🖊️துளி 38👑

இரண்டு நாட்கள் அபிமன்யூவிடமிருந்து ஒரு போன் காலும் இல்லாததால் ஸ்ராவணி இனி அவன் தன்னைத் தேடி வர மாட்டான் என்ற நம்பிக்கையுடன் வழக்கம் போல தன்னுடைய வாழ்க்கையை வாழத் தொடங்கினாள். அவளது கவனம், நேரம் முழுவதையும் அவளது வேலையே எடுத்துக் கொள்ள அவளால் அதை மீறி வேறு எதையும் சிந்திக்க இயலவில்லை.

ஆனால் மேனகாவுக்கு மட்டும் அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை அளவுக்கு அதிகமாக இருந்தது. அதனால் அதைச் சொல்லி ஸ்ராவணியை கேலி செய்ய அவளோ பதிலுக்கு மேனகாவை நக்கலடித்து விட்டுச் சென்றாள். அலுவலகத்தில் ரகுவும் அதே கேலி கிண்டலுடன் ஸ்ராவணியைச் சீண்டிப் பார்க்க அதற்கு காரணமானவனின் வாயில் இருந்து ஒரு முத்து கூட உதிரவில்லை ஊட்டியிலிருந்து திரும்பிய பிறகு.

அதே நேரம் அமெரிக்காவில் வினிதாவுக்குப் பெண்குழந்தை பிறந்ததாக ஷ்ரவன் வீடியோ காலில் சொல்ல இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சுகப்பிரசவம் என்பதால் சீக்கிரமாக வினிதாவுக்கு மயக்கம் தெளிந்து விட அவளையும் குழந்தையையும் திரையில் காட்டியதும் ஸ்ராவணிக்கும் மேனகாவுக்கும் சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை.

அதிலும் குழந்தை ஷ்ரவனை உரித்துவைத்துப் பிறந்திருக்க கண் மூடி அது கொட்டாவி விட்ட அழகைக் கண்டு மயங்கிப் போயினர் தோழிகள் இருவரும். நீண்டநேரம் தொடர்ந்த அந்த உரையாடல் வேதா “போதும்! இனிமே நைட் பேசிக்கலாம்” என்று கண்டிக்க போனை வைத்தவர்கள் அன்று நாள் முழுவதும் குழந்தையின் அழகைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

தினமும் அலுவலகம் செல்வதும், அவர்களின் புதிய அசைன்மெண்டுக்காக அழைந்து திரிவதுமாக மொத்தத்தில் அவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் போய்க் கொண்டிருந்தது.

அதே நேரம் அபிமன்யூ ஊட்டியிலிருந்து திரும்பியவனின் சிந்தனை முழுவதையும் ஸ்ராவணியின் பேச்சு எழுப்பிவிட்ட கேள்விகளே ஆக்கிரமித்திருக்க அவனுக்கு இதில் தெளிவாக முடிவெடுக்க சில நாட்கள் தேவைப்பட்டது. இது வரை எந்த சீரியஸ் ரிலேசன்ஷிப்பிலும் தங்கிப் பழக்கம் இல்லாத அவனால் முதலில் ஸ்ராவணி மனம் மாறும் வரை காத்திருக்க முடியுமா என்பது அஸ்வினுக்கே சந்தேகம் தான்.

அபிமன்யூவுக்கோ ஸ்ராவணியின் “என்னோட புரஃபசனை தவிர வேற எதையும் நான் லவ் பண்ணுனது இல்ல. எனக்கு அதுக்கு டைமும் இல்ல, அது தான் உண்மை. இதுக்கும் மேலயும் எனக்கு லவ் வரும்னு என்னால கேரண்டி எதுவும் குடுக்க முடியாது” என்ற வார்த்தைகள் அவளுக்கு தன் மீது காதலே வராதோ என்ற பயத்தை ஒருபுறம் கொடுத்தாலும் மறுபுறம் அவனது வழக்கமான குணம் தலை தூக்குவதை தடுக்கமுடியவில்லை.

அவன் இதுவரை யாருக்காகவும் காத்திருந்தது இல்லை. கிரேசி சென்றதும் நான்ஸி என்று சுலபமாகச் கடந்துச் செல்ல முடிந்தவனால் இதையும் அப்படி கடந்து செல்ல முடியும் என்று ஒரு புறம் தோன்றினாலும் சில நேரங்களில் ஸ்ராவணியின் நினைவலைகளில் இருந்து அவனால் மீளமுடியவில்லை.

இந்த நிலையில் சுற்றுலாவை முடித்துவிட்டு அவனது குடும்பமும் திரும்பி விட தந்தை மற்றும் சித்தப்பாவின் உடல்நிலை தேறிவிட்டதைப் பார்த்து மகிழ்ந்தான் அபிமன்யூ. பார்த்திபனும் ஊர் திரும்பிய பிறகு கட்சிப்பணிகளில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள அபிமன்யூவும், அஸ்வினும் அவர்களது வழக்கறிஞர் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

நாட்கள் இவ்வாறு கடக்க ஒரு நாள் மேனகா ஷாப்பிங் மாலுக்கு சென்றவள் அங்கே அஸ்வினைச் சந்தித்தாள். அது எதிர்பாரா சந்திப்பு தான். இருந்தாலும் இருவருக்கும் வாதிட நிறைய விஷயங்கள் இருந்ததால் இருவரும் வேறு எதுவும் பேசிக் கொள்ளாமல் ஃபுட் கோர்ட்டின் இருக்கையில் அமர்ந்து ஆளுக்கு ஒரு ஃப்ரூட் ஜூசை ஆர்டர் செய்து விட்டு கையைக் கட்டி போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜூஸ் வரவும் மேனகா அதை வாங்கி அருந்தியபடியே “இப்பிடி உக்காந்து ஜூஸ் குடிக்கவா இங்க வந்துருக்கிங்க?” என்று கேட்டுவிட்டு அவனைப் பார்க்க

அவனும் “அதே கேள்வியை நானும் கேப்பேன் மேடம்” என்க மேனகா தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

பின்னர் மேஜையில் மீது இரு கைகளையும் வைத்து “எங்கே போனான் அந்த தேவதாஸ்? ஊட்டியில இருந்தப்போ உருகி வழிஞ்சிட்டு சென்னை வந்ததும் காணாம போயிட்டான். நல்லா கேட்டுக்கோ மேன், அவன் மட்டும் என் வனி லைஃப்ல எதாச்சும் கேம் ஆடலாம்னு நெனைச்சான், அவ்ளோ தான்” என்றாள் மிரட்டலாக.

அஸ்வின் அவளை அலட்சியம் செய்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் “நான் ஒன்னு சொல்லட்டுமா? இப்போ வரைக்கும் உன் ஃப்ரெண்ட் லைஃப்ல பெரிய கேம்  ஆடுனது நீ மட்டும் தான். அப்போ உன்னை என்ன பண்ணலாம்?” என்று என்றபடி அவனது சிகையைக் கோத மேனகா மேஜை மேல் வைத்திருந்த கைகளைக் கட்டிக் கொண்டு அவனை முறைக்க ஆரம்பித்தாள்.

அவளது முறைப்பைப் பொருட்படுத்தாமல் போனை நோண்டியபடியே “உன் ஃப்ரெண்ட் சொன்ன வார்த்தை அப்பிடிம்மா. என்னோட அபிக்கு இதை பத்தி யோசிக்க கொஞ்சம் டைம் வேணுமா இல்லையா?”  என்க

மேனகாவும் அவன் புறம் திரும்பாமல் “ஆமா அவன் பெரிய கவர்னர். நாங்க அவருக்காக காத்திருக்கணுமாக்கும். லிசன் மிஸ்டர் என்னோட வனி மாதிரி பொண்ணு பொண்டாட்டியா வர்றதுக்குலாம் உன்னோட ஃப்ரெண்ட் குடுத்து வச்சிருக்கணும். அவனைலாம் சும்மா குடுத்தா கூட யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க” என்று சொல்ல அஸ்வின் போனை சட்டென்று மேஜை மீது வீச அவள் திடுக்கிட்டுப் போனாள்.

“என்னோட அபி பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்துனாங்கன்னு உனக்கு தெரியாதும்மா. அதனால  வாய்க்கு வந்ததை உலறாம என்னை ஜூசை குடிக்க விடு” என்று சொல்லிவிட்டு ஜூஸ் டம்ளரை காலி செய்ய தொடங்கினான்.

மேனகா கடுப்புடன் “நான் இங்கே ரெண்டு பேரோட லைஃப் பத்தி கவலைப்பட்டிட்டுருக்கேன். உனக்கு ஜூஸ் தான் ரொம்ப முக்கியம் இல்ல! சரியான சோத்து மாடு” என்று சொல்ல அஸ்வின் டம்ளரை வைத்துவிட்டு நகைக்க ஆரம்பித்தான்.

“வாட்? சோத்து மாடா? எந்த ஊருல மாடு சோறு சாப்பிட்டுச்சு? கண்ணாடி போட்டவங்க எல்லாருமே இப்பிடி  அறிவாளியா தான் இருப்பிங்களோ?  திட்டுறதுல கூட ஒரு லாஜிக் இல்ல”

மேனகா முகத்தைச் சுளித்துவிட்டு “எங்க ஊருல மாட்டுக்குக் கூட சோறு தான்டா போடுவோம். நீ சினிமால மட்டும் தான் கிராமத்தை பார்த்திருப்ப போல. அதான் உனக்கு தெரியல” என்று சொல்லி அவனைக் கேலி செய்தாள்.

அவனைக் கேலி செய்தவாறே எழுந்தவள் பின்னால் வந்த ஒரு ஆடவனை தெரியாமல் இடித்துவிட அவன் சுதாரித்துக் கொண்டு நிற்க மேனகா பதறிப்போய் அவனிடம் மன்னிப்பு கேட்டாள். அவனும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் நகர்ந்தவன் அஸ்வின் அருகில் செல்லும் போது அவளை மோசமான வார்த்தைகளில் ஏதோ சொல்லி நண்பர்களுடன் சேர்ந்து சிரித்துக்கொண்டே செல்ல அஸ்வினுக்கு எங்கே இருந்து அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை.

அவன் அமர்ந்திருந்த நாற்காலியைத் தூக்கி அந்த கேவலமான பிறவியின் முதுகில் கோபத்துடன் வீச அவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். இவை அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட மேனகா கண் இமைக்க மறந்தவளாய் அஸ்வின் அந்த கேடு கெட்டவனை புரட்டி எடுப்பதை வேடிக்கை பார்க்க அதற்குள் ஃபுட் கோர்ட்டின் இன்சார்ஜ் வந்து அவனை அஸ்வினிடம் இருந்து காப்பாற்றிவிட்டார்.

அவன் அவரை விலக்கியபடி அந்த கேவலமானவனின் சட்டைக்காலரை பிடித்து “உன்னோட வீட்டுல உங்க அம்மாவோ, அக்காவோ இல்ல தங்கச்சியோ உன் மேல தெரியாம மோதுனா கூட நீ இப்பிடி தான் வர்ணிப்பியோ? உன்னை நான் சும்மா விட மாட்டேன்டா. கால் த போலீஸ் ரைட் நவ்” என்க அந்தப் பையனது நண்பர்கள் அவனுக்காக மன்னிப்பு கேட்க மேனகாவுக்கே அவர்களைக் காண பாவமாக இருந்தது.

அஸ்வினிடம் “அவங்களை விட்டுருப்பா, பாவம்” என்க அவனும் அந்தப் பையனது சட்டைக்காலரை விட்டவன் “இனிமே உன் வாழ்க்கையில எந்தப் பொண்ணையும் மோசமா பேசக்கூடாது” என்று எச்சரித்தவன் அவன் நண்பர்களிடம் “போகுறப்போ அவனுக்கு ஸ்பைனல் கார்ட்ல எதும் காயம் இருக்கானு ஸ்கேன் பண்ணிப் பார்த்துட்டுப் போங்கடா” என்று இலவச அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தான்.

மேனகா அவனது தோளைத் தட்டி அழைத்தவள் “அது என்ன சாருக்கு இவ்ளோ கோவம்? காரம் அதிகமா சாப்பிடுவியோ? பார்ரா மூக்கு கூட சிவந்துருக்கு கோவத்துல” என்று அவனை கேலி செய்ய அவன் கடுப்புடன் அவளை முறைக்க அவள் தோளிலிருந்து கையை எடுத்துக் கொண்டாள்.

அவன் அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியான முகத்துடன் ஆனால் குழப்பமான மனதுடன் அங்கிருந்து நகர மேனகா “சரியான ஆங்ரி பேர்ட்” என்று முணுமுணுத்தபடி அவளது வழியைப் பார்த்து நடக்க ஆரம்பித்தாள்.

**********************************************************************************

இது நடந்து சில வாரங்கள் கடந்திருக்க அன்று ஞாயிறு என்பதால் இரவுணவைச் சீக்கிரமாக  மேனகாவும் ஸ்ராவணியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.  அன்று மாலையிலிருந்து வானிலை திடீரென மாறிவிட்டதால் எதற்கும் வானிலைச் செய்திகளைப் பார்ப்போமே என்று ஸ்ராவணி டிவியைப் போட மேனகா “வனி! நான் வெதர்மேன் போஸ்டை பாக்கிறேன்டி. அவர் சொன்னா கரெக்டா இருக்கும்” என்று போனை நோண்ட ஆரம்பித்தாள்.

வானிலை அறிக்கை, வெதர்மேனின் போஸ்ட் இரண்டுமே சொன்னது ஒரே ஒரு விஷயத்தை தான்.

“வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது”

இருவரும் பால்கனியில் சென்று வெளியே எட்டிப் பார்க்க தெருமுனையில் இருக்கும் மரங்கள் காற்றில் போடும் ஆட்டமே புயலில் வீரியத்தைச் சொல்லாமல் சொல்ல ஸ்ராவணி “டிசம்பருக்கும் சென்னைக்கும் ஆகவே ஆகாதுப் போல! மேகி இது எப்போ கரையைக் கடக்கப் போகுதுனு தெரியலையே” என்றாள் கவலையுடன்.

காற்று பலமாக வீசுவதால் மின்கம்பங்கள் சாயும் அபாயம் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் மின்சாரம் துண்டிக்கப் படலாம் என்று செய்தியில் சொல்ல இருவரும் சீக்கிரமாகத் தூங்கச் சென்றனர்.

செய்தியில் சொன்னபடியே புயலின் வேகத்தில் சிறிது நேரத்தில் மழை வேகமாகப் பெய்யத் தொடங்க அதில் சிக்கிக் கொண்டனர் அபிமன்யூவும், அஸ்வினும். கார் மிகவும் தவறான நேரத்தில் ஆனால் சரியான இடத்தில் பழுதாகிப் போய் நின்றது. ஆம்! அவர்களின் கார் பழுதாகிப் போய் நின்ற இடத்துக்கு சற்றுத் தள்ளி தான் ஸ்ராவணியின் ஃபிளாட் இருந்தது.

அஸ்வின் “அபி! நம்ம வேணும்னா ரிப்போர்ட்டர் கிட்ட ஹெல்ப் கேக்கலாம்டா” என்க

அபிமன்யூ மறுத்து “ஊட்டியில இருந்து வந்ததுல இருந்து அவ கிட்ட முகம் குடுத்துப் பேசாம இருந்துட்டு இப்போ ஹெல்ப் கேட்டுட்டு போனா அவ என்ன நினைப்பா?” என்று பிடிவாதமாக அவளிடம் உதவி கேட்க வேண்டாமென்று அடம் பிடித்தபடி மழையில் நனைந்தபடி நின்றான்.

“மரத்துக்கு அடியில தானே அச்சு நிக்குறோம். நோ பிராப்ளம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மரத்தின் கிளை முறிந்து காரின் மீது விழ அஸ்வின் அபிமன்யூவை வேகமாக இழுத்ததால் அவன் தலை தப்பித்தது.

“டேய் கொஞ்சம் விட்டுருந்தா உனக்கு கபாலமோட்சம் கிடைச்சிருக்கும்டா. ஒழுங்கா என் கூட வா. எதுவும் பேசாத அபி” என்று காரை பூட்டிவிட்டு அப்பார்ட்மெண்டை நோக்கி அவனுடன் நடந்தான் அஸ்வின்.

மின்சாரத்துண்டிப்பால் லிஃப்ட் வேலை செய்யாமல் போகவே படிக்கட்டுகளில் நடந்து ஸ்ராவணியின் வீடு இருக்கும் தளத்தை அடைந்தனர் இருவரும். அஸ்வின் கதவைத் தட்ட அபிமன்யூ இன்னும் சங்கடத்துடனே கதவின் முன் நின்றான்.

உள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஸ்ராவணி இந்த நேரத்தில் யாரென்ற யோசனையுடன் டேபிள் விளக்கைப் போட அது எரியவில்லை.

“பவர் போச்சா? கேண்டில் எங்கே இருக்குனு  தெரியலையே?” என்று புலம்பியபடி மேனகாவை எழுப்ப அவளோ அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள். ஸ்ராவணி மொபைலில் டார்ச்சை ஆன் செய்தவள் அதன் உதவியுடன் படுக்கையறையை விட்டு வெளியே வந்தவள் தட்டுதடுமாறியபடி கதவைத் திறக்க இருளில் வெளியே நின்ற உருவங்கள் நிழலுருவங்களாகத் தெரிய “யாரு?” என்றபடி மொபைல் டார்ச்சை அடித்தபடி பார்க்க அங்கே நின்ற அஸ்வினும் அபிமன்யூவும் அவள் கண்ணில் பட்டனர்.

அந்த மிதமான வெளிச்சத்தில் தூக்கம் கலைந்தும் கலையாமலும் இருந்த கண்களுடன் முகத்தில் அசைந்தாடும் முடிக்கற்றைகளுடன் நின்றவள் அவன் கண்ணுக்கு தேவதையாகத் தெரிய அபிமன்யூவை அறியாமல் அவன் கை அவளது முகத்தில் விழும் முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கிவிட உயர்ந்தது.