🖊️துளி 37👑
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
ஸ்ராவணியும் மேனகாவும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு ஸ்ராவணி களைப்பாக இருப்பதாகக் கூறிவிட்டு உறங்கச் செல்ல மேனகா அவரகளது உடைமைகளை எடுத்துவைக்கத் தொடங்கினாள். அவள் லக்கேஜை எடுத்து வைக்கும் போதே உள்ளே வந்த பூர்வியும் மானஸ்வியும் ஸ்ராவணி உறங்குவதைப் பார்த்துவிட்டு மேனகாவிடம் அவள் உடல்நலம் குறித்து விசாரிக்க மேனகா சாதாரண காய்ச்சல் தான் என்று கூற இருவரும் அவளிடம் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
மேனகா மருத்துவமனையில் நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்ல பூர்வி அனைத்தையும் கேட்டுவிட்டு பெருமூச்சுடன் “இவங்க பிரச்சனை வேதா ஆன்ட்டி வர்றதுக்குள்ள முடிஞ்சுடணும் மனு. என்னோட கவலையே அது தான்” என்று மானஸ்வியிடம் சொல்லிக் கொண்டாள்.
அடுத்து பேச்சு மேனகாவைப் பற்றிச் செல்லவும் அவள் “என்னைப் பத்தி நீங்க கவலைப்படவே வேண்டாம். நான் லவ், மேரேஜ் இது எதுலயும் மாட்டிக்காம சேஃப் ஜோன்ல டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கேன்பா. இப்பிடியே லைஃப் லாங் இருந்துடுவேன்” என்று கண்ணை உருட்டிச் சொல்ல அதைக் கேட்டுச் சிரித்தனர் மானஸ்வியும் பூர்வியும்.
அதே நேரம் அபிமன்யூ சிபுவுக்குப் போன் செய்துவிட்டு அவனது அலுவலகத்திற்கு அஸ்வினுடன் வந்து அவனைச் சந்தித்தான்.
“ப்ரோ நீங்க சொன்ன ஐடியா சூப்பரா வொர்க் அவுட் ஆயிடுச்சு. அதான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு அப்பிடியே சென்னை கெளம்புறதையும் சொல்லிட்டுப் போலாம்னு வந்தோம். பை த வே இவன் அஸ்வின், என்னோட உடன்பிறப்பு, ஃப்ரெண்ட் எப்பிடி வேணாலும் வச்சிக்கலாம்” என்று கையோடு அஸ்வினையும் அறிமுகப்படுத்த சிபு புன்னகையுடன் அவனது கையைக் குலுக்கினான்.
பின்னர் அபிமன்யூவைப் பார்த்து “இங்கப் பாருங்க எம்.எல்.ஏ கல்யாணத்துக்கு மறக்காம கூப்பிடுங்க. சென்னை போனதும் அப்பிடியே மறந்துடக் கூடாது” என்க
அபிமன்யூ ஒரு புன்னகையுடன் “எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆயிடுச்சு ப்ரோ” என்று சொல்லவும் சிபுவுக்கு ஒரு மினி ஹார்ட் அட்டாக்கே வந்துச் சென்றது.
குழப்பத்துடன் அபிமன்யூவைப் பார்த்தவன் “அதான் ஆல்ரெடி கல்யாணம் ஆயிடுச்சுல்ல, அப்போ எதுக்குய்யா அந்தப் பொண்ணை டிஸ்டர்ப் பண்ணுற? இந்த மண்ணாங்கட்டிக்கு நான் ஐடியா வேற குடுத்துட்டேனே! என்னைப் பார்த்தா உனக்கு எப்பிடி தெரியுது?” என்று எகிற ஆரம்பிக்க அஸ்வின் தான் அவனைக் கையமர்த்தினான்.
“ப்ரோ ப்ரோ! பிளீஸ் கோவப்படாதிங்க! அவன் சொல்ல வர்றதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க”
“என்ன தப்பா புரிஞ்சுகிட்டேன்? இதுக்கு தான் அரசியல்வாதியை நம்பவே கூடாதுனுவான் என்னோட விச்சு. அது கரெக்டா தான் இருக்கு” என்றான் சிபு கடுப்புடன்.
அவனது பேச்சில் அயர்ந்த அபிமன்யூ அவனைச் சமாதானப்படுத்தாமல் அஸ்வினை நோக்கி “டேய் அச்சு இந்த உலகம் ஏன்டா என்னைத் தப்பாவே நினைக்குது?” என்றான் பரிதாபமாக.
சிபு அதற்கெல்லாம் அசராமல் “இப்பிடி ஒன்னும் தெரியாத பையனாட்டம் முகத்தை வைக்காதய்யா! இதைப் பார்த்து தான் நான் ஏமாந்துட்டேன்” என்க அபிமன்யூ அவன் கையைப் பிடித்துக் கொண்டு “ப்ரோ கொஞ்சம் பொறுமையா கேளுங்க. எனக்கு கல்யாணம் ஆனது உண்மை தான். பட் என்னோட ஒய்ஃப் ஸ்ராவணி தான். எங்க ரெண்டு பேருக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் ஆயிடுச்சு” என்று மூச்சுவிடாமல் ஒப்பித்து முடிக்கச் சிபு அவனை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு அவனது கையை விலக்கிவிட்டான்.
“பட் ப்ரோ இந்த கல்யாணம் நாங்களே எதிர்பார்க்காம நடந்த விஷயம்” என்று நடந்த நிகழ்வுகளை அவனிடம் கொட்டியவன் “இப்போ எங்களுக்குள்ள இருக்கிர மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் கிளியர் ஆயிடும்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு ப்ரோ. பட் வனி சொன்ன சில விஷயங்கள் கொஞ்சம் சென்சிடிவ் ஆனது. அதை யோசிக்க எனக்கு டைம் வேணும். மத்தப்படி எல்லாமே இப்போ நார்மல் ஆயிடுச்சு. அதுக்கு நீங்க குடுத்த ஐடியா தான் காரணம்” என்று சொல்லிவிட்டு அவனை அணைத்துக் கொண்டான் அபிமன்யூ.
அதன் பின் சமாதானமான சிபுவும் அவனது தோளில் தட்டிக்கொடுத்தபடி “சீக்கிரமா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுற நியூஸோட வா ப்ரோ. நான் அதுக்காக காத்திருப்பேன்” என்று சொல்லிவிட்டு இருவருக்கும் கை கொடுத்து வழியனுப்பி வைத்தான்.
***********
ஸ்ராவணி நன்றாகத் தூங்கிவிட்டு மதியம் எழுந்தவள் முகம் மட்டும் கழுவிவிட்டு வந்தாள். மாடியிலிருந்து இறங்கிவந்தவளைக் கண்டதும் அவள் அருகில் ஓடிவந்து கட்டிக் கொண்ட தர்ஷனிடம் “தர்ஷ்! அக்காக்கு ஃபீவர்டா. நீ பக்கத்துல வந்தா உனக்கு ஒட்டிக்கும்” என்று சொல்ல அவன் அது எதையும் சட்டை செய்யாமல் அவளையே ஒட்டிக்கொண்டு நடந்து அவள் அமர்ந்த சோஃபாவில் அவளது அருகில் உராய்ந்தபடி அமர்ந்து கொண்டான்.
மானஸ்வி இதைக் கண்டு கலகலவென்று நகைத்தவள் “தர்ஷ்! வனி அக்காவை உனக்கு அவ்ளோ பிடிச்சிருக்காடா?” என்று கேட்க அவன் ஆமென்று தலையாட்டியவன் ஸ்ராவணியின் கையைப் பிடித்து “நான் பெரிய பையனா ஆனதும் வனி அக்காவை தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று சொல்லி அவளது கழுத்தைக் கட்டிக்கொள்ள அந்த அறையில் சிரிப்பலை.
சிரிப்பலை ஓய்ந்ததும் சிபுவின் பாட்டி சுந்தரி அவனிடம் கேலியாக “டேய் நீ பெரிய பையனா ஆனதும் வனி அக்காவுக்கு வயசு ஆயிடும்டா” என்க அவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு “அப்பிடில்லாம் ஆகாது பியூட்டி. வனி அக்கா அப்போவும் அழகா தான் இருப்பாங்க” என்று சொல்ல மீண்டும் சிரிப்பலை.
இதைக் கேட்ட பூர்வி “அதுல்லாம் ஓகே தர்ஷ்! ஆனா அக்காவை நீ கட்டிக்க மாமாவோட சம்மதம் வேணுமே” என்று நக்கலடிக்க தர்ஷன் பாவமாக ஸ்ராவணியைப் பார்த்து “வனிக்கா அப்போ நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்களா?” என்று சொல்லி உதட்டைப் பிதுக்கி அழுவதற்கு தயாராக ஸ்ராவணி அவனது பப்ளிமாஷ் கன்னங்களை கிள்ளி முத்தமிட்டுக் கொண்டபடி “யாரு சொன்னாடா அப்பிடி? நான் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன். இதை தடுக்க எந்த மாமா, நோமா வந்தாலும் பார்த்துக்கலாம்” என்று சொல்ல அவன் அவளைக் கட்டிக் கொண்டான்.
இந்த காட்சியைக் கண்ட ரகு “வனி ஆத்துக்காரர் அருகில் இல்லாத தைரியத்துல பேசாத. அவரோட ஒற்றர்ப்படை இங்கே தான் இருக்கு” என்று சொன்னபடி அருகிலிருக்கும் அனுவின் தலைக்கு மேல் கையைக் காட்ட மேனகா வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க ஆரம்பிக்க சுலைகா ரகுவின் கையில் ஒரு அடி போட்டுக் கையைக் கீழே இறக்குமாறு கண் காட்டினாள்.
அவனது கிண்டலில் வழக்கம் போல ஸ்ராவணி வெகுண்டவளாய் “உன் வாயில பெட்ரோலை ஊத்தணும்டா. ஆத்துக்காரராம் ஆத்துக்காரர். இன்னொரு தடவை சொன்னேனு வையேன், நீ செத்த ரகு” என்று அவள் மிரட்டும் போது அரவிந்துடன் வந்துச் சேர்ந்தான் விஷ்ணு.
அரவிந்த் அவர்கள் சேனலின் கோயம்புத்தூர் கிளையின் தலைமைப்பொறுப்பில் இருந்து வந்தான். அவனைக் கண்டதும் ரகு, அனு, ஸ்ராவணி, மேனகா மற்றும் சுலைகா மரியாதை நிமித்தமாக எழ அவன் “ஹேய் கய்ஸ்! என்னப்பா இது? பிளீஸ் சிட் டவுன்” என்றபடி அமர விஷ்ணு பூர்வியிடமும் அவனது அப்பாவிடமும் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி விலாவரியாகப் பேச ஆரம்பித்தான்.
ஒரு வழியாக அனைவரும் ஹாலில் ஆஜராகி விட்டதால் விஷ்ணுவின் அன்னை அனைவரையும் மதிய உணவுக்கு அழைக்க அந்நேரம் சிபுவும் வந்துவிட அனைவரும் ஒன்றாக அமர்ந்து கதைகளைப் பேசி சிரித்தவண்ணம் சாப்பிட ஆரம்பித்தனர்.
சாப்பிட்டு முடித்ததும் மானஸ்வி ஸ்ராவணியிடம் மாத்திரை போட்டுவிட்டாளா என்று விசாரிக்க அவளோ இன்னும் இரண்டு மணிநேரத்தில் பேருந்தில் பயணிக்க வேண்டியிருப்பதால் இப்போது போடவில்லை என்று பதிலளித்துவிட்டு அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.
அதன் பின் நேரம் கடகடவென்று ஓட அனைவரும் சென்னைக்குச் செல்ல தயாராக விஷ்ணுவும் பூர்வியும் தாங்கள் இன்னும் ஒரு வாரம் கழித்து வருவதாகச் சொல்ல ஷிவானிக்குச் சந்தோசம். ஸ்ராவணி அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப விஷ்ணுவின் பாட்டி மற்றும் வீட்டின் பெண்மணிகள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு விஷ்ணுவின் தந்தை மற்றும் சித்தப்பாக்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
விஷ்ணுவின் குடும்பத்தினர் வாசல் வரை வந்து வழியனுப்ப மானஸ்வி ஸ்ராவணியிடம் “நாங்க நெக்ஸ்ட் டைம் சென்னைக்கு வர்றது உன்னோட மேரேஜுக்காக தான் இருக்கணும்” என்று சொல்ல அவள் அருகில் நின்று கொண்டிருந்த சிபு “க்கும்! அவளுக்கு கல்யாணம் ஆகி பல நாள் ஆச்சுடி சோடாபுட்டி” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் புன்னகை முகமாக அனைவருக்கும் டாட்டா சொல்லி அனுப்பிவைத்தான்.
**********************************************************************************
பேருந்தில் ஏறியதும் ஸ்ராவணியுடன் மேனகா அமர்ந்து கொள்ள ரகு மற்றும் வர்தன் அவர்களுக்கு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். சுலைகாவும் அனுராதாவும் மூவர் அமரும் இருக்கயில் ஓரமாக அமர்ந்து கொள்ள அறுவரும் கலகலப்பாக உரையாடிக் கொண்டே வந்தனர். எப்போதுமே ரகு இருக்கும் இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது என்பதால் சிறிது நேரத்தில் பக்கத்து இருக்கைக்காரர்களும் அவர்களின் பேச்சில் கலந்து கொள்ள அந்த பயணமானது மிகவும் இனிய பயணமாக மாறிப்போனது.
மறுநாள் அதிகாலையில் சென்னையில் சென்று இறங்கிய போது ரகுவும் வர்தனும் ஒரே வீட்டில் இருப்பதால் ஒன்றாகப் போய்க்கொள்வதாகச் சொல்ல அனுராதா, சுலைகா இருவரையும் மேனகா தங்களின் ஃபிளாட்டுக்கு வந்து காலையில் வீட்டுச் சென்று கொள்ளுமாறு சொல்லவே அவர்கள் நால்வரையும் ஒரு கால்டாக்சியில் ஏற்றிவிட்டப் பின்னர் ரகுவும் வர்தனும் கிளம்பினர்.
அனுவும் சுலைகாவும் மிகவும் களைப்பாக இருந்ததால் உறங்கிவிட ஸ்ராவணி முந்தைய நாள் நன்றாக உறங்கிவிட்டதால் தூக்கம் வராமல் பால்கனியில் சென்று நின்றாள்.
“ஃபீவர் இன்னும் முழுசா குணமாகலை வனி. நீ எதுக்கு குளிர் காத்துல வந்து நிக்கிற?” என்றவாறு வந்து சேர்ந்தாள் மேனகா.
அவளைப் பார்த்து முறுவலித்த ஸ்ராவணி “இது என்னோட ஃபேவரைட் பிளேஸ்ல. நான் ரொம்ப மிஸ் பண்ணுனேன் மேகி” என்றவாறு இன்னும் புலராத பொழுதின் அழகை ரசிக்க ஆரம்பித்தாள்.
மேனகா அவளையே பார்த்துக் கொண்டிருந்தவள் மெதுவாக “வனி நீ என்ன முடிவு பண்ணிருக்க?” என்று கேட்க
ஸ்ராவணி இவ்வளவு நேரம் இருந்த ரசனைப்பார்வை மாற தீவிரமான முகபாவத்துக்கு மாறினாள். யோசனையுடன் “அவன் எனக்காக வெயிட் பண்ணுறேனு சொல்லிருக்கான். நானும் சரினு சொல்லிட்டேன்” என்றாள்.
மேனகா ஆச்சரியத்துடன் ஏதோ சொல்ல வர அவளை இடைமறித்தவள் “மேகி நீ சீரியஸாக வேண்டிய அவசியம் இல்ல. அவன் கிட்ட நான் சில கண்டிசன்ஸ் சொல்லிருக்கேன். கண்டிப்பா அவன் அதுக்குலாம் ஒத்துக்க மாட்டான். சோ இனிமே அவனை நினைச்சு வொர்ரி பண்ணிக்க வேண்டாம். அது மட்டுமில்லாம அவனைப் பத்தி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவன் எந்த பொண்ணுக்காகவும் காத்திருந்தது இல்ல.
இப்போ நான்ஸியை எடுத்துக்கோ, அவளுக்கும் அவனுக்கும் பிரேக் அப் ஆனதுக்கு அப்புறம் அவன் அவளைப் பத்தி யோசிக்கவோ அவளுக்காகக் காத்திருக்கவோ செய்யல. நான்ஸினு இல்ல, அவனோட எல்லா கேர்ள் ஃப்ரெண்ட்ஸுக்கும் அவன் ஒரு லிமிட்டுக்கு மேல அவனோட வாழ்க்கையில் இடம் கொடுக்கல. அந்த ரூல் எனக்கும் பொருந்துமில்ல. அவனால வெயிட் பண்ண முடியாம அவனே என் கிட்ட வந்து வனி நம்ம ரெண்டு பேருக்கும் செட் ஆகாதுனு சொல்லுவான். அதுக்கு தான் நான் வெயிட் பண்ணுறேன்” என்று உறுதியாகச் சொல்ல மேனகா திகைத்தாள்.
“வனி எந்த விஷயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கும். நீ சொல்லுற இந்த விஷயத்தை வேற கோணத்துல யோசிச்சு பாரு. நீ சொல்லுற அத்தனை லாஜிக்கையும் தாண்டி அவன் நீ தான் வேணும்னு வந்து நின்னா என்ன பண்ணுவ?” என்று கேட்க
ஸ்ராவணி “அவன் அப்பிடி சொல்லுவானு எனக்குத் தோணலை. அப்பிடி சொன்னா மனு அக்கா சொன்ன விஷயம்லாம் உண்மைனு நான் நினைச்சுப்பேன்” என்று அவளுக்கு பதிலுரைத்தாள். மேனகாவைப் பார்த்தபடி “அவங்க சொன்னாங்க, இந்த உலகத்துல பிளட் ரிலேசன்ஷிப் இல்லாம நம்ம மேல அக்கறை காட்டுறது ரெண்டே பேரு தானாம். ஒன்னு ஃப்ரெண்ட்ஸ், இன்னொன்னு நம்மளை காதலிக்கிறவங்க. எப்பிடி ஃப்ரெண்ட்சை சந்தேகப்படக் கூடாதோ அதே மாதிரி நம்ம மேல உயிரா இருந்து நம்மளை காதலிக்கிறவங்களையும் சந்தேகப்படக் கூடாதாம். பார்க்கலாம். அவங்கச் சொல்லுறது நடக்குமானு” என்று பெருமூச்சை இழுத்துவிட கிழக்கில் ஆதவனும் தன் பொன்னிற கதிர்களால் பூமிப்பெண்ணைத் தழுவத் தொடங்கியிருந்தான்.