🖊️துளி 18👑

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

வெறிச்சோடி காணப்பட்டது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் மேரேஜ் ஹால். இவ்வளவு நேரம் இருந்த குதூகலம், உற்சாகம் அனைத்தும் விருந்தினர்களோடு சேர்ந்து வெளியேறிவிட அங்கே மிஞ்சியிருந்தவர்களின் முகத்தில் வேதனையும் வருத்தமும் மட்டுமே குடிகொண்டிருக்க இருவரது முகங்களில் மட்டும் குழப்பரேகை.

அஸ்வின் அரை மணி நேரத்துக்கு முன் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான்…

மேனகா பெண்வீட்டார் மற்றும் பார்த்திபன் முன்னிலையில் அபிமன்யூவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே ஸ்ராவணியுடன் மணமாகிவிட்டது என்றும் சொல்ல அங்கே கலவரம் மூள ஆரம்பித்தது. பெண்ணின் தகப்பனார் பார்த்திபனின் நண்பர் தான்.

தன்னிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்துவிட்டதற்காக கோபப்பட்டு கத்தியவர் அவரது பெண்ணை கூட்டிக் கொண்டு வெளியேறினார்.

மேடையை நோக்கி வந்த சுபத்ராவுக்கும், ஸ்ராவணிக்கும் அவர்கள் இருவரையும் தொடர்ந்து வந்த ஜனனிக்கும் என்னவாயிற்று என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. சுபத்ரா பார்த்திபனிடம் சென்று வினவ அவரோ கொதித்துப் போயிருந்தார்.

அவர் பேசாமலிருக்க அஸ்வினிடம் கேட்க அவனும் எதுவும் சொல்லாமல் மேனகாவை வெறிக்க அவள் சுபத்ராவிடம் பொறுமையாக “ஆன்ட்டி! உங்க பையனோட நிச்சயதார்த்தம் நின்னு போச்சு. அதுக்கு காரணம் அவருக்கு ஏற்கெனவே ஒரு பொண்ணோட கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு., அதுவும் ஒரு மாசத்துக்கு முன்னாடியே” என்று கூறவும் அவர் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.

அதை கேட்ட ஸ்ராவணிக்கோ “இந்த அபிமன்யூ சரியான திருடன். ஆல்ரெடி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு இப்போ இன்னொரு பொண்ணு கூட என்கேஜ்மெண்டுனு மேடையில வந்து தைரியமா உக்காந்திருக்கான். பாவம் அந்தப் பொண்ணு” என்று மனதிற்குள் உச்சுக் கொட்டிக் கொண்டாள்.

இடிந்து போய் நின்ற சுபத்ராவிடம் சென்று நின்றவளை பார்த்த மேனகா “உங்க மருமகள் வேற யாரும் இல்ல, உங்க பக்கத்துல நிக்கிறாளே என்னோட ஃப்ரெண்ட் ஸ்ராவணி, அவ தான்” என்று சொல்ல இப்போது இடி விழுந்தது ஸ்ராவணியின் தலையில்.

ஆனால் மேனகா அவளது அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல் “அதுக்கு சாட்சி உங்களோட இன்னொரு பையன் அஸ்வினும் நானும். எங்க ரெண்டு பேரோட கண் முன்னாடி தான் இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா உங்க பையன் ஏன் இதை உங்க கிட்ட, சார் கிட்ட மறைச்சார்னு எனக்கு தெரியல” என்று சொல்லிவிட்டுத் தோளை குலுக்கினாள்.

சுபத்ரா திகைத்தவராய் மேனகாவையே பார்க்க “இவங்க ரெண்டு பேரும் அபி சாரோட பார்ட்டியில தான் மீட் பண்ணிக்கிட்டாங்க. அப்போவே இருந்து அவங்களுக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்துச்சு. அகெய்ன் எங்க சேனல் ஹெட் ஆபிஸ்ல மீட் பண்ணிக்கிட்டப்போவும் நல்லா பேசிக்கிட்டாங்க. ஒரு நாள் அபி சார் தான் வனி கிட்ட ப்ரபோஸ் பண்ணுனார். பட் வனிக்கு ஆல்ரெடி என்கேஜ்மெண்ட் முடிஞ்சிடுச்சுனு தெரிஞ்சதும் அவரால அவரோட காதலியை யாருக்கும் விட்டுக்குடுக்க முடியாம வனி என்கேஜ்மெண்டை கூட தடுத்து நிறுத்துனார். நீங்க வேணும்னா சார் கிட்ட கேட்டுப்  பாருங்க” என்றுச் சொல்ல

சுபத்ரா அத்தனை நாட்கள் மகனிடம் முகம் கொடுத்து பேசாதவர் இறுகி போன முகத்துடன் சிலையாய் நின்றவனிடம் சென்று

“அபி! அம்மாவை பாருடா. இந்த பொண்ணு சொல்லுற மாதிரி நீ ஸ்ராவணி நிச்சயதார்த்தத்தை நிறுத்தினியா? அம்மா மேல சத்தியமா சொல்லு” என்று அவன் கையை தன் தலை மீது வைத்து கேட்டார்.

அபிமன்யூ இத்தனை நாட்கள் கழித்து அன்னை பேசியதை நினைத்து மகிழவும் முடியாமல், அன்னை மீது பொய்ச்சத்தியம் செய்யவும் முடியாமல் விழித்தான்.

பின்னர் மெதுவாக “மா! நான் தான் வனியோட என்கேஜ்மெண்டை நிறுத்துனேன்” என்று சொல்ல சுபத்ராவுக்கு அவன் மீது இருந்த துளி நம்பிக்கையும் துடைத்தெறிந்தாற் போல அகல அபிமன்யூ தாயின் முகத்தை கண்டு பதறியவனாய் “ஆனா மா நான்….” என்று முழுதாய் சொல்ல வருவதற்குள் சுபத்ராவின் கை அவனது கன்னத்தில் இறங்கியது.

அனைவரும் அவரது கோபத்தைக் கண்டு அதிர்ந்து விட்டனர்.

“ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு கை விடுறது எவ்ளோ பெரிய பாவம் தெரியுமா? உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா, மறந்துட்டியா?” என்று அவனைப் போட்டு வறுத்தெடுத்தார். பார்த்திபன் அவரைத் தடுக்க முயல அடுத்த தீபாவளி அவருக்கு ஆரம்பித்தது.

“நீங்க பேசாதிங்க! நான் அவன் கிட்ட தானே பேசிட்டிருக்கேன். சின்ன வயசுல இருந்து செல்லம் குடுத்து குடுத்து அவன் இந்த நிலமையில இருக்கான். ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு பாதியிலே அவளை கை விட்டுருக்காங்க. அதை பத்தி அப்பாவா நீங்க கேக்கணும். ஆனா நீங்க கேக்க மாட்டிங்க. என்னையாச்சும் அவனை கண்டிக்க விடுங்க” என்றார் எச்சரிக்கும் குரலில்.

அபிமன்யூ ஏற்கெனவே மேனகா சொன்ன திருமண விஷயத்தில் குழம்பியவன் இப்போது சொந்த அம்மாவே அவனை அறைய உள்ளுக்குள் அவனுக்கு கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

“மா! அவ தான் கல்யாணம் ஆயிடுச்சுனு சொன்னா நீங்களும் அதை அப்பிடியே நம்பி என்னை தப்பா நினைக்கிறிங்களே?” என்று ஆதங்கத்துடன் கேட்க பார்த்திபனும் அதை ஆமோதித்தார்.

இவ்வளவையும் வேடிக்கை பார்த்த அஸ்வின் மேனகாவிடம் “அபி உங்க ஃப்ரெண்டை கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு என்ன ஆதாரம்?” என்று கேட்க

மேனகா “எதுக்கு ஆதாரம் கேக்கணும்னு ஒரு விவஸ்தையே இல்லையா மிஸ்டர் அஸ்வின்?” என்று எகிற ஆரம்பித்தாள்.

பார்த்திபன் “ஏன்மா இவ்வளவு நேரம் நீ பேசுனதை நாங்க கேட்டோம்ல, இப்போ எங்களுக்கு ஆதாரம் வேணும். அது இருக்கா உன் கிட்ட?” என்று மகன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் கேட்க

மேனகா அனைவரையும் ஏற இறங்க பார்த்தபடி தன்னுடைய பேக்கிலிருந்து ஒரு ஃபைலை எடுத்தவள் அதில் இருக்கும் அபிமன்யூ, ஸ்ராவணியின் திருமணச் சான்றிதழைக் காட்ட அங்கிருந்த அனைவருமே அபிமன்யூவின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்தனர்.

அந்த சான்றிதழை பார்த்த அபிமன்யூவால் அவன் கண்களையே நம்பமுடியவில்லை. அந்தச் சான்றிதழின்படி அவனுக்கும் ஸ்ராவணிக்கும் திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. தேதியைக் கவனித்தவன் அது ஸ்ராவணியின் ஃப்ளாட்டை தன் பெயருக்கு பதிவு செய்த நாள் என்பதை அப்போது தான் கவனித்தான்.

அன்று எப்படி திருமணப்பதிவு நடந்திருக்கும் என்று அவனது வழக்கறிஞர் மூளை வேலை செய்ய ஆரம்பிக்க அவனால் அப்போதைக்கு நடந்த விஷயங்களை யூகிக்க முடியவில்லை.

அவனது பார்வை வட்டத்தில் சிலையாய் சமைந்து நின்ற ஸ்ராவணி விழவும் “எல்லாம் இவளோட பிளானா தான் இருக்கும்” என்று மனதில் பொருமிக்கொண்டான் அவன்.

அதற்குள் மேனகா ஸ்ராவணியின் கையைப் பிடித்தவள் சுபத்ராவிடம் வந்து “ஆன்ட்டி நான் உங்களை நம்புறேன். என் ஃப்ரெண்டுக்கு உங்களால மட்டும் தான் நியாயம் கெடைக்கும். நாங்க கிளம்புறோம் ஆன்ட்டி” என்றவள் மறக்காமல் அபிமன்யூவின் கையிலிருந்த திருமணச் சான்றிதழை வாங்கிவிட்டு ஸ்ராவணியை அழைத்துக் கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறினாள்.

அவள் சென்றதும் சுபத்ரா “இன்னும் அப்பாவும் பையனும் என்னென்ன விஷயத்தை மறைச்சிருங்கிங்கனு தெரியலையே” என்று தலையிலடித்தபடி ஜனனியை அழைத்துக்கொண்டு வெளியேற அபிமன்யூவால் அதை கையாலாகாதவனாய் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

சிலையாய் நின்றவனை பார்த்திபனும், அஸ்வினும் தேற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். வீட்டிலோ சுபத்ரா இன்னும் அழுகை மாறாதவராய் ஹாலில் அமர்ந்திருக்க சகாதேவன் கையை பிசைந்தபடி நின்று கொண்டிருந்தார்.

ஜனனி “அழாதிங்கம்மா” என்று எவ்வளவோ ஆறுதல் படுத்தியும் அவரால் இந்த விஷயத்தை இலேசாக எடுத்து கொள்ள இயலவில்லை.

அந்நேரம் பார்த்து அபிமன்யூவுடன், அஸ்வினும், பார்த்திபனும் வீட்டினுள் வர சுபத்ரா “இவனை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்திங்க?” என்று கோபத்துடன் எழுந்தார்.

பார்த்திபன் ஏதோ சொல்ல வருவதற்குள் “இவன் இந்த வீட்டுக்குள்ள வந்தா அவன் பொண்டாட்டியோட தான் வரணும். இல்லன்னா எனக்கு இப்பிடி ஒரு பிள்ளையே ஔறக்கலனு நினைச்சிக்கிறேன்” என்று பிடிவாதத்துடன் உரைக்க

அபிமன்யூ அவரிடம் “மா! நீங்க என்னை தப்பா புரிஞ்சிட்டுருக்கிங்க” என்று தன் பக்கத்து நியாயத்தை விளக்க வர அவர் கையை நீட்டி தடுத்தார்.

“இனிமே நீ சொல்ல போற எந்தப் பொய்யையும் நான் நம்ப மாட்டேன் அபி. அந்த பொண்ணு ஸ்ராவணிக்கு என்ன பதில் சொல்ல போறடா?” என்று கேட்க

அவன் பொறுமையிழந்தவனாக “நீங்க என்ன சொல்ல வர்றிங்க? நான் காதலிச்சு கல்யாணம் பண்ணுன பொண்ணை ஏமாத்திட்டேன். அதானே? அப்பிடியே நினைச்சுக்கோங்க. இதுக்கு மேல உங்களுக்கு என்னால புரியவைக்க முடியாதும்மா. அப்புறம் அந்த ஸ்ராவணி அவ நீங்க நினைக்கிற மாதிரி நான் கைவிட்டுட்டேனு தெரிஞ்சு சூசைட் பண்ணிக்கிற அளவுக்கு ஒன்னும் அப்பாவி இல்ல” என்று மனதிலிருப்பதை கொட்டிவிட்டான்.

சுபத்ரா “சரி நீ உன் இஷ்டத்துக்கு இருந்துக்கோ. ஆனா இனிமே உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. இன்னைக்கு உன்னால நான் ரெண்டாவது முறையா தலை குனிஞ்சு நிக்கிறேன்டா. உன்னைப் பெத்ததுக்கு உன்னால என்னை எவ்ளோ பெருமைப்படுத்த முடியுமோ அவ்ளோ பெருமைப்படுத்திட்ட” என்று சொன்னபடி வாயை மூடிக்கொண்டு அழுகையுடன் அவரது அறைக்குச் செல்ல பார்த்திபன் அவர் பின்னே பதற்றத்துடன் ஓடினார்.

சகாதேவன் வேதனையுடன் அஸ்வினை பார்க்க அவன் அபிமன்யூவை பார்த்துக் கொள்வதாக கண்ணால் பதிலளித்தான். அபிமன்யூ நடந்தவற்றை வேதனையுடன் பார்த்தவன் கோபத்துடன் காரை எடுத்து கொண்டு வெளியேற அஸ்வின் பதறிப்போய் இன்னொரு காரில் அவனைத் தொடர்ந்தான்.

சகாதேவன் மனதிற்குள் “ஏன் கடவுளே எங்க குடும்பத்துக்கு இவ்ளோ கஷ்டத்தை குடுக்கிற?” என்று வெதும்பியபடி ஹால் சோபாவில் சாய்ந்து கொள்ள ஜனனி அவரின் தோளில் சாய்ந்து தந்தைக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தாள்.

**************

அதே நேரம் ஸ்ராவணியும் மேனகாவும் வீட்டில் எதிரெதிரே அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க ஸ்ராவணி மெதுவாக “மேகி அந்த மேரேஜ் சர்டிஃபிகேட்டை கொஞ்சம் குடு” என்று கேட்க அவள் பவ்வியமாக அதை நீட்டினாள்.

ஸ்ராவணிக்கு அதை வாசிக்க வாசிக்க இரத்தம் கொதித்துக் கொண்டு வந்தது. யாருடைய முகத்தை பார்ப்பதைக் கூட அவள் வெறுத்தாலோ அவனுடைய மனைவி அவள் என்று அந்தச் சான்றிதழ் பட்டவர்த்தனமாக கூற அவளுக்கு வந்த வெறியில் அதை கிழிக்கப் போனாள்.

மேனகா பதறிப்போனவளாக அதை அவள் கையிலிருந்து பறித்தாள். “என்ன காரியம் பண்ண போன வனி? இது தான் நம்ம துருப்புச்சீட்டு”

“எதுடி துருப்புச்சீட்டு? போயும் போயும் அப்பிடி ஒருத்தன் கூட எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு இந்த சர்டிஃபிகேட் சொல்லுது. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இதை கிழிச்சு போட்டா தான் எனக்கு மனசு அடங்கும் மேகி”

“இதை கிழிச்சா நம்ம வீடு நமக்கு கிடைச்சிடுமா? கொஞ்சம் யோசிச்சு நடந்துக்கோ வனி. இப்போ நீ என் மேல கோவமா இருக்கலாம். ஆனா நான் நல்லா யோசிச்சு தான் இந்த கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணுனேன்” என்று மேனகா சொல்ல அவளை விழியகல பார்த்தாள் ஸ்ராவணி.

பின்னர் சுதாரித்தவளாய் “எப்பிடி மேகி உன்னால இந்த விஷயத்தை இவ்ளோ ஈசியா எடுத்துக்க முடியுது? நீ லீகலா எங்க மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்கடி. நான் ஒத்துக்கிறேன் நம்ம ரெண்டு பேருக்கும் மேரேஜ்ங்கிற கான்செப்ட்ல அவ்ளோ நம்பிக்கை இல்லை தான். ஆனா அது ரொம்ப புனிதமான பந்தம்டி. இந்த மாதிரி காரணத்துக்காக அந்த அபி மாதிரி ஒருத்தனுக்கும் எனக்கும் நீ ஒரு ரிலேசன்ஷிப்பை ஏற்படுத்தி விட்டுருக்க. என்னால இதை ஜீரணிக்கவே முடியல மேகி. அப்பா, அம்மா, ஷ்ரவனுக்கு விஷயம் தெரிஞ்சா அவங்க மூஞ்சில நம்ம எப்பிடி முழிக்க போறோம்?” என்று வேதனையுடன் புலம்ப

மேனகா அவள் தோள் மீது கை வைத்து தன் புறம் திருப்பியவள் “நீ சொல்லுற எல்லாமே சரி தான். ஆனா மாமாவோட கண்ணீருக்கு முன்னாடி எனக்கு இது எதுவுமே பெருசா தெரியல. இப்போவும் நான் இதுக்காக வருத்தப்படலை வனி. நீ அவனோட லீகல் ஒய்ப். சோ உனக்கு அவன் மேலயும், அவனோட பிராப்பர்டிஸ் மேலயும் ஈக்வல் ரைட்ஸ் இருக்கு. உனக்கு எப்பிடி இந்த கல்யாணம் பிடிக்கலையோ அதே மாதிரி தான் அவனுக்கும் கண்டிப்பா பிடிக்காது. இன் ஃபேக்ட் அவனோட லைப் ஸ்டைலுக்கு கல்யாணம்ங்கிற சீரியஸ் ரிலேசன்ஷிப்ல அவன் மாட்டிக்க விரும்ப மாட்டான். அவன் கண்டிப்பா உன் கிட்ட டிவோர்ஸ் கேப்பான் வனி. அப்போ நம்ம வீட்டை திருப்பி குடுத்தா தான் டிவோர்ஸ் தர முடியும்னு நீ சொல்லிடு. இவ்ளோ தான் விஷயம்” என்று சாதாரணமாகச் சொல்ல ஸ்ராவணி தன்னை அறியாமல் தன் வாழ்வில் நிகழ்ந்த இந்தக் குழப்பம் இன்னும் என்னென்ன அனர்த்தங்களுக்கு வழி வகுக்குமோ என்பது புரியாமல் விழித்தாள்.