🖊️துளி 34👑

ஸ்ராவணியிடமிருந்து மேனகாவைப் பிரித்து அழைத்துச் சென்ற அஸ்வின் அவனது காரில் அவளை அமர்த்திவிட்டு அவனும் கூடவேச் சேர்ந்து அமர்ந்து கொண்டான். மேனகா உம்மென்று அமர்ந்திருக்கவும் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் “ஹலோ நான் ஒன்னும் உன்னை கிட்நாப் பண்ணிக் கூட்டிட்டு வரல. நீ அங்கே இருந்தா அவங்க ஃப்ரீயா பேசிக்க முடியாதேனு தான் கூட்டிட்டு வந்தேன். சோ கொஞ்சம் இந்த சோகமான ரியாக்சனை மாத்து” என்றான் கிண்டலாக.

மேனகா “நான் கூட நீ மறுபடியும் திட்ட தான் கூட்டிட்டு வந்தியோனு பயந்துட்டேன்” என்றாள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி. அதற்கு அவன் சிரிப்பது அவள் பார்வையில் வட்டத்தில் விழவே “ரொம்ப சிரிக்காதே ஓகேயா? என்னை இது வரைக்கும் யாருமே திட்டுனது கிடையாது. எங்க மாமா என்னைத் திட்டுறதுக்கு யாரையும் அலோ பண்ணதும் கெடயாது. ஆனா நீ என்ன பேச்சு பேசுன? என்னமோ நான்லாம் பொண்ணே இல்லங்கிற மாதிரி எவ்ளோ கழுவி ஊத்துன?” என்றாள் வருத்தத்துடன்.

அஸ்வின் அவளது முகத்தைக் குறுகுறுவென்று பார்த்தபடி “ஓ ஐ சீ! அப்போ நான் உன்னைத் திட்டுனது அவ்ளோ தூரம் உன்னைப் பாதிச்சிருக்குனு சொல்ல வர்ற” என்க

அவள் அந்த கேலியைக் கவனிக்கதாவளாய் “ஆமா! நான் ஒன்னும் வேணும்னு இப்பிடிலாம் பண்ணல. எனக்கு எங்க மாமான்னா அவ்ளோ பிடிக்கும் தெரியுமா? உன் ஃப்ரெண்ட் எங்க வீட்டை வாங்குனதால அவரு மனசளவுல எவ்ளோ உடைஞ்சுப் போனாரு தெரியுமா? என்னால அதைப் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியல” என்றுச் சொல்ல

அஸ்வின் கேலியாக “அதனால மேடம் ஓடிப் போய் அபிக்கும் ஸ்ராவணிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டிங்க. அப்பிடி தானே” என்றுச் சொல்லிவிட்டு அவளது பதிலுக்காகக் காத்திருக்க அவள் அமைதியாக வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

அவளது அமைதியைக் கலைக்க எண்ணி “அது என்ன கல்யாணம்னா உனக்கு அவ்ளோ அலட்சியம்? வெறுப்பு? நீ என்ன பத்து கல்யாணம் பண்ணி அனுபவப்பட்டுட்டியா என்ன?” என்றவனை அமைதியாகப் பார்த்தவள் ஒரு பெருமூச்சோடு “புத்திச்சாலிங்க அடுத்தவங்கச் செஞ்ச தப்புல இருந்து பாடம் கத்துக்குவாங்கனு எங்க மாமா அடிக்கடி சொல்லுவாரு. நானும் அப்பிடி தான். என் அக்கா செஞ்ச தப்புல இருந்து பாடம் கத்துக்கிட்டேன்” என்று சொன்னபடி அவளது வேடிக்கைப் பார்க்கும் வேலையைத் தொடர்ந்தாள்.

அவளுக்கு அக்காவா என்று அஸ்வின் வியக்க மேனகா “ஒன்னு இல்ல, எனக்கு ரெண்டு அக்கா. ஒருத்தி ஸ்ராவணியோட அண்ணாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு யூ.எஸ்ல செட்டில் ஆயிட்டா. இன்னொருத்தி எங்க குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும் எப்போவோ செத்துப் போயிட்டா” என்று விரக்தியுடன் கூறிவிட்டு கண்ணாடியைக் கழற்றி அதை துடைக்கும் பாவனையுடன் கண்ணில் தேங்கிய கண்ணீரை விழுங்கினாள்.

அவளது இந்த அமைதி, அழுத்தமான பேச்சு எல்லாமே அஸ்வினுக்கு வித்தியாசமாகத் தோன்ற “அப்பிடி அவங்க என்ன பண்ணுனாங்க?” என்று கேட்க

மேனகா “அவ நிறைய பண்ணிட்டா எங்களுக்கு. அவளுக்கு நான்னா ரொம்ப பிடிக்கும். ஆனா கல்யாணம் ஆனதுல இருந்து அவ மொத்தமா மாறிட்டா. அவ ஹஸ்பெண்டோட பேச்சைக் கேட்டு அங்க அப்பா அம்மா இறந்ததுக்கு அப்புறமா என்னையும் வினிதாவையும் அவ வீட்டுக்கே கூட்டிட்டுப் போனா. அப்பாவோட பேருல தஞ்சாவூர்ல கொஞ்சம் நிலம், வீடுலாம் இருந்துச்சு. அது அவங்க கையை விட்டு போகக் கூடாதுனு அவளோட பிரதர் இன் லாக்கு வினிதாவைக் கல்யாணம் பண்ணிவைக்கப் போறேனு எங்க கிட்ட சொன்னா. வினிக்கு கல்யாணத்துல இஷ்டமில்லனு சொன்னதும் அவளைச் சாப்பாடு தண்ணி எதுவும் குடுக்காம ஒரு ரூம்ல போட்டு வச்சு டார்ச்சர் பண்ணுனாங்க.

நான் எப்பிடியோ மாமாக்கு கால் பண்ணி இங்கே வர வைச்சு போலீஸ் மூலமா எங்க ரெண்டு பேரோட கஸ்டடியும் மாமா, அத்தைக்குப் போச்சு.  மாமா அவளைத் திட்டுனதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா? இந்த அனாதைக் கழுதைங்களுக்கு செலவு பண்ணுறது என்னோட புருசன் தானே! அதல்லாம் நாங்க எப்பிடி வசூலிக்கிறதுனு மாமாவைப் பார்த்து கேட்டா. அந்த நிமிசம் தான் கல்யாணம்கிற கான்செப்ட் எப்பிடி அவளை சுயநலமா மாத்திடுச்சுனு என் மனசுல தோணுச்சு. அப்போ இருந்தே எனக்கு அதுல நம்பிக்கை இல்ல. இத்தனை வருசம் கூடவே இருந்த அக்காவே எங்களுக்குச் செலவு பண்ண யோசிச்சப்போ மாமாவும் அத்தையும் அவங்க பசங்க மாதிரியே எந்த வித்தியாசமும் காட்டாம என்னையும் வினியையும் படிக்க வச்சு, நாங்க கேட்டதல்லாம் வாங்கிக் குடுத்து எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் குடுத்தாங்க. அவங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்” என்று சொல்லிவிட்டு மடியில் கோர்த்திருந்த அவளது விரல்களைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அஸ்வின் இவ்வளவு நேரம் அவள் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டு பெருமூச்சுடன் அவனது தலையை ஸ்டீரியங் வீல் மீது கவிழ்த்துக் கொண்டான்.

அதே நேரம் ஸ்ராவணி அபிமன்யூ பேசியதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் விழிக்க அபிமன்யூவுக்குச் சிரிப்பாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸ்ராவணி இது சரிபடாது என்று எண்ணியவள் “லிசன் என்னால ரொம்ப நேரம் இப்பிடி உன் கூட நின்னுகிட்டே இருக்க முடியாது. என்ன விஷயம்னு சொல்லிட்டுக் கிளம்பு” என்று சொல்லிவிட்டு நடுங்கிய நாடியைத் தடவிக் கொண்டாள்.

அபிமன்யூ அவளது நடுங்கிய உதடுகளை ரசனையுடன் பார்த்தபடி “அதுக்கு முன்னாடி என்னோட ரொம்ப நாள் ஆசை ஒன்னு இருக்கு. அதை நிறைவேத்தியே ஆகணும் போல இருக்கு வனி” என்றுச் சொல்ல ஸ்ராவணி குழப்பத்துடன் “நீ வந்ததுல இருந்துப் பேசுற எதுவும் எனக்குச் சுத்தமா புரியல. கொஞ்சம் தெளிவா சொல்லு, பிளீஸ்” என்றபடி காதுமடல்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டாள்.

அபிமன்யூ அவளைப் பார்த்தபடியே நெருங்கிவந்தவன் “ஃபர்ஸ்ட் டைம் உன்னை பப்ல பாத்தப்போவே ஆசைப்பட்டது தான். பட் அதுக்கு அப்புறம் இப்போ தான் அந்த மாதிரி ஒரு அழகான சூழ்நிலை அமைஞ்சிருக்கு” என்றபடி மூச்சுக்காற்று மோதும் தூரத்தில் நிற்க ஸ்ராவணி திடீரென்று அவன் நெருங்கியதில் விதிர்விதிர்த்துப் போனாள்.

அவளது அருகில் வந்தவன் அவளது முகத்தை அவனது கைகளில் ஏந்தி குளிரில் நடுங்கிய அவளின் செவ்விதழ்களை ரசித்தவன் அவனது இதழால் சிறைப் பிடிக்க ஸ்ராவணியோ இதை சற்றும் எதிர்ப்பார்க்காததால் அதிர்ச்சியில் கண்களை இறுக மூடிச் சிலையானாள்.

சில நிமிடங்கள் நீண்ட அந்த இதழணைப்பில் ஸ்ராவணிக்கு மூச்சு வாங்க அவளை விடுவித்தவன் ஹஸ்கி குரலில் “ஃபர்ஸ்ட் கிஸ் இல்லயா! அப்பிடித் தான் இருக்கும்” என்று சொன்னபடி அவளது இதழ்களை வருட அவளது மேனி நடுங்குவதை அவனால் நன்றாகவே உணர முடிந்தது.

அவளது இடையை வளைத்து அணைத்தபடி “ஐ லவ் யூ ஸ்ராவணி” என்று மனதில் இருக்கும் காதல் மொத்தத்தையும் தேக்கிய குரலில் அபிமன்யூ கூற ஸ்ராவணிக்குத் தன் காதையே நம்ப முடியவில்லை. எதிர்பாரா இதழணைப்பால் சிலையானவளை அவனது “ஐ லவ் யூ” என்ற வார்த்தை இயல்புநிலைக்கு கொண்டுவர அவனது கையை விலக்கி அணைப்பிலிருந்து வெளியே வர முயற்சித்தாள் அவள்.

அவளால் முடியாமல் போக அபிமன்யூ “எனக்கு உன் கூட லைஃப் லாங் வாழணும்னு ஆசையா இருக்கு ஸ்ராவணி. இதே மாதிரி சண்டை போட்டுக்கிட்டு, முறைச்சிக்கிட்டு, ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இப்பிடியே வாழ்ந்தா போதும்.  இதுல உனக்கு சம்மதம்னா ஓகே சொல்லு, சம்மதம் இல்லனாலும் ஓகே சொல்லு. ஏன்னா உனக்கு வேற ஆப்சனே கெடயாது வனி” என்று உறுதியான குரலில் கூறிவிட்டு அவளை விடுவிக்கச் சிறிது தள்ளாடிச் சமாளித்து  நின்றாள் ஸ்ராவணி.

“ஓகே வனி. நான் உன் கிட்ட பிரபோஸ் பண்ண வந்தேன், பண்ணிட்டேன். நீயும் சீக்கிரமா ஓகே சொல்லிடுமா. பிகாஸ் ஆல்ரெடி நம்ம மேரேஜ் லைஃப்ல மூனு மாசம் வேஸ்டா போயிடுச்சு” என்று சொல்லிவிட்டு அவள் அருகில் வந்து நெற்றியில் இதழை ஒற்றியவன் “போய் நல்லா தூங்கு. குட் நைட்” என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் அவனது காரை நோக்கி நடக்க ஸ்ராவணி அவனது கோட்டைப் பிடித்தபடி நடந்த விஷயங்கள் கொடுத்த அதிர்வினால் நகர இயலாமல் அவளை ஜெயித்த சந்தோசத்துடன் நடந்துச் சென்றவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

அபிமன்யூ தன் மனதை ஸ்ராவணியிடம் வெளிப்படுத்திய மகிழ்ச்சியுடன் வந்தவன் காரைத் திறந்த போது அதிர்ந்து தூக்கத்திலிருந்து விழித்த அஸ்வினையும், மேனகாவையும் கண்டுத் திகைத்தான்.

“ஹலோ! இங்கே என்னடா பண்ணுறிங்க?” என்று கேட்டு அதிர்ச்சியாய் பார்க்க மேனகா அவசரமாக காரை விட்டு இறங்கி “அது….நான் தூங்கிட்டேன்” என்று இன்னும் கலையாத உறக்கத்துடன் சொல்ல அஸ்வினும் அதையே ஆமோதித்தான்.

அபிமன்யூ நமட்டுச்சிரிப்புடன் “அச்சு! நீ பேசணும்னு சொல்லி கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போன வேகத்தைப் பார்த்து நான் என்னென்னவோ இமேஜின் பண்ணுனேன். இங்கே வந்துப் பார்த்தா…”என்றவன் வார்த்தையை முடிக்காமல் சிரிக்கவே மேனகா  கடுப்பாகி விட்டாள்.

“ஹலோ போதும் சார். இது அவ்ளோ பெரிய ஜோக் ஒன்னும் இல்ல” என்று சொல்லி தலையைச் சிலுப்ப அபிமன்யூ “சரி விட்டுத் தள்ளுங்க. மேனகா….அதானே உன்னோட பேரு” என்று கேட்க மேனகா ஆமென்று தலையசைத்தாள்.

அவன் வாயெல்லாம் பல்லாக “எனக்கு மட்டும் பொண்ணு பிறந்துச்சுனா அதுக்கு மேனகானு தான் பேர் வைப்பேன். நீ என்னோட குலதெய்வம் மாதிரிமா. உன்னால தான் இவ்ளோவும் நடந்திருக்கு” என்று சொல்ல

அவள் குழம்பியவளாய் “நான் என்ன பண்ணுனேன்?” என்க அபிமன்யூ அவளைப் பார்த்து சிரித்தவன் நடந்ததை விளக்க ஆரம்பித்தான் மகிழ்ச்சியுடன்.

“நீ தானே தெய்வமே எனக்கும் வனிக்கும் மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணுனது. இப்போ பாரு நானும் காதல்ல விழுந்து அவ கிட்ட பிரபோஸும் பண்ணிட்டு வந்துட்டேன். இந்த பெருமை எல்லாமே உன்னைத் தான் சேரும் மேனகா. இதுக்கு கைமாறா எனக்கும் வனிக்கும் பொண்ணு பொறந்தா உன் பேரை தான் வைப்பேன்” என்று சொல்ல

மேனகா கிண்டலாக “நீங்க தானே சொல்லிருக்கிங்க! வனி இன்னும் ஓகே சொல்லிருக்க மாட்டாளே” என்று சொல்லிவிட்டு அவனை நக்கலாகப் பார்த்தாள்.

அபிமன்யூ “அவளுக்கு சம்மதம் இல்லாம தான் கிஸ் பண்ண அலோ பண்ணுனாளாக்கும்? அட போம்மா!” என்று சாதாரணமாகச் சொல்ல மேனகா அதிர்ந்து போய் “என்னது கிஸ்ஸா? ஏய் என்னோட வனியை என்னடா பண்ணுன?” என்று கண்ணை  உருட்டி மிரட்டியபடி கேட்டாள்.

அபிமன்யூ தோளைக் குலுக்கியபடி “நான் ஒன்னுமே பண்ணலயே! ஜஸ்ட் ஒரு லி…” என்று ஆரம்பிக்க அஸ்வின் அவன் சொல்ல வருவதுப் புரிந்தவனாய் அவன் வாயை பொத்தினான்.

“போதும்டா. இதுக்கே இவளுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். இன்னும் ஏதாச்சும் சொல்லி வச்சேனு வையேன், வீணா கொலை கேஸ்ல உள்ளே போயிடுவ” என்று அவனைப் பேச விடாமல் செய்தவன் மேனகாவின் புறம் திரும்பினான்.

“நீ இன்னும் இங்கே என்ன பண்ணுற? போய் உன் ஃப்ரெண்டைப் பாரு” என்க அவள் வேகமாக ஸ்ராவணியைத் தேடி ஓடினாள்.

அஸ்வின் அபிமன்யூவின் தோளில் அடித்தவன் “ஏன்டா அவ கிட்ட போய் கிஸ் அது இதுனு சொல்லுற. பாரு அவ என்னவோ ஏதோனு பயந்து ஓடுறா” என்று சொல்ல அபிமன்யூ அவனை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு காரை எடுக்கச் செல்ல காரைத் திறந்து உள்ளே அமர்ந்தான் அஸ்வின்.

அதே நேரம் மேனகா ஸ்ராவணியைத் தேடிச் சென்றவள் ஹோட்டலின் பக்கவாட்டில் அலங்கார விளக்குகளின் ஒளியில் அவள் நிற்பதைக் கண்டு அவளருகில் ஓடினாள். ஸ்ராவணியின் அருகில் வந்து “வனி ஆர் யூ ஓகே?” என்று கேட்டவள் ஸ்ராவணி அணிந்திருந்த கோட்டைப் பார்த்ததும் அபிமன்யூ கோட் இல்லாமல் நின்றது நினைவில் வர “ஏய் அவன் கோட் உன் கிட்ட எப்பிடி?” என்று குழம்பிப் போனாள்.

ஸ்ராவணி எதுவும் பேசாமல் நிற்க அவளது கையைப் பிடித்துப் பார்த்தாள். ஜில்லிட்டுப் போயிருந்த கைகளைத் தொட்டதும் வனிக்கு குளிர் ஒத்துக் கொள்ளாது என்று நினைவு வந்தவளாய் பார்ட்டி ஹாலுக்குச் சென்று விஷ்ணுவிடமும் பூர்வியிடமும் தானும் ஸ்ராவணியும் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே வந்தவள் ஸ்ராவணியை விஷ்ணு ஏற்பாடு செய்த காரில் அமரச் செய்துவிட்டு அவளும் கூடவே அமர கார் விஷ்ணுவின் வீட்டை நோக்கிச் சென்றது.