🖊️துளி 17👑

ஸ்ராவணி சோகத்துடன் வீடு திரும்ப அபிமன்யூ அன்று மிகவும் சந்தோசமாக உலாவினான். பத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவனை சுபத்ராவின் பார்வை அளவிட அவன் இவ்வளவு நேரம் இருந்த அளவுக்கதிகமான மகிழ்ச்சியுடன் கூடிய முகபாவத்தைச் சரி செய்து கொண்டான்.

அஸ்வினுடன் ஏதோ பேசுவது போல நடித்தபடி ஹாலுக்குள் வந்தவனது கையிலிருந்த பத்திரங்களில் சுபத்ராவின் பார்வை படிய “அச்சு! அது என்ன ஸ்டாம்ப் பேப்பர்ஸ்?” என்று அஸ்வினிடம் கேட்க அவன் பதில் சொல்வதற்குள் அபிமன்யூ முந்திக் கொண்டான்.

“நான் ஒரு நியூ ஃப்ளாட் வாங்கியிருக்கேன். அதோட ஸ்டாம்ப் பேப்பர்ஸ் தான் இது” என்று சொல்ல சுபத்ரா மீண்டும் அஸ்வினிடமே “ஏன் இப்போ இவன் என்ன சத்திரத்திலயா தங்கியிருக்கான்? இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல் அச்சு?” என்று கேட்டுவிட்டு சோபாவில் இருந்து எழுந்தார்.

அபிமன்யூ அவரை நேருக்கு நேராக பார்த்து “இது தான் என்னோட பிரச்சனைம்மா. நீங்க இப்பிடி என் கிட்ட முகம் குடுத்து பேசாம யாரோ மாதிரி நடந்துக்கிறிங்க? என்னால முடியலம்மா. உங்களுக்கு என் மேல கோவம் இருந்துச்சுனா நாலு அடி கூட அடிங்க. பட் இப்பிடி பேசாம இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கும்மா. ஒரே வீட்டுல இப்பிடி முகம் குடுத்து பேசாம இருக்கிறதுக்கு நான் ஏன் இங்க இருக்கணும்? அதனால நானும், அச்சுவும் இந்த ஃப்ளாட்டுக்கு போக போறோம்” என்று சொல்லிவிட்டு அவன் அறையை நோக்கி செல்ல சுபத்ரா அவனை தடுத்து நிறுத்தவில்லை.

அஸ்வின் அவரிடம் “மா! நீங்க அவன் கூட பேசிட்டா அவன் அங்கல்லாம் போக மாட்டான்மா” என்று நண்பனுக்கு பரிந்து பேச

அவனை நிதானமாகப் பார்த்தவர் “இல்ல அச்சு! இப்போவும் அபி அம்மா நான் பண்ணுனது தப்பு தான்னு சொல்லுறானானு பாரு? அவன் தப்பை புரிஞ்சிக்காத வரைக்கும் அவன் கிட்ட நான் பேசப் போறது இல்ல. அது மட்டும் இல்ல, எங்கே இந்த வீட்டுல இருந்தா இஷ்டத்துக்கு ஆட்டம் போட முடியாதுனு தான் அவன் தனியா ஃப்ளாட் வாங்கியிருக்கான். அதுக்கு நீயும் கூட்டு. ஏன்டா நீங்க ரெண்டு பேரும் இப்பிடி ஆயிட்டிங்க? அஞ்சு வருச லண்டன் வாசம் உங்க ரெண்டு பேரையும் இவ்ளோ மாத்தும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்துச்சுனா நான் உங்களை அங்கே அனுப்பியிருக்கவே மாட்டேன்” என்று வாய்விட்டு புலம்பினார்.

அதற்குள் அபிமன்யூ இரண்டு சூட்கேசுகளுடன் வந்தவன் அஸ்வினிடம் “உன்னோட திங்ஸையும் பேக் பண்ணிட்டேன் அச்சு. வா நம்ம வீட்டுக்கு போவோம்” என்று சாதாரணமாக சொல்ல

பார்த்திபன் சகாதேவனுடன் வெளியே சென்று விட்டு வந்தவர் “அபி எங்கே கிளம்பிட்டடா?” என்றபடி உள்ளே வந்தார். அவன் அருகில் கையை பிசைந்தபடி நின்று கொண்டிருக்கும் அஸ்வினையும், ஆதங்கத்துடன் நிற்கும் மனைவியையும் பார்த்துவிட்டு குழப்பத்துடன் சோபாவில் அமர்ந்தார்.

மகனிடம் “உன் கிட்ட தான் கேட்டேன் அபி. எங்கே கிளம்பிட்ட?” என்க அவன் “நான் என்னோட வீட்டுக்கு போறேன் டாட்” என்று சொல்லிவிட்டு அஸ்வினின் சூட்கேசை அவன் கையில் கொடுத்தான்.

பார்த்திபன் புரியாமல் “அப்போ இது யார் வீடு அபி? இப்போ ஏன் நீ வீட்டை விட்டுப் போறேனு சொல்லுற?” என்று கேட்க

அபிமன்யூ “டாட் அம்மா என் கூட பேச மாட்றாங்க. அதனால நான் வீட்டை விட்டுப் போறேன்” என்று சொல்ல பார்த்திபனுக்கு அவன் சொன்ன விதம் சிரிப்பை வரவழைக்க சுபத்ரா அவரை முறைத்ததும் சிரிப்பை அடக்கி கொண்டார்.

சகாதேவன் “அபி நீ என்ன சின்ன பையனா? குழந்தைங்க தான் அம்மா திட்டிட்டாங்க, நான் வீட்டை விட்டு போறேனு சொல்லுவாங்க. எங்கேயும் போக வேண்டாம்பா. சூட்கேசை வைங்க ரெண்டு பேரும்” என்று சொல்ல இருவரும் அசையாமல் சிலை போல் நின்றனர்.

அபிமன்யூ தொண்டையைச் செருமி கொண்டு “இல்ல சித்தப்பா. கொஞ்ச நாள் தள்ளியிருக்கிறது தான் எனக்கும் நல்லதுனு படுது. நாங்க கிளம்புறோம். போயிட்டு வர்றேன் டாட். பை மா! சித்தப்பா ஜானு கிட்ட சொல்லிடுங்க” என்றபடி அஸ்வினையும் இழுத்து கொண்டு செல்ல

சுபத்ரா கணவரிடம் “எல்லாம் நீங்க குடுத்த செல்லம் தான். அதை விடுங்க. எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க. ஃப்ளாட் வாங்குற அளவுக்கு இவன் கிட்ட பணம் ஏதுங்க?” என்று கேட்டு விட்டு கணவரைச் சந்தேகமாக பார்த்தார்.

அவரோ பதறி “சுபிம்மா! நீ என்னை சந்தேகப்படாத! எல்லாம் உங்க அப்பா பண்ணுன வேலை. அவரோட மேக்சிமம் பிராப்பர்டிஸ் அவன் பேருல தான் இருக்குங்கிறதை மறந்துடாத” என்று சுபத்ராவின் தந்தை மேல் பழியை போட்டுவிட்டு தப்பித்துக்  கொண்டார்.

அப்போதைக்கு சுபத்ரா அமைதியானாலும் அவரால் அபிமன்யூவை நினைத்துக் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

அதே நேரம் அபிமன்யூவும், அஸ்வினும் ஸ்ராவணியின் ஃப்ளாட்டில் நுழைந்தவர்கள் துடைத்து எடுத்தாற்போல் காலியாக இருந்த ஃப்ளாட்டை கண்டதும் பெருமூச்சு விட்டபடி உள்ளே சென்றனர்.

அவர்கள் அங்கே வந்து சில மணி நேரம் கழித்து சகாதேவன் ஃபர்னிச்சர் மற்ற பொருட்களை ஆட்களுடன் அங்கே கொண்டுவர அபிமன்யூ “சித்தப்பா இதெல்லாம்….”என்று இழுக்க

அவர் அவன் தோளில் கைவைத்து “வெறும் ஃப்ளாட்டை வச்சு என்னடா பண்ணுவ? அதனால தான் ஃபர்னிச்சர்ஸ் கொண்டு வர சொன்னேன். உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்க அவன் அவரைக் கட்டிக் கொண்டான்.

அஸ்வின் “சித்தப்பா! இந்த ஃப்ரிட்ஜ் சைஸ் கொஞ்சம் சின்னதா இருக்கு. அது எங்களுக்கு பத்தாதே” என்று குறைபட அவர் “இப்போவே மாத்திடுறேன்டா மகனே” என்றபடி அவன் சொன்ன மாடலை வாங்கி வைத்துவிட்டுத் தான் கிளம்பினார்,

அதன் பின் அவருடன் வந்தவர்கள் பொருட்களை சரியான இடத்தில் வைத்து வீட்டை ஒழுங்குப்படுத்த மூன்று மணி நேரத்தில் அந்த வீடு குடித்தனம் நடத்த ஏதுவாக மாறிவிட்டிருந்தது. அஸ்வின் கிண்டலாக “கடைசில நம்ம நிலமை தனிக்குடித்தனம் வந்த கபிள்ஸ் மாதிரி ஆயிடுச்சுடா” என்று சொல்ல

அபிமன்யூ சிரித்தபடி “அது என்னவோ உண்மைடா! அது சரி நைட்டுக்கு என்ன சாப்பிடுறது? இன்னைக்கு ஹோட்டல் போய்டலாம்” என்று சொல்ல இருவரும் வெளியே செல்ல தயாரானார்கள்.

*************

ஸ்ராவணி வீட்டை அபிமன்யூவிற்கு விற்று அன்றோடு ஒரு மாதம் கடந்திருக்க அவளும், மேனகாவும் இப்போது இருக்கும் வீட்டிற்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொண்டனர். முடிந்தவரை வீட்டுக்கு சீக்கிரம் வர முயற்சித்தனர். பெற்றோர் அமெரிக்கா சென்றுவிட்ட நிலையில் தாங்கள் மட்டும் தான் தங்களுக்கு பாதுகாப்பு என்று உணர்ந்தவர்கள் நிலமை புரிந்து நடந்து கொண்டனர்.

ஆனால் எப்போதாவது அவர்களின் ஃப்ளாட் இருக்கும் பகுதிக்கு சென்றால் மட்டும் இருவருக்கும் அவர்களை அறியாமல் பெருமூச்சு பிறக்கும். ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டு அங்கிருந்து செல்வர்.

மேனகா வீடு விற்ற பணத்தை ஸ்ராவணியின் பெயரில் டெப்பாசிட் செய்தவள் அடுத்த காயை நகர்த்தும் நேரத்துக்காக காத்திருக்க அதற்கேற்றாற் போல் ஒரு நாள் அஸ்வினை சந்திக்க நேர்ந்தது.

மேனகாவும், ஸ்ராவணியும் கோவிலுக்கு சென்றவர்கள் சிறிது நேரம் பிரகாரத்தில் உட்காரலாம் என்று அமர்ந்திருக்க பிரசாதம் விநியோகிப்பதை கண்ட ஸ்ராவணி “மேகி நான் போய் வாங்கிட்டு வர்றேன்டி” என்று சொல்லிவிட்டு கியூவில் சென்று நின்று கொண்டாள்.

அந்த நேரம் பார்த்து அஸ்வின், சுபத்ரா மற்றும் ஜனனியுடன் கோவிலுக்கு வந்தவன் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்த மேனகாவை கண்டதும் அவளிடம் சென்றான்.

“ஹலோ மேடம்! எப்பிடி இருக்கிங்க?” என்று கேட்டபடி அவளுக்கு அடுத்து சிறிது இடைவெளி விட்டு அமர

மேனகா வாய்க்குள் “கொடுமை கொடுமைனு கோயிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை தலை விரிச்சு போட்டு ஆடிச்சாம்!” என்று முணுமுணுக்க

அஸ்வின் “எதை சொன்னாலும் சத்தமா சொல்லும்மா! எனக்கு காது கொஞ்சம் வீக்” என்று சொல்லிவிட்டு அவளை கேலி செய்தபடி பிரதட்சணம் செய்தவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

மேனகா “காது மட்டுமா வீக்? கண்ணும் தான் வீக். இல்லன்னா கண்ணுக்கு எதிரா அநியாயம் நடக்கிறப்போ நீ சும்மா வேடிக்கை பார்த்துட்டு நின்னுருப்பியா?” என்று மனத்தாங்கலுடன் கூற அஸ்வினின் முகம் இவ்வளவு நேரம் இருந்த இலகு பாவம் மாற இறுகி போனது.

“என்னால அபியை என்னைக்குமே யாருக்காகவும் விட்டுக்குடுக்க முடியாது. இன்னைக்கு நான் இப்பிடி ஒரு நிலமையில  இருக்கிறேனா அதுக்கு அவன் மட்டும் தான் காரணம். அவன் என்ன செஞ்சாலும் அவனுக்கு எப்போவுமே நான் துணையா இருப்பேன்” என்றான் உறுதியான குரலில்.

மேனகா கடுப்புடன் “ஐயோ! அப்பிடியே இவர் கர்ணன், நட்புக்காக உயிரையே குடுப்பார். அட சீ! ஒரு நல்ல ஃப்ரெண்டுனா அவன் செய்யுற தப்பை சுட்டிக்காட்டணும். அதை விட்டுட்டு அவனுக்கு இன்னும் நாலு பாயிண்ட்ஸ் எடுத்து குடுக்க கூடாது” என்று உரைத்துவிட்டு எழுந்தாள்.

அப்போது ஜனனியுடன் பிரதட்சணம் செய்து கொண்டிருந்த சுபத்ரா தடுமாறி விழப் போக அஸ்வினும், மேனகாவும் ஒன்றாய் பதறியவர்கள் ஓடிச் சென்று அவரை விழாமல் தாங்க அவர் நிதானித்து நின்றார்.

மேனகாவும் அஸ்வினும் அவரை தாங்கும் அவசரத்தில் ஒன்று சேர்ந்து இருந்த அவர்களின் கைகளை கவனிக்கவில்லை. மிகவும் இயல்பு போல கோர்த்திருந்த அந்தக் கைகளை கண்டு சுபத்ராவுக்கு மனதுக்குள் சந்தோசமாக இருக்க குறும்புடன் “அச்சு!” என்று விளித்தவரின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட அஸ்வின் பதறியவனாய் மேனகாவின் கையை விட்டான்.

அவளும் கையை தேய்த்துவிட்டு கொண்டவள் சுபத்ராவிடம் “ஆன்ட்டி! மயக்கம் வருதுனா ஏன் இந்த மாதிரி வேண்டுதல்லாம் வச்சுக்கிறிங்க? கொஞ்சம் சுலபமான வேண்டுதலா வச்சுக்கிட்டா உங்களுக்கும் சிரமம் இல்லாம இருக்கும்” என்றாள் அமைதியாக.

சுபத்ரா சிரித்தபடி “என்னம்மா பண்ணுறது? பசங்க சின்னவங்களா இருந்தா நான் நினைச்சது நடந்தா என் பசங்களுக்கு மொட்டை போடுறேனு வேண்டிக்கலாம். இவனுங்க தான் வீட்டு நிலைக்கு பாதியளவு வளர்ந்துட்டாங்களே” என்று சொல்லி அஸ்வினை பார்க்க

மேனகாவும் அவனை பார்த்தபடியே “சின்னவங்களோ பெரியவங்களோ பசங்க என்னைக்கும் அம்மாவுக்கு குழந்தைங்க தான் ஆன்ட்டி! நீங்க மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டா கூட தப்பில்லங்கிறேன்” என்று கேலியாக கூற அஸ்வின் அவளை முறைத்து வைத்தான்.

சுபத்ரா கிண்டலாக “என்ன அச்சு அப்போ அடுத்த தடவை உனக்கும், அபிக்கும் முடி எடுக்கிறதா வேண்டிக்கவா?” என்று கேட்க அவன் பதறிப்போய் அவர் வாயை கையால் மூடினான்.

“மா! கோயில்ல வச்சு சொன்னாலே வேண்டுனதுக்கு சமம்னு சொல்லுவீங்களே! பிளீஸ்மா, அந்த மாதிரி அபாயகரமா வேண்டிக்காதிங்க. எங்க முகம் முடியில்லாம பார்க்க சகிக்காது” என்று அவசரமாக உரைக்க சுபத்ராவும் மேனகாவும் அதைக் கேட்டு சிரித்து கொண்டிருக்கும் போதே ஸ்ராவணி அவளுடன் பிரசாத வரிசையில் நின்று கொண்டிருந்த ஜனனியிடம் பேசியபடி வந்து சேர்ந்தாள்.

ஜனனி “அக்கா! அம்மாவும், அண்ணாவும் அங்கே நிக்கிறாங்க” என்று பிரகாரத்தை நோக்கி கையை காட்ட அங்கே மேனகாவுடன் சிரித்து பேசி கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியும், அவர் அருகில் நின்றுகொண்டிருந்த அஸ்வினையும் கண்டவள்

மெதுவாக ஜனனியிடம் “அப்போ உன்னோட அண்ணா அவரா?” என்று கேட்க அவள் ஆமென்று தலையாட்டினாள்.

“எனக்கு மொத்தம் ரெண்டு அண்ணா. இன்னொருத்தர் பத்தி கேட்டா நீங்க அப்பிடியே ஷாக் ஆயிடுவிங்க அக்கா” என்று கண்ணை விரித்தபடி சொல்ல அவள் சொன்ன இன்னொரு அண்ணன் எவன் என்று பெயர் சொல்லும் முன்னரே ஊகித்துவிட்டாள் ஸ்ராவணி.

ஜனனி “என்னோட இன்னொரு அண்ணா எம்.எல்.ஏ தெரியுமா? அவருக்கு தான் இன்னும் டூ டேய்ஸ்ல என்கேஜ்மெண்ட்” என்று சொல்லிக்கொண்டே நடக்க ஸ்ராவணி மனதிற்குள் அந்தக் கல்யாணப்பெண்ணுக்காக வருத்தப்பட்டு கொண்டாள்.

“அவனை எல்லாம் கட்டி மேய்க்கப் போற அந்த பாவப்பட்ட ஜீவனுக்கு நீ தான் பெருமாளே மனதைரியத்தை குடுக்கணும்” என்று வேண்டியபடியே அவளுடன் நடந்து அஸ்வினும், சுபத்ராவும் மேனகாவுடன் நின்று கொண்டிருந்த பிரகாரத்தை அடைந்தாள் ஸ்ராவணி.

ஜனனி உற்சாகத்துடன் ஸ்ராவணியை சற்று முன் கிடைத்த நண்பி என்று அறிமுகப்படுத்த அவர் அவளை நோக்கி புன்னகைத்தார்.

ஸ்ராவணியும் பதிலுக்குச் சிரித்து விட்டு “இந்த அம்மா பார்க்கிறதுக்கு எவ்ளோ சாந்தமா இருக்காங்க? இவங்களுக்கு போய் எப்பிடி அந்த மாதிரி ஒரு கிரிமினல் புள்ள?” என்று மனதிற்குள் பொருமிக் கொண்டாள்.

அந்நேரம் பார்த்து ஜனனி அபிமன்யூவின் நிச்சயதார்த்தம் பற்றிய பேச்சை எடுக்க மேனகா அதிர்ச்சியுடன் “வாட்? நிச்சயதார்த்தமா?” என்று சத்தமாக கேட்டுவிட

ஸ்ராவணி அவளை ஒரு மாதிரி பார்த்தபடி “ஆமா! இப்போ நடந்து வர்றப்போ தான் ஜனனி என் கிட்ட சொல்லிட்டு வந்தா. அதை விடு நீ ஏன் அதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற?” என்று கேட்டுவிட்டு சந்தேகமாய் பார்க்க அவளைப் போலவே மற்றவர்களும் பார்த்து வைத்தனர்.

மேனகா அவர்களின் பார்வையை உணர்ந்தவளாய் “அது …வந்து….ஆங்! ஏன் வனி எம்.எல்.ஏ சார் நமக்கு எவ்ளோ குளோஸ்? ஆனா நம்ம கிட்ட இதை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையே? அதான் ஷாக் ஆயிட்டேன்” என்று சொல்லி சமாளிக்க ஸ்ராவணி மனதிற்குள் “ஆமா! இப்போ அவன் சொன்னா மட்டும் எனக்கு என்னவாம்?” என்று பொருமிக்கொண்டாள்.

சுபத்ரா திகைப்புடன் “உனக்கு அபியை தெரியுமா?” என்று மேனகாவை பார்த்து கேட்க

ஸ்ராவணி முந்திக் கொண்டவளாய் “பெர்சனலா இல்ல ஆன்ட்டி. நான் அவரை இண்டர்வியூ பண்ணப்போ எங்க சேனல் ஆபிசுக்கு வந்திருந்தார். அதை வச்சு பழக்கம்” என்று சொல்ல

அவர் “அப்போ நீங்க ரெண்டு பேரும் கட்டாயமா நிச்சயதார்த்துக்கு வரணும்” என்று கேட்டுக் கொண்டார்.

மேனகா மனதிற்குள் திட்டம் போட்டவளாய்  “நாங்க வராம எப்பிடி? கண்டிப்பா வருவோம் ஆன்ட்டி” என்று அவரிடம் சிரித்தமுகமாய் கூற அஸ்வினுக்கு உள்ளே இடித்தது.

மறுபடியும் இந்த பெண்கள்  இருவரும் எதுவும் திட்டம் போடுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை அவனுக்கு.

ஸ்ராவணிக்கு இவள் ஏன் இந்தப் பெண்மணியிடம் நிச்சயதார்த்ததுக்கு வருவதாக கூறினாள் என்ற குழப்பம். அனைவரும் பிரகாரத்தில் அமர்ந்து பிரசாதத்தை சாப்பிட அஸ்வின் மேனகாவின் யோசனை நிறைந்த முகத்தை மனதில் குறித்துக் கொண்டான்.

பின்னர் சுபத்ராவிடம் “மா! டைம் ஆச்சு. கிளம்பலாமா?” என்றபடி அவர்களை அழைக்க சுபத்ரா மேனகாவிடமும், ஜனனி ஸ்ராவணியிடமும் கட்டாயமாக நிச்சயதார்த்தத்துக்கு வர வேண்டும் என்று மீண்டும் அன்புக்கட்டளையிட்டு விட்டு அஸ்வினுடன் கிளம்பினர்.

ஸ்ராவணி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த மேனகாவிடம் “மேகி நம்ம ஏன்டி அவனோட என்கேஜ்மெண்டுக்கு போகணும்? எனக்கு அவனை பாத்தாலே நம்ம வீட்டோட நியாபகம் வந்துடும்” என்று முகத்தைச் சுருக்கி சொல்லிவிட்டு பின்னே அமர மேனகா ஸ்கூட்டியை ஓட்டியபடியே பேச ஆரம்பித்தாள்.

“வனி! சும்மா போய் ஒரு பார்வை பாத்துட்டு வருவோமேடி. நம்ம அங்கே போனா எம்.எல்.ஏவோட ரியாக்சன் எப்பிடி இருக்கும்னு யோசி. அதுக்காகவே போகலாம்டி” என்று சொல்ல அவனது நிச்சயதார்த்த தினத்தன்று வேறு எந்த வேலையும் இல்லாததால் இருவரும் செல்ல தீர்மானித்தனர்.

அதே நேரம் அபிமன்யூ வீட்டில் மறுபடியும் தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை என்று சொல்ல அவர் மீண்டும் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டியதற்கான கட்டாயத்தை விளக்கினார்.

அவன் வீட்டை விட்டு சென்ற பிறகு சுபத்ரா தன்னிடம் பேசாமலிருப்பதை தந்தையிடம் சொல்லி அபிமன்யூ புலம்ப பார்த்திபனும் மனைவியை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் அவரால் இயலவில்லை. அவன் தவறை உணர்ந்தாலன்றி தான் அவனிடம் பேசப் போவதில்லை என்று சுபத்ரா அவரது பிடிவாதத்தில் நின்றார்.

அந்த நேரத்தில் தான் பார்த்திபனின் நண்பரும் தொழிலதிபருமான கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய மகளை அவருக்கு மருமகளாக்க விரும்புவதாகக் கூற பார்த்திபனுக்கும் தன்னுடைய மகனுக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் மட்டுமே அவன் ஒரு கட்டுக்குள் வருவான் என்ற எண்ணம். அதை சுபத்ராவிடம் மறைக்காமல் வெளியிட முதலில் அவர் தயங்கினார்.

பின்னர் பார்த்திபன் சொன்னபடி அவனுக்கு திருமணம் முடிந்து விட்டால் மனைவி வந்த பிறகு அவன் இஷ்டத்துக்கு அவனால் மனம் போன போக்கில் வாழ அவள் அனுமதிக்க மாட்டாள் என்று புத்தியில் உறைக்க பார்த்திபனிடம் சம்மதம் தெரிவித்தார் சுபத்ரா. ஆனால் அபிமன்யூ திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

“டாட்! என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. மேரேஜ், ஃபேமிலி இந்த ரெஸ்பான்சிபிளிட்டியை என்னால மேனேஜ் பண்ண முடியாது” என்று சொன்னவன் சுபத்ராவின் ஒற்றை முறைப்புக்கு பின்னர் தானாகவே திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தான்.

அதன் பின் நடந்த எதற்கும் அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இதோ இன்னும்  இரு தினங்களில் நிச்சயத்தை வைத்துக்கொண்டு தந்தையிடம் தயங்கித் தயங்கி மீண்டும் திருமணம் வேண்டாமென்று சொல்ல அவர் சுபத்ராவை நினைவுறுத்தி அவனை சமாளித்து வைத்தார்.

இதை விட்டால் அவனது அன்னையை அவனால் சமாதானப்படுத்தவே முடியாது என்று அவர் வலியுறுத்த அவன் அரைமனதுடன் அவனது ஃப்ளாட்டுக்கு திரும்பினான்.

 **********************

அபிமன்யூவின் நிச்சயதார்த்த நாளின் மாலை நேரம்…

நிச்சயமானது பெரிய ஹோட்டலில் நடப்பதாக கேள்விப்பட்ட மேனகா ஸ்ராவணியை அவசர அவசரமாக கிளப்பியவள் பேக்குடன் வர “என்கேஜ்மெண்டுக்கு எதுக்கு பேக்?” என்றாள் ஸ்ராவணி.

மேனகா அவளின் கண்ணாடியை கழற்றி பேக்கினுள் வைத்தவள் “இதுக்கு தான்” என்றபடி கண்ணில் காண்டாக்ட் லென்சை மாட்டிக்கொண்டாள்.

ஸ்ராவணி மனதிற்குள் “இந்த மேகி சரியில்ல. ஏதோ திருட்டுத்தனம் பண்ணுறா. கண்டுபிடிக்கிறேன்” என்று யோசித்தவண்ணம் அவளுடன் ஸ்கூட்டியில் அமர்ந்தாள்.

சில நிமிடங்களில் ஹோட்டல் வாயிலில் நின்றவர்கள் அஸ்வினுக்கு அழைக்க அவன் வந்து இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

மேனகாவின் கண்கள் மேடையை அளவிட அங்கே அபிமன்யூ சாதாரணமாக அமர்ந்திருக்க அவள் மனதிற்குள் “அன்னைக்கு என்னோட வனியும் இப்பிடி தானே இருந்திருப்பா. உன்னால தானே அவ நிச்சயம் நின்னு, எங்க வீடு பறிபோய்….ப்ச்” என்று வேதனையுடன் எண்ணிக் கொண்டாள்.

அதற்குள் இருவரையும் கவனித்த அபிமன்யூவின் முகத்தில் சிந்தனைக்கோடுகள் எழ அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த அம்மாவையும், தங்கையையும் கண்டவன் அஸ்வினிடம் பார்வையிலே வினவ அவன் பிறகு சொல்வதாக சைகை காட்டினான்.

ஸ்ராவணி சுபத்ராவுடன் பேசி கொண்டிருக்க மேனகா மட்டும் மேடையை நோக்கி நடந்தாள்.

அபிமன்யூவை நெருங்கியவள் அவனுக்கு  கை கொடுத்துவிட்டு மணப்பெண்ணின் தந்தை அவன் அருகில் நிற்பதை பார்த்துக் கொண்டே “என்ன எம்.எல்.ஏ சார், முதல் மனைவி இருக்கிறப்போ இன்னொரு பொண்ணு கூட நிச்சயதார்த்தமா?” என்று சத்தமாகக் கேட்க பெண்ணைப் பெற்றவருக்கு தூக்கி வாரிப் போட்டது.

பார்த்திபனை கேள்வியாய் நோக்க அவர் கோபத்துடன் மேனகாவை நெருங்கினார்.

ஸ்ராவணியோ இதை அறியாமல் சுபத்ராவிடம் பேசிக்கொண்டிருந்தாள். மேடையில் மேனகாவிடம் நெருங்கிய பார்த்திபன் “விஷ்ணுவோட சேனல் ரிப்போர்ட்டர் தானே? என்ன அவன் சொல்லி குடுத்து அனுப்புனானா மினிஸ்டர் வீட்டு நிச்சயதார்த்தத்துல போய் பிரச்சனை பண்ணுங்கன்னு” என்று கேட்க

மேனகா நிதானமாக “எங்க சீஃப் பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு கொஞ்சம் கூட தகுதி கிடையாது சார். நீங்க இப்போ மினிஸ்டர் இல்ல. வெறும் முன்னாள் அமைச்சர் தான். சோ தேவை இல்லாம இன்னும் மினிஸ்டர்னு சொல்லிட்டு சுத்தாதிங்க” என்று அவரை கேலி செய்ய அபிமன்யூவுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது.

அவன் கோபமாய் ஏதோ சொல்ல வர அதற்குள் அஸ்வின் அவனை தடுத்துவிட்டு “நீங்க என்ன பேசுறிங்கன்னு புரிஞ்சு தான் பேசுறிங்களா மிஸ் மேனகா? அபிக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு சொல்லி வீணா குழப்பத்தை ஏற்படுத்தாதிங்க” என்று அவளை எச்சரிக்க

அவள் சாதாரணமாக “உங்க ஃப்ரெண்டுக்கு கல்யாணம் ஆனது உங்களுக்கு தெரிஞ்சும் ஏன் நீங்களும் அவர் கூட சேர்ந்து பொய் சொல்லுறிங்க? அவருக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகுது. அவரோட மனைவி அதோ சுபத்ரா ஆன்ட்டி கிட்ட பேசிட்டு இருக்காங்க பாருங்க”   என்று சொல்லி அங்கே பேசி கொண்டிருக்கும் ஸ்ராவணியைச் சுட்டிக்காட்ட மேடையிலிருந்த அனைவரும் அதிர்ந்தனர். அபிமன்யூவிற்கு ஏதோ பெரிய வலையில் மாட்டிக்கொண்ட உணர்வு. அதிர்ச்சியுடன் அவன் வைத்த கண் வாங்காமல் ஸ்ராவணியை பார்க்க அவள் இது எதையும் அறியாதவளாய் சுபத்ராவுடன் மேடையை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.