🖊️துளி 5👑

ஸ்ராவணியின் சுடிதாரின் கழுத்தோரம் மைக் செட் செய்த பூர்வி “டென்சன் ஆகாம போ. ஆல் த பெஸ்ட்” என சொல்லி அவளை ஸ்டூடியோவுக்குள் அனுப்பிவிட்டு அபிமன்யூ தயாராகி விட்டானா என்று பார்வையிட வந்தாள்.

“போலாமா சார்? எல்லாம் ரெடியா இருக்கு” அவனை ஸ்டுடியோவுக்குள் அழைத்துச் சென்று அவனிடம் இருந்து விடைபெற்றாள்  அவள்.

அது விவாத நிகழ்ச்சி என்பதால் இருவருக்கும் எதிரெதிர் இருக்கைகள் கொடுக்கப்பட பின்னால் நிகழ்ச்சிக்கான இசை ஒலிக்க ஆரம்பித்தது.

அதில் நேரடி பார்வையாளர்களாக வந்தவர்களும் அரங்கில் அமர்ந்திருக்க திரையைப் பார்த்து புன்னகைத்த ஸ்ராவணி “வணக்கம்! இது ஜஸ்டிஸ் டுடேவின் விவாத அரங்கம்! இந்த தேர்தல் சமயத்தில் நிறைய முறை பேசப்பட்டவரும், விமர்சனத்துக்கு ஆளானவருமான முன்னாள் நிதித்துறை அமைச்சர் திரு.பார்த்திபனின் மகனும், வேட்பாளருமான திரு. அபிமன்யூ பார்த்திபன் மற்றும் நமது நேரலை பார்வையாளர்களுடன் நான் உங்கள் ஸ்ராவணி சுப்பிரமணியம்!” என்ற வசனத்தை உதிர்த்துவிட்டுத் திரையைப் பார்க்க வெளியே இதை தொலைகாட்சியில் பார்த்து கொண்டிருந்த மேனகா “வாவ்! வாட் அ சல்யூடேசன்” என்று சிலாகித்தாள்.

ரகு, பூர்வியும் இதை ஆமோதிக்க அனைவரும் தொலைகாட்சியும் ரசிக்க தொடங்கினர்.

ஸ்ராவணி ஸ்கிரீனை பார்த்துப் பேசியவள் அபிமன்யூவின் புறம் திரும்பி அழகிய புன்னகையுடன் “வணக்கம் சார்” என்று சொல்ல அவன் அவளது புன்னகையில் தடுமாறிப்போய் பதிலளிக்காமல் விழித்தான்.

ஸ்ராவணிக்கு உள்ளுக்குள் கடுப்பானாலும் வெளியில் சிரித்தவள் மீண்டும் “வணக்கம் சார்” என்று அந்த வணக்கத்தில் அழுத்தம் கொடுத்து சொல்லவே, அவன் சுதாரித்துவிட்டு வணக்கம் கூற இக்காட்சியை மேனகா, ரகு மற்றும் பூர்வியுடன் தொலைகாட்சியில் பார்த்து கொண்டிருந்த அஸ்வின் தலையில் அடித்துக் கொண்டான்.

“இந்த எலக்சன்ல ரொம்ப பரபரப்பா பேசப்பட்ட வேட்பாளர் நீங்க தான். முதல்ல உங்களை பத்தின ஒரு சின்ன அறிமுகத்தை எங்க பார்வையாளர்களுக்கு குடுக்க முடியுமா?” என்று ஸ்ராவணி டேபில் போட்டிருந்த வாசகத்தை தனது பாணியில் சொன்னவள் அதை தூக்கி ஓரமாக வைத்துவிட்டாள்.

இனி அவளுக்கு அது தேவையில்லை. கேள்விகள் அனைத்தும் மனனம் ஆகிவிட்ட நிலையில் அந்த ஸ்கிரிப்டில் உள்ள படி “மானே! தேனே” என்று இவனிடம் நாசூக்காகப் பேச அவள் ஒன்றும் சுலைகா அல்லவே!

அதை வைத்துவிட்டு அவனது பதிலுக்காக காத்திருக்க அபிமன்யூ பேச ஆரம்பித்தான்.

“நான் அபிமன்யூ பார்த்திபன். என்னோட அப்பாவைப் பத்தி எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். நான் அவரோட ஒரே மகன் அண்ட் உங்க மீடியா பாஷைல சொல்லணும்னா அவரோட அரசியல் வாரிசு” என்று சொல்லிவிட்டு அவளை கர்வமாகப் பார்க்க அவள் அந்தப் பார்வையை துச்சமாக கருதி புன்னகையை மட்டும் சிந்தினாள்.

ஸ்ராவணி “ரொம்ப சரியான வார்த்தையை சரியான நேரத்துல சொல்லிருக்கிங்க. அதென்ன அரசியல் வாரிசு? எனக்கு தெரிஞ்ச வரைக்கும் முன்னாள் அமைச்சர் பார்த்திபனும் இந்த வார்த்தையை அவரோட நேர்காணல்ல பயன்படுத்தியிருந்தார்! இந்த முறை நமக்கு தெரிஞ்ச வரைக்கும் மன்னராட்சி டைம்ல இருந்துச்சு. ராஜாவுக்கு அப்புறம் யுவராஜா, அதுக்கு அப்புறம் அவரோட பையன்னு இதுல்லாம் மன்னராட்சியோட முடிஞ்சு போன விஷயம். இப்போ மக்களாட்சி நடக்குது சார்! இப்போவும் அரசியல்வாதிகளோட வாரிசுகள் மட்டுமே வர முடியும்னா மக்களாட்சியோட சாராம்சத்தை அவங்க சரியா புரிஞ்சிக்கலனு எடுத்துக்கலாமா?” என்று கேட்க

அபிமன்யூ அவளை கூர்ந்து பார்த்தபடி “நீங்க ஏன் அந்த மாதிரி யோசிக்கிறீங்க? இளைஞர்கள் அரசியலுக்கு வரணும்னு சொல்ல வேண்டியது, அப்பிடி வந்தா வாரிசு அரசியல்னு சொல்ல வேண்டியது. இட்ஸ் ரியலி ஹிப்போகிரிஸி” என்று பதிலளித்தான்.

அவனது பதிலை ஏற்றவள் “ஓகே! நீங்க சொல்லுற மாதிரியே வச்சிப்போம். உங்க கட்சில அமைச்சர் பார்த்திபனுக்கு மட்டும் தான் இளம்வயது மகன் இருக்காரா? கட்சியோட லட்சணக்கணக்கான தொண்டர்கள் வீட்டிலயும் உங்க வயசுல இளைஞர்கள் இருப்பாங்களே! ஏன் உங்க கட்சியோ உங்க அப்பாவோ அவங்கள்ல ஒருத்தரை தேர்வு செய்யாம எந்த வித அரசியல் அறிவோ, முன்அனுபவமோ இல்லாத உங்களைத் தேர்ந்தெடுத்தாங்க?” என்று சாட்டையடியாய் அடுத்த கேள்வியை அவன் முன் வைத்தாள்.

அபிமன்யூ அவளின் தைரியத்தை மெச்சியவனாய் “எனக்கு அரசியல்ல முன் அனுபவம் இல்லனு நீங்க சொல்லுறது ஓகே மேடம். பட் எனக்கு அரசியல் அறிவே இல்லனு நீங்க எப்பிடி சொல்லலாம்? ஐ வாஸ் அ லா ஸ்டூடண்ட் இன் கிங்க்ஸ் காலேஜ் லண்டன். அண்ட் ஐ கெட் மை டிகிரி இன் பொலிட்டிக்கல் சயின்ஸ் ஆல்சோ” என்று சொல்லிவிட்டு அவளை பார்க்க

அவள் மனதிற்குள் “டாபிக்கை எவ்ளோ அழகா சேன்ஜ் பண்ணுறான் இவன்” என்று பொருமிக் கொண்டு அதை தலையசைப்புடன் ஏற்றாள்.

“உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா? ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது. புத்தகத்துல படிச்ச அரசியலுக்கும், நடைமுறை அரசியலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு” என்றாள் அவனுக்கு மட்டுமே புரியும் கேலியுடன்.

அபிமன்யூ கூர்மையாய் அவளைப் பார்த்தபடியே “என்னோட அனுபவப் பாடம் இந்த தேர்தல்ல இருந்து ஆரம்பிக்கும் மேடம். அப்புறம் இந்தியாவுல அரசியலறிவும் இல்லாதவங்க, சாமியார், அரசியல்வாதியோட மனைவிலாம் முதலமைச்சரா இருக்கிறப்போ, ஒரு லாயர் அண்ட் பொலிட்டிக்கல் நாலெட்ஜ் இருக்கிற நான் ஏன் எம்.எல்.ஏ ஆகக் கூடாது?” என்று முத்தாய்ப்பாய் கேட்டுவிட்டுப் புன்னகைத்தான்.

அஸ்வினுக்கு அது விவாதம் மாதிரி தோணவில்லை. அருகில் அமர்ந்திருந்த மேனகாவிடம் “உங்க ஃப்ரெண்ட் ஏதோ பழைய பகையை மனசுல வச்சிகிட்டு என் ஃப்ரெண்டை டார்கெட் பண்ணி அடிக்குற மாதிரி இருக்கே” என்று கேட்க மேனகா அவனை முறைத்துவிட்டு தொலைகாட்சியை ரசிக்க ஆரம்பித்தாள்.

இவ்வாறு இருவரும் அவரவர் தரப்பை விட்டுக் கொடுக்காமல் பேசி விவாதத்தின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டனர். ஸ்ராவணி பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க இசையுடன் அந்த விவாத நிகழ்வு முடிய நேரடி பார்வையாளர்கள் கலைய ஆரம்பித்தனர்.

மேஜையிலிருந்த டேபை எடுத்த ஸ்ராவணியை இயக்குனர் வந்து தட்டிக்கொடுத்து வாழ்த்து தெரிவிக்க அவள் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டாள். வெளியே வந்தவளை மேனகா ஓடிப் போய் அணைத்தாள்.

“வனி! செமயா பேசுனடி. அந்த வருங்கால ச.ம.உ கூட பரவால்லடி. நல்லா தான் பேசுனான்” என்று அபிமன்யூவை கிண்டலடிக்க

அந்த அறையில் நின்று கொண்டிருந்த அஸ்வின் அபிமன்யூவிடம் “இந்தப் பிள்ளைப்பூச்சிலாம் உன்னை கலாய்க்குதே மச்சான்” என்று கடுப்புடன் சொல்ல அவன் சிரித்து கொண்டே “விடுடா அச்சு!” என்று அவனை சமாதானப்படுத்திவிட்டு அவனுடன் சேர்ந்து ஸ்ராவணியை நோக்கிச் சென்றான்.

“நாட் பேட் ஆங்கர் மேடம். நல்லாவே இண்டர்வியூ பண்ணுனிங்க” என்று கை கொடுக்க ஸ்ராவணி அவனிடம் கை குலுக்காமல் கையை குவித்து “நன்றி” என்று வேண்டாவெறுப்பாகச் சிரித்து வைத்தாள். அதற்குள் பூர்வி அங்கே வந்தவள் தங்களுடைய சேனலுக்கு வந்தமைக்கு அவனுக்கு நன்றி நவிழ்ந்து விட்டு அவனை வழியனுப்பி வைத்தாள்.

ஒரு வழியாக அந்த இண்டர்வியூ எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்துவிட பூர்வியுடன் அனைவருக்குமே நிம்மதியாக இருந்தது.

ஸ்ராவணி அதன் பிறகு அவளின் அன்றாட வேலையை கவனித்தவள் மாலையில் வீடு திரும்பும் போது மேனகாவுடன் மருத்துவமனைக்கு சென்று சுலைகாவை நலம் விசாரிக்க மறக்கவில்லை. சுலைகாவின் வருங்கால கணவனான ரஹ்மானிடம் அவளை கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு ஆயிரம் முறை சொல்லிவிட்டு இருவரும் மருத்துவமனையை காலி செய்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

வீட்டிற்கு வந்ததும் மேனகா இரவுக்கு சாப்பிட என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ ஸ்ராவணி ஒரு முக்கியமான நபருக்கு கால் செய்வதற்காக தனியே எழுந்து சென்றாள்.

போனை எதிர் முனையில் எடுத்ததும் “ஹலோ! நான் ஸ்ராவணி… எனக்கு அந்த ஆடியோ டேப்ஸ் மட்டும் கிடைச்சா போதும் சார்…. இல்ல இல்ல உங்க பேரு இதுல இன்வால்வ் ஆகாது… மூனு வாரமா? ஓகே… நான் வெயிட் பண்ணுறேன் சார்” என்று போனை வைத்தபோது திரையில் தெரிந்த மிஸ்டுகால்களை கண்டதும் அவளது இதழ் அழகாக விரிந்து புன்னகையை சிந்த தொடங்கியது

அந்த எண்ணுக்கு அழைத்தவள் “என்ன சார்? என் மேல பயங்கர கோவத்துல இருக்கீங்க போல” என்று கேட்க எதிர்முனையில் வந்த பதிலை கேட்டு கலகலவென்று நகைக்க ஆரம்பித்தாள்.

“விக்கி! நீ இருக்க பாரேன்! வேலை கொஞ்சம் ஜாஸ்திடா. அதான் நான் கால் பண்ணல!” என்று சொல்ல

எதிர்முனையில் பேசியவன் “என்ன தான் வேலை இருந்தாலும் என்னையும் கொஞ்சம் கவனிம்மா. நான் ஒருத்தன் இங்க உன்னை நினைச்சு உருகிட்டிருக்கேன். நீ அக்கடானு வேலை வேலைனு சுத்துனா என்ன அர்த்தம்?” என்றான் கெஞ்சும் குரலில்.

அவனை தாஜா செய்து போனை வைத்தவள் புன்னகையுடன் நின்று அவனைப் பற்றி கேலியாக நினைத்தபடியே வானத்து நிலவை ரசிக்க தொடங்கினாள்.

அவன் தான் விக்ரம். ஸ்ராவணியின் வருங்கால கணவனாக அவளின் பெற்றோரால் வரிக்கப்பட்டவன். அவன் ஐ.டியில் வேலை செய்வதால் ஆன்சைட்டுக்காக யூ.எஸ்.ஏ சென்றதால் அவர்களின் திருமணம் தள்ளி போயிருந்தது.

விக்ரமும் ஸ்ராவணியும் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்கள். ஸ்ராவணி அவனை வளர்ந்த பின்னும் நண்பனாக மட்டுமே பார்க்க, விக்ரமோ அவளை தன்னுடைய மனைவியாகவே கருதத் தொடங்கியிருந்தான். படித்து முடித்து வேலையில் சேர்ந்ததும் முதல் வேலையாக ஸ்ராவணியிடம் அவனது காதலை வெளிப்படுத்தியபோது அவளால் முதலில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவன் தான் “உனக்கு எப்போ என் மேல லவ் வருதோ அப்போ வரட்டும் வனி. நான் காத்திருப்பேன். பட் நம்ம எங்கேஜ்மெண்ட் பண்ணிகிட்டா என்ன தப்பு?” என்று கேட்டு வைக்க ஸ்ராவணிக்கும் அதில் ஒன்றும் தவறு இருப்பதாக படவில்லை.

அதன் பின் இருவீட்டிலும் விஷயத்தை சொல்லி பேசி முடிக்கும் போது தான் அவனுக்கு ஆன்சைட் செல்லும் வாய்ப்பு வந்தது. போகத் தயங்கியவனை நல்ல வார்த்தைகள் கூறி அனுப்பி வைத்தது ஸ்ராவணி தான். அவன் சென்ற சில நாட்களில் ஸ்ராவணியின் உடன் பிறந்த அண்ணன் ஷ்ரவனிடமிருந்து அவளின் பெற்றோருக்கு கால் வந்தது.

“ஹலோ அம்மா! நீங்க பாட்டியாக போறீங்க” என்ற சந்தோச செய்தியை வீட்டினரிடம் அறிவித்தவன் மனைவி வினிதாவுக்கு துணையாக அப்பாவையும் அம்மாவையும் அமெரிக்கா அழைக்க அவர்கள் ஸ்ராவணியை நினைத்து கலக்கமடைந்தனர்.

அவள் தான் “நான் மேகி கூட சேர்ந்து இருந்துப்பேன்மா! வினிக்கு நம்மள விட்டா யார் இருக்காங்க?” என்று சொல்லவும் ஸ்ராவணியின் அன்னை வேதாவுக்கு மருமகளின் நிலை நினைவுக்கு வர அமெரிக்கா செல்ல சம்மதித்தார்.

ஆனாலும் செல்லும் முன்னர் அவரும், சுப்பிரமணியமும் ஆயிரம் முறை விஷ்ணுவிடமும், பூர்வியிடமும் அவளையும் மேனகாவையும் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டுச் செல்ல பூர்வி அந்த வேலையை தான் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தாள்.

இவ்வாறு விக்கிரமின் நினைவுக்கு பின் தன் குடும்பத்தினரை பற்றிய நினைவலைகளில் மூழ்கத் தொடங்கியவளை மேனகாவின் “வனி! டின்னர் ரெடி! சாப்பிட வாடி” என்ற குரல் கரை சேர்த்தது.

“இதோ வர்றேன் மேகி” என்றபடி பால்கனியிலிருந்து உள்ளே சென்றாள் ஸ்ராவணி.

“என்னடி போன்ல விக்கியா? எப்போ டும் டும் டும்?” என்று மேனகா கண்ணடிக்க அவளது காதைப் பிடித்துத் திருகினாள் ஸ்ராவணி.

“அவன் என்னை போன்ல வறுத்தெடுத்துட்டு இப்போ தான் விட்டான். நீ உன் பங்குக்கு கலாய்க்கிறியா?” என்றபடி காதை விட்டவள் பிளேட்டிலிருந்த பாஸ்தாவில் கவனத்தை வைத்தாள்.

மேனகா காதை தடவியபடி பாஸ்தாவை விழுங்கியவள் “அவன் பேசுறதும் நியாயம் தானே வனி. உன்னை ஒருத்தன் லவ் பண்ணுறாங்கிற ஸ்ரமனையே இல்லாம நீ சுத்திட்டு இருந்தா அவனுக்கும் கடுப்பாகும்ல” என்று கேலி செய்தாள்.

ஸ்ராவணி “லுக் மேகி! என்னை பொறுத்தவரைக்கும் லவ், மேரேஜ், குடும்பம், குழந்தை இதல்லாம் பெரிய விஷயமா தோணலடி! அவன் லவ் பண்ணுறாங்கிறதுக்காக ட்வென்டி ஃபோர் ஹவர்ஸ் அவனையே நெனைச்சிட்டிருந்தா என்னோட புரொபசனை யார் பாக்கிறது? அவன் ஓவர் கிளிங்கியா பிஹேவ் பண்ணுற மாதிரி இருக்கு. என்னால அவ்ளோ சீக்கிரமா எமோஷனல் பாண்டிங்கை யார் கூடவும் ஏற்படுத்திக்க முடியாதுடி” என்று தன்னிலையை விளக்க மேனகா பெருமூச்சு விட்டாள்.

“கிளிங்கி லவ்வர் கிடைக்கமாட்டானானு ஒவ்வொருத்தி ஏங்கிட்டு இருக்கா. இவ என்னடான்னா” என்று தலையில் அடித்துக் கொண்டபடி உணவைக் காலி செய்ய ஸ்ராவணியும் சாப்பாட்டிலே கண்ணை பதித்தாள்.

என்ன தான் வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரையொருவர் பிரியாமல் இருப்பதே ஒரு நல்ல உறவுக்கு அடையாளம். ஆனால் அப்படிப்பட்டவர்களை நம்மால் முதல் பார்வையிலேயே கண்டறிய முடிவதில்லை.