அடங்காத அதிகாரா 01

அதிகாரம் 1

சென்னையின் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் தனது விலை உயர்ந்த காரில் வெயிலின் கசகசப்பு இல்லாமல் ஏசியில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார் எம்.எல். ஏ கோதண்டம்.

அவர் அருகில் அமர்ந்திருந்த அவரது மகன் சந்திரன் தன் தந்தையிடம் புலம்பியபடி வந்தான்.

“ஏன் பா இப்படி பண்றீங்க? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க பா. உங்க பார்ட்டி ஆபிஸ் வந்து நான் என்ன பண்ண போறேன்? எனக்கு அங்க பார்ட்டி ரெடி பண்ணி வச்சு இருக்காங்க பா. இப்படி வேட்டியை கட்டி என்னை இழுத்துட்டு போறீங்களே?” என்று உச்சகட்ட கோபத்தில் கூறிக்கொண்டிருந்தான்.

“சந்துரு இன்னிக்கு உன் பிறந்தநாள். எப்படியாவது தலைவர் கிட்ட பேசி இளைஞர் அணி செயலாளர் பதவியை உனக்கு வாங்கிக் கொடுக்க தான் உன்னை கூட்டிட்டு போறேன். எனக்கு அப்பறம் நீ அரசியலுக்கு வந்து தான் ஆகணும். அதை இப்போவே செஞ்சா தான் சரியா இருக்கும் புரியுதா?” என்று மகனை சமாதானம் செய்து கொண்டிருந்தார் கோதண்டம்.

“அப்பா அதெல்லாம் நாப்பது வயசுக்கு மேல வந்துக்கலாம். இப்ப நீ சம்பாதிச்சு வச்சிருக்கற காசுல கொஞ்சநாள் சந்தோஷமா இருந்துட்டு போறேன். விடு பா” என்று இருபத்தி ஆறு வயதில் சிறுபிள்ளை போல பிதற்றிக்கொண்டிருந்தான் சந்திரன்.

“டேய்! உனக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா? ஏற்கனவே தலைவர் அவருக்கு அப்பறம் அவரோட பொண்ணு தான் அரசியல் வாரிசுன்னு அறிவிச்சுட்டார். மெதுமெதுவா அடுத்த தலைமுறைக்கு வழி விடுங்கன்னு பேச்சு வரும். அப்ப அடிமட்ட தொண்டன், இளைஞர் அணில இருந்தான், அப்ப அதை செஞ்சான் இதை செஞ்சான்னு சொல்லி போஸ்டிங் போட்டுட்டா என்ன டா பண்றது? அவனுங்களுக்கு தான் அப்பறம் எலக்ஷன்ல சீட் கிடைக்கும். உன்னை அப்ப நுழைக்க பார்த்தா, வாரிசு அரசியல்னு பேச்சு வரும். அப்பா எது செஞ்சாலும் யோசிச்சு தான் செய்வேன்.” என்று அவர் அவனுக்கு பிரசங்கம் செய்து முடிக்கும் போது, பெசண்ட் நகரில் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தற்போதைய எதிர்க்கட்சியான மறுமலர்ச்சி மக்கள் கழகத்தின் அலுவலகத்திற்குள் அவரது கார் நுழைந்தது.

அலுவலக வளகத்தின் நுழைவு வாயிலை கடந்து கட்டிட முகப்பில் கோதண்டமும் சந்திரனும் இறங்கிக் கொள்ள ஓட்டுநர் விஸ்தாராமான பார்க்கிங்கில் எம்.எல்.ஏக்களுக்கு என்று இருக்கும் பிரத்யேக இடத்தில் வாகனத்தை நிறுத்தினார்.

கோதண்டம் வாயிலில் இருந்த நான்கு படிகளை ஏறி வரவேற்பு பகுதியில் நுழைந்தார். அந்த அறை முழுவதும் தேசத் தலைவர்கள் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டு இருந்தது. கட்சியின் சின்னமான குத்துவிளக்கை ஆளுயரத்துக்கு வாங்கி நடுவில் நிறுத்தி அதைச் சுற்றி பூவால் கோலம் போடப்பட்டு இருந்தது.

சந்திரனுக்கு வேட்டி புதிது என்பதால் அவிழ்ந்து விடக் கூடாது என்று நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

வரவேற்பு பகுதியை கடந்ததும் காத்திருப்போர் அறையில் கட்சியின் கடைநிலை தொண்டர்கள் முதல் பெயர் பரிச்சயமான தொண்டர்கள் வரை ஏதோ வேலையாகக் காத்திருந்தனர்.

அனைவரும் எழுந்து கோதண்டத்திற்கு மரியாதை கொடுத்து வணக்கம் வைத்தனர். சந்திரன் இதனை வேடிக்கை பார்த்தபடி தந்தையின் பின்னே சென்றான்.

அந்த அறையைக் கடந்து வர, பத்திரிகையாளர்களை சந்திக்கும் அறையில் பல பத்திரிகை நிருபர்கள் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு இருக்க, அவர்களுக்கு அன்று சொல்ல வேண்டிய குறிப்புகளை எடுத்து வைத்துக்கொண்டு மேடையில் நின்று கொண்டிருந்தார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்.

அவரும் கோதண்டத்தைக் கண்டு புன்னகையோடு முகமன் கூற,அவர்களை நோக்கி கை தூக்கி விட்டு பக்கவாட்டில் இருந்த மாடிப் படிகளில் ஏறினர் கோதண்டமும் சந்திரனும்.

முதல் தளத்தில் நிர்வாக அலுவலகம் மற்றும் அலுவலர்களுக்கான அறைகள் இருக்க அதனை கடந்து மீண்டும் படிகளில் ஏறினர்.

இரண்டாம் தளத்தில் நிர்வாக குழுவின் கூட்ட அறை, அதன் பின் எம்.எல்.ஏக்களுக்கான கூட்ட அறை தாண்டி தலைவர் முக்கியமானவர்களை சந்திக்கும் தனிப்பட்ட சந்திப்பாளர் அறைக்குள் கதவை தட்டி விட்டு நுழைந்தனர்.

சற்றே நீளமான அறையில் எதிரில் இருந்த சுவரில் நடுநாயகமாக கட்சியை ஆரம்பித்த மூத்த தலைவரின் வண்ணப் படம் இருக்க, இடது புறம் தற்போதைய தலைவரான திருமூர்த்தியின் படமும், வலது புறம் திருமூர்த்திக்கு முன் கட்சித் தலைவராக இருந்த மெய்யப்பன் ஐயாவின் படமும் இருந்தது.

அதன் முன்னே ஒரு டேபிள் இருக்க, சற்று தள்ளி இரு பக்கச் சுவர்களின் ஓரமும் விலையுயர்ந்த நீளமான சோபாக்கள் போடப்பட்டு இருந்தது.

டேபிளின் முன்னே அரியாசனம் போல நல்ல தேக்கு மரத்தால் இழைத்த தனி சோபா போடப்பட்டிருக்க அதில் சிம்மம் போல அமர்ந்திருந்தார் திருமூர்த்தி.

பக்க சோபாக்களில் சில எம்.எல்.ஏக்கள் அமர்ந்திருந்தனர். கோதண்டத்தைக் கண்டு அவர்கள் எழுந்து நிற்க, கோதண்டம் நாண் போல வளைந்து நின்று திருமூர்த்திக்கு வணக்கம் வைத்தார்.

“வா கோதண்டம். நேரமே வருவன்னு எதிர்பார்த்தேன். உள்ளாட்சி தேர்தல் வருது. அது பத்தி கொஞ்சம் கலந்து பேசலாம்ன்னு இருந்தேன்.” என்று தனக்குப் பின் கட்சியில் நல்ல பெயரோடு இருக்கும் சிலரில் முக்கியமானவரான கோதண்டத்துக்கு மரியாதை கொடுப்பது போல அடுத்தவர் முன்னே நயமாகப் பேசினார் திருமூர்த்தி.

“நானும் வந்திடலாம்னு தான் இருந்தேன் தலைவரே. ஆனா இன்னிக்கு என் பையன் சந்திரனுக்கு பிறந்தநாள். அதான் அவனையும் கிளப்பி உங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்க கூட்டிட்டு வந்தேன்.” என்று பின்னால் நின்றிருந்த மகனை தன் அருகில் அழைத்து நிறுத்தினார்.

சிரித்த முகமாக நின்றிருந்த சந்திரனிடம் ஜாடையாக தலைவர் காலில் விழச் சொல்லி கோதண்டம் கண்காட்ட,

சந்திரன் நெடுஞ்சான்கிடையாக திருமூர்த்தியின் காலில் விழுந்தான்.

“நல்லா இரு தம்பி. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” என்று வாழ்த்தியவர், பக்கத்தில் நின்றிருந்த தன் செயலாளரைப் பார்க்க,

அவர் வேகமாக பக்கத்து அறைக்கு சென்று கட்சியின் சின்னமான குத்துவிளக்கு பொறித்த பை ஒன்றை எடுத்து வந்து திருமூர்த்தியின் கையில் கொடுத்தார்.

அதைப் பெற்றவர் அதில் தன் சட்டையில் இருந்த சில ரூபாய் நோட்டுக்களையும் வைத்து,

“இந்தா தம்பி” என்று சந்திரனிடம் நீட்டினார்.

அவன் தந்தையைப் பார்த்துவிட்டு பின் அதனை பெற்றுக்கொள்வதைக் கண்டவர்,

“பரவாயில்ல கோதண்டம் பையனை நல்லாவே வளர்த்திருக்க, சொல்ற பேச்சை கேட்குற பிள்ளைங்க கிடைக்கிறது ஒரு வரம்.” என்று கூறும்போதே அதில் தன் மகன் அப்படி இல்லையே என்ற ஏமாற்றம் தெரிந்தது.

“சொன்ன சொல்லுக்கு நிப்பான் தலைவரே! அவனுக்கும் அரசியல்ல ஆர்வம் இருக்குங்க தலைவரே, அவன் ஃபிரண்டுங்க கூட சேர்ந்து போன தேர்தல் நேரத்துல நிறைய வேலை செஞ்சான். அதான் அவனுக்கு இளைஞர் அணில ஏதாவது போஸ்டிங் போட்டா திருத்தமா எல்லாமே செய்வான் தலைவரே!” என்று வந்த விஷயத்தை நேரம் பார்த்து திருமூர்த்தியின் மனதில் நங்கூரம் போல் இறங்கினார் கோதண்டம்.

அவர் பேசிய விதத்தில் தெரிந்த தேர்ந்த அரசியல் அறிவைக் கண்டு சந்திரன் வியந்து தான் போனான்.

“ம்ம். பார்ப்போம் கோதண்டம். இந்த உள்ளாட்சித் தேர்தல்ல நம்ம பலத்தைக் காட்டியே ஆகணும். அதுனால இப்போ எதையும் சட்டுன்னு முடிவு செய்ய முடியாது.” என்று அவரும் ‘நான் உன்னை விட இந்த அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவன்’ என்று சொல்லாமல் சொல்ல, சந்திரன் அவரைக் கண்டு சற்று அரண்டு தான் போனான்.


சென்னையை ஒட்டிய அந்த கிராமப்புறம் போன்ற பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த பண்ணை அமையப்பெற்றிருந்தது. கம்பிகள் கொண்டு வேயப்பட்ட வேலியின் மீது பாகற்காய், சிறு புடலை, பீர்கன்காய் கொடிகள் செழித்து வளர்ந்திருக்க, அகலமான இரும்புக் கதவு பகல் நேரம் என்பதால் முழுவதுமாக திறந்து கிடந்தது.

அதன் பிடிமான சுவர்கள் நீளமாக எழுப்பப்பட்டு அதனை இணைக்கும் பாலமாக வளைவான தகர பலகையில் ‘நவயுக உழவு’ என்று எழுதப்பட்டு இருந்தது.

பக்கவாட்டு வேலியை பார்த்தபடி நடந்தால் அது என்னவோ முடிவுக்கு வருவதாகவே தெரியவில்லை. நூறு ஏக்கர் வேலியையும் நின்ற இடத்தில் கண்ணால் கண்டுவிட முடியுமா?

கதவின் வழியாக மெல்ல உள்ளே நுழைந்தார் எதிரில் இருக்கும் நிலத்தின் உரிமையாளர் கோவிந்தராஜ்.

அவர் இந்த பண்ணையை வெளியில் நின்று பார்த்திருக்கிறாரே தவிர இன்று தான் முதல் முறை உள்ளே நுழைகிறார்.
தென்னையின் ஊடே ஊடு பயிராக உளுந்து விதைக்கப்பட்டு செழிப்பாக வளர்ந்திருந்தது.

வேலியைக் கடந்ததும் ஆரம்பத்தில் தென்னை மரங்கள் தான் நிறைந்து இருந்தது. அதன் இடையே வெள்ளை நிறத்தில் காங்கிரீட் கட்டிடம் இருக்க அதன் முகப்பில் ‘நவயுக உழவு’ என்ற பெயர் பலகை இருந்தது.

அலுவலக கட்டிடத்தின் வாயிலில் நிறைய காய்கறிகள் மூட்டைகளாக கட்டப்பட்டு லோடு ஏற்றத் தயார் நிலையில் இருந்தது.

ஆக தென்னையைக் கடந்தால் காய்கறிகளான தோட்டம் இருக்கலாம் என்று முடிவுக்கு வந்தவர் மெல்ல அலுவலக அறை வாயிலை அடைந்தார்.

முதல் அறையில் சின்ன மேசை நாற்காலி போடப்பட்டு அதில் சில கணக்கு புத்தகங்கள் மற்றும் வருகை பதிவேடு இருந்தது. நாற்காலியில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்.

அந்த ஊர்க்காரர் என்பதால் அவரை அடையாளம் கண்டுகொண்ட கோவிந்தராஜ், “பழனி அண்ணே இங்கயா வேலை செய்யறீங்க?” என்று சகஜமாக கேட்டுக்கொண்டு முன்னே வந்து நின்றார்.

அந்த பழனி என்ற முதியவர் கோவிந்தராஜைப் பார்த்து, “ம்ம் ஆமா, உங்களை ஐயா வர சொன்னதா சொன்னாரு. அங்க உட்காருங்க பத்து நிமிஷத்துல வந்திடுவார் ” என்று பட்டும்படாமல் பேசிவிட்டு ஏதோ ஒரு புத்தகத்தில் ஆழ்ந்தார்.

கோவிந்தராஜுக்கு அங்கே உட்கார பிரியமில்லை. “நான் காலாற நிழல்ல நடக்கிறேன் அண்ணே. அவர் வந்ததும் ஒரு சத்தம் கொடுங்க.” என்று இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

அவர் போவதைக் கண்ட பழனி, “இவனுங்களுக்கு நடக்க நிழல் வேணும், ஆனா மரத்தை வெட்ட முதல் அருவா இவனுங்க தான் எடுப்பானுங்க. ஹ்ம்ம்..” என்று சலித்துக் கொண்டார்.

தென்னையை கடக்கவே இரண்டு நிமிடங்கள் பிடித்தது. மாமரங்கள் அடுத்து வரிசை கட்டி நிற்க, சீசன் நேரம் என்பதால் மரங்களில் பிஞ்சுகளும் காய்களும் சற்றே பழுத்த பழங்களும் தொங்கிக் கொண்டிருந்தது. பல மரங்களில் பழங்கள் கைக்கெட்டும் உயரத்தில், தரையை தொடும் அளவிற்கு கூட இருந்தது.

வியப்பாய் பார்த்தபடி நடந்தவர் விழிகளில் வேலையாட்கள் தென்பட்டனர்.

“ஆளுப் பிடிக்க ஏழுமணிக்கு -ஏலங்கிடி லேலோ
ஆலாப் பறந்து வாறான் -ஏலங்கிடி லேலோ

அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் -ஏலங்கிடி லேலோ
அட்டுவான்சும் கொடுத்துவாறான் -ஏலங்கிடி லேலோ

ஆளுக்கொரு அரிவாள்தானும் -ஏலங்கிடி லேலோ
ஆறுமுகக் கயிறுரெண்டும் -ஏலங்கிடி லேலோ

சும்மாடும் சேர்த்தெடுத்து -ஏலங்கிடி லேலோ
சுறுசுறுப்பாய்ப் போறாங்களாம் -ஏலங்கிடி லேலோ”

ஆளைத் தேடும் நாட்டுப்புறப் பாடல் அவர் காதில் தெளிவாக விழுந்தது.

பாடல் முடிவுற்றதும்,

“தம்பி நீங்க கேட்ட பாட்டை நான் பாடிட்டேன். நீங்க எப்ப நான் கேட்ட பாட்டை பாடப்போறீங்க?” என்று நடுத்தர வயது பெண்மணி விளையாட்டாக யாரையோ பார்த்து வினவினார்.

அங்கே வேட்டியை மடித்துக் கட்டிக், தலையில் துண்டு ஒன்றை சுற்றிக் கொண்டு கைக்கெட்டிய பழங்களை பறித்துக் கொண்டிருந்த இளைஞன்,

“பாட்டு தானே நாளைக்கு பாடலாம். மணி பாருங்க மதிய சாப்பாடு நேரமாச்சு. போய் சாப்பிட்டு வந்து மீதி வேலையை பாருங்க” என்று நமுட்டு சிரிப்புடன் கூறினான்.

“இதே வேலையா போச்சு தம்பி உங்களுக்கு. தினமும் என்னை பாடச் சொல்லிட்டு, லோடு ஏத்தனும், அம்மா கூப்பிட்டாங்க, சாப்பாடு நேரமாச்சுன்னு இப்படியே சாக்கு சொல்லுங்க” என்று நொடித்தாலும் அதில் கோபம் இல்லாமல் உரிமையே மிகுந்திருந்தது.

தலையில் இருந்த துண்டு அவன் முகத்தை மறைந்திருந்ததால் யாரென்று தெரியாமல் கோவிந்தராஜ் பார்த்திருக்க,

கூடையில் இருந்த பழங்களை பனை ஓலை பெட்டியில் அடுக்கியவன் நிமிர்ந்து அவரை நோக்கினான்.

அவரும் அவனைப் பார்த்து விட்டு அதிர்ந்தார். இந்த பண்ணையின் முதலாளி நீரூபன்.

அவர் சட்டென்று உள்ளே எழுந்த அதிர்ச்சியில் திகைத்து நிற்க, அவரைக் கண்ட நீரூபனின் விழிகளில் கனல் தெறித்தது.

“வாங்க மிஸ்டர் கோவிந்தராஜ்.” இத்தனை நேரம் அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த இனிமையான குரல் இது தான் என்று சத்தியம் செய்து கூறினாலும் நம்ப இயலாத அளவுக்கு கடினத்துடன் வெளிப்பட்டது நீரூபனின் குரல்.

“வர சொன்னதா உங்க பிஏ சொன்னாரு” என்று அவர் இழுக்க,

“ஆபிஸ்ல போய் பேசிக்கலாம் வாங்க” என்று அவன் முன்னே நடந்துவிட்டு பின் திரும்பி அதே இனிய குரலில்,

“இன்னுமா நீங்க யாரும் சாப்பிட போகல?” என்று சற்று அதட்டல் போல கேட்டுவிட்டு சென்றான்.

அவனது குணத்தை புரிந்து கொள்ள இயலாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு அவன் பின்னால் சென்றார் கோவிந்தராஜ்.