🖊️துளி 9👑

ஸ்ராவணி அபிமன்யூவின் மிரட்டலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது எப்போதும் நடப்பது தானே என்ற அலட்சியத்தில் அவள் அபிமன்யூ என்ற ஒருவனை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டாள் அந்த இரண்டு நாட்களில். அவளும் மேனகாவும் விஷ்ணு அவர்களுக்குக் கொடுத்த வேலையில் கவனத்தைச் செலுத்தியதால் தேவையற்ற சிந்தனைகளுக்கு அவர்களுக்கு நேரமில்லை.

இந்தச் சூழ்நிலையில் தான் விக்ரம் அமெரிக்காவிலிருந்து திரும்பினான். வந்ததுமே ஸ்ராவணியின் ஃப்ளாட்டுக்கு வந்தவன் வைத்த முதல் குற்றச்சாட்டு தன்னை விமானநிலையத்தில் பிக்கப் செய்ய ஸ்ராவணி வரவில்லை என்பது தான். ஆனால் அவளோ அவனது குற்றச்சாட்டை கண்டுகொள்ளக் கூட இல்லை.

இன்னும் இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தத்தை வைத்து கொள்ளலாம் என்று அவனது அன்னை ஸ்ராவணியின் பெற்றோரிடம் பேசிவிட்டதாக கூறியவன் அவர்கள் நாளை இந்தியா வரும் தகவலையும் ஸ்ராவணியிடம் சொல்ல மறக்கவில்லை. ஆனால் அவை அனைத்துமே ஸ்ராவணியிடம் அவளின் அம்மா முந்தைய நாளே ஸ்கைப்பில் சொல்லிவிட்டாரென்று விக்ரமிடம் கூற அவனோ ஸ்ராவணிக்கு தன்னிடம் பேச மட்டும் தான் நேரமில்லை என்று அதற்கும் குறைப்பட்டுக் கொண்டான்.

“எனக்கும் மேகிக்கும் சீஃப் குடுத்த அசைன்மெண்ட் ஒர்க் ஹெவியா இருக்கு. இதுல எனக்கு ஏர்ப்போர்ட் வர்றதுக்கு டைம் இல்ல விக்கி. அது மட்டுமில்லாம இது நீ பிறந்து வளர்ந்த ஊரு. இங்க உன்னை யாரும் வந்து பிக்கப் பண்ணுனா தான் உனக்கு வீட்டுக்கு வந்து சேரமுடியும்னு இல்ல தானே!  க்ரோ அப் மேன்” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தவளை அவன் ஆயாசமாக பார்க்க மேனகா அவனுக்கு பை சொல்லிவிட்டு கைகடிகாரத்தை காட்ட அவன் கேப் புக் செய்து அவனது வீட்டை நோக்கி பயணமானான்.

ஸ்ராவணி ஸ்கூட்டியில் செல்லும் போதே  “லுக் மேகி! இவனோட இந்த ஆட்டிட்டியூட் தான் எனக்குச் சுத்தமா பிடிக்கல. அவனைத் தவிர எனக்கு வேற சிந்தனையே இருக்க கூடாதுனு நினைச்சா நான் என்ன பண்ணுறது? அவன் என்ன குழந்தையா நானே போய் பிக்கப் பண்ணி அவங்க வீட்டுல இறக்கிவிட? புல்ஷிட்” என்று சொல்ல மேனகாவுக்கும் அவளது நிலை புரிந்தது.

“வனி! லவ் பண்ணுற பையன் அவன் லவ்வர் கிட்ட எதிர்ப்பாக்குற விஷயம் தானேடி. அவன் தனக்குத் தான் நீ பிரையாரிட்டி குடுக்கணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணுறான். இது ஒன்னும் தப்பு இல்லயே” என்று கேட்க

ஸ்ராவணி “அஹான்! கடந்த நூற்றாண்டுகள்ல நிறைய பெண்களோட கம்ப்ளெண்ட் என்ன தெரியுமா?  தன்னோட ஹஸ்பெண்ட் தான் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுறது இல்ல, சின்ன சின்ன விஷயத்துக்குக் கூட தன்னை பேம்பர் பண்ணுறது இல்லங்கிறது தான். அப்போலாம் ஆம்பிளைங்க சொன்ன ஒரே பதில் ‘ மனுஷனுக்கு வேலை டென்சனே ஓவரா இருக்குது, இதுல நீ வேற அது இதுனு சொல்லி என்னை டென்சன் ஆக்காதங்கிறது தான். அதே பதிலை நான் விக்கிக்கு சொன்னா மட்டும் ஏன்டி என்னை வில்லி மாதிரி பாக்குறிங்க? பொண்ணுங்களுக்கு வேலையில் டென்சன் வரவே வராதா?” என்று பொருமி தள்ளிவிட்டாள்.

மேனகா தான் அவளை தாஜா செய்து அமைதிப்படுத்தினாள். அதற்குள் அலுவலகம் வந்துவிட ஸ்கூட்டியை தரிப்பிடத்தில் விட்டவர்கள் உள்ளே சென்றனர்.

அட்மினிஷ்ட்ரேஷன் பகுதியில் அனுராதா கையை ஆட்டி ஆட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அவளுடைய கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டின் ஜொலிப்பை தூரத்திலிருந்தே ஸ்ராவணியும் மேனகாவும் கண்டு விட்டனர்.

மேனகா ஸ்ராவணியிடம் “வனி!  அவ ப்ரேஸ்லெட்டை பாரேன்!  இப்பிடி ஜொலிக்குது. அமெரிக்கன் டைமண்ட் இவ்ளோ ஜொலிக்குமா?” என்று சந்தேகத்துடன் கேட்க அவளுக்கும் அதே சந்தேகம் தான். என்ன தான் பத்திரிக்கையாளர்கள் என்றாலும் அவர்களும் பெண்கள் தானே.

நேரே அவளிடமே சென்று கேட்க அவளோ சாதாரணமாக “வனி இது ஒரிஜினல் டைமண்ட் ப்ரேஸ்லெட்மா” என்று சொல்ல இருவருக்கும் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.

மேனகா அவளைச் சந்தேகமாக பார்த்தபடி “உன்னால எப்பிடி இவ்ளோ காஸ்ட்லியான டைமண்ட் ப்ரேஸ்லெட் வாங்க முடிஞ்சுது?” என்று கேட்டுவிட்டு கண்ணாடியை சரி செய்து கொள்ள

அவளது அந்த பாவனையில் கொஞ்சம் தயங்கிய அனுராதா “மேகி! என்னோட பாய்ஃப்ரெண்ட் கிஃப்ட் பண்ணுணதும்மா” என்று சொல்ல இருவராலும் அதை நம்ப முடியவில்லை. அதற்குள் ஸ்ராவணிக்கு விக்ரமிடம் இருந்து கால் வர அவள் “ஹலோ” என்று பேசியபடி  நகர்ந்தாள்.

அவள் நகர்ந்ததும் மேனகாவிடம் “மேகி வனி யார் கூட பேசப் போறா?” என்று கேட்க மேனகா கேலியாக “அவளோட ஆத்துக்காரர் கூட தான்” என்று சொல்லி கண்சிமிட்ட அனுராதா அதிர்ந்தாள்.

அதைக் கண்டு நகைத்தவள் “பின்ன என்னடி? அவ அவளுக்கு நிச்சயம் பண்ணுன மாப்பிள்ளை பையன் கூட பேச போறா. உனக்கு என்ன அதுல ஆராய்ச்சி?” என்று அனுராதாவை கேட்க

அவளோ “அவளுக்கு நிச்சயாமாயிடுச்சா? இது எப்போ?” என்று மீண்டும் அதிர்ந்தாள்.

“ரெண்டு வீட்டு பெரியவங்க மட்டும் பேசி முடிச்சாங்க. உனக்கு தெரியாது. பட் டோன்ட் ஒரி. இன்னும் ரெண்டு நாள்ல அவங்க ரெண்டு பேருக்கும் என்கேஜ்மெண்ட் நடக்க போகுது. கண்டிப்பா நம்ம ஸ்டாஃப்ஸ் எல்லாரையும் இன்வைட் பண்ணத் தானே போறோம். சோ அங்க  வந்ததுக்கு அப்புறமா உன்னோட மீதி டவுட்ஸை கேட்டுக்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் மேனகா.

அவள் சென்றதும் சிந்தனைவயப்பட்ட அனுராதா யாருக்கும் தெரியாமல்  போனில் பேசிவிட்டு வந்தாள். தன்னுடைய கேபினுக்குள் சென்றவள் “வனி உன்னால யாருக்கு நல்லது நடக்குமோ எனக்கு தெரியல. ஆனா உன்னை வச்சு நான் நிறைய விஷயங்களை சாதிச்சிக்கலாம் போல. இன்னைக்கு சொன்ன நியூஸ்காக என்ன விலை கேக்கலாம்னு யோசிப்போம்” என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடங்கினாள் அவள்.

ஸ்ராவணியை மணக்கவிருப்பவனோ வீட்டில் சென்று இறங்கியதும் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் இருக்கிறது என்று ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தான்.

அவனது அன்னை சந்திராவுக்கு மகனின் இந்த அவசரத்தை நினைத்து எரிச்சலாக இருந்தது என்னவோ உண்மை. அவருக்கு நேரம் காலம் இல்லாமல் வெளியே வேலை விஷயமாக சுற்றும் ஒருத்தியை மருமகளாக ஏற்க துளியும் விருப்பமில்லை.

ஆனால் மகனின் வருவாயில் ஊதாரித்தனமாக செலவு செய்து கொண்டிருந்த அப்பெண்மணிக்கு ஸ்ராவணியை மறுத்துவிட்டால் எங்கே மகன் தன் கையை விட்டு போய்விடுவானோ என்ற பயம் வேறு. அதனால் தான் அமைதியாக அவனது பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் வாயை மூடிக்கொண்டிருந்தார்.

“என்னமோ சீமை சித்ராங்கியை கல்யாணம் பண்ணிக்கப் போற நினைப்பு இவனுக்கு. பார்த்தது தான் பார்த்தான், வீட்டுக்கு அடக்கமா மூனு வேளையும் சமைச்சுப் போட்டு அக்கறையா பாத்துக்கிற பொண்ணை லவ் பண்ணித் தொலைக்க கூடாதா உங்க மகன்? அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா அவளுக்கும் சேத்து நான் தான் வடிச்சு கொட்டணும் போல இருக்கே நிலமை” என்று கணவரும் விக்ரமின் அப்பாவுமான சேகரிடம் கரித்துக் கொட்ட

அவரோ “மருமகளோட சம்பளம் மட்டும் உனக்கு வேணும். ஆனா அவளுக்கு சமைச்சு போட மாட்டியா? நல்லா இருக்குடி உன் லாஜிக்” என்று கிண்டலடித்துவிட்டு சென்றார்.

விக்ரம் அமெரிக்காவில் இருக்கும் போதே நிச்சயத்திற்கான ஏற்பாடுகளை முடித்துவிட்டவன் ஸ்ராவணியின் பெற்றோர் மறுநாள் வரப் போவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான் கல்யாணக் கனவுகளுடன்.

ஸ்ராவணிக்கு விக்ரமை ஒரு நண்பன் என்ற முறையில் மிகவும் பிடிக்கும் என்பதால் அவனது கல்யாணக் கனவுகளில் தலையிட அவள் விரும்பவில்லை. ஆனால் அதற்காக தன்னுடைய வேலையை அந்தக் கனவுகளில் தொலைக்கவும் தயாராக இல்லை. நிச்சய வேலையை அவனும், தன்னுடைய பெற்றோரும் பார்க்கையில் தான் நிச்சயதார்த்தத்திற்குச் சென்று நின்றால் மட்டும் போதுமென்ற மனநிலையில் இருந்தாள் அவள்.

மாலையில் அலுவலகம் முடியும் போது மேனகா தான் அனைவரையும் அழைத்து ஸ்ராவணியின் நிச்சயதார்த்தம் பற்றி அறிவித்தாள். அனைவரின் வாழ்த்தையும் புன்னகையோடு ஏற்றதோடு சரி, அதற்குப் பின் அதை பற்றி எதுவும் பேசவில்லை ஸ்ராவணி.

விஷ்ணு மற்றும் பூர்வியைக் கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைத்துவிட்டு  ரகுவிடம் சென்று விஷயத்தை கூறி இருவரும் கிளம்பினர். வர்தனும் அவனும் வராவிட்டால் தான் நிச்சயத்தையே நிறுத்திவிடுவதாக ஸ்ராவணி அவர்களை மிரட்டவே இருவரும் கட்டாயம் வருவதாக உறுதியளிக்கவும் அவள் புன்னகைத்தாள்.

மறுநாள் மட்டும் அவள் அலுவலகம் என்ற பேச்சை எடுத்தால் அவளுடைய அம்மா அவளை விட்டுவைக்க மாட்டார் என்பது  தெரிந்ததால் அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு தான் மேனகாவுடன் கிளம்பினாள்.

அவர்கள் கிளம்பிய பிறகு மெதுவாக வெளியேறிய அனுராதா அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறி சாலையைக் கடக்க நின்றவள் அருகே வந்து நின்ற காரில் ஏறிக்கொண்டாள்.

கார் சென்று நின்ற இடம் கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு ரிசார்ட்.  காரிலிருந்து இறங்கியவள் ஏற்கெனவே வந்து போன இடம் தான் என்பதால் தயக்கமின்றி உள்ளே நுழைய அவளை அழைத்தவர்களின் பேச்சு சத்தம் ரிசார்ட்டின் கடற்கரையை பார்த்த வாயிலிலிருந்து கேட்டது.

அங்கே சென்றவள் நாற்காலியில் சாய்ந்து மாலை நேர கடற்காற்று வாங்கிக்கொண்டிருந்த இருவரையும் பார்த்து “குட் ஈவினிங் அபி சார்” என்க அவளின் குரலைக் கேட்டுத் திரும்பினான் அபிமன்யூ.

அவன் அருகில் இன்னொரு நாற்காலியில் அமர்ந்திருந்த அஸ்வினும் அவளை நோக்கி புன்னகைக்க “உங்களுக்கு ஒரு நல்ல நியூஸ் சொல்லுறதுக்காக தான் வந்திருக்கேன்” என்று பீடிகையுடன் பேச்சை ஆரம்பித்தாள் அனுராதா.

அபிமன்யூ அவளை அமருமாறு சைகை காட்ட நாற்காலியில் அமர்ந்தவள் “இன்னையில இருந்து ரெண்டாவது நாள் ஸ்ராவணிக்கு அவளோட ஃப்ரெண்ட் விக்ரம் கூட என்கேஜ்மெண்ட்” என்று சொல்ல இதைக் கேட்ட நண்பர்கள் இருவருக்குமே ஆச்சரியம்.

அபிமன்யூ நம்ப முடியாமல் “வாட்?  நீங்க சொல்லுறது உண்மையா மிஸ் அனுராதா?  உங்களுக்கு எப்பிடி தெரியும்?” என்று கேட்க

அவள் “எனக்கு மேகி தான் சொன்னா சார்” என்று பதிலிறுக்க அஸ்வின் “மேகியா? அது யாரு?” என்று குழப்பத்துடன் வினவினான்.

அனுராதா “வனியோட ஃப்ரெண்ட் மேனகா. அவளுக்கு தெரியாம வனி எதையும் செய்ய மாட்டா.  அவ தான் சொன்னா இன்னும் டூ டேய்ஸ்ல வனிக்கு என்கேஜ்மெண்ட்னு. அதுக்காக வனியோட அப்பா அம்மா ரெண்டு பேரும் அமெரிக்கால இருந்து நாளைக்கு வர்றாங்க” என்று வந்த விஷயத்தை கூறி முடித்துவிட்டு அவனைப் பார்த்தாள்.

அபிமன்யூ அஸ்வினை பார்த்து வீசிய புன்னகையில் ஏதோ திட்டம் ஒளிந்திருப்பதாக அவள் மனதுக்குப் பட ஒரு கணம் தான் செய்த காரியம் தவறோ என்று கூட யோசித்தாள் அவள்.

ஆனால் ஒரு சில்வர் ஜிமிக்கி வாங்கியதற்கு “நீ சம்பாதிக்கிற காசை பூரா இப்பிடி செலவழிச்சா என்னடி அர்த்தம்? பணம் என்ன மரத்துலயா காய்க்குது?” என்ற அன்னையின் வசவுமொழிகள் நினைவுக்கு வர அவள் “எனக்குச் சில விஷயங்களுக்கு பணம் வேணும். அதுக்காக தான் நான் இவங்களுக்கு ஸ்ராவணியை பத்திய விஷயங்களை சொல்லுறேன். இதனால பெருசா என்ன ஆக போகுது?  நான் ஒன்னும் திருடவோ, கொலை பண்ணவோ செய்யலயே” என்று தன்னைத் தானே சமாதானப்படுத்தி கொண்டாள் கையிலிருந்த வைர ப்ரேஸ்லெட்டை ஆசையுடன் தடவியபடி.

அபிமன்யூ வழக்கம் போல அவளுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தவன் “நான் என்ன பண்ணனும்னு யோசிச்சிட்டேன் அச்சு. இனிமே அந்தக் கடவுளே நெனைச்சாலும் ஸ்ராவணி அவமானப்படுறதையோ அவ குடும்பம் தலை குனியறதையோ தடுக்க முடியாது” என்று சொல்ல அஸ்வின் அவன் தோளில் கை வைத்து தன் புறம் திருப்பினான்.

“அபி!  நீ என்ன காரியம் பண்ணுனாலும் நான் உனக்கு துணையா தான் இருந்திருக்கேன். ஆனா இந்த விஷயத்துல நீ கொஞ்சம் பொறுமையா யோசி. ஏன்னா இது ஒரு பொண்ணோட வாழ்க்கை” என்று சொல்ல

அபிமன்யூ சீற்றத்துடன் “தென் வாட் அபவுட் அவர் டாட்?  அவளால இன்னைக்கு அவர் ஜெயில்ல போய் உக்காந்திருக்காரே! அது மட்டுமா,  அம்மா என் கிட்ட முகம் குடுத்து பேசி நாலு நாள் ஆகுது அச்சு. எப்பிடி இருந்த வீடு இன்னைக்கு இப்பிடி சோகத்துல மூழ்க காரணம் அந்த ஸ்ராவணி தான். நான் உன் அளவுக்கு நல்லவன் கிடையாது அச்சு.  நான் நல்லவனா இருக்கவும் விரும்பல. ஏன்னா இந்த உலகத்தோட பார்வையில நல்லவன்னா முட்டாள்னு அர்த்தம். நான் முட்டாள் இல்ல. அந்த ஸ்ராவணி சந்தோசமா இருக்க போறது இன்னும் ஒரே ஒரு நாள் தான். அதுக்கு அப்புறமா அவ வாழ்க்கையில சந்தோசம்கிற வார்த்தை என்னைக்குமே நுழையாது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்று கடற்கரையை நோக்கி சென்றான்.

அஸ்வின் அபிமன்யூவின் வீட்டில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து என்றுமே நண்பனை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. அம்மாவும் அப்பாவும் இறந்த துக்கத்தில் இருந்தவனை சுபத்ரா அபிமன்யூவிடம் “அபி இவன் அஸ்வின். டிரைவர் அங்கிளும் ஆன்ட்டியும் இப்போ இல்லைல! சோ நீ தான் இனிமே இவனை நல்லபடியா பார்த்துக்கணும்” என்று சொன்ன தினத்திலிருந்து அபிமன்யூவும் அஸ்வினை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.

இதுவரை இருவருக்கும் வெவ்வேறு விதமான கருத்துக்கள் எந்த விஷயத்திலும் தோன்றியதில்லை. ஆனால் முதல் முறையாக ஸ்ராவணி விஷயத்தில் நண்பன் தவறான திசையை நோக்கிச் செல்கிறானோ என்று அஸ்வினுக்கு மனதிற்குள் ஒரு உறுத்தல். சிறிது நேரம் அங்கேயே நின்று அபிமன்யூவின் திட்டத்தால் நிகழப்போகும் அனர்த்தங்களை யோசித்தவன் தூரத்தில் கடற்கரை மணலில் நிம்மதியின்றி நடைபோடும் நண்பனை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு அவனை நோக்கிச் சென்றான்.