அடங்காத அதிகாரா 33

அதிகாரம் 33

காலை அலுவலகம் செல்லத் தயாராகி தன் அறையில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தான் நீரூபன். புலனத்தில் பூமிகா தான் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற இருப்பதாகவும் அதற்கான டிக்கெட்டை ஆனந்த்திடம் கொடுத்து விட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தாள்.

அதைப் படித்தவுடன் மெல்ல புன்னகை புரிந்த நீரூபன் அடுத்து வசீகரனிடமிருந்து வந்திருந்த புலனச் செய்தியை திறந்தான்.

அதில் ஒரு இணைப்பு அனுப்பப்பட்டிருந்தால் அதை கிளிக் செய்ததும் அது வேறு ஒரு வலைதளத்துக்கு எடுத்துச் சென்றது.

அந்த வலைதள முகவரி அவனது தனிப்பட்ட சைபர் செக்யூரிட்டி கம்பெனியில் அவன் மிகவும் ரகசியமான ஃபைல்களை அனுப்பும் முறைக்காக அவனே ஏற்படுத்தியது.

அதை கண்டவுடன் புருவத்தை சுருக்கிய நீரூபன் அது என்ன வர இருக்கிறது என்பதனை பார்ப்பதற்கு ஆவலாக இருந்தான்.

அதில் ஒரு வீடியோ இருப்பதாக காட்டியதும் அதை கிளிக் செய்ய சென்று கொண்டிருந்த ஒரு கார் மேல் ஒரு லாரி வேகமாக வந்து மோதுவது போன்ற காட்சியும் அதன்பின் அந்த லாரி அங்கிருந்து விலகிச் செல்வது போல முழுமையான சிசிடிவி காட்சிகள் அதில் இருந்தது.

இது என்ன விபத்து என்ன என்ற எந்த புரிதலும் இல்லாத நீரூபன் குழப்பத்துடன் அதனை விட்டு வெளியே வந்து வசீகரனை கைபேசியில் அழைத்தான்.

“இப்பதான் பாத்தீங்களா மாமா?” என்று எடுத்தவுடன் கேள்வி எழுப்பிய வசீகரன்,

“செல்போன்ல பேச முடியாது மாமா. எதுனாலும் நேர்ல பேசலாம். ஒன்னு எப்பவும் போல ஆபீஸ் பின் வாசல் வழியாக வாங்க. இல்லன்னா ஹோட்டல் கிராண்ட் வியூல எனக்கு மத்தியானம் ஒரு பிசினஸ் லஞ்ச் மீட்டிங் இருக்கு. நீங்களும் வந்துட்டா அதை முடிச்சுட்டு அப்படியே உங்க கூட பேசிடுவேன். வெளியே யாரும் நம்மள பார்த்தாலும் எதுவும் பிசினஸ் விஷயமா மீட் பண்ண மாதிரி நினைச்சுப்பாங்க. நீங்களும் டம்மியா உங்க ஆபிஸோட சைபர் செக்யூரிட்டி கான்ட்ராக்ட்ட எனக்கே குடுத்துடுங்க மாமா” என்று சிரித்தபடி கூறிய வசீகரனிடம்,

“வசி சொந்த ஆபிஸ்க்கு பின்வாசல் வழியாக வர ஒரே முதலாளி நானா தான் இருப்பேன். போதும் இன்னிக்கு நான் அப்படி வர விரும்பல. நம்ம ஹோட்டல்லையே மீட் பண்ணலாம். ஆனாலும் இப்படி எல்லாம் நீ உன் பிசினஸ்க்கு மார்க்கெட்டிங் பண்ண கூடாது. அதுவும்.. எப்படி? டம்மியா… உனக்கு நான் காண்ட்ராக்ட் கொடுக்கணும். நல்லா பேசுற” என்று அவனும் பதிலுக்கு புன்னகையுடன் கூறிவிட்டு தன் வருகையை அவனுக்கு உறுதி செய்தான்.

அலுவலகத்திற்கு கிளம்பி சென்று விட்டு பின் பின் வசீகரனை சந்திக்க செல்லலாம் என்ற முடிவுடன் காரில் செல்வதற்காக சாவியை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்ததும் மாடியில் இருக்கும் ஹாலில் நேத்ரா குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்ததைக் கண்டான்.

தங்கை ஏதோ சிந்தனையில் இருப்பதாக எண்ணிய நீரூபன் எப்போதும் போல அவள் பின்னே சென்று “என்னடா புதுசா எந்த கம்பெனி ஆரம்பிக்க போற?” என்று கேலியாக வினவ அவளோ சற்று என்று அவனை நோக்கி விட்டு,

“நீதான அண்ணா அந்த ஆள அடிச்சு ஹாஸ்பிடல்ல படுக்க வச்சே? அப்படி இருக்கிறப்ப நியூஸ்ல ஏன் யாரோ அடிச்சிட்டதா நியூஸ் போடறாங்க? அதுவும் அவங்க போடுற விதம் ஆளும்கட்சி ஆள் தான் செய்த மாதிரி இருக்கே!” என்று படபடப்புடன் வினவினாள்.

“ஏன் டா இதெல்லாம் பெருசா எடுத்துக்குற? அந்த காட்சி தலைவர் அஞ்சனாவை டார்கெட் பண்ணி பேட்டி கொடுத்திருந்தாரு. அவர ஆஃப் பண்றதுக்காக நான் தான் இப்படி நியூஸ் குடுக்க சொல்லி இருந்தேன்.” என்று சாதாரணமாக தங்கைக்கு பதிலளிக்க,

அவளோ கடும் கோபத்துடன் “நீ ஒரு விஷயத்தை செஞ்சுட்டு அதை தூக்கி இன்னொருத்தர் மேல பழியா போடுவியா? அப்போ உனக்கும் அஞ்சு அக்காவுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கத்தத் துவங்கினாள்.

திடீரென்று அவள் கோபத்துடன் இத்தனை சத்தமாக கத்துவதை புரியாது நோக்கிய நீரூபன் “ஏன் டா எதுக்கு இவ்ளோ கோபப்படுற?  அஞ்சு அவ என்ன பண்ணினா? பழி போட்டதால்லாம் சொல்ற? எனக்கு எதுவுமே புரியலடா. அண்ணனுக்கு புரியிற மாதிரி சொல்றியா?” என்று அவளை அழைத்து சோபாவில் அமர வைத்து தலையில் மெதுவாக தடவி கொடுத்து வினவினான்.

“அஞ்சு அக்கா தான் எப்பயும் தன்னுடைய தேவைக்காகவோ இல்ல எதுக்காகவோ ஒரு விஷயத்தை செஞ்சுட்டு அவங்க செய்யலன்னும் அடுத்தவங்க செஞ்சாங்கனும் பழி போட்டு காரியம் சாதிப்பாங்க. அதே மாதிரி இப்ப நீ என்னடான்னா எனக்காக அவரை அடிச்சிட்டு இன்னிக்கி அந்த கட்சிக்காரங்க அடிச்சாங்கங்கிற மாதிரி நியூஸ் கொடுக்கிற. அப்ப உனக்கும் அவங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லையா? நான்தான் பைத்தியம் மாதிரி உன்னை நல்லவன் நினைச்சுட்டு இருக்கேனா?” என்று மறுபடியும் கோபத்துடன் முறைத்தாள்.

“அஞ்சு என்ன பண்ணினான் எனக்கு தெரியாது. ஆனா நான் இதை யாரையும் கெடுக்குறதுக்காகவோ இல்ல மாட்டி விடறதுக்காகவோ செய்யல.  இந்த தேர்தல்ல அப்பா ஜெயிக்கணும். அவரு வாய் விட்டு என்கிட்ட கேட்டுட்டாரு. அதுக்காக எதிர்ல வர்ற சின்ன சின்ன தடைகளை யாருக்கும் பாதகம் இல்லாத விதத்தில் தான் நான் சமாளிச்சு, அவரை அந்த வெற்றியை நோக்கி கூட்டிட்டு போக முயற்சி பண்றேன். அடுத்தவங்கள பாதிக்காத பொய் என்னைக்குமே நல்லது தான். திருவள்ளுவர் சொன்னது உனக்கு நினைவில் இல்லையா? ‘பொய்மையும் வாய்மை இடத்து'” என்று அவன் கூற

“போதும் அண்ணா பூமிகா அடிக்கடி நீ அரசியலுக்கு வரணும்னு சொல்லும்போது உனக்கு அதெல்லாம் சரிபடாதுன்னு நான் நினைச்சிருக்கேன். ஆனா நீயும் சராசரி அரசியல்வாதி மாதிரி இன்னொருத்தரை குற்றம் சுமத்துறதுக்கு நீ செய்த குற்றத்தை அவங்க தலையில போடுற. கண்டிப்பா நீ பெரிய அரசியல்வாதியா வந்துடுவன்னு எனக்கு இப்ப நம்பிக்கை வந்துடுச்சு.” என்று கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

தங்கை கோபப்படுவது அவனுக்கு நன்றாகப் புரிந்தாலும் அதில் மெல்லியதாக ஒரு நியாயம் இருப்பதாகவும் அதற்கு பின்னால் கண்டிப்பாக அவளை பாதித்த ஏதோ ஒரு சம்பவம் இருப்பதாகவும் எண்ணியவன் அவளை விட்டுப் பிடிக்க முடிவு செய்து இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு தன் அலுவலகத்தை நோக்கி விரைந்தான்.


மதியம் தன்னுடைய பிசினஸ் மீட்டிங்கை முடித்துக் கொண்ட வசீகரன் நீரூபனின் வரவுக்காக காத்திருந்தான்.

தன் வந்து விட்டதை கையை உயர்த்தி கூறிய நீரூபன் அவன் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

வசீகரனைக் கண்டதும் காலையில் நேத்ரா பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது. ஆனால் வசீகரன் இப்பொழுது பேச அழைத்திருப்பது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் அதனை புறம் தள்ளிவிட்டு அவன் சொல்லப் போவதை கேட்க தயாரானான்.

பிசினஸ் மீட்டிங்கு இது நல்ல பிளேஸ் என்று அவன் எதிரே வந்து அவன் சொல்லப் போவதை கேட்க தயாராக இருப்பது போன்ற பாவனையுடன் அமர்ந்தான் நீரூபன்.

“எனக்கு என்னவோ நீங்க நம்ம ஆபீஸ்க்கு பின் வாசல் வழியாக வரும்போது தான் ரொம்ப க்ளோசா தோணுது” என்று அவனை கேலி செய்தான் வசீகரன்.

“தோணும் தோணும் அதான் சொன்னனே பின்வாசல் வழியா வர்ற முதலாளி நான் தான்னு” என்ற அவனும் வசீகரனை வாரி விட முயன்றான்.

“அப்படி மட்டும் நினைக்காதீங்க மாமா. இன்னொருத்தரும் அப்படி இருக்காரு. எனக்கு தெரிஞ்சு நீங்க கொஞ்சம் ஸ்வீட். அவரு ரொம்பவே அடமண்ட்.” என்று கூறிவிட்டு,

“அவர பத்தி நான் அப்புறம் சொல்றேன். இப்போ நீங்க சொன்னதை வச்சு அந்த பைல் எல்லாம் பார்த்ததில் உங்களுக்கு அனுப்புன மாதிரி பத்து பதினஞ்சு வீடியோ அதுல இருக்கு. எல்லாமே ஏதோ ஒரு க்ரைம்க்கான எவிடன்ஸ். ரேண்டமா பல வருஷத்துக்கு முன்னாடி இருந்து இப்ப வரைக்கும் எந்த ஒரு தகவலும் இல்லாம சேமிச்சு மட்டும் வச்சிருக்காங்க. இதற்கான ஆக்சிஸ் யாரோ ஒருத்தருக்கு மட்டும் தான் இருக்கு. அவங்களும் தன் சொந்த பெயரை உபயோகப்படுத்தாம சீக்ரெட் நேம் தான் வச்சிருக்காங்க. அதனால இதை யூஸ் பண்றது யாருன்னு தெளிவா தெரியல. எனக்கு என்னவோ முருகப்பன் சார் கிட்ட கேட்கலாம்ன்னு தோணுது. கண்டிப்பா அவருக்கு இத பத்தி தெரிஞ்சிக்கலாம்.” என்று தனக்கு தெரிந்ததையும் மனதில் தோன்றியதையும் மறைக்காமல் நீரூபனிடம் கூறினான் வசீகரன்.

“பெரியப்பா கிட்ட கண்டிப்பா கேட்கலாம். இது எதுலயுமே அவரோட இன்வால்வ்மெண்ட் இருக்காது. கேட்டாலும் எனக்கு இதை பத்தி தெரியலன்னு தான் சொல்லுவாரு” என்று நெற்றியை லேசாக கீறிவிட்டபடி நீரூபன் யோசிக்க துவங்கினான்.

“அவரும் அரசியல்வாதிதான மாமா அவங்க கட்சிக்குள்ள நடக்கிறது அவருக்கு தெரியாமல் இருக்குமா?” என்று சந்தேகத்துடன் வசீகரன் வினவ,

“பெரியப்பா ஏன் கட்சில பெரிய பொறுப்புல இல்லன்னு தெரியுமா? அவரு இப்ப வரைக்கும் கடைநிலை தொண்டனா இருக்கிறவனோட பைத்தியக்காரத்தனமான நம்பிக்கைனால ஏற்படுற பிரச்சனைகளை தீர்த்து வைக்க மட்டும் தான் செய்றாரு”என்றதும் புரியாது விழித்தான் வசீகரன்.

“ஒரு கட்சி கொள்கை என்று சொல்லி சில விஷயங்களை ஆரம்பிச்சதிலிருந்து அழுத்தமா சொல்லிக்கிட்டே இருக்கும். அந்த கட்சியோட அடிப்படை உறுப்பினர்கள்ல அதை பெருசா நம்பற யாரோ ஒருத்தரோ சிலரோ அதுக்கு எதிரா சமூகத்துல ஏதாவது நடக்கும் போது, தன்னை அந்த கட்சியோட பிரதிநிதியாகவும் தொண்டனாகவும் அந்த இடத்துல பதிவு செய்ய, அந்த கொள்கையை நிலைநாட்ட, ஏதாவது பைத்தியக்காரத்தனமா செய்திடுவாங்க. கண்டிப்பா தன்ன கட்சி காப்பாத்தும் அப்படிங்கிற நம்பிக்கையில தன் குடும்பத்தை பற்றியோ தான் பாத்துட்டு இருக்க வேலைய பத்தியோ எந்த ஒரு யோசனையும் இல்லாம ஏதாவது செய்திடுவாங்க.

அது அடுத்த கட்சிக்காரங்களோட சண்டை போடுறதோ, இல்ல பொதுமக்களோட வாக்குவாதத்தில் ஈடுபட்றதோ, இல்ல ஏதோ ஒரு வகையில தன்னை அந்த கட்சியோட பிணைக்கிற ஒரு விஷயமா அதை பார்த்து அப்படி நடந்துப்பாங்க. இப்படி அவங்க செய்றது அந்த கட்சியோட வட்டச் செயலாளருக்கு கூட தெரிய வாய்ப்பு இருக்காதுன்னு அவங்களுக்கு துளி எண்ணம் கூட இருக்காது. ஆனா அப்படி மாட்டி தன்னோட குடும்பம் வேலை இதை இழந்துட்டு கட்சி மேல நம்பிக்கை ஊசலாடிக்கிட்டு இருக்கிற எத்தனையோ தொண்டர்களை காப்பாத்தி, அவங்களுக்கு உதவி செய்றது தான் முருகப்பன் பெரியப்பா ரொம்ப வருஷமா செய்துட்டு இருக்காரு.”

“நீங்க சொல்ற மாதிரி ஒதுங்கி இருக்கிற ஒருத்தரால வட்டச் செயலாளருக்குக் கூட தெரிய முடியாத சின்ன பிரச்சனைக்குள்ள மாட்டின ஒருத்தருக்கு எப்படி மாநில அளவில தேடி கண்டுபிடிச்சு உதவ முடியும்? அவருக்கு கண்டிப்பா பெரிய அளவுல இன்புளுயன்ஸ் இருக்கணும். அதை அவர் காட்டிக்காம இருப்பாருன்னு எனக்கு தோணுது.” என்று வசீகரனும் யோசனையில் தன்னை ஆழ்த்திக் கொண்டவனாக தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினான்.

“எஸ். யு ஆர் கரெக்ட். அவர் கிட்ட பேச அப்பாயிண்ட்மெண்ட் வாங்கு. நாம நேர்ல போயி இது என்னன்னு கேட்டு பார்ப்போம். நீ அனுப்பிய வீடியோவை பார்க்கும் போது இரண்டு மாதத்துக்கு முன்னாடி ஆளும் கட்சி அமைச்சர் ஒருத்தர் இறந்து போன விபத்து மாதிரி எனக்கு தோணுது. சரியா தெரியாம ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.” என்று பேசிவிட்டு இருவரும் முருகப்பனுடன் ஒரு சந்திப்புக்கு வழி செய்தபடி அங்கிருந்து கிளம்பினர்.

வசீகரனிடம் நேத்ரா பற்றி எதுவும் நீரூபன் கூறவில்லை. அவள் சொல்ல வருவதன் முழுமையான காரணமும் அவளை பாதித்த சம்பவமும் என்னவென்று தெரியாமல் வசீகரனிடம் பகிர்ந்து கொள்ள நீரூபனின் மனம் இடம் அளிக்கவில்லை.

அதே எண்ணத்துடன் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த அவனின் கைபேசியில் அழைத்த ஆனந்த் காரில் உள்ள டேஷ் போர்டில் பூமிகா கொடுத்த நடன நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டை வைத்திருப்பதாக கூறிவிட்டு அன்று அவனுக்கு அந்த நேரத்தில் இருந்த ஒரு மீட்டிங்கை மறுநாள் ஒத்தி வைத்திருப்பதாகவும் பண்ணையில் இருந்து அந்த மாதத்தின் கணக்குகளை கொண்டு வந்து பழனி தாத்தா அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு சென்றிருப்பதாகவும் தகவல் அளித்தான்.

காரில் ஏறி டாஷ்போர்ட்டில் இருந்த நுழைவுச் சீட்டை எடுத்து நிகழ்ச்சி நடக்கவிருக்கும் அரங்கின் பெயரை குறித்து வைத்துவிட்டு சட்டையை மாற்றிக் கொண்டு அந்த இடத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்தினான்.

நிகழ்ச்சி துவங்க நேரம் இருப்பதாக அங்கிருந்த சூழல் அவனுக்கு உணர்த்த கைபேசியில் இருந்து பூமிகாவை அழைத்தான்.

கிரீன் ரூமில் மேக்கப் செய்து கொண்டிருந்த பூமிகா நீரூபன் வந்துவிட்டதை அறிந்து மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து அவனை நோக்கி வந்தாள்.

அவளது நடையையும் கண்ணில் தெரியும் மகிழ்ச்சியையும் கவனித்தவன் இதற்காக அவள் பல நாட்களாக காத்திருந்திருப்பாள் என்பதை உணர்ந்து கொண்டான்.

“என்னடா பாப்பா எப்பவும் ப்ரோக்ராமுக்கு என்னை கூப்பிட மாட்டியே! இன்னைக்கு என்ன ஸ்பெஷல” என்று அவளை கண்களால் விழுங்கியபடியே வினாவினான்.

“டிஃபரென்ட்லி ஏபில்ட் சில்ட்ரன்ஸ்காக ஒரு டொனேஷன் ஈவண்ட் தான் மாமா இது. இதுல கலெக்ட் ஆகுற பணத்தை அவங்களோட திறமையை பயன்படுத்தி அவங்களுக்கு தொழில் கல்வி கொடுக்க ஒரு தன்னார்வ நிறுவனம் நடத்துறாங்க. என்கிட்ட கேட்டதும் சரின்னு சொல்லிட்டேன். நீங்க வந்தா அவங்களுக்கு ஏதாச்சும் டொனேட் பண்ணுவீங்கன்னு டிக்கெட் உங்களுக்கு அனுப்பி வச்சேன் என்று இமைகள் படபடக்க அவனை நோக்கி எதிர்பார்ப்புடன் கூறினாள்.

“நல்ல விஷயம் தான். டீடைல்ஸ் எல்லாத்தையும் ஆனந்துக்கு அனுப்பி விடு. நான் அந்த என் ஜி ஓ வுக்கு செக் அனுப்பு சொல்லி சொல்லிடுறேன். இன்னைக்கு உன் பெர்ஃபார்மன்ஸ் பார்த்து அமௌன்ட் என்னன்னு நான் பில்லப் பண்ணி விடுறேன்” என்று கேலியும் காதலும் கலந்து பேசினான்.

சிரித்தபடி நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவள் முதல் இரண்டு நடனங்களுக்கு பின் மூன்றாவதாக மேடையில் ஏறியதும் மேடைக்கு அருகே ஓரமாக நின்றபடி அவளது நடனத்தை ரசிக்கத் துவங்கினான்.

எதிரில் அமர்ந்தால் தன்னைக் கண்டு அவளது கவனம் சிதறும் என்று ஓரமாக நின்ற அவனுக்கு அவனையே அவ்வப்போது பார்த்து அவள் நடனமாடிக் கொண்டிருக்க, உதட்டில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

அவள் சுற்றிச்சூழன்று ஆடுகையில் அவளது மஞ்சள் வண்ண ஸ்கர்ட் குடையாக விரிந்து அழகுக்கு அழகு சேர்ந்தது. அவனை காதலாக நோக்கிய அவளது கண்கள் நடனத்தை மேலும் அழகூட்டியது.

அவளை விழிகளால் விழுங்கிய அவனுக்கு முதல் முறையாக காதலையும் தாண்டிய உணர்வுகள் மனதிற்குள் மத்தாப்பாய் மினுக்கத் துவங்கியது.