🖊️துளி 46👑

ஸ்ராவணி அலுவலகத்தை அடைந்த போது எப்போதும் கேட்கும் அபிமன்யூ, அஸ்வினின் கேலிப்பேச்சுக்களின் சத்தமின்றி அலுவலகம் மயான அமைதியுடன் இருந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள் இருவரும் ஆளுக்கொரு புறம் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததைக் கண்டதும் மனதிற்குள் “சரியான டிராமா கிங்ஸ்” என்று எண்ணிக் கொண்டாள். அதை வெளிக்காட்டாமல் தொண்டையைச் செருமவும் இருவரும் நிமிர்ந்து அங்கே நின்று கொண்டிருந்தவளைப் பார்த்ததும் முகத்தைச் சீராக்கிக் கொண்டனர்.

அஸ்வின் “வாங்க ரிப்போர்ட்டர் மேடம்” என்றபடி எழப் போக அவனை கையமர்த்தியவள் தானே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள். பின்னர் பொறுமையாக “எத்தனை நாளுக்குத் துக்கம் அனுஷ்டிக்கிறதா இருக்கிங்க?” என்று கேட்க இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

அபிமன்யூ அவளின் வார்த்தையில் சூடானவன் “வாயைக் கழுவுடி! என்ன வார்த்தை பேசுறா பாரு அச்சு” என்று பொங்கியெழ அஸ்வினுமே கொஞ்சம் அந்த வார்த்தையில் கலங்கித் தான் போய் விட்டான். ஆனால் ஸ்ராவணியோ சாதாரணமாக அவனைப் பார்த்து அமருமாறு சைகை காட்டிவிட்டு “நான் இல்ல, இப்போ உங்க மூஞ்சியை வேற யார் பார்த்தாலும் இந்த கேள்வியைத் தான் கேப்பாங்க. கேக்காம போனாலும் மனசுக்குள்ள ஏதோ துக்கமானச் சம்பவம் நடந்திருக்குனு நினைச்சிப்பாங்க” என்று பொறுமையாகக் கூற அபிமன்யூ குறையாத எரிச்சலுடன் முகம் திருப்பிக் கொண்டான்.

அவனை அலட்சியப்படுத்திய ஸ்ராவணி அஸ்வினை நோக்கி “டியூட்! அவன் எப்போவுமே அவசரக்குடுக்கை அண்ட் ஓவர் எமோசனல் டைப். பட் நீங்க கொஞ்சம் தெளிவா இருப்பிங்கன்னு நெனைச்சேன். நீங்களும் அவனை மாதிரியே இம்மெச்சூர்டா பிஹேவ் பண்ணுறது எனக்கு ஆச்சரியமா இருக்கு” என்றுச் சொல்ல அஸ்வின் அவளது முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டான்.

ஸ்ராவணி “நல்லா யோசிங்க! உங்க அப்பாவுக்கு குறைஞ்ச பட்ச தண்டனை தான் குடுத்திருக்காங்க. ஒரு வருசம் கண் மூடித் திறக்கறதுக்குள்ள கடந்துப் போயிடும். நீங்களே உடைஞ்சுப் போயிட்டா அப்புறம் ஆன்ட்டி, ஜானுக்கு யாரு தைரியம் சொல்லுவாங்க?  நடக்கப் போறதை மட்டும் யோசிங்க, நீங்க ரெண்டு பேரும் தேவையில்லாம கவலைப்படாதிங்க.” என்றுச் சொன்னவள் அபிமன்யூவைப் பார்க்க அவன் முகம் ஓரளவுக்குத் தெளிவாகியிருந்தது.

அவளின் பேச்சை அஸ்வினும் ஆமோதிக்க ஸ்ராவணி அவர்கள் இருவரையும் இயல்பாக்க எண்ணியவள் குறுநகையுடன் “எனி வே இந்த வாரம் இன்னொரு ஹியரிங்கும் இருக்கு. ஆக்சுவலி உங்க ஃபேமிலிக்கு இது கோர்ட் வீக் போல” என்றுச் சொல்ல அபிமன்யூ யோசனையுடன் “இன்னொரு ஹியரிங்கா? அது என்னது?” என்றுக் கேட்க ஸ்ராவணிக்கு அவன் நிஜமாகவே மறந்துவிட்டான் என்பது புரிந்தது.

ஒரு பெருமூச்சுடன் “எல்லாம் நம்ம டிவோர்ஸ் கேஸோட ஃபைனல் ஹியரிங் தான்” என்க அஸ்வின் ஆச்சரியத்துடன் “கரெக்ட் அபி. நானும் அதை மறந்துட்டேன்டா. அதுக்கு இன்னும் டூ டேய்ஸ் தான் இருக்கு” என்றுச் சொல்ல அபிமன்யூவுக்கு அப்போது தான் நினைவு வந்தது நீதிமன்றம் அவர்களுக்குக் கொடுத்த ஆறுமாத காலம் முடிவடைந்துவிட்டது என்று.

அதன் பின் அவர்களின் பேச்சு விவாகரத்து என்ற விஷயத்தைச் சுற்றி வர ஸ்ராவணி இருவரிடமும் வீட்டுக்குக் கிளம்பும்படி கூற இருவரும் அலுவலகத்தை மூடிவிட்டுக் காரை நோக்கிச் சென்றனர். அபிமன்யூ ஸ்ராவணியிடம் வந்தவன் “தேங்ஸ் ஃபார் கமிங்” என்று தெளிவான முகத்துடன் கூறிவிட்டுச் செல்ல அவளும் பதிலுக்கு புன்முறுவல் பூக்க இருவரும் காரில் ஏறி அந்த வளாகத்தை விட்டு வெளியேற அவளும் வெளியே வந்து ஆட்டோவில் ஏறி அவளது அப்பார்ட்மெண்டுக்குச் சென்றாள்.

அபிமன்யூவும் அஸ்வினும் வீட்டுக்கு வரும் போது கலகலப்பான பேச்சுச் சத்தம் கேட்கவே ஆச்சரியத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருவரும் வீட்டினுள் நுழைய மேனகா தான் எதையோ சொல்லிக் கொண்டிருக்க அதைக் கேட்டு ஜனனி, சுபத்ரா மற்றும் சகாதேவன் சிரித்துக் கொண்டிருந்தனர்.

அவள் இவர்கள் வந்ததைக் கவனிக்காமல் “அப்புறம் என்னாச்சுனா நானும் வனியும்…” என்று பேசிக்கொண்டே அவர்களின் பார்வை வாயில் புறம் திரும்புவதைக் கண்டு அவளும் அங்கே நோக்க வீட்டினுள் நுழைந்த அஸ்வினையும் அபிமன்யூவையும் பார்த்துப் புன்னகைக்க அவர்களும் வந்து சோஃபாவில் அமர்ந்தனர்.

அபிமன்யூவுக்கு தனது கவலை தான் பெரிது என்று எண்ணி வீட்டினரைப் பற்றி யோசிக்காமல் இருந்து விட்டோமே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. மேனகாவைப் பார்த்து புன்னகைத்தவன் “உங்க ஆபிஸ்ல வேலை இல்லைனு உங்க ரெண்டு பேரையும் துரத்தி விட்டுட்டாங்களா என்ன? எப்போ பார்த்தாலும் ஃப்ரீயா தான் சுத்துறிங்க?” என்று கேலி செய்ய

மேனகா சிலிர்த்துக் கொண்டு “நாங்க வெட்டியா சுத்துறோமா? ஏன் எம்.எல்.ஏ சார் சொல்ல மாட்டிங்க? அப்பிடிலாம் பார்த்தா நீங்க ரெண்டு பேரும் 24 ஹவர்ஸும் வெட்டியா தானே இருக்கிங்க” என்று சொல்லி உதட்டைச் சுளிக்க ஜனனி கிண்டலாக அபிமன்யூவிடம் “உங்களுக்கு இது தேவையா அண்ணா?” என்றுச் சொல்ல அபிமன்யூவுக்கும் வீட்டின் பழைய தோற்றம் திரும்பி வந்ததைப் போல் இருந்தது.

அஸ்வினோ மவுனமாக மேனகாவின் கலகலப்பான பேச்சை ரசித்துக் கொண்டிருந்தவன் மனதிற்குள் “இந்தப் பேச்சை லைஃப் லாங் கேக்கணும்னு ஆசை தான். ஆனா இந்தப் பொண்ணு தான் கல்யாணமே வேண்டானு சொல்லிட்டுச் சுத்துதே அச்சு” என்று அவன் மனச்சாட்சி சோககீதம் வாசித்தது.

மேனகா அனைவரையும் சாப்பிட வருமாறு அழைக்க அவன் மட்டும் தலைக்கு கைகளை அண்டக்கொடுத்து சோஃபாவில் சாய்ந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது போஸைக் கண்ட அபிமன்யூவுக்கு அந்த கணத்திலும் சிரிப்பு வரவே சட்டென்று குனிந்து அவன் காதில் “டேய் அப்புறமா ரசிச்சுக்கோ. ரொம்ப பசிக்குதுடா. இப்போ நீயா வரலைனு வையேன், நானே உன்னைத் தூக்கிட்டுப் போயிடுவேன்” என்க அவன் அப்படி ஒரு விபரீதம் நடக்கும் முன் எழுந்து அவனுடன் டைனிங் டேபிளை நோக்கி நடந்தான்.

அனைவரையும் அமரச் சொன்ன மேனகா தானே பரிமாறத் தொடங்க அஸ்வினுக்கு கண் முழுவதும் அவள் மீது தான். சிறிது நேரத்துக்கு முன் இருந்த மனக்கலக்கம் எல்லாம் அவளின் கனிமுகத்தைக் கண்டதும் மறைய அவன் இயல்பு நிலைக்குத் திரும்பினான். அபிமன்யூவுக்குமே மேனகா வந்ததால் தான் தன்னுடைய தாய், தங்கை, சித்தப்பாவின் முகத்தில் போன சிரிப்பு மீண்டு வந்திருக்கிறது என்பதைப் புரிய சீக்கிரமாக இலைமறை காயாக இருக்கும் அஸ்வினின் காதல் இனியாவது அவள் கண் முன் படவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ளவும் அவன் தவறவில்லை.

அனைவரும் பழைய நிலைக்குத் திரும்பவே மேனகாவும் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப அஸ்வினுக்கு திடீரென்று வானிலை மாறுவதைப் போன்றுத் தோன்ற அவனது முகமாற்றத்தைக் கண்டு நமட்டுச்சிரிப்பு சிரிக்க அவன் “ஏன்டா அபி?” என்று பரிதாபமாகக் கேட்டபடி ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனை ஜனனியும் அபிமன்யூவும் கேலி செய்ய சுபத்ராவும், சகாதேவனும் பிள்ளைகளின் சந்தோசமே அவர்களின் மனதை நிறைக்க அவர்களும் கவலையை மறந்துச் சிரித்தனர். பார்த்திபனும் அதை தான் விரும்புவார் என்று நினைத்துக் கொண்டனர் அவரின் குடும்பத்தினர்.

இவ்வாறு நாட்கள் நகர அபிமன்யூ, ஸ்ராவணியின் விவாகரத்து வழக்குக்கான இறுதி ஹியரிங் நாளும் வரவே ஸ்ராவணி சீக்கிரமாகவே கோர்ட்டுக்குச் சென்றுவிட அபிமன்யூ சாவகாசமாக வந்துச் சென்றான். ஸ்ராவணி சாதாரணமாக இருக்கவே அபிமன்யூ வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் பதற்றத்துடன் இருந்தான்.

ஸ்ராவணி அவனது கையைப் பற்றிக் கொண்டபடி “நீ ஏன்டா இவ்ளோ டென்சனா இருக்க? ஜஸ்ட் அவங்க நம்ம கிட்ட டிவோர்ஸுக்கு ஓகேவானு கேக்கப் போறாங்க. அதுக்கு நம்ம ஆன்சர் பண்ணப் போறோம். சோ டென்சன் ஆகாதே” என்க

அபிமன்யூ ஸ்ராவணியின் கையை மார்பில் வைத்துக் கொண்டபடி “வனி என்ன நடந்தாலும் நீ என்னை விட்டுப் போக மாட்டேல்ல?” என்று கேட்டுவிட்டு தன்னுடையை பொம்மையைப் பறிகொடுக்கப் பயப்படும் குழந்தையைப் போல கேட்கவே அவள் புன்னகையுடன் தலையாட்டி மறுத்தாள்.

“நீயே வேண்டாம்னு துரத்துனா கூட நான் உன்னை விட்டுப் போறதா இல்லடா எம்.எல்.ஏ” என்று சொல்லிக் கொண்டு அவனைக் காதலுடன் பார்த்தபடியே சொல்ல அவன் எப்போதும் போல அவளது கரங்களை முத்தமிட அவர்களை உள்ளே வருமாறு ஒருவர் சொல்லிவிட்டுச் சென்றார்.

இருவரும் நீதிபதியின் முன் அமர அவர் வழக்கின் விவரங்களை எடுத்துக் கூறியவர் வழக்கமான நீதிமன்றச் செயல்முறைக்கு பிறகு இதற்கு பிறகும் அவர்கள் விவாகரத்துக்கு ஒத்துக் கொள்கிறார்களா என்று வினவ ஸ்ராவணி இல்லையென்று சொல்லும் போதே இடையிட்டது அபிமன்யூவின் குரல்.

“இந்த டிவோர்சுக்கு நான் சம்மதிக்கிறேன் சார்” என்று தெளிவான குரலில் பிசிறின்றி உரைக்க ஸ்ராவணியின் உலகம் மொத்தமும் அதிர்ந்தது ஒரு நிமிடம்.

அவள் அவசரமாக அவனிடம் “அபி என்னச் சொல்லுறடா?” என்று கேட்டவளை அர்த்தத்துடன் பார்த்துவிட்டு “ஏன் வனி? உனக்கு டிவோர்ஸ் வேண்டாமா?” என்று புருவம் உயர்த்தி வினவ அவளால் அவன் சொல்ல வரும் விஷயத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் எனக்கு விவாகரத்து வேண்டாம் என்று கெஞ்சவும் அவளது தன்மானம் அவளுக்கு இடம் கொடுக்கவில்லை.

எனவே அதற்கு மேல் சொல்வதற்கு ஏதுமில்லை என்பதால் மனதைத் திடப்படுத்திக் கொண்டவளாய் “எனக்கும் இந்த டிவோர்ஸ்ல சம்மதம் சார்” என்றுச் சொன்னவளுக்கு அதற்கு பிறகு நடந்த எதுவும் நினைவில் இல்லை. எப்படி திருமணம் என்ற ஒன்று அவளது புத்திக்கு உரைக்காமல் நடந்ததோ அதே போல் விவாகரத்தும் அவளது சுயப்புத்திக்கு உரைக்காமல் நடந்துவிட்டது. உணர்வற்ற முகத்துடன் கையெழுத்திட்டுவிட்டு கோர்ட் வளாகத்திற்கு வந்தவளைப் பின் தொடர்ந்த அபிமன்யூ “வனி” என்றபடி அவளின் கையைப் பிடிக்க அவள் திரும்பி பார்த்த உஷ்ணப்பார்வையில் தானாக அவனது கரங்கள் அவள் கையை விடுவித்தது.

அதற்கு மேல் நின்றால் பொதுவெளியில் அழுதுவிடுவோம் என்று பயந்த ஸ்ராவணி கண்ணை மறைத்த கண்ணீரை விழுங்கியபடி ஸ்கூட்டியை எடுத்தவள் விபத்தில் ஏதும் சிக்கிக் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தது வேதாவும் சுப்பிரமணியமும் செய்த புண்ணியம் தான்.

அவள் லிஃப்டுக்குள் நுழைவதற்குள் அவளைத் தொடர்ந்து காரை விரட்டி வந்த அபிமன்யூ வேகமாக அவளது கரத்தைப் பற்ற அவள் அவன் கையை உதறினாள். அவனது காலரைப் பிடித்தவள் “டிவோர்ஸ் பண்ணப் போறவன் எதுக்குடா லவ் டிராமா போட்ட? என் வாயால ஐ லவ் யூ சொல்ல வச்சு எனக்கு ஏன் ஃபால்ஸ் ஹோப் குடுத்த? இதுவும் உன்னோட பிளானா அபி?நான் கேக்கிற எதுக்கும் உன் கிட்ட பதில் இருக்காது. இனி நீயே சொன்னாலும் எந்த பதிலையும் நான் கேக்கப் போறது இல்ல. இனிமே என் மூஞ்சில முழிக்காதே அபி. என்னைப் பொறுத்தவரைக்கும் என்னோட காதல் நீ டிவோர்ஸ் வேணும்னு சொன்னல்ல அப்போவே செத்துப் போயிடுச்சு” என்றுச் சொல்லி கண்ணைத் துடைத்தபடி லிஃப்டினுள் ஓடினாள் ஸ்ராவணி.

அபிமன்யூ செல்பவளையே வெறித்தபடி நின்றவன் சிகையைக் கோதிக் கொண்டான். அவளை ஆயாசத்துடன் பார்த்தபடியே “ஒரு ரெண்டு நிமிசம் நின்னு நான் சொல்லப் போறதை கூட கேக்க மாட்டியா வனி? உன்னால எப்பிடி இந்த மாதிரி சொல்ல முடிஞ்சுது? நான் உன்னை எந்த அளவுக்கு லவ் பண்ணுறேனு எனக்கு மட்டும் தான் தெரியும். நீ புரிஞ்சிக்காம பேசுனது கூட பெருசா என்னை பாதிக்கல, பட் இதுவும் என்னோட பிளானானு கேட்டியே, இட்ஸ் ஹர்ட்டிங்” என்று சொல்லிவிட்டு விழியில் துளிர்த்த நீரைச் சுண்டிவிட்டபடி  காரை நோக்கி நடந்தான் அபிமன்யூ.