🖊️துளி 12👑

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

ஸ்ராவணி மண்டபத்திலிருந்து வீட்டுக்கு வந்தவள் சோகமே வடிவாக அமர்ந்திருந்த பெற்றோரை பார்த்துவிட்டு இவர்களை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் அருகில் அமர்ந்தாள்.

சுப்பிரமணியம் மகளின் கையைப் பிடித்து “வனிம்மா! இன்னைக்கு நடந்ததை நினைச்சு ரொம்ப கவலை படாதே. ஆண்டவன் பிறக்குறப்போவே இன்னாருக்கு இன்னார்னு எழுதி வச்சிடுவான். இன்னைக்கு நடந்ததை வச்சு பாத்தா விக்ரமும் நீயும் ஒன்னு சேரக் கூடாதுங்கிறது அந்தக் கடவுளே முடிவு பண்ணனுனதுனு எனக்கு தோணுது. உனக்கு ஏதும் வருத்தம் இல்லையேடா?” என்று ஆதுரத்துடன் கேட்டு மகளின் முகத்தைப் பார்க்க அது நிர்மலமாக இருந்தது.

தந்தையின் பேச்சிலிருந்து அவர்கள் தான் வருத்தப்படுவதாக நினைத்து தான் சோகமாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட ஸ்ராவணி மேனகாவை நோக்கி கண் சிமிட்டினாள்.

அவளோ “மாமா! அவ நிம்மதியா தான் இருக்கா. இங்க பாருங்க அத்தை, விக்கியோட அம்மா என்ன பேச்சு பேசுனாங்கன்னு கவனிச்சிங்க தானே. அவங்களுக்கு முன்னாடி இருந்தே ஸ்ராவணியை பிடிக்காது. அந்த மாதிரி பொம்பளைக்கு இவ மருமகளா போயிருந்தா கண்டிப்பா என்னைக்காச்சும் ஒரு நாள் இவளும் விக்கியும் டிவோர்சுக்கு அப்ளை பண்ணிட்டு ஃபேமிலி கோர்ட் வாசலே கதினு கிடந்திருப்பாங்க. இதோட அவங்க தொல்லை போச்சேனு நினைச்சுக்கோங்க” என்று வேதாவை ஆறுதல் படுத்த அவருக்குமே மருமகளின் கூற்றில் நியாயம் இருப்பதாக பட்டது.

அனைத்தையும் தாண்டி இந்த நிச்சயதார்த்தம் நின்றதால் அவர்களின் மகள் ஒன்றும் அழுது கரையப்போவதில்லை என்பது தெளிவாக தெரிந்தவுடன் இருவருமே நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.

நடந்த விஷயங்களை ஷ்ரவன் மற்றும் வினிதாவுக்கு தெரிவிக்க அவர்களும் மேனகாவின் கருத்தையே பிரதிபலித்தனர். அதுவும் ஷ்ரவனுக்கு தன்னுடைய தங்கையை கன்னாபின்னாவென்று பேசிய சந்திராவின் மீது பெருங்கோபம். அந்தக் கோபத்தை இந்தியா வரும் நேரத்துக்காக அவனது மனதில் சேமித்து வைத்துக்கொண்டபடி நால்வரிடமும் தைரியமாக இருக்குமாறு சொல்லிவிட்டு வீடியோ காலை துண்டித்தான்.

மகன், மருமகளின் முகத்தைக் கண்டதும் வேதாவுக்கும் சுப்பிரமணியத்துக்கும் பிறக்கப் போகும் பேரக்குழந்தையை நினைத்து கவலை தோன்றிவிட்டது.

ஸ்ராவணி இன்னும் இரண்டு நாட்கள் தங்களுடன் தங்கிவிட்டு அமெரிக்கா செல்லுமாறு கூறவே அவளின் பெற்றோருக்கு அதுவே சரி என்று பட்டது.

அதே நேரம் அவனது திட்டம் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை கொண்டாட முடியாத அளவுக்கு ஸ்ராவணியின் பேச்சு அபிமன்யூவை பாதித்திருக்க அவனது அறையின் பால்கனியில் இறுகிய முகத்துடன் நின்றிருந்தான்.

அருகில் வந்து தோளைத் தொட்ட அஸ்வின் “அபி! வீணா டென்சன் ஆகாதே!  இன்னும் டூ டேய்ஸ்ல அங்கிளுக்கு ஜாமின் கெடச்சிடும்னு லாயர் சொன்னாருல. அதை நினைச்சு சந்தோசப்படு” என்று சொல்ல

பார்வையை வெளிப்புறத்திலிருந்து விலக்கிய அபிமன்யூ தோழனை பார்த்து

“அவர் இங்க வர்றப்போ அவருக்கு நான் குடுக்க போற கிஃப்டா அந்த ஸ்ராவணியோட தோல்வி இருக்கணும்னு ஆசைப்பட்டேன் அச்சு. ஆனா எல்லாம் வீணா போச்சு. இன்னும் அவ முகத்துல அந்தச் சிரிப்பு, திமிரு குறையாம இருக்கிறதை பாத்தாலே எனக்கு மண்டைக்குள்ள ஏதோ பண்ணுதுடா. அந்தச் சிரிப்பு சீக்கிரமா அழுகையா மாறுனா மட்டும் தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்” என்றான் இறுகிய குரலில்.

அஸ்வின் இவன் இப்படியே இருந்தால் வீணாக மூளையை போட்டு குழப்பிக் கொள்வான் என்பதை புரிந்துகொண்டு அவனை அழைத்துக் கொண்டு அவர்களின் பீச் ரிசார்ட்டுக்கு சென்றுவிட்டான். அங்கே வந்து கடலைப் பார்த்து அமர்ந்ததும் அபிமன்யூவுக்கு மனம் கொஞ்சம் சாந்தமடைந்தது.

அஸ்வின் அவனிடம் “அந்த கடலை பாரு அபி. கரையைத் தொடணும்னு அதுக்கு ரொம்ப நாளா ஆசை. ஒவ்வொரு அலையா அனுப்பி வச்சு கரையை தொட முயற்சி பண்ணுது. ஒரு அலை தோத்து போனதும் சும்மா இருக்காம இன்னொரு அலைய அனுப்புது பார்த்தியா? அது தான் விடாமுயற்சி” என்று சொல்ல

அதை தலையாட்டி ஆமோதித்த அபிமன்யூ அவன் புறம் திரும்பி “அச்சு! அலையில விளையாடி ரொம்ப நாளாச்சுடா. சால் வீ  பிளே?” என்று ஆவலுடன் கேட்க அஸ்வினும் அவனும் கை கோர்த்தபடி கடலை நோக்கி சென்றனர்.

தங்கள் மீது மோதும் அலைகளை ரசித்தவர்கள் சிறிது நேரம் அந்த விளையாட்டில் உலகத்தை மறக்க அந்த நண்பர்களை தொட்டு விளையாடின சமுத்திர ராஜனின் செல்லப்பிள்ளைகளான அலைகள்.

ஒருவாறு ஆசை தீர விளையாடி விட்டு கடலை விட்டு வெளியேறும் போது அபிமன்யூவின் மனம் தெளிவாகி இருந்தது.

அந்த தெளிந்த மனதில் புதிய திட்டம் உதிக்க அஸ்வினின் தோளில் கை போட்டவன் “நீ சொன்னது நூறு சதவீதம் கரெக்ட் அச்சு. அந்த கடல்ராஜாவுக்கு கரைய தொடணும்னு ஆசை தான். அதனால சின்ன சின்ன அலையா அனுப்பிவச்சவர் தொடர்ந்து முயற்சில தோல்வியடைஞ்சதால வெகுண்டு போய் ஒரு நாள் சுனாமியா கரையை தொட்டார். அந்த மாதிரி தான் என்னோட இந்த தோல்வி எனக்கு நம்பிக்கையை குடுத்துருக்கு. சின்ன சின்ன தூண்டிலா போட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல அச்சு. ஒரு அடி ஒரே அடில அஸ்திவாரமே ஆட்டம் காணணும். அப்பிடி ஒரு பிளான் போடுறேன்” என்று தீவிரமான குரலில் கூறவும், அஸ்வின் தான் எதற்கு சொன்ன உதாரணத்தை இவன் எதற்கு எடுத்து கொள்கிறான் என்று அங்கலாய்க்க தவறவில்லை.

ரிசார்ட்டுக்குள் வந்து உடை மாற்றியவன் அனுராதாவுக்குப் போன் செய்து அவளை வரச் சொல்ல அஸ்வின் “அந்தப் பொண்ணை எதுக்குடா தேவை இல்லாம நம்ம பிரச்சனையில இழுக்கணும்?” என்று கேட்க

அபிமன்யூ புன்னகையுடன் “இப்போதைக்கு அவ தான் எனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை” என்று சொல்லிவிட்டு அனுராதாவின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தான்.

அனுராதா அவன் போன் செய்து அரை மணி நேரத்தில் அவன் முன்னே இருக்கவும் அவளிடம் “அந்த ஸ்ராவணியோட வீக் பாயிண்ட் எதாவது உனக்கு தெரியுமா?” என்று நேரடியாக கேட்கவே அவள் திகைத்தாள்.

பிரச்சனை தான் நினைத்ததை விட தீவிரம் போல என்று தயங்கவும் நோட்டுக்கட்டை அவள் முன் வீசி விட்டு “எனக்கு நீ குடுக்க போற இன்பர்மேசன் எவ்ளோ முக்கியம்னு உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்று சொல்ல அவள் ஓடிச் சென்று அதை எடுத்துக் கொண்டாள்.

பின்னர் அவனை புன்னகையுடன் நோக்கி “வனியோட பெரிய வீக்னெஸ் மேகி தான்” என்று சொல்ல அஸ்வின் அதிர்ந்தான்.

அந்த நேரம் அனுராதாவை கண்டால் அவனுக்கு அருவருப்பாக தோன்ற பல்லை கடித்தபடி அவளை நோக்கி வந்தவனை பார்வையால் தடுத்து  நிறுத்தினான் அபிமன்யூ.

நெற்றியை கீறிக்கொண்டே “நோ நோ! இனிமே மனுசங்களை வச்சு அவ எமோசன்ஸோட விளையாட நான் விரும்பல.  சோ அவ ஃப்ரெண்ட், அப்பா, அம்மா இதை தவிர அவளுக்கு வேற என்ன வீக்னெஸ்?” என்று கேட்க

அனுராதா சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தவள் முகம் மலர “ஆங்! இருக்கு சார். ஒரு வீக்னெஸ் இருக்கு. அது அவளோட ஃப்ளாட் தான்” என்று சொல்ல அஸ்வினும் அபிமன்யூவும் நம்ப முடியாமல் பார்த்தனர்.

அனுராதா “ஹய்யோ நம்புங்க சார். அந்த வீடு அவளோட உயிர். அவங்க அப்பா ரொம்ப ஆசையா அந்த வீட்டை வாங்குனார்னு அடிக்கடி நெகிழ்ந்து போய் சொல்லுவா. ஒரு தடவை நான் அங்கே போனப்போ அவங்க அப்பாவும் இதையே தான் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு அவர்களை பார்க்க அதிலிருந்த நம்பிக்கையின்மையை அறிந்து கொண்டாள் அனு.

பொறுமையாக “சார் அவங்க எல்லாரும் முதல்ல இருந்த வீடு அண்ணாநகர்ல இருக்கு. அது அவங்க பூர்வீக வீடு. ஆனா வனியும், மேகியும் வேலை விஷயமா அன்டைம்ல வீட்டுக்கு வர்றதால சுத்தி இருக்கிறவங்க ரெண்டு பேரை பத்தியும் வதந்தி பரப்புனதால வனியோட அப்பா தன்னோட ரிடையர்மெண்ட் ஃபண்ட் ஃபுல்லா போட்டு வாங்குன  ஃப்ளாட் அது.  அதோட இன்டீரியர் டெகரேசன்லாம் பார்த்து பார்த்து பண்ணுனார் அங்கிள்” என்று விளக்க அபிமன்யூவின் குறுக்குபுத்தி இப்போது நன்றாக வேலை செய்ய ஆரம்பித்தது.

அவளைக் கிளம்புமாறு கை காட்டியவன் அஸ்வினை நோக்கி வெற்றிப்புன்னகையை வீச அஸ்வினுக்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த விளையாட்டு தொடரப் போகிறதோ என்ற ஆதங்கம்.

***********

இரவு நேரம்….

பெற்றோர் இருவரும் உறங்கிவிட இரு தோழிகள் மட்டும் விழித்திருந்தனர். மேனகா எதையோ தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த ஸ்ராவணியின் அருகில் மோடாவை இழுத்து போட்டு அமர்ந்து எழுதி கொண்டிருப்பவளையே பார்த்தாள்.

ஸ்ராவணி  எழுத்து வேலையைத் தொடர்ந்து கொண்டே “என்னாச்சு மேகி? என் தலைக்கு மேல ஒளிவட்டம் எதுவும் தெரியுதா? இவ்ளோ ஆர்வத்தோட பாத்துட்டிருக்க?” என்று கேலி செய்ய

மேனகா அவளது கூந்தலை கலைத்து “கிண்டலாடி உனக்கு? நான் இன்னைக்கு நடந்த இன்சிடென்டை யோசிச்சு பாத்தேன். உன் இடத்துல வேற ஒரு பொண்ணு இருந்திருந்தா இந்நேரம் அவ உடைஞ்சுப் போயிருப்பா வனி. நீ எப்பிடி இவ்ளோ தைரியமா இருக்க?” என்று கேட்டுவிட்டு கன்னத்தில் கை வைத்தபடி அவளின் பதிலை எதிர்நோக்கினாள்.

ஸ்ராவணியை பேனாவை மூடிவைத்து விரல்களை சொடுக்கியவள் “நான் ஏன்டி கவலைப்படணும்? ஒரு வழியா கல்யாணம் நின்னு போச்சேனு நான் நிம்மதியா இருக்கேன். எப்பிடியும் விக்கியோட அம்மா என்னை பத்தி பாக்குறவங்க கிட்டல்லாம் குறை சொல்லுவாங்க. அது இந்த சிட்டி ஃபுல்லா பரவி யாருமே இனிமே இந்த ஸ்ராவணியை பொண்ணு கேட்டு வர மாட்டாங்க. நானும் புருஷன், கிருஷன்னு எவனையும் கட்டி மேய்க்காம என்னோட புரொபசனை கவனிப்பேன்” என்று  கண்ணில் கனவுகளுடன் கூற

மேனகா அதிசயித்தவளாய் “அப்போ நீயும் கல்யாணம் பண்ணிக்க போறது இல்லையா வனி?” என்று கேட்டு வாயை பிளந்தாள்.

அவளின் பாவனையில் சிரித்த ஸ்ராவணி தலை முடியை கொண்டை போட்டவாறு “அது என்ன நீயுமானு இழுக்குற? அப்போ நீயும் பண்ணிக்க மாட்டியாடி அத்தை மகளே?” என்று அவளைக் கேலி செய்தாள்.

அதற்கு மேனகா ஆமாமென்று மேலும் கீழுமாக தலையை ஆட்ட “தஞ்சாவூர்க்காரிங்கிறதை ப்ரூவ் பண்ணுற மேகி” என்று அவளின் கண்ணாடியை பிடுங்கி போட்டுக் கொண்டு மேஜை மேல் சாய்ந்து கொண்டாள் ஸ்ராவணி.

“நீ இவ்ளோ உறுதியா இருக்கிறதையும் மீறி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனா நீ என்ன பண்ணுவ?” என்று கேட்டுவிட்டு மேனகா ஆராய்ச்சி பார்வை பார்க்க

ஸ்ராவணி சாதாரணமாக “அப்பிடிலாம் நடக்க வாய்ப்பே கிடயாது மேகி” என்றாள்.

“சப்போஸ் உனக்கே தெரியாம நடந்துச்சுனா?” என்று புருவத்தை கேள்வியாய் உயர்த்தியவளை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தாள் ஸ்ராவணி.

“அடியே எனக்கே தெரியாம எனக்கு எப்பிடி கல்யாணம் நடக்கும்டி? சரியான மூளை கெட்டப் பொண்ணா இருக்கியே” என்று அவள் தலையிலடித்து கொள்ள

“ப்ச்.. நடந்துச்சுனா என்ன பண்ணுவனு சொல்லு வனி” என்று ஸ்ராவணியின் கன்னத்தை பிடித்து இழுத்தபடி மேனகா கேட்டாள்.

ஸ்ராவணி தீவிரமான முகபாவத்துடன் “நடந்துச்சுனா…..” என்று இழுத்துவிட்டு வீட்டின் மேல்கூரையை பார்க்க அவளைத் தொடர்ந்து மேனகாவும் மேலே பார்த்தாள்.

ஸ்ராவணி நகத்தை கடித்தவாறு “நடந்துச்சுனா……புருஷனா வர்றவனை மர்டர் பண்ணிட வேண்டியது தான்” என்று கேலியாக சொல்ல மேனகா “அடிப்பாவி கொலைகாரி” என்று வாயைப் பிளந்தாள்.

ஸ்ராவணி இடுப்பில கைவைத்து முறைத்தவளாய் “பின்ன என்னடி? யாருக்காச்சும் அவங்களுக்கே தெரியாம கல்யாணம் நடக்குமா? கேக்குறா பார் கேள்வி. ஆனா ஒன்னு அப்பிடி ஒரு நிகழ்ச்சி நடந்துச்சுனா என்னோட புருஷன் வீட்டுல எவனாச்சும் பேச்சிலரா இருந்தான்னா அவனைப் பிடிச்சு உன் தலையில கட்டி வச்சிடுவேன்” என்று சொல்ல

மேனகா கண்ணை விரித்து முறைத்தபடி “கடைசில நீ என் தலையிலயே கை வைக்க பாக்கிறியா?” என்று ஸ்ராவணியை விரட்ட அவள் மேனகாவின் கையில் அகப்படாமல் ஓட இரு தோழிகளும் வரப் போகும் விபரீதங்களை அறியாமல் சந்தோசமாக சிரித்துக் கொண்டனர். மனிதர்களின் வாழ்வில் எப்போது என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது கடவுள் தான். ஆனால் அவர் அதை சக மனிதர்கள் மூலமாகவே நடத்திக் காட்டுகிறார் என்பதே உண்மை.