னை பேசியதை கேட்டு மெல்லிய புன்னகை புரிந்தவன், “எல்லாரும் இதே தான் சொல்றீங்க. நான் அரசியலுக்கு வர்றது, இல்ல.. வராம போறது, என் கையில இல்ல. நான் இப்போ பண்ணை பள்ளிக்கூடம்னு என்ன பிசியா வச்சிருக்கேன். இதெல்லாம் சரியா செய்றது தான் என்னோட ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டி. அரசியல் பத்தி இப்போ யோசிக்க வேண்டாம். இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல! அப்புறம் பார்ப்போம்.”என்று அன்னையின் கன்னத்தை கிள்ளிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் மாலை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியதோடு எந்தவித வன்முறையிலும் மக்களோ, கட்சி உறுப்பினர்களோ ஈடுபடக்கூடாது என்றும் தெரிவித்திருந்தனர். காவல் துறையினருக்கும் அது அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நேத்ரா மிகப்பெரிய சுழலில் சிக்கி இருந்து தப்பியவளைப் போல அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தாள். அவளுடைய அலுவலகத்திற்குச் சென்று அன்றாட பணிகளை முடித்து அன்று இருந்த ஒரு முக்கியமான கலந்தாய்வையும் முடித்துக் கொண்டு பூமிகாவுக்கு கைபேசியில் அழைத்து.

“ஹே லேண்ட், இன்னைக்கு நீ ஃப்ரீயா? நாம ஜாலியா ஒரு ரைட் போலாமா?” என்று இவள் ஆர்வத்துடன் வினவியதும்,

“கண்டிப்பா போலாம் அண்ணி, ஆனா என் வெஸ்பால போனா நீங்க நினைக்கிற ஜாலி கிடைக்குமான்னு தெரியல நான் முடிஞ்சா ஆனந்தோட ராயல் என்ஃபீல்டு பைக்கை சுட்டுட்டு வர ட்ரை பண்றேன்” என்று கூறிவிட்டு,

“எங்க போறோம்? என்ன பிளான்?” என்று அவளும் தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தினாள்.

“எப்படியும் இன்னைக்கு முழுக்க இந்த வோட்டிங் அது இதுன்னு ஒரே கெடுபிடியா தான் இருக்கும். நாம ஏன் ஹைவேஸ்ல ஒரு லாங் ட்ரைவ் போக கூடாது? சென்னை டு பெங்களூர். போலாமா?” என்று நேத்ரா ஆர்வத்துடன் வினவ,

“எல்லாம் ஓகே தான் ஆனா ஒரு சின்ன சந்தேகம்.. நீங்க வசிய அண்ணாவை கூப்பிடாம என்னை ஏன் கூப்பிடுறீங்க?” என்று விஷமமாக சிரித்தாள்.

“அவன் இத்தனை நாள் செஞ்ச வேலைக்கான பலன் இன்னைக்கு தெரிய போகுது. இன்னைக்கு என் கூட வானு கூப்டா எப்படி இருந்தாலும் அவன் சாக்கு தான் சொல்ல போறான். கேட்டு என் நல்ல மூடை நான் ஸ்பாயில் பண்ணிக்கிறதை விட பெட்டர் உன் கூட போயிட்டா நீயும் நானும் ஹாப்பியா டைம் ஸ்பென்ட் பண்ணலாம். ஏன் ரெண்டு பொண்ணுங்க சேர்ந்து ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ண கூடாதா என்ன?” என்று நேத்ரா வினவ, வாய்விட்டு சிரித்த பூமிகா

“இப்பதான் டான்ஸ் கிளாஸ்லயிருந்து வெளியில வரேன். நேரா மாமா ஆபீஸ் போயிட்டு ஆனந்த் கிட்ட இருந்து வண்டியை சுட்டுட்டு வந்துடறேன். உங்க ஆபீஸ்க்கா இல்ல வேற எங்காவது பிக்கப் பாயின்ட் சொல்றீங்களா?” என்று நேத்ராவை மகிழ்விக்க தேவையான உற்சாகத்துடன் கேட்டாள்.

“நானும் அண்ணா ஆபீஸ் வந்துடுறேன். நீ சாவி வாங்கிட்டு பார்க்கிங்ல வெயிட் பண்ணு. அங்க இருந்தே நம்ம போகலாம்.” என்று முடித்துக் கொண்ட நேத்ரா, பக்கத்தில் இருந்த நவீன ஆடையகத்துக்கு சென்று காலையில் அணிந்து வந்த ஆபீஸ் உடைக்கு பதிலாக ஒரு லாங் ரைட்டுக்கு தேவையான ஜீன்ஸ் டீ சர்ட் ஓவர் கோட் என வாங்கிக்கொண்டு, கூடவே இன்னும் சில உடைகளும் எடுத்தாள். அங்கேயே உடைமாற்றும் அறையில் உடையை மாற்றிக் கொண்டு பணத்தைச் செலுத்தி விட்டு நீரூபனின் அலுவலகம் நோக்கி தன் காரைச் செலுத்தினாள்.

ஆனந்துக்கு தொடர்ச்சியாக பலமுறை அழைப்பு விடுத்த பூமிகா அவன் அதை ஏற்காமல் போன கோபத்தில் நேராக நீரூபனின் அலுவலகத்திற்கு வந்து தன்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு ஆனந்தை பார்க்க அவனுடைய அலுவலக அறை நோக்கி கோபமாக செல்லலானாள்.

ஆனால் அங்கிருந்த ஊழியர்களோ ஆனந்தும் நீரூபனும் முக்கியமான வேலையாக வெளியே சென்றிருப்பதாக கூறியதும் அவனது அலுவலக மேசையை குடைந்து அவன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டாள்.

அங்கிருந்த வரவேற்பு பெண்ணிடம் தான் ஆனந்தன் வண்டியை எடுத்துக் கொள்வதாகவும் அவன் வந்தால் கூறி விடும் படியும் தகவல் தெரிவித்து தன் வண்டி சாவியை கொடுத்துவிட்டு கீழே கார்பார்க்கிங்கில் காத்திருந்தாள்.

அப்படியே நடந்து வெளியே வேக வேகமாக சென்று கொண்டிருக்கும் மக்களையும் சாலையையும் வேடிக்கை பார்த்தபடி ஓரமாக நடந்தாள்.

அவளது முகத்தில் மெல்லிய வெட்கத்துடனான புன்னகை பரவியது. அதற்கு காரணம் அவள் அங்கு வந்தபோது ஆனந்தின் மேசையை குடைந்ததில் அவளும் நீரூபனும் பேசிக் கொண்டிருந்த ஏதோ ஒரு தருணத்தை புகைப்படமாக எடுத்திருந்த ஆனந்த் அதை தன்னுடைய மேசை எழுப்பறையின் அடியில் ஒளித்து வைத்திருந்தான். அதோடு அவள் பிறந்த நாளுக்கு வாங்கிய அவனது பரிசையும் இணைத்து வைத்திருந்தான்.

அவளுடைய பிறந்தநாள் வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்க தன் நண்பன் நினைவு வைத்துக் கொண்டு பரிசு வாங்கியதை விட தன்னை தன் மாமனுடன் புகைப்படம் எடுத்து அதை தனக்கு பரிசளிப்பதற்காக வைத்திருப்பதை கண்டவள் மகிழ்ச்சியும் நிறைவும் அடைந்தாள்.

ஆண் நண்பர்கள் ஒரு கட்டத்தில் பெண்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தங்களுடைய ஆளுமையை காட்ட எண்ணுவர். அது அவர்களுடைய முடிவுகளிலோ உடல் நலனிலோ அவர்களுடைய உறவுகளின் தன்மையிலோ தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி அந்த பெண்ணின் வாழ்க்கையில் குடும்பத்தைத் தாண்டி தானும் ஒரு முக்கியமான நபர் என்பதை அவளுக்கு நினைவூட்டுவதாகவும் நிலை நிறுத்துவதாகவும் எண்ணிக்கொண்டு அவர்களுக்குள் இருக்கும் உன்னதமான ஒரு உறவினை அவரே அறியாமல் உடைப்பதற்கான செயலை செய்து விடுவர்.

ஆனந்த் ஆரம்பம் முதலில் அவளுடைய எல்லா முடிவுகளிலும் துணை இருப்பதோடு அவள் சோர்ந்து போகும் போதெல்லாம் அவளுக்கு உற்சாகமூட்டுவதும், தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பதுமாக அவருடைய இன்பத்தில் மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தான்.

இன்று நீரூபன் அவனுடைய காதலை தெரிவித்த பின்னரும், தான் அதிகம் ஆனந்தை சந்திக்காத போதிலும் அதனை தவறாக எடுத்துக் கொள்ளாதவன் அவளுடைய மகிழ்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி ஒவ்வொன்றையும் நினைவுடன் செய்வதை எண்ணியவள் நெகிழ்ந்து போனாள்.

அவள் நடந்து சற்று தூரம் வந்துவிட அவளுக்கு பின்னால் காரின் ஹாரன் சத்தம் கேட்டு திடுக்கிட்டு தன் நினைவுகளில் இருந்து விடுபட்டு சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். நேத்ரா காருக்குள் இருந்து தலையை வெளியே நீட்டி,

“எங்கடி போற? அண்ணா ஆபீஸ் தாண்டி நடந்து போயிட்டு இருக்க?வண்டி எங்க?” என்று பதட்டத்துடன் வினவ,

“சாரி அண்ணி, ஏதோ ஞாபகத்துல அப்படியே வந்துட்டேன். சாவி இதோ இருக்கு. வண்டி அங்க பார்க்கிங்கில் இருக்கு. வாங்க வாங்க போலாம்” என்று உற்சாகமாக அவளுடன் இணைந்து தன்னுடைய சாலை பயணத்தை அனுபவிக்க தயாரானாள்.

“இந்தா இதுல டி-ஷர்ட் இருக்கு மாத்திக்கோ. எனக்கு தெரியும் நீ டான்ஸ் கிளாஸ்ல இருந்து நேரா அப்படியே வந்துருவேன்னு. அதான் டி-ஷர்ட் வாங்கிட்டு வந்தேன்.” என்று அவளிடம் கொடுக்க, நேத்ராவின் காரில் சட்டை மாற்றிக் கொண்டு பிண்ணி இருந்த தலையை தளர்த்தி விட்டாள் பூமிகா.

இருவரும் மகிழ்ச்சியாக வாகனத்தை எடுத்துக்கொண்டு சாலையில் செல்ல பல நாட்களுக்குப் பிறகு கூட்டில் இருந்து விடுபட்ட பறவை போல மகிழ்ச்சியாக உணர்ந்தாள் நேத்ரா. எப்பொழுதும் காரில் ஏசியில் பயணிக்கும் அவளுக்கு இன்று பூமிகாவுடனான இந்த இருசக்கர வாகன பயணம், புதுமையாகவும் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் இருக்க சில நாட்களாக மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரங்கள் மெல்ல காற்றில் கரைந்து போனது.

அன்றைய நாள் மாலை வரை ஒவ்வொரு வட்டம் மாவட்டம் நகராட்சி மாநகராட்சி வாரியாக உள்ளாட்சி தேர்தலில் வென்ற ஒவ்வொரு வேட்பாளரும் பெயரும் வெளிவர துவங்கியது.ஒரு சுற்றில் ஒரு கட்சி முன்னிலை வகிப்பதும் அடுத்த சுற்றில் மற்றொரு கட்சி முன்னிலை வகிப்பதுமாக மாறி மாறி இவர் தான் என்ற முடிவுக்கு வர முடியாதபடி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்த தேர்தல் முடிவு கடைசி சுற்றில் திருமூர்த்தியின் கட்சியான மறுமலர்ச்சி மக்கள் கழகத்திற்கு சாதகமாகவே எழுபது சதவிகிதம் முடிந்தது.

தேர்தலில் அவர்கள் எண்ணிப் பார்க்காத அளவுக்கு அவர்களுடைய கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதில் அந்த கட்சியின் உறுப்பினர்கள் மிகவும் மகிழ்ந்து போய் சாலையில் வெடி வெடிப்பதும் இனிப்புகளை பகிர்ந்து கொள்வதுமாக தங்களுடைய கட்சியின் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர்.

நான்காண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சியாக மக்கள் தங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் உழன்று கொண்டிருந்த ஒவ்வொரு கட்சியின் உறுப்பினருக்கும் இந்த வெற்றி மிகப்பெரிய தூண்டுகோலாகவும் எப்படியும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விடலாம் என்ற எண்ணத்தையும் நம்பிக்கையையும் அவர்களுக்கு வரவைப்பதாகவும் இருந்தது.

மக்களும் தொண்டர்களும் வெளியே கொண்டாடித் தீர்க்க, திருமூர்த்தி சொல்ல முடியாத ஒரு நிம்மதியுடன் தன்னுடைய அறையில் அமர்ந்திருந்தார். அன்று அவரை சந்திக்க மக்களும், கட்சி தொண்டர்களும், தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்களும் போட்டி போட்டுக் கொண்டு கட்சி அலுவலகத்தில் காத்திருக்க, அவரோ தன்னுடைய கட்சி வென்றுவிட்ட மகிழ்ச்சி ஒருபுறமும் புதிதாக அவருக்கு தெரிய வந்த ஒரு தகவலினால் மனதில் ஏற்பட்ட குறுகுறுப்பான ஒரு உணர்வுடனும் அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையுடன் தன் அறையை விட்டு வெளியேறாமல் அமர்ந்திருந்தார்.

இப்பொழுது அவருக்கு தன்னுடைய எண்ணத்தை வெளியிடவும் தனக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை போக்கிக் கொள்ளவும் உறுதுணையாக ஒருவர் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கியது.

அஞ்சனா உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததிலிருந்தே அவரை விட்டு சற்று விலகி இருந்ததும் எப்பொழுது வசீகரனின் கம்பெனியை அவர் இதற்காக ஏற்பாடு செய்தாரோ அன்றிலிருந்து அவரிடம் அதிக இடைவெளி விட்டதுடன் இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிகமாக அவள் எதிலும் பங்கு கொள்ளாதது அவருக்கு உறுத்தினாலும் இன்று தன் மனதில் இருப்பதை அவளிடம் வெளியிட்டு அவள் என்ன நினைக்கிறாள் என்று கேட்கலாமா என்ற எண்ணத்தில் இருந்தவர் கைபேசியில் தன் மகளின் எண்ணை அழுத்தி அழைப்பை மேற்கொண்டார்.