🖊️துளி 8👑

பார்த்திபன் கட்சி அலுவலகத்திலிருந்து கோபத்துடன் வெளியேறியவர் நேரே காரில் சென்று வீட்டில் இறங்கினார். வீட்டின் அமைதி அவர் மனதுக்கு சங்கடத்தை தர  யோசனையில் சுருங்கிய நெற்றியை தடவியபடி வீட்டினுள் நுழைந்தவரின் பார்வையில் முதலில் பட்டது சோபாவில் வெறித்த முகத்துடன் சிலை போல அமர்ந்திருக்கும் மனைவியும் அவரை தேற்றிக் கொண்டிருக்கும் மகளும் தான். ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருக்க சகாதேவன் கையை பிசைந்தபடி அஸ்வினுடன் நிற்க அபிமன்யூ அவரை போலவே கண்ணை மூடி நெற்றியை தடவியபடி இன்னொரு சோஃபாவில் அமர்ந்திருந்தான்.

இத்தனை ஆண்டுகளில் மனைவி இவ்வாறு இருந்து பார்த்திராதவர் பதற்றத்துடன் “சுபிம்மா” என்று ஆதங்கத்துடன் அவர் அருகில் சென்று அமர்ந்தவர் அவரின் தலையைத் தடவிக்கொடுக்க கணவரின் அருகாமையை கூட உணரமுடியாதவராய் அவர் கல் போல அமர்ந்து இருந்தார்.

பார்த்திபன் மெதுவாக ” சுபிம்மா! நீ இப்போ டிவில பார்த்ததை நெனைச்சு மனசை போட்டு  குழப்பிக்காதம்மா!  நம்ம அபி சின்ன பையன்.  இந்த வயசுல மத்தவங்க பண்ணாத தப்பையா அவன் பண்ணிட்டான்?  நம்ம பையனை நம்மளே புரிஞ்சிக்கலன்னா எப்பிடிம்மா?”  என்று மகனுக்கு ஆதரவாக பேச சுபத்ரா திகைத்தவராய் கண்ணீருடன் அவரை பார்த்தவர் சட்டென்று எழுந்தார்.

கண்ணீரை சுண்டிவிட்டபடி “மத்தவங்க பண்ணாத தப்பையா பண்ணிட்டான்னு எவ்ளோ சுலபமா சொல்லிட்டிங்க?  நமக்கு கல்யாணம் ஆன நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் நீங்க என்னை தவிர வேற ஒருத்தியை நினைச்சு பாத்திருங்கிங்களா?  அதை விடுங்க! கல்யாணத்துக்கு முன்னாடியும் நீங்க காதலிச்ச முதலும் கடைசியுமான பொண்ணு நான் தானேங்க! ஆனா இன்னைக்கு நம்ம பையன் என்ன மாதிரியான வாழ்க்கைமுறையில சிக்கிருக்கானு உங்களுக்கும் புரிஞ்சும் எப்பிடி உங்களால அவனுக்கு சப்போர்ட் பண்ண முடியுது?” என்றார் ஆதங்கத்துடன்.

அஸ்வின் ஏதோ சொல்ல வர அவனை கை உயர்த்தி தடுத்தவர் “அவன் லண்டன் போன நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவனையோ அஸ்வினையோ நான் எதுவும் கேட்டது இல்லை. ஏன்னா ரெண்டு பேரு மேலயும் நான் முழு நம்பிக்கை வச்சிருந்தேங்க!  என் புள்ளைங்க எங்க போனாலும் நம்ம கலாச்சாரத்தை மறக்க மாட்டாங்கன்னு குருட்டுத்தனமா நம்பியிருந்தேனே!  அதுக்கு கிடைச்ச வெகுமதியா இன்னைக்கு பையனை சரியா வளர்க்காத அம்மாவா நான் இன்னைக்கு தோத்து போய் நிக்குறேன்” என்று சொல்ல அதற்கு மேல் பொறுக்க முடியாத அஸ்வின் அவரை அணைத்துக் கொண்டான்.

“மா!  நீங்க என்னைக்குமே எங்க மூனு பேருக்கும் நல்ல அம்மாவா தான் இருந்திருங்கிங்க. வீட்டு டிரைவரோட மகனான என்னை சொந்த பையன் மாதிரி பார்த்துக்கிட்டு பெத்த பையன் என்ன படிக்கணும்னு நெனைச்சானோ அதே  படிப்பை அந்த டிரைவரோட மகனுக்கும் குடுத்து இன்னைக்கு என்னை இந்த சமுதாயத்துல ஒரு நல்ல இடத்துல வைச்சிருக்கிற பெரியமனசு உங்களுக்கும், அங்கிளுக்கும் தான் இருக்கு.  எங்க அம்மா முகம் எனக்கு கிட்டத்தட்ட மறந்து போச்சுனா அதுக்கு காரணம் நீங்க காட்டுன அன்பும் அக்கறையும் தான்மா!  நீங்க என்னைக்குமே ஒரு நல்ல அம்மா தான். இனிமே இப்பிடி சொல்லி எங்களை கஷ்டப்படுத்தாதிங்க” என்று அவரைத் தேற்ற அவரால் கண்ணீர்  மட்டும் தான் வடிக்க முடிந்தது.

அபிமன்யூவால் இவை அனைத்தையும் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது. அழுதுக் கொண்டிருக்கும் அன்னையை தேற்றும் தைரியம் அவனுக்கு இல்லை என்பதே உண்மை. அந்த வீடியோ வெளியானதற்கு அவன் ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. அஸ்வின் பதறியதற்கு கூட “அது எதுவுமே பொய் இல்லையேடா!  அப்புறம் ஏன் வீணா டென்சன் ஆகுற?  விடு! மார்ஃபிங்னு சொல்லிக்கலாம்” என்று நண்பனை அமைதிப்படுத்த முடிந்த அவனால் அன்னையிடம் அதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. நெறித்த புருவங்களுடன் யோசனையில் இருந்தவனின் காதில் சைரன் சத்தம் விழ அஸ்வினை திரும்பி பார்த்தான் அவன்.

அதற்குள் வெளியே கேட்ட சத்தம் என்னவென்று பார்க்க சென்ற சகாதேவன் வாசலிலேயே திகைத்து நிற்க வீட்டினுள் நுழைந்தனர் சில அதிகாரிகள். இவ்வளவு நேரம் யோசனையில் இருந்த அபிமன்யூ எழுந்து “யார் நீங்க? திடுதிடுப்புனு வீட்டுக்குள்ள வந்தா என்ன அர்த்தம்?” என்று கேட்டபடி அவர்களிடம் வர

அவர்களின் ஒருவர் அடையாள அட்டையை காட்டி “சார் வீ ஆர் ஃப்ரம் சி.பி.ஐ. மெடிசின் பர்சேஸ் டெண்டர்ல நடந்த ஊழல் சம்பந்தமா உங்க அப்பாவை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்” என்று கூற அவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

சகாதேவன் பதறிப்போய் ” சார்!  அதுல உண்மையா என்ன நடந்துச்சுனு……..” என்று ஏதோ சொல்லவர அவர் அருகில் நின்ற பார்த்திபன் அவரது தோளில் கை வைத்து அழுத்தியவர் கண்களால் ஏதோ குறிப்பாய் உணர்த்த அவர் தர்மசங்கடத்துடன் அமைதியானார்.

அமைதியாக அதிகாரிகளை பார்த்தவர் “நான் உங்க கூட வர சம்மதிக்கிறேன் ஆபிசர்” என்று சொல்ல அபிமன்யூ வேகமாக அவர் அருகில் வந்து “டாட்!  ஐ வோண்ட் அலோ தெம்  டு அரெஸ்ட் யூ” என்று உணர்ச்சிவசப்பட்டவனாய் பேச சுபத்ரா மீண்டும் அவரின் தலையில் விழுந்த இடியில் அழ மறந்து சிலையானார்.

பார்த்திபன் தம்பியையும் மகனையும் சமாதானம் செய்தவர் மனைவியின் வெறித்த பார்வையில் தெரிந்த அந்நியத்தன்மையில் மனமுடைந்து தான் போனார்.

சுபத்ராவின் அருகில் அவர் சென்று அவரை சமாதானம் செய்ய முயல “போதுங்க!  இது நாள் வரைக்கும் புருஷன், குடும்பம், குழந்தைங்கன்னு வேற எதையும் பத்தி தெரிஞ்சுக்காம இருந்துட்டேன். நான் உங்களை கண்மூடித்தனமா நம்புனேனே!   நீங்களும் என்னை ஏமாத்திட்டிங்களே!  ஒரு மனைவியாவும் நான் தோத்து போயிட்டேங்க” என்று வாயில் கைவைத்து அழுகையை அடக்கியபடி அவரது அறைக்குள் செல்ல ஜனனி அழுகையுடன் அவரைத் தொடர்ந்து ஓடினாள்.

பார்த்திபன் அவரை தொடர்ந்து செல்ல முயல அதிகாரிகள் “சார் டைம் ஆச்சு. நம்ம கெளம்பலாமா?” என்று கேட்டபடி அவரின் கையைப் பிடிக்க அபிமன்யூவிற்கு  அந்த காட்சியில் கோபம் தலைக்கேறியது.

அந்த அதிகாரியை நோக்கி கோபத்துடன் அடிவைத்தவனை தடுத்த பார்த்திபன் “அவர் அவரோட கடமையை  தானே செய்யுறாரு!  அவரை தடுக்காத.  எப்போவும் சந்தோசம் மட்டுமே இருக்கிற நம்ம வீட்டுல இந்த மாதிரி நிகழ்வு நடக்க யாரு காரணமோ அவங்க கிட்ட காட்டுறதுக்கு இந்த கோவத்தை சேர்த்து வைச்சுக்கோ” என்று மகனை அமைதி படுத்தினார்.

சகாதேவனிடம் திரும்பியவர் “கட்சி வேலையை நீ பாத்துக்கோ சகா. அபிக்கு அனுபவம் பத்தாது” என்று சொல்ல அவர் அண்ணனை கண்ணீருடன் அணைத்து கொண்டார்.

பார்த்திபன் அஸ்வினை பார்த்தவர் “அபி கூட இருந்து இந்த வீட்டை பொறுப்பா பாத்துக்கோடா. அவனுக்கு பொறுமை கெடயாது. ஒரு நல்ல நண்பனா அவன் கூட இருந்து அவனுக்கு நல்லது கெட்டது சொல்லி புரிய வைக்கணும்” என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்து விட்டு அதிகாரிகளுடன் வெளியேறினார்.

சகாதேவன் பொறுக்க இயலாமல் அண்ணன் பின்னாலே சென்றவர் ஜீப் வெளியேறும் வரை கண்ணீருடன் பார்த்துக்கொண்டே அந்த நடைபாதையிலேயே அமர்ந்து விட்டார். சுபத்ராவோ அழுகையில் ஒரு புறம் கரைய அபிமன்யூவுக்கு தலைக்குள் ஏதோ பூகம்பம் வருவது போல உணர்வு.

எங்கே தவறு நடந்திருக்கும் என்று யோசித்தவனுக்கு முதலில் மனக்கண்ணில் தோன்றிய முகம் ஸ்ராவணி தான். அவள் தான் அன்று பப்பில் அவனுடன் இருந்தவள். அன்றைய காட்சிகள் தான் செய்தியில் ஒளிபரப்ப பட்ட காட்சி.

” நாற்காலில உக்காரணும்கிற உன்னோட ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் நான் பொறந்திருக்கேன் மிஸ்டர் அபிமன்யூ பார்த்திபன். இப்போ நீ ஜெயிச்சிருக்கலாம். பட் அந்த நாற்காலி உனக்கு இல்ல” என்று கையை கட்டிக்கொண்டு சொன்னவளின் நினைவில் கை முஷ்டி இறுக  “ஸ்ராவணி” என்று அவள் பெயரை கடித்து துப்பினான் அவன்.

அதே நேரம் ஜஸ்டிஸ் டுடேவில் விஷ்ணு அவனுக்கு தெரிந்த வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தான்.  அவனது டீமும் அவனுடன் இருக்க ஸ்ராவணி, மேனகா மற்றும் ரகுவுக்கு மனதில் பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சின்சியர் சிகாமணிகளாக மீட்டிங்கில் அமர்ந்திருந்தனர் அவர்கள். ரகு தான் பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தண்ணீரை குடித்தான்.

வந்திருந்தவர்கள் “விஷ்ணு சார் இப்போ இருக்கிற டெக்னாலஜியில டிவி நெட்வொர்க்கை ஹேக் பண்ணுறது ரொம்ப கஷ்டம்.  அப்லிங்கிங் பத்தி தெரிஞ்ச இதே ஆபிஸ்ல இருக்கிறவங்க ஹெல்ப் இல்லாம இந்த ஹேக்கிங் நடந்திருக்க வாய்ப்பில்ல” என்று சொல்ல ரகுவுக்கு குடித்து கொண்டிருந்த தண்ணீர் புரையேற மேனகா தான் அவன் முதுகில் கை வைத்துத்  தட்டிக்கொடுத்தாள்.

ஸ்ராவணி அவனை உறுத்து விழிக்கவும் ரகு அவளின் காதில் “வனி!  இந்த வளர்ந்து கெட்ட மனுஷன் நேருல பாத்த மாதிரியே சொல்லுறான்டி” என்றான் பதற்றத்துடன். ஸ்ராவணி “நீ  உன்னோட ஃபேஸ் ரியாக்சனை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணு. யாரும் எதையும் கண்டுபிடிக்க மாட்டாங்க” என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

விஷ்ணு அந்த வல்லுனர்களிடம் “எங்க ஆபிஸ்ல அப்பிடி யாரும் ஹெல்ப் பண்ணிருக்க மாட்டாங்க.  என்னோட ஸ்டாஃப்சை நான் முழுசா நம்புறேன். நான் கேட்டுக்கிட்டதுக்காக இவ்ளோ தூரம் வந்ததுக்கு ரொம்ப நன்றி சார்” என்று அவர்களுக்கு கை கொடுத்தவன் அவர்களை வழியனுப்பி  வைக்க அவர்களுடன் செல்ல மேனகா ரகுவை கெஸ்ட் ரூமிற்கு அழைத்து சென்றாள்.

ஸ்ராவணியும் மீட்டிங் ஹாலை விட்டு வெளியேற போனவள் போன் அடிக்கவும் அட்டெண்ட் செய்து “ஹலோ விக்கி” என்று பேசியபடியே அந்த அறையை விட்டு வெளியேறினாள். அவனிடம் பேசி விட்டு வைத்தவள் ரகுவுடன் வந்த மேனகாவைக் கண்டதும் “விக்கி யூ.எஸ்ல இருந்து இன்னும் டூ டேய்ஸ்ல வர்றான் மேகி” என்றதும் இருவரும் மகிழ்ச்சியுடன் ஸ்ராவணியை பார்த்தனர்.

ரகு “அப்போ சீக்கிரமாவே ஸ்ராவணி சுப்பிரமணியம் ஸ்ராவணி விக்ரமா மாற போறாங்க” என்றுச் சொல்லிக் கிண்டலடிக்க ஸ்ராவணி சிரித்தாள்.

“வந்ததும் ஃபர்ஸ்ட் என்கேஜ்மென்ட்டுனு அவனே பேரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டானாம். அப்புறம் இந்த மாசத்துலயே ஒரு முகூர்த்த நாளை பாக்க சொல்லி ரெண்டு வீட்டுக்காரங்க கிட்டவும் பேசிட்டு எனக்கு சொல்லுறான் இந்த ராஸ்கல்” என்றாள் அவள் கேலியாக.

மேனகா ஸ்ராவணியிடம் “அவன் உன்னை ரொம்ப லவ் பண்ணுறான் வனி.  இவ்ளோ நாள் உன்னை பாக்காம அமெரிக்கால இருந்ததே ஆச்சரியம் தான்” என்று சொல்லி தோழியை வாழ்த்திவிட்டு அவளது கேபினுக்கு சென்றாள்.

அன்று நாள் முழுவதும் ஸ்ராவணிக்கு மிகவும் இனிமையாக போகவே அவளுக்கே சந்தேகம் வந்தது. “வனி! இவ்ளோ ஸ்மூத்தா நாள் போகுதே! இது சரியில்ல” என்று சொல்லிக்கொண்டவள் மாலை அலுவலகம் முடிந்ததும் மேனகாவிடம் ஸ்கூட்டியை கொடுத்து அவளை வீட்டுக்கு சென்றுவிடும்படி கூறியவள் பார்த்திபனின் கைதுக்கு பிறகு இன்னும் முடிவடையாத தன்னுடைய அசைன்மெண்டுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துவிட்டு அதை குறித்து வைத்துவிட்டு தாமதமாக தான் கிளம்பினாள்.

ஆபிஸை பூட்டிய செக்யூரிட்டி “வனி மேடம்! உங்களுக்காக அன்னைக்கு சேனலுக்கு வந்தாருல்ல, அந்த உயரமான சார் பார்க்கிங் ஏரியால வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்று சுட்டிக்காட்ட அவள் பார்க்கிங் ஏரியா பக்கம் திரும்பி பார்த்தாள்.

அங்கே காரின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தவனைக் கண்டதும் “இவன் இந்நேரம் அவனோட தகப்பனை நெனைச்சு பரிதவிச்சு போயிருக்கணுமே!  இங்க என்ன பண்ணிட்டிருக்கான்?” என்ற யோசனையுடன் அவனை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

அவள் அவன் இடத்தை அடைந்ததும் தலையில் வைத்திருந்த கையை எடுத்தவன் ஏளனமான உதட்டுவளைவுடன் ” வந்துட்டிங்களா ரிப்போர்ட்டர் மேடம்” என்றபடி தரையில் இறங்கியவனின் பார்வை அவளைக் கூறுபோட ஸ்ராவணி அந்த பார்வையிலிருந்தக் கோபத்தை கறிவேப்பிலை போல ஒதுக்கி தள்ளிவிட்டாள்.

கையை கட்டிக்கொண்டு அவனை அமர்த்தலாகப் பார்க்க அபிமன்யூ “பார்ட்டில நீ ஒருத்தனை அறைஞ்சல்ல, அப்போ நீ ரொம்ப தைரியமான பொண்ணுனு நெனைச்சேன்.  ஆனா இப்பிடி கேவலமா என்னோட பெர்சனல் வீடியோவை லீக் பண்ணிட்டு அந்த டென்சன்ல சுத்துற டைம் பாத்து எங்க அப்பாவையும் அரெஸ்ட் பண்ண வச்சல்ல!  ஹாட்ஸ் ஆஃப் ஸ்ராவணி சுப்பிரமணியம்” என்று கை தட்ட அவளுக்குமே உள்ளே கொஞ்சம் குற்றவுணர்ச்சியாக தான்  இருந்தது.

மற்றவர்களின் சொந்த வாழ்க்கையை பட்டவர்த்தனமாக பறைசாற்றுவது அவளுக்குமே பிடிக்காத விஷயம் தான். ஆனால் அபிமன்யூவின் தந்தையைக் கட்டுப்படுத்தி அவரை சிறைக்கு அனுப்பப் போட்டத் தூண்டிலில் இரையாக வைக்க அந்த வீடியோ மட்டுமே அவள் வசம் இருந்தது.

“நான் டெபுடி சீஃப் மினிஸ்டரா ஆக கூடாதுனு இவ்ளோ லோ லெவல்ல இறங்கி என் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பிருக்கியே! இது தான் உங்க பத்திரிக்கை தர்மமா?” என்று பல்லை கடித்தபடி கேட்க

ஸ்ராவணி சலிப்புடன் தலையை தடவிக்கொண்டவள் கேலி நிரம்பிய குரலில் “என்ன பார்த்திபன் கனவு பகல் கனவா போயிடுச்சு போலயே? எம்.எல்.ஏ சார் அதான் ரொம்ப சூடா இருக்கீங்கனு நினைக்கேன்” என்கவும் அபிமன்யூ அவளை நெருங்கி வர இருவரும் எதிரும் புதிருமாக நின்றனர்.

ஸ்ராவணி தொடர்ந்து “நீயும், உங்க அப்பனும் சுத்தமா புத்தி இல்லாதவங்கனு நீ இப்போ பேசுறதுல இருந்தே தெரியுது. லிசன்! நான் ஒன்னும் அவரை  ஜெயிலுக்கு அனுப்பல.  டிபார்ட்மெண்டுக்கு அவரை பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணுனேன். எனக்குக்  கிடச்ச ஆதாரங்களை அவங்க கிட்ட குடுத்தேன். அவ்ளோ தான்” என்று சொல்ல அபிமன்யூ இறுகிய கைமுஷ்டியை காரில் குத்தி ஆத்திரத்தைக் காண்பித்தான்.

அவனது கோபத்தைப் பொருட்படுத்தாது “அவர் அங்க இருக்கிறது தான் அவருக்கும் பாதுகாப்பு. நீ நடந்த விஷயத்தை பத்தி முழுசா தெரிஞ்சிக்காம என்னை இப்பிடி இரிடேட் பண்ணாத ஓகே!” என்று சொல்லிவிட்டு நகர முயல அதற்குள் அவள் கையைப் பற்றி இழுத்தான் அபிமன்யூ.

அவனது இறுகியபிடியில் புஜம் வலிக்க தொடங்கவே “லீவ் மீ இடியட்! இல்லனா செக்யூரிட்டியை கூப்பிட வேண்டியிருக்கும்” என்று ஸ்ராவணி சொல்ல அவன் கோபத்தில் சிவந்த விழிகளால் அவளை வெறித்தபடியே பேசத் தொடங்கினான்.

“எப்போவும் சந்தோசம் மட்டுமே நிறைஞ்சிருக்கிற எங்க வீடு இன்னைக்கு சோகமயமா இருக்க நீ தான் காரணம். உன்னோட ஸ்டுப்பிட் நியாயம், தர்மம் இதெல்லாம் விட எனக்கு எங்க அப்பா தான் முக்கியம்.  காட்ஃபாதர்டி அவர் எனக்கு. அவரை ஜெயிலுக்கு அனுப்பி எங்க அம்மாவோட கண்ணீருக்கும் காரணமாயிட்டல்ல! பதவியேத்துக்க இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கு. அதுக்கு அப்புறமா ஏன்டா இவன் கிட்ட மோதுனோம்னு உன்னை நினைக்க வைக்கல, நான் அபிமன்யூ இல்லடி” என்று கோபத்துடன் உரைத்தவனின் கையை உதறினாள் ஸ்ராவணி.

அவனை கேலியுடன் பார்த்தவள் “ஒரு நாளுக்கு அப்புறம் நீ என்ன சி.எம்மா ஆக போற?  நீ வெறும் எம்.எல்.ஏ தான்டா! உன்னால என்னை எதுவும் பண்ண முடியாது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தம்பி” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திருக்காமல் நடக்கத் தொடங்கினாள் அவள். அவள் செல்வதை கடுப்புடன் பார்த்தவன் காரினுள் அமர்ந்து கார் கதவை படீரென்று சாத்திவிட்டு ” நீ பண்ணுன இந்த காரியம் எப்பிடி என் குடும்பம் மொத்தத்தையும் உலுக்கி, என் அப்பாவோட கவுரத்தை நாசம் பண்ணுச்சோ அதே மாதிரி உன் வாழ்க்கைலயும் இதே சம்பவங்களை நடத்தி காட்டல,  நான் பார்த்திபனுக்கு பிறந்தவன் இல்லடி” என்று இறுகிய குரலில் சொன்ன அபிமன்யூ அரைவட்டமடித்து அந்த காம்பவுண்டிலிருந்து காரைக் கிளப்பி வெளியேறினான்.