💞அத்தியாயம் 8💞

யூனிவர்சிட்டி கேம்பஸ் ரொம்ப நீட்டா அமைதியா இருக்கு.. இங்க எனக்கு ஒரு புது ஃப்ரெண்ட் கிடைச்சிருக்காஅவ நேம் கிளாராபடபடன்னு பேசுறதுல அவ அப்பிடியே ஷானுவோட ஜெராக்ஸ் காப்பிஅவளோட க்ரீன் கலர் கண்ணைப் பாத்ததுமே எனக்கு அவளை ரொம்ப பிடிச்சுப் போச்சுஅவ கிர்பி டிரைவ் ஏரியால இருக்கிற மெக்டொனால்ட்ல பார்ட் டைம் சர்வரா ஒர்க் பண்ணுறாளாம்என்னை இன்னைக்கு அங்க இன்வைட் பண்ணிருக்காநாடு, மொழி, கலாச்சாரம் வேணும்னா வேற மாதிரி இருக்கலாம்ஆனா அன்பு எல்லா இடத்துலயும் ஒரே மாதிரியானது தான்னு அவளைப் பாத்ததுக்கு அப்புறமா நான் புரிஞ்சுகிட்டேன்

                                                                  –தன்வி

சமையலறைக்குள் புகுந்த ஷான்வி படபடவென மோமோக்களுக்குத் தயாராக வைத்திருந்த வட்ட வடிவ மாவாலான ஷீட்டை எடுத்து அதன் உள்ளே மஷ்ரூம் பை செய்வதற்கு தயார் செய்து வைத்திருந்த காளான் கலவையுடன் சீஸை கலந்து மடித்து வேக வைக்க ஆரம்பித்தாள்.

மோமோக்கள் வெந்ததும் தக்காளி சாஸுடன் எடுத்துச் சென்றவள் அந்தச் சிறுவனிடம் தட்டை நீட்ட அவனது தாயார் ஷான்வியைப் பார்த்த பார்வையில் மெச்சுதலும் தோழமையும் இருந்தது.

மகனிடம் “ஆன்ட்டிக்கு தேங்க்ஸ் சொல்லுடா” என்று சொல்ல அச்சிறுவன் மோமோவை சாஸில் தொட்டு வாயில் அதக்கியபடி “தேங்க்யூ” என்று சொல்லவும் ஷான்வி அவனது கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டுக் கொண்டவள் “யூ ஆர் வெல்கம் லிட்டில் மாஸ்டர்” என்று சொல்லிவிட்டு அகன்றாள்.

அவள் வேகமாக வந்து அச்சிறுவனிடம் மோமோவை நீட்டியது, அவனிடம் சிரித்தபடி உரையாடியது, அவன் கன்னம் கிள்ளி முத்தமிட்டது இவையனைத்தையும் பார்த்தபடி நின்றிருந்தான் சித்தார்த். இன்று அவனது இண்டர்ன்ஷிப் காலத்துக்கான முதல் நாள்.

முதல் நாளிலேயே கண்ணில் கண்ட காட்சி மனதுக்கு நிறைவை அளித்தது. சில தினங்களுக்கு முன்னர் தன்னிடம் சண்டையிட்ட பெண்ணா இவள் என்ற ஆச்சரியத்துடன் அந்தச் சிறுவனும் அவன் அன்னையும் அமர்ந்திருந்த மேஜையில் அருகில் நின்றிருந்தான் அவன்.

அச்சமயத்தில் ஹோட்டலின் அதிபரான டேவிட் மில்லர் வரவும் அந்தப் பெண்மணி எழுந்தவர் புன்னகையுடன் அவருடன் கைகுலுக்க அங்கிருந்த பணியாளர்களுக்கு இவர் டேவிட்டுக்குத் தெரிந்தவரா என்ற ஆச்சரியம்.

அப்பெண்மணியின் கணவர் இந்தியாவில் மிகப்பெரிய ஹோட்டல் அதிபர் என்பது அவர்களின் பேச்சின் மூலம் மற்றவர்களுக்குத் தெரிந்தது. டேவிட்டும் அவரும் சேர்ந்து இந்தியாவில் ஹோட்டல் ஆரம்பிப்பது பற்றிய கலந்துரையாடலுக்காக கணவருடன் வந்திருந்தவர் தானும் மகனும் காலையுணவு உண்ணாததால் அங்கேயே முடித்துக் கொள்ளலாம் என ஆர்டர் செய்த போது தான் அவரது மகன் அடம் பிடித்து மோமோ கேட்ட நிகழ்வு நடந்தது.

அப்போது தான் சித்தார்த்தும் அங்கே வந்தான். ஷான்வியைக் கண்டவன் அங்கேயே நின்றுவிட்டிருந்தான். இவர்கள் பேசியதைக் கேட்டவன் தனது வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.

அப்பெண்மணி தனது மகனை அழைத்துக்கொண்டு மில்லருடன் பேசியபடி மூன்றாவது தளத்தில் உள்ள அலுவலக அறைக்குச் சென்றார். அவர்களின் தொழில் ரீதியான பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் அப்பெண்மணி ஷான்வியின் வேலையார்வத்தைப் பாராட்டிவிட்டு, தான் அவளுக்கு நன்றி சொல்ல விரும்புவதாகக் கூறவே மில்லர் தனது உதவியாளரிடம் அவளை அழைக்குமாறு சொல்லி அனுப்பினார்.

சில நிமிடங்களில் ஷான்வி அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தவள் மரியாதை நிமித்தம் டேவிட் மில்லருக்கு வணக்கம் கூறிவிட்டு அந்தப் பெண்மணியிடம் சினேகப்புன்னகையை வீசினாள்.

அவரது அருகில் இருந்த சிறுவன் ஷான்வியின் கரங்களைப் பிடித்து “தேங்க்யூ! ஐ லவ் யுவர் மோமோஸ்” என்று சொல்லிக் குனியுமாறு சைகை காட்ட ஷான்வி கால்களை மடித்து அமரவும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவனது அன்னைக்கு மகனது அன்புச்செய்கையில் பெருமிதம் என்றால் மில்லருக்கோ பணியில் இவ்வளவு ஈடுபாடு கொண்ட ஒரு ஊழியர் கிடைத்த மகிழ்ச்சி.

“வெல்டன் மை டியர் யங் லேடி… குட் ஜாப்” என்ற மில்லரின் பாராட்டு ஷான்வியைத் துள்ளிக் குதிக்க வைத்தது. பணியிடம் என்பதால் குதிக்க உயர்ந்த கால்களை கட்டுப்படுத்தியவள் அவருக்கு மரியாதையுடன் நன்றி நவிழ்ந்துவிட்டு அச்சிறுவனிடமும் அவனது அன்னையிடமும் சொல்லிக் கொண்டு விடைபெற்றாள்.

வெளியே வந்தவள் கால்களை மார்பிள் தரையில் பதித்து உற்சாகமாக நடந்து செல்ல எதேச்சையாக நிதிப்பிரிவினுள் இருந்து வெளியே வந்த சித்தார்த்தின் மீது மோதிக் கொண்டாள். மோதியவள் கீழே விழும் முன்னர் அவன் அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள இருவரும் சமாளித்து நின்றனர்.

ஷான்விக்குத் தான் ஏதோ கரும்பாறை மீது தான் மோதிவிட்டோமோ என்ற சந்தேகம். வலித்த மூக்கைத் தேய்த்துவிட்டபடி மன்னிப்பு கேட்க நிமிர்ந்தவள் தன் தோளைத் தழுவியிருக்கும் கரங்களின் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டு சட்டென்று அவனிடமிருந்து விலகி நின்றாள். விலகி நின்றவள் பார்வை அவன் முகத்தைக் கண்டதும் தீயாய் மாறவும் சித்தார்த்துக்குக் குழப்பம்.

இரு கைகளையும் விரித்து தோளைக் குலுக்கிவிட்டு “வாட் ஹேப்பண்ட்? கீழ விழுந்து மூஞ்சி, மூக்கை உடைக்காம உன்னைக் காப்பாத்திருக்கேன்… அதுக்கு ஏன் உன் கண்ணுல லாவாக்குழம்பு பொங்குது?” என்று கேலியாய் கேட்க

“அக்கம் பக்கம் யாரு வர்றாங்கனு பாத்து நடக்க மாட்டியா? இவ்ளோ உயரத்துக்கு வளர்ந்திருக்க, ஆனா பாதையில கவனம் இல்ல” என்று எள்ளலாய் பதிலுக்குக் கேட்டவளை பார்த்துப் பொய்யாய் ஆச்சரியப்பட்டவன்

“இதே மாதிரி நானும் கேப்பேன்… இவ்ளோ குள்ளமா இருக்கிறதால உனக்கு இன்னும் மனசுல குழந்தைனு நினைப்போ? நீ நடந்து வர்றதுக்குப் பதிலா டான்ஸ் ஆடிட்டே வந்து என் மேல மோதுனது தப்பு இல்ல… நான் அவசரமா வெளியே வந்தது தான் தப்பு… அப்பிடி தானே” என்று கேட்கவும்

“உன் கிட்ட ஆர்கியூ பண்ணி டைம் வேஸ்ட் பண்ணுற அளவுக்கு இப்போ நான் ஃப்ரீயா இல்ல.. சோ ப்ளீஸ் மூவ் அ லிட்டில்” என்று அசட்டையாகத் தோளைக் குலுக்கிவிட்டு வேண்டுமென்றே அவனை விட்டு இரண்டு அடிகள் விலகி நடந்தாள் ஷான்வி.

அவளை அப்படியே விட்டுவிட மனமின்றி சீண்டிப் பார்க்க எண்ணியது சித்தார்த்தின் மனம்.

“எப்போ நீ ஃப்ரீ ஆவேனு சொல்லு… அப்போ வந்து பேசுறேன் ஆங்ரி பேர்ட்” என்று அவன் உரத்தக் குரலில் சொல்ல, சில அடிகள் கடந்தவள் திரும்பி அவனை முறைத்து

“அவசியம் இல்ல மிஸ்டர்… மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்” என்று கத்த, அவன் வேடிக்கையாய் கண் சிமிட்டிச் சிரிக்கவே கோபத்துடன் காலைத் தரையில் உதைத்துவிட்டு அங்கிருந்த மின்தூக்கியை நோக்கி விறுவிறுவென்று சென்றுவிட்டாள் அவள்.

கீழ்த்தளத்துக்கு வந்தவள் சமையலறைக்குள் நுழைந்ததும் அவளது முகம் கடுகடுவென்று இருப்பதைப் பார்த்துவிட்டு தனஞ்செயன் என்னவென்று வினவ அவள் சித்தார்த்துடனான முதல் சந்திப்பை விளக்கவும் அவன் பக்கென்று நகைத்துவிட்டான்.

அவனை ஷான்வி முறைக்கவும் வாயின் இடமிருந்து வலமாக கோடிழுத்துக் காட்டினான் தனஞ்செயன்.

அதில் சமாதானமான ஷான்வி இன்று நடந்ததையும் கொட்டிவிடவே முதலில் அவள் மில்லரிடம் பாராட்டு பெற்றதற்கு மனதாற வாழ்த்தியவன் பின்னர் சித்தார்த்துடன் நடந்த மோதலைக் குறிப்பிட்டு

“குட்டிம்மா எனக்கு தெரிஞ்சவரைக்கும் எல்லா காதல் கதையும் மோதல்ல தான் ஆரம்பிக்கும்… ஒரு வேளை உன்னோட இந்த மோதலும் காதல்ல தான் போய் முடியுமோ என்னவோ?” என கேள்வியாய் புருவம் தூக்கி வினவ

“எனக்கு அப்பிடிப்பட்ட காதல் கதையில நம்பிக்கை இல்லண்ணா… ஆனா அவனை மாதிரியே நீங்களும் என்னை கிண்டல் பண்ணுறிங்க பாருங்க… யூ ஆர் சோ மீன் அண்ணா” என்று முகத்தைச் சுருக்கிவிட்டுத் தன் கோபத்தை பஃப் செய்வதற்கு வைத்திருந்த பேஸ்ட்ரியில் காட்டினாள் அவள்.

அதே நேரம் நிதிப்பிரிவில் தனக்கென ஒதுக்கப்பட்ட கணினியில் கடகடவென தட்டிக் கொண்டிருந்த சித்தார்த்தின் தோளைத் தட்டியது ஒரு பெண்கரம். திரும்பிப் பார்த்தவன் அங்கே அவனது பயிற்சியாளரும் நிதிப்பிரிவின் உயரதிகாரியுமான பெண்மணி மூக்குக்கண்ணாடியுடன் நிற்கவும் “மிசஸ் டேவிஸ்” என்றபடி அவரை நோக்கியவன் அவர் சொன்ன விவரங்களிலிருந்து தனது வேலையைப் பகிர்ந்து கொள்ள இன்னொரு நபர் வரப் போகிறார் என்பதை அறிந்து கொண்டான்.

வருபவள் கல்லூரி மாணவி போல. பகுதிநேர வேலைக்காகச் சேர்ந்திருக்கிறாள் என்ற மிசஸ் டேவிஸ், இனி அவனுக்குத் தேவையான கணினியில் ஏற்றவேண்டிய விவரங்களை அவளே ஏற்றிவைத்துவிடுவாள் எனவும், சித்தார்த் அதை ஹோட்டலின் கணக்கு வழக்கு பார்க்கும் மென்பொருளில் பதிவு செய்து நிதி அறிக்கைகளை துல்லியமாகத் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டுமென கட்டளையிட்டார்.

ஏனெனில் ஹோட்டலின் அதிபரான டேவிட் மில்லர் எப்போது இங்கே வந்தாலும் அவர் முன் வைக்கவேண்டிய அறிக்கைகள் இரண்டு மட்டும் தான். ஒன்று ஊழியர்களின் வேலைத்திறன் பற்றிய அறிக்கை. அதை மனிதவளத்துறையினர் பார்த்துக் கொள்வர். மற்றொன்று நிதியறிக்கைகள். அது தான் நிதித்துறையினரின் பொறுப்பில் வரும்.

சித்தார்த் அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டவன் ஒரு புன்னகையுடன் மிசஸ் டேவிஸை அனுப்பிவைத்தான்.

மாலை வரை உற்சாகமாக வேலையைத் தொடர்ந்தவன் வகுப்புக்குச் செல்வதற்கான நேரம் நெருங்கிவிடவே மிசஸ் டேவிஸிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

நேரே கீழ்த்தளத்தை அடைந்தவன் ரெஸ்ட்ராண்டில் கூட்டம் சற்று குறைவாக இருக்கவும் அண்ணன் இருக்கும் சமையலறையை நோக்கி முன்னேறினான்.

விஸ்வா அப்போது சற்று ஓய்ந்திருந்தான். அவனிடம் சென்ற சித்தார்த்

“என்னடா மாஸ்டர் செப் வேலையில்லாம வெட்டியா இருக்க போல?” என்று கேலி செய்ய

“உங்களவுக்கு எனக்கு வேலைச்சுமை கிடையாதுங்க ஆபிசர் சார்” என்று போட்டிக்குக் கேலியாய் பதிலிறுத்த விஸ்வஜித் தம்பியின் முதல் நாள் வேலையனுபவத்தைக் கேட்க அவன் உற்சாகமாக விவரித்தான்.

பின்னர் பொறி தட்டியது போல ஷான்வியின் நினைவு வரவே அவளுடன் பேசியதை அண்ணனிடம் பகிர்ந்து கொள்ள அவனை குறும்பாய் நோக்கினான் விஸ்வஜித்.

“சோ அந்தப் பொண்ணு அவளோட ஃப்ரீ ஹவர்ஸ உன் கிட்ட சொல்லாம போனது தான் உனக்கு வருத்தமா இருக்கு? அப்பிடி தானே… நான் வேணும்னா அவளைக் கூப்பிட்டு எப்போ ஃப்ரீ ஆவானு கேக்கவா?” என ஆர்வமாய் கேட்ட தமையனுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டான் சித்தார்த்.

“ஐயா சாமி! அந்த ஆங்ரி பேர்ட் கிட்ட பேசுன பத்து நிமிசத்துல ஹூஸ்டன்ல இருக்கோமா இல்ல சஹாரா பாலைவனத்துல இருக்கோமானு சந்தேகம் வந்துடுச்சு… அவ்ளோ அனல் அவளோட பேச்சுல! இதுல அவ ஃப்ரீ டைம் தெரியலனு எனக்கு வருத்தம் வேறயா?” என்று சலித்தபடி கிளம்பினான்.

சமையலறையைத் தாண்டி லாபிக்கு வந்தவனின் கண்ணில் பட்டாள் அவளுக்கே உரித்தான பதற்றத்துடன் கூடிய வேகநடையுடன் மின் தூக்கியை நோக்கிச் சென்று கொண்டிருந்த தன்வி. அவளைக் கண்டதும் சித்தார்த் அவனை அறியாது “ஹலோ அமுல் பேபி” என்று சத்தமாய் கத்திவிட அவளது வேகநடை தடைப்பட்டது.

தன்னை நோக்கி கையசைத்தபடி வந்த சித்தார்த்தைக் கண்டதும் பதற்றம் மட்டுப்பட்டுச் சினேகபாவத்துடன் புன்னகைத்தாள்.

“ஹாய் சார்! நீங்க எப்பிடி இங்க?” என்று கேட்டவளிடம் தான் இங்கு இண்டர்ன்ஷிப் செய்வதாகச் சொன்னவன் அவளுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்டுவைக்க தனக்கு நிதிப்பிரிவில் பகுதிநேர வேலை கிடைத்திருப்பதாகச் சொன்னாள் தன்வி.

“ஓ! அப்போ மிசஸ் டேவிஸ் சொன்ன காலேஜ் கோயிங் கேர்ள் நீ தானா?”

“யாரு மிசஸ் டேவிஸ்?”

“அவங்க தான் ஃபினான்ஸ் செக்சனோட ஹெட்… ரொம்ப கேசுவலான லேடி… ஒர்க்ல கொஞ்சம் பெர்பெக்சன் எதிர்பார்ப்பாங்க… உன்னை அவங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்”

புன்னகையுடன் தனக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாய் பேசியவனை நன்றியுடன் பார்த்தாள் தன்வி.

சித்தார்த் அவளது முகத்தைக் கூர்ந்து நோக்கியவன் “இந்த ஃபேஸ்ல இன்னும் டென்சன் கொஞ்சம் போல ஒட்டிக்கிட்டு இருக்கே! என்ன பண்ணுனா அது போகும்?” என்று அவளது முகத்தைச் சுட்டிக்காட்டி விரல்களால் காற்றில் வட்டமடிக்க

“அதான் உங்களை பார்த்துட்டேனே! இனிமே டென்சன்லாம் தூர ஓடிடும் சார்” என்க

“அந்த ‘சார்’ வேண்டாமே… கால் மீ சித்து… பை த வே உன்னோட நேம் தன்வினு சொன்னேல்ல… மே ஐ கால் யூ தனு?” என்றவனிடம் சரியென்று தலையாட்டினாள் தன்வி.

“ஓகே தனு! ஃபர்ஸ்ட் டே ஒர்க் உனக்கு நல்லபடியா போறதுக்கு வாழ்த்துக்கள்! இப்போ எனக்கு யூனிவர்சிட்டிக்குப் போக வேண்டிய நேரம் நெருங்கிடுச்சு… சோ ஐ ஹேவ் டு லீவ்… டென்சன் ஆகாம ஒர்க் பண்ணு… பை… டேக் கேர்” என்று அக்கறையாய் சொன்னவனுக்கு டாட்டா காட்டிவிட்டு மனதிலிருந்த பெரும் பாரம் இறங்கிய உணர்வுடன் மின்தூக்கிக்குள் நுழைந்தாள் தன்வி.

அதில் நுழைந்து மூன்றாவது தளத்தில் இறங்கியவளுக்குப் போனில் ஷான்வியிடம் இருந்து அழைப்பு வர “நான் வந்துட்டேன் ஷானு” என்று தங்கையிடம் உற்சாகமாகப் பேசியபடி அலுவலக அறையின் நிதிப்பிரிவை நோக்கி நடை போட்டாள்.

அவள் உள்ளே சென்றதும் வரவேற்ற மிசஸ் டேவிஸ் அவளது வேலைகளை விளக்கிவிட அனைத்தையும் பொறுமையாய் கேட்டவள் சற்று முன்னர் வரை சித்தார்த்தின் ஆக்கிரமிப்பில் இருந்த கணினியில் தனது வேலையை ஆரம்பித்தாள்.

அவன் சொன்னது போலவே மிசஸ் டேவிஸ் மிகவும் அருமையான பெண்மணி தான். அவள் கேட்ட சந்தேகங்களுக்கு முகம் சுளிக்காது அழகாய் பதிலளித்தவர் தனது உதவியாளரிடம் தனக்கு காபி ஆர்டர் செய்த போது தன்விக்கும் கொடுக்குமாறு சொல்லிவிட்டுத் தனது வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் மீண்டும் ஒரு முறை அன்று பல்கலைகழகத்தில் சித்தார்த் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

“இந்த உலகத்துல பூச்சாண்டி மட்டுமே இருக்க மாட்டாங்க குட்டி பாப்பா… நிறைய நல்லவங்களும் இருக்காங்க…”

அவனது வார்த்தைகள் நூறு சதவிகிதம் உண்மை. இங்கே வந்த பின்னர் அஸ்வினியாகட்டும், தனஞ்செயனாகட்டும் தன்னிடமும் ஷான்வியிடமும் அக்கறையாய் தானே இருக்கின்றனர்! அதோடு சித்தார்த், அவனுக்குத் தான் யாரோ ஓர் மூன்றாவது மனுசி தான். ஆனால் தனது பதற்றத்தைப் போக்க அன்று எவ்வளவு தூரம் பேசி தன்னை இயல்புநிலைக்குக் கொண்டு வந்தான்!

அதோடு அன்றைய தினம் அந்த வீ.கே கூட தன்னிடம் தண்மையாக மரியாதையுடன் தானே நடந்து கொண்டான்! வீ.கே என்றதும் அவனது குறும்புச்சிரிப்பு கண் முன் வந்து சென்றது. தலையைச் சரித்து கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி குறும்பாக பார்த்தவனின் பார்வை இப்போதும் அவளுக்குள் பட்டாம்பூச்சிகளைப் பறக்க வைத்தது. அந்த உணர்வுடன் கணினியின் திரையை நோக்க அதில் ஏழு வண்ண வானவில் தெரிந்தது அவளுக்கு.

திடும்மென்று அவனைப் பற்றிய எண்ணம் தனக்கு எதற்கு என்று நினைத்தவள் இப்படி எல்லாம் யோசிக்கிறோமே; தனக்கு என்னவாயிற்று என்று செல்லமாகத் தன்னைத் தானே கடிந்து கொண்டு தலையில் தட்டிவிட்டு வேலையில் கவனமானாள்.