🖊️துளி 2👑

காலையில் சோம்பல் முறித்த வண்ணம் எழுந்தான் அபிமன்யூ. இரவு பார்ட்டி முடித்து அதிகாலையில் தான் வீடு திரும்பியிருந்தான். இருந்தாலும் அவனது தினசரி ஷெட்யூலில் உடற்பயிற்சிக்கு ஒதுக்கியிருந்த நேரத்தில் அவனுக்கு விழிப்பு தட்ட மெதுவாக எழுந்தவனுக்கு தலை வலிக்கவே எப்போதும் போல ஹேங் ஓவருக்கு போடக்கூடிய மாத்திரையை போட்டுக் கொண்டான் அவன்.

வீட்டினுள்ளேயே மேல்தளத்திலிருக்கும் அவனது பிரைவேட் ஜிம்மிற்கு சென்றவன் வியர்வை வழியும் வரை உடற்பயிற்சி செய்ய தொடங்கினான். டிரேட் மில்லில் ஓடத்துவங்கியவனின் நினைவலைகளில் தோன்றினாள் அந்த கறுப்பு ஸ்கர்ட் பெண். 

அவனை  பொறுத்தவரைக்கும் அவள் நன்றாக ஆடினாள், எந்த வித அட்வாண்டேஜும் எடுத்து கொள்ளவில்லை. அதற்கு மேல் அவனுக்கு எதுவும் நினைவுக்கு வராமல் போகவே அவளை நினைத்தபடியே உடற்பயிற்சியை முடித்தவன் அவனது அறைக்கு செல்ல அங்கே அவனது நண்பன் அவனுக்காக காத்திருந்தான். ஸ்ராவணி மற்றும் மேனகாவிடம் உரையாடிய அதே வாலிபன் தான்.

அபிமன்யூ நேற்று அணிந்திருந்த டீசர்ட்டை எடுத்தவன் அதிலிருந்து விழுந்த அந்த செயினை கண்டதும் யாருடையது என்று யோசிக்க அவனது மனக்கண்ணில் அந்தப் பெண் வந்து போனாள்.

நெற்றியில் தட்டிக் கொண்டு அவளைப் பற்றி யோசித்தவனுக்கு  “ஐயாம் வனி. நான்சியோட ஃப்ரெண்ட்” என்று கூறியவளின் பெயர் நினைவுக்கு வர நண்பனிடம் “டேய் இது அந்த வனியோட செயின்டா” என்று சொல்லிவிட்டு அதை மேஜை மீது வைத்தான்.

அவனை ஆச்சரியமாக பார்த்தபடி எழுந்தான் அவனது நண்பன் அஸ்வின். அவனது தோளில் தட்டி “நாட் பேட் அபி. வழக்கமா உனக்கு விடிஞ்சதும் நைட் மீட் பண்ணுன பொண்ணு முகமே நியாபகம் வராது. இதுல சாருக்கு அந்தப் பொண்ணோட பேர் முதற்கொண்டு நியாபகம் இருக்கு போல. என்னடா மச்சான், நீ அபி தானே?” என்று அவன் முகத்தைப் பிடித்துத் திருப்பிக் பார்க்க ஒரு நமட்டுச்சிரிப்புடன் அவன் கையைத் தட்டி விட்டான் அபிமன்யூ.

“கம் ஆன் அச்சு! அவ நான் பாத்த பொண்ணுல கொஞ்சம் டிஃபரெண்ட். அதுவும் இல்லாம நான்சியோட ஃப்ரெண்டுடா” என்று கண்ணாடியை பார்த்தபடி ட்ரிம் செய்யப்பட்ட தாடியை வருடிக் கொடுத்தவன் குளிக்கத் தயாரானான்.

திடீரென்று நினைவு வந்தவனாக “டேய் மச்சான்! எப்பிடியும் இந்த செயினை அவளுக்கு திருப்பி குடுக்கணுமே” என்று சொன்னவன் செய்த முதல் காரியம் நான்ஸிக்குப் போன் செய்தது தான்.

அவள் போனை எடுத்ததும் “ஹலோ நான்ஸி டார்லிங்!” என்று பேச்சை ஆரம்பித்தவன் அவளுக்குப் பதிலாக பார்ட்டியில் கலந்து கொண்ட அவளின் தோழியின் போன் நம்பரை கேட்க அஸ்வின் மனதிற்குள் “க்கும்! இவனால மட்டும் எப்பிடி தான் முன்னாள் கேர்ள் ஃப்ரெண்ட் கிட்டவே வருங்கால கேர்ள் ஃப்ரெண்டோட நம்பரை கேக்க முடியுதோ?  தைரியசாலி தான்” என்று நண்பனை பாராட்டிக் கொண்டான்.

ஆனால் எதிர்முனையில் நான்சி தான் அப்படி யாரையும் அனுப்பி வைக்கவில்லை என்று சொல்லவும் அபிமன்யூவுக்கு ஏதோ தப்பு நடப்பதாகத் தோன்ற அவன் செய்த அடுத்த காரியம் அந்த பப்பிற்கு போன் செய்தது தான்.

போனை எடுத்த மேனேஜரிடம் வனியின் அங்க அடையாளங்களை விளக்க அவர் பவுன்சர்களிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்று அவர்களில் ஒருவரை அழைத்து அபிமன்யூவுடம் பேசுமாறு கூறினார்.

அவர் “சார் அவங்க பேர் நான்ஸினு சொன்னாங்க. கெஸ்ட் லிஸ்ட்ல பேரு இருந்ததால உள்ளே போக அலோ பண்ணுனோம்” என்று சொல்ல அபிமன்யூவிற்கு தெளிவாக தெரிந்து விட்டது அந்தப் பெண்ணிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று.

போனை வைத்தவன் அஸ்வினிடம் “டேய் அச்சு! நீ போய் அந்த பப்போட மேனேஜர் கிட்ட சிசிடிவி ஃபூட்டேஜை பார்க்கணும்னு சொல்லி அவளைப் பத்தி டீடெயிலை கலெக்ட் பண்ணு. நான் வந்துடுறேன்” என்று அவசரமாகச் சொல்ல அவனை கேலிப்புன்னகையுடன் பார்த்தான் அஸ்வின்.

அவனது சிரிப்பின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் “அடப்பாவி உன் மைன்ட் வாய்சை நான் கேட்ச் பண்ணிட்டேன்டா. அந்த மாதிரி சண்டைகோழிலாம் எனக்கு செட் ஆகாது. ஆனா அவ கிட்ட ஏதோ இருக்குடா” என்றான் கண்ணில் கூர்மையுடன்.

“சரிடா நான் கிளம்புறேன். நீ கவனமா இருடா வருங்கால எம்.எல்.ஏ” என்று அவனது தோளில் தட்டிவிட்டுச் செல்ல அபிமன்யூ குளிக்கச் சென்றான்.

அஸ்வின் கீழே சென்றவன் சோபாவில் அமர்ந்து செய்தித்தாளில் முகம் புதைத்திருந்த அமைச்சர் பார்த்திபனிடம் “ஹலோ அங்கிள் குட் மார்னிங்” என்று வணக்கத்தை போட்டுவிட்டு வெளியேறினான்.

அவன் சென்றதும் செய்தித்தாளை படித்து முடித்து வைத்தவர் “டேய் சகா” என்று அழைக்கவும் வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தார் அவரின் தம்பி சகாதேவன். தமயன் சொல் தட்டாத தம்பி அவர்.

மனைவியை இழந்து தன் பெண்குழந்தை ஜனனியுடன் தனித்து நின்றவருக்கு அடைக்கலம் கொடுத்த அண்ணனும் அண்ணியும் தெய்வத்துக்குச் சமானம்.

மனதளவில் கூட யாருக்கும் துரோகம் நினைக்காத சகாதேவன்  அப்படியே அவரது அண்ணனுக்கு எதிர் துருவம். ஆனால் அண்ணனின் பேச்சைத் தட்ட அவர் என்றுமே எண்ணியதில்லை. நல்லதோ கெட்டதோ அண்ணன் சொல்லே மந்திரம் என்று வாழ்பவர்.

அறையிலிருந்து வெளியே வந்தவர் “அண்ணா இன்னைக்கு நம்ம தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகணும். அதுக்கு அபியும் கூட வந்தா நல்லா இருக்கும். வேட்பாளர் இல்லாத பிரச்சாரத்தை யாரும் கண்டுக்க மாட்டாங்க அண்ணா” என்றார் பணிவுடன்.

அவரின் தோளில் தட்டி கொடுத்து அருகில் அமர்த்திக் கொண்டார் பார்த்திபன். நிதித்துறை அமைச்சரான அவரின் இரு கண்கள் தம்பியும் மகனும் தான். அரசியலில் அவர் செய்யாத தகிடுதத்தமே இல்லை. ஆனால் வீட்டுக்கு அவர் என்றுமே உத்தமன் தான்.

பதவியைப் பயன்படுத்தி அவர் செய்த ஊழல்கள் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதால் அவர் தனக்கு பதில் தம்பியை தேர்தலில் நிற்க வைக்க முயல சகாதேவனோ தனக்கு அரசியல் சரி வராது என்று பணிவுடன் மறுத்துவிட்டார்.

பின்னர் அவர் கொடுத்த யோசனையின் பேரில் தான் பார்த்திபன் லண்டனில் வழக்கறிஞராக பயிற்சி செய்து கொண்டிருந்த மகனை இந்தியாவுக்கு அழைத்து தனக்குப் பதிலாக சட்டமன்ற தேர்தலில் நிற்க வைத்தது.

அபிமன்யூ முதலில் மறுத்தாலும் தந்தையின் சங்கடத்தைப் புரிந்து கொண்டு ஒப்புக்கொண்டான். இந்த தேர்தல் வெற்றி அவனது தந்தையின் கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவனது விளையாட்டுத்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டான்.

ஆனால் எதிர்க்கட்சிக்காரர்களும் சும்மா இல்லை. வாரிசு அரசியல் என்று கொளுத்திப் போட அது மீடியாக்களில் பற்றி எரியத் தொடங்கியது. எங்கே பார்த்தாலும் இதை பற்றிய விவாதமே நடக்க அந்த நேரத்தில் தான் பார்த்திபன் ஜஸ்டிஸ் டுடேவில் ஒரு நேரலை விவாதத்தில் கலந்து கொண்டு வாரிசு அரசியல் ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு இல்லை என்று ஆணித்தரமாக பேசியது.

சும்மா இருந்த அந்த சேனலை அவராகவே சீண்டி விட அதன் தலைமை அபிமன்யூவை பற்றிய தகவல்களை திரட்டும் பணியை ஸ்ராவணியிடம் ஒப்படைத்தது.

அவளும் அவளுடைய தோழி மற்றும் சக பணியாளருமான மேனகாவும் அவனைப் பற்றிய தகவல்களை திரட்டிக் கொண்டிருந்தவர்கள் அவன் கொடுத்த பார்ட்டியில் ஏதேனும் விஷயம் சிக்குமா என்று பார்க்க தான் நோட்டம் விட அன்று பப்புக்குச் சென்றிருந்தனர்.

பார்த்திபன் இது எதுவும் அறியாதவராய் மகனின் வெற்றி நிச்சயமான சந்தோசத்துடன் விடுமுறை நாட்கள் போல தேர்தல் நாட்களை எண்ணி அனுபவித்து வந்தார். அவருடைய உலகம் மனைவி, மக்கள் மற்றும் தம்பி சகாதேவன் மட்டுமே. மற்றவர்களை பற்றி அவர் என்றுமே கவலைப்பட்டதில்லை.

சகோதரர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையிலேயே பார்த்திபனின் மனைவி சுபத்ராவும், அவரது தம்பி மகள் ஜனனியும் பூஜைத்தட்டுடன் வெளியே வந்தனர்.

அவர்களை பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த தீவிரமான முகபாவம்  மாற “சுபிம்மா! என்ன காலையிலயே உன் பொண்ணு கூட கோயிலுக்கு கிளம்பிட்ட போல இருக்கு” என்றார்  பார்த்திபன் கனிவுடன்.

சுபத்ரா தன்னைப் பார்த்ததும் எழுந்த மைத்துனரை பார்த்து புன்னகைத்தவர் “ஆமாங்க! வேற என்ன வேண்டுதல்?  என்னோட அபி இந்த எலக்சன்ல ஜெயிக்கணும். அப்புறம் என்னோட பொண்ணுக்கு வேற போர்ட் எக்சாம் ரிசல்ட் வர போகுது. அவளுக்கு நல்ல மார்க் கிடைக்கணும்னு வேண்டிக்க போயிட்டுருக்கேன்” என்றார் வெள்ளந்தியாய்.

கணவர், குழந்தைகள் மற்றும் மைத்துனரை தவிர வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாத அமைதியான பெண்மணி.

ஜனனி “ஆமா பெரியப்பா. அண்ணா மட்டும் இந்த எலக்சன்ல ஜெயிச்சிட்டான்னா நான் என்னோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பெருமையா எம்.எல்.ஏ தங்கச்சினு சொல்லிப்பேன்” என்று ஆர்வத்துடன் கூற பார்த்திபன் பாசத்துடன் அவளது தலையை வருடிக் கொடுத்தார். இதை கண்ட சகாதேவனுக்கு வேறு என்ன சந்தோசம் வேண்டும்?

பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே படிகளில் வேகமாக இறங்கி வந்தான் அபிமன்யூ.

“என்னாச்சு?  மார்னிங்லயே வீட்டு ஹால்ல ரவுண்ட் டேபிள் கான்ஃபரென்ஸ் நடந்திட்டிருக்கு போல” என்றபடி வந்தவனை கர்வத்துடன் பார்த்தனர் பார்த்திபனும், சகாதேவனும்.

அவன் நேரே சகாதேவனிடம் வந்து “சித்தப்பா இன்னைக்கு நீங்க டேரக்டா தொகுதிக்கு போயிடுங்க. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. முடிச்சிட்டு கார்ல வந்துடுறேன்” என்று சொல்லவும் அவர் தலையாட்டினார்.

பார்த்திபன் மகனை பெருமையுடன் பார்த்தவர் “நீ ஜெயிக்கிறதுல எந்த சந்தேகமும் இல்ல அபி. உன்னை நான் வச்சு அழகு பாக்க நினைக்குற இடமே வேற. அதை அப்புறமா சொல்லுறேன்.  எலக்சன் வேலைனு அலையுறதுல ரெண்டு பேரும் உடம்பை கெடுத்துக்க கூடாதுடா” என்றார் தமையனிடமும், மகனிடமும்.

“ஓகேப்பா! எனக்கு டைம் ஆகுது. நான் கிளம்புறேன். மா! ஜானு!  ரெண்டு பேரையும் வேணா கோயில்ல டிராப் பண்ணவா?” என்று கேட்கவும் சுபத்ரா தாங்கள் வேறு காரில் சென்று கொள்வதாக கூற அவன் புன்னகை நிறைந்த முகத்துடன் கிளம்பினான்.

சுபத்ரா மகனின் கம்பீர நடையை ரசித்தவர் சீக்கிரம் அவனுக்கு ஒரு கால்கட்டு போட வேண்டும் என்று வழக்கமான தாயாக எண்ணிக்கொண்டார். பின்னர் மகளுடன் சேர்ந்து கோயிலுக்கு கிளம்பிவிட, சகாதேவனும் அண்ணனிடம் சொல்லிவிட்டு தொகுதி பக்கமாக செல்ல ஆயத்தமானார்.

இவ்வாறிருக்க அபிமன்யூ பப்பை அடைந்தவன் அங்கே அவனுக்கு முன்னரே வந்து மேனேஜரிடம் பேசிக்கொண்டிருக்கும் அஸ்வினை கண்டதும் “என்னடா ஏதாச்சும் விஷயம் தெரிஞ்சுச்சா அவளைப் பத்தி?” என்று தீவிர முகபாவத்துடன் கேட்க மேனேஜர் அவனை குறுகுறுவென்று பார்த்தார்.

அவரின் பார்வையை கண்டவன் நகைத்துவிட்டு “ஃபூட்டேஜை ஓட விடுங்க சார்,  என்னை அப்புறமா ஆசை தீர பாத்துக்கோங்க” என்று கேலி செய்தபடி இருக்கையில் அமர்ந்தான்.

வனியும், மேகியும் உள்ளே வந்தது, அஸ்வின் மீது மோதியது, அபிமன்யூவுடன் அவள் நடனமாடியது இது எல்லாமே திரையிலோட இதிலிருந்து அவள் யாரென்று கண்டறிவது சாத்தியமில்லை என்று அவனுக்கு தோணியது. அதே நேரம் கடைசியாக பப்பின் வெளியே இருக்கும் சிசிடிவி ஃபூட்டேஜை ஓடவிட்டவனுக்கு அவளை பற்றிய ஒரு க்ளூ கிடைக்கவே அவன் கண்கள் ஆர்வத்தில் விரிந்தது.

அது வனியும், மேகியும் ஊபரில் வந்து இறங்கிய காட்சி. அதை ஜூம் செய்தவனுக்கு அதன் நம்பர் பிளேட் தெரிய அதைக் குறித்து கொண்டவன் “அச்சு! கிளம்புடா. இதை வச்சு அவளை எங்க பிக்கப் பண்ணுனாங்கன்னு கண்டுபிடிச்சுடலாம்” என்று சொல்லிவிட்டு எழும்பினான்.

செல்வதற்கு முன் மேனேஜரிடம் “உங்க பவுன்சர்ஸுக்கு விவரம் பத்தாது மிஸ்டர் மேனேஜர்.  ஊபர் டாக்சில வர்றவங்கல்லாம் உள்ளே நுழையற அளவுக்கா உங்க பப்போட ஸ்டேண்டர்ட் அண்ட் கிளாஸ் லோ ஆயிடுச்சு?” என்று அவரை சீண்டி விட்டுச் செல்ல தவறவில்லை.

அஸ்வின் “ஏன்டா இந்த வேலை உனக்கு?  இப்போ அந்தாளு பவுன்சர்சை போட்டு லெஃப் அண்ட் ரைட் வாங்க போறான்” என்று சொல்ல

“வாங்கட்டும்டா அச்சு. கெஸ்டை உள்ளே விடுறப்போ பார்த்து விசாரிச்சு அனுப்ப தானே அவங்க இருக்காங்க. அதை சரியா செய்யலைனா அவன் இருந்தா என்ன போனா என்ன?” என்றபடி கூலர்ஸை கண்ணில் மாட்டிக் கொண்டே காரில் அமர  அஸ்வினும் அவனுடனே காரில் ஏறினான்.

“ரொம்ப நல்ல எண்ணம்டா உனக்கு” என்று சொன்னவனை பார்த்து சத்தம் போட்டு சிரித்தவன் “போற போக்குல ஒரு பொதுச்சேவைடா மச்சான்” என்று கண் சிமிட்டியபடி காரை ஸ்டார்ட் செய்தான்.

“அச்சு! உன்னோட கார் இங்கே நிக்குதேடா”  என்றவனின் தோளில் தட்டிய அஸ்வின்

“டோன்ட் ஒரிடா, நான் டிரைவரை வரச் சொல்லிட்டேன். நீ காரை எடு. தொகுதிப் பக்கம் போவோம்” என்று சொல்ல கார் தொகுதியை நோக்கி செல்ல தொடங்கியது.

அபிமன்யூ ஒரு மெல்லிய புன்னகையுடன் காரை ஓட்டி கொண்டிருக்க அஸ்வினுக்கு அவன் செய்கை வித்தியாசமாக தோன்றியது.

“டேய் மச்சான்! உனக்கு அந்தப் பொண்ணு மேல கொலைவெறி வரலைனாலும் பரவால்ல அட்லீஸ்ட்  நம்மளை முட்டாளாக்கினவ மேல கோவம் கூடவா வரலை?” என்று சந்தேகத்துடன் அவனைப் பார்க்க

அவன் ஒரு கையால் ஸ்டியரிங் வீலை வளைத்தபடியே “ச்சே ச்சே!  எனக்கு அவ மேல கோவமே வரலடா.  கிரிமினல் லாயரான என் கிட்டவே கேடித்தனம் பண்ணிட்டுப் போனால்ல,  அந்த டேலண்டை பாராட்டணுமே தவிர கோவப்படக்கூடாதுடா மடையா” என்றான் இன்னொரு கையால் நண்பனின் தலையை கலைத்தபடி.

அஸ்வின் அவன் கையைத் தட்டிவிட்டவன் “இதுவே ஒரு பையனா இருந்துருந்தா சாருக்கு இப்பிடி தோணிருக்காது. பொண்ணா போனதும் இரக்கம், கருணைலாம் இதயத்துல அப்பிடியே பொங்குமே” என்று கிண்டலடிக்க

“பெண்கள் நாட்டின் கண்கள்டா அச்சு” என்று நண்பனிடம் கேலி செய்தவனை நக்கலாக பார்த்த அஸ்வின் “நம்பிட்டேன்டா நல்லவனே” என்று சொல்ல இருவரும் சிரித்தபடியே தொகுதியை அடைந்தனர்.

அதற்குள் அங்கே சென்றிருந்த சகாதேவன் மகனை கண்டதும் “அபி இதை போட்டுக்கோ” என்று அவன் கழுத்தில் கட்சித்துண்டை போட அவன் “சித்தப்பா எதுக்கு இது?”  என்று கேட்டுவிட்டு கூலர்ஸை கழற்றினான். அஸ்வின் “டேய் நீ வேட்பாளர்டா. ஒரு கேண்டிடேட்டுக்கு இதுலாம் மஸ்ட்” என்று சொன்னபடி அவனுடன் நடக்க ஆரம்பித்தான். அபிமன்யூ கூட்டத்தைப் பார்த்து சிரித்தபடியே நடந்தவன் மேடையில் ஏறி அனைவருக்கும் வணக்கம் சொல்ல கூட்டம் ஆர்ப்பரித்தது.