🖊️துளி 49👑

தஞ்சாவூரிலிருந்துத் திரும்பிய பிறகு  மேனகாவும் அஸ்வினும் மனதளவில் மிகவும் நெருங்கிவிட்டனர். ஸ்ராவணி தன்னுடைய பெற்றோரும், அண்ணனும் இந்தியா திரும்பிய பின் மேனகாவுக்கும் அஸ்வினுக்கும் இடையே உள்ள காதலையும் அவர்களிடம் தெரிவித்து விடவேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.

அதே நேரம் சுபத்ரா பார்த்திபனைச் சென்றுச் சந்தித்து வந்தார். அவரிடம் அஸ்வின் மேனகாவை விரும்பும் விஷயத்தைச் சொல்லவும் பார்த்திபன் “அப்போ சம்பந்தி வீட்டுக்காரங்க வந்ததும் ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னாவே வச்சுக்கலாம் சுபிம்மா. நமக்கும் வேலை மிச்சம்” என்றுச் சொல்லிவிட சுபத்ரா அதை ஆமோதித்தவர் ஸ்ராவணியிடம் இது குறித்துப் பேசிவிட்டார்.

அபிமன்யூ தந்தை சிறை சென்ற பின்னர் கட்சியின் முக்கிய நபராகவே மாறிவிட்டான். அஸ்வின் அவனுக்குத்  துணையாக இருந்த போதிலும் வழக்கறிஞர் தொழிலிலேயே முழுக்கவனம் செலுத்தி வந்தான்.

மேனகாவும், ஸ்ராவணியும் தங்களின் வேலையில் மும்முரமாகி விட மூன்று மாதங்கள் கண் இமைப்பதற்குள் ஓடிவிட்டது. வழக்கம் போல ஸ்கைப்பில் பேசும் போது சுப்பிரமணியம் தான் குடும்பத்தோடு இந்தியா வருவதாக கூற இருவருக்கும் ஆச்சரியம். வினிதாவும் தனக்கும் உடல் தேறிவிட்டதால் விமானப்பயணம் மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் கூறிவிட்டார், அதனால் தானும் குழந்தையும் கூட இந்தியா வருவதாகக் கூற ஸ்ராவணி இது தான் தன் குடும்பத்தினருக்கு தனக்கும் அபியமன்யூவுக்குமான காதலைப் பற்றிச் சொல்வதற்கான சரியான நேரம் என்று தோன்றியது. கையோடு அஸ்வின் மேனகாவைப் பற்றியும் சொல்லிவிட வேண்டியது தான் என்ற முடிவோடு அவர்களின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் ஸ்ராவணி.

அவர்கள் இந்தியா வரும் நாளன்று ஸ்ராவணிக்கு விஷ்ணுவிடமிருந்து அழைப்பு வரவே மேனகா தான் விமான நிலையத்துக்குச் சென்று குடும்பத்தியனரை அழைத்துவந்தாள். வேதா வழக்கம் போல “நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு எங்களுக்கு வழி தெரியாது பாரு! ஏன்டா வீணா அலையுற?” என்றுச் செல்லமாக கடிந்து கொண்டார்.

சுப்பிரமணியம் நீண்டநாள் கழித்து மருமகளைக் கண்ட மகிழ்ச்சியில் அவளை அணைத்துக் கொள்ள அங்கே மற்ற வழிமுறைகளை முடித்துவிட்டு வினிதா மற்றும் குழந்தையுடன் வந்த  ஷ்ரவன் வழக்கம் போல மேனகாவை கேலி செய்ய ஆரம்பித்தான்.

“என்ன மாமாவும், மருமகளும் ஏர்ப்போர்ட்டிலயே ஃபாட்டர் ஃபால்ஸை ஓப்பன் பண்ணியாச்சா? அப்பா தான் ஓவர் எமோசனலான ஆளுனா நீயுமா மேகி? போதும். நீங்க அழுகிற அழுகையில கூவம் நதி கரை புரண்டு ஓடிடப் போகுது” என்று கிண்டலடித்தவனை தன் ஹேண்ட் பேக்கினால் அடித்த மேனகா வினிதாவின் கையில் இருந்த குழந்தையைக் கண்டதும் அவனை மறந்தவளாய் “வினி  என் கிட்ட குடு. வீட்டுக்குப் போற வரைக்கும் நான் வச்சிக்கிறேன்” என்று வாங்கிக் கொண்டாள்.

அவளைக் கொஞ்சியபடி நடந்தவள் “இவ பாக்கிறதுக்கு அசல் ஷ்ரவன் மாதிரியே இருக்கா. கொஞ்சம் கூட வினி சாயல் இல்ல அத்தை” என்று வேதாவுடன் பேசியபடி கால்டாக்சியைக் காட்ட அனைவரும் அதில் அமர்ந்து கொண்டனர்.

அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்ற சுப்பிரமணியத்துக்கு இந்த இடத்தை விட்டு காலி செய்த நினைவலைகள் தாக்க மனிதர் கொஞ்சம் கலங்கிப் போனது என்னவோ உண்மை. ஆனால் மறுபடியும் தன் கனவு இல்லம் தங்கள் வசம் திரும்பிவிட்டது அந்த கடவுளின் அருள் என்று எண்ணியபடி லிஃப்டை நெருங்கினார் அவர்.

நீண்டநாள் கழித்து அங்கே வந்ததால் ஷ்ரவனும் வினிதாவும் படிக்கட்டு வழியாக வருவதாகக் கூறிவிட மேனகா “ஓகே லவ் பேர்ட்ஸ்! சாயந்திரத்துக்கு முன்னாடியாச்சும் வந்துடுங்க” என்று கேலி செய்துவிட்டு மாமா, அத்தை மற்றும் குழந்தையுடன் லிஃப்டில் ஏறி அவர்களின் ஃபிளாட்டுக்குச் சென்றாள்.

சுப்பிரமணியம் யோசனையுடன் “மேகிம்மா! அந்தப் பையன் எப்படி வீட்டை மறுபடியும் உங்க கிட்டவே குடுக்கச் சம்மதிச்சான்? அவன் பார்க்கிறதுக்கு ரொம்ப பிடிவாதக்காரனா தெரிஞ்சானே! அப்புறம் எப்பிடி திரும்பிக் குடுத்தான்?” என்று கேட்க மேனகாவுக்கு என்ன பதில் சொல்ல என்று புரியவில்லை.

“அவன் குடுக்கல மாமா! நான் தான் அவனுக்கும் வனிக்கும் கல்யாணம் பண்ணிவச்சு அவன் கிட்ட இருந்து ஃபிளாட்டைப் பிடுங்கிட்டேன்” என்றா கூற முடியும் அவளால்? அப்படி சொல்லிவிட்டு அவர் முகத்தில் அவளால் விழிக்கத் தான் முடியுமா?

இந்த கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்று யோசித்தபடியே குழந்தையை தட்டிக் கொடுத்த மேனகா திருதிருவென்று விழிக்க வேதா சுப்பிரமணியத்திடம் “ஏங்க இப்போ இந்த என்கொயரி ரொம்ப அவசியமா? அதான் வீடு திரும்ப கிடைச்சிட்டுல்ல! அது போதும். இன்னும் நடந்து முடிஞ்சதையே பேசிட்டு இருக்காதிங்க” என்று சொல்ல சுப்பிரமணியம் தன் கனவு இல்லத்தை ஒரு ரவுண்ட் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார்.

எப்பிடியோ தப்பிச்சிட்டோம் என்று மேனகா நிம்மதி பெருமூச்சு விடும் போது வீட்டிற்குள் வந்துச் சேர்ந்தனர் வினிதாவும், ஷ்ரவனும். வினிதா “மேகி வனி எங்கடி? இன்னைக்கும் ஆபிஸா அவளுக்கு?” என்று கேட்க மேனகா “வினிக்கா சீஃப் ஏதோ இம்பார்டெண்ட் விஷயம்னு கால் பண்ணுனாரு. அதான் வனி போயிருக்கா” என்று பதிலளித்தாள்.

வேதா விஷ்ணு, பூர்வியின் நலத்தை விசாரிக்க அவர்களுக்கு பதிலளித்தவள் குழந்தை தூங்கிவிட்டதால் வினிதாவிடம் கொடுக்க அவள் குழந்தையைப் படுக்க வைக்கச் சென்றாள். மேனகா அத்தையிடம் பேச்சு கொடுத்தபடியே அவர்கள் அனைவருக்கும் ஜூஸை தம்ளரில் ஊற்றி எடுத்து வந்தாள்.

முதலில் சுப்பிரமணியத்திடம் சென்று “மாமா ஜூஸ் குடிச்சிட்டுத் தெம்பா உங்க டிரீம் ஹவுஸை ரசிக்க ஆரம்பிங்க” என்க அவர் ஒரு தம்ளரை எடுத்துக் கொண்டார். வினிதா மகளுடன் மேனகாவின் அறையில் இருந்ததால் அங்கே சென்று அவளுக்கு அளித்தவள் நேரே ஹாலுக்கு வந்து ஷ்ரவனுக்கும் வேதாவுக்கும் கொடுத்துவிட்டு அவர்களுடன் அரட்டையடிக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியாமல் இருக்க பதினொரு மணி வாக்கில் வீடு வந்துச் சேர்ந்த ஸ்ராவணி ஹாலில் அமர்ந்திருந்த அண்ணனைக் கண்டதும் “டேய் அண்ணா” என்ற கூவலுடன் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள். அவனும் நீண்டநாள் கழித்து தங்கையை நேரில் கண்டதில் கண் கலங்கியவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளை கேலி செய்தபடியே  அவளுடன் அமர இவர்கள் பேசிய சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து வெளியே வந்த வினிதாவும் ஸ்ராவணியை ஓடிவந்து அணைத்துக் கொள்ள சுப்பிரமணியம் மகளிடம் “வனிம்மா வேலைலாம் பிரச்சனை எதுவும் இல்லாம போகுதா?” என்று விசாரித்தார் அந்த பிரச்சனை என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து.

“பிரச்சனை எதுவும் இல்லப்பா. எல்லாம் ஸ்மூத்தா போகுது” என்ற மகளின் சந்தோசம் ததும்பிய வார்த்தைகள் அவருக்கு நிம்மதியைக் கொடுக்க நீண்டநாள் கழித்து அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த தருணத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினர்.

பகற்பொழுது இனிமையாகக் கழிய இரவுணவுக்குப் பிறகு ஹாலில் அனைவரும் குழுமியிருந்து உரையாடும் போது ஸ்ராவணி மெதுவாக அனைவரிடமும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பேச வேண்டும் என்றுச் சொல்ல அவளின் குரலிலிருந்த தீவிரம் அங்கிருந்தவர்களின் முகங்களுக்கு இடம் பெயர்ந்தது.

மெதுவாக சுப்பிரமணியத்தை நோக்கியவள் “அப்பா! நான்….நானும் அபிமன்யூவும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணுறோம்” என்று ஒருவழியாகச் சொல்லிமுடித்து எச்சிலை விழுங்கிக் கொள்ள மேனகாவைத் தவிர அனைவைரின் முகத்திலும் ஆச்சரியக்குறி!

சுப்பிரமணியமும், வேதாவும் ஏற்கெனவே அவர்களின் பிரச்சனையைக் கண்கூடாகப் பார்த்திருந்ததால் இது சாத்தியப்படுமா என்ற கோணத்தில் யோசிக்க வினிதாவுக்கு ஸ்ராவணி ஒரு ஆணை காதலிப்பதாகச் சொன்னதே பெரிய ஆச்சரியம்!

ஸ்ராவணி தந்தை இதற்கு கட்டாயம் சம்மதிக்க மாட்டார் என்ற யோசனையில் இருக்க எதிர்ப்புக்குரல் வந்ததோ அவள் சிறிதும் எதிர்ப்பார்க்காத இடத்திலிருந்து. ஷ்ரவன் தங்கையை கூரியவிழிகளால் ஏறிட்டபடி “ஹாரி சிஸ்டரோட எக்ஸ் பாய் ஃப்ரெண்டைப் பத்தி தானே பேசுற வனி” என்க ஸ்ராவணி தலையை மட்டும் மேலும் கீழுமாக ஆட்டி ஆமென்றாள்.

ஷ்ரவன் அவளுக்குப் பைத்தியமா என்ற ரீதியில் பார்த்துவிட்டு “அவனைப் பத்தி தெரிஞ்சுமா நீ லவ் பண்ணுன?” என்று கேட்க ஸ்ராவணி உறுதியான குரலில் “அவனைப் பத்தி தெரிஞ்சதால தான் லவ் பண்ணுறேன் ஷ்ரவன்” என்றாள்.

“ஏய் உனக்கு என்ன தெரியும்? நீ இன்னும் சின்னப்பொண்ணு ஸ்ராவணி. உனக்கு இந்த விஷயத்துல முடிவெடுக்கிற அளவுக்கு இன்னும் பக்குவம் வரல. அவனைப் பத்தி ஹாரி என் கிட்ட சொன்ன வரைக்கும் அவனால ஒரு கன்ட்ரோலான டிபிக்கல் இந்தியன் பையன் மாதிரி வாழ முடியாது. ஏய் உனக்கு நான் சொல்லணுமா? அவன் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பத்தி நீ தானே நான்ஸி கிட்ட கேட்டுத்  தெரிஞ்சுகிட்ட. இதுக்கு அப்புறமும் நீ லவ் பண்ணுறேனு சொன்னா அவனை உனக்குக் கட்டி வைக்க நாங்க ஒன்னும் முட்டாள் இல்ல” என்ற அவனின் பிடிவாதக்குரலில் எரிச்சலானாள் ஸ்ராவணி.

“இங்க பாரு ஷ்ரவன்! நான் உன் கிட்ட பர்மிசன் கேக்கல! நான் அவனை லவ் பண்ணுறேன், அவனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேனு உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுறேன்! அவ்ளோ தான். யாரு கூட வாழ்ந்தா என் வாழ்க்கைக்கு நல்லதுனு எனக்குத் தெரியும்டா. நீ ஒன்னும் என்னை நினைச்சு கவலைப்பட வேண்டாம்” என்று அவளும் பதிலுக்கு அவனை எதிர்த்துப் பேச வீட்டுக்குள் போர்க்களம் வெடித்தது.

வேதா, மேனகா, வினிதா என்று மூவரும் தடுக்க முயன்றாலும் அண்ணனும் தங்கையும் அவரவர் கருத்தே சரி என்று பிடிவாதம் பிடித்தவராய் சண்டையிட இதைக் கண்ட சுப்பிரமணியம் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்தார்.

“கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் வாயை மூடுறிங்களா? ஷ்ரவன் நீ ஒரு குழந்தைக்கு அப்பா! இன்னமும் சின்னப் பையனாட்டம் அவ கூட பதிலுக்குப்  பதில் சண்டை போடுற” என்று மகனை அதட்ட அவன் “அப்பா! அவ தலையில அவளே மண்ணள்ளிப் போட்டுக்கிறாப்பா! இதைப் பார்த்துட்டுப் பார்க்காத மாதிரி என்னால இருக்க முடியாது” என்று அவருக்குப் பதிலளித்துவிட்டு ஸ்ராவணியை முறைத்தான்.

ஸ்ராவணி பதிலுக்கு “டேய் உன்னால பார்க்க முடியலனா கண்ணைப் பொத்திக்கோடா! யாரும் உன்னை பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தல” என்று அவனிடம் மீண்டும் சண்டைப் பிடிக்க மேனகா “ஸ்ஸ்..வனி ஏன் இப்பிடி சண்டை போடுற?” என்று அவளைச் சமாதானப் படுத்த முயன்றாள்.

அவளை விலக்கிய ஸ்ராவணி “எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க! நான் அபியைத் தவிர வேற யாரையும் மனசால நெனைக்கக் கூட மாட்டேன். உங்களுக்கு அவனைப் பிடிச்சா நாங்க கல்யாணம் பண்ணிப்போம். சப்போஸ் பிடிக்கலனா நான் லைஃப் லாங் என் அப்பாவுக்கு பொண்ணாவே இருப்பேனே தவிர வேற ஒருத்தனை என்னைக்கும் மேரேஜ் பண்ணிக்கச் சம்மதிக்க மாட்டேன்” என்று தீர்மானமாக உரைத்துவிட்டுச் சென்றாள். அவள் பின்னே அவளைச் சமாதானப்படுத்திக் கொண்டே சென்றாள் மேனகா.

அவள் சென்றதும் ஷ்ரவனும் காலை உதைத்துவிட்டு அவர்களின் அறைக்குச் செல்ல வினிதா அவனைத் தொடர்ந்து ஓடினாள். உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்தவனிடம் வினிதா ஏதோ சொல்ல வர அவன் கையுயர்த்தி தடுத்துவிட்டு “நீ அவளுக்குச் சப்போர்ட்  பண்ணி எதுவும் பேச வேண்டாம் வினி. அந்தப்  பையனுக்கு சீரியஸ் ரிலேஷன்சிப்ல நம்பிக்கை கிடையாது வினி. அவனோட மத்த கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி ஒரு நாள் இல்லனா ஒரு நாள் அவன் வனியையும் விட்டுட்டுப் போயிடுவான். அப்போ அவ அழுறதைப் பார்க்குற சக்தி எனக்கு இல்ல” என்று இறுகிய குரலில் கூறி முடித்தான்.

வினிதா பெருமூச்சுடன் அவனருகில் முழங்காலிட்டு அமர்ந்தவள் அவன் மூக்கைச் செல்லமாகத் திருகி “என் புருசனுக்கு தான் எவ்ளோ கோவம்? இங்கப் பாரு ஷ்ரவன்! வனியைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும். அவ கல்யாணமே பண்ணிக்க மாட்டேனு பிடிவாதம் பண்ணிட்டு இருந்தப்போ நம்மலாம் சேர்ந்து தான் அவளுக்கு விக்ரமை கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நெனைச்சோம். ஆனா அவன் என்ன பண்ணுனான்? நிச்சயதார்த்தத்துல வனியை அசிங்கப்படுத்திட்டுப் போகல?

இத்தனைக்கும் அவனைப் பத்தி நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும்னு நம்ம நம்புனோம். ஆனா அவன் அந்த நம்பிக்கையைக் காப்பாத்துனானா? அவனைப் பார்க்க மோசமானவனாட்டம் எப்போவாச்சும் நமக்கு தெரிஞ்சுதா? ஷ்ரவன் இங்கே யாரும் ஹண்ட்ரெட் பர்சண்டேஜ் நல்லவங்கன்னு சொல்ல முடியாது. அவன் யாரோ எப்படிப்பட்டவனோ ஆனா வனிக்கு அவனைப் பிடிச்சிருக்குனா அவன் கண்டிப்பா மோசமானவனா இருக்க மாட்டான்டா. நீ சொன்னதுலாம் அவனோட பாஸ்ட். இப்போ அவனோட பிரசண்ட் லைஃப் பத்தி உனக்கு எதுவும் தெரியாதுல்ல. சரி நீ உடனே ஒத்துக்க வேண்டாம். நீ அவனை நேருல போய் பாரு. நீ என்ன கேக்கணும்னு நெனைக்கிறியோ அதை டேரக்டா அவன் கிட்ட கேளு. அப்போ உன்னோட சந்தேகமும் தீரும். வனியும் வருத்தப்பட மாட்டா” என்றுக் கணவனுக்கு சமாதானம் சொன்னபடியே பிரச்சனைக்கான தீர்வையும் கூறினாள்.

அவள் சொன்னதைக் கேட்ட ஷ்ரவனுக்கு அதுவே சரியாக தோன்ற மறுநாள் அபிமன்யூவைச் சென்று சந்திக்கப் போவதாக அவளிடம் சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்தவன் பெற்றோரிடமும் அதைக்  கூற சுப்பிரமணியத்துக்கும் அதில் சம்மதமே.  அவர் வேதாவைப் பார்க்க அவரும் ஷ்ரவனின் முடிவில் தனக்குச் சம்மதம் என்று தெரிவிக்க ஷ்ரவன் மறுநாள் அபிமன்யூவை அவன் அலுவலகத்தில் சென்றுச் சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.