🖊️துளி 7👑
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அபிமன்யூவிடம் பேசிவிட்டு இடத்தைக் காலி செய்த ஸ்ராவணியின் காதில் பார்த்திபன் விஷ்ணுவுடன் பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் தெளிவாக விழுந்தது. அவர் பேசிக்கொண்டிருந்தார் என்று சொல்வது பெரும் தவறு. அவர் விஷ்ணுவை மறைமுகமாக மிரட்டிக்கொண்டிருந்தார் என்பதே உண்மை.
“ஏன் தம்பி உனக்கு இந்த வேண்டாத வேலை? அழகான குடும்பம், அன்பான மனைவினு ரொம்ப அருமையா போய்கிட்டிருக்கிற வாழ்க்கைய நீயா ஏன் சீரியஸா மாத்திக்கிற? உனக்கு ஒரு அழகான பெண்குழந்தை இருக்கிறதா பேசிக்கிறாங்க. பத்திரமா பாத்துக்கோங்க தம்பி. நாட்டுல என்னென்னவோ நடக்குது, திடீர்னு யாராவது குழந்தையை கடத்திட்டு போகவோ இல்ல அதை உலகத்தை விட்டு அனுப்பவோ கூட வாய்ப்பு இருக்கு. ஏன்னா நீங்க இருக்கிற ஃபீல்ட் அப்பிடி. பாத்து கவனமா இருந்துக்கோங்க” என்றவரின் குரலில் இருந்த ஏளனம், அகங்காரம் ஸ்ராவணிக்கு எரிச்சலை மூட்டியது.
தொடர்ந்து அவர்கள் பேசுவதை கேட்க விஷ்ணு “சார் என் பொண்ணு, பொண்டாட்டி, குடும்பத்தை எப்பிடி பாத்துக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். இதுல நான் உங்களை மாதிரி தான். புரியலயா? நீங்க எப்பிடி அரசியல்ல எல்லா கேடித்தனமும் பண்ணிட்டு வீட்டுல இருக்கிற பொண்டாட்டி, புள்ளைங்க, கூடப்பொறந்தவருக்கு கடவுள் மாதிரி தெரியுறிங்களோ அதே மாதிரி தான் நானும். குடும்பம்னு வந்துட்டா நான் உங்களை மாதிரி கடவுளா மாறாட்டாலும் ஒரு சாதாரண மனுஷன் குடும்பத்தை காப்பாத்த என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பானோ எல்லாத்தையும் எடுப்பேன். சோ அதை பத்தி நீங்க கவலைப்படவேண்டாம்” என்று பதிலடி கொடுத்தான் அவருக்கு.
பின் கடினமான குரலில் “கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்சுக்கு மெடிசின் சப்ளை பண்ணுறதுக்கு விட்ட டெண்டர்ல நடந்த முறைகேடு பத்தி எல்லாருக்கும் தெரியும். அதுல யார் யாருக்கு தொடர்பு இருக்குங்கிறது எனக்கும், உங்களுக்கும் நல்லாவே தெரியும். சோ எதுக்கும் தயாரா இருங்க முன்னாள் அமைச்சரே” என்று கேலித்தொனியில் முடித்தான் விஷ்ணு.
ஆனால் அமைச்சர் அதை கேட்டு பலமாக சிரித்தவர் “நீ இன்னும் என்னை முன்னாள் அமைச்சரா நினைக்கிறதால தான் இப்பிடி பேசிட்டிருக்க தம்பி. இவன் கிட்ட தான் பதவி இல்லயேங்கிற எகத்தாளம் தான் உன்னை இப்பிடி பேச வைக்குது. நீ இன்னொரு விஷயத்தை மறந்துட்ட. என்னோட மகன் இன்னைக்கு எம்.எல்.ஏ. அவன் எனக்கு கேடயமா இருக்கிற மாதிரியான ஒரு இடத்துக்குப் போகப் போறான்” என்று சொல்லவும் அதை கேட்டுக்கொண்டிருந்த விஷ்ணுவுக்கும், ஒட்டு கேட்டுக்கொண்டிருக்கும் ஸ்ராவணிக்கும் குழப்பம் அதிகரித்தது.
பார்த்திபன் கர்வத்துடன் “வெறும் எம்.எல்.ஏ ஆக்குறதுக்கா அவனை மெனக்கெட்டு லண்டன்ல இருந்து வரவச்சேன்? புரியலயா ரிப்போர்ட்டர் தம்பிக்கு? தெளிவா சொல்லுறேன் கேட்டுங்கோங்க. இன்னும் மூனு நாள்ல பதவியேற்பு விழா நடக்க போகுது. அதுல தமிழ்நாட்டோட முதலமைச்சரா வாசுதேவன் ஐயா தான் பதவியேற்க போறார். ஆனா கூடவே என் மகனும் பதவியேத்துக்க போறான், இதே தமிழ்நாட்டோட துணை முதலமைச்சரா!” என்று சொல்லவும் விஷ்ணு, ஸ்ராவணி இருவரும் அதிர்ந்தனர்.
அவனது குழப்பம் மனதுக்கு இதமளிக்க பார்த்திபன் அவனை கேலியாக பார்த்தவர் “இதை நீ எதிர்ப்பார்க்கல தானே! அவர் பேருக்கு தான் சீஃப் மினிஸ்டர். மொத்த அதிகாரமும் என் பையன் கையில வந்ததுக்கு அப்புறம் என்னை அரெஸ்ட் பண்ணுற தைரியம் யாருக்கு வரும்?” என்று சொல்லிவிட்டு நகர அவர் சென்றதைப் பார்த்துவிட்டு ஸ்ராவணி விஷ்ணுவிடம் வந்தாள்.
“சீஃப் என்ன நடக்குது இங்க? நேத்தைக்கு அரசியலுக்கு வந்தவனெல்லாம் நமக்கு சீஃப் மினிஸ்டரா? ஐ கான்ட் அண்டர்ஸ்டாண்ட் திஸ். இப்போ என்ன பண்ண சீஃப்?” என்றாள் குழப்பத்துடன்.
விஷ்ணு அவனது அக்மார்க் புன்னகையுடன் “இந்த ஆள் நம்பர் ஒன் முட்டாள்! இவரை காப்பாத்தணும்னு நினைச்சா இவர் நமக்கே வார்னிங் குடுக்கார். விடு வனி! நடக்கிறது நடக்கட்டும்” என்றான் சாதாரணமாக.
ஸ்ராவணி திகைப்புடன் “நீங்களா இப்பிடி பேசுறீங்க? சீஃப் அந்த அபிமன்யூ வெறும் கேண்டிடேட்டா இருந்தப்போவே ஓட்டுக்குப் பணம் குடுத்ததை திறமையா மறைச்சவன். அவன் இந்த மாதிரி பெரிய பதவிக்கு போனா அவர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மிரட்டுனார்ல, அது எல்லாமே ரியாலிட்டில நடக்க ஆரம்பிச்சிடும் சீஃப். அவன் அந்த பதவில உக்காரவே கூடாது. ஏதாச்சும் பண்ணனும் சீஃப்” என்று படபடக்க விஷ்ணு அவளை சாந்தமான முகத்துடன் பார்த்தான்.
“வனி! இது அமைதியா இருக்கிறதுக்கான நேரம். அவங்க என்ன ஆட்டம் போடணுமோ போடட்டும். நமக்கான நேரம் வரும். அப்போ நம்ம யார்னு அவங்களுக்கு காட்டுவோம்” என்று சொல்லிவிட்டுப் பார்ட்டி நடக்கும் இடத்துக்கு சென்றான்.
ஸ்ராவணி அவன் சென்றதும் சிந்தனையில் ஆழ்ந்தாள். பார்த்திபன் விஷ்ணுவின் குடும்பத்தைப் பற்றி பேசிய விஷயங்களை நினைத்துப் பார்த்தாள். அவர் விஷ்ணுவின் மகளை பற்றி பேசியதை யோசித்தவள் பூர்வி அவர்களின் மகளை பற்றி அவ்வபோது பேசுவதை நினைவு கூர்ந்தாள்.
“என்னோட பொண்ணு ஷிவானி ரொம்ப சமத்து. அவளுக்கு மனுனா உயிர். நானும் விச்சுவும் சென்னை வந்தப்போ அவளுக்கு ரெண்டு வயசு தான். எங்களால அவளைக் கவனிக்க முடியலனு தான் மனு கிட்ட அவளை வளர்க்க சொன்னோம். நான் அவளை ரொம்பவே மிஸ் பண்ணுறேன்” என்ற பூர்வியின் வார்த்தைகள் அவள் மகளின் மீது அவளது அன்பை பறைசாற்ற ஸ்ராவணி குழப்பத்தின் உச்சியில் இருந்தாள்.
அங்கேயே நின்று தீவிரமாக சிந்தித்தவளுக்கு தெரிந்த யோசனை ஒன்றே ஒன்று தான். எப்பாடு பட்டாவது அபிமன்யூ துணை முதல்வராவதை தடுக்க வேண்டும். அதற்கு அவள் வசம் இருக்கும் ஒரே ஆயுதம் அந்த வீடியோ மட்டும் தான்.
அவனது இரவுலகத்தை பற்றிய அந்த ஒரு வீடியோ கண்டிப்பாக கட்சியில் பெரும் பிரளயத்தை உண்டாக்கும் என்று கணக்கு போட்டவள் அதை சேனலில் ஒளிபரப்ப முடிவு செய்தாள். ஆனால் வழக்கம் போல அல்ல.
ஏனென்றால் விஷ்ணு இந்த விஷயத்தில் கண்டிப்பானவன். பத்திரிக்கை தர்மம் பார்ப்பவன் கண்டிப்பாக அதை ஒளிபரப்ப ஒத்துக்கொள்ள மாட்டான் என்பது அவளுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்த விஷயமே. அதனால் தான் அவள் மற்றொரு வழியை தேர்ந்தெடுத்தாள்.
விறுவிறுவென்று பார்ட்டி ஹாலுக்குள் சென்றவள் ரகுவை மட்டும் தனியாக இழுத்துவந்தாள். அவளது தீவிரமான முகபாவத்தை கண்டவன் “என்னாச்சு வனி?” என்று கேட்க
“முதல்ல இங்க இருந்து கிளம்புவோம் ரகு. எனக்கு உன் கிட்ட பேச முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு. மேகியையும் கூப்பிட்டுக்கோ. நான் சீஃப் கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தவள் விஷ்ணுவிடம் சொல்லிவிட்டு வரவும், மேகியுடன் ரகு வரவும் சரியாக இருந்தது.
மூவரும் நேரே ஸ்ராவணியின் ஃப்ளாட்டுக்கு செல்ல ரகு தான் முதலில் மவுனம் கலைந்தான்.
“வனி நீ எதையோ ரொம்ப டீப்பா யோசிக்கிற. என்னன்னு சொன்னா தானே நாங்களும் எதாவது யோசனை சொல்லமுடியும்” என்றவனின் கருத்தை மேகியும் ஆமோதித்தாள்.
“நீ பார்ட்டியிலயே சரியில்ல. ஏதும் பிராப்ளமா வனி?” என்ற மேனகாவை நோக்கி புன்னகைத்தவள் ரகுவிடம் “ரகு உனக்கு ஹேக்கிங் தெரியும்ல?” என்று கேட்க அவனோ ஏன் இவன் திடீரென்று கேட்கிறாள் என்ற குழப்பத்துடன் விழித்தான்.
ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவர்கள் இருவருக்கும் அருகே அமர்ந்தவள் “உன்னால ஒரு சேனல் நெட்வொர்க்கை ஹேக் பண்ண முடியுமா?” என்று கேட்க
ரகு “முடியும். நான் எத்திக்கல் ஹேக்கிங் கோர்ஸ்ல டிஸ்டிங்சன் வனி. பட் எந்த சேனலோட நெட்வொர்க்க ஹேக் பண்ணனும்?” என்று ஆர்வத்துடன் கேட்டுவிட்டு ஸ்ராவணியை பார்க்க மேனகா இதை புரியாத நாடகம் போல வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
ஸ்ராவணி நிதானமாக “நம்ம சேனலை தான்” என்று சொல்ல இருவரும் ஒரு சேர அதிர்ந்தனர்.
“நான் சொல்லப்போற விஷயத்தை கேட்டுட்டுப் பேச ஆரம்பிங்க. அந்த பார்த்திபனும், சீஃபும் பேசுனதை நான் கேட்டேன். இன்னும் மூனு நாள்ல பதவியேற்பு விழால அவன் துணை முதல்வரா பதவியேற்க போறான். அப்பிடி மட்டும் நடந்தா அந்த பார்த்திபன் சீஃபை மிரட்டுனதை நிஜமாவே செஞ்சிடுவார். இதுலாம் நடக்க கூடாதுனா அவன் துணை முதல்வரா ஆகக் கூடாது” என்று விளக்கவும் மேனகாவுக்கு இன்னொரு சந்தேகம் வந்தது.
“சரி! நீ ஏதோ திட்டம் வச்சிருக்க, அதுபடி அவன் துணை முதல்வர் ஆகலனு வச்சிப்போம். ஆனா அவங்க அப்பா சும்மா இருக்க மாட்டாரே! கட்சித்தலைமையை புரட்டி எடுத்துட மாட்டார் மனுஷன்” என்று தன்னுடைய வாதத்தை முன் வைத்தாள் மேனகா.
ரகுவும் அதை ஆமோதிக்க ஸ்ராவணி நிதானமாக “இவ்ளோ யோசிச்சவ இத மட்டும் விட்டிடுவேனா? கட்சித்தலைமைய புரட்டி எடுக்க அவர் வெளியே இருந்தா தானே? அவரையும் இந்த மூனு நாளுக்குள்ள மாமியார் வீட்டுக்கு பேக் பண்ணி அனுப்ப எல்லா ஏற்பாடும் கிட்டத்தட்ட முடிவாயிடுச்சு” என்று சொல்ல இருவரும் ஆச்சரியப்பட்டனர்.
ஸ்ராவணி ரகுவிடம் “ரகு நீ நம்ம சேனலை ஹேக் பண்ணனும். அதுக்கு அப்புறம் அந்த அபிமன்யூவோட வீடியோ பிரைம் டைம்ல டெலிகாஸ்ட் ஆகணும். அதை பாத்துட்டு கண்டிப்பா மிஸ்டர் வாசுதேவன் அவனை டெபுடி சி.எம்மா பதவியேற்க விட மாட்டார். கட்சி மானம் போயிடும்கிற பயம் இருக்கும்ல. அதே நேரத்துல பார்த்திபன் சி.பி.ஐயால அரெஸ்ட் பண்ணப் படுவார். இது தான் விஷயம்” என்று சொல்ல மேனகா கைத்தட்டினாள்.
“மாஸ்டர் பிளான் வனி. ஆனா அந்த வீடியோ தான் டெலிட் ஆயிடுச்சே” என்றாள் மேனகா கவலையுடன்.
ஸ்ராவணி தன்னுடைய பெண்டிரைவை காட்டியவள் “இதுல இருக்கு” என்று சொல்லி கண் சிமிட்டவும் மேனகாவின் முகம் தெளிவானது.
ரகு யோசனையுடன் “இதுக்குப் போய் ஏன் வனி சேனலை ஹேக் பண்ணுறளவுக்கு ரிஸ்க் எடுக்கணும்? பேசாம சோஷியல் நெட்வொர்க்ல ரிலீஸ் பண்ண வேண்டியது தானே” என்க
ஸ்ராவணி “அது சரியா வராது ரகு. சோஷியல் மீடியால ரிலீஸ் பண்ணுனா யார் போஸ்ட் பண்ணுனாங்கன்னு ஐ.பி அட்ரஸ் வச்சு கண்டுபிடிச்சுடுவாங்க. அப்புறம் நான் இல்ல என் அட்மின் தான் வீடியோ ரிலீஸ் பண்ணுனார், என்னோட அக்கவுண்ட் ஹேக் ஆயிடுச்சுனு உப்பு சப்பு இல்லாம பொய் சொல்லணும். அதுல ஈசியா மாட்டிப்போம்டா ரகு. சேனல் ஹேக்கிங் அப்பிடி இல்ல, அதை கண்டுபிடிக்கிறது கஷ்டம்” என்று சொல்ல ரகுவும் அதை ஆமோதித்தான்.
அவள் ரகுவிடம் “எல்லாம் ஓகே. பட் இதை எப்பிடி முடிக்கப் போற ரகு?” என்று தயக்கத்துடன் கேட்க
அவன் சாதாரணமாக “அதுக்கு சேனல் டிரான்ஸ்மிட்டர்ல இருந்து சாட்டிலைட்டுக்கு போற அப்லிங்கை போக விடாம பண்ணிட்டு இன்னொரு டிரான்ஸ்மிட்டர்ல இருந்து இந்த வீடியோவை சிக்னலா அனுப்பணும்” என்று செயல்முறையை விளக்க ஆரம்பிக்க ஸ்ராவணியும் மேனகாவும் அது புரியாமல் விழித்தனர்.
ஸ்ராவணி “உன்னோட இந்த டெர்ம்ஸ் எனக்கு சுத்தமா புரியல ரகு. பட் நீ தான் ஹேக் பண்ணுனனு யாரும் கண்டுபிடிச்சிட கூடாது. அது தான் முக்கியம். பிகாஸ் நாளைக்கு சேனலை என்கொயரி பண்ணுனா கூட நம்ம சேனல் யாரோ சமூகவிரோதிகளால ஹேக் ஆயிட்டுனு தான் சொல்ல போறோம். அதையும் கவனத்துல வச்சுக்கோ” என்று சொல்ல ரகு காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்.
மேனகா “சிசிடிவி கேமரா பத்தி யோசிக்காம பேசாதீங்க ரெண்டு பேரும்” என்று முக்கியமான விஷயத்தை நினைவுறுத்த
ரகு “நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க கேர்ள்ஸ். நானும் என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தனும் சேர்ந்து இந்த வேலையைப் பக்காவா முடிச்சிடுவோம். யாராலயும் எங்களை கண்டுபிடிக்கவும் முடியாது” என்று கெத்தாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.
அவன் சொன்னதை போலவே மறுநாள் முக்கியச் செய்தி ஒளிபரப்பாகும் நேரத்தில் சேனல் ஒளிபரப்பில் தகராறு வந்து சில நிமிட இடைவெளியில் அபிமன்யூவின் வீடியோ ஒளிபரப்பாக ரகுவின் அருகில் வந்த ஸ்ராவணியும், மேனகாவும் யாருமறியா வண்ணம் அவனுக்கு கட்டைவிரலை உயர்த்தி காட்ட அவன் வாயெல்லாம் பல்லாகச் சிரித்து வைத்தான்.
ஸ்ராவணி தனது அடுத்த திட்டம் நிறைவேறுவதற்காக கைக்கடிகாரத்தை பார்த்து வைத்தாள்.
வீடியோ ஒளிபரப்பான சில மணிநேரங்களில் தகவல் தீயாக பரவ பார்த்திபன் கட்சிக்கூட்டத்தில் எவ்வளவோ முயன்றும் அவரின் மகனை துணை முதல்வராக்கும் அவரது கனவு பலிக்கவில்லை.
வாசுதேவனும் “இந்த நேரத்துல அபி பதவியேத்துக்கிட்டா கட்சியை எல்லா மீடியா பீப்பிளும் காறி துப்பிடுவான். நீ கொஞ்சம் வெயிட் பண்ணு பார்த்தி” என்று தண்மையாகச் சொல்ல அவர் முகம்கொள்ளா சினத்துடன் துண்டை தூக்கியெறிந்தவர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.
அவர் கூட்டத்தைக் கடக்கும் போது ஜெகதீசன் “ஏதோ உலகத்துல இல்லாத மகனை பெத்த மாதிரி என்ன ஆட்டம் போட்டான் இவன்! ஆனா ஒரே மகனை ஒழுக்கமா வளக்க துப்பு இல்லயே. இவனெல்லாம் துணைமுதல்வரா ஆனா தானே தமிழ்நாடு உருப்படும்” என்று எள்ளி நகையாட நெஞ்சில் மூண்ட தீயுடன் வீட்டை நோக்கி காரை செலுத்த சொன்னார் அவர்.
******
ஜஸ்டிஸ் டுடே அலுவலகம்…
விஷ்ணு ஆதங்கத்துடன் ஊழியர்களிடம் விசாரித்து கொண்டிருந்தான். ஆனால் அவனாலும் சேனல் ஹேக் ஆனது எப்படி என்று அறியமுடியவில்லை. அதற்கு காரணமான மூவரும் அறியாபிள்ளைகள் போல முகத்தை வைத்து கொண்டு அலுவலகத்தில் நடமாடிக்கொண்டிருந்தனர்.
அட்மினிஸ்ட்ரேசன் பிரிவினர் போன் கால்களுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தனர். மேனகா, ஸ்ராவணி இருவரும் ரகுவின் கேபினில் இருப்பதைக் கண்ட சுலைகா ஆச்சரியத்துடன் ஹேக்கிங் விஷயத்தை விசாரிக்க ரகு சாதாரணமாக
“என்ன சுகா நீ இவ்ளோ ஆச்சரியப்படுற? நம்ம சேனல் மேல நிறைய பேருக்கு செம கடுப்பு. அதுல யாராச்சும் இப்பிடி பண்ணி வச்சிருப்பாங்க” என்றுச் சொல்ல மேனகாவும் ஸ்ராவணியும் அதற்கு தலையை உருட்டிக் கொண்டிருக்கும் போதே ஏ.சி.பியிடம் இருந்து விஷ்ணுவின் எண்ணுக்கு அழைக்க முடியாததால் அவளுக்குப் போன் வரவே அவரிடம் பேசிவிட்டு விஷ்ணுவின் கேபினுக்குள் கதவைத் தட்டிவிட்டு நுழைந்தாள் அவள்.
அன்று காலையிலிருந்து போன் மேல் போன் வந்ததால் விஷ்ணு பிரகாஷ் அவனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்த்தான்.
உள்ளே நுழைந்த ஸ்ராவணி மெதுவாக விஷ்ணுவிடம் “சீஃப் ஏ.சி.பி கிட்ட இருந்து போன் வந்துச்சு. போன் டேப்பிங் ஆடியோஸ் பக்காவா இருக்காம். டாக்குமென்ட் எவிடென்ஸ் மட்டும் கையில் கிடைச்சா வேலை சுலபமா முடிஞ்சிடும்னு சொன்னாங்க” என்று விஷயத்தை அவன் காதில் போட்டு அப்போதைக்கு ஹேக்கிங் விஷயத்தை மறக்கடித்தாள்.