💞அத்தியாயம் 3💞

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

ஆசையே துன்பத்துக்கு காரணம்னு புத்தர் சொல்லிருக்கார்ஆனா என்னைக் கேட்டா நேசம் தான் துன்பத்துக்குக் காரணம்னு சொல்லுவேன்அதுவும் முன்னப் பின்ன தெரியாத ஒரு மூனாவது மனுசன் மேல உண்டாகுற கண்மூடித்தனமான நேசம் எதிர்ப்பார்ப்புகளை உண்டாக்குதுஅந்த எதிர்பார்ப்பு கானல்நீரா போனதும் உண்டாகுற ஏமாற்றம் தான் துன்பத்துக்குக் காரணமா இருக்குதுஅதனால முடிஞ்ச வரைக்கும் மூனாவது மனுசங்களை ஒரு எல்லைக்கோட்டுக்கு வெளியே நிறுத்துறது நம்ம வாழ்க்கைக்கு நல்லது

                                                               –அஸ்வினி

ஆம்ஹெர்ஸ்ட் அவென்யூ, ரிவர் ஓக்ஸ்…

காலைநேரத்தில் பரபரப்பாகத் தயாரானாள் ஷான்வி. வேலையில் இன்று முதல் நாள். அறிமுகமற்ற ஊரில் அறிமுகமற்ற மனிதர்கள் மத்தியில் தங்கையைத் தனித்துவிட தன்விக்குத் தயக்கமாக இருக்க தானும் உடன் வரவா என்று கேட்டு தங்கையில் கேலிப்பார்வையை வாங்கிக் கொண்டாள்.

“நான் என்ன கிண்டர் கார்டன் போற குழந்தையா தனு? ஐ அம் ட்வென்டி டூ… ஐ கேன் மேனேஜ்… இன்னும் டூ டேய்ஸ்ல நீ காலேஜ் போகணுமே… அதுக்கு ப்ரிப்பேர் ஆகு”

பெரியமனுசியாய் தங்கை தனக்கு அறிவுரை சொல்வதைக் கேட்டபடி அவளை ஆதுரத்துடன் பார்த்தாள் தன்வி. தன்னை விட ஒரு வயது இளையவள். குறும்புக்காரி தான். ஆனால் இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கு தக்க தன்னை மாற்றிக் கொள்ளும் விந்தை அறிந்தவள். அவளிடம் வாய் கொடுத்து மீள முடியாது.

இங்கே வரலாம் என்ற முடிவைத் துணிச்சலுடன் எடுத்த அடுத்த நொடியே தேஜஸ்வினி மூலம் அஸ்வினியின் ஹோட்டலில் காலியிடம் பார்த்து விண்ணப்பித்தது, தந்தையின் சேமிப்பைக் கழுகுக்கண்களிடம் இருந்து காப்பாற்றி தனது படிப்புக்கும், தங்களின் செலவுக்குமாய் அஸ்வினியின் கணக்குக்கு மாற்றியது, யாருமறியாது சென்னையிலிருந்து தன்னை அழைத்துக் கொண்டு கிளம்பியது என சமீப காலத்தில் அவள் தான் தனக்கு மூத்தவள் போல முதிர்ச்சியுடன் செயல்படுகிறாள் என்று எண்ணமிட்டவாறே சிறிய அலமாரியில் வைத்திருந்த வெங்கடாசலபதி புகைப்படத்தின் முன்னே தங்கையை அழைத்தாள் தன்வி.

இரு சகோதரிகளும் கண் மூடி வேண்டிக் கொண்டனர். ஆதரவற்றவர்களுக்கு அந்த ஆண்டவன் தானே துணையிருக்க வேண்டும். கூடவே மணிகண்டனும் பூர்ணாவும் இருக்கும் புகைப்படத்தின் அருகில் நின்ற தன்வி

“இன்னைக்கு நம்ம ஷானு ஃபேமஸான ஹோட்டல்ல ஒர்க் பண்ண போறாப்பா… நீங்க சொல்லுவிங்கல்ல ஷானு என்னைக்குமே எனக்கு உறுதுணையா இருப்பானு… அது ஹண்ட்ரெட் பர்சண்டேஜ் உண்மை… அவளுக்கு வேலையில எந்தச் சிக்கலும் வந்துடாம நீங்களும் அம்மாவும் தான் அவ கூடவே இருந்து பார்த்துக்கணும்”

தன்வியின் வேண்டுதலுக்குப் புகைப்படத்திலிருக்கும் அவர்களின் பெற்றோர் சரியென்று தலையசைத்தது போன்ற பிரம்மை இரு பெண்களுக்கும். அதையே அவர்களின் ஆசியாக ஏற்றுக் கொண்டு கிளம்பினாள் ஷான்வி.

“ஏன் ஹேரை பன்னா போட்டிருக்க? போனிடெயில் போட்டுக்கலாமே ஷானு!”

“தனு அங்க போனதும் யூனிஃபார்முக்கு மாறணும்… ஏப்ரன் அண்ட் கேப் கண்டிப்பா போடணும்… அதுக்கு இந்த ஹேர்ஸ்டைல் தான் சரியா வரும்”

“மறக்காம செல்பி எடுத்து அனுப்பு” என்று சொன்னவள் தங்கையின் ப்ளெய்ட் ஷேர்ட்டின் பட்டனைக் காட்ட அவளோ

“டீசர்ட்டுக்கு மேல இந்த ப்ளெய்ட் ஷேர்ட் போடுறது சுடிதாருக்குத் துப்பட்டா போடுற மாதிரி தான் ஷானு… நீ பாட்டி மாதிரி அட்வைஸ் பண்ணாத” என்று தலையைச் சரித்து தோளைக் குலுக்கினாள்.

கருப்பு நிற டீசர்ட்டின் மீது கருப்பும் சிவப்புமாய் கட்டம் போட்ட சட்டையை அணிந்து கையை முழங்கை வரைக்கும் மடித்துவிட்டிருந்தவள் கருப்புநிற ஸ்கின்னி ஜீன்ஸில் காலில் வெள்ளை நிற ஸ்னிக்கர்சுடன் நின்றிருந்தாள்.

நெற்றியில் பொட்டு என்ற அடையாளமே இல்லை. காதிலும் கழுத்திலும் கையிலும் வெறுமை மட்டுமே இருக்க இந்நேரம் அம்மா இருந்திருந்தால் ஷான்வியின் காதைத் திருகி பெண்பிள்ளை இப்படி வெறுமையாக அலையக் கூடாதென கண்டித்திருப்பார் என்ற எண்ணம் தன்விக்குள் எழும் போதே தங்களை இப்படி தன்னந்தனியாக விட்டுப் போய்விட்டார்களே என்ற கழிவிரக்கம் எழுந்தது.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாது “காதுல ஒரு ஸ்டட் போட்டுக்கோடி… இப்பிடியா ஃபர்ஸ்ட் டே போறப்போவ வெறுங்கையும் வெறுங்கழுத்துமா கிளம்புவ?” என்று குறைப்பட்ட தன்வியைப் பார்த்து நகைத்த ஷான்வி

“நான் என்ன மிஸ் யூனிவர்ஸ் காம்படிசனுக்கா போறேன்? மை டியர் உடன்பிறப்பே! அங்க நான் ஒர்க் பண்ண போறேன்…. அதுக்கு இந்த அவுட்பிட்டும் கெட்டப்பும் இனாப்” என்று சொல்லி அவள் வாயை அடைத்துவிட்டாள்.

இருவரும் அவர்களின் அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வர அங்கே அனிகா பள்ளிக்குக் கிளம்பித் தயாராக நின்றிருந்தாள். அஸ்வினியும் நேற்று போல இலகு உடையில் தயாராகி இருந்தவள் ஷான்வியிடம் “இன்னைக்கு நான் உன்னை என்னோட கூட்டிட்டுப் போயிடுறேன்… பட் டுமாரோல இருந்து நீயே டாக்சி பிடிச்சுப் போயிடணும்” என்றாள் கறாராக.

இங்கு வந்து சில மணிநேரங்களிலேயே அவளது சுபாவம் பிடிபட்டுவிட்டதால் இரு சகோதரிகளுக்கும் எதுவும் வித்தியாசமாகப் படவில்லை. தன்வியிடம் அவர்களின் வங்கிக்கணக்கு இன்னும் இரு தினங்களில் செயல்பட ஆரம்பித்துவிடும் என்ற தகவலைத் தெரிவித்துவிட்டாள்.

பின்னர் நால்வருமாய் சேர்ந்து காலையுணவை முடித்துக் கொண்டனர். அமெரிக்கா என்றதும் உணவுப்பிரச்சனை வருமோ என்ற பயம் இருந்தது இரு சகோதரிகளுக்கும். ஆனால் அஸ்வினியின் இட்லி சாம்பாரைப் பார்த்ததும் இருவருக்கும் அவள் அன்னபூரணியாகவே காட்சியளித்தாள்.

தொழில்முறையில் சமையல்கலை அவளுக்கு அத்துப்படி என்றாலும் வீட்டுக்குச் சமைப்பதில் பெண்களுக்கு இருக்கும் தனிப்பிரியம் இன்றைய காலையுணவில் வெளிப்பட்டிருந்தது. அக்கறையுடன் கூடிய அன்பு தான் பெண்களின் கையால் சமைக்கப்பட்ட உணவை இன்னுமே ருசியாக்கும். இப்போது அஸ்வினியின் சமையலும் ஷான்விக்கும் தன்விக்கும் அப்படி தான் ருசித்தது.

காலையுணவின் போது அனிகாவிடம் பேச்சு கொடுத்தனர் இருவரும். அவள் இன்முகத்துடன் பதிலளிக்க சாப்பிட்டுக் கை கழுவும் போது மூவரும் ஒருவருக்கொருவர் ‘தனுக்கா’ ‘ஷானுக்கா’ ‘அனிகுட்டி’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமாயினர்.

மகள் இவர்களிடம் உற்சாகத்துடன் பேச்சு கொடுப்பதைப் பார்த்த அஸ்வினிக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது. இந்த கலகலப்பான பேச்சுக்குக் குழந்தை எவ்வளவு ஏங்கியிருக்கிறாள்! இனி அவளுடன் முடிந்தவரை அதிகநேரம் செலவிட வேண்டும் என தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் அவள்.

அஸ்வினி, அனிகாவுடன் ஷான்வியும் காரில் அமர்ந்துவிட கார் கிளம்பியது. தன்வி மூவருக்கும் டாட்டா காட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். தங்களின் அறைக்குள் நுழைந்தவள் அஸ்வினியைப் பற்றி சிந்தித்துப் பார்க்க ஆரம்பித்தாள்.

தேஜஸ்வினி ஏகப்பட்ட முறை அக்காவின் வாழ்வில் நிகழ்ந்த அவலங்களை தன்வியிடம் பகிர்ந்திருக்கிறாள்.

“அஸுக்கா வாழ்க்கையில நடந்த மேரேஜ் ஒரு கெட்டக்கனவு மாதிரி தனுக்கா… அரேன்ஜ்ட் மேரேஜ் தான்… அம்மாவும் அப்பாவும் சல்லடை போட்டு சலிச்சு செலக்ட் பண்ணுன மாப்பிள்ளை தான் அந்த ரோஹன்… மேரேஜ் ஆன புதுசுல அஸுக்கா மூச்சுக்கு முன்னூறு தடவை அவனோட பேரை தான் சொல்லுவா… அப்புறம் என்ன ஆச்சுனு தெரியல… அவ எங்க வீட்டுக்கு வர்ற ஒவ்வொரு தடவையும் உடம்புக்கு முடியாம தான் வருவா…

அந்த ராட்சசன் தாலி கட்டுன தைரியத்துல அவ கிட்ட ரொம்ப மோசமா நடந்துக்கிறான்னு சொல்லி அழுவா… அம்மாவும் அப்பாவும் இது எல்லா பொண்ணுங்களுக்கும் நடக்கிறது தான்னு சொல்லி அவளைச் சமாதானம் சொல்லி உடம்பைத் தேத்தி அனுப்புவாங்க… சொன்னா நம்ப மாட்டிங்க, அனிய உண்டாகுறதுக்கு முன்னாடி அவளுக்கு மூனு தடவை மிஸ்கேரேஜ் ஆகிடுச்சு… அனி வயித்துல இருக்கிறப்போ அவளை கலைக்கச் சொல்லி அக்காவை அவன் அடிச்சதால உடம்பு முழுக்க காயத்தோட வீட்டுக்கு வந்தா…

அம்மாவும் அப்பாவும் ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு மறுபடியும் எப்போ புருசன் வீட்டுக்குப் போவேனு அக்கா கிட்ட கேட்டதும் அவளுக்கு எங்க மேல இருந்த பாசம் விட்டுப் போச்சு… உடம்புசுகத்துக்காக அவளை ரணப்படுத்துன ராட்சசன் எப்பிடி மன்னிக்க முடியாத குற்றவாளியோ அதே போல பெத்தப்பொண்ணு எக்கேடு கெட்டாலும் நாலு பேரு என்ன சொல்லுவாங்கனு யோசிச்சு அவளை கேடு கெட்ட புருசன் கூட வாழ கட்டாயப்படுத்துன அம்மாவும் அப்பாவும் மன்னிக்க முடியாத குற்றவாளிகள்னு லெட்டர் எழுதி வச்சிட்டு விஸ்வாண்ணா வீட்டுக்குப் போயிட்டா…

விஸ்வாண்ணா அவளுக்கு காலேஜ் ஜூனியர்… கார்த்திக்கேயன் அங்கிளும் அப்பாவுக்கு குளோஸ் ஃப்ரெண்ட்… சோ அண்ணா அவளுக்கு அவர் ஒர்க் பண்ணுற ஹோட்டல்லயே ஜாப் அரேஞ்ச் பண்ணிட்டு யூ.எஸ் வர சொல்லிட்டாரு… ஒன் இயர் இங்க உள்ள ஹோட்டல்ல ஒர்க் பண்ணி அனி பிறந்ததுக்கு அப்புறம் அவளோட ஃப்ளைட் ஏறுனவ தான். இன்னைக்கு வரைக்கும் இந்தியாவுக்கு வர்றதை பத்தி யோசிக்கல… அவளுக்கு சக மனுசங்க மேல அதுவே விரக்தியா மாறிடுச்சு தனுக்கா”

தேஜஸ்வினி அக்காவின் விட்டேற்றி போக்கு இரு சகோதரிகளையும் காயப்படுத்திவிடக் கூடாதே என முன்னரே அஸ்வினியைப் பற்றி சொல்லி இருந்தாள். அதெல்லாம் நினைவுக்கு வரவும் தன்விக்கு மனம் கனத்துப் போனது. இப்படி இரும்பாய் இறுகியிருப்பவளுக்காக அவளால் கடவுளிடம் வேண்டிக் கொள்ள மட்டும் தான் முடிந்தது.

அதே நேரம் அனிகாவை பள்ளியில் விட்டுவிட்டு அஸ்வினியின் கார் ஷான்வியுடன் ஹோட்டல் ராயல் கிராண்டேவை நோக்கி விரைந்தது. காரை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர்.

ஹோட்டல் ராயல் கிராண்டே, வாஷிங்டன் அவென்யூ, ஹூஸ்டன்

காரை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு ஷான்வியிடம் அஸ்வினி வேலை தொடர்பாக ஏதோ சொல்லிக் கொண்டே வர அவளோ

“நீங்க வீ.கேவோட அசிஸ்டெண்ட் தான? உங்களோட ஒர்க்கிங் ப்ளேஸும் என்னோட ப்ளேசும் ஒன்னா இருக்குமா?” என வீ.கேவைச் சந்திக்கும் ஆர்வத்தில் கேட்க அஸ்வினி மறுப்பாய் தலையசைத்தாள்.

தங்கள் முன்னே இருந்த நெடிதுயர்ந்த மூன்று மாடி கட்டிடத்தைப் பார்த்தபடியே அதனுள் நுழைந்தாள் ஷான்வி. கீழ்த்தளம் முழுவதும் கருப்புக்கண்ணாடியால் ஆனது. கட்டிடத்தின் மத்தியில் ராயல் கிராண்டே என்ற எழுத்துக்கள் கருப்புக் கட்டிடத்தின் மத்தியில் பொன்னிறத்தில் மின்னியது. பொறியாளரின் அழகுணர்ச்சியைப் பாராட்டியவாறு உள்ளே வந்தவளை பரந்த தரை தளத்தின் உள்ளே நுழைந்ததும் கலைநயமிக்க உள் அலங்காரங்களுடன் கூடிய கட்டிடம் அவளைக் கவர்ந்தது.

கருப்புநிற மார்பிள் பதித்த தளத்தில் சரவிளக்குகளின் பொன்னிற ஒளி பட்டு எதிரொளித்தது. லாபியின் பொன்னிற வளைவு அவ்வளவு அழகாய் கண்ணை உறுத்தாது மின்னியது.

கலைநயமிக்க நாற்காலிகளும், மேஜைகளும் உணவு உண்ணும் பகுதியை அலங்கரித்தன. அங்கிருந்து பார்த்தால் கீழ்த்தளம் முழுவதும் உள்ள கண்ணாடிக்கதவுகளின் வழியே வெளியே உள்ள பெரிய மரங்களும், அலங்காரச் செடிகளும் அதன் குறுக்கே செல்லும் நடைபாதையும், அதன் ஓரங்களின் நிற்கும் விளக்குக்கம்பங்களும் தெரியும்.

அந்த ஹோட்டல் ரெஸ்ட்ராண்ட் மற்றும் கபே என இரண்டு வகையிலும் அடங்கும். தினசரி உணவுவகைகளும், பேஸ்ட்ரி ஐட்டங்களும் அங்கே தனித்தனி பகுதிகளில் சமைக்கப்பட்டன.

எனவே தான் ரெஸ்ட்ராண்டுக்கும் கபேக்கும் சமைக்குமிடங்கள் வேறு வேறு. அதை அஸ்வினியிடம் கேட்டதற்குப் பின்னர் ஷான்விக்குச் சப்பென்று இருந்தது. வீ.கேவுடன் வேலை செய்யும் பாக்கியம் கிடைத்தது என்று மகிழ்ந்தவளுக்கு தனக்கு அங்கே வேலையில்லை என தெரிந்ததும் பெருமூச்சு தான் வந்தது.

அவளுக்குத் தலைமை தனஞ்செயன் என்று தெரிந்ததும் அந்தச் சலிப்பு போய்விட்டது. உற்சாகத்துடன் அவனை நோக்கியவள் அருகிலிருந்த அஸ்வினியை மறந்துவிட்டு அவனிடம் ஓடினாள்.

“ஹாய் ப்ரோ! நீங்க தான் சீப் பேஸ்ட்ரி செஃபா? ஓ மை காட்! அப்போ நான் உங்களோட அசிஸ்டெண்டாவா ஒர்க் பண்ணப்போறேன்? ஐ ஜாலி” என்று துள்ளிக் குதித்தவளை பாசம் ததும்பும் விழிகளால் நோக்கினான் தனஞ்செயன். கூடவே அவர்கள் இருவரையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த அஸ்வினியைக் கண்ணால் சுட்டிக்காட்டியபடியே

“லுக் தேர்! லேடி ஹிட்லர் நம்ம ரெண்டு பேரையும் தான் பாத்துட்டிருக்காங்க” என்று சொல்லவும் ஷான்வி வாயைக் கையால் பொத்திக் கொண்டு நமட்டுச்சிரிப்புடன் திரும்ப அங்கே கண்ணில் கேள்வியுடன் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்த அஸ்வினி அவளது சிரிப்பில் புருவம் உயர்த்தவும் தானாய் அவளது சிரிப்பு நின்றது.

“இம்பாசிபிள்” என்று முணுமுணுத்து தலையை இடம் வலமாக அசைத்துவிட்டு அகன்றாள் அவள்.

ஒரு கணம் அவளது செய்கையைக் கவனித்த தனஞ்செயன் பின்னர் ஷான்வியிடம் வீடு வசதியாக இருக்கிறதா என்று பேச்சை மாற்றினான். பின்னர் தனஞ்செயனுடன் சேர்ந்து ஷான்வியும் ஹோட்டலின் பொது மேலாளரால் கபேயின் ஊழியர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டாள். ஷான்விக்கு அசிஸ்டண்ட் பேஸ்ட்ரி செப், ராயல் கிராண்டே என்ற பொன்னிற பேட்ஜூடன் கூடிய வெள்ளைச் சீருடையை அணிந்த பின் உண்டான பெருமிதத்துக்கு அளவே இல்லை.

அதிலும் தனஞ்செயனுடன் வேலை செய்வது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது எனலாம். ஒரு அன்பான சகோதரனாக வேலையில் அவளது தவறுகளைத் திருத்தியதுடன் இயல்பாகப் பழகும் அவனது குணத்தில் அவனை ‘தனா அண்ணா’ என அழைக்க ஆரம்பித்துவிட்டாள்.

அதோடு சமையலறையில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்ள மனதுக்கு நிறைவாக இருந்தது ஷான்விக்கு. தன்விக்குக் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக அனைவரையும் ஒன்று திரட்டி செல்பிக்குப் போஸ் கொடுக்க செய்ய அவளது பதவியைக் காட்டி அலட்டிக் கொள்ளாத அவளது எளிமை மற்ற ஊழியர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

தனஞ்செயன் அனைவரிடமும் “இங்க வெறும் மாவும் வெண்ணெய்யும் மட்டும் வச்சு டெசர்ட்ஸ் பண்ணப் போறது இல்ல… நம்ம ஒவ்வொருத்தரும் நம்மளோட கஸ்டமர் மேல வைச்சிருக்கிற அக்கறையும் இதுல கலந்திருக்கணும்… முக்கியமா இக்கட்டான சமயத்துல எல்லாத்தையும் சமாளிக்கிற திறமை இருக்கணும்… சமைக்கிறது நம்ம கடமைனு நினைக்காம ஆசையா ரசிச்சு சமைக்கணும்… ஓகேவா கய்ஸ்?” என்று புன்சிரிப்புடன் கேட்க அனைவருடனும் சேர்ந்து ஷான்வியும் தலையாட்டினாள்.

அதன் பின்னர் டோனட், கிராய்சண்ட், மஃபின், கேக், ப்ரெட் என ஒவ்வொன்றாய் தயாராக அந்த இடத்தில் டெசர்ட்டுகளின் நறுமணம் கமழத் தொடங்கியது. வேலை ஆர்வத்தில் வீ.கேவை சந்திக்க முடியாமல் போனது கூட ஷான்விக்கு பெரிய வருத்தமாய் தோணவில்லை.

இந்த உலகில் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் பெரிய வரங்கள் அன்பான குடும்பமும், மனதுக்குப் பிடித்த நிறைவான வேலையும் தான். இரண்டில் ஒன்று திருப்தியாக இல்லையென்றாலும் வாழ்க்கை தெளிந்த நீரூற்றாக செல்வது சந்தேகமே.