🖊️துளி 30👑

அபிமன்யூ ஸ்ராவணியிடம் பேசித் தனது நிலையை விளக்குவதற்காக தயாரானவன் தன் அறையிரிலிருந்து வெளியேற அவனைத் தொடர்ந்து வந்தான் அஸ்வின். ஹாலில் இவர்களுக்காகவே காத்திருந்தாற்போன்று இவர்களைக் கண்டதும் “வந்துட்டிங்களாடா? உங்க ரெண்டு பேருக்காகத் தான் வெயிட்டிங். உங்க அம்மா தான் நீங்க டயர்டா இருப்பிங்கன்னு சொல்லி உங்க ரூம் பக்கமே போகக் கூடாதுனு ஆர்டர் போட்டுட்டா” என்று சொன்னபடி இவ்வளவு நேரம் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை மடித்து மேஜை மீது வைத்தபடி எழுந்தார் பார்த்திபன்.

அபிமன்யூ “என்ன விஷயம் டாட்? எதும் பிரச்சனையா?” என்று தீவிரமான முகபாவத்துடன் கேட்க

பார்த்திபன் “இன்னைக்கு கோர்ட்ல ஹியரிங் இருக்கு. என்னை வரச் சொல்லி சி.பி.ஐயில இருந்து ஆர்டர் வந்திருந்துச்சு. சோ நான் கோர்ட்டுக்குப் போறதுக்கு நீ என் கூட துணையா வந்தா நல்லா இருக்கும்” என்று சொல்ல அபிமன்யூ ஸ்ராவணியைச் சந்திக்கும் முடிவை ஒத்திவைத்தான்.

“சரிப்பா! நான் உங்களோட வர்றேன்” என்று அவன் சொல்ல அவர் அஸ்வினை நோக்கி “அஸ்வின் நீ இன்னைக்கு சகாவை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போய் டாக்டர் கிட்ட செக்கப் பண்ணிட்டு வா. சுபிம்மாவும், ஜானும்மாவும் ஏதோ லேடீஸ் குரூப்போடச் சேர்ந்து நார்த் இந்தியா டூர் போகணும்னு சொன்னாங்கல்ல. அதுக்கு ரெடியாயிட்டு இருக்காங்க” என்று சொல்ல அவனும் சரியென்று தலையாட்டினான்.

சிறிது நேரத்தில் காலையுணவுக்காக அனைவரும் டைனிங் டேபிளில் அமர சுபத்ரா தானும், மகளும் இல்லாத போது வீட்டைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு வீட்டின் ஆண்களுக்கு அறிவுறுத்தியபடி பரிமாற ஆரம்பித்தார்.

சகாதேவனையும், பார்த்திபனையும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் ஓய்வு எடுக்குமாறு சொன்னவர், அஸ்வினையும் அபிமன்யூவையும் பார்த்து கண்டிக்கும் குரலில் “நான் ஊருல இல்லாத நேரம்னு உங்க இஷ்டத்துக்கு ஆட்டம் போடாம நைட் எட்டு மணிக்கு வீட்டுல இருக்கணும். நான் வீட்டு லேண்ட்லைனுக்கு கால் பண்ணுறப்போ நீங்க ரெண்டு பேரும் என் கிட்ட பேசுனா தான் நான் அதை நம்புவேன்” என்று சொல்லவும் தவறவில்லை.

அனைத்தையும் தலையை ஆட்டிக் கேட்ட அஸ்வின் அபிமன்யூவின் காதில் “இப்போ எப்பிடி அபி ரிப்போர்ட்டரைப் பார்க்க போவ?” என்று கேட்க அவன் “அவ எங்கடா போகப் போறா? கோர்ட் மதியம் முடிஞ்சதும் நேரா அவ ஆபிஸ்ல போய் பார்த்துப் பேசி முடிச்சிட வேண்டியது தான்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிட்டு எழுந்தவர்கள் சுபத்ராவிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப அஸ்வின் சகாதேவனுடனும், அபிமன்யூ பார்த்திபனுடனும் காரில் ஏறினர். அபிமன்யூ பார்த்திபனிடம் “டாட்! இதுல உங்களை விட்னஸா போட்டிருக்காங்களா?” என்று கேட்டபடி அந்த வழக்கின் விவரங்களை அவர் வாய்மொழியாக கேட்க் ஆரம்பித்தான்.

அவர் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க அவன் இறுக்கமான குரலில் “டாட் நீங்க ஏன் அரசாங்கத்தரப்பு சாட்சியா மாறி அங்கிள் செஞ்ச தப்பை ஆதோரத்தோடச் சொல்லக் கூடாது?” என்று கேட்க

பார்த்திபன் “என்னால அதை செய்ய முடியும்னு தோணல அபி. இந்த சென்னைக்கு நானும் என் தம்பியும் வந்தப்போ எங்களுக்கு ஆதரவு குடுத்து எங்களை வாழ வச்சது உங்க தாத்தா தான். அவருக்கு அப்புறமா கட்சிப் பொறுப்புக்கு வந்த உங்க மாமா அவரோட தங்கச்சி கட்சியோட சாதாரண தொண்டனான என்னைக் காதலிக்கிறது தெரிஞ்சும் எனக்காக உங்க தாத்தா கிட்ட பேசி எங்க காதலை சேர்த்து வச்சாருடா.

இன்னைக்கு நாம வாழ்ந்திட்டிருக்கிற இந்த வாழ்க்கை அவரால நமக்கு கிடைச்சது அபி. அவருக்குனு ஒரு குடும்பத்தை கூட உருவாக்கிக்காம கட்சிக்காகத் தான் அவரு உழைச்சிருக்காரு. என்னால அவர் பண்ணுன நல்ல விஷயங்களை மறக்க முடியல அபி. அதனால தான் இந்த கேஸ்ல அவருக்குப் பதிலா நான் செஞ்சேனு பழியை ஏத்துக்கிட்டேன். ஆனா அவரு என்னையும், என் தம்பியையும் நம்பாம கொல்லுற அளவுக்குப் போவாருனு நான் நினைக்கல. என்னால அவருக்கு எப்போவும் துரோகம் பண்ண முடியாது அபி” என்றார் தீர்மானமாக.

அபிமன்யூவுக்கு தந்தையின் மனம் புரிந்தாலும் இந்த வழக்கில் முழுத்தவறும் வாசுதேவன் மீது இருக்கும் போது தன்னுடைய தந்தை அரசு தரப்பு சாட்சியாக மாறுவதே சரியாகப்பட்டது. இதே யோசனைகளுடன் நீதிமன்றத்தை வந்தடைந்தனர் இருவரும். சிறிது நேரத்தில் வாசுதேவன் சி.பி.ஐ அதிகாரிகள் சூழ வந்தவர் அவரை கேள்வி கேட்ட  நிருபர்களிடம் புன்னகை முகமாக “நியாயம் ஒரு நாள் வெல்லும்” என்று சொல்லிவிட்டு கோர்ட்டுக்குள் நுழைந்தார்.

அவரது வழக்கு வர இன்னும் நேரம் இருந்ததால் பார்த்திபன் வாசுதேவனுடன் பேச சி.பி.ஐ அதிகாரிகளிடம் அனுமதி கேட்க அவருக்கு பதினைந்து நிமிட அவகாசம் கொடுக்கப்பட்டது. தான் தனியாகச் சென்று பேசிவிட்டு   அபிமன்யூ தானும் உடன் வருவதாகப் பிடிவாதம் பிடித்து அவருடன் சென்றான்.

அங்கே சென்றவனுக்கு வாசுதேவனின் நலுங்கிய தோற்றத்தைக் காண வருத்தமாக இருந்தாலும் அவர் ஏற்படுத்திய விபத்தால் இன்னும் தன்னுடைய தோளைப் பிடித்தபடி நடக்கும் தந்தையைக் கண்டதும் அவனுக்கு அவர் மீது தோன்றிய இரக்கம் துடைத்தாற் போல் மறைந்தது.

வாசுதேவன் இருவரையும் நிமிர்ந்து பார்த்து ஒரு கணம் அதிர்ந்தவர் பின்னர் சுதாரித்தவராய் “ஒரு வழியா ரெண்டு பேரும் மீண்டு வந்துட்டிங்க போல” என்றார் இரு பொருள் பட.

பார்த்திபன் அவரது குத்தல் பேச்சைக் கவனியாதவராய் அவரது நலம் விசாரிக்க அதற்கும் அவர் எடுத்தெறிந்தே பேச அபிமன்யூ “நீங்க ஏன் இவரு கிட்ட இதெல்லாம் கேட்டுட்டு இருக்கிங்கப்பா? அவருக்கு நீங்க ஏன் உயிரோட வந்திங்கன்னு தோணுது. அப்பிடி தானே மாமா?” என்றான் கடுப்புடன்.

அவனை பார்த்து கேலியாய் சிரித்தவர் “அப்பா மேல என்ன ஒரு பாசம்டா மருமகனே! ம்ம்…இருந்துட்டுப் போகுது. பார்த்தி உனக்கு பலமே உன்னோட பசங்க தானே. கொஞ்சம் கவனமா பார்த்துக்கோப்பா. ஏன்னா இப்போ நாட்டுல எப்போ யாருக்கு என்னாகுதுனே தெரியல” என்று பொடிவைத்துப் பேச பார்த்திபனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“இங்க பாருங்க தலைவரே! உங்க மேல இப்போவும் எனக்கு மரியாதை இருக்கு. ஆனா என் பசங்க மேல கை வைச்சா…” என்று கடுமையாகச் சொல்லி எச்சரிக்க

வாசுதேவன் கேலியாக “என்ன பண்ணுவ பார்த்தி? உனக்கும், உன்னோட தம்பிக்கும் நடந்த ஆக்சிடெண்டை உன்னால தடுக்க முடிஞ்சுதா? அதே மாதிரி தான் உன் பசங்களுக்கு நடக்கப் போறதை உன்னால தடுக்க முடியாது” என்க பார்த்திபன் ஆத்திரத்துடன் அவரது சட்டையைப் பிடிக்க அதிகாரிகள் சத்தம் கேட்டு அங்கே வந்து இருவரையும் விலக்கிவிட அபிமன்யூ தந்தையுடன் வெளியே வந்தான்.

பார்த்திபன் “இவருக்காக நான் ஜெயிலுக்குப் போக கூட தயங்கலை அபி. ஆனா இவரு என் பிள்ளைங்களையே கொன்னுடுவேனு மிரட்டுறாரு. என்னால இப்போ கூட இதை நம்ப முடியல” என்று வாய்விட்டுப் புலம்ப அபிமன்யூ அவரைத் தேற்றினான்.

“டாட்! மனுசங்க நேரம் காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிகிட்டே இருப்பாங்க. அவரும் அப்பிடி தான். இனிமே மாற வேண்டியது நீங்க தான். இப்போ நீங்க என்ன பண்ணனும்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல” என்று பூடகமாக சொல்ல வேண்டிய விஷயத்தை அவர் காதில் போட்டுவிட்டு அவரை மட்டும் கோர்ட்டுக்குள் அனுப்பிவிட்டு வெளியே வந்து காத்திருந்தான்.

ஹியரிங் முடிய மதியமாகி விட கோர்ட்டிலிருந்து வெளியே வந்த தந்தையின் முகத்தைப் பார்த்தவன் இவரை இப்படியே விட்டால் இவர் நடந்ததையே நினைத்து மனதுக்குள் வருந்துவார் என்று எண்ணியவன் அவரது வருத்தத்தைப் போக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்தவாறே வீட்டுக்கு வண்டியைச் செலுத்தினான்.

வீட்டை அடைகையில் அங்கே அஸ்வினும் சகாதேவனும் மருத்துவமனை பரிசோதனை முடிந்து வந்திருந்தனர். சகாதேவனுக்கு இனி ஓய்வு எடுக்க வேண்டியது இல்லை என்று மருத்துவர் கூறிய சந்தோசம் முகத்தில் பிரதிபலிக்க மகளுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தவர் அண்ணனின் முகவாட்டத்தைப் பார்த்ததும் அபிமன்யூவிடம் கண்ணால் வினவ அவன் ஒன்றும் இல்லை என்று சைகை காட்டி அவருக்கு பதிலுறுத்தான்.

சுற்றுலா செல்லும் ஆர்வத்தில் இருந்த சுபத்ராவிடம் தந்தை மற்றும் சித்தப்பாவையும் உடன் அழைத்துச் செல்லுமாறு கூற சுபத்ராவுக்கும் இது நல்லதாகவே மனதுக்குப் பட்டது. பார்த்திபன் ஏதோ சொல்ல வர அவரை கையமர்த்தியவன் “டாட் நீங்க இப்போ இருக்கிற மனநிலையில நீங்க ரிலாக்சா போயிட்டு வாங்க டாட். அதான் அம்மா சொல்லுறாங்க தானே. அவங்க கூட வர்றவங்கல்லாம் ஃபேமிலியா வர்றப்போ அம்மாவும், ஜானுவும் மட்டும் தனியா போனா நல்லாவா இருக்கும்? நீங்களும் சித்தப்பாவும் ரிலாக்சா கொஞ்சநாள் போயிட்டு வாங்க” என்று அவர்கள் இருவரையும் வற்புறுத்த அவர்களும் வேறுவழியின்றி செல்ல ஒப்புக்கொண்டனர்.

அதன் பின் அவர்கள் தயாராக குடும்பத்தோடு அவர்களை விமானநிலையத்தில் வழியனுப்பி விட்டு வந்தவன் அஸ்வினோடு நேரே ஜஸ்டிஸ் டுடே அலுவலகத்துக்குக் காரைச் செலுத்தினான்.

*********

ஜஸ்டிஸ் டுடே அலுவலகம்…

ஸ்ராவணி பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியவள் மேனகாவின் கேபின் கண்ணாடிக்கதவை தட்ட அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டு கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்துவிட்டு பேக்குடன் வெளியே வந்தாள்.

இருவரும் ரகுவிடம் “ரகு நாங்க வீட்டுக்குப் போனதும் ஃப்ரெஷ் அப் ஆயிட்டு உடனே பஸ் ஸ்டாண்ட் போயிடுவோம். நீங்க ரெண்டு பேரும் டைமுக்கு வந்துடுங்கடா” என்று வர்தனையும் கைக்காட்டிச் சொல்ல சுலைகாவும், அனுராதாவும் டாக்சியில் பஸ் ஸ்டாண்ட் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு சென்றனர்.

ஸ்ராவணி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவள் “மேகி இதுக்கு மேல சைலண்டா இருந்தா போற வழியில உன்னை எங்கயாச்சும் உன்னை தள்ளிவிட்டுட்டுப் போயிடுவேன்” என்று மிரட்டியபடியே வீட்டை நோக்கி வண்டியை விட மேனகா தயக்கத்துடன் அவள் பின்னே அமர்ந்திருந்தாள்.

போகும் வழியிலும் அவள் பெரிதாக ஒன்றும் பேசவில்லையென்றாலும் ஸ்ராவணி அடித்த ஜோக்குகளுக்குச் சிரிக்க அதுவே ஸ்ராவணிக்கு நிம்மதியாக இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் அவசரமாக கிளம்பியவர்கள் நல்லவேளையாக அவர்களின் உடைகளை காலையிலேயே எடுத்து வைத்துவிட்டதால் அதை தூக்கிக் கொள்ள ஸ்ராவணியின் பார்வையில் பட்டது அந்த மோதிரம். பெருமூச்சுடன் அதைப் பார்த்தவள் அதை எடுக்க விரும்பாமல் அறையை விட்டு வெளியேறினாள்.

அதற்குள் மேனகாவும் தண்ணீர் குடிக்கச் சென்றவள் வந்துவிட இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு பேருந்துநிலையத்தை நோக்கி கால்டாக்சியில் செல்ல அதே நேரம் அபிமன்யூவும் அஸ்வினும் ஜஸ்டிஸ் டுடே அலுவலத்தை அடைந்தனர்.

காம்பவுண்டுக்குள் நுழைந்து அலுவலக வாயிலில் நிற்கும் போது வந்த செக்யூரிட்டி “சார் யாரைப் பார்க்கணும்?” என்று கேட்க அபிமன்யூ “ஸ்ராவணி மேடமை பார்க்கணும்” என்று பதிலளித்துவிட்டு உள்ளே பார்வையை அலையவிட்டான்.

அவர் “சார் அவங்க இன்னைக்கு சீக்கிரமாவே வீட்டுக்குப் போயிட்டாங்க. எல்லாருமா சேர்ந்து ஊட்டிக்குப் போறாங்க சார்” என்று சொல்ல

அபிமன்யூ ஆச்சரியத்துடன் “ஊட்டிக்கா? அங்கே எதுக்குப் போயிருக்காங்க?” என்று கேட்க

செக்யூரிட்டி “எங்க விஷ்ணு சாரோட பொண்ணுக்கு நாளைக்கு பிறந்தநாள். அதனால தான் அவரோட குரூப்ல இருக்கிற எல்லாரும் ஊட்டிக்குப் போறாங்க சார். வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும்” என்றபடி நகர்ந்தார்.

அபிமன்யூ இடுப்பில் கைகளை ஊன்றி சலிப்புடன் நிற்க அஸ்வின் “விடு மச்சான். அதான் ரெண்டு நாள்ல வந்துடுவாங்கல்ல” என்க

அபிமன்யூ விரலால் நெற்றியைக் கீறியவாறே “ம்ஹூம்..அது வரைக்கும்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது அச்சு. ஊட்டி என்ன அமெரிக்காலயா இருக்கு? அவங்க இங்க இல்லனா என்ன, நம்ம அங்க போவோம்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தான்.

அஸ்வின் அவனுடன் காரில் உட்கார்ந்தவன் “அப்போ ரிப்போர்ட்டர் கிட்ட உன் மனசுல உள்ளதை சொல்லாம விடறது இல்லனு தீர்மானமா இருக்க?” என்று கேலி செய்ய

அஸ்வின் ஸ்டீயரிங் வீலை வளைத்தவாறே “அவ பாதாளத்துக்கே போனாலும் அங்கே போய் அவ கிட்ட என் மனசுல இருக்கிறதை சொன்னா தான் எனக்கு நிம்மதி அச்சு” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு காரை எடுத்தான்.