🖊️துளி 47👑

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மேனகா லேப்டாப்பில் அவளது வேலை விஷயங்களை டைப் செய்து கொண்டிருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் ஸ்ராவணி தான் வந்துவிட்டாளென்று ஆவலுடன் ஹாலுக்குச் சென்றவள் ஸ்ராவணியின் அழுதுச் சிவந்த முகத்தைக் கண்டதும் ஏதோ தவறென்று மூளையில் பட அவளை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.

“என்னாச்சு வனி? ஏன் அழுற? இஸ் எனிதிங் ராங்?” என்று ஆதரவாகக் கேட்டவளைக் கண்டதும் ஸ்ராவணிக்கு துக்கத்தில் கண்ணைக் கரித்துக் கொண்டு அழுகை வர அவள் தோளில் சாய்ந்து அழுது கொண்டே “எல்லாம் முடிஞ்சுப் போச்சு மேகி” என்று மட்டும் சொல்ல சத்தியமாக மேனகாவுக்கு அவள் சொல்ல வருவது புரியவில்லை.

தோளில் சாய்ந்திருப்பவளை எழுப்பி அவள் கண்ணீரைத் துடைத்தவள் “இங்க பாரு! என்னோட வனி இப்பிடி அழுறவ இல்ல. எந்த பிரச்சனையா இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணுற உனக்கு இப்பிடி உடைஞ்சுச் போய் அழுற அளவுக்கு என்னாச்சு? கோர்ட்ல யாரும் எதுவும் சொன்னாங்களா?” என்று பொறுமையாகக் கேட்க

ஸ்ராவணி நைந்த குரலில் “எங்களுக்கு டிவோர்ஸ் ஆயிடுச்சு மேகி” என்றுச் சொல்ல மேனகாவுக்குமே இது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. அவள் இருவரும் விவாகரத்தை மறுத்துவிடுவார்கள் என்றே இன்று காலை வரை நினைத்திருந்தாள் மேனகா.

“எப்பிடி வனி?” என்று நம்ப முடியாமல் ஆதங்கத்துடன் கேட்டவளை கண்ணீர் நிறைந்த விழியால் ஏறிட்ட ஸ்ராவணி “அபி டிவோர்ஸ் வேணும்னு சொல்லிட்டான்” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு மீண்டும் அழுது அரற்ற மேனகாவுக்குள் ஏகப்பட்டக் கேள்விகள்.

அவளால் அபிமன்யூவின் இந்தச் செய்கையை நம்ப முடியவில்லை. அவனை முதல் முறையாக பப்பில் சந்தித்த போதே ஸ்ராவணியின் மேல் அவனுக்கு ஏதோ ஒரு பிரியம் இருந்ததை அவனதுப் பார்வையில் இருந்தே கணித்தவள் மேனகா. அதன் பின்னர் ஏகப்பட்ட கசப்பான சம்பவங்கள் நடந்திருந்தாலும் அவர்கள் காதலிக்க ஆரம்பித்த பிறகு எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது அவளின் பார்வையில்.

அவளால் அபிமன்யூவைச் சந்தேகப்பட முடியவில்லை. ஆனால் தோளில் சாய்ந்துக் கண்ணீரில் கரையும் தோழியின் நிலையைப் பார்த்து அவளால் சும்மாவும் இருக்க முடியவில்லை. அப்போது தான் அவளுக்கு திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது. ஒரு வேளை இப்படி கூட இருக்கலாம் என்ற நம்பிக்கையில் ஸ்ராவணியை ஏறிட்டவள் நம்பிக்கையானக் குரலில் “வனி அபி தப்பு எதுவும் பண்ணலடி. இந்த டிவோர்ஸ் நடந்தது நல்லதுக்கு தான்” என்று கூற ஸ்ராவணி குழப்பத்துடன் மேனகாவைப் பார்த்தாள்.

அவளது முகத்தை துடைத்துவிட்ட மேனகா “அபி உன்னை ரொம்ப லவ் பண்ணுறாரு. அதான் உன்னை டிவோர்ஸ் பண்ணிட்டாரு” என்றுப் புன்னகைத் தவழச் சொல்ல ஸ்ராவணிக்கு அவளது பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியது.

“மேகி என்ன சொல்லுற? எனக்குப் புரியலை” என்று சொன்னவளின் கலைந்த கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்ட மேகி “உனக்கும் அபிக்கும் நடந்த கல்யாணம் உங்களுக்குத் தெரிஞ்சு நடக்கலையே. அதுக்கு அப்புறம் நடந்த நிகழ்வுகளும் சரியில்லை. அதனால தான் அவரு உன்னை முறைப்படி கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டுருக்காரு. இப்போ டிவோர்ஸ் ஆயிடுச்சுனா அகெய்ன் உன்னை முறைப்படி கல்யாணம் பண்ணிக்கலானு யோசிச்சிருப்பாரு” என்றுச் சொல்ல ஸ்ராவணிக்கு அப்படியும் இருக்குமோ என்ற நப்பாசையுடன் மேனகாவைப் பார்த்தாள்.

மேனகா “வனி! நீ அவசரப்படாமப் போய் அபி கிட்ட பேசு. நான் சொன்னபடி தான் அவரு யோசிச்சிருப்பாரு. பிகாஸ் மனுசன் உன் கிட்ட முதல் பார்வையிலேயே ஃபிளாட்.  அவரு என்னைக்குமே உன்னை மிஸ் பண்ண விரும்பவே மாட்டாரு” என்று  நம்பிக்கையோடு சொல்ல அவளது வார்த்தைகள் ஸ்ராவணிக்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுக்க கண்ணைத் துடைத்துக் கொண்டபடி சட்டென்று எழுந்தாள்.

“மேகி நான் போய் அபியைப் பாக்கணும். நீ சொல்லுற மாதிரி தான் இருக்கும்னு என் மனசும் இப்போ சொல்லுது. இது புரியாம அவசரத்துல நான் அவனை ரொம்பவே ஹர்ட் பண்ணிட்டேன். முதல்ல அவன் கிட்டப் போய் மன்னிப்பு கேட்கணும்” என்றபடி கிளம்பினாள்.

அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த மேனகாவுக்கு மனதுக்கு இதமாக இருக்க கண்ணை மூடி கடவுளிடம் “பெருமாளே! ஏதோ ஒரு வேகத்துல நான் பண்ணுன காரியம் அவங்களை லைஃப்ல ஒன்னு சேர்த்து வச்சுது. இன்னைக்கு அவங்க மனசு விட்டுப் பேசி என்னைக்குமே பிரிக்க முடியாத ஒரு பந்தம் அவங்களுக்குள்ள ஏற்படணும். அதுக்கு உங்க ஆசிர்வாதம் வேணும்” என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள்.

ஸ்ராவணி மேனகாவின் பேச்சு அளித்த நம்பிக்கையில் ஸ்கூட்டியை சந்தோசமாக எடுக்கச் சென்றவள் அஸ்வினுக்கு கால் செய்தாள்.

“ஹலோ! அஸ்வின் நான் ஸ்ராவணி பேசுறேன். அபிமன்யூ…” என்றபடி நிறுத்த அவன் மறுமுனையில் “அவன் இப்போ எங்க ஆபிஸ்ல தான் இருக்கான் வனி! ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கான்” என்று வருத்தமானக் குரலில் உரைத்துவிட்டுப் போனை வைத்துவிட்டான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

ஸ்ராவணி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவள் அடுத்த அரை மணிநேரத்தில் அவனது அலுவலக வாயிலில் நின்றாள். ஸ்கூட்டியை வேகமாக நிறுத்தியவள் வேகமாக அலுவலகத்தினுள் சென்றாள். அங்கே தலையைக் கைகளில் தாங்கியபடி குனிந்து அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அவளுக்கு இதயமே நின்று விடும் போல இருந்தது.

அவளைக் கண்டதும் எழுந்த அஸ்வின் அபிமன்யூவைத் தட்டி கூப்பிட அவன் தலை நிமிர்ந்தவன் ஸ்ராவணியைக் கண்டதும் கூரியவிழிகளால் அவளைத் தலையிலிருந்து கால் வரை அளவிட்டவன் அந்த கூறு போடும் பார்வையுடனே “இன்னும் திட்ட வேண்டியது எதுவும் பாக்கி இருக்குதா? சொல்லிருந்தா நானே வந்திருப்பேனே. நீங்களும் சவுகரியமா என்னைத் திட்டித் தீர்த்திருக்கலாம்” என்று குத்தலாகப் பேச அஸ்வின் அவர்களுக்கு இடையூறாக இருக்க விரும்பாமல் அறையை விட்டு வெளியேறினான்.

அவன் சென்றதும் ஸ்ராவணி கண்ணீருடன் அபிமன்யூவை நெருங்க அவனோ கையைக் காட்டி அவளை நிறுத்திவிட்டு “அங்கேயே நில்லுங்க ரிப்போர்ட்டர் மேடம்! கிட்ட வராதே! நான் கோவத்துல இருக்கேன்” என்று ஆத்திரத்தை அடக்கியக் குரலில் சொல்ல ஸ்ராவணி அதைக் கண்டு கொள்ளாமல் முன்னேறினாள்.

அவன் அருகில் வந்து நின்றவள் “அபி” என்று ஆரம்பிக்க அவன் முகம் சிவக்க அவள் கன்னத்தில் பளாரென்று அறையவும் அவளால் கொஞ்சம் தடுமாறி தான் நிற்க முடிந்தது. அவளுக்குக் கன்னம் வலித்தாலும் தான் சிறிது நேரத்துக்கு முன் அவனுக்குக் கொடுத்த வலியை விட இது ஒன்றும் பெரிதல்ல என்று எண்ணியபடி “ஓகே! என்னை அறைஞ்சிட்டல்ல! இப்போ கோவம் போயிடுச்சா?” என்று கேட்க

அவன் தலையாட்டி மறுத்துவிட்டு “இல்லை! நீ பேசுன வார்த்தை அப்பிடி ஸ்ராவணி சுப்பிரமணியம். என்னோட லவ்வை எவ்ளோ ஈஸியா அசிங்கப்படுத்திட்டல்ல? உன் கூட நான் இருந்த நேரத்துல ஒரு செகண்ட் கூடவா என்னோட காதல் உன் மனசைத் தொடல?  ஏன் உன்னால என்னை நம்ப முடியல? ஒரு நிமிசம் அபி இப்பிடி செய்யறானே, அதுல எதாச்சும் ஒரு காரணம் இருக்கும்னு உன்னால ஏன் யோசிக்க முடியலடி?” என்றவனின் குரலில் அவன் மனதின் ஆதங்கம் முழுவதுமாக வெளிப்பட ஸ்ராவணியால் நீர் நிரம்பிய விழிகளுடன் அவனை ஏறிட்டுப் பார்க்க மட்டுமே முடிந்தது.

அவன் விரலை நீட்டியபடி “நீ அந்த இடத்துல டிவோர்ஸ் கேட்டிருந்தா நான் கண்டிப்பா நீ நடந்துக்கிட்ட மாதிரி பிஹேவ் பண்ணிருக்க மாட்டேன் ஸ்ராவணி. ஏன்னா நான் உன்னை எவ்ளோ லவ் பண்ணுறேனோ அந்த அளவுக்கு உன் மேல எனக்கு நம்பிக்கையும் இருக்கு. உன்னால ஏன் என்னை நம்ப முடியல? ஒருவேளை என்னோட பாஸ்ட் லைஃப் ஸ்டைல் அதனால உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று வலியுடன் கேட்க

ஸ்ராவணி மறுப்பாய் தலையசைத்து “என்னோட அந்த கோவத்துக்குக் காரணம் உன்னை இழந்துடுவேனோங்கிற என்னோட பயம் மட்டும் தான் அபி. சீஃப் உன்னைப் பத்தி டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண என்னை அப்பாயிண்ட் பண்ணுனப்போ நான்ஸி எனக்கு உன்னோட போட்டோவை மெயில் பண்ணியிருந்தா. அந்தப் போட்டோவைப் பார்த்த உடனே நீ என்னோட மனசுல ஏதோ ஒரு விதத்துல ஆழமாப் பதிஞ்சுட்ட. உன்னோட பாஸ்ட் லைஃப் ஸ்டைல் பத்தி எனக்கு எப்போவுமே கவலை இருந்தது இல்ல அபி. ஃபர்ஸ்ட் டைம் உன்னை நேர்ல பார்த்தப்போ மனசுல ஏதோ வித்தியாசமான உணர்வு வந்துச்சு. ஆனா அதை நான் வெளிக்காட்டிக்க விரும்பல.

அப்புறம் நடந்த பிரச்சனைகளால எனக்கு உன் மேல கோவம் மட்டுமே இருந்துச்சு. அதனால என்னோட மனசு சொல்லுறதை என்னால கேக்க முடியல. ஆனா நீ உன்னோட லவ்வை சொன்னதுல இருந்து நான் எனக்குத் தெரியாமலே உன்னை விரும்ப ஆரம்பிச்சிட்டேன் அபி. உன்னை விட்டுப் பிரிஞ்சுப் போக கூடாதுனு நான் நினைச்சது தான் என்னோட கோவத்துக்குக் காரணம்” என்று சொல்லிவிட்டு அவனை ஓடிச் சென்றுக் கட்டிக் கொண்டாள்.

அவன் மார்பில் முகம் புதைத்த படி “ஐயாம் சாரி அபி அண்ட் ஐ லவ் யூ சோ மச். என்னால உன்னோட கோவத்தைப் பொறுத்துக்க முடியும். ஆனா நீ விலகிப் போனா என்னால தாங்க முடியாது அபி. டோண்ட் லீவ் மீ” என்று அழுது அரற்றியவளின் கண்ணீரே அவளின் அளவுக்கடந்த காதலை பறைச்சாற்ற தன்னவளின் காதல் தந்த கர்வத்தில் அவளை அணைத்துக் கொண்டான் அபிமன்யூ.

மார்புக்கூட்டுக்குள் சென்று விடுவதைப் போல முகம் புதைத்து அழுதவளின் நாடியை நிமிர்த்தியவன் “டோண்ட் கிரை! இனிமே நோ மோர் டியர்ஸ். ஒன்லி லவ்! அதே மாதிரி எந்த நிலைமை வந்தாலும் என் மூஞ்சில முழிக்காதேனு மட்டும் சொல்லிடாதே! பிகாஸ் என்னால உன்னைப் பார்க்காமலோ, உன் கூட பேசாமலோ இருக்க முடியாது ஸ்ராவணி! நம்ம சண்டை போடுவோம், சமாதானமும் ஆவோம், ஆனா என்னைக்குமே ஒருத்தரை விட்டு ஒருத்தர்  பிரியறதை மட்டும் நினைச்சுப் பார்க்கவே கூடாது. சரியா?” என்றுச் செல்லமாக மிரட்ட சரியென்று தலையாட்டினாள் ஸ்ராவணி.

அவளின் நெற்றியில் முட்டிக்கொண்டே “அப்போ சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாமா? பிகாஸ் எனக்கு 24 ஹவர்ஸும் உன் கூட சண்டை போடணும் போல இருக்கு! அப்புறம் இப்பிடி சமாதானம் பண்ணுற சாக்குல உன்னை டைட்டா ஹக் பண்ணிக்கனும் போலவும் இருக்கு” என்று ஆழ்ந்த குரலில் காதல் மின்னச் சொன்னவனைக் கண்டு கன்னங்குழிய நகைத்த படி தன் சம்மதத்தை கூறினாள் ஸ்ராவணி.

அஸ்வின் உள்ளே வரலாமா என்று கதவைத் தட்ட “உள்ளே வாடா நல்லவனே” என்று அபிமன்யூ கூற அறையினுள் வந்தான் அஸ்வின். அபிமன்யூவின் மகிழ்ச்சி நிறைந்த முகமும், அவனது கையணைப்பில் கண்ணில் காதல் மின்ன நின்ற ஸ்ராவணியும் அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்ல “ஒரு வழியா ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டிங்க போல?” என்ற கேலியுடன் அவர்களை நெருங்கினான் அவன்.

அவர்கள் அருகில் வந்தவன் “ரொம்ப டிலே பண்ணாதிங்க கைய்ஸ்! ஆல்ரெடி நீங்க ஓல்ட் கபிள்ஸ் தானே! சீக்கிரமா ஒரு முருகன் கோயிலா பார்த்து கல்யாணம் பண்ணிக்குங்க! எவ்ளோ நாள் தான் நானும் வெயிட் பண்ணுறது?” என்று பொய்யாகக் குறைபட அந்த அறையினுள் சிரிப்பலை பரவியது.

**********************************************************************************

அபிமன்யூவும் ஸ்ராவணியும் மனமொத்த காதலர்களாக ஸ்ராவணியின் பெற்றோரின் இந்திய வருகைக்காகக் காத்திருந்தனர். அதே நேரம் அஸ்வின் தன்னுடைய காதலை மேனகாவுக்கு மறைமுகமாக அவனது அக்கறை கலந்த செய்கையின் மூலம் அடிக்கடி உணர்த்திக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அவளிடமிருந்து தான் ஒரு பதிலும் கிடைக்கவில்லை இன்று வரை. அவனும் விக்கிரமாதித்தன் போல சிறுதும் மனம் தளராது அடுத்தடுத்து முயற்சிகளை அம்புகளாய் எய்ய அவை உள்ளத்தைத் தீண்டினாலும் அவை ஏற்படுத்திய அதிர்வலைகளை வெளிக்காட்டாது திறமையாக மறைத்துக் கொண்டு நடமாடிய மேனகா அவனது இரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதித்தாள் என்பதே உண்மை.

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் ஸ்ராவணியின் வீட்டு லேண்ட் லைனுக்கு ஒரு கால் வந்தது. ஸ்ராவணி ரிசீவரை எடுத்துக் காதில் வைத்து “ஹலோ” என்க மறுமுனையில் ஒரு பெண்ணின் அழுகுரல் காதைக் கிழித்தது.

“வனிம்மா!” என்று பெருத்தச் சத்தத்துடன் ஒப்பாரி வைத்தவள் ரம்யா. வினிதா மற்றும் மேனகாவின்  மூத்தச் சகோதரி. ஸ்ராவணிக்கு அவளது குரலைக் கேட்டதும் அவளும் அவன் கணவனும் செய்த பாதகங்கள் அனைத்தும் கண் முன் வர போனை வைக்கச் சென்றவளை ரம்யாவின் அழுகுரல் தடுத்தது.

“வனிம்மா போனை வச்சிடாதேடா! எனக்குத் தெரியும் நீங்க யாருமே என்னை மன்னிக்க மாட்டிங்கன்னு. என் கூடப் பிறந்தவளை பணத்துக்காக நான் படுத்துன பாடு அப்பிடி. ஆனா இப்போ நானும் அந்த நிலைமையில தான் இருக்கேன்” என்று சொல்ல ஸ்ராவணிக்கு கொஞ்சம் பதறி விட்டது.

“ரம்யாக்கா என்னாச்சு?” என்று பதறிப் போய் கேட்க ரம்யா தான் இருக்கும் நிலையை விளக்கத் தொடங்கினாள்.

அவள் மிகவும் நம்பிய அவளின் கணவன் அவளை விட்டுவிட்டுச் சொத்துக்காக இன்னொருத்தியை திருமணம் செய்யப் போவதாகவும், அதற்குச் சம்மதிக்காததால் அவளை அடித்துத் துன்புறுத்துவதாகவும் அழுதவள் தனக்குச் சாப்பாடு எதுவும் கொடுக்காமல் அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்வதாகக் கூற ஸ்ராவணிக்கு மனம் பொறுக்கவில்லை.

ஒரு காலத்தில் வினிதாவும் இதே நிலையில் இருப்பதாக மேனகா போன் செய்து அழுதது அவளின் கண் முன் வரவே “நீ அழாதே ரம்யாக்கா. நான் உடனே தஞ்சாவூர் வர்றேன். போலீஸோட வந்து உன் புருசனை அரெஸ்ட் பண்ண வைக்குறேன்” என்றுச் சொல்ல எதிர்முனையில் இருந்தவள் பதறினாள்.

“வனிம்மா நீ பெரிய சேனல்ல வேலை பார்க்கிறனு பேசிக்கிட்டாங்க. உனக்கு எதுக்கு சிரமம்? நீ மேனகாவை மட்டும் அனுப்பி வை. அவ போதும் இந்த மனுசனை உண்டு இல்லைனு ஆக்கறதுக்கு” என்றுச் சொல்ல ஸ்ராவணிக்குமே மேனகா சென்றால் தான் இந்தப் பிரச்சனை தீரும் என்று தோன்ற நாளை மேனகா தஞ்சைக்கு வருவாள் என்று ரம்யாவிடம் சொல்லிவிட்டுப் போனை வைத்தவள் நேரே பால்கனிக்குச் சென்று அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மேனகாவிடம் விஷயத்தைக் கூறினாள்.

மேனகா சாதாரணமாக “அவளுக்கு இது வேணும் வனி! வினியை அவளும் அவ புருசனும் எவ்ளோ டார்ச்சர் பண்ணுனாங்க தெரியுமா?” என்று வலியுடன் கூற அவளை அமைதிப்படுத்திய ஸ்ராவணி “அவ செஞ்சதை நம்ம திருப்பிச் செஞ்சா நமக்கும் அவளுக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிடும் மேகி. கல்யாணத்துக்கு அப்புறம் தானே ரம்மிக்கா இப்பிடி ஆயிட்டா. முதல்லாம் நீ, நான், வினினா அவளுக்கு உயிரு தான். அந்த ரம்யாக்காவை மனசுல நெனைச்சிக்கிட்டு தஞ்சாவூர் போ. வர்றப்போ ரம்யாக்காவை கையோட கூட்டிட்டு வந்துடு. அவளை நம்ம ராணி மாதிரி வச்சு பார்த்துக்கலாம்” என்று அவளைச் சரிக்கட்டினாள்.

மேனகாவும் அரைமனதுடன் தலையாட்டியவள் மறுநாள் தஞ்சாவூருக்குக் கிளம்பிச் செல்ல அவள் சென்ற ஐந்து மணி நேரத்தில் தஞ்சாவூரிலிருந்து வழக்கமாக மேனகாவுக்கும் வினிதாவுக்கும் அவர்களின் பெற்றோர் எழுதிவைத்திருந்த நிலத்திலிருந்து வரும்  குத்தகைப்பணத்தைக் கொடுக்க வந்த கிருஷ்ணமூர்த்தி மேனகா ரம்யாவைப் பார்க்க தஞ்சாவூருக்குச் சென்றிருக்கிறாள் என்பதைக் கேட்டதும் பதறிப்போனார்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“வனிம்மா நீ ஏன் அவளை தனியா அனுப்பி வச்ச? ரம்யாவும் அவ புருசனும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி அவங்களுக்கு உங்க மாமா எழுதிவச்ச சொத்தைப் பூரா அழிச்சிட்டாங்க. போன மாசம் தான் ரம்யா என் கிட்ட வந்து இனிமே நிலத்தோட குத்தகைப்பணத்தை சென்னைக்குக் கொண்டு போகாதிங்க, என் கிட்டவே குடுத்துடுங்க! மேனகா வினிதாவோட நிலம் இப்போ என் பேருல தான் இருக்குனு சொன்னா! நான் அதுக்கு நிலப்பத்திரத்தோட வா!  குத்தகைப்பணத்தைக் குடுக்கிறேனு சொன்னதுக்கு என்னை வாய்க்கு வந்தபடி திட்டிட்டுப் புருசன் கூட போயிட்டாம்மா. அவ சொல்லுற மாதிரிலாம் அவ புருசன்  ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க நினைக்கல. மேனகாவை அங்கே கூப்பிட்டு அவளை வச்சு ஏதோ காரியம் சாதிக்க நினைக்கிறா ரம்யா” என்று பயந்தவராய் கூற ஸ்ராவணிக்கு சர்வமும் அடங்கிவிட்டது.

மேனகாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தவள் உடனே அபிமன்யூவுக்கு போன் செய்து விவரத்தைக் கூற அவனும் மேனகாவை தனியாக அங்கே அனுப்பியதற்கு ஸ்ராவணியைக் கடிந்துக் கொண்டான். தானும் அஸ்வினும் தஞ்சாவூர் செல்லப்போவதாகச் சொல்ல தானும் வருவதாக ஸ்ராவணி கூறிவிட்டுப் போனை வைத்தவள் மனதிற்குள் “கடவுளே! என்னோட மேகிக்கு எதுவும் ஆயிடக் கூடாது” என்று வேண்டிக் கொண்டபடி கிருஷ்ணமூர்த்தியையும் தன்னுடன் வருமாறுக் கூறிவிட்டு வீட்டைத் தாழிட்டு விட்டு கிளம்பினாள்.