🖊️துளி 45👑

பீச் ஹவுஸின் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ஸ்ராவணியின் கையைக் கோர்த்தபடி ரிசார்ட்டினுள் நுழைந்தான் அபிமன்யூ. நேரே மொட்டைமாடிக்கு அவளை அழைத்துச் செல்ல ஸ்ராவணியும் யோசனையுடன் அவனைத் தொடர்ந்தாள்.

மொட்டைமாடியை மிதித்ததும் அங்கு மின்னிய விளக்குகளின் ஒளியில் அந்த இடமே தேவலோகம் போல ஜொலிக்க அவனது கரத்தைப் பற்றியபடி நடந்தவள் அங்கே டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்த கேக்கைக் கண்டதும் “எனக்கு கேக் வெட்டவே பிடிக்காது தெரியுமா?” என்று முகம் சுருக்கிக் கூறினாள்.

அபிமன்யூ “பிளீஸ் வனி! எனக்காக கட் பண்ண மாட்டியா?” என்று இறைஞ்சும் பார்வை பார்க்க அவள் சரியென்று தலையாட்டிவிட்டு கத்தியை எடுத்து வெட்டப் போக அவன் அவசரமாக அவளைத் தடுத்து “ஏன்மா நீ என்ன காய்கறியா கட் பண்ணப் போற? இது கேக். அதுவும் பிறந்தநாள் கேக். கடவுள் கிட்ட எதாச்சும் நல்லதா வேண்டிட்டு கட் பண்ணு” என்று எடுத்துக் கூற அவள் தலையாட்டிவிட்டுக் கண்ணை மூடி மனதின் எண்ணங்களைக் கடவுளிடம் வேண்டிவிட்டு கண்ணைத் திறக்க அவளின் எதிரே நின்றவன் மாயமாகி இருந்தான்.

எங்கே போனான் என்று திரும்பியவள் அவன் மார்பில் இடித்துக் கொண்டாள். “என் மூக்கு போச்சு” என்று தேய்த்துவிட்டப்படியே “பேசிட்டிருக்கும் போதே பின்னாடி போய் நின்னுப்பியாடா?” என்று கேட்க அவன் அவளை கேக்கை நோக்கித் திருப்பிவிட்டு தன் கரங்களால் அவளை அணைத்தபடி “இப்போ கட் பண்ணு” என்று அவள் நாடியைப் பதித்துச் சொல்ல ஸ்ராவணியும் சந்தோசமாக மெழுகுவர்த்தியை ஊதிவிட்டுக் கேக்கை வெட்டினாள்.

ஒரு துண்டை எடுத்து அவனுக்கு ஊட்டப் போக அதை வாங்கியவன் அவளுக்கு ஊட்டிவிட்டு மீதத்தைத் தன் வாயில் போட்டுக் கொண்டான்.

அவளைக் குறும்பாகப் பார்த்தவாறே “கேக்கைப் பூசி விட்டுருவோமா?” என்று கேட்க ஸ்ராவணி அவசரமாக முகத்தைக் கைகளால் மூடியபடி “நோ நோ! எனக்கு சென்சிடிவ் ஸ்கின் அபி. இந்த கிரீம் பட்டா ஆக்னே வந்துடும்டா” என்று பதறியபடி சொல்ல அவன் கேக்கைப் பூசாமல் கையைக் கீழே போட்டான்.

அவள் அதை கைவிரல் இடைவெளி மூலம் பார்த்துவிட்டு முகத்திலிருந்து கையை எடுக்க அந்த கேப்பில் முகத்தில் கிரீமைப் பூசிவிட்டு அவன் ஓட்டம் பிடிக்க ஸ்ராவணி கடுப்புடன் முகத்தை துடைத்தவாறு அவனைத் தொடர்ந்து ஓடினாள். அவன் நேரே கடற்கரையை நோக்கி  ஓட ஸ்ராவணி மூச்சிறைத்தவளாய் “டேய் என்னால ஓட முடியல” என்று சொல்லிவிட்டு கால் முட்டியைப் பிடித்தவண்ணம் குனிந்து நின்று மூச்சு வாங்க அவன் ஒரு நக்கல் சிரிப்புடன் அவள் அருகில் வந்தான்.

“இப்போவே உன்னால ஓட முடியலையே! நீயெல்லாம் பாட்டியா ஆனதுக்கு அப்புறமா எப்பிடி நம்ம பேரப்பிள்ளைங்க கூட ஓடிப்பிடிச்சு விளையாடுவ?” என்று அவன் கிண்டலடிக்க அவள் கொலைவெறியுடன் அவனை நோக்க

அவள் அருகில் வந்து அவள் கன்னங்களைப் பிடித்து ஆட்டியபடி “ரிப்போர்ட்டர் மேடம்கு கோவம் வந்துடுச்சோ?” என்க அவள் அவனது கையைத் தட்டிவிட்டபடி கடற்கரை மணலில் கால் புதைய நடக்கத் தொடங்கினாள்.

அவளைத் தொடர்ந்தவன் “பீச் ரொம்ப அழகா இருக்குல்ல வனி! பவுணர்மி வேற! இன்னைக்கு கடலோட அழகைப் பார்த்துட்டே இருக்கலாம்” என்று சொன்னபடி கடற்கரை மணலிலேயே அமர அவள் அவனைக் கடந்து நடக்க முயல அவளது கரம் பற்றி இழுத்துத் தன் அருகில் அமரவைத்துக் கொண்டான் அபிமன்யூ.

அவள் அமர்ந்ததும் அவள் புறம் திரும்பி சம்மணமிட்டுக் கொண்டவன் அவள் கைவிரலைப் பற்றிக்கொண்டபடி தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியிருந்த சிறுபெட்டியிலிருந்த மோதிரத்தை எடுத்து அந்த விரலில் போட்டபடியே “ஐ லவ் யூ வனி” என்றுச் சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட ஸ்ராவணிக்கு தன்னுடைய பிறந்தநாள் அந்த ஒற்றை முத்தத்தில் முழுமைப் பெற்றுவிட்டது என்றே தோன்றியது.

அவன் நெற்றியில் இதழ் பதித்த போது மூடிய கண்களை மெதுவாகத் திறந்த ஸ்ராவணி தன்னுடைய கரங்களால் அவனுடைய முகத்தைத் தாங்கியபடி அவன் கண்களை ஆழமாகப் பார்த்தபடியே “ஐ லவ் யூ அபி” என்றுச் சொல்ல அவனால் தன் காதுகளையே நம்ப இயலவில்லை. ஆச்சரியத்துடன் “நீ இப்போ சொன்னது….எனக்குத் தெளிவா கேக்கல. ஒன்ஸ் மோர்” என்று கேட்க

ஸ்ராவணி அவனது கன்னத்தைக் கிள்ளியபடி “ஐ லவ் யூ இடியட்” என்க அவனுக்கு சந்தோசத்தில் பேச முடியவில்லை. சந்தோசத்தில் துள்ளிக் குதித்தவன் அவனுக்கு எதிரேப் பரந்து விரிந்துக் கிடந்த கடலைப் பார்த்து “ஏய் கடல்ராஜா! வனி என்னை லவ் பண்ணுறேனு சொல்லிட்டா” என்று கத்த ஸ்ராவணி எழுந்து அவன் வாயைப் பொத்தினாள்.

“ஸ்ஸ்! ஏன்டா கத்துற?” என்க அவன் அமர்த்தலாக “ஏன்னா உன்னை நம்ப முடியாது வனி. அதான் அவரைச் சாட்சிக்குக் கூப்பிட்டேன்” என்றுச் சொல்ல அவன் காதை பிடித்துச் செல்லமாகத் திருகினாள் ஸ்ராவணி. சில நிமிடங்களில் அதை விட்டவள் “நீ சொல்லுற மாதிரியே வச்சிக்குவோம். நானும் அவரு கிட்டச் சொல்லுறேன்” என்று கூறியபடி கடலை நோக்கித் திரும்பியவள் “ஓய்! கடல்ராஜா இந்த இடியட்டை நான் லவ் பண்ணுறேன். இதுக்கு நீங்க தான் சாட்சி” என்றுச் சத்தமாகச் சொல்லிவிட்டு அவனைப் பார்த்து “இப்போ ஓகேயா?” என்க அவன் பெருவிரலை உயர்த்திக் காட்டினான்.

ஸ்ராவணி அவன் அருகில் வந்தவள் இரு கைகளையும் விரித்து “என்னைக் கொஞ்சம் தூக்கு” என்று குழந்தைப் போல கேட்க அவன் அவளைத் தூக்கிக் கொண்டான். அவனது முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தபடி அவனது நெற்றியில் சரிந்த தலைமுடியைச் சரி செய்தாள். அவனது கண்ணில் அவள் மீது அவன் வைத்துள்ள காதல் கண்ணாடிப் போல் தெரிய அதில் மயங்கிப் போனவள் “ஐ லவ் யூ சோ மச்” என்று ஆழ்ந்தகுரலில் தன் மனதை வெளிப்படுத்திவிட்டு அவன் எதிர்ப்பாரா சமயத்தில் அவன் இதழுடன் தன் இதழைக் கலக்க விட அபிமன்யூவுக்கோ முதல் முறையாக தன்னவள் அவளே விரும்பி அளித்த இந்த முத்தம் பேரின்பமாகத் தோன்ற கண் மூடி அதில் கரைந்தான்.

சில நிமிடங்களில் அவனது இதழை விடுவித்தவள் “ஷாக் டிரீட்மெண்ட் குடுக்க எனக்கும் தெரியும் எம்.எல்.ஏ சார்” என்று அமர்த்தலாகக் கூற அவன் கிண்டலாக “ரிப்போர்ட்டர் மேடம்கு இப்பிடி கூட பேசத் தெரியுமா?” என்று பொய்யாக ஆச்சரியம் காட்டிவிட்டு அவளை இரு கரங்களிலும் ஏந்தியபடி ரிசார்ட்டை நோக்கிச் செல்ல ஸ்ராவணி அவனுடன் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தாள்.

ரிசார்ட்டுக்குள் வந்ததும் ஸ்ராவணி நினைவாக “அபி இந்நேரம் வீட்டுக்குப் போனா கரெக்டா இருக்கும். நாளைக்கு நான் ஆபிஸுக்கு வேற போகணும்” என்றுச் சொல்ல அவனும் அவளை அழைத்துக் கொண்டு கதவைப் பூட்டிவிட்டு வெளியேறியவன் பார்க்கிங்கில் விட்ட காரை ஸ்டார்ட் செய்ய ஸ்ராவணி அதில் ஏறிக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் அப்பார்ட்மெண்ட் வர காரிலிருந்து இறங்கியவள் அவனிடம் “இந்த பர்த்டே எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா? தேங்க்யூ சோ மச் ஃபார் எவ்ரிதிங்” என்று மனம் நெகிழ்ந்துச் சொல்ல அவன் அவளுக்கு குட் நைட் சொல்லிவிட்டு காரை எடுத்தான். அவன் செல்லும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அன்றைய நாளின் இனிய நிகழ்வுகளை அசைப்போட்டபடி லிஃப்டை நோக்கிச் சென்றாள்.

**********************************************************************************

மறுநாள் ஸ்ராவணி அலுவலகத்துக்குச் சென்ற போது அங்கே வர்தன் மற்றும் ஹரி அவசரமாக கேமரா மைக்குடன் கிளம்புவதைக் கண்டவள் “எங்கடா இவ்ளோ வேகமா போறிங்க?” என்று கேட்க அவர்கள் இன்று முன்னாள் முதலமைச்சரின் மருந்து கொள்முதல் ஊழல் வழக்கின் இறுதி தீர்ப்பு வரப் போவதால் கோர்ட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றனர்.

ஸ்ராவணி விஷ்ணுவின் கேபின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றவள் அவனுக்கு ஒரு குட் மார்னிங் சொல்லிவிட்டு பூர்விக்கு வழக்கம் போல ஒரு புன்னகையை பரிசளித்தாள்.

“சீஃப் இந்த கேஸ்ல ஃபார்மர் சி.எம்கு பனிஷ்மெண்ட் குடுப்பாங்க ஓகே. பட் வாட் அபவுட் மிஸ்டர் பார்த்திபன்? அவரு அப்ரூவரா மாறி லாஸ்ட் ஹியரிங்ல ஸ்டேட்மெண்ட் குடுத்துட்டாருல. அப்போ அவருக்கும் சிவியர் பனிஷ்மெண்ட் குடுப்பாங்கலா?” என்று கேட்க

விஷ்ணு இல்லையென்று மறுத்தவன் “அக்யூஸ்ட் அளவுக்கு அப்ரூவருக்கு சிவியர் பனிஷ்மெண்ட் இருக்காது வனி. பட் அவருக்கும் நடந்த தவறை மறைச்சதுக்கான குறைஞ்ச பட்ச தண்டனை கிடைக்கும்” என்றுச் சொல்ல ஸ்ராவணியின் மனம் இந்தச் சூழ்நிலையை அபிமன்யூவின் குடும்பத்தார் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ என்று கலங்கத் தொடங்கியது.

ஆனால் அதற்கு எதிர்மறையாகப் பார்த்திபன் கோர்ட்டுக்கு கிளம்பும் போதே சுபத்ராவிடம் “சுபிம்மா! இன்னைக்கு ஜட்ஜ்மெண்ட் வரப் போகுது. வாசுதேவன் அளவுக்கு இல்லைனாலும் எனக்கும் பனிஷ்மெண்ட் குடுப்பாங்க. நீ எதையும் நெனைச்சு மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. போன தடவை நான் குற்றவாளியா ஜெயிலுக்குப் போனேன். இந்த தடவை செஞ்ச தவறுக்கான தண்டனையை அனுபவிக்க தான் போறேன். நான் வெளியே வர்றப்போ எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாம வருவேன். நீயும் இனிமே என்னை நினைச்சு வருத்தப்பட வேண்டியது இல்லை” என்று மனைவிக்கு தைரியம் சொன்னார்.

அடுத்து நின்ற மகன்களிடம் “உங்க அம்மாக்கு துணையா இருந்து வீட்டைப் பார்த்துக்கோங்கடா. சகாவையும் பத்திரமாப் பார்த்துக்கோங்க” என்றுச் சொன்னவரை இருவரும் அணைத்துக் கொண்டனர். சகாதேவன் அண்ணனை கண்ணீர் மல்க பார்த்தபடி “சீக்கிரமா வந்துடுங்க அண்ணா. நீங்க இல்லாம தனியா இந்த உலகத்தை ஃபேஸ் பண்ணுற தைரியம் எனக்கு எப்போவுமே இல்லை” என்றுச் சொல்லி அண்ணனின் கரங்களை அழுத்தினார்.

அவரின் முதுகைத் தட்டிக் கொடுத்தபடி ஜனனியின் முன் நெற்றியில் முத்தமிட்டவர் “நல்லா படிக்கணும் சரியா” என்றுச் சொல்ல அவள் தலையாட்டினாள்.

அஸ்வின் காரை எடுத்துவர அபிமன்யூவுடன் வெளியே வந்த பார்த்திபன் மனைவி, தமயன் மற்றும் மகளை நோக்கிப் புன்னகைத்தபடி காரில் ஏறிக்கொள்ள அபிமன்யூவும் அவருடன் அமர கார் கோர்ட்டை நோக்கிச் சென்றது.

பார்த்திபன் சொன்னது போலவே அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்காகச் சிந்திக்க வேண்டிய நபர் தன்னுடைய சுயநலத்துக்காக மருந்து கொள்முதலில் ஊழல் செய்து அந்த தவறை மறைக்கவும் திட்டமிட்டதற்காக வாசுதேவனுக்கு ஆயுள் சிறையும் பெரியளவில் அபராதமும் விதிக்கப்பட்டது. இருவரும் கையோடு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட பார்த்திபனைக் கண்ட அபிமன்யூவும், அஸ்வினும் உடைந்துப் போயினர். என்ன தான் வளர்ந்த ஆண்மகன்களாக இருந்தாலும் அவர் அவர்களின் தந்தை அல்லவா!

கனத்த மனதுடன் வீட்டுக்குச் செல்லாமல் அலுவலகத்துக்குச் சென்ற இருவரும் தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டனர்.

அதே நேரத்தில் ஸ்ராவணியோ அலுவலகத்தில் அமைதியை இழந்து தவித்தாள். தீர்ப்பை தொலைக்காட்சியில் பார்த்தவள் இந்நேரம் அபிமன்யூவும், அஸ்வினும் என்ன மாதிரி மனநிலையுடன் இருப்பார்களோ என்று வருந்தியவள் சுபத்ராவுக்குப் போன் செய்ய அபிமன்யூவும், அஸ்வினும் இன்னும் வீடு திரும்பவில்லை என்றுச் சொல்ல அவர்களது அலுவலகத்தில் தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்தாள் அவள். உடனே அலுவலகத்துக்கு அரைநாள் விடுப்பு எடுத்துவிட்டு அபிமன்யூவின் அலுவலகத்துக்குச் செல்லத் தயாரானாள்.

கேள்வியாய்ப் பார்த்த மேனகாவிடம் “மேகி இந்த ஜட்ஜ்மெண்டை நினைச்சு அவன் உடைஞ்சுப் போயிருப்பான். இப்போ நான் அவன் கூட இருக்கிறது ரொம்ப அவசியம். நீ ஒன்னு பண்ணு! நீயும் ஹாஃப் டே லீவ் போட்டுட்டு சுபி ஆன்ட்டியையும் , ஜானுவையும் போய் பாரு. நான் அவங்க ரெண்டு பேரையும் வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றேன்” என்று அவள் கிளம்ப மேனகாவும் விஷ்ணுவிடம் அனுமதி பெற்று அரைநாள் விடுப்பு எடுத்துவிட்டு சுபத்ராவின் வீட்டை நோக்கிச் சென்றாள்.