🖊️துளி 21👑

கோர்ட்டிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் மேனகா ஸ்ராவணியிடம் “வனி இந்த அஸ்வின் பேச்சை அபிமன்யூ தட்ட மாட்டான்னு தெரிஞ்சிருந்தா அவனை வச்சு மூவ் பண்ணியே வீட்டை வாங்கிருக்கலாம்டி. தேவையில்லாம இந்த கல்யாணம் கலாட்டால்லாம் நடந்திருக்காதுல்ல” என்று சொல்ல ஸ்ராவணி ஸ்கூட்டியை ஓட்டியபடி அவளை முறைத்ததை கண்ணாடியில் பார்த்ததும் அமைதியானாள்.

வீட்டை அடைந்ததும் ஸ்ராவணி முகம் கழுவி விட்டு வந்தவள் விஷ்ணுவுக்கு போன் செய்து அலுவலக விஷயமாக ஏதோ பேச ஆரம்பித்தாள். மேனகா அவளை பெருமூச்சுடன் பார்த்தபடி மனதிற்குள்ளேயே “ஒரு வேளை நீ தப்பு பண்ணிட்டியோ மேகி? ஒரு வீட்டுக்காக கல்யாணம் லெவலுக்கு போயிருக்க வேண்டாமோ? ப்ச்…அது ஒன்னும் உன்னோட தப்பு இல்ல மேகி. அன்னைக்கு உன் காதுல விழுந்த விஷயம் அப்பிடி. அந்த அனு டிவோர்ஸ் பத்தியும், அபி ரிஜிஸ்டர் மேரேஜ் பத்தியும் பேசாம இருந்திருந்தா நான் ஏன் இப்பிடி ஒரு பிளான் போட்டுருக்க போறேன்? அவங்க மேல தான் தப்பு” என்று தன்னுடைய மனதை சமாதானப்படுத்திக் கொண்டபடி அடுத்த வேலையை கவனிக்க சென்றாள்.

அதே நேரம் அபிமன்யூ அஸ்வினிடம் “அது என்னடா ஆறு மாசம்? ஆறு மாசம் கழிஞ்சு போச்சுனா மட்டும் அவ அப்பிடியே காதல் மனைவியா மாறிடுவா பாரு! எப்பிடியும் குடுக்க போற டிவோர்ஸ் தானே! அதை உடனே குடுத்தா தான் என்னவாம்?” என்று தானும் ஒரு லாயர் என்பதை மறந்தவனாய் குறைபட அது சரியாக ஹாலில் அமர்ந்திருந்த சுபத்ராவின் காதில் தப்பாமல் விழுந்தது.

அவர் உள்ளே நுழைந்தவனை ஏறிட்டு பார்த்தவர் அருகில் அமர்ந்திருந்த கணவரிடம் “ஏங்க இந்த காலத்து பசங்களுக்கு கல்யாணம், டிவோர்ஸ்லாம் ரொம்ப ஈசியா போய்டுச்சுல்ல” என்று சொல்ல அபிமன்யூ மனதில் “ஆஹா! இவங்க இருந்ததை கவனிக்காம வாய் விட்டுட்டியே அபி. சரி சமாளிப்போம்” என்று எண்ணியபடி அவர் அருகில் சென்று அமர்ந்தான் அவன்.

அவனை தொடர்ந்து வந்த அஸ்வின் பார்த்திபனிடம் “அங்கிள்! இன்னைக்கு மீட்டிங் போகணும்னு சொன்னிங்களே! கெளம்பலாமா?” என்று கேட்க அவரோ “நீ இப்போ தான் கோர்ட் போயிட்டு வந்திருக்கடா! நான் சகா கூட போயிக்கிறேன். ரெண்டு பேரும் போய் ரெஸ்ட் எடுங்க. சுபிம்மா பசங்க களைச்சு போயி வந்திருப்பாங்க. திட்டாம ஜூஸ் எதாச்சும் போட்டு குடு” என்று சொல்லிவிட்டு எழுந்தவர் “சகா ரெடியாயிட்டியாடா?” என்று குரல் கொடுத்தார்.

அதற்குள் சகாதேவன் பரபரப்புடன் வந்தவருக்கு கால் மேஜையில் இடித்துவிட அபிமன்யூ அவர் சரிவதற்குள் அவரை தாங்கிக் கொண்டு சோஃபாவில் அமர்த்த சுபத்ரா கிச்சனுக்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்தார்.

“குடிங்க தம்பி. மெதுவா..” என்று கூறியவர் பார்த்திபன் புறம் திரும்பி “போகுறப்போவே அபசகுனமா இருக்குங்க. பேசாம மீட்டிங்கை கேன்சல் பண்ணிடுங்க” என்று சொல்ல அவர் மனைவியை தோளோடு அணைத்து கொண்டார்.

“சுபிம்மா! அவன் வேகமா கவனிக்காம வந்ததுல இடிச்சிகிட்டான். அவ்ளோ தான். இதுல பயப்பட எதுவுமில்ல. சரியா? நீ டென்சன் ஆகாத” என்று அவரை சமாதானப்படுத்தியவர் தம்பியின் காலை பிடித்து தடவி விட பத்து நிமிடத்தில் அவருக்கு கால் வலி குறைந்தது. இருவரும் வீட்டினரிடம் சொல்லிவிட்டு கிளம்ப அபிமன்யூவுக்கு கட்சி அலுவலகத்திலிருந்து போன் வர அவனும், அஸ்வினுடன் கிளம்பினான்.

**********************************************************************************

விஷ்ணுவிடம் பேசி கொண்டிருந்த ஸ்ராவணி “இது எனக்கு தெரியாம போச்சே சீஃப். அப்போ அவர் அரெஸ்ட் ஆகுறது கன்ஃபார்மா? அது நடக்க வாய்ப்பு இருக்கா சீஃப்?” என்று கேட்க

அவன் மறுமுனையில் “தமிழ்நாட்டுல ஆல்ரெடி இப்பிடி ஒரு அரெஸ்ட் இன்சிடெண்ட் நடந்திருக்கு. நேஷ்னல் லெவல்லயும் நடந்திருக்கு. சோ எனிடைம் ஹி வில் பி அரெஸ்டட் பை சி.பி.ஐ” என்று அவள் கேள்விக்கு பதிலளித்தான்.

“அப்போ அவரால மத்தவங்களுக்கு ஏதாச்சும் ஆபத்து இருக்குமா? ஐ மீன் அவருக்கு பதிலா…” என்று கேட்க விஷ்ணு “கண்டிப்பா இருக்கும். முக்கியமான சாட்சி இல்லயா! சோ அவர் எதாவது பண்ண முயற்சி பண்ணுவாரு. பட் டோன்ட் வொர்ரி! அந்த எக்ஸ்டீரிமுக்கு அவர் போறதுக்கு முன்னாடி அவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னா நோ பிராப்ளம்” என்று சொல்லிவிட்டு இருவரையும் அலுவலகம் வந்து சேருமாறு சொல்லிவிட்டு போனை வைத்தான் விஷ்ணு.

ஸ்ராவணி யோசனையில் நிற்க மேனகா பேக்குடன் தயாரானவள் “ஏய் வனி! என்னடி யோசனை? கிளம்பு. ஆல்ரெடி லேட்” என்று சுவர் கடிகாரத்தை காட்ட ஸ்ராவணியும் அவளுடன் கிளம்பினாள்.

இருவரும் அமர ஸ்கூட்டி அலுவலகத்தை நோக்கி விரைந்தது. அவர்கள் சாலையில் செல்லும் போது ஆம்புலன்ஸும் கூட்டமுமாக இருக்க ஸ்ராவணி வண்டியை நிறுத்த இருவரும் ஸ்கூட்டியை நகர்த்திக் கொண்டே கூட்டத்தை விலக்கி பார்க்கும் போது அங்கே ஒரு கார் கவிழ்ந்திருக்க இரத்த வெள்ளமாக இருந்தது அந்த சாலையோரம் முழுவதும்.

ஸ்ராவணி ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு வழிவிட அவர்கள் காருக்குள் இருந்தவர்களை வெளியே எடுக்க அது வேறு யாருமில்லை. பார்த்திபனும் அவரது தம்பி சகாதேவனும் தான். ஸ்ராவணி பதறியவளாய் மேனகாவை பார்க்க அவளும் ஸ்ராவணியின் முகபாவத்தை பிரதிபலிக்க இருவரும் ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு வழிவிட்டனர்.

மேனகா “இப்போ என்னடி பண்ணுறது?” என்று கேட்க ஸ்ராவணி தன் மொபைலிலிருந்து அஸ்வினின் எண்ணுக்கு போன் செய்ய அவன் போனை எடுக்கவில்லை. அவர்களுக்கோ அபிமன்யூவின் வீட்டு தொலைபேசி எண் தெரியாது. வேறு வழியின்றி அங்கிருந்த காவலர்களிடம் தாங்கள் ரிப்போர்ட்டர்கள் என்று கூறி ஆம்புலன்சை ஸ்கூட்டியில் பின் தொடர்ந்தனர்.

மேனகா தொடர்ச்சியாக இருவரின் எண்ணுக்கும் அழைக்க அவர்கள் போனை எடுக்கவேயில்லை. அதற்குள் மருத்துவமனை வந்துவிட அவர்கள் இருவரையும் ஐ.சி.யூவிற்குள் கொண்டு செல்ல மேனகாவும் ஸ்ராவணியும் மற்ற செயல்முறைகளை செய்தனர்.

நர்ஸ் ஐ.சி.யூவில் இருந்து வந்தவர் அவர்கள் இருவரின் போன் மற்றும் இதர உபகரணங்களை ஒப்படைக்க மேனகா அதை பத்திரப்படுத்தி பேக்கில் வைத்துக் கொண்டாள். அதற்குள் ஸ்ராவணியின் அழைப்பை அஸ்வின் எடுத்துவிட அவள் விபத்து நடந்த விபரத்தை சொல்லி மருத்துவமனைக்கு வருமாறு சொல்ல அவன் அபிமன்யூவுடன் விரைந்தான்.

நர்ஸ் அவர்கள் இருவருக்கும் இரத்தம் தேவைப்படுவதாக கூற மேனகா தான் இரத்தம் கொடுப்பதாக கூறி தன்னுடைய பேக்கை ஸ்ராவணி வசம் ஒப்படைத்துவிட்டு நர்சுடன் சென்றாள்.

ஸ்ராவணி அவளுடையை பேக்குடன் அமர்ந்திருக்கும் போதே பதற்றத்துடன் அபிமன்யூவும், அஸ்வினும் வந்து சேர அஸ்வின் அவளிடம் “என்னாச்சு மேடம்? நீங்க எப்பிடி அவங்களை பார்த்திங்க?” என்று கேட்க அவள் நடந்த விஷயங்களை விளக்கினாள். இருவருக்கும் இரத்தம் ஏற்றிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கும் போதே சுபத்ரா அழுகையுடன் வர அவரது இரு மகன்களும் அவரை எவ்வாறு தேற்றுவது என்று அறியாது விழித்தனர்.

அவர் கண்ணீரும் கம்பலையுமாக வந்தவர் ஸ்ராவணியிடம் “என்னம்மா ஆச்சு அவங்களுக்கு?” என்று கேட்க அவளோ “டாக்டர்ஸ் உள்ளே போயிருக்காங்க ஆன்ட்டி. அவங்க சொன்னா தான் தெரியும்” என்று சொல்லி அவரை ஆறுதல் படுத்த முயன்றாள்.

சில மணி நேர தவிப்புக்கு பிறகு வெளியே வந்த மருத்துவர்கள் பயப்படும் படி ஒன்றுமில்லை என்றும், அதிகபட்ச இரத்தமிழப்புக்காக தான் அவர்களை ஐ.சி.யூவில் அனுமதித்தாக கூறிவிட்டு சென்றனர். அஸ்வின் சுவரில் சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு நிற்க அபிமன்யூ அங்கிருந்த இருக்கையில் தலையை பிடித்தபடி அமர்ந்துகொண்டான்.

சுபத்ராவை தோளில் சாய்த்து ஸ்ராவணி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேனகா இரத்தம் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள். அவளை தன் அருகில் அமருமாறு சொல்லிவிட்டு சுபத்ராவிடம் சொல்லிக் கொண்டு போனுடன் சென்றவளை சந்தேகத்துடன் பின் தொடர்ந்தான் அபிமன்யூ.

அவள் ஒரு ஓரமாக நின்று கொண்டு போன் செய்தவள் “ஹலோ சீஃப் நீங்க சொன்ன மாதிரியே தான் நடந்திருக்கு. பட் நான் இதை எதிர்ப்பார்க்கல” என்று பேச அதை கேட்ட அபிமன்யூவுக்கு இந்த நேரத்திலும் இவளது ரிப்போர்ட்டர் புத்தி செய்தி சேகரிப்பதாகத் தவறாக நினைத்தவன் அவள் பேசிவிட்டு வரும்போது வழி மறித்தான்.

“எவன் வீட்டுல என்ன எழவு விழுந்தாலும் உங்களுக்கு டி.ஆர்.பி முக்கியம். அப்பிடி தானே ரிப்போர்ட்டர் மேடம்?” என்றபடி புருவங்கள் நெறிய அவளை பார்த்தவனுக்கு பதில் சொல்ல விருப்பமின்றி அவள் நகர அவனோ அவள் கையை பற்றி நிறுத்தவும் “ஹவ் டேர் யூ? அடிக்கடி இப்பிடி என் கையை பிடிக்காத! எனக்கு எரிச்சலா இருக்கு. கையை விடு” என்று உதறிக் கொண்டாள் அவள்.

அவன் அவள் நின்ற இடத்துக்கு பின்னே இருந்த சுவரில் கையூன்றி அவளை நகரவிடாமல் அணையிட்டவன் “யாருக்கு இன்ஃபர்மேசன் பாஸ் பண்ணிட்டு வர்ற?” என்று கேட்க அவள் பதில் சொல்லாமல் அவனை பார்த்து உச்சு கொட்டினாள்.

பின்னர் “நான் ஒன்னு சொல்லவா? நீயும் உங்க அப்பாவும் சரியான முட்டாளுங்க! யாரை சந்தேகப்படணுமோ அவனை ஃப்ரீயா விட்டுட்டு தேவை இல்லாத ஆட்களை கேள்வி கேட்டு கடுப்பேத்துறது” என்றாள் எரிச்சலுடன்.

அவன் விரல் நீட்டி “இன்னொரு தடவ எங்க அப்பாவை பத்தி தப்பா பேசுனா உனக்கு அவ்ளோ தான் மரியாதை” என்று எச்சரிக்க  அவன் விரலை அலட்சியமாக தட்டிவிட்டபடி “அவ்ளோ கோவம் வர்றவன் இன்னும் ஏன் இங்க இருக்க? உங்க அப்பா சித்தப்பாவோட ஆக்சிடெண்டுக்கு யார் காரணமோ அவன் சட்டையை போய் பிடி. அதை விட்டுட்டு மனிதாபிமான அடிப்படையில அவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்து, பிளட்டும் குடுத்த எங்களை ஏன் சந்தேகப்படுற?” என்று அவனுக்கு சற்றும் எரிச்சல் குறையாத குரலில் கூறிவிட்டு அவன் கைகளை தட்டிவிட்டுச் சென்றாள்.

சென்றவள் மேனகாவின் அருகில் அமர்ந்து கொள்ள அவளை முறைத்தபடி அவன் வந்து சேர மருத்துவர் யாராவது ஒருவர் மட்டும் இருந்தால் போதுமென்று கூறவும் சுபத்ரா தான் இருப்பதாக கூறி மற்றவர்களை அனுப்பி வைத்தார்.

நால்வரும் மருத்துவமனையை விட்டு வெளியேறுகையில் அபிமன்யூ ஸ்ராவணியை பார்த்து “இப்போ உனக்கு குலுகுலுனு இருக்குமே!” என்று எரிச்சலுடன் கூற அவள் இவன் என்ன மாதிரி மனிதன் என்ற மாதிரி பார்த்துவைத்தாள்.

சளைக்காமல் “நான் ஒன்னும் அபிமன்யூ இல்ல, அடுத்தவங்க கஷ்டத்தை பாத்து சந்தோசப்படுறதுக்கு” என்று சொல்லிவிட்டு மேனகாவையும் அழைத்து கொண்டு அலுவலகத்தை நோக்கி வண்டியை விட்டாள்.

அவள் சென்றதும் அவளது வார்த்தைகள் காதில் ஒலிக்க ஆரம்பித்தது அபிமன்யூவிற்கு.

“அவ்ளோ கோவம் வர்றவன் இன்னும் ஏன் இங்க இருக்க? உங்க அப்பா சித்தப்பாவோட ஆக்சிடெண்டுக்கு யார் காரணமோ அவன் சட்டையை போய் பிடி. அதை விட்டுட்டு மனிதாபிமான அடிப்படையில அவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்து, பிளட்டும் குடுத்த எங்களை ஏன் சந்தேகப்படுற?”

அந்த குரலில் பொய் இருப்பதாக தோணவில்லை அவனுக்கு. அஸ்வின் அவனது தோளை பற்ற இருவரும் சேர்ந்து வீட்டுகு சென்று ஹால் சோஃபாவில் அமர்ந்தனர். அஸ்வின் தெரியாமல் சோஃபாவில் கிடந்த ரிமோட் மீது அமர்ந்து விட டிவியில் செய்தி சேனல் ஓடத் தொடங்கியது.

அதில் “அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் மொத்த கொள்முதல் செய்வதில் நடந்த ஊழல் குற்றச்சாட்டில் முதலமைச்சர் வாசுதேவன் அவர்கள் கைது செய்யப்பட்டார்” என்ற செய்தி ஓட அபிமன்யூவால் அவன் காதுகளையே நம்ப முடியவில்லை.

ஏனென்றால் இந்த குற்றத்துக்காக தான் சில மாதங்களுக்கு முன்னர் அவனது தந்தை கைது செய்யப்பட்டிருந்தார். இப்போது வாசுதேவன் தான் குற்றவாளி என்றால் தன்னுடைய தந்தை ஏன் அமைதியாக சி.பி.ஐ அதிகாரிகளுடன் சென்றார்? இந்த கேள்வி அவனது மூளையை குடைய கைதாகும் போது சகாதேவன் ஏதோ சொல்லவர அவரை பார்த்திபன் தடுத்தது அவன் கண் முன் வந்தது.

அஸ்வினுக்கும் அது தான் குழப்பம். அதே நேரம் கட்சி அலுவலகத்திலிருந்து போன் வர இருவரும் அங்கே விரைந்தனர்.

அங்கே கூட்டம் குழுமியிருக்க ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அது ஒரு புறம் இருக்க, வாசுதேவன் கைதை காரணமாக காட்டி வன்முறை வேறு தலைவிரித்தாட அமைச்சரும் கட்சி பொருளாளருமான மதியழகன் தான் அவனை அழைத்திருந்தார். அந்த கட்சியில் அவர் ஒரு பொறுப்பான பேராசை எதுவுமில்லாத நியாயமான மனிதர்.

நேரே அவரிடம் வந்தவன் “அங்கிள் இப்போ என்ன பண்ணுறது?” என்று குழப்பத்துடன் கேட்க அவர் நிதானமாக “அபி இப்போ தலைவரோட கைது, அப்பாவோட விபத்து இது ரெண்டும் சேர்ந்து உருவாக்குன பதட்டத்துல தான் வன்முறை நடக்குது! நாம மீடியால இதை பத்தி விளக்கணும். அப்புறம் முதலமைச்சர் இல்லாததால அந்த இடத்துக்கு யார் வர்றதுனு ஒரு பெரிய போட்டியே நடக்குது. முதல்ல பிரஸ் மீட் ஏற்பாடு பண்ணனும். அப்புறம் கட்சி பொதுக்குழுவை கூட்டணும்” என்று சொல்ல அவன் பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டு அவரையே பேச வைத்தான்.

அவரது வேண்டுகோளுக்கு பிறகு வன்முறை சிறிது குறையும் என்ற நம்பிக்கை தான். பின்னர் கட்சி பொதுக்குழுவை கூட்ட அதில் ஜெகதீசன் தனக்கு தான் பார்த்திபனுக்கு பிறகு கட்சியில் செல்வாக்கு உள்ளது, எனவே தனக்கு தான் முதல்வர் பதவி என்று வாதிட அபிமன்யூவால் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை காக்க முடியாமல் போய்விட்டது.

ஒரு புறம் பெற்ற தந்தை மருத்துவமனையிலிருக்க, மறுபுறமோ மாமா ஊழல் குற்றத்தில் கைதாகியிருக்க இங்கே இவர்களோ சிறுபிள்ளைத்தனமாக கூச்சலிட அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல் “வாயை மூடிட்டு பேசுறதை கேக்க இஷ்டமில்லாதவனெல்லாம் வெளியே போகலாம்! இங்கே மதியழகன் பேசுவாரு. ஆபிஸ்குள்ள இருந்தா அவரு பேசுறதை மட்டும் தான் கேக்கணும். அவன் அவன் இஷ்டத்துக்கு பேச இது ஒன்னும் மீன் மார்க்கெட் இல்ல” என்று அவன் கத்த அதற்கு பின் அந்த ஆபிஸே அமைதியானது.

ஆனால் ஜெகதீசன் மட்டும் “தம்பி! நீ நேத்து அரசியலுக்கு வந்தவன். உன்னை விட பெரியவங்கள்ளாம் இருக்கோம். கொஞ்சம் பாத்து பதவிசா பேச கத்துக்கோப்பா” என்று சொல்ல அதற்கும் நான்கு ஜால்ராக்கள் துதிபாட அவன் கடுப்புடன் “இங்கே தேவை இல்லாம பேசுறவன் எவனா இருந்தாலும் அவனுக்கு இவ்ளோ தான் மரியாதை. நீங்க உக்காருறிங்களா? கெளம்புறிங்களா?” என்று கேட்டு விட்டு புருவத்தை உயர்த்தி அவன் பார்த்த பார்வையில் அவர் அடங்கிப் போய் அமர கட்சி பொதுக்குழு கூட்டம் ஆரம்பித்தது.

அதே நேரம் ஸ்ராவணி மருத்துவமனையில் இருக்கும் சுபத்ராவிடம் பார்த்திபன் மற்றும் சகாதேவனின் உடல்நிலை குறித்து விசாரிக்க அவர் இருவருக்கும் நாளை காலை நினைவு திரும்பி விடும் என்று மருத்துவர் கூறியதாக நிம்மதி பெருமூச்சுடன் கூற அவள் அவருக்கு தைரியம் சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

விஷ்ணுவின் கேபினுக்கு சென்று அவனிடம் சொல்லிவிட்டு மேனகாவையும் அழைத்து கொண்டு கிளம்பினாள் அவள்.