🖊️துளி 48👑

அபிமன்யூ அஸ்வினை அழைத்துக் கொண்டு விமான நிலையத்துக்கு வந்துவிட ஸ்ராவணியும் கிருஷ்ணமூர்த்தியுடன் வந்துச் சேர்ந்தாள். வந்தவள் அபிமன்யூவிடம் ஏதோ சொல்லப் போக அவன் அவசரமாக

“தஞ்சாவூர் அட்ரஸ் சொல்லு” என்று கேட்டபடி போனில் யாருக்கோ அழைத்தபடி கேட்க அவள் கடகடவென்று முகவரியை ஒப்பித்தாள். அதைக் காதில் வாங்கிக் கொண்டவன் போனில் “ஹலோ நான் அபிமன்யூ. உங்களால ஒரு காரியம் ஆகணுமே” என்ற பீடிகையுடன் பேச ஆரம்பிக்க ஸ்ராவணி அவன் அருகில் நின்று கொண்டிருந்த அஸ்வினைப் பார்க்க அவன் முகம் கலங்கிப் போயிருந்தது.

மேனகா அவனிடம் அவளும் வினிதாவும் எப்படி சுப்பிரமணியன் குடும்பத்தாரிடம் வந்துச் சேர்ந்தார்கள் என்பதைச் சொல்லியிருந்ததால் அவனுக்கு ரம்யா மற்றும் அவள் கணவனின் பேராசைக்குணம் தெரியாமலில்லை. அப்படிப் பட்டவர்கள் மீண்டும் பணத்துக்காக அவளை எதுவும் செய்து விடுவார்களோ என்ற கலக்கம் அவனை ஆட்டுவிக்க  தாயின் மறைவுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு பெண்ணுக்காக அவன் கண்கள் கலங்கியது.

இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனக்குள் “நீ கவலைப் படாதே மேகி! நான் சீக்கிரமா வந்துடுவேன். உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்” என்று உருப்போட்டப்படி இருக்க அபிமன்யூ போன் பேசி விட்டு வந்தான்.

“நான் மாவட்டச் செயலாளருக்கு அட்ரசைச் சொல்லிட்டேன். போலீஸோட அந்த வீட்டுக்குப் போகச் சொல்லிருக்கேன். சோ நம்ம பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது” என்று அவன் தைரியம் சொல்ல கிருஷ்ணமூர்த்தி நினைவு வந்தவராக “தம்பி! அந்த பயலும் அவன் பொண்டாட்டியும் முக்காவாசி நேரம் அவங்க ரைஸ் மில்லுல தான் இருப்பாங்க. எதுக்கும் அங்கேயும் ஒரு பார்வை பார்க்கச் சொல்லிருங்க” என்றுச் சொல்ல அவன் உடனே போன் செய்து ரைஸ் மில் முகவரியையும் கொடுக்க விமானத்துக்கான அழைப்பு வரவே அனைவரும் உள்ளே சென்றனர்.

அதே நேரம் கிருஷ்ணமூர்த்தி சொன்னபடி மேனகாவை ரைஸ்மில்லில் தான் அமர வைத்திருந்தனர் ரம்யாவும் அவளின் கணவனும். ரம்யா அவள் கணவன் ஹரியிடம் “நம்ம எவ்ளோ நேரமா அதுல கையெழுத்துப் போடச் சொல்லுறோம். வந்ததுல இருந்து அமுக்கினி மாதிரி இருக்காளே தவிர கையெழுத்துப் போடுறாளானு பாருங்க. எல்லாம் மணி மாமா குடுத்த தைரியம்” என்று மேனகாவைப் பார்த்து பல்லைக் கடிக்க

மேனகா “உனக்கும் உன் புருஷனுக்கும் ஒரு விஷயம் மறந்துப் போச்சுக்கா. நான் ஒரு ரிப்போர்ட்டர். என் கிட்ட இந்த மாதிரி நடந்துக்கிட்டதுக்கு நீங்க ரொம்ப வருத்தப்படுவிங்க” என்று ஆவேசத்துடன் கூற ரம்யாவும், ஹரியும் ஆத்திரத்தில் அறிவை இழந்தவர்களாய் எழுந்தனர்.

ஹரி கொஞ்சம் கூட இரக்கமின்றி மேனகாவை கன்னத்தில் அறைய ரம்யா அதைக் கண்டு கிஞ்சித்தும் வருந்தாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் விழியில் துவேசம் மின்ன.

மேனகா கன்னத்தைப் பிடித்தபடி நிற்க “அனாதைக் கழுதைக்கு வாயைப் பாரு. இப்போ உன்னை வெட்டி வாய்க்கால்ல வீசுனா கூட யாரும் வந்து கேக்க முடியாது! ஏதோ கொழுந்தியாளாப் போயிட்டியேனு பரிதாபப்பட்டு பேசினா நீ உச்சாணிக்கொம்புக்கு ஏறுவியோ? மரியாதையா கையெழுத்து போடு. இல்லன்னா உங்க அப்பன் போன இடத்துக்கே நீயும் போக வேண்டியிருக்கும்” என்றுச் சொல்ல ரம்யாவும் அதையே திரும்பக் கூறினாள்.

“இன்னும் ரெண்டு அறை குடுத்தாலும் இது திருந்தாது ஹரி. ஏன்னா உடம்புல ஓடுறது அவங்க அப்பன் ரத்தமாச்சே” என்று ரங்கநாதனை மரியாதையின்றிப் பேச மேனகா கோபம் வந்தவளாய் “ரம்யாக்கா அப்பாவைப் பத்தி தப்பா பேசாதே” என்று கையை நீட்டி மிரட்ட

ரம்யா ஆவேசத்துடன் “யாரு யாருக்குடி அப்பா? எல்லாம் தெரிஞ்சும் நாக்குலத் தேனும் நெஞ்சுல விஷமுமா பேசுறியே உங்க அப்பனை மாதிரியே! அந்த ஆளு கையில் என் அப்பா என்னை ஒப்படைச்சப்போ என்ன சொன்னாரு? ரம்யாவையும் உன் பொண்ணா பார்த்துக்கோ தம்பினு சொல்லித் தானே என்னோட அப்பா உயிரை விட்டாரு. ஆனா உங்க அப்பா என்ன பண்ணுனாரு?” என்று சிறிதும் நன்றியின்றிப் பேச மேனகாவுக்கு பெரியப்பா இவளைப் பெற்றிருக்கவே கூடாது என்று தோணாமல் இல்லை. அதே நேரம் திருமணத்தால் தான் அவள் அவ்வாறு மாறிவிட்டாள் என்று நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம், இவளுடைய தீயமனம் சிறுவயதில் இருந்தே தங்களை வெறுத்துக் கொண்டு தான் இருந்திருக்கிறது என்பது மேனகாவுக்கு மிகவும் தாமதமாகவே புரியவந்தது.

ஆம்! ரம்யா ரங்கநாதனின் அண்ணன் மகள்.  மனைவியை இழந்த அண்ணனின் மறைவுக்குப் பிறகு தனியாக நின்ற பெண்குழந்தையை தன் மகள்களுக்குச் சமமாக அன்பு பாசம் ஊட்டி வளர்த்தவரை தான் அவள் இன்று நாக்கில் நரம்பின்றிப் பேசிக் கொண்டிருந்தாள். இன்று மட்டுமல்ல! அவள் எப்போதுமே ரங்கநாதன் குடும்பத்தை தன் குடும்பமாக ஏற்றுக் கொண்டதே இல்லை என்று அவள் மனதிலிருந்த விஷத்தைக் கக்கவே மேனகாவுக்கு நல்ல வேளை இதையெல்லாம் கேட்பதற்கு தந்தையும் தாயும் உயிரோடு இல்லை என்று தோன்றியது.

ரம்யா ஆவேசத்துடன் பேசிக் கொண்டே மேனகாவின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்தவள் “மரியாதையா கையெழுத்துப் போட்டுட்டு உயிரோட சென்னைக்குப் போறியா? இல்ல இவரு சொன்ன மாதிரி வெட்டி வாய்க்கால்ல வீசச் சொல்லவா?” என்று கொடூரமாய் வினவிக் கொண்டிருக்கும் போதே மில்லுக்குள் யாரோ வரும் சத்தம் கேட்க ஹரி ஓடிச் சென்று யாரென்று பார்க்க முதலில் ஒரு பெரிய காரும், அதைத் தொடர்ந்து காவல் துறை வாகனமும் வரவே பயந்தவனாய் உள்ளே ஓட எத்தனிக்க அதற்குள் அவனை நெருங்கிய காவல்துறை ஆய்வாளர் அவன் சட்டையைப் பிடித்துவிட்டார்.

“எங்கடா ஓடப் பார்க்குற? நில்லு” என்றவரைத் திகிலுடன் பார்த்தவனின் விழிகள் அடிக்கடி மில்லுக்குள் சென்று வர அவனை உள்ளே இழுத்துக் கொண்டுச் சென்றார் அந்த ஆய்வாளர்.

உள்ளே அவர் நுழையும் போது அவரின் கண்ணில் மேனகாவின் கூந்தலைப் பற்றியிருந்த ரம்யா விழவே அவர் சத்தமாக “அந்தப் பொண்ணை விடுமா” என்க ரம்யா கணவனின் நிலையைக் கண்டு மிரண்டுப் போனவள் சட்டென்று மேனகாவின் கூந்தலை விடுவித்தாள்.

“புருஷனும் பொண்டாட்டியுமா சேர்ந்து சொத்துக்காக அந்தப் பொண்ணை கடத்தி டார்ச்சரா பண்ணுறிங்க?” என்றபடி உள்ளே நுழைந்தார் அபிமன்யூ சில மணி நேரங்களுக்கு முன் பேசிய அவர்கள்  கட்சியின்  தஞ்சை மாவட்டச் செயலாளர்.

“இன்ஸ்பெக்டர் சார்! இந்த ரெண்டு பேர் மேலயும் கிட்னாப்பிங், அட்டெம்ப்ட் டு மர்டர் கேஸ் போட்டு உள்ளே தள்ளுங்க. நம்ம மட்டும் வரலைனா இவங்க கொன்னாலும் கொன்னிருப்பாங்க” என்று அவர் சொல்ல ரம்யாவும் ஹரியும் பயந்துப் போனாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல்  மேனகாவின் நடத்தையைப் பற்றி அவதூறாகப் பேச அவர் போட்டச் சத்தத்தில் நடுங்கியவர்கள் வாயை மூடிக் கொண்டனர்.

இந்தக் கலவரத்துக்கு நடுவில் ஒரு மணி நேர விமானப்பயணத்தில் திருச்சியை அடைந்த அஸ்வின், அபிமன்யூ, ஸ்ராவணி கார் மூலமாக அடுத்த அரை மணி நேரத்தில் தஞ்சாவூரை அடைந்துவிட்டனர். மேனகாவை மீட்டு விட்டதாக மாவட்டச் செயலாளர் மில்லில் இருந்தே அவர்களுக்குத் தகவல் தெரிவித்து விட அவர்களும் மில்லை அடைந்தனர்.

உள்ளே நுழைந்தவர்களின் பார்வையில் மேனகா கன்றிச் சிவந்த  கன்னங்களுடன் நின்றது படவே ஸ்ராவணி பதறிப் போனவளாக ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.

“ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்களா மேகி?”  என்று கண்ணீர் மல்க ஸ்ராவணி கேட்க மேனகா “அவளைப் பத்தி எனக்கு ஆல்ரெடி தெரியுமே வனி! முதல் தடவை மாதிரி கஷ்டமா இல்ல. ஆனா என்னை கொன்னுப் போட்டாக் கூட கேக்கிறதுக்கு ஆள் இல்லனு அந்த ஆளு சொன்னான் பாரு. அது தான்…” என்று வார்த்தையை முடிக்க முடியாமல் அவள் தோளில் சாய்ந்து கதறவே அபிமன்யூவின் அருகில் நின்ற அஸ்வினுக்கு ஹரியை அடித்துக் கொல்லும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.

மேனகா சொன்னதைக் கேட்ட ஹரி இன்னும் திமிர் அடங்காமல் “அனாதைக்குப் பேச்சைப் பாரு” என்று வெறுப்பை உமிழ அதற்கு மேல் பொறுக்க முடியாத அஸ்வின் அவனை ஒரே எட்டில் அடைந்தவன் நொறுக்கி எடுத்துவிட அபிமன்யூ அதைக் கை கட்டி வேடிக்கை பார்த்தபடி நின்றான்.

“ஏன்டா ராஸ்கல் எவ்ளோ தைரியம் இருந்தா அந்த வார்த்தையைச் சொல்லுவ? அவ ஒன்னும் அனாதை இல்லடா. அவளுக்காக உயிரையே குடுக்கிற ஃப்ரெண்ட் இருக்கா. அவளை உலகமா நெனைக்கிற அத்தை, மாமா, அக்கானு  ஒரு குடும்பமே இருக்கு. இவ்ளோக்கும் மேல அவளுக்காக நான் இருக்கேன். அவளைப் பத்தி இன்னொரு வார்த்தைப் பேசுனா உனக்குப் பேசுறதுக்கு நாக்கு இருக்காது” என்று ஆத்திரத்துடன் அவனை அடித்து நொறுக்க அவனது வார்த்தை மேனகாவின் மீது அவனுக்கு உள்ள காதலின் தீவிரத்தை அவளுக்கு உணர்த்தியது.

அவனது “அவளுக்காக நான் இருக்கேன்” என்ற வார்த்தையில் மேனகாவுக்கு கண்கள் மீண்டும் கலங்க அவனை கண்ணீர் கலந்த விழிகளுடன் அவள் நோக்க அஸ்வினின் விழிகளும் கலங்கிச் சிவந்து தான் இருந்தது, ஆனால் அது ஹரியின் வார்த்தைகள் ஏற்படுத்திய கோபத்தால். காவல் துறை ஆய்வாளர் மட்டும் அவனை விலக்கிவிடவில்லை என்றால் அவன் ஹரியை கொலை கூட செய்திருப்பான்.

அவன் ஹரியை விட்டு விலக மேனகாவை விட்டு விலகி நின்ற ஸ்ராவணி ஹரியையும், ரம்யாவையும் பார்த்தபடி “என்னோட மேகியை அனாதைனு சொல்லுறிங்களே! உங்க அளவுக்கு கீழ்த்தரமா என்னாலயும் உங்களைப் பேச முடியும்! செத்தாக் கொள்ளி போடுறதுக்கு கூட உங்களுக்கு பிள்ளைங்க இல்லையே, நீங்கல்லாம் ஏன் சொத்து சொத்துனு அழையுறிங்கன்னு நான் கேட்டா நீங்க உங்க மூஞ்சியை எங்கே கொண்டுப் போய் வச்சிப்பிங்க?” என்று அவள் கடினமான குரலில் வினவ ரம்யாவுக்கு அவளின் அந்த  வார்த்தை நெஞ்சைத் தைத்தது.

அதற்குள் ஆய்வாளரிடம் கிருஷ்ணமூர்த்தி ரம்யா மற்றும் ஹரியைப் பற்றிய விவரத்தைக் கூற அபிமன்யூ  மேனகாவின் அருகில் செல்லப் போன ஸ்ராவணியை கரம் பற்றி நிறுத்திவிட்டு அவளையும் அஸ்வினையும் கண்ணால் காட்ட ஸ்ராவணியும் புரிந்தவளாக அவனுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.

அனைவரும் கிளம்பிய பிறகு இன்னும் கோபம் குறையாத முகபாவத்துடன் நின்ற அஸ்வினை நெருங்கிய மேனகா அவன் எதிர்பாரா வண்ணம் அவனை அணைத்துக் கொண்டு விசும்ப தயக்கத்துடன் அவளை அணைத்துக் கொண்டான் அஸ்வின்.

அவனது கரங்கள் அவள் கூந்தலை வருடி விட அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் பெருக்கியவள் “எனக்காக நீ இருப்பனு சொன்னல்ல! லைஃப் லாங்கா நீ என் கூடவே இருப்பியா?” என்று கேட்டுவிட்டு அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்க்க அஸ்வினுக்கு தன்னவளின் இந்த கேள்வியே அவள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திவிட அவளை மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் பார்த்தான் அவன்.

“நீ நிஜமாவா கேக்கிற மேகி?” என்று கேட்டவனை ஏறிட்டுப் பார்த்தவள் “ம்ம்! உன் கிட்ட இதை இந்த மாதிரி சூழ்நிலையில சொல்லுறதை நானும் விரும்பல அஸ்வின். ஆனா என்னோட மனசு உன் கிட்ட இப்போவே கேக்கச் சொல்லி கொல்லுதுடா! நீ என் கூடவே இருப்பல்ல! அப்பா மாதிரி நீயும் பாதியிலே என்னை விட்டுட்டு போக மாட்டல்ல அஸ்வின்?” என்று கேட்க

“எப்போவும் உன்னை விட்டுட்டுப் போக மாட்டேன்! நம்ம ரெண்டு பேரும் எல்லா வகையிலயும் ஒரே மாதிரி! எனக்கும் பேரண்ட்ஸ் இல்ல, உனக்கும் இல்ல! எனக்கு கிடைச்ச சுபிம்மாவும், பார்த்தி அங்கிளும் என்னை அவங்க சொந்த பையனா பார்த்துக்கிட்ட மாதிரி தான் உன்னை உன்னோட மாமா அத்தை பார்த்துக்கிட்டாங்க. நம்ம ரெண்டு பேருக்கும் அன்போட வேல்யூவும் பிரிவோட வலியும் தெரியும்! ஏன்னா மத்தவங்க ஒரு மடங்கு அதை அனுபவிச்சிருந்தா நம்ம அதை ரெண்டு மடங்கா அதை அனுபவிச்சிருக்கோம். அதனால நம்ம ரெண்டு பேரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் என்னைக்குமே பிரியப் போறது இல்ல!” என்க மேனகா அவன் கூறிய அனைத்தையும் ஆமோதித்தபடி தலையாட்டினாள்.

அவளின் கண்ணீரை அஸ்வின் துடைத்துவிடும் போதே அபிமன்யூவும் ஸ்ராவணியும் வரவே இருவரும் விலகி நின்று கொண்டனர்.

அபிமன்யூ கிண்டலாக “நீ ஹக் பண்ணிக்கோ அச்சு. நான் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன்” என்றுச் சொல்ல அஸ்வின் சிரித்த முகத்துடன் மேனகாவின் அருகில் செல்ல ஸ்ராவணி முறைப்புடன் “ஆனா நான் நினைப்பேன்” என்றுச் சொல்லவும் முகத்தைத் தொங்கப் போட்டுவிட்டு நின்று கொண்டான்.

அபிமன்யூ ஸ்ராவணியின் அருகில் வந்து அவளது கரத்தைப் பற்றிக் கொண்டு “ஏன் இந்த நல்லெண்ணம் உனக்கு?” என்றுக் கேட்க ஸ்ராவணி  “பிகாஸ் மேகி ரொம்ப அப்பாவி! ஈஸியா எல்லாரையும் நம்பிடுவா” என்றுச் சொல்லிவிட்டு அஸ்வினைப் பார்க்க அவன் மேனகாவை நோக்கினான்.

மேனகா ஸ்ராவணியிடம் “வனி…” என்று இழுவையுடன் ஆரம்பிக்க ஸ்ராவணி “என்ன இழுக்கிற? அப்போ நீயும் விழுந்திட்டியா மேகி?” என்று ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு வாயில் கை வைத்துக் கொண்டாள்.

பின்னர் அஸ்வினை பார்த்தவள் “இங்க பாருங்க மிஸ்டர் அஸ்வின்! என் ஃப்ரெண்டை நல்ல படியா பார்த்துக்கணும்” என்று கையை நீட்டிப் பொய்யாக மிரட்ட அவனும் நல்லப்பிள்ளை மாதிரி தலையாட்டினான்.

அபிமன்யூ “ஓகே ஓகே! போதும்டா சாமிகளா! திருச்சிக்கு இப்போ போனா தான் ஃபிளைட் பிடிக்க கரெக்டா இருக்கும். கிளம்புறிங்களா?” என்று கேட்க மூவரும் தலையாட்டிவிட்டு அவனுடன் வெளியேறினர்.