🖊️துளி 41👑

மழை சென்னைக்கு நல்லது செய்ததோ இல்லையோ அபிமன்யூவின் காதலுக்கு ஒரு பெரிய நல்லதைச் செய்துவிட்டுப் போனது. அன்றைய நிகழ்வுக்குப் பிறகு சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிட கிச்சனில் நின்று கொண்டிருந்த ஸ்ராவணி அவனை விலக்கிவிட்டு முதல் காரியமாக போனை சார்ஜில் போட்டுவிட்டு வந்தாள். ஏனெனில் மழையை நினைத்து வேதாவும், வினிதாவும் ஏற்கெனவே பதறிப்போய் இருப்பர் என்பதால் சீக்கிரம் சார்ஜ் ஏறினால் அவர்களுக்கு போன் செய்து விவரத்தைக் கூறிவிடலாம் என்பது அவளின் எண்ணம்.

போனை சார்ஜில் போட்டவள் மேனகாவிடம் “மேகி மதியம் சாப்பாட்டுக்கு என்னடி பண்ணுறது? இந்த மழை நின்னா தான் வெளியே போக முடியும் போல இருக்கு. அப்போ கூட தெருவுல இருக்கிற தண்ணி வடியணுமே” என்று யோசனையுடன் கூற

மேனகா “வெறும் சாதத்தைப் பொங்கிச் சாப்பிட வேண்டியது தான். வேற என்ன பண்ண?” என்று சொல்லிவிட்டுக் கிச்சனுக்குள் ஏதாவது இருக்கிறதா என்று ஆராயச் சென்றாள். அவளுக்கு கிடைத்தது என்னவோ இன்ஸ்டெண்ட் லெமன் சாதப் பொடி மட்டுமே. ஸ்ராவணியிடம் எலுமிச்சைச்சாதம் செய்துவிடலாம் என்று கூறிவிட்டாள்.

அதன் பின் நால்வரும் பேசிக்கொண்டே காலையுணவை முடிக்க மேனகா கிச்சனுக்குள் சமைப்பதற்காகச் சென்று விட ஸ்ராவணி அவளது அம்மாவுக்கும் அண்ணிக்கும் போன் செய்து மழை குறைந்துவிட்டதாகச் சொல்லி பேசிக் கொண்டிருந்தாள்.

அஸ்வினும் சுபத்ராவுக்குக் கால் செய்து தாங்கள் சௌகரியமாக இருப்பதாகச் சொன்னவன் மேனகா கிச்சனிலிருந்து வெளியே வர அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே “சாப்பாடு என்ன மம்மி சாப்பாடு? வெறும் நூடுல்ஸ் தான். அதுவும் டேஸ்ட் வெரி வெரி ஆவரேஜ் தான். எல்லாம் எங்க தலையெழுத்து மம்மி” என்று ஒரேயடியாக மேனகாவின் சமையலைக் குறைச் சொல்ல அவள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.

அவனை முறைத்தவாறே கிச்சனுக்குள் நுழைந்தவள் “இந்த அடைமழையில நூடுல்ஸே பெரிய விஷயம். இதுல இவனுக்கு அது ஆவரேஜா தெரியுதா?” என்று முணுமுணுத்துக் கொண்டே குக்கரில் வெயிட்டைப் போட்டாள்.

அஸ்வின் அவள் பின்னோடு கிச்சனுக்குள் நுழைந்தவன் “லன்சாவது சாப்பிடுற மாதிரி இருக்குமா? இல்ல அதுவும் ஆவரேஜ் தானா?” என்றபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொள்ள

மேனகா அவனைக் கடுப்புடன் பார்த்தபடி “ஆமா! விருந்து சமைச்சுக் குடுக்கிறதுக்கு இவரு மறுவீட்டுக்கு வந்த மாப்பிள்ளை பாரு, சத்தமில்லாம குடுக்கிறதைச் சாப்பிட்டிட்டு போயிட்டே இருக்கணும்” என்று கரண்டியைக் காட்டி எச்சரித்தாள்.

அஸ்வின் சுதாரித்தவனாக “நான் உனக்கு எதாச்சும் ஹெல்ப் பண்ணவானு கேக்க தான் வந்தேன் மேகி. இதுக்கு எதுக்கு கரண்டிலாம் எடுத்துக்கிட்டு? அதை அப்பிடியே ஓரமா வைச்சிடு. கை வலிக்கப் போகுது” என்று சமாளித்தான்.

ஒருவழியாக அவளும் சமைத்து முடிக்க நால்வரும் மதிய உணவையும் முடித்துவிட்டு பால்கனியில் அமர்ந்து படிப்படியாக குறைந்து வந்த மழையை ரசிக்க ஆரம்பித்தனர். மேனகாவும் அஸ்வினும் மட்டுமே பேசிக் கொண்டிருக்க ஸ்ராவணி போனை நோண்டிக் கொண்டிருந்தாள். அபிமன்யூ கன்னத்தில் கைவைத்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வாறே நேரம் செல்ல மாலையில் மழை முழுவதுமாக நின்று தெருவில் இருக்கும் தண்ணீரும் ஓரளவுக்கு வடிந்திருந்தது.

அஸ்வின் வீட்டுக்குப் போன் செய்து தங்களுக்கு கார் அனுப்பி வைக்குமாறு சொல்லிவிட்டு “அபி ரெடியாகுடா! கார் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்” என்று சொல்ல அவன் முகம் விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தை போல் களையிழந்துவிட்டது.

முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டே அவன் தயாராக அதற்குள் மேனகா இருவருக்கும் பிளாக் டீ போட்டுக் கொண்டு வந்தாள். அதைக் குடித்தபடி ஹால் சோஃபாவில் கால் நீட்டி மடியில் லேப்டாப்பில் எதையோ டைப் செய்து கொண்டிருந்த ஸ்ராவணியை கண்களால் பருகினான் அபிமன்யூ. மேனகா அதைக் கண்டுகொண்டவள் அவன் தோளில் தட்டி “எம்.எல்.ஏ சார் உங்க கப்புல இருந்த டீ காலியாகி ரொம்ப நேரமாச்சு” என்க அவன் அசட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு அவனுடைய உடைமைகள் இருந்த பேக்கைத் தூக்கிக் கொண்டான்.

மேனகாவிடம் இருவரும் சொல்லிவிட்டு திரும்பி ஸ்ராவணியைப் பார்க்க அவள் லேப்டாப் ஸ்கிரீனில் முகம் புதைத்து இருக்கவும் மேனகாவின் வனி என்ற அழைப்பு அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது. என்ன என்பது போல பார்த்தவளிடம் அஸ்வின் “அப்போ நாங்க கிளம்புறோம் ரிப்போர்ட்டர் மேடம்” என்க அவள் சரியென்று தலையாட்டினாள்.

அபிமன்யூ அவளிடம் வந்தவன் “இந்த ஒரு நாள் உன் கூட இருந்தது எனக்கு எவ்ளோ ஹேப்பியா இருக்கு தெரியுமா? இதே மாதிரி ஒரு நார்மல் லைஃபை நம்ம கூடிய சீக்கிரமே வாழணும்ங்கிறது தான் என்னோட சின்ன ஆசை” என்று சொல்ல

ஸ்ராவணி புன்னகையுடன் “இது ஆசை இல்ல, பேராசை. பின்ன என்னவாம்? ரெண்டு அப்நார்மல் பெர்சன்ஸ் சேர்ந்து ஒரு நார்மல் லைஃபை வாழணும்கிறது அவ்ளோ ஈஸி இல்ல” என்று சொல்ல அபிமன்யூ மனதிற்குள் “அதானே எது பேசுனாலும் ஒரு கேட் போட்டுருமா” என்று சலித்தபடி அஸ்வினுடன் வெளியேறினான். அவர்கள் காரில் ஏறுவதை பால்கனியில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர் மேனகாவும், ஸ்ராவணியும்.

**********************************************************************************

அதன் பின்னர் சில நாட்களுக்கு அபிமன்யூவுக்கு சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் ஆரம்பித்துவிட்டதால் அவனுக்கு அதற்கே நேரம் சரியாக இருந்தது. அந்த வேலை போக மீதமிருந்த நேரத்தை அவனது வழக்கறிஞர் தொழில் விழுங்கிக் கொள்ளவே அவன் ஸ்ராவணியிடம் போனில் பேசுவதோடு சரி.

ஸ்ராவணிக்கும் விஷ்ணு கொடுத்த புதிய வேலைகள் இருக்கவே அவளால் அதை தாண்டி எதையும் சிந்திக்கவில்லை. அந்த வேலை விஷயமாக கிளம்பியவள் மேனகாவை சீக்கிரமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவளுடைய வேலையை முடிப்பதற்காக சில நபர்களை அவர்கள் அறியாவண்ணம் பின் தொடர்ந்து சென்று அவள் நினைத்தபடி வீடியோவும் எடுத்துவிட்டாள். ஆனால் அவள் எடுத்துவிட்டு கிளம்ப போகையில் அவள் சென்றிருந்த ஹோட்டலின் ஆட்கள் பார்த்துவிட ஸ்ராவணி பதறிப்போனவளாய் அங்கிருந்து வெளியேறி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

ஆனால் அவளுக்குப் பின் இன்னும் சிலர் தொடரும் காலடிச்சத்தம் கேட்கவே அவளுக்கு என்ன செய்வதென்று புரியாத நிலை. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த வழியில் செல்லும் ஆட்டோவை மறித்துப் பார்த்தபடியே தான் நடந்தாள் அவள். ஆனால் அவளின் கெட்ட நேரம் ஆட்டோ எதுவும் நிற்காமல் செல்லவே இதற்கு மேல் நடந்தால் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்தவள் வேகமாக ஓடத் துவங்க அவளைத் துரத்தியவர்களும் அவள் பின்னரே ஓடிவர அவர்களுக்கும் அவளுக்குமான தூரம் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்தது.

அவசரத்தில் போனை எடுத்தவள் மேனகாவுக்கு அழைக்க கால் போனது என்னவோ அபிமன்யூவுக்கு. அவன் அழைப்பை ஏற்றுவிட்டு “ஹலோ” என்று சொல்ல அதே நேரம் அவளும் “ஹலோ மேகி” என்று அவனது குரலைக் கூட கவனிக்காமல் படபடவென்று பேச ஆரம்பித்தாள்.

“மேகி நான் மினிஸ்டர் ஜெகதீசனுக்குச் சொந்தமான லின்னட் ஹோட்டலுக்கு பக்கத்துல இருந்து தான் பேசுறேன். நான் வீடியோ எடுத்ததை அவரு பையனோட ஆட்கள் பார்த்துட்டாங்க. அவங்க என் பின்னாடி தான் வர்றாங்கடி. எனக்குப் பயம்லாம் இல்ல. ஆனா இப்போ ஆதாரம் என் கிட்ட இருக்கு. அது அவங்க கைக்கு போயிடுமோனு தான் எனக்கு பயம் மேகி. ஹலோ..ஹலோ…மேகி நான் பேசுறது கேக்குதா?” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே கால் கட்டாக அவளுக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் அழிய கால்கள் வேரோட அங்கேயே நின்றுவிட்டாள் அவள்.

அவள் தைரியமாக தன் அருகில் வந்தவர்களை எதிர்கொள்ள அவர்களின் ஒருவன் “நீ எதுக்கும்மா அங்கே இருந்து ஓடிவந்த? நீ பக்கத்து டேபிள்ல இருந்து இந்த போன்ல எதையோ வீடியோ எடுத்ததை நான் பார்த்தேன். ஒழுங்கா அதை என் கிட்ட ஒப்படைச்சிட்டா நீ இங்கே இருந்து தாராளமாப் போகலாம்” என்று மிரட்ட அவளோ அப்பாவியாய் அவர்களை நோக்கினாள்.

“இல்ல அண்ணா! நான் ஃபேஸ்புக் லைவ் தான் போட்டுட்டிருந்தேன். என் ஃப்ரெண்ட் இந்த ஹோட்டலுக்குலாம் உன்னால போகமுடியாதுனு சேலஞ்ச் பண்ணுனா. அவளுக்கு ப்ரூவ் பண்ணுறதுக்கு தான் நான் வீடியோ லைவ் போட்டேன்”

“ஏய் பொய்யா சொல்லுற? அந்த போனைக் குடு” என்று அவன் பிடுங்கவும் அவள் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக நின்றாள். அவனுடன் போனில் அலசி ஆராய்ந்துப் பார்க்க அதில் வீடியோ எதுவும் இல்லாமல் போக அவளிடமே போனை வீசினான் அவன்.

அதை கேட்ச் செய்தவள் அங்கிருந்து நகர முற்பட அந்த ஆட்களில் ஒருவன் “அண்ணா அந்தப் பொண்ணோட பேக்கை செக் பண்ணுன்ணா. ஏதாச்சும் இருக்கும்” என்று எடுத்துக் கொடுக்க அவன் அவளது பேக்கைப் பிடுங்க வர அவள் அதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

அதில் எரிச்சல் அடைந்தவன் அவளிடமிருந்து பிடுங்க முயலுகையில் அவனுக்குப் போன் வந்தது. பேசி முடித்தவன் அவனுடன் வந்தவர்களிடம் “டேய் சார் இந்த பொண்ணை எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டாருடா. வாங்கடா போவோம்” என்று சொல்லி அவர்களை அழைத்துச் செல்லவும் ஸ்ராவணிக்கு அப்போது தான் மூச்சே வந்தது. இன்னும் அவளின் இதயம் இரயில்வண்டி போல தடதடக்க தான் செய்தது. பேக்கை நெஞ்சோடு அணைத்தபடி நின்றவளின் முதுகில் யாரோ கைவைக்க அதிர்ந்து போய் திரும்பினாள் ஸ்ராவணி.

அங்கே நின்றவனைக் கண்டதும் கூட்டத்தில் தொலைந்துப் போன குழந்தை தாயைக் கண்டதும் ஓடிச் சென்று அணைப்பது போல அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவளது முதுகை ஆதரவாய் தடவிக் கொடுத்தபடி அங்கே நின்றவன் அபிமன்யூ.

அவளது பதற்றத்தைப் போக்க எண்ணி “ரிப்போர்ட்டர் மேடம் ரொம்ப தைரியசாலினு நெனைச்சேன். பட் பயத்துல உன்னோட ஹார்ட்பீட் டிரம்ஸ் மாதிரி கேக்குறதை பார்த்தா என்னோட ஒபினியன் தப்பு போலயே” என்று சொல்ல அவள் சட்டென்று விலகி அவனுக்குப் பதிலடி கொடுக்க முயல அவன் அவளை மீண்டும் தன்னுடைய மார்பிலே சாத்திக் கொண்டபடி “எனக்கு கவுண்டர் குடுக்கணும் அவ்ளோ தானே. அதை இப்பிடி ஹக் பண்ணிட்டே கூட குடுக்கலாம் வனி” என்று அவளை அவனது பிடியிலே வைத்துக் கொண்டான்.

அவன் விடப்போவதில்லை என்பதை உணர்ந்தவள் “நான் ஒன்னும் பயப்படலையே! என் கிட்ட அவங்க சம்பந்தப்பட்ட எவிடென்ஸ் இருந்துச்சு. அதை என் கிட்ட இருந்து பிடுங்கிடுவாங்களோனு டென்சன் ஆயிட்டேன்” என்று பதிலளித்தாள்.

அபிமன்யூ அவளை விடுவித்தபடி காருக்குச் செல்லுமாறு கைகாட்டிவிட்டு அவனும் காரை நோக்கிச் செல்லுகையில் அவனுக்கு ஜெகதீசனிடம் இருந்து போன் வந்தது.

“ஹலோ தம்பி! நீ சொன்ன மாதிரி அந்தப் பொண்ணை என்னோட ஆளுங்க விட்டுட்டாங்க. நீ அந்த விவரத்தை இன்கம் டாக்சுக்கு…” என்று அவர் இழுக்க அவன் அலட்சியமான குரலில் “சரி சரி ரொம்ப கெஞ்சாதிங்க. நான் எப்போவும் அந்த விவரத்தை எங்கேயும் லீக் பண்ணுறதா இல்ல. ஆனா இனிமே உங்கப் பையன் அந்த ரிப்போர்ட்டரை எதாச்சும் பண்ண டிரை பண்ணுனா என்னோட முடிவும் மாறிடும்” என்று கடினமான குரலில் உரைத்துவிட்டு அவர் பேசிமுடிப்பதற்குள் போனை வைத்துவிட்டுக் காரை நோக்கிச் சென்றான்.

ஸ்ராவணியை நோக்கி புன்னகைத்தவாறே காரை எடுத்தவன் “சோ ரிப்போர்ட்டர் எவிடென்சை வைச்சு டாக்குமெண்ட்ரி போடப் போறிங்க! அப்பிடி தானே” என்க அவளும் தலையாட்டி அதை ஆமோதித்தாள்.

சட்டென்று “உனக்கு எப்பிடி நான் இங்கே இருக்கிறது தெரியும்? அந்த ஆளுங்க ஏன் என்னை ஒன்னும் பண்ணாம விட்டுட்டுப் போயிட்டாங்க” என்று கேள்வி மழையைப் பொழிய

அவன் பொறுமையாக “ஆன்சர் ஃபார் கொஸ்டீன் நம்பர் ஒன் நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணுனது எனக்கு தான். சோ நான் மினிஸ்டரை கூப்பிட்டுப் பேசி முடிக்க அவரு அவரோட பையன் கிட்ட பேசிட்டாரு. ஆன்சர் ஃபார் கொஸ்டீன் நம்பர் டூ அந்த மினிஸ்டரோட பையன் உன்னை எதுவும் பண்ணக் கூடாதுனு சொன்னதால அவங்க விட்டுட்டுப் போயிட்டாங்க” என்று பதிலுரைத்தபடியே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

அவள் “மினிஸ்டரை நீ என்ன சொல்லி மிரட்டுன?” என்று அடுத்த கேள்வியைக் கேட்க

“நீ இப்போ கலெக்ட் பண்ணுன டீடெய்ல்ஸை நான் இந்த கட்சிக்குள்ள அடியெடுத்து வைக்கிறதுக்கு முன்னாடியே கலெக்ட் அச்சுவை வச்சு கலெக்ட் பண்ணிட்டேன்” என்றான் அவன் சாதாரண குரலில்.

அவள் ஆச்சரியத்துடன் “இந்த டீடெய்ல்ஸ் உனக்குத் தெரியும்னா நீ ஏன் சம்பந்தப்பட்ட டிப்பார்ட்மெண்ட் கிட்ட அதை குடுக்கல?” என்று கேட்க

அவன் “டீடெய்லை அவங்க கிட்ட குடுக்கிறதால எனக்கு என்ன பெனிஃபிட்?” என்று பதிலுக்கு அலட்சியமாக அவளை நோக்கிக் கேட்டான்.

“அவங்க அவரை அரெஸ்ட் பண்ணுவாங்க. சட்டப்படி அவருக்குத் தண்டனை கெடைக்கும்” என்றாள் அவள் பிடிவாதமான குரலில்.

“அதால எனக்கு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்ல ஸ்ராவணி. அந்த டேட்டாஸ் என் வசம் இருக்கிறதால தான் அவங்க என்னோட கன்ட்ரோல்ல இருக்காங்க. இல்லைன்னா ஒரு முன்னாள் அமைச்சரோட பையனுக்கு ஒரு அமைச்சர் பயப்படுவாரா?” என்று அவனது பக்க நியாயத்தை உரைத்தான் அபிமன்யூ.

“பட் இதால அவரு இன்னும் நெறைய தப்பான வழியில சம்பாதிக்க வாய்ப்பு இருக்கு. இதை ஸ்டாப் பண்ணனும்னா…” என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் பேச்சை இடைமறித்தான் அபிமன்யூ.

“அப்பிடி நடக்க வாய்ப்பு  ரொம்ப கம்மி. ஆனா இந்த டேட்டாஸ் என் கிட்ட இருந்தா மட்டும் தான் அவங்க  எல்லாரோட பிடியும் என் கிட்ட இருக்கும். சோ நான் இதை எந்த டிப்பார்ட்மெண்ட் கிட்டவும் ஷேர் பண்ணிக்கப் போறதா இல்ல” என்று தீர்மானமாக கூற ஸ்ராவணியின் முகத்தில் உடன்பாடின்மை அப்பட்டமாகத் தெரிந்தது.

அவளைச் சமாதானப்படுத்த எண்ணியவனாய் ஒரு கையால் ஸ்டீயரிங் வீலை பிடித்தவன் மறுகையால் அவளது கரத்தைப் பற்றி அதில் முத்தமிட அவள் திரும்பி ஆச்சரியமாக பார்க்கையிலே “சாணக்கியர் என்ன சொல்லிருக்காரு தெரியுமா? இந்த உலகத்துல ஜெயிக்கணும்னா கொஞ்சம் வளைஞ்சு குடுத்து போகணும், ஏன்னா புயல் வர்றப்போ வளைஞ்சு குடுக்கிற தன்மை இருக்கிற நாணல் ஈஸியா தப்பிச்சிடும். ஆனா நேரா தான் நிப்பேனு அடம்பிடிக்குற மரங்கள் அடியோடச் சாய்ஞ்சிடும். எல்லா இடத்திலும் நேர்மையா இருக்கிற மனுசங்களும் அப்பிடி தான். சீக்கிரமா கீழே விழுந்துடுவாங்க” என்று சொல்லிக் கொண்டே அவளை நோக்கி புன்னகைத்தான் அபிமன்யூ.

ஸ்ராவணி புருவத்தை உயர்த்தியவளாய் “இஸிண்ட்? எனக்கு சாணக்கியநீதி சுத்தமா பிடிக்காது. அதை ஃபாலோ பண்ணுற ஐடியாவும் எனக்கு இல்ல” என்று பிடிவாதமாக உரைத்துவிட்டுச் சாலையை நோக்கினாள்.

அபிமன்யூ இலகுவான குரலில் “ஓகே! நீ நீயா இரு. நான் நானா இருக்கேன். நமக்குள்ள இந்த விஷயத்துல என்னைக்குமே ஒற்றுமை வரப் போறது இல்ல. சோ அதை தவிர மத்த டாபிக்கைப் பேசுவோம்” என்க ஸ்ராவணியும் அதை ஒத்துக் கொண்டாள். அவர்கள் பேசிக் கொண்டே பயணிக்க அவளது ஃபிளாட்டும் வந்துவிட்டது.

ஸ்ராவணி காரிலிருந்து இறங்கிவிட்டு அவனை நோக்கி “குட் நைட்” என்று சொல்ல அவனும் பதிலுக்கு தலையசைத்துவிட்டு காரை எடுத்தான். அவனது கார் தெருமுனையில் திரும்பும் வரை நின்று பார்த்துவிட்டு லிஃப்டை நோக்கி நடந்தாள் ஸ்ராவணி.