🖊️துளி 23👑

பார்த்திபனும், சகாதேவனும் மருத்துவமனையில் சேர்ந்து ஒரு வாரமாகிவிட்டது. இருவரும் அபாயம் எதுவுமின்றி சில பல காயங்களுடன் உயிர் தப்பித்ததே பெரிய விஷயம் என்று விபத்து நடந்த விதம் பற்றி அறிந்துகொள்ள அபிமன்யூ சென்ற போது அந்த விபத்தை கண் முன் பார்த்த ஒரு நபர் அபிமன்யூவிடம் கூற அவனுக்கு இது கண்டிப்பாக விபத்து அல்ல, கொலைமுயற்சி தான் என்பது தெளிவானது.

ஆனால் கொலை செய்யுமளவுக்கு தந்தைக்கு அரசியலில் யார் விரோதியாக இருக்க முடியும் என்று யோசித்தவனுக்கு அவன் கண் முன் வந்த ஒரு நபர் ஜெகதீசன் மட்டுமே. ஆனால் அஸ்வின் அவரை கண்காணித்த வரையில் அவர் மீது தவறு இருக்க வாய்ப்பில்லை என்றே கூறிவிட அபிமன்யூ குழம்பி போனான். இந்நிலையில் தான் வாசுதேவன் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து கோர்ட்டில் ஆஜர் படுத்த பட்டார்.

அன்றையை டிரையல் முடிந்து வெளியே வரும் போது சி.பி.ஐ. அதிகாரி பத்திரிக்கையாளரிடம் அளித்த பேட்டி டிவியில் ஒளிபரப்பாக சுபத்ரா அதை தான் பார்த்துக் கொண்டிருந்தார். அபிமன்யூ கட்சி அலுவலகம் செல்ல தயாரானவன் செய்தியை பார்த்ததும் அவனும் சோஃபாவில் அமர்ந்து பார்க்கத் தொடங்கினான்.

அந்த அதிகாரி சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின் படி வாசுதேவன் மீது ஊழல் குற்றச்சாட்டுடன் முக்கியச் சாட்சியை கொல்ல முயன்ற குற்றமும் உள்ளதாக கூற யாரந்த சாட்சி என்று அஸ்வினும் டிவியை உற்று கவனிக்க அதில் பார்த்திபனின் புகைப்படம் காண்பிக்கப்பட்டது.

பார்த்திபன் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான் இந்த மருந்து கொள்முதல் ஊழல் நடந்துள்ளது என்றும், அதில் அப்போதைய முதலமைச்சராக இருந்த வாசுதேவனை பார்த்திபன் எச்சரிக்க முயன்றதாகவும் அதை மீறி அவர் மருந்து கம்பெனிகளிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். வெளிவராத இந்த ஊழல் விவகாரம் பத்திரிக்கை துறையின் கவனத்தை ஈர்த்ததும் வாசுதேவன் தான் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக பார்த்திபன் மீதே தவறு இருக்கும்படி சாட்சிகளை தயார் செய்ததாகவும் கூறினார்.

பார்த்திபனும் தன்னுடைய நெருங்கிய உறவினரான வாசுதேவனை காப்பதற்காக பழியை தன் மீது போட்டுக் கொண்டதாகவும், அதற்காக தான் கட்சியில் தன்னுடைய மகனுக்கு ஒரு நிரந்தர இடத்தை தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டதாகவும் கூறிய அவர் சி.பி.ஐ பார்த்திபனின் டெலிபோன் கால்களை கண்காணித்தது அவருக்கு தெரியாததால் அவரும் வாசுதேவனும் பேசிய டெலிபோன் கால்களே வாசுதேவன் பிடிபட முக்கிய காரணிகளாயின என்று கூறினார்.

பார்த்திபன் எங்கே சி.பி.ஐ சாட்சியாக மாறிவிடுவாரோ என்ற பயத்தில் அவரை ஆள் வைத்து கொல்ல முயன்றதும், அதை ஒரு விபத்து மாதிரி காண்பிக்க முயன்றதும் கூட வாசுதேவனின் டெலிபோன் பேச்சில் பதிவாகியிருந்ததாக கூறினார்.

நிருபர்கள் வாசுதேவனுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு அவர் ஜாமீனில் வெளிவந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று விளக்கிவிட்டு காரில் ஏறி செல்ல இந்த அனைத்தையும் கேட்ட அபிமன்யூவிற்கு தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது.

அவன் நிலை தான் அப்படி என்றால் சுபத்ராவை பற்றி கேட்கவே வேண்டாம். உடன்பிறந்த அண்ணனே இப்படி கணவரை கொல்ல பார்த்ததை அறிந்ததும் மனமுடைந்து போனார். அஸ்வின் அவரை ஆறுதல் படுத்த அபிமன்யூவிற்கு இந்த அரசியல் விளையாட்டில் தன் தந்தை தேவை இல்லாமல் பலிகடா ஆக்கப்பட்டதை நினைத்து மனம் பொறுக்கவில்லை.

அச்சமயம் ஸ்ராவணியின் “நீயும் உங்க அப்பாவும் சரியான முட்டாளுங்க”, “அவரு அங்கே இருக்கிறது தான் அவருக்கு பாதுகாப்பு” என்ற வார்த்தைகள் நினைவில் தோன்ற தான் எவ்வளவு பெரிய அறிவிலியாக இருந்திருக்கிறோம் என்று நினைத்து வருந்தியவன் அன்னையை தேற்றிவிட்டு அவரையும், அஸ்வினையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

அன்று அவனது அப்பாவும், சித்தப்பாவும் டிஸ்சார்ஜ் ஆக இருப்பதால் மருத்துவமனை செயல்முறைகளை முடிப்பதற்காக மூவரும் சென்றனர்.

சுபத்ரா கணவரை கண்டதும் கண் கலங்கியவர் வீல்சேரில் அமரவைக்கப்பட்டிருந்த மைத்துனரை கண்டதும் சோகம் தாளாமல் அழுதுவிட்டார். சகாதேவன் எப்போதும் போல சாந்தமான முகத்துடன் “அண்ணி! நான் சரியாயிடுவேன். இந்த வீல்சேர் கொஞ்ச நாளுக்கு தான்” என்று சொல்ல கண்ணீரை துடைத்துவிட்டு மைத்துனரை பார்த்தார் அவர்.

அஸ்வினும் அபிமன்யூவும் டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டிகளை முடிக்கச் செல்ல அந்நேரம் பார்த்து வந்து சேர்ந்தனர் ஸ்ராவணியும், மேனகாவும். சுபத்ரா சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்க அண்ணன், தம்பி இருவருக்கும் குழப்பம்.

சுபத்ரா அவர்களின் குழம்பிய முகத்தை கண்டவர் “உங்க ரெண்டு பேரையும் ஆக்சிடெண்ட் நடந்த இடத்தில இருந்து கொண்டு வந்து அட்மிட் பண்ணுனது இவங்க தான். மேனகா தான் உங்களுக்கு ரத்தம் குடுத்தா” என்று சொல்ல இருவருக்குமே முகத்திலிருந்த குழப்பம் விலக சகாதேவன் மலர்ந்த முகத்துடன் “நீங்க எங்களுக்கு இன்னொரு ஜென்மத்தை குடுத்திருக்கிங்கம்மா” என்று மனதாற நன்றி கூறினார்.

பார்த்திபன் பேசாவிட்டாலும் அவரின் பார்வையில் அந்த பெண்களின் மீது அவருக்கு இருக்கும் நன்றி வெளிப்பட அவர் இருவரையும் நோக்கி ஒரு புன்னகையை வீசினார். அந்நேரம் பார்த்து அபிமன்யூ வர மகனை எப்போதும் போல பெருமிதத்துடன் பார்த்தார். ஆனால் அவன் பார்வையில்  ஒருவித வெறுமையிருக்க மகனை ஆதுரத்துடன் அழைத்தார் அவர்.

அவன் சென்று அவர் அருகில் அமர “என்னடா ஆச்சு உனக்கு? உன் முகமே சரியில்லயே” என்று கேட்க ஸ்ராவணி நடந்ததை ஊகித்தவளாய் “உங்க பையன் நியூஸ் பாத்துருப்பாரா இருக்கும் சார். அதான் வாய்ல இருந்து வார்த்தையே வரல” என்று சொல்ல பார்த்திபன் குழப்பத்துடன் சுபத்ராவை பார்த்தார்.

அவரால் எதுவும் பேசமுடியாமல் போக அஸ்வின் “அங்கிள் எங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சுபோச்சு! வாசுதேவன் சார் உங்களுக்கு பண்ணுன எல்லா அநியாயமும் இன்னைக்கு நியூஸ்ல வந்துடுச்சு” என்றான் வாசுதேவன் என்ற பெயரை வெறுத்தவனாய்.

பார்த்திபன் பதறியவராய் “ஏன்? என்னாச்சு? இன்னைக்கு ஹியரிங் முடிஞ்சு அவருக்கு ஜாமீன் கெடைச்சிருக்கும்னு நான் நெனைச்சேன். நீங்க சொல்லுறதை வச்சு பார்த்தா….” என்று மேற்கொண்டு பேசுவதற்குள் இடைமறித்த ஸ்ராவணி “நீங்க அவருக்கு இவ்ளோ நாளா உண்மையா இருந்ததுக்கு அவர் உங்களையும், உங்க தம்பியையும் கொல்லுற லெவலுக்கு போயிட்டாரு. இதுக்கு மேலயும் நீங்க அவரை பத்தி நினைச்சிங்கன்னா உங்க தம்பிக்கு அடுத்து உங்க பையைனையும் இழக்க வேண்டியதா வரும் சார்” என்றாள்.

அவள் சொன்னதிலிருக்கும் விஷயத்தை நம்ப முடியாமல் மகனை பார்க்க அபிமன்யூ காலையில் டிவியில் வந்த செய்தியை கூற அவரால் நம்பவே முடியவில்லை. அவர் தன்னை விட வாசுதேவனை அந்த அளவுக்கு நம்பியிருந்தார். அவர் தன் குடும்பத்தையும், குழந்தைகளையும் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில் தான் அவர் மீது இருந்த பழியை தன் மீது சுமத்திக் கொண்டு சிறைக்கு செல்ல தயாராக இருந்தார்.

ஆனால் இன்று அவரே தனக்கும், தன் தம்பிக்கும் எமனாக மாறிவிட்டதை அறிந்தவரின் மனம் புண்பட்டது என்னவோ உண்மை. ஆனால் அரசியல்வாதி அல்லவா! வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

ஸ்ராவணியை புன்னகையுடன் நோக்கியவர் “இங்க பாருங்க ரிப்போர்ட்டர் மேடம், நீங்க என்னை பத்தி ஒரு ரிப்போர்ட்டரா கவலைப்பட்டிங்களா இல்ல மருமகளா கவலைப்பட்டிங்களானு தெரியல. ஆனா என் பையனை நான் இழந்துடுவேனு மட்டும் பயப்படாதிங்க. அவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது. அபிமன்யூ எனக்கு மகாபாரதத்துல ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம். தன்னோட அப்பாவுக்காக என்ன வேணும்னாலும் செய்யத் தயாரா இருந்தவன். அதே மாதிரி தான் என் பையனும். அவனை எப்பிடி பாதுகாத்துக்கணும்னு அவனுக்கே நல்லா தெரியும்” என்று பெருமிதமாக சொல்ல அந்த அறையில் அவ்வளவு நேரம் இருந்த சோகமான சூழ்நிலை மாறியது.

ஸ்ராவணி பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டவள் “எல்லாம் சரி தான் மாமனாரே! நானும் மகாபாரதம் படிச்சிருக்கேன். அதுல அபிமன்யூவுக்கு ஆயுசு கம்மி! அதையும் கொஞ்சம் மனசுல வச்சுகிட்டு நீங்களும் உங்க பையனும் கவனமா இருங்க” என்று சொல்லிவிட்டு அர்த்தம் நிறைந்த பார்வையுடன் அனைவரிடம் இருந்தும் விடைபெற்றுவிட்டு கிளம்பினாள்.

அவள் சென்றதும் பார்த்திபன் “அந்த பொண்ணு சொல்லுறதுலயும் விஷயம் இருக்கு அபி. கொஞ்ச நாளைக்கு நீயும், அஸ்வினும் கவனமா இருங்க. நான் சரியானதும் மத்த விஷயங்களை நான் பாத்துக்கிறேன். நான் என்னோட குடும்பத்துக்கு எப்போவும் எதுவும் ஆகவிட மாட்டேன்டா” என்றார் ஒரு பொறுப்பு மிகுந்த குடும்ப தலைவராக.

**********************************************************************************

ஸ்ராவணி அலுவலகத்துக்கு மேனகாவுடன் வந்தவள் மேனகாவிடம் “இவரோட கொழுப்பு தான் அந்த அபிமன்யூவுக்கும் மேகி! இன்னும் 5 மாசத்துல டிவோர்ஸை வச்சுகிட்டு இவருக்கு நான் மருமகளாம். எல்லாம் உன்னோட பாழா போன ஐடியாவால தான்” என்று பொருமியபடி தன்னுடைய கேபினை அடைந்தாள். அதன் பின் பேக்கை கழற்றிவிட்டு கம்ப்யூட்டரை ஆன் செய்தவள் விஷ்ணுவின் கேபினுக்கு சென்று ஒரு அட்டெண்டென்சை போடச் சென்றாள். அங்கே சென்றதும் எப்போதும் போல விஷ்ணுவுக்கு ஒரு வணக்கத்தை போட பூர்வி மகிழ்ச்சியுடன் ஒரு செய்தியை அவளிடம் பரிமாறிக் கொண்டாள்.

விஷ்ணு, பூர்வியின் மகளான ஷிவானியின் ஏழாவது பிறந்தநாளை இந்த வருடம் சென்னையில் கொண்டாடப் போவதாக கூறியவள் அதற்கு கோவை அலுவலகம், சென்னை அலுவலகத்திலிருந்து அனைவரையும் அழைக்கப் போவதாக கூற ஸ்ராவணி அவள் கூறுவதை தலையாட்டிவிட்டு வெளியேறியவள் நேரே சுலைகாவின் கேபினுக்குச் சென்றாள். அங்கே மேனகா, சுலைகா மற்றும் ரகுவும் இருக்க ஸ்ராவணியை கண்ட மேனகா மறுபடியும் தன்னைத் திட்ட தான் வருகிறாளென்று நழுவ முயன்றாள்.

அவளின் கையை பற்றி நிறுத்தியவள் “இப்போதைக்கு உன்னை திட்டுற மைண்ட் செட் எனக்கு இல்ல மேகி. நான் சொல்ல வந்த விஷயமே வேற” என்று பூர்வி கூறிய தகவலை சொல்ல அனைவரும் குழந்தைக்கு என்ன பரிசு அளிக்கலாம் என்று யோசனையில் மூழ்கியபடி வேலையை கவனிக்க ஆரம்பித்தனர்.

**********************************************************************************

அபிமன்யூவும், அஸ்வினும் பார்த்திபன் சகாதேவனை அவரவர் அறையில் கொண்டு சென்று விட்டவர்கள் மாடிக்கு திரும்பி சோஃபாவில் ஆசுவாசப் படுத்திக் கொள்ள அமர்ந்தனர். அபிமன்யூ “அச்சு! எனக்கு கொஞ்சம் கசகசனு இருக்கு. நான் போய் குளிச்சிட்டு வர்றேன்டா” என்றபடி டவலுடன் குளியலறைக்குள் புக அஸ்வின் டிவியை போட்டவன் அதிலேயே மூழ்கி விட்டான்.

அபிமன்யூ குளித்துவிட்டு திரும்பியவன் வார்ட்ரோபிலிருந்து டிசர்ட்டை எடுக்கும் போது ஒரு சிறிய பெட்டி கீழே விழ அதை எடுக்க குனிந்தவன் திறந்து கிடந்த பெட்டியிலிருந்து விழுந்த செயினை கையில் எடுத்து பார்த்தான்.

அஸ்வின் அவ்வளவு நேரம் தொலைக்காட்சியிலிருந்து விழியை எடுக்காதவன் அபிமன்யூ கையில் செயினுடன் யோசனையில் ஆழ்ந்ததை பார்த்தவன் ரிமோட்டால் நெற்றியில் தட்டிக்கொண்டபடி “டூ பேட் அபி” என்று சொல்ல அவன் திடுக்கிட்டவனாய் அந்த செயினை மீண்டும் அந்த பெட்டியிலேயே வைத்தான்.

அஸ்வின் குறும்புடன் “மச்சி! அது ரிப்போர்ட்டரோட செயின் தானே” என்று கேலியுடன் கேட்க அபிமன்யூ “ஆமாடா. அதுக்கும் நீ கேக்கிற மாடுலேசனுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லடா” என்று சொல்லிவிட்டு பெட்டியை உள்ளே வைத்து மூடியவன் டிசர்ட்டை அணிந்துவிட்டு லேப்டாப் முன் அமர்ந்தான்.

அஸ்வின் “அதை ஏன்டா இன்னும் வச்சிட்டு சுத்துற? அந்த பொண்ணு கிட்ட குடுத்துட வேண்டியது தானே” என்றான் கேலியுடன்.

அபிமன்யூ அவன் புறம் திரும்பி “அவ தானே சொன்னா ‘இந்த செயினை திருப்பதி பெருமாள் உண்டியல்ல போட்ட மாதிரி நினைச்சிக்கிறேனு’. எப்பிடி அவரு கிட்ட போனது அவருக்குச் சொந்தமோ அதே மாதிரி இது இனிமே எனக்கு சொந்தம்” என்று சொல்ல அஸ்வின் அவனை நம்ப முடியாமல் பார்த்தான்.

“அஹான்! இது மட்டும் தான் காரணமா? இல்ல வேற எதாச்சும்….” என்று அவன் இழுக்க அபிமன்யூ சிரிப்புடன் “வேற ஒரு காரணமும் இருக்குடா” என்று சொல்ல அஸ்வின் ஆர்வத்துடன் அவன் சொல்ல வருவதை கவனித்தான்.

அபிமன்யூ மெதுவாக “அது என்ன காரணம்னா இது கோல்ட் செயின்டா. இன்னைக்கு தங்கம் என்ன விலை விக்குது? அவ சேலரிக்கு இந்த செயின்லாம் ஒரு மேட்டரே இல்லாம இருக்கலாம். ஆனா நாம அப்பிடியா அச்சு? கிளையண்டை எதிர்ப்பார்த்து நிக்குற சாதாரண அட்வகேட்ஸ். நமக்கு ஒவ்வொரு குண்டுமணி தங்கமும் பெரிய விஷயம்டா” என்று தீவிரமான குரலில் சொல்லிவிட்டு மீண்டும் லேப்டாப்பில் மூழ்க ஆரம்பித்தான்.

அஸ்வின் “சார் மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குற எம்.எல்.ஏ நீங்க. நீங்க கிளையண்டை எதிர்ப்பார்த்து இருக்கிங்களா? டேய் ஊரை ஏமாத்துற மாதிரியே என்னையும் ஏமாத்ததேடா. ரிப்போர்ட்டரை ஃபர்ஸ்ட் டைம் பாத்ததுல இருந்தே நீ சரியில்லனு எனக்கு நல்லாவே தெரியும்டா. இடையில நடந்த டிராமா எல்லாமே வேற விசயம். ஆனா இந்த செயின் மேட்டர்ல ஏதோ இருக்கு” என்று சொல்ல அபிமன்யூ அவனை கேலியாய் பார்த்தான்.

“செயின் மேட்டர்ல என்ன இருக்கோ எனக்கு தெரியாதுடா. என்னோட நான்ஸி டார்லிங் இன்னும் டூ டேய்ஸ்ல இந்தியா வர்றா. எனக்கு மெயில் பண்ணியிருக்கா பாரு” என்று நான்ஸியின் மெயிலை காட்ட அஸ்வின் அயர்ந்து போனான்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்த பொண்ணோட செயினை கையில வச்சு மனசுருக பாத்தான். இப்போ எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட் வர்றானு சந்தோசப்படுறான். இவனை எந்த கேட்டகரில சேக்கறதுனே புரியலடா அச்சு” என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டான் அவன்.