🖊️துளி 28👑

சுபத்ரா அன்று அபிமன்யூவின் பிறந்தநாள் என்பதால் அவனுக்கு பிடித்த உணவாகப் பார்த்துப் பார்த்து செய்து வைத்திருந்தார். மதியம் வீட்டுக்கு அஸ்வினுடன் வீட்டுக்கு வந்தவன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க அந்நேரம் பார்த்து தான் ஸ்ராவணியின் போன் கால் வந்தது. அவளிடம் பேசிவிட்டு வந்தவனின் முகம் சந்தோசத்தில் ஜொலிக்க பார்த்திபன் சுபத்ராவின் கையில் இடித்தவர் மகனிடம் விஷயத்தை கேட்குமாறு சைகை காட்ட அஸ்வின் அதை கவனித்து விட்டான்.

தான் கேட்பதாக அவர்களிடம் கண்ணால் சொல்லிவிட்டு அபிமன்யூவிடம் “அப்புறம் அபி! ரொம்ப சந்தோசமா இருக்கப் போல! யாருடா போன்ல? பேசிட்டு வந்ததுல இருந்து உன் முகம் தவுசண்ட் வாட்ச் பல்ப் மாதிரி பிரைட்டா இருக்கு?” என்று கேட்க

அபிமன்யூ முகபாவனையை கவனமாக மாற்றிக்கொண்டு “அது கிளையண்ட் கால் தான் மச்சி! உடனே உன் மூளை ஏன்டா விபரீதமா வேலை செய்யுது?” என்று அவன் தோளில் தட்டிவிட்டு சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

அஸ்வின் முகம் சுருக்க பார்த்திபன் அவனை கையமர்த்திவிட்டு “அபி! எதுவா இருந்தாலும் மறைக்காதப்பா! ஒரு வேளை இது மருமகள் சம்மந்தப்பட்ட விஷயமா?” என்று கேட்க அவரது “மருமகள்” என்ற வார்த்தையில் அவனுக்கு புரையேறியது.

அவன் பக்கத்திலிருந்த சகாதேவன் தண்ணீரை கொடுத்து முதுகை தடவியபடி “பார்த்துச் சாப்பிடுடா! மெல்ல” என்று சொல்லிக் கொண்டே அவனிடமிருந்து தம்ளரை வாங்கி வைத்தார்.

இவ்வாறு ஆளாளுக்கு அவனை கேலி செய்ய அபிமன்யூவுக்கு முதல் முறையாக தான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறோம் என்ற கேள்வி எழாமல் இல்லை. எல்லா கேள்விகளையும் ஓரங்கட்டிவிட்டு மாலை அலுவலகத்தில் தன்னுடன் எந்த விஷயமாக ஸ்ராவணி பேச வருகிறாள் என்று யோசித்து மண்டையை உடைத்துக் கொண்டிருந்தான் அவன்.

ஸ்ராவணி இந்த பிரச்சனை அனைத்திற்கும் சூத்திரதாரியான அவனை மனதிற்குள் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள். மாலை அலுவலகம் முடிந்து கிளம்பும் போது அனைவரும் பூர்வியின் கேபினில் ஆஜராக பூர்வி ஷிவானியின் பிறந்தநாளை ஊட்டியில் கொண்டாடப் போவதாக சொல்லவும் அனைவருக்கும் சப்பென்று ஆனது.

ரகு வாய்விட்டே “என்ன மேடம் இது? நாங்களும் உங்க ஃபேமிலியை பாக்கலாம்னு ஆசையா காத்திருந்தோம். நீங்க என்னடான்னா இப்போ ஊட்டியில பர்த்டே செலிப்ரேசன்னு சொல்லுறிங்க. அப்போ நாங்க எப்பிடி கலந்துக்கிறதாம்?” என்று குறைபட பூர்வி சிரிப்புடன் “நீங்கல்லாம் இல்லாம இந்த பர்த்டே செலிப்ரேசன் நடக்குமா ரகு? அன்னைக்கு நம்ம ஆபிஸ் ஸ்டாஃப்ஸ் எல்லாருக்கும் லீவ். நீயூஸ் ரீடர்ஸ் மட்டும் தான் வருவாங்க. சோ டோண்ட் வொர்ரி. எல்லாருமா சேர்ந்து ஊட்டி வந்து என் பொண்ணை மனசார வாழ்த்துங்க” என்று சொல்ல இப்போது அனைவரின் முகத்திலும் சந்தோசக்களை.

அனைவரும் பூர்வியிடத்தில் விடைபெற்று வெளியேற ஸ்ராவணியும் மேனகாவும் கூட ஒரு தலையைசைப்புடன் வெளியேறினர். ஸ்ராவணி பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தவள் மேனகாவிடம் “மேகி! நீ கெளம்பு. இன்னைக்கு நான்ஸி லண்டன் கிளம்புறால்ல, அவளுக்கு போய் ஹெல்ப் பண்ணு. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை நான் முடிச்சிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி மேனகாவை மட்டும் அனுப்பிவைத்துவிட்டு அபிமன்யூ சொன்ன அலுவலகத்துக்கு செல்ல தயாரானாள்.

ஆட்டோவை மறித்து முகவரியை சொல்லிவிட்டு அமர ஆட்டோ வேகமெடுத்தது.

அதே நேரம் அபிமன்யூவிடம் “பிறந்தநாள் அன்னைக்கு கூடவா ஆபிஸுக்கு போவ? அப்பிடி என்னடா மதியத்துக்கு அப்புறமா உனக்கு வெட்டி முறிக்கிற வேலை?” என்று சுபத்ரா கேட்க அவரை சமாளித்துவிட்டு ஸ்ராவணியை சந்திக்க தயாரானான் அபிமன்யூ.

ஒவ்வொரு சட்டையாக மாற்றி மாற்றிப் போட்டுப் பார்க்க அவனை முறைத்துக்கொண்டு கையிலிருந்த டேபில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின். அவனை நன்கு அறிந்தவன் என்பதால் அபிமன்யூவின் செய்கைக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தவனுக்கு எதுவும் பிடிபடவில்லை. நேரடியாக அவனிடமே கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்தவன் தொண்டையை செருமிக் கொண்டு “அபி! அப்பிடி எந்த வி.ஐ.பியை பார்க்கப் போறடா? ரொம்ப நேரமா ரெடியாயிட்டு இருக்க?” என்று கேட்டுவிட்டு கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தைப் பார்க்க அவன் ஒரு வழியாக ஒரு சட்டையை அணிந்து திருப்தியாகிவிட்டு தலைக்கு ஜெல் தடவிக்கொண்டிருந்தான்.

முடியை சரி செய்தபடியே “வி.ஐ.பி இல்ல அச்சு. என் லைஃபையே புரட்டிப் போட்ட ஒருத்தியை தான் பார்க்கப் போறேன்” என்று பொடிவைத்துப் பேச அஸ்வினுக்கு அது ஸ்ராவணி தான் என்று எப்போதோ தெரிந்து விட்டது.

புன்னகையுடன் தயாராகி நின்றவனைப் பார்த்து எழுந்தவன் “அபி ஆர் யூ சீரியஸ்? ரிப்போர்ட்டர் மேடம் கிட்ட….”என்று சொல்ல வந்தவனை தடுத்த அபிமன்யூ “இப்போதைக்கு எனக்கே எதுவும் கன்ஃபார்மா தெரியல அச்சு. பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு கிளம்ப அஸ்வின் எல்லாம் நல்லபடியாக முடியவேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொண்டான்.

அபிமன்யூ காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். சில நிமிடங்களில் அவனது அலுவலகத்தின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தியவன் விசிலடித்தபடியே அலுவலகக் கதவைத் திறந்து தனது அறைக்குள் சென்று ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தவன் பழக்கத்தோசத்தில் மேஜையில் மீது கால் வைத்து போனை நோண்ட ஆரம்பித்தான்.

ஸ்ராவணி அவனது அலுவலகத்தில் நுழைந்தவள் அவனது அறைக்கதவைத் தட்ட போனில் மூழ்கியிருந்தவன் “யெஸ் கம் இன்” என்று சொல்ல அவள் ஒரு வித சிந்தனையுடனே உள்ளே நுழைந்தாள்.

அவளைக் கண்டதும் சட்டென்று மேஜையிலிருந்த கால்களை எடுத்தவன் “சாரி” என்று சொன்னபடி எழ ஸ்ராவணி அவனை கூரியவிழிகளால் அளவிட்டபடியே நின்றாள்.

அவளது அமைதி அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் புன்னகையுடன் “பிளீஸ் சிட் டவுன்” என்று சொல்ல அவள் சட்டென்று “தேவை இல்ல மிஸ்டர் அபிமன்யூ. நான் ஒன்னும் உங்க கூட உக்காந்து பேசிட்டுப் போக வரல” என்று உஷ்ணக்குரலில் கூற அபிமன்யூ அவளது இந்த திடீர் கோபத்தில் குழம்பினான்.

அவன் பேச வருவதற்குள் கையுயர்த்தி தடுத்தவள் “நீ எதுவும் பேச வேண்டாம். நான் கேக்கிறதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும்” என்று சொல்ல அவன் கையைக் கட்டிக்கொண்டு நின்றான்.

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று மனதிற்குள் குமைந்த ஸ்ராவணி “அனு மூலமா தான் நீ என்னை பத்தி டீடெய்ல்ஸ் தெரிஞ்சுகிட்டியா?” என்று கேட்க அவன் ஆமென்று தலையசைத்தான்.

“சோ அவ சொல்லித் தான் நீ என்னோட என்கேஜ்மெண்டை நிறுத்தினது, என்னோட வீட்டை வலுக்கட்டாயமா என் கிட்ட இருந்து வாங்குனது எல்லாமே” என்று கேட்க அதற்கும் தலையசைப்பே பதிலாக கிடைத்தது அவளுக்கு. அவனது மவுனம் அவளது கோபத்தை அதிகரிப்பதைப் புரிந்து கொள்ளாமல் அவன் நிற்க அவள் எரிச்சலில் பேச ஆரம்பித்தாள்.

“இப்பிடியெல்லாம் நடந்துக்க உனக்கு வெக்கமாவே இல்லையா? அனுவோட பணத்தேவையை நீ உனக்குச் சாதகமா பயன்படுத்தி என்னைப் பத்தி டீடெய்ல்ஸை அவ கிட்ட வாங்கிருக்க. இதுல்லாம் செய்யுறப்போ உனக்கு கொஞ்சம் கூடவா மனசு உறுத்தல? நீ பண்ணி வைச்ச காரியத்தால இன்னைக்கு எனக்கு எவ்ளோ பிரச்சனை தெரியுமா? என் வாழ்க்கையில நான் உன்னைப் பாத்திருக்கவே கூடாது. அது தான் நான் செஞ்ச முதல் தப்பு. ரெண்டாவது தப்பு அந்த பேப்பர்ஸ்ல படிக்காம சைன் பண்ணுனது” என்று கசந்தக் குரலில் சொல்ல அவனுக்கோ இதை சொல்லத் தான் இவள் வரச் சொன்னாளா என்ற எரிச்சல்.

அதை மறைத்தக் குரலில் “லிசன் ஸ்ராவணி அதுல்லாம் முடிஞ்சு போன விஷயம். அதை இப்போ பேசி என்ன ஆகப் போகுது?” என்று பொறுமையை இழுத்துப்பிடித்து விளக்க

ஸ்ராவணி “அதை தான் நானும் சொல்லுறேன். நடந்து முடிஞ்ச இந்த விஷயங்கள்ல இருந்தே நீ யாரு, எப்பிடிப்பட்டவன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு. அதனால தான் உன் கிட்ட கடைசியா பேசி முடிச்சிட்டுப் போலாம்னு வந்தேன். இனிமே நம்ம சந்திக்கிறதா இருந்தா அது கோர்ட்ல நம்ம ஃபைனல் ஹியரிங்குக்காகத் தான் இருக்கணும். அதுக்கு இடையில நீயோ நானோ தெரியாம சந்திச்சுகிட்டாக் கூட முன்னப் பின்ன தெரியாதவங்க மாதிரி போயிடலாம். ஏன்னா எனக்கு உன் முகத்தைப் பார்க்கக் கூடப் பிடிக்கல” என்றாள் வெறுத்துப்போன குரலில்.

அபிமன்யூ சிகையைக் கோதி தன்னை ஆசுவாசப்படுத்தியவன் அவளை ஏறிட்டுப் பார்த்து “சொல்ல வேண்டியது எல்லாத்தையும் சொல்லியாச்சா? இப்போ கிளம்புங்க ரிப்போர்ட்டர் மேடம். ஆனா போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் கேட்டுட்டுப் போங்க. அப்பிடி உங்க இஷ்டத்துக்குலாம் என்னால ஆட முடியாது. எனக்கு உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சுனா நான் நேர்ல வந்துப் பார்க்கத் தான் செய்வேன். இதை நீ இல்ல உங்க அப்பனே நெனைச்சாலும் தடுக்க முடியாது” என்று உறுதியான குரலில் சொல்லி முடித்தான்.

அவனது பேச்சு அவளது சினத்தை அதிகரிக்க விரலை நீட்டி “இன்னொரு வார்த்தை எங்கப்பாவை மரியாதை இல்லாம பேசுனா அவ்ளோ தான். இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன் நீ எதுக்குடா என்னைப் பாக்கணும்? தெருவுல போறவன் வர்றவன்லாம் பாத்துட்டுப் போக நான் ஒன்னும் எக்சிபிசன்ல இருக்கிற பொம்மை கெடயாது” என்றாள் கடுங்கோபத்துடன்.

அவளது கடைசி வார்த்தை அவனைச் சீண்டிவிட “நீ ஒரு விஷயத்தை மறந்துட்டுப் பேசுற வனி. இன்னும் டிவோர்ஸ் ஆகல. யூ ஆர் மை அஃபிஷியல் ஒய்ஃப் டில் நவ் அண்ட் ஐ ஹேவ் ஃபுல் ரைட் டு சீ யூ” என்று சொல்ல

அவளும் அதே கோபத்துடன் “உன்னோட ஒய்ஃப்னு இன்னொரு தடவை சொல்லாத! இப்பிடி அடுத்தவங்க இயலாமையை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிற ஒருத்தன் எனக்கு புருசனா மட்டும் இல்ல ஒரு மனுஷனா இருக்கிறதுக்கு கூட தகுதியில்லாதவன் ” என்று சொல்லிவிட்டு அவள் அந்த அறைக்கதவைப் படாரென்று அறைந்துச் சாய்த்துவிட்டுச் செல்ல அபிமன்யூ கோபத்துடன் மேஜையின் மீதிருந்த பொருட்களைத் தள்ளிவிட்டவன் நாற்காலியை எட்டி உதைத்துவிட்டு தலையில் கைவைத்துக் கொண்டான்.

அங்கிருக்க பிடிக்காமல் ரிசார்ட்டுக்கு சென்றவன் கோபத்தில் மதுபானத்தை பாட்டில் பாட்டிலாக காலி செய்ய அவன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் கவலைப்பட்ட அஸ்வின் போன் செய்த போது அதை எடுத்தவன் குழறலாகப் பேசத் தொடங்கவுமே அஸ்வினுக்கு விளங்கிவிட்டது அவன் முழு போதையில் இருக்கிறான் என்று.

வீட்டில் சுபத்ராவிடம் சொல்லிவிட்டு கிளம்பியவன் ரிசார்ட்டுக்கு வந்த போது மொத்த ரிசார்ட்டும் இருட்டில் மூழ்கியிருக்க அபிமன்யூவின் அறையில் மட்டும் விளக்கு எரிந்தது. அவன் எந்த நிலையில் இருக்கிறானோ என்ற பதற்றத்தில் அவனது மாடியறைக்குச் செல்ல தரையில் உருண்டு வந்த பாட்டில்களே அவனது நிலையைச் சொல்லாமல் சொல்ல அஸ்வின் ஓடிச் சென்று அபிமன்யூவின் கையிலிருந்த பாதி காலியாகியிருந்த பாட்டிலைப் பிடுங்கினான்.

“என்னடா அபி? என்னாச்சு உனக்கு? ஏன் இப்பிடி? என்னடா நடந்துச்சு?” என்று கேட்டபடி அவனை தோள் கொடுத்து தூக்க அவன் சரிந்த கால்களை நேராக எடுத்துவைக்க சிரமப்பட்டான்.

ஒரு வழியாக அவனைத் தூக்கி படுக்கையில் கிடத்த அவன் புலம்பிக்கொண்டே இருந்தான். அஸ்வின் முதலில் சிதறிக் கிடந்த பாட்டில்களை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு நண்பனை எழுப்பி உட்காரவைத்தான்.

“அபி கொஞ்சம் இங்க பாரு! நான் அச்சுடா! என்னாச்சு உனக்கு? ஏன்டா இப்பிடி குடிக்கிற?” என்று கேட்க

அவன் குழறலுடன் “வனி……மூஞ்சிலயே முழிக்காதனு சொ…சொல்லிட்டா அச்சு….எனக்கு…” என்று சொல்லும் போதே விக்கல் வர அஸ்வின் ஓடிச் சென்று தண்ணீரை எடுத்துவந்து குழந்தைக்குப் புகட்டுவதைப் போல கொடுத்துவிட்டு வழிந்த தண்ணீரைத் தன் டிசர்ட்டால் துடைத்து விட்டான்.

அபிமன்யூ இன்னும் போதை குறையாமல் “கஷ்டமா இருக்கு அச்சு………நான்…அவளை….எனக்கு அவளைப் பிடிக்கும்டா முதல்ல பார்த்ததுல இருந்தே….அன்னைக்கு அந்த பிளாக் டிரஸ்ல கண்ணுல கோபம்………கோபத்தோட அவ்ளோ அழகுடா…….நோ நோ…வெறும் அழகு இல்ல…..தைரியம், ஸ்மார்ட்னெஸ் எல்லாமே பிடிச்சிருக்கு….ஆனா அவளுக்கு என்னைப் பிடிக்கலடா……………” என்று புலம்ப அஸ்வினுக்கு ஓரளவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிந்தது.

அவனைச் சிரமப்பட்டு சமாதானப்படுத்திவிட்டு தோள் கொடுத்துத் தூக்கிச் சென்று காரில் படுக்க வைத்தவன் நண்பனின் நிலையைப் பார்த்து கண்ணில் தேங்கத் தொடங்கிய கண்ணீரை விழுங்கிவிட்டு காரை எடுத்தான் அஸ்வின்.

நாம் விரும்பியவர்கள் நம்மை வெறுக்கும் போது தான் நம் மனம் அதிகமாக அவர்களின் அருகாமையை நாடும் என்பது மறுக்க முடியாத உண்மை.