🖊️துளி 22👑
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அபிமன்யூவின் எச்சரிக்கைக்கு பின் அனைவரும் அமைதி காக்க மதியழகன் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொண்டர்களை நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்த மூத்த உறுப்பினர்களை வேண்டிக் கொண்டார். நாளை தற்காலிக முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை அறிவித்த பின்னர் கோஷ்டியினர் கலைந்தனர். அபிமன்யூ அவரிடம் பேசிவிட்டு மருத்துவமனைக்கு செல்வதற்காக அஸ்வினுடன் கிளம்பினான்.
காரில் செல்லும் போது அஸ்வினிடம் “அச்சு! மதியழகன் அங்கிளை ஏன் பேச வைக்கலானு நீ சொன்னடா? எனக்கு காரணம் புரியல” என்று விளங்காமல் கேட்க அவன் காரை ஓட்டியபடி நண்பனின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தான்.
“அபி நீ கட்சியோட எல்டர் மெம்பர்ஸ் அண்ட் மினிஸ்டர்சோட டீடெய்லை கலெக்ட் பண்ண சொன்னது நியாபகம் இருக்கா? அப்போ தான் எனக்கு மதியழகன் பத்தி நெறைய விஷயங்கள் தெரிய வந்துச்சு. இந்த கட்சியில கறை படியாத ஒரே அரசியல்வாதி அவர் மட்டும் தான். சில வருசங்களுக்கு முன்னாடி உடலுறுப்பு திருட்டு அவரோட ஹாஸ்பிட்டல்ல நடந்தது சம்பந்தமா ஜஸ்டிஸ் டுடேவோட சீனியர் ரிப்போர்ட்டர் விஷ்ணு பிரகாஷ் ஒரு டாக்குமெண்ட்ரி அந்த சேனல்ல டெலிகாஸ்ட் பண்ணுனாரு. அது ரொம்ப வைரல் ஆச்சு. அதுல சம்மந்தப்பட்டிருந்தது மதியழகன் அங்கிளோட மருமகன் டாக்டர் கிரிதரன் தான். ஆனா சொந்த மருமகனாவே இருந்தாலும் அவன் செஞ்ச தப்புக்காக அவன் மேல கம்ப்ளைண்ட் குடுத்து அந்த கேஸ்ல அவனுக்கு தண்டனை வாங்கி குடுத்தவர்டா அவர். அந்தளவு நல்லவங்க இப்போ அரசியல்ல குறிப்பா இந்த கட்சியில இல்லனு தான் நான் சொல்லுவேன். அதான் அவரை பேச வைக்கலானு உன் கிட்ட சொன்னேன்”
“வாவ் அச்சு! ஹீ இஸ் ரியலி கிரேட். எனக்கு இப்போ இன்னொரு ஐடியா தோணுதுடா” என்று தன்னுடைய எண்ணத்தை அபிமன்யூ வெளியிட அஸ்வின் “அதுல்லாம் ஓகேடா! பட் இதுக்கு கட்சியில மத்தவங்க சம்மதிக்கணும். குறிப்பா அந்த ஜெகதீசன், அந்தாளுக்கு சும்மாவே நம்மளை கண்டா ஆகாது. கண்டிப்பா இதுக்கு அப்போஸ் பண்ணுவாரு” என்று தற்போதையை கட்சி நிலையை எடுத்துரைத்தான்.
அபிமன்யூ புருவத்தை உயர்த்தியவன் “அஹான்! நான் எதுக்கு உன் கிட்ட கட்சியோட சீனியர் மெம்பர்ஸோட பிராப்பர்ட்டி அண்ட் பெர்சனல் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண சொன்னேனு மறந்துட்டியாடா அச்சு?” என்று சொல்லி கண்ணை சிமிட்ட அஸ்வின் ஆச்சரியத்துடன் “டேய் நீ திருடன்டா” என்று ஸ்டீரியங் வீலை வளைத்தவண்ணம் அவன் தோளில் அடிக்க இரு நண்பர்களும் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்த உற்சாகத்துடன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
இருவரும் ஐ.சி.யூவிற்கு வருகையில் மேனகாவை அமரவைத்து ஸ்ராவணியும், சுபத்ராவும் ஏதோ பதற்றமாக பேசி கொண்டிருக்க மேனகா தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தாள். அஸ்வினும் அபிமன்யூவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அவர்களிடம் வந்து நின்றனர்.
“மா! என்னாச்சு இவங்களுக்கு?” என்று அபிமன்யூ யோசனையுடன் கேட்க சுபத்ரா கவலை தோய்ந்த முகத்துடன் “அபி! இன்னைக்கு அப்பாக்கும், சித்தப்பாக்கும் மேகி தான் ரத்தம் குடுத்தாடா. நான் அப்போவே சொன்னேன், வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கோனு. ஆனா கேக்காம ஆபிஸுக்கு போயிட்டா. இப்போ தலை சுத்துதுனு உக்காந்திருக்கா. அவ டயர்டா இருக்காடா. இந்த மாதிரி இருக்கிறப்போ எப்பிடி அவளை ஸ்கூட்டியில அனுப்புறது?” என்றார் யோசனையுடன்.
அபிமன்யூ ஸ்ராவணியை சுட்டிக்காட்டி “இதோ இருக்காங்களே வொண்டர் விமன்! இவங்க தோள்ல தூக்கி வச்சிட்டு போவாங்கம்மா. பிளட் டொனேட் பண்ணுனவங்களை ரெஸ்ட் எடுக்க விடாம ஆபிஸுக்கு கூட்டிட்டு போனது இவங்க தானே” என்று அந்த நேரத்திலும் அவளை வம்பிழுக்க அவள் பல்லைக் கடித்து கொண்டாள்.
இப்படியே விட்டால் இவர்கள் மருத்துவமனையை போர்க்களம் ஆக்கிவிடுவார்கள் என்று நினைத்த அஸ்வின் சட்டென்று “மா! நான் கார்ல அவங்களை டிராப் பண்ணுறேன்மா” என்று சொல்ல அபிமன்யூவும், ஸ்ராவணியும் ஒரே நேரத்தில் அவனை திரும்பி கேள்வியாய் பார்க்க அஸ்வின் சமாளித்து கொண்டு “அது,….அம்மா இப்போ கெளம்பிடுவாங்க. அபி அங்கிளையும், சித்தப்பாவையும் பாத்துக்கணும் இல்லயா? அதான் நான் கொண்டு போய் விடுறேனு சொன்னேன்” என்று பூசி மெழுகினான்.
சுபத்ரா மேனகாவிடம் “அதுவும் சரி தான். மேகி கொஞ்சம் எழுந்திருடா. அச்சு உன்னை கொண்டு போய் விட்டுடுவான்” என்க மேனகாவுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்ததில் அவளால் மறுக்கவும் இயலவில்லை. ஆனால் எழுந்து நின்றவளுக்கு கால்கள் பின்னியதால் கீழே விழப் போக அஸ்வின் அனைவருக்கும் முந்திக் கொண்டு அவளை கைகளில் தாங்கிக் கொள்ள ஸ்ராவணி திகைப்பில் வாயைப் பிளந்தாள்.
மனதிற்குள் “அந்த எருமையோட கம்பேர் பண்ணுறப்போ இந்த அஸ்வின் கொஞ்சம் பரவால்ல. என்ன, மேகிக்கு கான்சியஸ் இல்ல. இருந்திருந்தா இந்நேரம் இங்கே ஒரு வாட்டர்லூ போரே நடந்திருக்கும்” என்று எண்ணிக் கொண்டாள்.
அதற்குள் அஸ்வின் அவளை தன்னுடைய கரங்களில் தூக்கி கொண்டவன்
“மா! நான் இவங்களை ஃப்ளாட்டுல விட்டுட்டு வந்துடுறேன். அபி கொஞ்சம் வெயிட் பண்ணுடா. நான் இப்போ வந்துடுவேன்” என்று அவர்களின் சொல்லிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறவும் டிரைவர் சுபத்ராவை அழைத்து செல்ல வரவும் சரியாக இருந்தது.
டிரைவர வர சுபத்ரா அபிமன்யூவிடம் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியவர் ஸ்ராவணியை பார்த்து “நீ தனியா ஸ்கூட்டியில போயிடுவியாடா?” என்று கவலையுடன் கேட்க அதற்கு ஸ்ராவணி பதிலளிப்பதற்கு முன் முந்திக் கொண்ட அபிமன்யூ “ரிப்போர்ட்டர் மேடம் ரொம்ப தைரியமானவங்கம்மா! அவங்க போயிப்பாங்க. நீங்க கெளம்புங்க” என்று சொல்ல அவர் அவனை ஏறிட்டுவிட்டு ஸ்ராவணியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.
அவர் சென்றதும் ஸ்ராவணியின் முகத்தை அளவிட்டபடி கிண்டலாக “இப்போ ரிப்போர்ட்டருக்கு என் மேல கோவம் வந்திருக்கணுமே” என்று சொல்ல அவள் திரும்பி அவனை முறைத்தவாறே “கோவமா? அதுவும் உன் மேலயா? சேச்சே சான்ஸே இல்ல” என்றாள் சிரமத்துடன் கோபத்தை அடக்கியபடியே.
அவன் வராண்டாவின் கைப்பிடி சுவற்றில் சாய்ந்தவன் கைகளை கட்டிக் கொண்டு “பட் இந்த நெறிஞ்ச புருவம், கடுகடுனு இருக்கிற முகம் இதெல்லாம் பாத்தா நீங்க ஒன்னும் சந்தோசமா இருக்கிற மாதிரி தெரியலயே” என்று கேலி செய்ய
அவள் கடுப்புடன் “போதும்டா. இதுக்கு மேல என்னால கோவத்தை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாது. இல்ல நான் தெரியாம தான் கேக்கிறேன், நான் என்ன உன் சொத்தையா எழுதி வாங்குனேன்? எப்போ பாரு என்னை பத்தி குதர்க்கமா பேசிட்டே இருக்க நீ. நான் என்னோட வேலையை தான் செஞ்சேன். உங்க அப்பா தப்பு பண்ணுனாரு, அவரு உள்ளே போனாரு. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்று சீற்றத்துடன் அவனை பார்த்தாள் அவள்.
அபிமன்யூ புருவத்தை உயர்த்தி “அப்போ நீங்க உங்க புரஃபசனல் எதிக்ஸை எந்த இடத்திலயும் பிரேக் பண்ணல, அப்பிடி தானே?” கிண்டலாக கேட்டுவிட்டு வருவோர் போவோரை பார்க்க ஆரம்பிக்க ஸ்ராவணி இதோடு ஆயிரத்து ஐநூறாவது முறையாக அவனது வீடியோவை வெளியிட்டதற்கும், சேனலை ஹேக் செய்ததற்கும் அவளையே அவள் திட்டி தீர்த்தாள் மனதிற்குள்.
“ஓகே! அந்த வீடியோ லீக் ஆனது தப்பு தான். அதுக்கு ஐயாம் ரியலி சாரி” என்று சொல்லிவிட்டு அவனை பார்க்க சங்கடப்பட்டவளாக திரும்பி நிற்க அபிமன்யூ அவளது மன்னிப்பு கேட்கும் பாணியை கண்டு “இந்த உலகத்துல சாரிய கூட திமிரா கேக்குற ஒருத்தியை இப்போ தான் பாக்குறேன்” என்று மனதிற்குள் திகைத்தான்.
அவள் மன்னிப்பு கேட்டதோடு அவன் புறம் திரும்பி “ஆனா அன்னைக்கு அந்த வீடியோ மட்டும் லீக் ஆகலன்னா இந்நேரம் நீ டெபுடி சி.எம்மா இருந்திருப்ப. உன் கிட்ட ஸ்டேட்டோட கண்ட்ரோலை குடுக்கிறது டோட்டல் ஸ்டேட்டுக்கும் குண்டு வைக்கிறதுக்கு ஈக்வல். அதான் நான் அதை லீக் பண்ணுனேன்” என்று முகம் சுருக்கி கூற அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டான் அபிமன்யூ.
அவள் வாய்க்குள் “இந்த மூஞ்சில்லாம் சி.எம்மா? நினைச்சு கூட பாக்க முடியலடா சாமி” என்று முணுமுணுக்க அவன் காதில் விழுந்தாலும் கேட்காத மாதிரி நின்றான்.
ஐ.சி.யூவின் கதவை பார்த்தபடியே “தேங்க்ஸ்” என்று ஒற்றைவார்த்தையாய் சொல்ல அவள் புரியாமல் விழித்தாள். தலையை சாய்த்து அவளை பார்த்தவன் “அப்பா, சித்தப்பாவை அட்மிட் பண்ணி புரோஜிசர்ஸ் எல்லாம் கம்ப்ளீட் பண்ணுனதுக்கு” என்று சொல்ல அவள் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டாள்.
சிறிது நேரம் அமைதியில் கழிய அஸ்வினும் மேனகாவை வீட்டில் பத்திரமாக இறக்கிவிட்டு மருத்துவமனை திரும்பினான். அவன் வந்ததும் ஸ்ராவணி இருவரிடமும் “ஓகே நான் கெளம்புறேன்! ஐயாம் சோ டயர்ட் டுடே” என்று கண்ணைவிரித்து சொல்ல இருவரும் தலையசைத்ததும் கிளம்பினாள் அவள்.
அபிமன்யூ மனதிற்குள் “அன்னைக்கு பப்லயும் இதே மாதிரி தான் சொன்னா. அப்போ இருந்து இப்போ வரைக்கும் இந்த பொண்ணை பத்தி ஒரு முடிவுக்கே வர முடியலடா அபி” என்று சொல்லிக்கொண்டான். இன்று தந்தை சித்தப்பாவை மருத்துவமனையில் சேர்த்ததோடு கடமை முடிந்தது என்று சென்றுவிடாமல் தாங்கள் வரும் வரை காத்திருந்தது, மாலையில் வந்து நிலமையை விசாரித்தது இது எல்லாமே நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவனுக்கு ஸ்ராவணி மீது இருந்த மோசமான அபிப்ராயத்தைக் கொஞ்சமாக மாற்றிவிட்டது போல இருந்தது.
அதன் பின் இரண்டு நண்பர்களும் அங்கிருந்த இருக்கையில் அமர இரவு அமைதியாக நீண்டது…
**********************************************************************************
மறுநாள் கட்சி பொதுக்குழு கூட வழக்கம் போல முதல்வர் பதவிக்கு பெரிய தலைகள் அனைத்தும் அடித்து கொள்ள மதியழகன் அதை அபிமன்யூ அஸ்வினுடன் சேர்ந்து அசூயையுடன் பார்த்து கொண்டிருந்தார். அபிமன்யூ கூச்சல் அதிகமாகவே கடுப்புடன் “அட நிறுத்துங்கய்யா” என்று சொல்ல அவனது நேற்றைய எச்சரிக்கை நினைவில் வர அனைவரும் அமைதியாகி அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.
அவன் “நீங்கல்லாம் அசெம்பிளி போறது மக்கள் பிரச்சனையை பேச தான். சண்டை போடுறதுக்கு இல்ல. தற்காலிக முதல்வர் சம்பந்தமா நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். நீங்கல்லாம் அமைதியா இருந்திங்கன்னா அட்லீஸ்ட் அவரோட பேரையாச்சும் சொல்ல முடியும்” என்று சொல்ல கூட்டம் அமைதி காத்தது.
“நம்ம கட்சிக்கு, இந்த ஸ்டேட்டுக்கு இப்போ தேவை ஒரு நல்ல தலைவரும், தன்னலமில்லாத முதல்வரும் தான். அப்பிடிப்பட்ட ஒருத்தர் இந்த கட்சியியல யாருனு உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். யெஸ்! மதியழகன் அங்கிள் தான் அடுத்த சி.எம். புரிஞ்சுதா? இப்போ எல்லாரும் கெளம்புங்க” என்று அவன் பள்ளியில் வகுப்புத்த்தலைவரை தேர்ந்தெடுத்தாயிற்று என்பது போலச் சாதாரணமாக சொல்லிவிட்டு கிளம்ப அதற்குள் ஒரு கூட்டம் கொந்தளித்தது.
ஜெகதீசன் தனக்கு தான் பதவி என்ற கனவில் இருந்தவர் அபிமன்யூவின் இந்த முடிவால் கடுங்கோபத்துக்கு ஆளானார்.
“தம்பி! நீ நேத்து பெஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான். நீ இந்த கட்சி பெரிய தலைங்களுக்கு ஆர்டர் போடுறியா? இந்த கட்சி என்ன உன் அப்பனோட சொத்தா?” என்று கேட்டவரை எரிப்பது போல் முறைத்தான் அவன்.
பின்னர் அமர்த்தலாக “என் அப்பன் சொத்து இல்ல, மாமனோட சொத்து. அவருக்கு வாரிசு இல்லாத குறைக்கு இந்த மருமகன் தான் அவருக்கு மகன். புரிஞ்சுதா?” என்று கேட்க
அவர் “இதை எங்களால ஒத்துக்க முடியாது. நாங்க யாரும் மதியழகனுக்கு ஆதரவு குடுக்க மாட்டோம். பெரும்பான்மை இல்லாம இவரு எப்பிடி சி.எம் ஆவாருனு நானும் பாக்குறேன்” என்று சீற்றமாய் உரைத்தார். அவரது அடிவருடிகள் அதை ஆமோதிக்க ஆணவத்துடன் மதியழகனை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தார் அவர்.
அபிமன்யூ “அப்பிடியா? சரி நீங்க பிளாக்மெயில் பண்ணுறதால நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்” என்று சொல்ல அனைவரும் அவனை யோசனையாய் பார்க்க அவனோ லேப்டாப்பை எடுத்து புரொஜெக்டருடன் இணைத்துவிட்டு ஸ்கீரினை நோக்கி கையை காட்டினான்.
“இந்த ஸ்கீரினில தெரியறது வெறும் நம்பர்ஸ் அண்ட் லெட்டர்ஸ் இல்ல. இது எல்லாமே இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் பண்ணுன திருட்டுவேலைகளோட புள்ளிவிவரம். சந்தேகம் இருந்தா வாசிச்சு பாத்துக்கோங்க. இதுல உங்களோட எல்லா தவறுகளோட டீடெய்ல்சும் பக்காவா இருக்கு. இவரு பின்னாடி போனவன் எல்லாரும் நாளைக்கு காலையில பிரைம் டைம் நியூஸ்ல வருவிங்க. இந்த டீடெய்ல்ஸை சம்மந்தப்பட்ட டிப்பார்ட்மெண்ட் ஆபிசர்க்கு அனுப்ப எனக்கு ஜஸ்ட் ஒரு மெயில் போதும். எப்பிடி வசதி?” என்று கேட்க கூட்டம் சளசளத்தது.
ஜெகதீசன் முகம் வெளிற அபிமன்யூ திருப்தியாய் அவரை பார்த்துவிட்டு “இனிமே யாரும் மதியழகன் அங்கிளுக்கு ஆதரவு குடுக்கக் கூடாதுனு நினைச்சா கூட அடுத்த நிமிசம் நடுத்தெரு தான். அதை நியாபகம் வச்சிட்டு அமைதியா அவர் சொல்லுற பேச்சைக் கேட்டு நடக்கிறது உங்களுக்கு நல்லது” என்று அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
அதன் பின் வந்த நாட்களில் மதியழகன் மாநில முதல்வராக ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். ஜெகதீசனும் அவரது ஆட்களும் திருடனுக்கு தேள் கொட்டியது போல விழிக்க மட்டுமே முடிந்தது. அந்த நேரத்தில் அபிமன்யூவுக்கு தன் தந்தை கைது மற்றும் இருவரின் விபத்துக்கு காரணகர்த்தா யாரென்று தெரியவந்தது.