🖊️துளி 16👑

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

ஸ்ராவணியும், மேனகாவும் யோசனையுடனே அண்ணா நகர் வீட்டை அடைந்தனர். சுப்பிரமணியமும், வேதாவும் இருவருக்காக காத்திருக்க, இவர்கள் வந்ததும் கவலையை மறைத்தவர்களாய் உற்சாகமாய் காட்டிக் கொண்டனர்.

“வாங்கடா! உங்க அம்மா ஏதோ ஸ்பெஷலா சமைச்சிருக்கா. போய் ஒரு வெட்டு வெட்டலாம்” என்று சந்தோசத்துடன் பேசிய தந்தையை கண்டு ஸ்ராவணிக்கு வருத்தம் இன்னும் அதிகரித்தது. முகத்தைச் சோகமாய் வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவள் ஓரக்கண்ணால் மேனகாவை பார்க்க அவளோ சிந்தனை வயப்பட்டு இருந்தாள்.

ஆனால் சுப்பியமணியமும் அவரது மனைவியும் தங்களின் வருத்தத்தை குழந்தைகளிடம் காட்டக்கூடாது என்று முதலிலேயே பேசி வைத்து விட்டதால் அவர்கள் கேலியும் கிண்டலுமாக பேசியபடி இரவுணவை முடிக்க ஸ்ராவணி வராண்டாவில் உட்கார்ந்திருந்த தந்தையிடம் வந்து அமர்ந்தாள்.

மகளைப் பார்த்து அவர் புன்னகைக்க அவளோ “என்னால தானே இன்னைக்கு நம்ம வீடு அந்த மாதிரி ஒருத்தன் கிட்ட போயிடுச்சுப்பா” என்று சொல்லி அவர் தோளில் சாய்ந்து அழத் துவங்க சுப்பிரமணியம் பதறிப்போனார்.

அவருக்கு தெரிந்தவரை அழுவது மகளின் இயல்பு அல்லவே! அவளை தேற்ற முயல அவளோ “நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் அந்த வீட்டுக்காக பாத்து பாத்து பண்ணுனிங்களேப்பா! என்னால அதை தான் தாங்கிக்கவே முடியல” என்றாள் அழுகையினூடே.

அவர் பாசக்கார தந்தையாயிற்றே! மகள் அழுவதை பொறுக்காதவராய் “என்னோட பெரிய சொத்தே நீங்க நாலு பேரும் தான்டா வனி. வீடு என்னம்மா வீடு? வெறும் செங்கல்லும், சிமெண்டும் சேத்து கட்டுனது தானே! போனா போகுது! அதுக்காக எதுக்கும் கலங்காத என்னோட பொண்ணு கண்ணீர் விடலாமா? இப்போ  உன்னை பாக்க எனக்கு ஸ்ராவணி மாதிரியே தெரியலை. கண்ணைத் துடைச்சுக்கோ” என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டார் சுப்பிரமணியம்.

“எதுக்கும் அழக்கூடாது. என் பொண்ணு தைரியமா இருந்தா தான் எனக்குப் பெருமை. இனி வனிம்மா அழ மாட்டா தானே” என்று கேட்க அவள் அழுகையில் சிவந்த முகத்துடன் ஆமென்று தலையாட்டினாள்.

“சரி! மனசை போட்டுக் குழப்பிக்காம போய் தூங்கு!” என்று அவளை அனுப்பிவைத்தவர் மீண்டும் ஆகாயத்தைப் பார்த்தபடி சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டார். யாரோ வரும் அரவம் கேட்க யாரென்று திரும்பி பார்த்தார் அவர். மேனகா தான் அவர் பின்னே நின்றிருந்தாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்தவர் பக்கத்து நாற்காலியில் அமருமாறு சொல்ல அவள் அமர்ந்தாள். அமைதியாக சுப்பிரமணியத்தை பார்த்தபடி அவரின் கையை ஆதரவாய் பிடித்துக் கொண்டாள் மேனகா.

“எனக்கு தெரியும் மாமா, உங்க மனசு எவ்ளோ கஷ்டப்படுதுனு! நாங்க கஷ்டப்படக்கூடாதுனு நீங்களும் அத்தையும் ரொம்ப திறமையா உங்க கண்ணீரை மறைக்க முயற்சி பண்ணுறிங்க. ஆனா நாங்க நீங்க வளர்த்த பொண்ணுங்க மாமா. அந்த வீட்டுக்குப் போனப்போ உங்க முகத்துல உலகத்தையே ஜெயிச்ச ஒரு சந்தோசம் இருந்துச்சு. எல்லா மிடில் கிளாஸ் அப்பாக்கும் வர்ற சந்தோசம் தான் அது. அதை என்னால மறக்கவே முடியாது மாமா. இன்னைக்கு சொல்லுறேன், இதை உங்க மனசுல வச்சுக்கோங்க. அந்த வீடு எப்பிடி நம்ம கையை விட்டு போச்சோ அதே மாதிரி திரும்ப வரும். அதுவும் வனியே அதை திரும்ப வாங்கி உங்க கிட்ட ஒப்படைப்பா. இது கண்டிப்பா நடக்கும்” என்று சொல்ல அவர் ஆதுரத்துடன் தங்கை மகளின் தலையை வருடிக் கொடுக்க அந்தப் பாசத்தில் கண் கலங்கிய மேனகா அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவளின் மனதில் இன்னும் இரண்டு நாட்களில் பத்திரப்பதிவு என்ற ஸ்ராவணியின் வார்த்தை வேறு பூகம்பத்தை உருவாக்க மாமாவின் வருத்தத்தை எப்படி போக்குவது என்று குழம்பி போனாள்.

மறுநாள் காலை ஜன்னல் வழியே வந்த சூரிய ஒளி முகத்தில் பட ஸ்ராவணி திரும்பி படுக்க முயன்றவள் வேதாவின் சுப்பிரபாதத்தில் விழித்துக் கொண்டாள்.

அதற்குள் மேனகா எழுந்து வேதாவுக்கு கிச்சனில் உதவிக் கொண்டிருக்க ஸ்ராவணி மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தாள். ஜன்னல் வழியே பார்த்ததில் பக்கத்து வீட்டுப் பெண்மணிகள் ஒன்று கூடி பேசுவது கண்ணில் பட “வருசம் ரெண்டு ஆச்சு! இன்னும் இதுங்க மாறலை” என்று சொல்லி உதட்டைச் சுழித்துவிட்டு பிரஷ் செய்ய சென்றாள்.

அவள் பல்லை துலக்கிவிட்டு ஹாலில் அமர வேதா “அப்பிடியே குளிச்சிட்டு வரலாம்ல வனி! இப்பிடி நைட் டிரஸோட சுத்துவியா?” என்று கேட்க

ஸ்ராவணி அலட்சியமாக “மா! என்னமோ என்னை பொண்ணு பார்க்க யாரோ வர்ற மாதிரி பேசுறிங்க? இன்னைக்கு சண்டே தானே. இன்னைக்கு ஒரு நாள் குளிக்கிறதுக்கு லீவ் விடலாம்னு இருக்கேன்” என்று சொல்ல அவள் பேசியதற்கு வேதாவின் முகம் போன போக்கைக் கண்டதும் மேனகா சிரிக்க ஆரம்பித்தாள்.

ஸ்ராவணி சாதாரணமாக “உங்க ஃபேஸ் ஏன் இப்பிடி போகுதுமா? இப்போ ஆடு மாடெல்லாம் டெய்லியா குளிக்குது?” என்று கேட்க வேதா இடுப்பில் கை வைத்து முறைக்க ஆரம்பித்தார்.

 “என்னை மட்டும் சொல்லுறீங்க, அவ மட்டும் காத்தால எழுந்து குளிச்சிட்டாளாக்கும்?” என்று கேட்க

அவர் “ஆமா! அவ எழுந்து குளிச்சு எனக்கு சமையல்ல ஹெல்ப் பண்ண வந்துட்டா. மேடம் இப்போ தான் ஹாயா சோம்பல் முறிச்சு காபி குடிக்கிற!” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றார்.

ஸ்ராவணி மேனகாவை பார்த்து “அடியே துரோகி! ஏன்டி சீக்கிரமா எழுந்து என்னையும் மாட்டி விட்ட? உன்னை…..” என்று சொல்லி விட்டு துரத்த ஆரம்பிக்க அவள் கையில் மாட்டாமல் தப்பி ஓடினாள் மேனகா.

சுப்பிரமணியம் இரு பெண்பிள்ளைகளின் விளையாட்டைப் பார்த்து சிரித்தபடி செய்தித்தாளை வாசிக்கத் தொடங்க அந்நேரம் வாயிலில் நிழலாட நிமிர்ந்தவர் அங்கே நின்றவர்களை கண்டு திகைத்தார்.

மேனகாவும், ஸ்ராவணியும் ஓடி பிடித்து விளையாடியவர்கள் அவர்களைச் கண்டு சிலையாக “என்ன நடந்தாலும் கலங்காம இப்பிடி ஓடி பிடிச்சு விளையாடுறீங்களே அங்க தான் நீங்க நிக்கிறீங்க ரிப்போர்ட்டர் மேடம்” என்றபடி வாசல் நிலையை தன் உயரத்தால் அடைத்தபடி நின்றவன் அபிமன்யூ.

ஸ்ராவணி முகத்தில் கேள்வியுடன் அவனைப் பார்க்க மேனகா “நாங்க தான் வீட்டை குடுக்கிறோம்னு சொல்லிட்டோமே சார். இன்னும் ஏன் எங்களை டிஸ்டர்ப் பண்ணுறிங்க?” என்று கூறியபடி அவன் பின்னே நின்ற அஸ்வினையும் கூறுபோட தவறவில்லை.

அஸ்வின் அதை கண்டுகொள்ளவில்லை. அபிமன்யூ  மேனகாவிடம் “வீட்டை குடுக்கிறோம்னு வாயால சொன்னா போதுமா சின்ன ரிப்போர்ட்டர்? போய் பேப்பர்ஸை எடுத்துட்டு வாங்க. கரெக்டா இருக்கானு நான் பாக்கணும்” என்று சொல்ல மேனகா அவர்களின் அறைக்குச் சென்று பத்திரங்களை எடுத்து வந்தாள்.

அவன் அதை ஒரு முறை புரட்டி பார்த்துவிட்டு அஸ்வினின் கையில் கொடுக்க அவனும் சரி பார்த்துவிட்டு

“வில்லங்கம் எதுவும் இருக்கானு செக் பண்ணனும் அபி! நம்ம நல்ல டாக்குமெண்ட் ரைட்டரா பாக்கணும் ஃபர்ஸ்ட்” என்று அடுக்க

இடைமறித்தவள் “ஹலோ ஹலோ! நீங்க சொல்லுற டாக்குமெண்ட் ரைட்டர் கிட்டல்லாம் எங்களால நம்பி பேப்பர்சை குடுக்க முடியாது. அண்ட் ஒன் மோர் திங் இந்த டாக்குமெண்ட் நம்பரை நோட் பண்ணி என்கம்ப்ரென்ஸ் சர்டிபிகேட் பாருங்க” என்று கடுப்புடன் முகத்தை தூக்கி கொண்டாள்.

அபிமன்யூ “அதுக்கு ஏன்மா இவ்ளோ கோவப்படுற நீ? உன் ஹைட்டை விட அதிகமா கோவப்படுறீயே?” என்று அவளை வெறுப்பேற்றிவிட்டு அஸ்வினுக்கு ஹைஃபை கொடுத்தான்.

ஸ்ராவணி இவ்வளவு நேரம் அமைதி காத்தவள் கடுப்புடன் “உனக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாதா? பனைமரத்துக்கு பாதி வளர்ந்திருக்க, வீட்டுக்குள்ள வர்றப்போ வரலாமானு கேட்டுட்டு வரணும்னு தெரியல? வீட்டுல ரெண்டு பெரியவங்க இருக்காங்க, அவங்க முன்னாடி கால் மேல கால் போட்டு உக்காரக் கூடாதுனு தெரியல? நீ எல்லாம் என்ன லண்டன்ல போயி படிச்சு கிழிச்ச?” என்று ஒட்டுமொத்த கோபத்தையும் அள்ளிக் கொட்ட அவன் காதில் விரலை வைத்து அடைத்துக்கொண்டான்.

சாவகாசமாக அங்கே திகைப்புடன் நின்ற சுப்பிரமணியத்துக்கும், கையில் கரண்டியுடன் கலங்கிப் போன முகத்துடன் நின்ற வேதாவுக்கும் வணக்கத்தைப் போட்டவன்

“ஓகே! கட்சிப்பணிகள் என்னை அழைக்குது! சோ ஐ ஹேவ் டு கோ! ரிப்போர்ட்டர் மேடம், உங்களுக்கு தெரிஞ்ச டாக்குமெண்ட் ரைட்டரையே பாருங்க. ஆனா ஒரு கண்டிசன், கண்டிப்பா நாளைக்கு ஈவ்னிங் அந்த வீடு என் பேருக்கு மாறியிருக்கணும். அண்ட் அதோட உங்க வீட்டு கும்பலுக்கும் அந்த வீட்டுக்கும் எந்தச் சம்மந்தமும் கெடயாது” என்று ஆணவத்துடன் சொல்ல சுப்பிரமணியத்தால் தன் வீட்டை யாரோ சொந்தம் கொண்டாடுவதை கேட்க முடியவில்லை.

நெஞ்சை பிடித்தபடி வேதாவுடன் அவரின் அறைக்குச் செல்ல மேனகா நீர் நிரம்பிய விழிகளுடன் அவர்களை பார்த்தாள்.

அபிமன்யூ பத்திரத்துடன் வெளியேற ஸ்ராவணி பதற்றத்துடன் “அடேய் அது ஒரிஜினல் டாக்குமெண்ட்” என்றபடி அவன் பின்னே ஓடினாள்.

வெளியே அவன் காரில் ஏறுவதற்குள் அபிமன்யூவின் கையைப் பிடித்தவள் “டாக்குமென்டை குடுத்துட்டு போ” என்று சொல்ல பக்கத்துவீட்டு ஆல் இந்தியா ரேடியோக்கள் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தன.

மேனகா அவள் பின்னே வந்தவள் அதை கவனித்து “வனி! அந்த ஆன்ட்டிஸ் உங்களை தான் பாக்குதுங்க” என்று சொல்ல ஸ்ராவணி பதறிப் போய் கையை விலக்கிக்கொண்டாள்.

அபிமன்யூ பத்திரத்தை அவள் வசம் கொடுத்துவிட்டு “நாளைக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல சந்திப்போம்” என்று சொல்ல அந்தப் பக்கத்துவீட்டு பெண்மணிகள் ஆர்வத்துடன் “தம்பி! ரிஜிஸ்டர் ஆபிஸ்ல எதுக்கு சந்திக்க போறிங்க?” என்று கேட்டுவிட்டு ஸ்ராவணியை ஒரு பார்வை பார்த்து வைத்தனர்.

அபிமன்யூ நக்கலாக “ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு எதுக்கு போவாங்க ஆன்ட்டி? எல்லாம் எங்க மேரேஜ் விஷயமா தான்” என்று சொல்லிவிட்டு ஸ்ராவணியை பார்த்து கண் சிமிட்டிவிட்டு காரில் ஏற அவள் கடுப்புடன் பக்கத்தில் கிடந்த செங்கல்லை அவனது கார் கண்ணாடியில் எறியப் போனாள்.

அதற்குள் மேனகா வந்து அவளை தடுத்து உள்ளே அழைத்து செல்ல அபிமன்யூ அந்தக் காட்சியை கண்டு நகைத்தவனாய் அஸ்வினுடன் காரில் அங்கிருந்து கிளம்பினான்.

மேனகா ஸ்ராவணியைச் குளிக்கச் சொல்லி அனுப்பியவள் வராண்டா சாய்வு நாற்காலியில் அமர்ந்து நகம் கடித்தபடி யோசிக்க ஆரம்பித்தாள். அவள் தலைக்குள் ஆயிரம் யோசனைகள். அனுராதாவின் பேச்சு, அபிமன்யூவின் பேச்சு எல்லாமே சேர்ந்து அவள் மண்டையைக் குழப்ப இறுதியாக அவள் மனக்கண்ணில் வந்த காட்சி நெஞ்சை பிடித்தபடி சுப்பிரமணியம் வேதாவுடன் சென்ற காட்சி தான்.

அந்த இரண்டு காட்சிகளையும் மனதில் போட்டு அலசி ஆராய்ந்தவளுக்கு திருமணம், விவாகரத்து என்ற இரு வார்த்தைகள் மட்டுமே மனதில் நிற்கப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்தது என்னவோ உண்மை.

ஆனால் இந்த தீர்வு தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் இருப்பதாக அவளுக்குத் தோன்றவே நேரே ஸ்ராவணியிடம் சென்றாள்.

அவள் குளித்துவிட்டு தலையை உலர வைத்துக் கொண்டிருக்க “வனி! நான் ஒன்னு கேப்பேன்! நீ கோச்சிக்க கூடாது” என்று பீடிகை போட

அவள் ஓரக்கண்ணால் மேனகாவை கவனித்தபடி “அது நீ கேக்கிற கேள்வியை பொறுத்தது” என்று சொல்லிவிட்டு கண்ணாடியை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

மேனகா மெதுவாக “சப்போஸ் உனக்கு தெரியாமலே உனக்கு கல்யாணம் ஆச்சுனா நீ என்ன பண்ணுவ?” என்று கேட்க

ஸ்ராவணி கடுப்பானவள் சிரமப்பட்டு சிரித்து “அடியே இனிமே இந்த கேள்வியை கேட்டேனு வை, அத்தை மகள்னு கூட பாக்க மாட்டேன். நானே உன்னை கொன்னுடுவேன்” என்று சொல்லி கண்ணை மூடித் திறந்து தன்னுடைய கோபத்தைத் தணிக்க முயன்றாள்.

“இல்லடி…” என்று அவள் இழுக்க அதற்குள் அவள் வாயை மூடுமாறு சைகை காட்டிய ஸ்ராவணி “அப்பிடி ஒரு நிகழ்வு நடந்துச்சுனா நான் அவனை டிவோர்ஸ் பண்ணிடுவேன்” என்றாள் உறுதியாக.

மேனகா அமைதியாக அந்த அறையை விட்டு வெளியேறினாள். இருவரும் காலையுணவை முடித்துவிட்டு டாக்குமெண்ட் ரைட்டரிடம் சென்று விவரத்தை கேட்க அதற்குள் ஸ்ராவணிக்கு போன் வர அவள் வெளியே சென்றாள்.

மேனகா அவசரமாக “சார்! ரிஜிஸ்ட்ரேசனுக்கு தேர்ட்டி டேய்ஸ் ஆகும்னு வனி கேட்டா சொல்லிடுங்க. நான் காரணத்தை அப்புறமா சொல்லுறேன். பிளீஸ் சார்” என்க அவரோ இவளை வினோதமாக பார்த்தபடி தலையாட்டினார்.

அதற்குள் ஸ்ராவணியும் வர டாக்குமெண்ட் ரைட்டர் மேனகா சொன்னபடி பத்திரப்பதிவுக்கு முப்பது நாட்கள் ஆகுமென்று சொல்ல ஸ்ராவணி யோசனையுடன் போன் செய்து அபிமன்யூவிற்கு விவரத்தை தெரிவித்தாள்.

அவன் அதெல்லாம் முடியாது என்று சொல்ல ஸ்ராவணியின் கையிலிருக்கும் போனை வாங்கிய மேனகா

“இங்க பாருங்க சார்! உங்களுக்கு இந்தியன் ரிஜிஸ்ட்ரேசன் புரொஜிசர் எதுவும் தெரியாது. சோ பிளீஸ் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. தேர்ட்டி டேய்ஸ்னு சொன்னா அவங்க ஆற அமர பேப்பர்சை ரெடி பண்ணுவாங்க.  எங்களை  நம்புங்க சார்” என்று சொல்ல அவனுக்குமே கட்சிப்பணியில் மூழ்கியிருக்கையில் இந்த பத்திரபதிவையும் தன் தலையில் தூக்கிவைத்து கொள்ளும் விருப்பம் இல்லை.

மேனகா ஸ்ராவணியிடமும் இதே கதையை கூறியவள் அவளே வீட்டின் பத்திரப்பதிவு சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் கவனித்து கொள்வதாக கூறிவிட்டாள். அதற்கு இடையில் சுப்பிரமணியமும், வேதாவும் அமெரிக்கா செல்ல மீண்டும் ஸ்ராவணியும், மேனகாவும் மட்டுமே வீட்டில் லூட்டியடித்தனர்.

அந்த முப்பது நாட்களுக்குள் தான் யோசித்து வைத்திருந்த திட்டத்தைச் செயல்படுத்தாமல் தங்கள் வீட்டை அபிமன்யூ வசம் செல்லாவண்ணம் தடுக்க என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அவ்வளவையும் செய்தாள் மேனகா.

முதலில் விஷ்ணுவிடம் விஷயத்தைத் தெரிவிக்கலாமா என்று எண்ணியவளுக்கு அவனும் நாராயணனும் டெல்லிக்கு முக்கியமான விஷயமாகச் சென்றிருப்பது நினைவுக்கு வந்தது.

அதன் பின் காவல்துறைக்கு புகார் அளிக்கவும் முயன்றாள். ஆனால் அவளது புகார் மனு தான் கேட்பாரற்றுப் போனது. காவல் நிலையத்தில் விசாரித்தால் பெரிய இடத்தில் கை வைக்க முடியாது, வீடு தானே விட்டு விடுங்கள் என்ற இலவச அறிவுரை தான் அவளுக்கு கிடைத்தது.

பேசாமல் தங்கள் தொலைக்காட்சியில் இதை ஒரு செய்தியாகப் போட்டு விடுவோமா என்ற சிந்தனையும் அவளுக்கு வந்தது.

ஆனால் அவளது மனசாட்சி “நீ நியூஸ் போட்டுட்டா மட்டும் அவன் அப்பிடியே வீடு வேண்டானு சொல்லிடுவான் பாரு! அவனோட வீடியோ லீக் ஆனதுக்கே அவன் வருத்தப்படலை. அவனோட டார்கெட் வீடு இல்லை. அவனுக்கு வனியை கஷ்டப்படுத்தணும். அவ்ளோ தான். ஆனா நீ போட்ட பிளான்படி வனி நினைச்சா அவனை இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம். ஒழுங்கா உன் பிளானை செயல்படுத்து மேகி” என்று அவளை அதட்டியது. 

இதற்கிடையில் அஸ்வினை வைத்து அபிமன்யூவின் மனதை மாற்றலாமா என்ற கோணத்தில் யோசித்தவள் இருவரும் அறியாவண்ணம் அவர்களைப் பின் தொடர்ந்து கூடப் பார்த்துவிட்டாள்.

அபிமன்யூவும் அஸ்வினும் எப்போதும் ஒருவரை விட்டு ஒருவர் எங்கும் செல்வதில்லை. அதைக் கண்டவள் “ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரர்கள் மாதிரி ஒன்னாவே சுத்துதுங்க” என்று பொருமிக் கொண்டாள்.

அவர்களைப் பற்றி கட்சி வட்டாரத்தில் விசாரித்ததற்கு அபிமன்யூ கிழித்த கோட்டை அஸ்வின் தாண்ட மாட்டான் என்ற அளவுக்கு அவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்று அறிந்தவள் வேறு வழியின்றி தனது திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தாள்.

பத்திரப்பதிவுக்கு அபிமன்யூவின் அடையாளச்சான்று மற்றும் சில சான்றுகள் தேவைப்பட அஸ்வினிடம் வாங்கிக் கொண்டு மறுநாள் முத்திரைத்தாள்களுடன் வருவதாக கூறிவிட்டுக்  கிளம்பினாள்.

அவள் வாங்கி சென்ற சில நாட்களில் டாக்குமெண்ட் ரைட்டர் பத்திரத்தை தயாரித்து  முடித்து அவள் கையில் கொடுத்து நாளை காலை ரிஜிஸ்ட்ரேசன் இருப்பதாக கூற சரியான நேரத்துக்கு வந்துவிடுவோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் அவள்.

எப்படியோ பத்திரப்பதிவை ஒரு மாதத்துக்கு இழுத்த திருப்தியுடன் தான் நினைத்த வேலையும் இனி சிக்கலின்றி நடக்கும் என்ற நம்பிக்கையும் மனதில் எழ அதன் பின் மேனகா செய்த முதல் காரியம் அஸ்வினுக்கு போன் செய்தது தான்.

“ஹலோ! பேப்பர்ஸ் எல்லாம் ரெடி. நான் அபிமன்யூ கிட்ட கையெழுத்து வாங்கணும். எங்கே வந்தா அவரை பாக்கலாம்?”  என்று கேட்க

மறுமுனையில் அஸ்வின் “ஈ.சி.ஆர் ரிசார்ட்டுக்கு வாங்க” என்று சொல்லி முகவரியைக் கொடுக்க சில மணி நேரப்பயணத்தில் அந்த ரிசார்ட்டினுள் நுழைந்தாள் மேனகா.

உள்ளே நுழைந்தவள் அஸ்வினிடம் சென்று பேப்பர்களை காட்ட அவன் திருப்தியடைந்ததும் அவன் கையிலிருந்து வாங்கிக் கொண்டாள். பேக்கிலிருந்து பேனா எடுத்தவள் இருவரில் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று நோட்டமிட்டபடி இன்னும் சில பேப்பர்களை அதனுடன் சேர்த்துவைத்துக் கொண்டாள்.

அதில் மட்டும் அபிமன்யூ படிக்காமல் கையெழுத்திட்டால் போதும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டபடி அவனிடம் அவற்றைச் சேர்த்து வைத்து நீட்டினாள் மேனகா.

அவன் கண்களை குறுக்கி அவளை பார்க்கவும்  “உங்க ஃப்ரெண்ட் கிட்ட காட்டிட்டு தான் கையெழுத்து வாங்குறேன். சோ நம்பி போடுங்க” என்று சாதாரணமாக உரைக்க அவன் அஸ்வின் படித்துவிட்ட நம்பிக்கையில் பேப்பரை வாசிக்காமல் ஏன் பார்க்க கூடச் செய்யாமல் கையெழுத்து போட்டு முடித்து கொடுத்தான். அந்த ஒரு கையெழுத்து அவனது தலையெழுத்தை முற்றிலுமாக மாற்றப் போகிறது என்பதை அறியாதவனாய்

“நாளைக்கு மார்னிங் லெவன் டு ட்வெல்வ் ரிஜிஸ்ட்ரேசன். சோ கரெக்ட் டைமுக்கு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

நேரே வீட்டுக்கு வந்தவள் ஸ்ராவணியிடம் வேலை முடிந்தது என்று சொல்ல அவள் அமைதியாக “நாளைக்கு காலையோட நமக்கும் அந்த வீட்டுக்கும் உள்ள சம்மந்தம் முடிஞ்சு போச்சுல்ல” என்று அவள் தளுதளுத்த குரலில் சொல்ல மேனகா அவளை அணைத்து ஆறுதல் சொல்லி உறங்க வைத்தாள்.

முகத்தில் வருத்தத்தின் ரேகைகள் ஓட உறங்கிக் கொண்டிருந்தவளை பார்த்தபடியே “அப்பிடில்லாம் நடக்காது வனி. அந்த வீடு என்னைக்கும் உனக்குச் சொந்தமானது தான்” என்று சொல்லிவிட்டு போர்வையை மூடிவிட்டாள் தோழிக்கு.

************

மறுநாள் காலை அமர்க்களமாக விடிய ஸ்ராவணி கவலை தோய்ந்த முகத்துடன் மேனகா ஸ்கூட்டி ஓட்ட பத்திரபதிவு அலுவலகத்தை அடைந்தாள். அதற்கு முன்னர் டாக்குமெண்ட் ரைட்டர் தயாராய் நிற்க அஸ்வினும், அபிமன்யூவும் ஆடி அசைந்து வந்து சேர்ந்தனர்.

சார்பதிவாளர் அழைத்ததும் உள்ளே நுழைந்தவர்களை பார்த்தவர் பதிவேட்டில் கையெழுத்து போடச்சொல்லிவிட்டு ஆன்லைனில் விவரங்களை சரி பார்த்தார். பின்னர் பத்திரங்களை சரிபார்த்துவிட்டு அவர்கள் வசம் ஒப்படைத்தார்.

மேனகா டாக்குமெண்ட் ரைட்டரிடம் கண் காட்ட அவர் பதிவாளர் காதில் ஏதோ சொல்ல பதிவாளர் கிளம்ப முயன்ற ஸ்ராவணியையும் அபிமன்யூவையும் தடுத்து நிறுத்தியவர்

“என்ன புரொஜிசர் கம்ப்ளீட் பண்ணாம கிளம்புறிங்க? இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு” என்றுச் சொல்லி இன்னும் சில இடங்களில் கையொப்பம் போடச் சொன்னார்.

ஸ்ராவணி வீடு கைவிட்டுப் போன சோகத்தில் என்னவென்று கூட அதைப் படிக்காமல் கையெழுத்திட அபிமன்யூவோ அவள் சோகம் நிறைந்த முகம் அளித்த கண் மண் தெரியாத சந்தோசத்தில் என்னவென்று கவனிக்காமல் கையெழுத்திட்டு முடித்தான். மேனகாவுக்கு அவர்கள் கையெழுத்திட்டு முடிக்கும் வரை அவள் உயிர் கையில் இல்லை என்றே கூறலாம்.

 “ஓகே நீங்க கிளம்பலாம்” என்று சார்பதிவாளர் சொல்ல அவர்கள் கிளம்பியதும் மேனகா பதிவாளரிடம் “சார் மீதி விஷயங்களுக்கு நானே வந்தா போதும்ல” என்று உறுதிப்படுத்திக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

வெளியே வந்ததும் அபிமன்யூ பத்திரத்தை ஸ்ராவணியின் முன் ஆட்டிக் காட்டியபடியே “இனிமே அது என்னோட வீடு! மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா ரிப்போர்ட்டர் மேடம்? நமக்கு நெருக்கமான மனுஷங்களோ பொருளோ நம்மளை விட்டு போனா எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு இப்போ உனக்கு புரிஞ்சிருக்குமே” என்று நக்கலாகச் சொல்ல

ஸ்ராவணி வீடு போன வருத்தத்தில் இருந்தாலும் “உங்க அப்பா ஜெயிலுக்கு போனதோட காரணம் உனக்கு நல்லாவே தெரியும். அவர் ஒன்னும் சுதந்திர போராட்ட தியாகி இல்ல, நீ தலையில வச்சு கொண்டாடுறதுக்கு. ஹி இஸ் அன் அக்யூஸ்ட். இதுல தலையிட்டதுக்காக நான் எப்போவுமே வருத்தப்பட மாட்டேன். பிகாஸ் அவர் அங்க இருக்கிறது தான் அவருக்கு நல்லது. இதை புரிஞ்சிக்காத நீ நம்பர் ஒன் முட்டாள்” என்று சொல்லிவிட்டு மேனகாவுடன் இடத்தை காலி செய்தாள்.

சென்றவர்களை பார்த்து கொண்டிருந்த அஸ்வினிடம் வந்த அபிமன்யூ “அச்சு! இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா. கையெழுத்து போடுறப்போ ரிப்போர்ட்டர் கண்ணுல ஒரு செகண்ட் அந்த வீட்டை விக்கிற வலி தெரிஞ்சுது. எனக்கு அதை பாக்கிறப்போ அப்பிடியே காத்துல பறக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். இதுக்கு இன்னைக்கு நைட் பார்ட்டி குடுத்தே ஆகணும்டா” என்று சொல்ல

அஸ்வின் அவன் தோளில் கைவைத்து “எல்லாம் ஓகேடா. ஆனா இனி அந்த ரிப்போர்ட்டர்…” என்று அவனிடம் ஏதோ சொல்ல வர

அவனை தடுத்தவன் “இனிமே அவளுக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லடா. அவ இன்னொரு தடவை என்னோட சம்மந்தப்பட்டவங்களை சீண்டாத வரைக்கும்” என்று சொல்லிவிட்டு அஸ்வினுடன் சேர்ந்து காரில் அமர்ந்தான்.

அவளுக்கும் தனக்குமான உறவை கவனக்குறைவால் போட்ட ஒரு கையெழுத்தின் மூலம் இருவரும் சட்டப்படி பதிந்துவிட்டு வந்ததை அறியாமல் அவளை பழி வாங்கிவிட்டதாகச் சந்தோசப்படுபவனைப் பார்த்து விதி கைகொட்டிச் சிரித்தது.