🖊️துளி 19👑

அபிமன்யூ காரை வேகமாக ஓட்டிக் கொண்டு செல்வதை கண்ட அஸ்வின் பதற்றத்துடன் அவனை பின் தொடர அவனது கார் ஸ்ராவணியின் அண்ணா நகர் வீட்டின் முன் சென்று நின்றது. அஸ்வினும் அவனை தொடர்ந்து அங்கேயே காரை நிறுத்தியவன் அவன் ஏதேனும் விபரீதமாக செய்வதற்கு முன் ஓடிச் சென்று அபிமன்யூவை தடுத்து நிறுத்தினான்.

“அபி! இப்போ நீ கோவமா இருக்க. இப்போ எது பண்ணுனாலும் அது தப்பா தான்டா போய் முடியும்” என்றவனை விரக்தியுடன் பார்த்த அபிமன்யூ “செய்யாத விஷயத்துக்கு நான் இன்னைக்கு அசிங்கப்பட்டு நிக்கிறேன் அச்சு. இதுக்கு அந்த ஸ்ராவணி பதில் சொல்லியே ஆகணும்” என்றபடி அவனை விலக்கி விட்டு வேகமாக சென்று வீட்டின் கதவை தட்டி “ஏய் ஸ்ராவணி வெளியே வாடி” என்று கத்தினான்.

மேனகாவும் ஸ்ராவணியும் உறங்குவதற்கு தயாரானவர்கள் அவனது காட்டுக்கத்தலில் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர். மேனகா தான் பதற்றத்துடன் “வனி இவன் கத்துற சத்தத்துல பக்கத்துவீட்டுக்காரங்க முழிச்சிட போறாங்கடி. வா போய் என்னன்னு பாப்போம்”  என்றபடி கதவை திறக்க செல்ல ஸ்ராவணி அவளை தடுத்துவிட்டு அவளே சென்று கதவை திறந்தாள்.

கதவை திறந்து விட்டு எதுவும் நடக்காததை போல அவனை கண்டு “இப்போ எதுக்கு தூங்க போற நேரத்துல வந்து இங்க கத்திக்கிட்டு இருக்க நீ?” என்று கதவில் கை வைத்தபடி சொல்ல அபிமன்யூவுக்கு வந்த கோபத்தில் கதவை படாரென்று அடித்துவிட்டு வீட்டுனுள் முன்னேற அவன் கதவை தள்ளிய வேகத்தில் தடுமாறிய ஸ்ராவணியால் அவனை நிறுத்தமுடியவில்லை.

கடுப்புடன் அவன் முன்னே சென்று “இது ஒன்னும் சத்திரம் சாவடி இல்ல. கண்டவங்க கண்ட நேரத்துல நுழையறதுக்கு. மரியாதையா வெளியே போ. இல்லன்னா…” என்று அவள் மிரட்டும் போதே புருவத்தை உயர்த்தியவன் “இல்லன்னா என்ன பண்ணுவ? மேரேஜ் சர்டிஃபிகேட் பொய்யா வாங்குன மாதிரி பிரெக்னென்சி ரிப்போர்ட்டும் பொய்யா வாங்கிட்டு போய் எங்க அம்மா கிட்ட காட்டி ஆன்ட்டி உங்க பையன் வாரிசு என் வயித்துல வளருது, ஆனா அவர் என்னை கைகழுவ பார்க்கிறாருனு இன்னும் என்னை அசிங்கப்படுத்துவ! அதானே” என்று அலட்சியமாகச் சொல்ல ஸ்ராவணி கடுப்புடன் மேனகாவை முறைத்தாள்.

மனதிற்குள் “மேகி நீ பண்ணி வச்ச காரியத்துக்கு இவன் பேசுறதெல்லாம் நான் கேக்க வேண்டியதா இருக்கு” என்று பொருமியபடி அபிமன்யூவுக்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தாள் ஸ்ராவணி.

அதற்குள் அஸ்வின் அபிமன்யூவின் கையை பிடித்து இழுத்து “அபி! இந்த டைம்ல நாம இங்க இருக்கிறது சரியில்லடா. எதுனாலும் காலையில பேசிக்கலாம். இப்போ வா” என்று அழைத்து செல்ல முயல அவனோ அஸ்வினின் கையை உதறிவிட்டு “இல்ல அச்சு. எனக்கு இன்னைக்கு இவ கிட்ட எல்லா விஷயத்தையும் கேக்கணும்” என்று பிடிவாதம் பிடிக்க அஸ்வின் அயர்ந்து போனவனாய் இடுப்பில் கைவைத்து சிகையை கோதிக் கொண்டான்.

ஸ்ராவணியை நேருக்கு நேராக பார்த்தவன் “இன்னைக்கு நீ பண்ணியிருக்கிறது எவ்ளோ பெரிய தப்புன்னு உனக்கு புரியுதா? நீ சொன்ன பொய்யால எங்க அம்மாவ பொறுத்தவரைக்கும் நான் காதலிச்சு கல்யாணம் பண்ணுன பொண்ணை கைவிட்ட மோசமானா மனுஷனா தெரியுறேன். பழி வாங்குறதுக்கும் ஒரு எல்லை இருக்கு ஸ்ராவணி. சொல்லு என்னடி உன் பிளான்?” என்றபடி அவள் கையைப் பிடிக்க

அவனது இறுகிய பிடியை விலக்க முயன்றவளாய் “பழிவாங்குறதை பத்தி நீ பேசாத. நீ என்ன நெனைச்ச? எனக்கு உன்னை பழிவாங்குறதை விட வேற வேலையே இல்லையா? முதல்ல என் கையை விடு” என்று உதற முயற்சி செய்தாள். கைவலியால் அவள் முகம் சுளிக்கவே அவன் விடுவித்தான்.

“லுக்! நீ பண்ணி வச்ச காரியத்தால என்னால எங்க அம்மா முகத்தையே பார்க்க முடியல. இதுக்குலாம் நான் உன்னை சும்மா விடமாட்டேன் ஸ்ராவணி. உன்னோட காதலன் கிட்ட இருந்து உன்னை பிரிச்சதுக்கு நீ என்னை ரொம்ப நல்லா பழிவாங்கிட்ட. ஆனா ஒரு விஷயத்தை மறந்துட்ட. என்னால எப்போ வேணும்னாலும் உன் கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கிக்க முடியும்” என்று அவன் சொல்ல

ஸ்ராவணி கையை கட்டிக் கொண்டு “அஹான்! அப்போ அந்த காரியத்தை முதல்ல பண்ணு தெய்வமே! நான் ஒன்னும் உன்னை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு வரம் வாங்கிட்டு பிறக்கல! என் தலையெழுத்து நான் கையெழுத்து போட்ட பேப்பரை வாசிக்காம விட்டுட்டேன். ஏன் நீ வாசிச்சிருக்கலாமே? ஸ்டாம்ப் பேப்பருக்கும், மேரேஜ் அப்ளிகேசன் ஃபார்முக்கும் வித்தியாசம் தெரியாம கையெழுத்து போட்ட நீயெல்லாம் என்ன லண்டன்ல படிச்சு கிழிச்ச? நானாச்சும் வீடு போற சோகத்துல கவனிக்கலனு சொல்லலாம். ஆனா நீ அன்னைக்கு சந்தோசமா குதிச்சிட்டு தானே இருந்தே! உனக்கு அன்னைக்கு கண்ணு, மூளைலாம் வேலை செய்யாம ஸ்ட்ரைக்கா பண்ணுச்சு?” என்று கேட்டுவிட்டு அவனை முறைத்தாள்.

“ஏய் நீ ஃப்ராடு வேலை பாத்துட்டு என்னை குறை சொல்லாதடி” என்று அவன் அலட்சியமாக கூற

அவள் கடுப்புடன் “இன்னொரு வாட்டி நீ என்னை ‘டி’ போட்டேனு வையேன், உன் மண்டைய உடைச்சிடுவேன்டா” என்று அவனை முறைக்க அவன் “ஏன்டா இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நீ ரொம்ப வருத்தப்படுவ ஸ்ராவணி. டிவோர்ஸ் நோட்டிஸ் வரும். கையெழுத்து போட்டு அனுப்பு” என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தவனை அவளின் குரல் தடுத்து நிறுத்தியது.

“ஹலோ! கொஞ்சம் நில்லு” என்றபடி அவன் அருகில் சென்றவள் அவனை ஏறிட்டு பார்த்து “என் வீட்டை எனக்கு குடுப்பேனு பிராமிஸ் பண்ணு. நான் டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணுறேன்” என்று சொல்ல

அவன் அந்தக் கோபத்திலும் நக்கலாகச் சிரித்தபடி மறுத்து தலையசைத்தவனாய் “அது நடக்காது மகளே! இந்த ஜென்மத்துல அது உனக்கு திரும்ப கிடைக்காது. என் கிட்ட வந்த எதையும் திருப்பி குடுக்கிற பழக்கம் எனக்கு இல்ல. உன்னோட செயின் மேட்டர்ல இருந்தே நீ அதை புரிஞ்சிட்டுருக்கணும். நீ டிவோர்ஸ் குடுத்தாலும், குடுக்கவே இல்லனாலும் அந்த வீடு அபிமன்யூவோடது தான். பிளானா போடுற பிளான்?” என்று சொல்லிவிட்டு அஸ்வினை அழைத்து கொண்டு வெளியேறிவிட்டான்.

அவன் சென்றதும் வாசலையே வெறித்த ஸ்ராவணிக்கு அடுத்து என்ன காரியம் செய்வதென்று புரியாத நிலை. மேனகா ஸ்ராவணியின் தோளில் கைவைத்து “இப்போ என்ன பண்ணுறது வனி?” என்று கவலையுடன் கேட்க

ஸ்ராவணி கண்ணை சுருக்கி அவளை முறைத்தபடி வாசல் கதவை அடைத்துவிட்டு அவர்களின் அறைக்கு செல்ல மேனகா மனதிற்குள் இஷ்டதெய்வம் அனைவரையும் வேண்டிக் கொண்டு அவளை தொடர்ந்தாள்.

உள்ளே வந்தவள் தயக்கத்துடன் “வனி….” என்று ஆரம்பிக்க ஸ்ராவணி சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து “தாயே வேற எதும் ஐடியா சொல்லுறேனு என்னை குழப்பாதே தெய்வமே! ஏற்கெனவே அடுத்து என்ன பண்ணுறதுனு புரியாம முழிச்சிட்டிருக்கேன்” என்று வருத்தத்துடன் சொல்ல மேனகா படுக்கையில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள்.

ஸ்ராவணி அவளின் யோசனையுடன் கூடிய முகத்தை கண்டவள் “சரி மேகி! அது எப்பிடி இந்த கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணுன?” என்று விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்க மேனகா “அது ரொம்ப சிம்பிள்டி” என்று புன்னகையுடன் ஆரம்பிக்க ஸ்ராவணியின் கண்கள் கோபத்தில் சுருங்குவதை கண்டதும் புன்னகையை அடக்கினாள்.

தொண்டையை செருமிக் கொண்டு “மேரேஜ் டீடெய்ல்ஸ் எல்லாமே ஆன்லைன்லயே சேவ் பண்ணிட்டேன். நோட்டிஸ் நானே பிரிப்பேர் பண்ணி ரிஜிஸ்டர் ஆபிஸ்ல குடுத்துட்டு வந்துட்டேன். அப்புறம் கரெக்டா பிராபர்ட்டி ரிஜிஸ்ட்ரேசன் டேட்லயே மேரேஜும் இருக்கிற மாதிரி அரேஞ்ச் பண்ணிட்டேன்” என்று சொல்ல ஸ்ராவணியால் அவளின் திட்டமிடும் திறனை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

“உன் கிட்ட விட்னெஸ் புரூஃப் கேட்டுருப்பாங்களே?” என்று ஸ்ராவணி கேட்க அவள் உற்சாகமாக “அது தான் நான், அஸ்வின், ரகு மூனு பேரும் இருக்கோமே. எங்க ப்ரூஃபை குடுத்துட்டேன். மாப்பிள்ளை பொண்ணுக்கு கேட்டதுக்கு பிராப்பர்ட்டி ரிஜிஸ்ட்ரேசனுக்கு வாங்குன ப்ரூஃபை யூஸ் பண்ணிக்கிட்டேன். ஃபீஸ் கூட ஆன்லைனிலயே பே பண்ணிட்டேன் வனி” என்று விளக்கிவிட்டு முடிக்க ஸ்ராவணி எவ்வளவு சுலபமாக ஒரு பதிவு திருமணத்தை செய்து முடித்துவிட்டாள் என்று பெருமூச்சு விட்டு கொண்டாள்,.

ஆனால் இன்னும் அவளது முகம் தெளியாததைக் கண்ட மேனகா “வனி நான் ஒரு ஐடியா சொல்லுவேன். நீ கோச்சிக்க கூடாது” என்று பீடிகை போட ஸ்ராவணிக்கும் அவள் சொல்வதை கேட்டுத் தான் பார்ப்போமே என்று மனதின் ஒரு ஓரத்தில் தோன்ற அவள் புறம் திரும்பி அமர்ந்தாள்.

மேனகா ஸ்ராவணியை பார்த்தவாறு “வனி எப்பிடி பாத்தாலும் நீ அந்த அபிமன்யூவோட ஒய்ஃப்” என்க

ஸ்ராவணி கடுப்புடன் “அடியே அந்த வார்த்தையை சொல்லாதடி. காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்தின மாதிரி இருக்கு” என்று முகத்தை சுளித்தாள்.

மேனகா அவளை சமாதானப்படுத்தியவாறு தனது திட்டத்தை விளக்க முதலில் மறுத்தாலும் பின்னர் ஒத்துக் கொண்டாள் ஸ்ராவணி. அவளுக்கு இப்போது முக்கியமானது அவளுடைய வீட்டை திரும்ப பெறுவது மட்டுமே. அதற்கு இது தான் ஒரே வழி என்று மனதை தேற்றி கொண்டாள் அவள்.

இருவரும் நீண்டநேர விவாதத்துக்கு பின் உறங்கச் செல்ல நேரம் நள்ளிரவை கடந்திருந்தது.

மறுநாள் காலை…

காலிங் பெல் பலமாக அடிக்க சிரமப்பட்டு எழுந்தான் அபிமன்யூ. எழுந்ததும் சுற்றி முற்றி பார்த்தவன் நடுஹாலில் ஆங்காங்கே உருண்டு கிடந்த பாட்டில்களையும் இன்னொரு புறம் தூங்கிக் கொண்டிருந்த அஸ்வினையும் பார்த்ததும் இரவு இருவரும் சேர்ந்து குடித்த காட்சிகள் நினைவுக்கு வர வலித்த தலையை பிடித்துவிட்டபடி “அபி! இனிமே ஆல்கஹாலை குறைச்சுக்கோடா” என்று அவனுக்கு அவனே அறிவுரை சொல்லிக் கொண்டான்.

காலிங்பெல் மீண்டும் அடிக்கவே எரிச்சலுடன் “எவன்டா அது? காலங்காத்தால இப்பிடி காலிங்பெல் அடிச்சே சாகடிக்கிறது?” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி கதவைத் திறக்க அங்கே நின்றவர்களை அவன் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை.

வலித்த தலையை பிடித்தபடியே “இப்போ எதுக்கு இங்க வந்திருக்கிங்க நீங்க?” என்க அவன் கையை கதவிலிருந்து தட்டிவிட்டபடி வீட்டினுள் நுழைந்தாள் ஸ்ராவணி. அவளை தொடர்ந்து ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவனை கேலியுடன் பார்த்தவாறு சென்றாள் மேனகா.

அவனுக்கு அவர்கள் சூட்கேசுடன் வந்தது வேறு கோபத்தை கிளப்ப “எவ்ளோ தைரியம் இருந்தா என்னோட பெர்மிசன் இல்லாம என் வீட்டுக்குள்ள நுழையுவிங்க ரெண்டு பேரும்?” என்று கத்த

ஸ்ராவணி காதில் கை வைத்தபடி “ஏன் கத்துற? பாரு நீ கத்துன சத்தத்துல அவன் முழிச்சிட்டான்” என்றபடி அஸ்வினை கை காட்ட அவனும் இந்த இருவரையும் எதிர்ப்பார்க்காததால் தான் ஒருவேளை கனவு காண்கிறோமோ என்று நினைத்து தன்னையே கிள்ளிப் பார்த்து கொண்டான்.

மேனகா அவனது செய்கையை கண்டு சிரித்துவிட்டு “என்ன வலிக்குதா? நிஜமாவே நாங்க தான்யா. நம்புங்க” என்று சொல்ல அவன் பதறியடித்து எழுந்து அபிமன்யூவுடன் நின்று கொண்டான்.

ஸ்ராவணி தரையில் கிடந்த பாட்டில்களை அசூயையுடன் பார்த்துவிட்டு கவனமாக அவற்றை மிதிக்காமல் சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். நன்றாக சாய்ந்து அமர்ந்தவள் அபிமன்யூவையும் அஸ்வினையும் அளவிட்டபடியே கீழே கிடந்த பாட்டில்களை கண்டவள் “நானும் மேகியும் இனிமே இங்கே எங்க வீட்டுல தான் இருக்க போறோம்” என்று புன்னகை தவழ்ந்த முகத்துடன் சொல்ல அபிமன்யூவும் அஸ்வினும் அதிர்ச்சியுடன் ஒருவரை  ஒருவர் பார்த்துக் கொண்டனர்.