🖊️துளி 44👑

காலம் வேகமாக உருண்டோட அவர்களின் விவாகரத்து வழக்குக்கான நாளும் அருகில் வந்துவிட்டது. அதன் இறுதி ஹியரிங்கிற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில் தான் ஸ்ராவணியின் பிறந்தநாள் வந்தது. எப்போதுமே அவளது பிறந்தநாளை பெரிதாகக் கொண்டாடுவதில் அவளுக்கு விருப்பம் இருந்ததில்லை.

காலையில் எழுந்து சீக்கிரம் குளித்துவிட்டுக் கோயிலுக்குச் சென்றுவந்து வீட்டில் வேதா செய்துவைத்திருக்கும் ஸ்பெஷலான இனிப்பைச் சுவைப்பது, பின்னர் மாலையில் குடும்பத்தோடு ஹோட்டலில் டின்னர், இது தான் அவளைப் பொறுத்தவரை பிறந்தநாள் கொண்டாட்டம். அந்த வருடமும் அதையே பின்பற்ற எண்ணி எழுந்தவளின் நாசியை நிறைத்தது கிச்சனிலிருந்து வந்த நெய்யின் மணம்.

அதை வாசம் பிடித்துக் கொண்டே சென்றவள் மேனகா அடுப்பில் எதையோ கிண்டிக் கொண்டிருப்பதை கண்டதும் “என்ன பண்ணுற மேகி?” என்க மேனகா அவளைப் பார்த்ததும் “முழிச்சிட்டியா வனி? வெரி வெரி ஹாப்பி பர்த்டே மை டியர் ஸ்ராவணி” என்று அணைத்துக் கொண்டாள்.

அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டே வாணலியைக் காட்டியவள் “நான் மைசூர்பாக் செய்றேன் வனி” என்று ஆர்வத்துடன் கூற ஸ்ராவணி அதை கிளற ஆரம்பித்தாள். அவளது கையிலிருந்த கரண்டியைப் பிடுங்கிவிட்டு “இதை நான் பார்த்துக்கிறேன். நீ போய் குளிச்சிட்டு ரெடியாகு. நம்ம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயிட்டு வந்துடுவோம்” என்று அவளைக் குளிக்க விரட்டினாள்.

ஸ்ராவணியும் குளித்து முடித்து பிறந்தநாளுக்காக வைத்திருந்த புதிய சேலையைக் கட்டிக் கொண்டு தயாராக மேனகா அதற்குள் மைசூர்பாகுடன் சேர்த்து காலையுணவையும் தயார் செய்து முடித்துவிட்டாள். அவள் குளித்துத் தயாராகவும் இருவரும் பக்கத்திலிருக்கும் கோயிலுக்குச் சென்று வந்தனர்.

வீட்டுக்கு வந்தவர்கள் காலையுணவை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருக்கும் போது ஷ்ரவனிடமிருந்து கால் வரவே சாப்பிட்டுக் கொண்டே பேசினர். வினிதா அவளின் குழந்தையைக் காட்ட அதனுடைய பூஞ்சிரிப்பில் இலயித்த ஸ்ராவணி “செல்லக்குட்டி அத்தைக்கு பர்த்டே விஷ் பண்ண வந்திங்களா?” என்று கொஞ்சிக் கொண்டபடி பேசி முடிக்க வேதா வழக்கம் போல இருவருக்கும் நூறு பக்கத்துக்கு அறிவுரை வழங்கிவிட்டு சுப்பிரமணியம் கண்டிப்புப் பார்வை பார்த்ததும் போனை வைத்தார்.

சிறிது நேரத்தில் ஜனனி போன் செய்து வாழ்த்த ஸ்ராவணி அவளுக்கு எப்படி தெரியும் என்ற யோசனையுடன் அவளுக்கு நன்றி கூற சுபத்ரா ஜனனியிடமிருந்துப் போனை வாங்கிக் கொண்டார்.

“ஹலோ! ஸ்ராவணி நான் சுபத்ரா பேசுறேன்டா. பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று மனதார வாழ்த்த ஸ்ராவணி “தேங்க்யூ ஆன்ட்டி” என்று அவருக்கு நன்றி தெரிவித்தாள். சுபத்ரா மதியவுணவுக்கு இருவரையும் அழைக்கவே ஸ்ராவணி தயங்க அவளிடமிருந்து போனை வாங்கிய மேனகா இருவரும் கட்டாயமாக வருவோம் என்றுப் பேசிமுடித்து விட்டுப் போனை வைத்துவிட்டாள்.

கேள்வியாகப் பார்த்த ஸ்ராவணியிடம் “அன்பா கூப்பிடுறப்போ வேண்டானு சொல்லாதே வனி. அவங்க ஹஸ்பெண்ட் பசங்கலாம் எப்பிடியோ அது நமக்குத் தேவையில்லை. ஆனா சுபி ஆன்ட்டியும் ஜானுவும் ரொம்ப நல்லவங்க. அவங்களுக்காக நம்ம போகலாம்” என்று விளக்கவுரை கொடுக்க

ஸ்ராவணி கிண்டலாக “அவங்க பசங்க எப்பிடியோவா? மேகி நெஜமாவே உனக்குத் தெரியாதா?” என்றுக் கேட்க மேனகா எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டுச் சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

ஸ்ராவணிக்கும் அவள் மனதில் நினைப்பது நன்றாகப் புரிந்ததால் அதற்கு மேல் அவளைக் கேலி செய்ய வேண்டாமென்று எண்ணியவளாய் சாப்பிட்டு முடித்தவள் மேனகாவுடன் பார்த்திபனின் வீட்டை அடைந்தாள்.

ஜனனி இருவரின் வருகைக்காக காத்திருந்தவள் அவர்களைக் கண்ட்தும் “பெரியம்மா ! வனிக்காவும், மேகிக்காவும் வந்துட்டாங்க” என்க சுபத்ரா இருவரையும் சிரித்தமுகமாக வரவேற்று உபசரிக்க அரவம் கேட்டு வெளியே வந்த பார்த்திபனுக்கும், சகாதேவனுக்கும் ஒரு வணக்கத்தைப் போட்டனர் மேனகாவும், ஸ்ராவணியும்,.

அவர்களும் அவர்கள் பங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஸ்ராவணி அதை மலர்ந்த முகத்துடன் ஏற்றுக் கொண்டாள். அதன் பின் ஜனனியுடன் வீட்டைச் சுற்றிப் பார்க்க அவர்கள் சென்றுவிட சுபத்ரா சமையலறையில் பணியாட்களைச் சமைக்கச் சொன்னவர் அவர்களை மேற்பார்வையிட ஆரம்பித்தார்.

ஹாலில் அமர்ந்திருந்த பார்த்திபனிடம் சகாதேவன் மெதுவாக “நம்ம அபிக்கு இந்தப் பொண்ணு பொருத்தமா இருப்பாள்ல அண்ணா?” என்று வினவ பார்த்திபன் செய்தித்தாளை மடித்துவைத்துவிட்டு “இதுல நம்ம முடிவு செய்றதுக்கு என்ன இருக்கு சகா? அவங்க தான் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு சொன்னாங்க. அப்புறம் அவங்களா தான் டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணிருக்கோம்னு சொன்னாங்க. இந்தக் காலத்துப் பசங்களைப் புரிஞ்சுக்கவே முடியறது இல்லைடா” என்றார் பெருமூச்சுடன்.

பெண்கள் மூவரும் ஜனனியின் அறையில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்க அபிமன்யூ, அஸ்வினைப் பற்றி பேச்சு திரும்பியது. அஸ்வினும் அபிமன்யூவும் எப்படி நண்பர்கள் ஆனார்கள் என்று ஜனனி விளக்கிச் சொல்ல அதைக் கதை கேட்பது போல கேட்டுக் கொண்டிருந்தனர் ஸ்ராவணியும், மேனகாவும். ஆனால் அதைக் கேட்டு முடித்ததும் அவர்களைப் பற்றி இருவர் மனதிலும் நல்லெண்ணம் பரவுவதைத் தடுக்கமுடியவில்லை.

சமையல் முக்கால்வாசி முடிந்த நிலையில் சுபத்ராவும் வந்து அவர்களுடன் பேச ஆரம்பித்துவிட நேரம் போவதே தெரியவில்லை. சுபத்ரா தங்களின் திருமணம் காதல் திருமணம் என்று சொல்ல ஸ்ராவணியாலும், மேனகாவாலும் அதை நம்ப முடியவில்லை. அந்த காலத்திலேயே காதலித்து மணம் முடித்ததை ஆச்சரியமாகப் பார்த்தனர் ஸ்ராவணியும் மேனகாவும்.

ஜனனி ஓடிச் சென்று பெரியப்பா பெரியம்மாவின் திருமணப் போட்டோக்கள் கொண்ட ஆல்பத்தைக் காட்ட அதைப் பார்த்த மேனகா “வாவ் ஆன்ட்டி! நீங்க இதுல எவ்ளோ அழகா இருக்கிங்க?” என்று வியந்தபடியே பார்க்கத் தொடங்கினாள்.

அடுத்து குழந்தைகளின் போட்டோக்களாக இருக்க அதை யாரென்று ஸ்ராவணி கேட்க அது அபிமன்யூ என்று சொல்ல அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மேனகா அவளின் காதுக்குள் “ரொம்ப சிரிக்காத வனி. எல்லா நைண்டீஸ் கிட்ஸோட போட்டோ ஆல்பத்திலயும் இந்த மாதிரி போஸ்ல போட்டோஸ் இருக்கும். நம்ம கிட்டவும் இருக்கு” என்று நினைவுப்படுத்த அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் பணியாள் வந்து உணவு தயாராக இருப்பதாகச் சொல்ல சுபத்ரா அவர்கள் மூவரையும் கீழே செல்ல சொல்லிவிட்டு மகன்களின் போனுக்குத் தொடர்பு கொள்ள அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வரவே அலுவலக எண்ணை அழைத்தார். அதிலும் பதிலின்றிப் போகவே போனை வைத்துவிட்டு கீழே வந்தார். ஹாலில் அரட்டையடித்துக் கொண்டிருந்த பார்த்திபனையும், சகாதேவனையும் சாப்பிட வருமாறு சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மூன்று பெண்களுக்கும் பரிமாற ஆரம்பித்தார்.

பார்த்திபனும் சகாதேவனும் அவர்களுடனே அமர்ந்து சாப்பிடத் தொடங்க பார்த்திபன் ஸ்ராவணியிடம் “மருமகளே உங்க அம்மா அப்பா எப்போ அமெரிக்கால இருந்து இந்தியா வர்றாங்க?” என்று நயமாக வினவ

அவள் சாப்பிட்டுக் கொண்டே “இப்போ தான் என் அண்ணாவோட குழந்தைக்கு மூனு மாசம் ஆயிருக்கு. இன்னும் மூனு மாசம் கழிஞ்சதும் வருவாங்க அங்கிள்” என்று சொல்ல அவர் சுபத்ராவை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தார். ஜனனி ஏதோ வினவ அதற்கு பதிலளித்தபடி சாப்பிட்டு முடித்தனர் ஸ்ராவணியும், மேனகாவும்.

மதியவுணவுக்குப் பின் பார்த்திபனும், சகாதேவனும் ஓய்வெடுக்கச் சென்று விட தாங்களும் கிளம்புவதாக எழுந்தனர் ஸ்ராவணியும், மேனகாவும். சுபத்ரா அவர்களிடம் கொஞ்சம் நிற்குமாறுச் சொல்லிவிட்டு அவரின் அறைக்குச் சென்றவர் திரும்பி வரும்போது அவரின் கையில் ஒரு சிறியபெட்டியுடன் வந்தார்.

அதைத் திறந்து அதிலிருந்த இரண்டு கெட்டியான வளையல்களை எடுத்தவர் ஸ்ராவணியிடம் கையை நீட்டுமாறு சொல்ல அவள் தயக்கத்துடன் நின்றாள். அவரோ “இது எனக்கு வரப் போற மருமகளுக்காக நான் வாங்குனதுடா. அதனால தான் உன் கையில போட்டுவிட ஆசைப்படுறேன்” என்க மேனகா புன்னகைத்தபடி “வனி கையை நீட்டுடி. அதான் எல்லாம் சரியாயிட்டு தானே.  இன்னும் உனக்கு என்ன தயக்கம்?” என்று மெதுவாகச் சொல்ல ஸ்ராவணி தன்னுடைய கரங்களை நீட்டினாள்.

சுபத்ரா மகிழ்ச்சியுடன் அவளின் கரத்தில் அந்த வளையல்களை மாட்டிவிட்டு அழகு பார்க்க ஜனனி போனுடன் வந்தவள் “ஹலோ பியூட்டிஃபுல் லேடீஸ்! ஸ்மைல் பிளீஸ்” என்க மூவரும் மகிழ்ச்சியுடன் இதழ் விரிக்க அவள் அதை செல்ஃபியாகப் பதிவு செய்தாள்.

அதன் பின் ஸ்ராவணியும் மேனகாவும் ஜனனியிடம் போட்டோவை வாட்சப் செய்துவிடுமாறு சொல்லிவிட்டுக் கிளம்ப சுபத்ராவும், ஜனனியும் அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டுக்குள்  சென்றனர்.

அவர்கள் சென்று சில மணித்துளி இடைவெளியில் வீட்டுக்கு வந்துச் சேர்ந்தனர் அபிமன்யூவும், அஸ்வினும். வந்தவர்களிடம் ஜனனி ஏதோ சொல்லப் போக அதற்குள் சுபத்ரா அவர்களைச் சாப்பிட வருமாறு சொல்ல இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

சுபத்ரா பரிமாற ஆரம்பிக்க அஸ்வின் “வாவ்! மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? இவ்ளோ ஐட்டம்ஸ் சமைச்சிருக்கிங்க?” என்று ஆர்வமாகக் கேட்டபடிச் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்ட அபிமன்யூவும் ஒரு வாய் சாதத்தை அள்ளி வாயில் வைத்தவன் அடுத்து அவனது அன்னை சொன்ன வார்த்தையில் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான்.

சுபத்ரா அஸ்வினிடம் “அது ஒன்னும் இல்லடா அச்சு! இன்னைக்கு என் மருமகளுக்கு பிறந்தநாள். அதான் இவ்ளோ ஐட்டம்ஸ் சமைச்சு அவளுக்கு ஒரு மினிவிருந்து குடுத்து அனுப்புனேன்” என்று சாதாரணமாகச் சொல்ல அஸ்வினும் இதைக் கேட்டு அதிர்ந்து தான் போனான்.

அபிமன்யூ “மா! அது யாரு மருமகள்? அச்சுவுக்கு எதும் பொண்ணு பார்த்திருக்கிங்களா?” என்று மெதுவாகக் கேட்க அஸ்வின் கடுப்புடன் அபிமன்யூவின் காதைக் கடித்தபடி “டேய் என் லைஃப்ல ஏன்டா ஃபுட்பால் விளையாட நினைக்கிற?” என்றுச் சொல்ல

அபிமன்யூ “அது இல்ல அச்சு. அம்மாவுக்கு மருமகள்னா அது உன்னோட பொண்டாட்டியா தானே இருக்கணும்” என்றான் சாதாரணமாக. அஸ்வின் “டேய் உன் பொண்டாட்டியும் அவங்களுக்கு மருமகள் தான்டா” என்றான் ஒரு முறைப்புடன்.

சுபத்ரா அவர்களுக்குள் பேசிக்கொள்வதை ஓரக்கண்ணால் பார்த்தபடியே “இன்னும் எவ்ளோ நாள் தான் நான் ஒருத்தியே உங்க ரெண்டு பேரையும் கவனிச்சிட்டு இருக்கிறது? அதனால தான் நான் அபிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா முடிவு பண்ணிப் பொண்ணும் பார்த்துட்டேன். பொண்ணொட அப்பா அம்மா வெளிநாடு போயிருக்காங்க. இன்னும் மூனு மாசத்துல அவங்க திரும்பி வந்ததும் கல்யாணம்” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு அவர்களின் எதிர் இருக்கையில் அமர்ந்தார்.

அபிமன்யூவுக்கு சாப்பாடு தொண்டைக்குழியில் இறங்க மறுத்து தர்ணா செய்யவே தண்ணீரைக் குடித்துவிட்டு தலையை உலுக்கிக் கொண்டான். ஜனனிக்கு அண்ணனின் நிலையைப் பார்க்க பாவமாக இருக்கவே அவனிடம் விஷயத்தை விளக்கிவிட்டாள்.

“அண்ணா பெரியம்மா வனிக்கா பத்தி தான் பேசுறாங்க. இன்னைக்கு அவங்களுக்கு பர்த்டே. சோ பெரியம்மா நம்ம வீட்டுக்குச் சாப்பிட கூப்பிட்டிருந்தாங்க. மேகிக்காவும், வனிக்காவும் வந்து சாப்பிட்டிட்டுப் போயிட்டாங்க. பெரியப்பா தான் வனிக்காவோட பேரண்ட்ஸ் வந்ததும் உங்க மேரேஜ் பத்தி பேசிமுடிக்கலாம்னு பெரியம்மா கிட்டச் சொன்னாங்க” என்றுச் சொல்ல அவனுக்கு சந்தோசத்தில் காற்றில் பறப்பது போல இருந்தது.

மகிழ்ச்சியில் முகம் விகசிக்க “மா! ஐ லவ் யூ சோ மச்” என்று அவரை ஓடிச் சென்றுக் கட்டியணைத்து அவரின் கன்னத்தில் முத்தமிட அவர் அவனது கன்னத்தைக் கிள்ளி உதட்டில் வைத்துக் கொண்டபடி “போதும்டா போய் சாப்பிடு” என்க அவன் சந்தோசமாகத் தட்டைக் காலி செய்யத் தொடங்கினான்.

அஸ்வின் கொஞ்சம் சத்தமாகவே “நான் தப்பிச்சேன்டா சாமி” என்க அதைக் கேட்டவர்கள் சத்தமாகச் சிரிக்க கலகலப்பான உரையாடலுடன் மதியவுணவு முடிந்தது.

அபிமன்யூ சாப்பிட்டு விட்டுத் தனது அறைக்கு வந்தவன் தனக்குத் தானே

“டேய் நீயெல்லாம் லவ் பண்ணுறேனு வெளியே சொல்லிடாதேடா! அவளோட பர்த்டே கூட உனக்குத் தெரியல! சரி இப்போவும் லேட் ஆகல. போய் அவளுக்கு விஷ் பண்ணிடு” என்றுச் சொல்லிக் கொண்டான்.

“சும்மா விஷ் பண்ணுனா நல்லாவா இருக்கும்? ம்ஹூம்! நான் விஷ் பண்ணுற விதத்துல அவ அப்பிடியே மெய்மறந்து போயிடணும்” என்றுச் சிந்தித்தவன் அஸ்வினிடம் சில ஏற்பாடுகளைச் செய்ய சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அதே நேரம் வீடு திரும்பிய ஸ்ராவணி சுபத்ராவின் அன்பில் நெகிழ்ந்தவளாய் கைவளைகளைத் தடவிக் கொடுத்தபடி அவளின் அறையில் அமர்ந்திருக்க மேனகா இருவருக்கும் கிண்ணத்தில் மைசூர்பாக்கைக் கொண்டு வந்தாள். ஸ்ராவணியிடம் கொடுத்துவிடுத்துத் தானும் ஒரு கிண்ணத்துடன் அமர்ந்தவள் “என்ன வனி! ஒரே டிரீம் போல” என்று கேலி செய்ய ஸ்ராவணி தலைகுனிந்துச் சிரித்தபடியே கிண்ணத்தை எடுத்துக் கொண்டாள்.

மைசூர்பாக்கைச் சாப்பிட்டுக் கொண்டே “மேகி சுபத்ரா ஆன்ட்டி ரொம்ப ஸ்வீட்ல! எவ்ளோ கேரிங் அண்ட் லவ்லியான பெர்சன்” என்றுச் சிலாகிக்க

மேனகா அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே “சுபத்ரா ஆன்ட்டி மட்டும் தான் ஸ்வீட்டா இல்ல அவங்கப் பையனுமா?” என்று கேலி செய்ய ஸ்ராவணி சிரித்தபடியே “கண்டிப்பா அவங்க பசங்களும் ஸ்வீட் தான். அதுவும் ரெண்டாவது பையன் இருக்கானே அவனை மட்டும் நான் ஸ்வீட் பாய் இல்லனு சொன்னா இங்க கண்ணாடி போட்ட ஒருத்தி காளி அவதாரத்துக்கு மாறிடுவா” என்று மேனகாவின் காலை வாரிவிட இவர்களின் கேலி கிண்டலுடன் அன்றைய பகற்பொழுது இனிமையாகக் கழிந்தது.

இருட்ட ஆரம்பித்ததும் ஸ்ராவணி அவர்களின் பூஜையறையில் இருந்த வெங்கடேச பெருமாளின் முன் இருந்த சிறுவிளக்கை ஏற்றியவள் நேரம் போகாமல் பால்கனியின் நின்று தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். மேனகா இரவுணவுக்காக கிச்சனை உருட்டிக் கொண்டிருந்தாள்.

ஸ்ராவணியின் போன் அடிக்கவே “வனி உனக்கு போன்” என்றாள் கிச்சனிலிருந்தபடி. ஸ்ராவணி போனை எடுத்தவள் திரையில் அபிமன்யூவின் எண்ணைப் பார்த்ததும் அவன் ஏன் அழைக்கிறான் என்ற கேள்வியுடன் போனை காதில் வைத்தாள்.

“ஹலோ”

“வனி! கொஞ்சம் கீழே இறங்கிவா. உன் கிட்ட கொஞ்சம் பேசணும். மினிஸ்டர் ஜெகதீசனோட பையனைப் பத்தி”

“அப்பிடியா? இதோ ரெண்டே நிமிசம்” என்றுச் சொல்லி போனை வைத்தவள் கிச்சனிலிருந்த மேனகாவிடம் “மேகி நான் கீழே போய்ட்டு ஒரு பத்து நிமிசத்துல வந்துடுறேன்” என்றுச் சொல்லிவிட்டு லிஃப்டை நோக்கிச் சென்றாள்.

தரைத்தளத்தை அடைந்தவள் மனதிற்குள்ளே “கடவுளே அபி அவன் கிட்ட இருக்கிற டேட்டாஸ் அண்ட் எவிடென்சை என் கிட்ட குடுத்துடணும். பிளீஸ்” என்று வேண்டியபடி சுற்றி முற்றிப் பார்க்க அங்கே அவன் இல்லை.

அந்த அப்பார்ட்மெண்ட்வாசிகளுக்காக உருவாக்கப்பட்டிருந்த பார்க்கில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்க அங்கே அவனைத் தேடியவள் அவன் இல்லாது போகவே அப்பார்ட்மெண்ட் பிரதான வாயிலுக்கு வந்து அவனை போனில் அழைக்க ரிங் மட்டும் போய்க் கொண்டிருக்க அவன் போனை எடுக்கவில்லை.

ஒரு வேளை தெருமுனையில் நிற்கிறானோ என்று சிறிது தூரம் நடந்துச் சென்றவளை இடிப்பது போல வந்தது ஒரு கார். அவளது அருகில் அது நிற்க அதிலிருந்து ஒரு கரம் நீண்டு அவளை இடையோடு அணைத்து உள்ளே இழுத்துக் கொள்ள ஸ்ராவணிக்கு பெரும் அதிர்ச்சி.

தன்னை இழுத்தவனை கொலை செய்யுமளவு ஆத்திரத்துடன் திரும்பியவள் அங்கே டிரைவர் சீட்டில் இருந்தவனைக் கண்டதும் முறைப்புடன் “நீயா?” என்க

“நானே தான்” என்றுச் சொன்னபடி அவளுக்குச் சீட்பெல்ட்டை மாட்டிவிட்டவன் அபிமன்யூ. அவள் நம்ப முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க “போலாமா?” என்றுக் கேட்டபடி அவன் காரை ஸ்டார்ட் செய்யப் போக அவள் சாவியை எடுத்துக்கொண்டபடி “இப்போ எதுக்குடா என்னை பயமுறுத்துன?” என்று முறைத்தாள்.

அவன் “இதுக்குப் பேரு சர்ப்ரைஸ் வனி” என்று அவளிடம் கார்ச்சாவியைக் கேட்க அவள் தர மறுத்தவளாய் “என்னை எங்கே தான் கூட்டிட்டுப் போக போற?” என்று பதிலுக்குக் கேள்வி கேட்க அவன் அவள் புறம் திரும்பி அமர்ந்தான்.

“நான் உன்னை கிட்னாப் பண்ணிட்டுப் போகப் போறேன்” என்றான் கண்ணை உருட்டியபடி. அவள் அசந்த நேரத்தில் அவளிடமிருந்துச் சாவியைப் பறித்தவன் காரை ஸ்டார்ட் செய்ய ஸ்ராவணி மேனகா தனியாக இருப்பாள் என்றுச் சொல்ல சீக்கிரமே கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்று உறுதியளித்தபடி காரை அவனது பீச் ஹவுஸை நோக்கிச் செலுத்தினான் அவன். ஸ்ராவணி கிண்டலாக “கழுதை கெட்டா குட்டிச்சுவருங்கிறது உனக்குத் தான் பொருந்தும். ஆ ஊனா அங்கே போயிடுறது” என்றுச் சொல்ல அவன் சிரித்தபடியே காரைச் செலுத்தினான்.