🖊️துளி 50👑 (PRE-FINAL)

அன்று காலையில் அலுவலகத்துக்குச் சீக்கிரமாகவே வந்துவிட்டான் அபிமன்யூ. அஸ்வின் கிளையண்டைச் சந்திக்க வெளியே சென்றிருக்க அவன் மட்டும் தான் அலுவலகத்தில் இருந்தான்.

சும்மா இருக்கப் பிடிக்காமல் ஸ்ராவணியின் நினைவுகளில் மூழ்கியிருந்தவன் ரேகிலிருந்து ஒரு ஃபைலை உருவி அதை வாசித்துக் கொண்டிருக்க புதிதாக நியமிக்கப் பட்டிருந்த ஆபிஸ் பாய் வந்து “அண்ணா உங்களைப் பார்க்க ஷ்ரவன் சுப்பிரமணியம்னு ஒருத்தர்…” என்றுச் சொல்லி முடிக்கும் முன்னரே ஏற்கெனவே அவன் ஸ்ராவணியின் நினைவில் மூழ்கியிருந்ததால் அவன் காதுக்கு ஷ்ரவன் சுப்பிரமணியம் என்ற வார்த்தை ஸ்ராவணி சுப்பிரமணியம் என்று விழுந்தது. அவன் ஆவலுடன் வெளியே வரும் போதே “ஐ மிஸ் யூ வனிம்மா” என்றுச் சொல்லிக் கொண்டே வர அங்கே ஸ்ராவணிக்குப் பதிலாக அவனுக்கு எதிரில் நின்ற ஆறடி உயர ஆடவனைக் கண்டுக் குழப்பமடைந்தான்.

ஆனால் அவனோ எந்த குழப்பமுமின்றி “ஹாய்! ஐயாம் ஷ்ரவன் சுப்பிரமணியம். ஸ்ராவணியோட பிரதர்” என்று அபிமன்யூவுக்கு கையை நீட்ட அபிமன்யூ திகைத்துப் போனவனாக அவன் கையைக் குலுக்கினான். அபிமன்யூ அவனை உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்தான்.

அவனை நேருக்கு நேராகப் பார்த்த ஷ்ரவன் சுற்றி வளைக்காமல் “வனி உங்களை லவ் பண்ணுறானு நேத்து தான் எங்க ஃபேமிலிக்குத் தெரிய வந்துச்சு. எனக்கு இந்த ரிலேசன்ஷிப் பாஸிபிளானு கொஞ்சம் சந்தேகம். அதான் டேரக்டா உங்க கிட்டவே கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றுச் சொல்ல அபிமன்யூவுக்கு அவனது சந்தேகம் நியாயம் தான் என்று தோன்றியது.

“இட்ஸ் ஓகே ப்ரோ. எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா. நாளைக்கு அவ யாரையாச்சும் லவ் பண்ணுறேனு சொல்லிட்டு வந்து நின்னா ஒரு அண்ணனா நான் என்ன செய்வேனோ அதைத் தான் நீங்களும் பண்ணுறிங்க! சோ நீங்க கேக்கணும்னு நெனைக்கிறதைக் கேளுங்க” என்று அமைதியாகக் கையைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்தான் அபிமன்யூ.

“நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பல. எனக்கு உங்க லைஃப் ஸ்டைல் பத்தி நல்லாவே தெரியும். உங்களால சீரியஸ் ரிலேசன்ஷிப்ல இருக்க முடியுமாங்கிறது தான் என்னோட முக்கியமானச் சந்தேகம் அபிமன்யூ. உங்களால உங்க எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட்ஸை ஈஸியா மறக்க முடிஞ்ச மாதிரி என் தங்கச்சியையும் நீங்க மறந்துட்டுப் போயிட்டிங்கன்னா அவ தான் இதால கஷ்டப்படுவா”

“ப்ரோ! என்னோட லைஃப் ஸ்டைல் பிறந்ததுல இருந்தே ஒன்னும் எனக்குப் பழக்கம் இல்ல. லண்டன் போனப்போ அங்கே கேசுவல் ரிலேசன்ஷிப், லிவின்லாம் ரொம்ப சாதாரணம். அப்போ அது எனக்குப் பெருசா தோணல. ஒருத்தர் இல்லைன்னா இன்னொருத்தர்னு கடந்துப் போறது எனக்குப் பழக்கம் தான். ஆனா என்னோட லைஃப்ல சில பெண்களுக்கு ரீப்ளேஸ்மெண்டே கிடையாது. முதல்ல என்னோட அம்மா, அடுத்து என்னோட தங்கச்சி ஜானு! அவங்களை மாதிரி தான் வனியும். என் வாழ்க்கையில வனியை ரீப்ளேஸ் பண்ண யாராலயும் முடியாது ப்ரோ! அவளை ரீப்ளேஸ் பண்ணுற ஒருத்தி என் வாழ்க்கையில வரப் போறதும் இல்ல” என்றான் தீர்மானமான குரலில்.

அவன் சொன்னது ஷ்ரவனுக்கு பெரும் நிம்மதியைக் கொடுக்க அவனது அடுத்தச் சந்தேகத்தைக் கேட்கத் தொடங்கினான்.

“உங்க ரெண்டு பேரோட புரஃபசனும் வேற வேற. அப்பிடி சொல்லுறதை விட எதிர் எதிர் துருவம்னு கூடச் சொல்லலாம். இதனால உங்க லைஃப்ல எதாச்சும் பிரச்சனை வந்தா என்ன பண்ணுவிங்க?” என்று பதிலுக்குக் கேட்க

அபிமன்யூ “அதைப் பத்தி நாங்க ஆல்ரெடி டிஸ்கஸ் பண்ணிட்டோம். எங்க ரெண்டு பேரோட புரஃபசனல் லைஃப்ல நாங்க தலையிட மாட்டோம்னு எப்பவோ முடிவு பண்ணிட்டோம். இது வரைக்கும் நாங்க தலையிட்டதும் இல்ல. எதிர்காலத்துலயும் நாங்க இப்பிடி தான் இருப்போம்” என்றான் நம்பிக்கையுடன்.

அவன் வார்த்தைகள் ஷ்ரவனுக்கு நம்பிக்கையூட்ட எழுந்தவன் அபிமன்யூவிடம் “ஓகே! உங்க அம்மாவை வீட்டுக்கு வந்து பேசச் சொல்லுங்க. நான் கிளம்புறேன்” என்று கை கொடுக்க அபிமன்யூ மகிழ்ச்சியுடன் அவன் கையைக் குலுக்கிவிட்டு “அப்போ நீங்க என்னை நம்புறிங்களா ப்ரோ?” என்று ஆர்வத்துடன் கேட்க ஷ்ரவன் சிரித்தான்.

“இந்த உலகத்துல மாமியாரை முழுசா நம்புற மருமகளும், தங்கச்சி புருசனை முழுசா நம்புற அண்ணனும் இது வரைக்கும் பிறக்கல அபிமன்யூ. டைம் ஆச்சு. நான் கெளம்புறேன்” என்றுச் சொல்லிவிட்டுக் கிளம்ப அபிமன்யூ மனதிற்குள் “நீ எப்பிடிய்யா என்னை நம்புவ? அண்ணனும் தங்கச்சியும் இந்த விசயத்துல ஜெராக்ஸ் காப்பி மாதிரி” என்றுச் சொல்லிக் கொண்டான்.

அவன் சென்றதும் சுபத்ராவுக்குப் போன் செய்தவன் அன்று மாலையே ஸ்ராவணியின் வீட்டுக்குச் சென்று பேசி திருமண பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும்படி கூறிவிட்டுப் போனை வைத்தான். சிறிது நேரத்தில் அஸ்வின் வர அவனிடம் இந்தச் சந்தோசமான விஷயத்தைப் பகிர்ந்துக் கொண்டான்.

***************************

ஷ்ரவன் அபிமன்யூவிடம் பேசிவிட்டு வந்தவன் தனக்கு அபிமன்யூவைப் பிடித்திருப்பதாகச் சொன்னதோடு அவனது வீட்டிலிருந்து கூடியவிரைவில் வந்து திருமணம் பற்றிப் பேசுவார்கள் என்று கூற சுப்பிரமணியமும் வேதாவும் ஏன் இந்த திடீர் ஞானோதயம் என்று வினவினர்.

ஷ்ரவன் நடந்த விஷயத்தைக் கூற அவர்களுக்குமே இந்த திருமணத்தால் எந்த பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கை பிறந்தது. வினிதா அவனுக்கு கட்டைவிரலை உயர்த்திக் காட்ட மனைவியை நோக்கிப் புன்னகைத்தான்.

அபிமன்யூ சொன்னபடியே ஸ்ராவணியின் வீட்டு லேண்ட்லைனுக்கு அழைத்த சுபத்ரா வேதாவிடம் அவர்களின் காதல் மற்றும் திருமண விஷயத்தைப் பேசி முடிக்க அவரை வீட்டுக்கு அழைத்தார் வேதா.

சுபத்ரா ஜனனியுடன் வந்தவர் ஸ்ராவணியின் குடும்பத்தாரிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றிச் சொல்லிவிட வேதாவும் சுப்பிரமணியமும் ஒரு கணம் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டனர். இந்த இரண்டு பெண்களும் என்னென்ன காரியத்தைப் பண்ணி வைத்திருக்கிறார்கள் என்று ஷ்ரவனும் திகைத்துப் போனான். வினிதாவோ தன் தங்கையா இவ்வளவு கிரிமினல் வேலைகளைச் செய்தாள் என்று அப்பொழுது கூட அவர் சொன்னதை நம்பவில்லை.

சுபத்ரா “இதை உங்க கிட்ட அவங்க சொன்னாங்களா இல்லையானு எனக்குத் தெரியாது. ஆனா பெத்தவங்களா உங்கப் பொண்ணு வாழ்க்கையில நடந்த விஷயங்களை நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்னு தான் நான் இதை உங்க கிட்ட சொன்னேன். கடவுள் எந்த விஷயத்தையும் காரணம் இல்லாம நடக்க விடுறது இல்ல அண்ணா. அவங்க ரெண்டு பேரும் தான் வாழ்க்கையில ஒன்னு சேரணும்னு இருந்திருக்கு” என்றுச் சொல்ல ஸ்ராவணியின் குடும்பத்தார் அதை ஆமோதித்தனர்.

அவர் மெதுவாக அஸ்வின் மேனகாவைப் பற்றி ஆரம்பிக்க அடுத்த அதிர்ச்சி அவர்களுக்கு. ஆனால் ஸ்ராவணியின் குடும்பத்தினருக்கு சுபத்ராவின் எளிமையும், தன் மகன்கள் என்பதால் அவர்களின் தவறை மறைக்காமல் தங்களிடம் சொன்ன விதமும் பிடித்துப் போக ஒரு நல்ல நாளாகப் பார்த்து இரு ஜோடிகளுக்கும் திருமணம் செய்து விடலாம் என்று முடிவெடுத்தனர். சுபத்ரா நிறைந்த மனதுடன் ஜனனியை அழைத்துக் கொண்டு ஸ்ராவணியின் குடும்பத்தாரிடமிருந்து விடை பெற்றார்.

மாலையில் வீடு திரும்பிய ஸ்ராவணி உம்மென்ற முகத்துடன் வலம் வர வினிதா அவளிடம் பேச வர ஷ்ரவன் உதட்டில் கை வைத்துச் சொல்லாதே என்று சைகை காட்டியபடி தங்கையின் அருகில் வந்து அமர வினிதாவும் கள்ளச்சிரிப்புடன் மேனகாவின் அருகில் அமர்ந்தாள்.

ஷ்ரவன் தொண்டையைச் செருமிக் கொண்டு “வனி! நீ என் கூட பேசமாட்டியா?” என்று பாவமாகக் கேட்க அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு “உனக்கு என் அபியை பிடிக்காத வரைக்கும் நான் உன் கூட பேச மாட்டேன். போடா” என்றுச் சொல்ல சுப்பிரமணியத்தோடு சேர்ந்து மொத்தக் குடும்பமும் அவளின் குழந்தைத்தனமான செய்கையைக் கண்டு சிரித்தனர்.

ஸ்ராவணி கடுப்புடன் உள்ளே செல்ல எழ அவளை அமர வைத்த ஷ்ரவன் “ரொம்ப கோவப்படாதே வனிம்மா! உனக்காக அந்த அபிமன்யூவை நான் ஏத்துக்கிறேன்” என்றுச் சொல்ல ஸ்ராவணி அண்ணனை ஆச்சரியமாகப் பார்த்தவள் “டேய் அண்ணா நிஜமாவா சொல்லுற?” என்று கேட்க அவன் ஆமென்றுச் சொல்ல ஸ்ராவணி அவளது அண்ணனை அணைத்துக் கொண்டாள்.

பின்னர் சந்தேகத்துடன் “ஏன் இந்த திடீர் ஞானோதயம்?” என்ற தங்கையின் தலையில் செல்லமாகக் குட்டியபடி “எல்லாம் உன்னோட ஆருயிர் காதலனோட தீவிரமான காதலை லைவ்வா பார்த்ததுக்கு அப்புறம் வந்தது தான். எவ்ளோ லவ் இருந்தா ஷ்ரவன் சுப்பிரமணியம்கிற பேர் கூட அவனுக்கு ஸ்ராவணி சுப்பிரமணியம்னு கேட்டிருக்கும்?” என்று கேலி செய்தான் ஷ்ரவன்.

ஸ்ராவணி புரியாமல் விழிக்க “இன்னைக்கு அபிமன்யூவை ஆபிஸ்ல போய் பார்த்துப் பேசிட்டு தான் வந்தேன். நடந்ததை மறைக்காம பேசுற அவனை எனக்கு பிடிச்சிருக்கு வனி. ஐ நோ அவன் ஒன்னும் ரொம்ப நல்லவன் இல்ல. பட் நீன்னா அவனுக்கு உயிர். எனக்கு இது போதும்” என்றான் ஒரு பாசக்கார அண்ணனாக.

வினிதா மேற்கொண்டு ஸ்ராவணியிடம் “அவங்க அம்மா இன்னைக்கு மதியம் வந்தாங்க. உங்க ரெண்டு பேரோட திருவிளையாடல்கள் எல்லாத்தையும் ஒன்னு விடாமச் சொல்லிட்டாங்க” என்றுச் சொல்ல ஸ்ராவணி திருதிருவென்று விழிக்க மேனகாவோ அங்கிருந்து மெதுவாக நழுவ முயலவும் ஷ்ரவன் அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

“எங்கே ஓடப் பார்க்குற? லேசுபட்ட காரியமா பண்ணிருக்க நீ?” என்று கேலி செய்ய மேனகாவுக்குப் பயத்தில் வார்த்தைகள் தந்தியடிக்க ஆரம்பித்தது.

சுப்பிரமணியம் சிரித்துக் கொண்டு “அவளை ரொம்ப மிரட்டாதடா! பாவம் என் மருமகள் எப்பிடி பயந்துட்டா பாரு. மேகி ஒன்னும் இல்லடா. நீ பதறாத” என்று மருமகளை ஆசுவாசப்படுத்தினார்.

வினிதா “சுபத்ராம்மா அவங்க ரெண்டு பையனுக்கும் நம்ம வீட்டுப்பொண்ணுங்களை பொண்ணு கேட்டு வந்தாங்க. நாங்களும் ஓகே சொல்லிட்டோம். நல்ல ஜோசியரா பார்த்து கல்யாணத்துக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணுறது மட்டும் தான் பாக்கி” என்றுச் சொல்ல ஸ்ராவணியோடு சேர்த்து மேனகாவுக்கும் இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

மேனகாவை வினிதா கிண்டல் செய்ய அவள் வெட்கத்தில் பால்கனி பக்கமாக ஓட ஸ்ராவணி அவளைப் பின்தொடர்ந்தாள். அவளை அணைத்துக் கொண்டு தன் சந்தோசத்தை வெளிப்படுத்திய ஸ்ராவணி “மேகி! இதைப் பத்தி நானே அப்பா கிட்ட சொல்லணும்னு நெனைச்சிட்டு இருந்தேன். ஆனா பாரேன் அஸ்வின் இதைப் பத்தி ஆன்ட்டி கிட்டவே டேரக்டா பேசிருக்கான். நீ கேடினா அவன் கில்லாடி” என்று கேலி செய்ய அந்த நேரத்தில் மேனகாவுக்குப் போன் செய்தான் அஸ்வின்.

ஸ்ராவணி “ஏய் ஸ்பீக்கர்ல போடு” என்றுச் சொல்ல மேனகாவும் அதை லவுட் ஸ்பீக்கரில் போட அதை அறியாத அஸ்வின் “ஹலோ மேகி! பேபிம்மா நான் உன் கிட்ட ஒரு ஸ்வீட் நியூஸ் சொல்லணும். அம்மா அபி மேரேஜோட நம்ம மேரேஜையும் பேசி முடிச்சிட்டாங்க. நான் எவ்ளோ ஹேப்பியா இருக்கேனு தெரியுமா? அப்பிடியே ஜிவ்வுனு வானத்துல பறக்குற ஃபீல்”  என்றுக் காதலுடன் கூற

மேனகா அதற்கு பதிலளிக்கும் முன் முந்திக் கொண்ட ஸ்ராவணி “சீக்கிரமா கீழே இறங்குங்க டியூட். அட்லீஸ்ட் கல்யாண தேதிக்குள்ளயாச்சும் இறங்கிடுவிங்களா?” என்று கேலி செய்ய அவன் தடுமாறிவிட்டான். பின்னர் மேனகா தான் போனை ஸ்பீக்கரில் போட்டிருப்பதாகக் கூற அவன் தலையிலடித்துக் கொள்ள அவனையே கவனித்துக் கொண்டிருந்த அபிமன்யூவும் போனை ஸ்பீக்கரில் போடச் சொல்லவே அவன் சொன்னதைச் செய்தான் அஸ்வின்.

ஸ்ராவணி அதை அறியாமல் அவள் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்க அபிமன்யூவின் நகைப்பொலியில் அவனும் தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான் என்பதை அறிந்த ஸ்ராவணி அவனைக் கேலி செய்ய அந்த தொலைபேசி உரையாடல் கிண்டலும் கேலியுமாகக் கடந்தது.

அதற்கு பிறகு அனைத்து காரியங்களும் வேகமாக நடக்க ஜோசியர் அபிமன்யூ ஸ்ராவணியின் திருமணத்துக்கு நல்ல நாளைக் குறித்துக் கொடுத்தார். அஸ்வின் மேனகாவின் ஜாதகத்தைப் பார்த்தவர் “இவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் வியாழன் நோக்கம் வரலை. அதனால கல்யாணத்தை கொஞ்சம் தள்ளிப் போட்டே ஆகணும்” என்றுச் சொல்லிவிட அஸ்வின் கொதித்துப் போய் விட்டான்.

அவர் சென்ற பிறகு தாம்தூம் என்று குதிக்க சுபத்ரா “இன்னும் ஆறு மாசம் தானேடா! கண் மூடி திறக்கறதுக்குள்ள போயிடும்” என்றுச் சொல்லி சமாளிக்க அவன் எப்படியோ சமாதானம் ஆனான். ஆனாலும் மேனகாவிடம் போனில் புலம்பித் தள்ள மறக்கவில்லை அவன். அவள் சிரித்தபடி சுபத்ரா சொன்ன அதே சமாதானத்தைச் சொல்ல

அவன் “அம்மாவும் இதையே தான் சொல்லுறாங்க. ஆனா ஆறு மாசம் மேகி..ஆஆஆறு மாசம்” என்று அவன் இழுக்க மேனகா “சரி சரி ரொம்ப வருத்தப்படாதே! நமக்கு லவ் பண்ணுறதுக்கு இன்னும் ஒரு ஆறு மாசம் டைம் எக்ஸ்ட்ராவா இருக்குடா. அதை நினைச்சுச் சந்தோசப்படுடா” என்றுச் சொல்ல அவன் அதில் சமாதானமாகிவிட்டான்.

இவ்வாறு இருக்கவே திருமண நாளும் வந்துவிட்டது. காலை ஒன்பது மணிக்கு முகூர்த்தம். ஏழு மணிக்கே மண்டபம் களை கட்டத் தொடங்கிவிட்டது. அபிமன்யூ விஷ்ணுபிரகாஷுக்கும், அவனது சகோதரன் சிவபிரகாஷுக்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்து அழைத்ததால் அவர்கள் சீக்கிரமாகவே வந்துவிட்டனர்.

ரகுவும், வர்தனும் ஷ்ரவனுடன் சேர்ந்து வருபவர்களை வரவேற்க பெண்கள் அனைவரும் மணமகள் அறையில் ஸ்ராவணியுடன் கூடியிருந்தனர். மானஸ்வி, பூர்வி இருவரும் அவரவர் குழந்தைச் செல்வங்களுடன் ஸ்ராவணியை கலாய்த்துக் கொண்டிருக்க வினிதா, மேனகா, அனுராதா, சுலைகா மூவரும் பியூட்டிசியனுடன் சேர்ந்து ஸ்ராவணியை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.

தர்ஷன் கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு “வனிக்கா இன்னைக்கு உங்களுக்கு கல்யாணம்னு மம்மி சொன்னாங்க. அப்போ நான் பெரியவனாகி யாரைக் கல்யாணம் பண்ணிப்பேன்?” என்று யோசிக்க மானஸ்விக்கு மகனின் அறிவை நினைத்து பெருமை பிடிபடவில்லை.

ஸ்ராவணி அவனது கன்னத்தைக் கிள்ளிக் கொண்டே “நீ பெரியவனா ஆனதும் நம்ம ரெண்டு பெரும் செகண்ட் டைம் மேரேஜ் பண்ணிப்போம்டா” என்றுச் சொல்ல தர்ஷன் கண்ணை உருட்டி “அப்போ இந்த மாமாவை என்ன பண்ண?” என்று கேட்க ஸ்ராவணி “அவன் அப்போ கிழவனா ஆயிடுவான்டா. சோ நோ ப்ராப்ளம்” என்க பூர்வி கிண்டலாக “ஆமாடா மாமாக்கு மட்டும் தான் வயசாகும். உங்க அக்கா அப்படியே என்றும் பதினாறுனு இளமையா இருப்பா” என்றுச் சொல்ல அந்த அறைக்குள் சிரிப்புச்சத்தம்.

அதே நேரம் மணமகன் அறையில் அபிமன்யூ தயாராகி விட்டு சிபுவுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். அஸ்வின் கிண்டலாக “இன்னையோட உன்னோட சுதந்திரம் பறி போகப் போகுது அபி! நல்ல வேளை எனக்கு ஆறு மாசம் இருக்குப்பா” என்று தோளைக் குலுக்கிக் கொள்ள

சிபு கிண்டலாக “இதுல என்ன மேன் உனக்கு சந்தோசம்? போகப் போறது ஜெயிலுனு தெரிஞ்சிட்டா அங்கே ஆறு மாசத்துக்கு முன்னாடி போனா என்ன, ஆறு மாசத்துக்கு அப்புறமா போனா என்ன?” என்றுச் சொல்ல அபிமன்யூ சிரித்துக் கொண்டே அவனுக்கு ஹைஃபை கொடுக்க விஷ்ணு வந்து “அரட்டை எல்லாம் முடிஞ்சுதா? புரோகிதர் மாப்பிள்ளையை கூப்பிட்டாச்சு”  என்க அபிமன்யூ எழுந்து கொண்டான்.

மணமேடையில் அமர்ந்தவனின் நினைவு முழுவதும் ஸ்ராவணி எப்போது வந்து தன் அருகில் அமர்வாள் என்பதிலேயே இருக்க மந்திரத்தை ஏனோதானோவென்று உச்சரித்தன அவனது உதடுகள். அவன் எதிர்ப்பார்த்த அவனது தேவதை தோழியர் சூழ சிவப்பு நிற பட்டில் பொன்னிற ஜரிகை இழையோட மணப்பெண்ணிற்கே உரித்தான நாணம் மின்ன, பொற்பாவையாக நடந்து வர அவளது கண்கள் தன் கண்களைச் சந்திக்காதா என்று ஏங்கினான்.

அவனது ஏக்கத்தைப் போக்கும் விதமாக ஸ்ராவணியின் கயல்விழிகள் மணமேடையில் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தவனைப் பார்க்க அவன் இதற்கு தான் காத்திருந்ததைப் போல இதழ் விரித்துப் புன்னகைத்துத் தன்னவளை நோக்கி கண் சிமிட்ட அவள் கன்னங்குழியச் செவ்விதழ் விரிய மயக்கும் காந்தப்புன்னகையைச் சிந்தியபடி மணமேடையை நோக்கிச் சென்றவள் அவன் அருகில் அமர அபிமன்யூ அவளது காதில் “வனி நான் உன்னைக் கடத்திட்டுப் போகப் போறேன்” என்று தீவிரமான குரலில் கூறிவிட்டு மந்திரத்தைத் தொடர்ந்தான்.

ஸ்ராவணி யாரும் அறியாவண்ணம் அவன் காதருகில் குனிந்து “பார்ப்போம்டா! யாரு யாரை கடத்திட்டுப் போறாங்கன்னு” என்க அவளைத் திரும்பிப் பார்த்தபடி “வனி இவ்ளோ ரிச்சுவல்ஸ் தேவையா என்ன? சிம்பிளா தாலியை கட்டிட்டு ஹனிமூன் போக விட்டா என்னாவாம்?” என்று குறைபட அவள் யாரும் அறியாவண்ணமே அவனைக் கிள்ளினாள்.

அவனோ கத்த முடியாமல் “ஏய் ராட்சஸி! ஏன்டி கிள்ளுற?” என்க ஸ்ராவணி “பின்ன ஒரு மனுசனுக்கு எப்போ பார்த்தாலும் ஹனிமூன் நினைப்பு தானா?” என்று கண்டிக்கும் குரலில் கூறி ஒழுங்காக மந்திரத்தைச் சொல்லுமாறு கண்ணால் அவனை மிரட்ட அவனும் அதற்குப் பின் மந்திரத்தில் கவன் செலுத்தினான்.

அவர்களின் உரையாடலைக் கவனித்த சிபு மானஸ்வியின் தோளில் இடித்து “சோடாபுட்டி இதுங்க ரெண்டும் இந்த நேரத்துல அப்பிடி என்ன பேசுக்கிதுங்க?” என்று கேலி செய்ய மானஸ்வி “தெரியலடா! பட் அவரு கண்டிப்பா பொண்ணுக்கு பதிலா ஐயர் கழுத்துல தாலி கட்டிடக்கூடாதுனு தான் பேசுனேனு சொல்லி சமாளிக்க மாட்டாருனு நினைக்கிறேன்” என்று சந்தடிச் சாக்கில் அவன் காலை வாறிவிட்டாள்.

அஸ்வின் மேனகாவுடன் ஜோடியாக நின்று கொண்டவன் திருமணச்சடங்குகளை கண்கொட்டாமல் பார்க்க மேனகா அதைக் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தாள். பூர்வி ஷிவானியின் தோளை அணைத்து நின்றவள் விஷ்ணுவின் காதில் ஏதோ சொல்ல அவன் ஆமென்று தலையசைத்து சிரித்தான்.

இந்த கண்கொள்ளாக்காட்சியை மேடையிலிருந்து கண்டுகொண்டிருந்தனர் வேதா, சுப்பிரமணியம் மற்றும் சுபத்ரா, பார்த்திபன் தம்பதியினர். பார்த்திபன் மகன் திருமணத்துக்காக பரோலில் வந்திருந்தார். அவரது அருகில் துணையாய் நிற்கும் சகாதேவனிடம் மாலை வரவேற்புக்கான ஏற்பாடுகள் குறித்து வினவ அவரும் அண்ணன் மகனின் மணக்கோலத்தைக் கண்ணால் பருகியபடி தமையனுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து முதலமைச்சரான மதியழகன் வர பார்த்திபனின் கண்ணசைவை புரிந்து கொண்டவர்களாய் சகாதேவனும் அஸ்வினும் வாசலுக்கே சென்று அவரை வரவேற்று அவருக்கான இருக்கையில் அமர வைத்தனர். அபிமன்யூ மணமேடையில் இருந்தபடியே அவருக்கு வணக்கம் சொல்ல அவரும் இன்முகத்தோடு பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு ஸ்ராவணியை நோக்கிப் புன்னகைத்தார்.

அதற்குள் மாங்கல்யதாரணத்துக்கான சுபமுகூர்த்தம் நெருங்கிவிட அனைவரிடமும் ஆசி வாங்கிவிட்டு அர்ச்சதை தட்டில் வைக்கப்பட்டிருக்கும் மாங்கல்யத்தை எடுத்துவந்து புரோகிதரிடம் நீட்டினாள் ஜனனி.

புரோகிதர் மாங்கல்யத்தை அபிமன்யூவிடம் நீட்ட அதை வாங்கிக் கொண்டவன் மனதிற்குள் “கடவுளே யாருக்கும் கிடைக்காத ஒரு அருமையான பொண்ணை எனக்கு வாழ்க்கைத்துணையா அனுப்பிருக்க. நாங்க எந்த நிலைமையிலயும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியாம இதே மாதிரி சந்தோசமா இருக்கணும்” என்று வேண்டியபடி மங்கல வாத்தியம் முழங்க பெற்றோர், நண்பர்கள் ஆசியுடன் அதை ஸ்ராவணியின் கழுத்தில் அணிவித்தான் அபிமன்யூ.

இருவீட்டுப் பெரியவர்களிடமும் ஆசி பெற்றவர்கள் விஷ்ணுவை நெருங்க அவன் அபிமன்யூவை அணைத்து வாழ்த்து தெரிவித்தான். சிபுவும் அதையே பின்பற்ற ஷ்ரவன் தங்கையை அணைத்து முன்நெற்றியில் முத்தமிட்டு தன்னுடைய ஆசியை வழங்கிவிட்டு அபிமன்யூவை தோளோடு அணைத்துக் கொண்டான். அஸ்வின் மேனகா இருவரும் மணமக்களுடன் வளவளக்க ஆரம்பிக்க அதன் பின் மற்றச் சடங்கு சம்பிரதாயங்களுடன் மாலை வரவேற்பும் கலகலப்பாகச் சென்றது.

மணமக்கள் யாருடையத் தொந்தரவுமின்றி இரவைக் கழிக்க அபிமன்யூவின் மனம் கவர்ந்த பீச் ஹவுஸிற்குச் செல்வதாக ஏற்பாடு. அதன் படி அஸ்வினும் மேனகாவும் காரில் அவர்களை அங்கே அழைத்துச்சென்று விட்டுவிட்டு திரும்பினர். ஸ்ராவணிக்கு அந்த தனிமை புதிதாகவும் வினோதமாகவும் தோன்ற அபிமன்யூவின் கையைக் கோர்த்தபடி உள்ளே சென்றாள்.

அவன் வழக்கம் போல கடலைப் பார்க்கச் செல்வதாகக் கூற அவள் அவனை அனுப்பிவிட்டு வந்து களைப்பு தீர முதலில் நன்றாகக் குளித்தாள். மேனகாவிடம் முன்னரே சொல்லிவிட்டதால் அவள் வழக்கமாக அணியும் இரவுடையை அவள் அங்கே வைத்துவிட அதை அணிந்த பின் தான் ஸ்ராவணிக்கு இயல்புநிலைக்கு திரும்பியது போல இருந்தது.

“டே ஃபுல்லா இந்த சேரி, ஜுவல்ஸை சுமந்து நீ டயர்ட் ஆயிட்டியா வனி?” என்ற மனசாட்சியின் கேள்விக்குப் பதிலளித்தபடி கணவனைத் தேடி கடற்கரைக்குச் சென்றாள் அவள். அங்கே மணலில் அமர்ந்து கடலை ரசித்துக் கொண்டிருந்தவனின் அருகே அமர்ந்து அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் ஸ்ராவணி.

சிறிது நேரம் அர்த்தமற்ற அமைதியில் கழிய திடீரென்று அவன் தோளில் இருந்து விலகியவள் “அபி உன்னோட சேலரி எவ்ளோ?” என்று கேட்க அவனுக்கு குழப்பம்.

“இப்போ ஏன் இதைக் கேக்கிற வனி?”

“இப்போ தான் நான் இதை உரிமையா கேக்க முடிஞ்சுது! அதான் கேட்டேன். சொல்லுடா உன் சேலரி எவ்ளோ?”

“ம்ம்ம்…ஒரு லட்சத்து ஐயாயிரம்” என்க

அவள் “சரி இதோட நீ எம்.எல்.ஏ ஆகி ஏழு இல்ல எட்டு மாசம் இருக்கும்ல. அந்தச் சேலரிய என்ன பண்ணுன?” என்று அடுத்த கேள்வியைக் கேட்க அவன் ஏன்டி இப்படி என்றபடி பார்த்தான் அவளை.

அவள் பெருமூச்சு விட்டவளாய் “இங்கே பாரு! இது வரைக்கும் என்ன பண்ணுனியோ எனக்கு தெரியாது. ஆனா இனி ஒவ்வொரு மாச சேலேரிக்கும் நீ எனக்கு கணக்கு சொல்லணும்” என்று கட்டளையிட

அவன் “ஏன்டி திடீர்னு இப்பிடி பேச ஆரம்பிச்சிட்ட? இந்த உலகத்துல ஃபர்ஸ்ட் நைட்ல புருசன் சம்பளத்துக்கு கணக்கு கேட்ட முதல் பொண்டாட்டி நீயா தான் இருப்ப” என்று அங்கலாய்த்தபடி கடலைப் பார்த்தான்.

ஸ்ராவணி சாதாரணமாக “இவ்ளோ நாள் நம்ம லவ்வர்ஸ்! சோ நிறைய கதை பேசிருப்போம். பட் இப்போ நம்ம ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ஃப். சோ வருங்காலத்தைப் பத்தி யோசிக்கணுமா இல்லையா?” என்றுக் கேட்க

அபிமன்யூ “அஹான்! சரி சொல்லுங்க! அப்பிடி என்ன யோசிச்சு வச்சிருக்கிங்க?” என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு கதை கேட்பது போல கேட்க ஆரம்பிக்க ஸ்ராவணி சொல்ல ஆரம்பித்தாள்.

“வருங்காலத்துல நமக்குனு நிறைய ரெஸ்பான்சிபிளிட்டிஸ் வரும். நமக்கு குழந்தைங்க பிறப்பாங்க” என்றவளின் பேச்சில் இடையிட்டவன் “அது எப்பிடி நடக்கும்? ஃபர்ஸ்ட் நைட்ல சம்பளக்கணக்கு பார்க்குற பொண்டாட்டி அமைஞ்ச எனக்கு அந்த கொடுப்பினை இருக்கோ இல்லையோ” என்று வானத்தைப் பார்த்துக் கேட்க ஸ்ராவணி கலகலவென்று நகைத்தவாறு “அது இல்லடா. நம்ம எதுக்கும்….”என்று சொல்ல வந்தவளின் வாயைப் பொத்தினான் அவன்.

“மூச்! இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசக் கூடாது. சரி நீ டென்சனா இருப்ப கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்னு டைம் குடுத்தா நீ என்னை டென்சனாக்கிடுவ போல. சோ நம்ம எதுக்கு இங்க வந்தோமோ அந்த வேலையை ஸ்டார்ட் பண்ணுவோமா?” என்றபடி அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டான் அபிமன்யூ. ஸ்ராவணியும் அதற்கு மேல் அவன் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை.

அவளைக் கையில் ஏந்தியபடி ரிசார்ட்டினுள் நுழைந்தவன் கதவைத் தாழிட மறக்கவில்லை. அவர்களின் அறையில் சென்று அவளை அணைத்தவன் விடியும் வரை அவனது அணைப்பிலிருந்து விலகும் வாய்ப்பை அவளுக்கு அளிக்கவில்லை. ஸ்ராவணியும் தன்னவனின் அணைப்பிலிருந்து விலக விரும்பவில்லை. அவனுடன் ஈருடல் ஓருயிராக மனமொன்றிக் காதலுடன் கலந்தாள் அவள்.

அபிமன்யூவுக்கு அந்த இரவு வெறும் காமத்துக்கும், உன்னதமானக் காதலுக்கும் இடையே இருந்த வேறுபாட்டை உணர்த்த இரு துருவங்களாய் இருந்தவர்களின் அழகிய சங்கமம் அந்த இரவில் அழகாய் நடந்தேறியது.