💞அத்தியாயம் 5💞

அம்மா மேரேஜ் பண்ணிக்கச் சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்கஐ ஹேவ் நோ ப்ராப்ளம்ஆனா எனக்கு வர போற ஒய்ப் என்னையும் சித்துவையும் பிரிச்சிடக் கூடாதேனு தான் நான் யோசிக்கிறேன்அது மட்டுமில்லாம மேரேஜ்னா அவ்ளோ ஈசி இல்லயே! நம்ம லைப் பார்ட்னரா வரப் போறவங்க மெச்சூர்டா, நமக்கு உறுதுணையா இருக்கணும்வெறும் அலங்கார பொம்மைய கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் எனக்கு இல்லஅப்பிடி ஒரு பொண்ணை நான் மீட் பண்ணிட்டேன்னா கண்டிப்பா மேரேஜ் பண்ணிப்பேன்

                                                                    –விஸ்வஜித்

பேலர் அவென்யூ, ரிவர் ஓக்ஸ்

அப்போது தான் வீடு திரும்பியிருந்தான் விஸ்வஜித். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அவனது தம்பி அன்றைய தினம் வீட்டில் இருந்தான். வழக்கமாக இந்நேரத்தில் நண்பர்களுடன் வெளியே சுற்றிக் கொண்டிருப்பான்.

இப்போதும் போனில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தவனின் முதுகில் தட்டியவன் அவனருகில் அமர்ந்து கொண்டான்.

சித்தார்த் அண்ணனைப் பார்த்து புன்னகைத்தவன் “என்னடா அண்ணா இன்னைக்கு உன்னோட கிச்சன் கிங்டம்மை விட்டுச் சீக்கிரமே வந்துட்ட?” என்று வினவ வேலை சீக்கிரம் முடிந்துவிட்டதாகச் சொன்னவன் இண்டர்ன்ஷிப்புக்கான நேர்க்காணல் எளிமையாக இருந்ததா என்று கேட்க அதற்கு பதிலிறுத்தான் இளையவன்.

கூடவே அஸ்வினி சொன்ன விசயத்தையும் கேட்க சித்தார்த் சத்தம் போட்டு நகைக்க ஆரம்பித்தான்.

“டேய் அண்ணா! நான் அஸுக்கானு நினைச்சு தான் அந்தப் பொண்ணை ஹக் பண்ணுனேன்… அவ உறைஞ்சு போய் நின்னப்போவே நான் விலகிருக்கணும்… அப்போ மண்டைல உறைக்கலடா.. திடீர்னு பாத்தா எனக்கு எதிர்ல அஸுக்கா வந்து நிக்கிறா… அப்போ நம்ம ஹக் பண்ணுனது யாரைனு பாத்தா அது வேற பொண்ணு… அஸுக்கா ஹைட்லயே குட்டியா டால் மாதிரி நின்னு என்னை முறைச்சிட்டிருந்தாடா.. பாக்குறதுக்கே செம கியூட்டா இருந்துச்சு… விட்டா அவ கண்ணுல இருந்த ஃபயர் ஸ்டேசன்ல என்னை எரிச்சிருப்பா”

சித்தார்த் சொன்னதைக் கேட்டவன் “நேத்து என் கிட்ட ஊர்மிளா லெட்சுமணன்னு கதை சொல்லிட்டு இன்னைக்கு இப்பிடி பண்ணி வச்சிருக்கியேடா! தம்பி உன் போக்கு சரியில்லையே” என்று கேலி செய்தவாறே உடை மாற்றத் தொடங்கினான் விஸ்வஜித்.

சித்தார்த் சோபாவில் கால் நீட்டிப் படுத்தபடியே “இப்போவும் நான் என் ஊர்மிளாவுக்குத் தான் வெயிட் பண்ணுறேன்… யாருக்குத் தெரியும்? இந்தப் பொண்ணே கூட என் ஊர்மிளாவா இருக்க சான்ஸ் இருக்கு” என்று சொல்லிவிட்டுக் கண்ணைச் சிமிட்டினான் அவனது இளைய சகோதரன்.

“அப்போ சார் தெரிஞ்சு தான் எல்லாத்தையும் பண்ணிருக்கிங்க போல… சரி விளையாட்டை விடு… சீரியஸா பேசுவோம்” என்று ஆரம்பித்தவாறே டீசர்ட்டை இழுத்துவிட்டபடி அவனருகில் அமர்ந்த விஸ்வஜித் அஸ்வினி தன்னிடம் சொன்ன ஷான்வி மற்றும் அவள் சகோதரியைப் பற்றிய விவரங்களை தம்பியிடம் பகிர்ந்து கொண்டான்.

“இவ்ளோ சின்ன வயசுல அப்பா அம்மாவ இழந்து புது இடத்துல புது மனுசங்களோட வாழ ஆரம்பிக்கிறது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்டா… அஸு சொன்னப்போ எனக்கு மனசு பாரமா இருந்துச்சு… பெரிய பொண்ணு உன்னோட யூனிவர்சிட்டில தான் எம்.பி.ஏ ஜாயின் பண்ணிருக்காளாம்… ஃபால் செமஸ்டர் நாளைக்கு ஸ்டார்ட் ஆகுதுல்ல… அவளுக்குத் தங்கச்சிய கஷ்டப்படுத்தி பார்க்க இஷ்டமில்லனு அஸு கிட்ட சொன்னாளாம்… ஃபினான்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல பார்ட் டைம் ஜாப்கு வேகன்சி இருக்குனு அஸு சொல்லிருக்கா… நாளைக்கு யூனிவர்சிட்டில ஓரியண்டேசன் அட்டெண்ட் பண்ணிட்டு அப்பிடியே ஹோட்டலுக்கும் வந்து இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணுவானு அஸு சொன்னா”

அஸ்வினி இந்த விசயத்தைச் சொல்லி முடிக்கும் போதே விஸ்வஜித்தின் மனதில் அந்த இரு பெண்கள் மீதும் புது வித மரியாதை உண்டாகி இருந்தது. கூடவே கேக்குடன் செல்பி எடுத்த இளையவளின் நினைவும் வந்தது. அப்போது இருந்த குழந்தைத்தனமும், வெளிநாட்டில் வந்து தங்கும் அளவுக்கு முடிவெடுத்த மனமுதிர்ச்சியும் ஒரே ஆளிடத்திலா என்ற ஆச்சரியமும் அவனுள் எழுந்தது.

சித்தார்த் அண்ணன் சொன்னவற்றை முழுவதுமாக கேட்டு முடித்துவிட்டு எழுந்து அமர்ந்தவன் “அப்போ அஸுக்கா வீட்டுக்குப் போனா அந்த ஆங்ரி பேர்டை பார்க்கலாம்… அப்பிடி தானே அண்ணா?” என்று ஆர்வமாய் வினவ

“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சின்னப்பொண்ணுக்குக் கொஞ்சம் கோவம் அதிகம்னு அஸு சொன்னா… நீ எதுக்கும் கொஞ்சம் கவனமா இருடா தம்பி” என்று நகைப்பினூடே சித்தார்த்தைக் கேலி செய்த அவனது தமையன் எழுந்து யோகா செய்ய போய்விட்டான்.

சித்தார்த் மொபைல் போனை நெற்றியில் தட்டிக் கொண்டவன் கண் மூடி மீண்டும் சோபாவில் சரிய அவன் மனக்கண் முன்னே வந்து போனாள் அவனைத் திட்டித் தீர்த்த ஷான்வி.

**********

இரவுணவு எடுத்துச் செல்ல வந்த தன்வியிடம் பேச்சு கொடுத்தாள் அஸ்வினி.

“இன்னைக்கு ஈவினிங் ஷான்விய நான் கால்டாக்சில தான் வரச் சொன்னேன்… ஆனா அவ அவளோட சீப் செப் கூட வந்தானு நீங்க பேசுறத வச்சு தெரிஞ்சுகிட்டேன்… அவ தனியா போக வர பழகணும்னு தான் நான் டாக்சில வரச் சொன்னேன்”

தன்வி அதைக் கேட்டு ஆமோதித்தவள் “தனா அண்ணா தான் வயசுப்பொண்ணு தனியா ஏன் கால் டாக்சில போறேனு சொல்லி அவளைக் கார்ல ட்ராப் பண்ணுனாராம்” என்று மெதுவாய் கூற

“ஓ தனா ‘அண்ணாவா’?” என்று அண்ணாவில் அழுத்தம் கொடுத்து அஸ்வினி கேட்ட விதத்தில் தன்வி தடுமாறிப் போனாள்.

“அக்கா… அது… தனா அண்ணா” என்று வார்த்தைகளில் தந்தியடித்தவளை நிறுத்துமாறு சைகை காட்டிய அஸ்வினி

“இது இந்தியா இல்ல… யூ.எஸ்.. இங்க நீங்க ஒர்க் பண்ணிட்டுப் படிக்கலாம்னு தைரியமா வந்திங்கல்ல, அந்த தைரியம் ஆப்டர் ஆல் ஒரு கால் டாக்சில வர்றப்போ காணாம போயிடுமா? எதையும் தனியா ஃபேஸ் பண்ணுற தைரியம் பொண்ணுங்களுக்கு ரொம்ப அவசியம்… அதோட மூனாவது மனுசங்களை இவ்ளோ ஈசியா நம்புறது எனக்கு சரினு படல… அப்புறம் உங்க இஷ்டம்” என்று படபடத்துவிட்டுத் தன் கடமை முடிந்தது என சமையலறையிலிருந்து கிளம்பிவிட்டாள்.

தன்வி ஏற்கெனவே அஸ்வினியின் வாழ்க்கையில் நடந்த சோகங்களை அறிந்திருந்ததால் அவள் மூன்றாவது நபர்களிடம் சூடு பட்ட பூனையாய் காட்டும் ஒதுக்கத்தைப் புரிந்துகொண்டாள். கூடவே இலைமறை காயாக தங்களிடம் அவள் காட்டும் அக்கறை தன்வியின் மனதுக்கு இதமாக இருந்தது.

இதை கட்டாயம் ஷான்வியிடம் சொல்ல வேண்டுமென தங்களின் அறைக்கு விரைந்தாள்.

ஷான்வி சப்பாத்தி விள்ளலை வாயில் அடக்கியபடியே “இசிண்ட்? லேடி ஹிட்லரா இவ்ளோ அக்கறையா பேசுனது? ஐ காண்ட் பிலீவ் திஸ்” என்று தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

அவள் தோளில் அடித்த தன்வி “என்னடி அவங்களுக்கு நிக்நேமே வச்சிட்டியா? வெரி பேட்” என்று கண்டிக்க அதை அவள் கண்டு கொண்டால் தானே!

அக்காவும் தங்கையுமாய் இவ்வாறு அரட்டையடித்தபடி சாப்பிட்டு முடித்து உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

மறுநாள் விடியலில் உற்சாகமாக புறப்பட்ட ஷான்விக்கு மாறாக தன்வி சீக்கிரம் எழுந்துவிட்டாள். பல்கலைகழகத்துக்குச் செல்ல பதற்றத்துடன் தயாரானாள். முதல் நாள் கல்லூரி அனுபவம் அவளுக்கு ஒன்றும் புதிதில்லை தான். ஆனால் புது மனிதர்களைச் சந்திக்க வேண்டுமே! அது தான் அவளது பதற்றத்துக்குக் காரணம்!

காலையுணவு நேரத்திலும் அதே பதற்றத்துடன் இருந்தவளை அனிகா “நான் கூட ஃபர்ஸ்ட் டே ஸ்கூல் போறப்போ இவ்ளோ டென்சனா இல்ல தனுக்கா… பட் நீ பெரிய பொண்ணு தானே! ஏன் இப்பிடி பயப்படுற?” என்று கேலி செய்ய தன்வி அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“அப்போ நான் வேணும்னா உன் கூட கம்பெனிக்கு வரவா தனுக்கா?” என்று அவள் பெரியமனுசி போல கேட்ட விதத்தில் எப்போதும் அமைதியாய் இருக்கும் அஸ்வினி கூட நகைத்துவிட்டாள்.

“அதுல்லாம் அவ பார்த்துப்பா… நீ உன்னோட கிளாஸ் டீச்சர் சொன்ன அசைன்மெண்ட் கம்ப்ளீட் பண்ணிட்டியா? சே சம் வேர்ட்ஸ் அபவுட் மவுண்டென்” என்று மகளிடம் கேள்வி கேட்டுக்கொண்டே அவளுக்குக் காலையுணவை ஊட்டிவிட ஆரம்பித்தாள் அஸ்வினி. கூடவே பதற்றப்பட வேண்டாம் என்று தன்விக்கு மறைமுக அறிவுரை வேறு!

இருந்தாலும் தயங்கியபடியே ஷோல்டர் பேக்கை தோளில் மாட்டிக் கொண்ட தன்வியிடம் “நான் வேணும்னா உன்னோட வரவா?” என்று கேட்ட ஷான்வியை பார்வையால் அடக்கிய அஸ்வினி

“நான் இன்னைக்கு அவளை ட்ராப் பண்ணிடுறேன்… உன்னைக் கூட்டிட்டுப் போக தான் உன் தனா அண்ணா வருவாரே” என்று சொல்ல ஷான்வி கண்ணாலேயே தன்வியிடம் எல்லாவற்றையும் இவளிடம் எப்போது ஒப்பித்தாய் என்று மிரட்டிக் கேட்கவும், அஸ்வினி அதற்கும் அழுத்தமாய் பார்த்துவைக்க அதன் பிறகும் ஷான்வி தன்வியை மிரட்டுவாளா என்ன!

சொன்னபடி தனஞ்செயன் ஷான்வியை அழைத்துச் சென்றுவிட அனிகாவை பள்ளியில் இறக்கிவிட்டதும் டாட்டா காட்டிவிட்டுக் கார எடுத்த அஸ்வினி தன்வியை பல்கலைகழக வாயிலில் இறக்கிவிட்டாள்.

“நான் உள்ளே வரணும்னா பாஸ் வேணும்… நீ போயிடுவ தானே?”

“போயிடுவேன்கா… தேங்க்யூ சோ மச்” என்று சொல்லிவிட்டுத் தயக்கத்துடன் திரும்பி நடந்தவளை பார்த்ததும் அஸ்வினிக்கு உள்ளே ஏதோ செய்திருக்கவேண்டும் போல!

“தனு” என்று அழைத்தவள் அவள் நிற்கவும் வேகமாய் நடந்து அவளருகில் வந்தவள்

“தப்பு பண்ணுறவங்க தான் பயப்படுவாங்க… நீ இங்க படிக்க தான் வந்திருக்க… அப்போ ஏன் பயப்படுற? எது வந்தாலும் பார்த்துக்கலாம்னு ஷான்வி மாதிரி தைரியமா இரு… டூ யூ நோ ஒன்திங், நேத்து ஒன் டேல டோட்டல் கிச்சனும் அவளுக்கு ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க… அவ்ளோ வாயாடியா நீ இருக்க வேண்டாம்… ஆனா கொஞ்சம் தைரியமா வெளியுலகத்தை ஃபேஸ் பண்ணு… எப்போவுமே உன் தங்கச்சி உன் கூடவே இருக்க மாட்டா… உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.. எனக்கு டைம் ஆகிடுச்சு.. நான் கிளம்புறேன்… ஆல் த பெஸ்ட்” என்று சொல்லி தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள் அஸ்வினி.

அவளது பேச்சில் புது நம்பிக்கை உண்டாகத் தன்னைக் கொஞ்சம் இயல்பாக காட்டியபடியே பல்கலைகழகத்தினுள் அடியெடுத்துவைத்தாள் தன்வி.

ஹூஸ்டன் பல்கலை கழகத்திலுள்ள C.T.Bauer College of Businessல் தன்வி மேலாண்மை படிப்புக்குத் தேர்வாகி இருந்தாள். அதன் வளாகத்துக்குள் நுழையும் போதே கடல்நீலவண்ண கண்ணாடி பதித்த பல மாடிக்கட்டிடம் ஒரு கனவுலோகமாய் அவளை வரவேற்றது.

அதில் வெள்ளி நிறத்தில் யூ.ஹெச் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்க ஆகஸ்ட் மாத இளம் வெயிலில் அந்த எழுத்துக்கள் பளபளத்தன. அந்த கல்லூரியில் வெளிநாட்டு மாணவர்களும் படிப்பதால் பல நாட்டு மக்களின் கலவையை அங்கே காண முடிந்தது. இங்கே அவள் படிக்கவேண்டும் என்பது அவளது தந்தையின் கனவு.

இன்று நிஜமாகிவிட்ட அந்தக் கனவுக்குச் சொந்தக்காரர் தான் இதைப் பார்த்துச் சந்தோசப்பட உயிருடன் இல்லை என மீண்டும் தந்தையை எண்ணி கண் கலங்க நின்றாள் தன்வி. யாருமே இல்லாத இடத்தில் தனித்து நிற்பது போன்ற மாயை.

தன்னைச் சுற்றி நடமாடுபவர்களை எல்லாம் மனம் அன்னியர்களாய் சித்தரித்தது. அவர்களைக் காணும் போது திருவிழாக்கூட்டத்தில் தனியே மாட்டிக்கொண்டது போல இனம்புரியாத பதற்றம் வந்து ஒட்டிக்கொண்டது. கூடவே சென்னையில் குடும்பம் என்ற பெயரில் ஒரு கும்பலிடம் இப்படித் தானே மாட்டிக் கொண்டு விடியல் வராதா என்று தவித்தோம் என்ற நினைவில் நாக்கு உலர்ந்தது போன்ற உணர்வு.

வரிசையாய் சென்னையில் நடந்த விசயங்கள் அடுத்தடுத்து மனக்கண்ணில் படமாய் ஓட பதற்றத்தில் கண்ணை இருட்டிக் கொண்டு வரவே கால்கள் தொய்யச் சரிந்த தன்வியைத் தாங்கியது வலிய கரங்கள்.

அந்த கரங்களின் பிடிமானத்தில் எழுந்து நின்றவளுக்கு தண்ணீர் பாட்டில் நீட்டப்பட அதை வாங்கி மடமடவென குடித்தவள் மிச்சமுள்ள தண்ணீரில் முகத்தைக் கழுவிக் கொண்டாள்.

“தேங்க்ஸ்” என்று சொன்னபடி கண்ணை விரித்துப் பார்த்தவள் தன்னெதிரே அக்கறை நிறைந்த விழிகளுடன் நின்ற இளைஞனைக் கண்டதும் இப்படி மயங்கிவிழப் பார்த்தோமே என அசட்டுப்புன்னகை புரிந்தாள்.

அவனும் பதிலுக்குப் புன்னகைத்தவன் “ஃபர்ஸ்ட் இயர்?” என்றபடி கேள்வியாய் நோக்க அவள் “ஆமா” என்று அவசரத்தில் தமிழில் சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் சொல்ல வாயெடுக்க

“அட தமிழ்பொண்ணா? புலிய முறத்தால அடிச்சு விரட்டுன வீரப்பெண்கள் நிரம்புன ஊர்ல பிறந்துட்டு இப்பிடி பயந்தாங்கொள்ளியா இருந்தா நல்லாவா இருக்கு? என்னம்மா நீ இப்பிடி பண்ணுறியேம்மா?” என அவன் சாதாரணமாக உரையாட ஆரம்பித்தான்.

“அது இல்ல… எனக்கு இங்க யாருமே பழக்கம் இல்ல… அதான்” என்று தயக்கத்துடன் நிறுத்தியவளை ஆச்சரியமாக நோக்கியவன்

“அது ட்வென்டி ஃபைவ் செகண்டுக்கு முன்னாடி… இப்போ தான் உனக்கு என்னைத் தெரியுமே” என்று சாமர்த்தியமாய் உரைக்கவும் அவனுக்குப் பதிலளிக்கத் தெரியாது திருதிருவென விழித்தாள் தன்வி. ஆனால் அவனது இலகுபேச்சில் மனம் சற்று தெளிந்தது. முன்பு போல மருள தோணவில்லை அவளுக்கு.

அஸ்வினியின் பேச்சு ஒரு புறம் நம்பிக்கையூட்டியது என்றால், இந்தப் புதியவனின் சிரித்த முகமும் நகைச்சுவையான பேச்சும் அவளுக்கு புது தெம்பு கொடுத்தது. பயம் தெளிந்து அவனை நோக்கி புன்னகைத்தாள் தன்வி.

அவள் முகத்தில் தோன்றிய புன்னகையில் திருப்தியுற்றவன் “ஐ அம் சித்தார்த்… யுவர் குட் நேம் ப்ளீஸ்?” என்று கேட்க

“ஐ அம் தன்வி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“இஃப் யூ டோண்ட் மைண்ட், நம்ம ஸ்டார்பக்ஸ்ல ஒரு காபி சாப்பிட்டுட்டே பேசலாமா?” என்றவனின் வேண்டுகோளைத் தட்டிக் கழிக்க மனமற்று அவனுடன் கல்லூரி வளாகத்தில் இருந்த ஸ்டார்பக்சுக்கு செல்ல அவனுடன் நடை போட்டாள் தன்வி.