🖊️துளி 29👑
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அபிமன்யூவை காரில் படுக்க வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்த அஸ்வினின் கவனம் சாலையில் இருந்ததை விட நண்பனின் புலம்பலில் தான் இருந்தது. அதை கேட்டவன் விரக்தியாக “சீரியஸ் ரிலேசன்ஷிப்ல சிக்காத வரைக்கும் நல்லா தான் இருந்தான். இவனை ஒரு பொண்ணு புலம்ப விடுவானு நான் கனவுல கூட நெனைச்சது இல்ல” என்று சொல்லிவிட்டு பெருமூச்சுடன் சாலையைப் பார்த்தவன் முன்னே சென்ற டாக்சிக்கும் தனது காருக்குமான தூரத்தை கவனிக்கத் தவறியதில் அஸ்வினின் கார் அந்த டாக்சியின் பின்பகுதியில் மோத அது ஒரு குலுங்கலுடன் தூரமாகச் சென்று நின்றது.
அஸ்வின் பதற்றத்துடன் காரின் பிரேக்கைப் போட்டவன் காரை நிறுத்திவிட்டு டாக்சியிலிருந்து இறங்கிய ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டான். “ஸாரிண்ணா! நான் தான் கவனிக்காம வந்து மோதிட்டேன். டேமேஜுக்கு என்ன குடுக்கணும்னு சொல்லிடுங்க. நான் குடுத்துடுறேன்” என்றவன் டாக்சியிலிருந்து இறங்கிய பயணியைக் கண்டதும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான்.
ஏனெனில் இறங்கியவள் மேனகா. நான்ஸியை ஏர்ப்போர்ட்டில் வழியனுப்பி வைத்துவிட்டு டாக்சியில் வந்தவள் கார் மோதிய பயத்தில் கண்ணை மூடிக்கொண்டாள். மோதலுக்கு காரணமானவன் வந்து டாக்சி டிரைவரிடம் பேச அவனைத் திட்டுவதற்காக இறங்கும் போது அங்கே அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்த அஸ்வினையும் அவனது காரையும் கண்டவள் காரின் பின் சீட்டில் படுத்துக் கிடந்த அபிமன்யூவைக் கண்டதும் தீர்மானமே செய்துவிட்டாள். “இதுங்க ரெண்டுக்கும் வேற வேலை இல்லை. எப்போ பாரு குடிச்சுட்டு சுத்த வேண்டியது. டிரங் அண்ட் டிரைவிங் கேஸ்ல இவனை உள்ளே தூக்கிப் போடணும்” என்று வேண்டுமென்றே அஸ்வின் காதில் விழுமாறு சத்தமாகப் பேச அதைக் கேட்டவனின் கோபப்பார்வை அவளை சுட ஆரம்பித்தது.
டிரைவரிடம் இருந்து மேனகாவை நோக்கி வந்து “லிசன் நடந்தது என்னனு தெரியாம லூஸ் டாக் விடாத! அவன் இருக்கிற நிலமையைப் பார்த்தா உனக்கு எப்பிடி தெரியுது?” என்று கோபத்துடன் கேட்க
மேனகா அலட்சியமாக “ம்ம்… பர்த்டே பார்ட்டிக்கு போயிட்டு சரக்கடிச்சு ஃபுல்லா மட்டையாயிட்டான்னு தெரியுது. இதுல்லாம் சரியான நீர் யானை. 24 ஹவர்சும் தண்ணியிலேயே கிடக்கும் போல” என்று சொல்லவும் அஸ்வின் கையைக் கட்டிக்கொண்டு அவள் பேசுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவன் அவளுக்கு பதிலடி கொடுக்க தவறவில்லை.
“மத்த நாள்ல எப்பிடினு தெரியல, ஆனா இன்னைக்கு அபி இந்த நிலையில இருக்க காரணம் உன் ஃப்ரெண்ட் தான். இன்னைக்கு ஈவினிங் எவ்ளோ ஆசையா போனான் தெரியுமா? உங்களை மாதிரி பொண்ணுங்களுக்குலாம் வாய் இருக்கிற அளவுக்கு மூளை இருக்கிறது இல்ல”
“ஏய்! ஸ்டாப் இட் மேன். இன்னொரு வார்த்தை வனியைப் பத்தி பேசுனேனு வையேன், நீ செத்த. என்னடா தெரியும் உனக்கு அவளைப் பத்தி? குடிச்சுட்டு கூத்தடிக்கிற ஃப்ரெண்டுக்காக நீ இவ்ளோ சப்போர்ட் பண்ணுறனா என் வனி சொக்கத்தங்கம்டா. அவளுக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேனா?”
“எது? உன்னோட ஃப்ரெண்ட் சொக்கத்தங்கமா? ஆமாடி அந்தச் சொக்கத்தங்கம் தான் வீட்டுக்காக என் ஃப்ரெண்டை ஏமாத்தி கல்யாணம் பண்ணுச்சு. கொஞ்சம் கூட யோசிக்காம என் ஃப்ரெண்டோட பெர்சனல் வீடியோவை லீக் பண்ணுனதும் அதே சொக்கத்தங்கம் தான்” என்று அஸ்வின் எள்ளி நகையாட மேனகாவால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
அவனை நோக்கி கையுயர்த்தி பேசுவதை நிறுத்துமாறு சைகை காட்டியவள் “அந்த கல்யாணம் நடந்தது வனிக்கு தெரியாது. ஏன்னா அந்த மேரேஜ் ரிஜிஸ்ட்ரேசனை இவங்க ரெண்டு பேருக்கும் முடிச்சு வச்சதே நான் தான்” என்று அவள் சொல்ல அஸ்வினால் அதை நம்ப முடியவில்லை. அவன் ஆச்சரியத்தில் உறைந்த நேரம் டாக்சி ஓட்டுநர் மேனகாவிடம் “கிளம்புவோமா மேடம்?” என்று கேட்க அவள் “நீங்க போங்கண்ணா. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் முடிச்சுட்டு வந்துடுறேன்” என்று சொல்லி அவருக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் அஸ்வினிடம் வந்தாள்.
அவன் கண் முன் சொடக்கிட்டவள் “என்னாச்சு அஸ்வின்? நம்ப முடியலையா? நெஜமாவே அந்த பிளான் என்னோடது தான். எனக்கு தெரியும் என்னோட வனிக்கு இந்த அபி கொஞ்சம் கூட மேட்ச் ஆக மாட்டான்னு. ஆனா அந்த வீடு என் மாமாவோட உயிரு. அவரு எவ்ளோ ஆசையா அதை வாங்குனாரு தெரியுமா? வீடு கைவிட்டுப் போனப்போ அவரு வெளியே சொல்லலைனாலும் மனசுக்குள்ள உடைஞ்சு போனதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது. அப்போ எனக்கு வேற வழி தெரியல. எங்களுக்கு கைடன்ஸ் பண்ணுற யாரும் வேற அந்த நேரம் எங்க கூட இல்ல” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டாள் மேனகா.
கண்ணாடியைக் கழற்றி கண்ணைத் துடைத்தவள் “எனக்கு அனு டிவோர்ஸ் பத்தி பேசிட்டு இருந்தது நியாபகம் வந்துச்சு. அதே நேரம் அபி அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ ரிஜிஸ்டர் மேரேஜ் பத்தி சொன்னதும் நியாபகம் வர, நான் இப்பிடி ஒரு பிளானை போட்டேன். இது வனிக்கும் தெரியாது. பேப்பர்ஸ் சைன் வாங்க வர்றப்போ உன் கிட்ட பிராப்பர்ட்டி டாக்குமெண்டை மட்டும் காட்டிட்டு அபி கிட்ட சைன் வாங்குறப்போ மேரேஜ் அப்பிளிகேசனையும் அதோட சேத்து வச்சேன். அவன் வனியை பழிவாங்கிட்ட சந்தோசத்துல இருந்ததால அதை கவனிக்கல. வனியும் வீடு போற வருத்தத்துல கவனிக்காம கேயெழுத்து போட்டுட்டா.
ரிஜிஸ்டரேசன் பண்ணுறப்போ சப் ரிஜிஸ்ட்ரார் கிட்ட டாக்குமெண்ட் ரைட்டரை வச்சு அவங்க வீட்டுக்குத் தெரியாம லவ் மேரேஜ் பண்ணிட்டாங்க, சோ மேரேஜை ரிஜிஸ்டர் பண்ண வந்திருக்காங்கனு சொன்னேன். அவரும் வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணுன சோகத்துல வனி சோகமா இருக்கிறதா நெனைச்சிட்டு கையெழுத்தை வாங்கிட்டாரு. மறுநாள் நானே போய் மேரேஜ் சர்டிஃபிகேட்டை வாங்கிட்டு வந்துட்டேன். இது தான் நடந்துச்சு. என் வனி உலகமே அழிஞ்சாலும் இவனை மாதிரி ஒருத்தனை கட்டிக்க நினைக்க மாட்டா. சோ இனி நீ அவளைப் பத்தி வாய்க்கு வந்தபடி பேசாத” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் மேனகா.
அஸ்வின் அவளை அற்பப்புழுவைப் போல் பார்த்துவிட்டு “அப்பாவி மாதிரி இருந்துட்டு எவ்ளோ பெரிய காரியத்தை பண்ணிருக்க நீ. உன்னால தான் அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு இந்த நிலமையில இருக்காங்க மேகி. இதை நெனைச்சு உனக்கு கில்டியா தோணல?” என்றான் ஆவேசமாக.
மேனகா அதை நினைத்து வருந்தினாலும் “அது தான் இன்னும் அஞ்சு மாசத்துல டிவோர்ஸ் ஆயிடுமே” என்று சாதாரணமாகச் சொல்ல அஸ்வின் ஆத்திரத்தில் அவள் கையைப் பிடித்தவன் “ஏய்! கல்யாணம், டிவோர்ஸ்லாம் உனக்கு அவ்ளோ ஈஸியா போயிடுச்சா? என்ன மாதிரி பொண்ணு நீ? ரெண்டு பேர் லைஃபை இப்பிடி அந்தரத்துல தொங்க விட்டுட்டு உன்னால எப்பிடி இந்த மாதிரி சாதாரணமா பேச முடியுதுடி?” என்று வினவ மேனகா சிரமத்துடன் கையை விடுவித்துவிட்டு தள்ளி நின்று கொண்டாள்.
“டிவோர்ஸ் ஆயிடும் இடியட். ஆனா என் அபியோட சந்தோசம் அதோட போயிடும். அதைப் பாத்துட்டு நீயும் உன் ஃப்ரெண்டும் சந்தோசமா இருங்க” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அவன் சொன்ன வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்தாலும் அதற்கு மேல் அதைப் பற்றி யோசிக்க விரும்பாதவளாய் ஸ்ராவணிக்குப் போன் செய்து தான் இருக்குமிடத்தைச் சொல்லி தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு அவளுக்காக காத்திருந்தாள்.
ஸ்ராவணி ஸ்கூட்டியோடு வந்தவள் மேனகாவின் முகம் சரியில்லாததைக் கண்டதும் “என்னாச்சு மேகி? நீ டாக்சில தானே வர்றேனு சொன்ன. டாக்சிக்காரனோட எதும் பிரச்சனையா?” என்று கேட்க அவள் இல்லையென்று தலையசைத்து மறுத்துவிட்டு இரவு சாப்பிடும் நேரமாகிவிட்டதால் பசிச்சோர்வு என்று சொல்லி சமாளித்துவிட்டு ஸ்கூட்டியில் ஏறினாள்.
அதே நேரம் அஸ்வின் வீட்டுக்கு வந்துச் சேர்ந்தவன் அனைவரும் உறங்கிவிட்டதை அறிந்ததும் நிம்மதி பெருமூச்சுவிட்டபடி அபியை தோளோடு சேர்த்து அணைத்தபடி அவனது அறைக்குக் கூட்டிச் சென்றான். அவனை படுக்கையில் கிடத்தியவன் போர்வையை மூடிவிட்டு அங்கேயே சோஃபாவில் அமர்ந்தான். நண்பனின் புலம்பல் ஓய்ந்தபாடில்லை. அதை நினைத்து வருந்தியபடி கண்ணை மூடியவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.
மேனகாவும் வீட்டுக்கு ஸ்ராவணியுடன் வந்துச் சேர்ந்தவள் அமைதியாக இரவுணவைக் கொறித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டாள். ஸ்ராவணி அவளை எதுவும் கேட்கவில்லையென்றாலும் அவளின் அமைதிக்குப் பின் உள்ள காரணத்தைக் கண்டிப்பாக கேட்டே ஆகவேண்டும் என்று தீர்மானித்தபடி கண்ணாடி முன்னே அமர்ந்து எப்போதும் போல லோசனை கையில் எடுத்தவள் அவளது மோதிரத்தைக் கண்டதும் காலையில் நடந்த நிகழ்வுகளை அசை போடத் தொடங்கினாள்.
அதே நேரம் “மிசஸ் ஸ்ராவணி, மிஸ்டர் அபிமன்யூ ரெண்டு பேருக்கும் இந்த விவாகரத்து கண்டிப்பா வேணுமானு யோசிச்சிக்கோங்க. வேணும்னா உங்களுக்கு கவுன்சலிங் குடுக்கச் சொல்லி ஆர்டர் போடுறேன்” என்று சொன்ன நீதிபதியின் முகம் கண் முன் வர அவரிடம் “நோ நோ சார்! என்னால இந்த மாதிரி ஒரு பொண்ணோட ஒரு நிமிசம் கூட வாழ முடியாது. இன் ஃபேக்ட் அவ நிலமையும் கூட இது தான். நாங்க ரெண்டு பேரும் யோசிச்சு தான் இந்த மியூச்சுவல் டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணிருக்கோம்” என்றவனின் முகமும் நினைவுக்கு வராமல் இல்லை.
“வனி! அவனை மாதிரி ஒருத்தனுக்கு எல்லா பொண்ணுங்களும் ஒன்னு தான். நீ அவன் கிட்ட நடந்துகிட்ட விதம் தப்பே இல்ல” என்று தீர்மானமாக தனக்குத் தானே சொல்லிக்கொண்டவள் அந்த மோதிரத்தைக் கழற்றி வைத்துவிட்டுத் தூங்கச் சென்றாள். இனி எந்நாளும் அவள் அதை அணியப்போவதில்லை என்ற முடிவோடு தான்!
மறுநாள் காலை எப்போதும் போல அலுவலகத்துக்குப் புறப்பட்டனர் இருவரும். அப்போதும் மேனகா பெரிதாக ஒன்றும் பேசவில்லை. யோசனையுடன் கூடிய அவளது முகத்தைப் பார்த்த ஸ்ராவணிக்கு அவள் அப்படி யோசித்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை ஏற்கெனவே திருமணப்பதிவு விஷயத்தில் உணர்ந்திருந்ததால் அவள் அமைதியைக் கலைக்க என்னென்னவோ பேசியும் அவள் சரியாக பதிலளிக்கவில்லை.
அதற்கு பிறகு ஸ்ராவணியும் மௌனமாகவே அலுவலகம் வந்து சேர்ந்தவள் மறுநாள் ஊட்டிக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் பற்றி ரகு பேசிக்கொண்டிருக்க அவனுடன் சேர்ந்து உரையாடத் தொடங்கினாள். மேனகா அதை கவனித்துக் கொண்டிருந்தாளே தவிர அதில் கலந்துகொள்ளைவில்லை.
ரகு “மேகி வாய்ல கொழுக்கட்டை எதையும் வச்சிருக்கியா? நிமிசத்துக்கு ஆயிரம் வார்த்தை பேசுற நீ இன்னைக்கு சைலண்டா இருக்கிறதைப் பார்த்தா ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்கு போல” என்று வாய்விட்டே கேட்டுவிட்டான். அவனுக்கு மறுப்பாக தலையசைத்துவிட்டு அவளது கேபினுக்குச் சென்று விட்டாள் அவள்.
அவள் செல்வதைப் பார்த்துவிட்டு சுலைகா “வனி! என்னடி ஆச்சு அவளுக்கு? அவ இப்பிடி சைலண்டா போற டைப் கெடயாதே” என்க ஸ்ராவணியும் குழப்பத்துடன் “தெரியல சுகா! நேத்து நைட் நான்ஸியை செண்ட் ஆஃப் பண்ணிட்டு வந்ததுல இருந்து அவ சரியில்ல. நானும் என்னென்னவோ பண்ணிப் பார்த்துட்டேன். பட் நோ சேன்ஜ். பாக்கலாம், அவளா சொல்லுவா” என்று சொல்லிவிட்டு தன்னுடைய கேபினை நோக்கிச் சென்றாள்.
அதே நேரம் பார்த்திபனின் வீடு….
அபிமன்யூ அன்று மிகவும் தாமதமாக எழுந்தவனுடைய கை ஹேங் ஓவருக்குப் போடும் மாத்திரையைத் தேட அதற்குள் அவன் கையில் யாரோ மாத்திரையை வைத்து தண்ணீர் நிரம்பிய தம்ளரையும் கொடுக்க மாத்திரையை விழுங்கி விட்டு நிமிர்ந்தவனுக்கு தலை பாரமாக இருக்கவே தலையைப் பிடித்தபடியே அமர்ந்துவிட்டான்.
அவன் முன்னே நின்று அவனது செய்கையை கையைக் கட்டி வேடிக்கைப் பார்த்த அஸ்வின் “நேத்து என்ன நடந்துச்சு அபி?” என்று கேட்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்தவன் அவனை அப்போது தான் கவனிக்கவே செய்தான்.
தலையைப் பிடித்தபடி “அச்சு! ஒன்னும் இல்லடா” என்றபடி எழுந்தவனின் கையைப் பிடித்து நிறுத்தினான் அஸ்வின். அவனை தன் புறம் திருப்பியவன் “என் கிட்ட நீ எதையும் மறைக்க மாட்டேனு நான் நம்புறேன். என்ன விஷயம்? ஈவினிங் நீ போறப்போ சந்தோசமா தானே போனடா! அப்புறம் என்ன தான் ஆச்சு? நீ இவ்ளோ குடிச்சு நான் பார்த்ததே இல்லடா. ரிப்போர்ட்டர் கூட எதாச்சும் சண்டையா?” என்று கேட்க அபிமன்யூ வருத்தத்துடன் மீண்டும் மெத்தையில் அமர்ந்தான். அவனுக்கு எதிரே ஒரு மோடாவை இழுத்துப் போட்டு அமர்ந்தான் அஸ்வின்.
சோகம் கப்பிய முகத்தோடு அபிமன்யூ அவனைப் பார்த்து “இனிமே என் மூஞ்சில முழிக்காதன்னு சொல்லிட்டுப் போயிட்டாடா!” என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்து கொண்டான்.
பின்னர் சட்டென்று நிமிர்ந்தவன் “நானாடா அவளைத் தேடிப் போனேன்? அவளா தானே அன்னைக்கு பப்புக்கு வந்தா! அந்த டே ஒன்ல இருந்து அவ யாரு, எப்பிடி வந்தானு அவளைப் பத்தி மட்டுமே யோசிச்ச எனக்கு ஒரு விஷயம் மண்டையில் உரைக்கல, ஆனா நேத்திக்கு இனிமே டிவோர்ஸுக்காக கோர்ட்டுல மீட் பண்ணுவோம் அதுக்கு முன்னாடி என் மூஞ்சில கூட முழிக்காதனு அவ சொல்லிட்டுப் போனதுக்கு அப்புறமா தான் புரிஞ்சுது ஃபைனலி ஐயாம் இன் லவ்” என்று சொல்லிமுடிக்க அஸ்வினுக்கு நண்பனின் நிலை நன்றாகப் புரிந்தது.
அவனது கரங்கள் அபிமன்யூவின் தோளைத் தட்டிக்கொடுக்க அவன் “அவளுக்கு என்னைப் பிடிக்கலனா ஏன்டா என்னை கல்யாணம் பண்ணிக்கனும்? பிளீஸ் அச்சு! அவளை மாதிரியே நீயும் வீட்டுக்காகனு சொல்லிடாத! ஏன்னா அவ அவ்ளோ ஈஸியா இந்த மாதிரி சென்சிடிவான விஷயத்துல முடிவெடுக்கிற ஆள் இல்ல” என்று சொல்ல அஸ்வின் நண்பனின் கூற்றை தலையசைத்து கேட்டுக்கொண்டான்.
“அபி! இந்த கல்யாணம் உனக்கு எப்பிடி அதிர்ச்சியோ அதே மாதிரி தான் ரிப்போர்ட்டருக்கும். அவங்களுக்கும் கல்யாணம் ரிஜிஸ்டர் ஆனதைப் பத்தி எதுவும் தெரியாது” என்று மெதுவாக அஸ்வின் சொல்ல அபிமன்யூ குழப்பத்துடன் “என்ன சொல்லுற அச்சு? எனக்கு புரியல?” என்று அவனையே பார்த்தான்.
அஸ்வின் எழுந்து கொண்டவன் “அபி! இது எல்லாமே மேனகா பண்ணுன வேலை” என்று சொல்ல அபிமன்யூ அதிர்ச்சியுடன் எழுந்து “வாட்? ” என்று சொல்ல அஸ்வின் முந்தைய நாள் இரவு மேனகா அவனிடம் சொன்ன விஷயத்தை ஒன்று விடாமல் அபிமன்யூவிடம் ஒப்பித்துவிட்டான். அவ்வளவையும் கேட்டவன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
அஸ்வின் கடுப்புடன் “அந்த மேகியை…”என்று ஆரம்பிக்க அவன் தோளில் கைவைத்து அழுத்தியவன் “அவ மேல தப்பு இல்லடா. நான் தான் காரணம். நான் அவசரப்பட்டு ஸ்ராவணியை அப்பிடி ஒரு இக்கட்டுல விடலனா இது எதுவுமே நடந்திருக்காது” என்று வருத்தத்துடன் கூறினான்.
அஸ்வின் நண்பனுக்கு ஆறுதல் கூறியபடி “விடுடா! அடுத்து நடக்கப் போறதை மட்டும் யோசிப்போம். பழசை நினைச்சா வீணா நமக்கு மனக்கஷ்டம் தான் வரும்” என்று தேற்றினான். அவன் என்ன சொன்னாலும் அபிமன்யூவின் காதில் ஸ்ராவணியின் “இனிமே நம்ம சந்திக்கிறதா இருந்தா அது கோர்ட்ல நம்ம ஃபைனல் ஹியரிங்குக்காகத் தான் இருக்கணும். அதுக்கு இடையில நீயோ நானோ தெரியாம சந்திச்சுகிட்டாக் கூட முன்னப் பின்ன தெரியாதவங்க மாதிரி போயிடலாம். ஏன்னா எனக்கு உன் முகத்தைப் பாக்கக் கூடப் பிடிக்கல” என்ற வார்த்தையே ஒலிக்க அது கொடுத்த வலியை புறம் தள்ளிவிட்டு எழுந்தவன் மனதிற்குள் “இது வரைக்கும் எப்பிடியோ எனக்கு தெரியாது, இனிமே என்னால நீ சொல்லுறபடி நடக்க முடியாது வனி. நான் உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லியே ஆகணும்” என்று சொல்லிக்கொண்டவன் அவளைச் சந்திப்பதற்காக தயாரானான்.