💞அத்தியாயம் 28💞

“வாழ்க்கைல இந்த மாதிரி சிச்சுவேசன் எனக்கு வரும்னு நான் நினைச்சுக் கூடப் பாத்தது இல்ல… இப்போ நான் பண்ணணும்னு தெரியல… அனி தனா கூட குளோஸ் ஆனது அமெரிக்கால இருந்தப்போ எனக்குப் பெரிய விசயமா தெரியல… ஆனா இந்தியா போனதுக்கு அப்புறம் நான் ரொம்பவே சங்கடப்பட்டேன்… அப்பா, அம்மா, தேஜூனு எல்லாரும் வித்தியாசமா பாக்குறது எனக்கும் புரியுது… தனா கிட்ட இதைச் சொன்னா அவர் ரொம்பவே கேசுவலா பேசுறாரு…”

                                                              -அஸ்வினி

பல நாட்களுக்குப் பின்னர் ஹூஸ்டனில் வந்து இறங்கிய அறுவருக்கும் இம்முறை ஹூஸ்டன் மிகவும் அழகாய் தோன்றியது. மனதின் நிம்மதி தான் சுற்றுபுறத்தை அழகாய் காட்டுகிறது என்பது தான் உண்மை.

அவரவர் வீட்டுக்குச் சென்ற பின்னர் தான் பழைய வாழ்க்கையின் நினைவுகள் வந்து அலைமோதின. தன்வி விமான நிலையத்தில் ஷான்வி டாட்டா காட்டிவிட்டு வேறு டாக்சியில் ஏறியபோதே கண்ணில் கண்ணீர் நிரம்ப கலங்கிப் போனதை விஸ்வஜித் அறிவான். அதோடு அவர்களுடன் வந்த தம்பியும், தான் இப்போதே தனது உடமைகளுடன் வேறு வீட்டுக்குச் செல்வதாகச் சொன்னது விஸ்வஜித்துடன் சேர்த்து தன்வியையும் வருத்தம் கொள்ள வைத்தது.

“ஏன் சித்து நீயும் இப்போவே கிளம்புறேனு அடம்பிடிக்கிற? நான் அவ்ளோ கொடுமைக்கார அண்ணியா?” என்று தன்வி கேட்ட போது அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஆனால் இதெல்லாம் கவனித்தால் அவனது அண்ணனுக்கும் தன்விக்குமான தனிமை கிடைப்பது எவ்வாறு!

இந்த அழகில் விஸ்வஜித் வேறு நீண்டநாட்கள் விடுமுறை எடுத்துவிட்டதால் தேனிலவு செல்வதற்கெல்லாம் நேரமில்லை என்று ஒரேயடியாக மறுத்துவிட்டிருந்தான். எனவே தான் அங்கு வந்திறங்கியதும் அவன் காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டு நிற்பவன் போல அவசரமாய் மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தொடங்கினான்.

விஸ்வஜித் கூட “டேய்! இந்த நேரத்துல எங்க போக போற? விடிஞ்சதும் போலாமேடா? யார் கூட ஃப்ளாட்டை ஷேர் பண்ணலாம்னு இருக்கே? அக்ரீமெண்ட்ட வாசிச்சியா? எதுவும் சொல்லாம கிளம்புறேனு மொட்டையா சொன்னா என்ன அர்த்தம் சித்து?” என்று ஆதங்கம் கலந்த குரலில் அதட்டிப் பார்த்தான்.

சித்தார்த் தனது ரோலர் சூட்கேசையும் ஷோல்டர் பேக்கையும் தூக்கிக் கொண்டவன் “ரேயோட பாய் ஃப்ரெண்ட் வில்லியம் கூட தான் ஸ்டே பண்ணப் போறேன்” என்று சொல்லவும் அதற்கு மேல் அவனை வற்புறுத்த விரும்பாதவர்கள் மனத்தாங்கலுடன் அவனை வழியனுப்பி வைத்தனர்.

அதே நேரம் தனது வீட்டுக்குத் திரும்பிய அஸ்வினிக்கு வெறுமை சூழ்ந்த உணர்வு. இந்தியாவில் எந்நேரமும் வள்ளியோ தேஜஸ்வினியோ எதாவது பேசிக் கொண்டிருப்பர். ஷான்வி சித்தார்த்துடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பாள். அவை யாவுமே மாயமாய் போனது போன்ற உணர்வு.

அனிகா ஓடி வந்து அன்னையின் கையைப் பற்றியவள் “மம்மி அப்பா எப்போ இங்க வருவாங்க? நான் பீட்டர் கிட்ட அப்பாவை இன்ட்ரடியூஸ் பண்ணணும்.. அவனோட் அப்பா அவன் கூட தானே இருக்காரு… என் அப்பா மட்டும் ஏன் தனியா இருக்காரு?” என்று ஆவலும் ஆராய்ச்சியுமாய் கேட்க, மகளின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது விழித்தாள் அவள்.

அவளின் கூந்தலைக் கோதிவிட்டு “அப்பா இன்னைக்குத் தானே ஊருல இருந்து வந்தாரு… அவருக்கும் டயர்டா இருக்குமேடா… ரெஸ்ட் எடுத்துட்டு டுமாரோ வருவாரு” என்று சமாளித்துவிட்டு இருவருக்கும் இரவுணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தாள் அஸ்வினி.

இவளின் நிலை இவ்வாறிருக்க தனஞ்செயன் மோகனின் ஃப்ளாட்டுக்குப் போய் சேர்ந்த போது ஹால் சோபாவில் அமர்ந்தவன் தான். மோகன் சாப்பிட அழைத்ததைக் கூட கவனியாது ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

மோகன் நண்பனின் தோளைத் தட்டியவன் “டேய் தனா! என்னடாச்சு? என்ன பலத்த யோசனையா?” என்று கேட்க தனஞ்செயன் அனிகாவைப் பற்றி கூறிவிட்டான்.

“அந்தக் குழந்தை என்னை அப்பானு சொன்னப்போ நான் ஷாக் ஆகிட்டேன் மோகன்… ஆனா அவ குரல்ல இருந்த சந்தோசம், கான்பிடென்ஸ் என்னை நார்மலாக்கிடுச்சுடா… என்னவோ புதுசா ஒரு பொம்மை கிடைச்ச மாதிரி அப்பா கிடைச்சிட்டாங்கனு அவ்ளோ சந்தோசம் அவ முகத்துல… இந்தியா போனப்போ கூட என் கூடவே தான் இருந்தாடா”

மோகன் இவ்வளவையும் கேட்டுவிட்டு நண்பனை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தவன் “இவ்ளோ நேரம் நீ அனிகாவை பத்தி மட்டுமே பேசுனியே! அஸ்வினியைப் பத்தி நீ எதுவும் சொல்லலயே! இப்போ சொல்லு! வாட் அபவுட் அஸ்வினி? அஸ்வினியோட பொண்ணுக்கு உன்னால அப்பா ஆக முடியுது… அப்போ அஸ்வினிய பத்தி நீ என்ன நினைக்கிற?” என்று கேட்க

“எனக்கு அஸ்வினி மேடமை பிடிக்கும்… நல்ல அம்மா, அன்பான அக்கா, அருமையான ஃப்ரெண்ட்டும் கூட… அவங்களோட பாஸ்ட் லைப் பத்தி அவங்களோட தங்கச்சி சொன்னப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… அவங்க மேல ஒரு நல்ல ஒபீனியன் வந்துச்சு… அதோட சென்னைக்குப் போனப்போ அவங்க எக்ஸ் ஹஸ்பெண்ட் வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அவங்களுக்கும் வாழ்க்கை இன்னொரு சான்ஸ் குடுத்துச்சுனா நல்லா இருக்கும்னு தோணுது” என்றான் மனம் விட்டு.க் கூறினான்.

அதோடு இலக்கியாவின் அகால மரணம், தாயாரின் மறைவுக்குப் பின்னர் திருமணம் குடும்பம் என்றெல்லாம் யோசித்திடாத அவனுள் அனிகா மற்றும் அஸ்வினி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எப்படி சகோதரப்பாசத்தை தன்வியிடமும் ஷான்வியிடமும் அவனால் உணர முடிந்ததோ அதே போல தாயைப் போல பாசம் காட்டும் வாழ்க்கைத்துணையாக அஸ்வினி வந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் சமீபநாட்களில் அவனுள் எழுவதை அவனால் தடுக்கமுடியவில்லை.

இப்போதும் கலவையான உணர்வுடன் உழன்றவன் இரவுணவு உண்ணாமலே உறங்கச் சென்றான்.

***********

அனைவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றது போல ஷான்வியும் ஒரு வழியாகத் தனது ஃப்ளாட்டை அடைந்திருந்தாள். தனது உடமைகளை மீண்டும் வார்ட்ரோபில் அடுக்கி வைத்துவிட்டு விமானப்பயணத்தின் அலுப்பு தீரக் குளித்து விட்டு வந்தாள். அவசரத்துக்கு வீட்டில் வைத்திருந்த நூடுல்சை எடுத்துக் கிண்டத் துவங்கினாள்.

அடுப்பின் முன்னே நின்று சமைத்து எத்தனை நாட்கள் ஆகிறது என்று பெருமூச்சுவிடும் போதே தன்வி இல்லாத வெறுமை முகத்தில் அறைந்தது. எப்போதும் இரவுணவைச் சுடச்சுட தயாரித்து இருவரும் ஜன்னல் திண்டில் அமர்ந்தபடி ஜிலுஜிலு காற்றை ரசித்துக் கொண்டே சாப்பிடுவர்.

கீழே புல்வெளியில் நடைபோடும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஷான்வி தன்வியிடம் ஹோட்டலில் நடந்தவற்றை நகைச்சுவை ததும்ப விளக்குவாள். தன்வி அதற்கு கலகலவென்று நகைப்பது இப்போதும் அவள் காதில் ஒலித்தது.

நூடுல்ஸ் தயாரான பின்னர் தட்டில் போட்டு எடுத்துக் கொண்டவள் வழக்கம் போல ஜன்னலைத் திறந்துவிட்டு அதன் திண்டில் அமர்ந்து கொண்டாள். இப்போதும் காற்று ஜிலுஜிலுவென தான் வீசியது. ஆனால் இன்று கதை பேசி சிரிக்க அவளது தமக்கை அவளுடன் இல்லையே!

அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டே முள்கரண்டியால் நூடுல்சை சுழற்றி வாயில் திணிக்கப் போனவள் அங்கே புல்தரையில் நின்றவனைக் கண்டதும் வாயைப் பிளந்தபடி அதிர்ச்சியில் சிலையானாள்.

அங்கே ரோலர் சூட்கேஸ், ஷோல்டர் பேக் சகிதம் நின்றவன் சித்தார்த். புல்வெளியில் நின்றவன் இரண்டாவது தளத்தில் ஒரே ஒரு வீட்டின் ஜன்னலில் மட்டும் வெளிச்சம் வர நிமிர்ந்து பார்த்தான்.

அங்கே அமர்ந்திருந்த ஷான்வியை நோக்கி கையசைக்க அவள் திகைத்தாள். அவனோ நானே வருகிறேன் என்று சைகை காட்டிவிட்டு மின்தூக்கியை நோக்கி முன்னேறினான்.

ஷான்வியோ இவன் எதற்கு இந்நேரத்தில் இங்கே வருகிறான் என திகைத்தவளாய் விழிக்க, அடுத்தச் சில நிமிடங்களில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. விறுவிறுவென சென்று கதவைத் திறந்தவள் அதே திகைப்புடன் நிற்கும் போதே அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியவன் அவளை ஒரு ஓரமாய் ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தான்.

வீட்டை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தவன் ஜம்மென்று சோபாவில் சாய்ந்து கொண்டபடி “நாட் பேட்! வீடு நீட்டா இருக்கு… எனக்கு டஸ்ட் அலர்ஜி இருக்கு… சோ தூசி சேராம மட்டும் பாத்துக்கோ… சரியா?” என்று அவன் தான் இந்த வீட்டின் உரிமையாளன் என்பது போல பேச ஆரம்பிக்கவும் ஷான்விக்குள் எரிமலை வெடிக்க ஆரம்பித்தது.

“ஏய் ஹலோ! இது என்னோட வீடு… என் வீட்டுல என்னையவே நீ அதிகாரம் பண்ணுறியா? ஒழுங்கா எழுந்திரி” என்று அவன் கரத்தைப் பற்றி இழுக்க அவன் அசையவில்லையே!

“நீ என்ன ட்ரை பண்ணுனாலும் என்னோட கைவிரலை கூட உன்னால அசைக்க முடியாது.. சோ எனர்ஜிய வேஸ்ட் பண்ணாம இங்க வந்து உக்காரு” என்று தன் பக்கத்தில் அமரச் சொல்லவும் அவள் புருவம் உயர்த்தி நோக்கிவிட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.

சித்தார்த் தனது டீசர்ட்டை இழுத்து விட்டபடியே “இந்த நிமிசம் நான் வீடு இல்லாதவன்… எனக்குனு இந்த ஹூஸ்டன்ல போக்கிடம் எதுவுமே இல்ல ஷானு! என்னை உன்னோட வீட்டுல பேயிங் கெஸ்டா தங்கிக்க விடுவனு நம்பி இங்க வந்துட்டேன்… நீயும் என்னைத் திட்டி வெளியே போடா அயோக்கிய ராஸ்கல்னு சொல்லிட்டேனா நான் எங்கே போவேன் சொல்லு!” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்ட விதத்தில் ஒரு நிமிடம் அவளே ஏமாந்துவிட்டாள்.

பின்னர் சுதாரித்தவள் “அன்னைக்கு ஏதோ விளையாட்டுக்குச் சொல்லுறேனு நினைச்சேன் சித்து… இதுல்லாம் சரிப்பட்டு வராது… நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு… தனுவோ வீ.கே சாரோ இதைக் கேள்விப்பட்டா என்ன நினைப்பாங்க?” என்று படபடக்க அவனோ சுவாரசியம் ததும்பும் விழிகளால் அவளை ஏறிட்டான்.

பின்னர் “என்னோட இருந்தா என்னைப் பிடிச்சுடும், அப்புறம்என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிடுவேனு பயப்படுறியா ஷானு?” என்று சீண்டலாய் கேள்வியை முன்வைக்க ஷான்வி

“அடேங்கப்பா! இவரு அப்பிடியே அர்னால்டு… இவரைப் பாத்து நான் இம்ப்ரெஸ் ஆகிட்டாலும்… போடா! உனக்கு ஓவர் கான்பிடென்ஸ் அதிகம்… நான் எப்போவும் உன்னைப் பாத்து இம்ப்ரெஸ் ஆகவும் மாட்டேன்… லவ் பண்ணவும் மாட்டேன்” என்றாள் பிடிவாதக்குரலில்.

“அப்போ என்னை இங்க ஸ்டே பண்ண விடு… என்னோட ஃப்ரெண்ட் வெகேசன் போயிருக்கான்… அவன் திரும்பி வந்ததும் நான் அவனோட ஃப்ளாட்டுக்கு ஷிப்ட் ஆகிடுவேன்” என்று சொல்ல ஷான்வி இன்னும் கையைப் பிசைந்து கொண்டே தான் இருந்தாள்.

ஒரு காலத்தில் அவளது ரோல்மாடலான விஸ்வஜித் அவளது தமக்கையை நெருங்கியதற்கே குதித்தவள் அவள்! இத்தனைக்கும் அவர்கள் காதலர்கள்! அவ்வாறு இருக்கையில் சித்தார்த் அவளுக்கு வெறும் உறவினன் மட்டுமே. அதோடு அவன் காதலைச் சொன்ன தினத்திலிருந்து அவளுக்குள் உண்டான அலைக்கழிப்பும் குழப்பமுமே அவளை அறியாது சித்தார்த்தை விரும்பிவிடுவாளோ என்ற பயத்தை உண்டாக்கியது.

கூடவே என்ன தான் அமெரிக்காவில் இருந்தாலும், தைரியமான பெண்ணாகவே இருந்தாலும், இந்த சித்தார்த் அவளது உறவினனே என்றாலும் ஒரு ஆண்மகனுடன் ஒரே வீட்டில் தங்குவது என்பதை அவளால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை.

அப்படி யோசித்தவாறே அவனது முகத்தை நோக்க அதிலோ சவால் விடும் பாவனை இருக்க அதில் சீண்டப்பட்டவள் அவன் இங்கே தங்குவதற்கு ஒத்துக்கொண்டாள். அவன் நண்பன் வந்த பின்னர் போய்விடப் போகிறான் என்று தன் மனதைச் சமாதானம் செய்து கொண்டாள்.

ஆனால் சில விதிமுறைகளையும் விதித்தாள். அதில் முக்கியமானது தனது அறைக்குள் எக்காரணத்தைக் கொண்டும் அவன் வரக்கூடாது என்பது தான்.

மற்ற விசயங்களை ஒப்பந்ததில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருவரும் ஒரு மனதாக முடிவெடுத்தனர். சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வதில் மட்டும் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று முடிவு செய்தவர்களுக்கு வயிற்றில் கடமுடாவென பசி தன் வேலையைக் காட்ட சித்தார்த் வயிற்றைத் தடவினான்.

அவன் கையில் பட்டென்று அடித்த ஷான்வி “எவ்ளோ பசிச்சாலும் வயித்த தடவிக்க கூடாதுனு எங்கம்மா சொல்லுவாங்க… நான் நூடுல்ஸ் ரெடி பண்ணிருக்கேன்… ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடுவோம்” என்று பெரிய மனதினளாக அவளது உணவில் அவனுக்கும் பகிர்ந்தளிக்க ஒத்துக்கொண்டாள்.

நூடுல்சை இரண்டு தட்டுகளில் போட்டவள் அவனிடம் ஒன்றை நீட்டிவிட்டு ஜன்னலோரம் போய்விட்டாள். சித்தார்த்தும் தட்டுடன் அவளைத் தொடர்ந்தவன் அவளருகில் அந்த திண்டின் மீது அமர்ந்து கொண்டான்.

மௌனமாய் நேரம் நகர இரவுணவை முடித்தப் பின்னர் ஷான்வி சித்தார்த்துக்கு தன்வியின் அறையைக் காட்டியவள் அவனை உறங்குமாறு சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் செல்ல முற்பட அவளைக் கரம் பற்றி நிறுத்தியவன் “குட் நைட் ஷானு” என்று ஆழ்ந்த குரலில் உரைத்துவிட்டு மெதுவாக அவளது கன்னத்தில் தனது இதழைப் பதித்தான்.

எப்படி அவனது முதல் அணைப்புக்குச் சிலையாய் சமைந்து நின்றாளோ அதே போல அவனது முதல் இதழ் ஸ்பரிசத்துக்கும் உறைந்து போய் நின்றாள் ஷான்வி. அவளது கன்னத்தை மெதுவாய் அவன் தட்டவும் உணர்வு பெற்றவள் “குட் நைட்” என்று அவசரமாய் மொழிந்துவிட்டு அவளது அறைக்கு ஓடிவந்துவிட்டாள்.

அவளது அறைக்கதவு தாழிடப்படுவதை புன்னகையுடன் பார்த்திருந்தவன் தனது உடமைகளை ஓரமாய் வைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான். கண்களை மூடியவனின் மனக்கண்ணில் ஷான்வி வலம் வர அவளை ரசித்தபடி நித்திராதேவியின் வசம் அடைக்கலமானான் சித்தார்த்.

அதே நேரம் ஷான்வி தனது படுக்கையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். இன்னும் அவள் கன்னத்தில் சித்தார்த்தின் இதழ் ஏற்படுத்திய குறுகுறுப்பு மிச்சமிருந்தது. ஆரம்பநாளிலே இவ்வளவுக்கு அவனிடம் வசமிழக்கும் தான் இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிப்போம் என்ற கேள்வி அவளைப் படுத்தி எடுக்க இதற்கிடையே உறக்கமும் அவளைத் தழுவிக் கொண்டது.

எதிர் துருவங்களான அந்த இரு அழகிய உள்ளங்களும் இனிய நித்திரையில் ஆழ்ந்தன.

மறுநாள் கதிரவன் பொன்னிற கதிர்களால் ஷெல்டனை குளிப்பாட்ட ஆரம்பித்த போதும் ஷான்வியும் சித்தார்த்தும் எழுந்திருக்கவில்லை. வெகுநேரம் தூங்கிவிட்டவர்கள் வீட்டின் கதவு படபடவென தட்டப்பட கண் விழித்துக் கொண்டனர்.

இருவரும் ஓடோடி சென்று கதவைத் திறந்தாள் ஷான்வி. கூடவே சித்தார்த்தும் சேர்ந்து நிற்க வாயிலில் நின்றவர்கள் இவர்கள் நின்ற கோலத்தைக் கண்டு அதிர்ந்தனர்.

உறக்கம் கலைந்தும் கலையாமலும் நின்ற ஷான்வியுடன் சித்தார்த்தையும் கண்டு திகைத்துப் போய் நின்றவர்கள் தன்வியும் விஸ்வஜித்தும் தான். தங்களிடம் இரவு நேரத்தில் அவசர  அவசரமாகச் சொல்லிக்கொண்டு கிளம்பியவன் வில்லியம் வீட்டுக்குப் போகாமல் இங்கே என்ன செய்கிறான் என எண்ணியவர்களாய் வாயைப் பிளந்தபடி நின்றிருந்தனர்.

சித்தார்த் புன்னகையுடன் “வாங்க வாங்க” என்று வரவேற்க ஷான்வி அவனது புஜத்தில் கிள்ளியவள் “எருமை மாடு! போய் ஷேர்ட்டை மாட்டிட்டு வா” என்று பற்களை  நறநறத்தபடி அவன் காதைக் கடித்த போது தான் இரவு அணிந்திருந்த கையற்ற கருப்பு பனியனுடன் நிற்கிறோம் என்பதே அவனுக்கு உறைத்தது.

“ஒரு நிமிசம் கய்ஸ்” என்று அவன் அறைக்குள் செல்ல அந்த இடைவெளியில் தன்வி ஷான்வியை வறுத்தெடுக்க ஆரம்பித்தாள். தமக்கையின் திட்டுகளை வாங்கிய வண்ணம் தலை குனிந்து நின்றாள் ஷான்வி.

சித்தார்த் டீசர்ட்டை மாட்டிக்கொண்டு வந்தவன் தன்வியைச் சமாதானம் செய்ய முயன்றான்.

“ஷானுவ திட்டாத அண்ணி! நான் திடுதிடுப்புனு வந்தது அவளுக்கே ஷாக் தான்” என்று சொன்னவன் அவளைத் தனியே அழைத்துச் சென்று அவளிடம் பேச ஆரம்பித்தான்.

அதே நேரம் ஷான்வியிடம் பேச்சு கொடுத்த விஸ்வஜித் என்ன நடக்கிறது என்று விசாரிக்க அவளோ “சார் அவன் தான் நேத்து நைட் வந்தான்… அவனைப் பாத்து நான் இம்ப்ரெஸ் ஆகிடுவேனு என் கிட்டவே சேலஞ்ச் பண்ணுறான்… அவனைப் பாத்து நான் இம்ப்ரெஸ் ஆக மாட்டேன்னு அவனுக்கு ப்ரூவ் பண்ணாம நான் ஓய மாட்டேன்” என்று சிலிர்த்துக் கொண்டாள்.

விஸ்வஜித் ஏற்கெனவே தம்பியின் வாயால் அவனது காதலின் ஆழத்தை அறிந்தவனாயிற்றே! அதே போல தம்பி குறும்புக்காரனாக இருந்த போதும் கண்ணியமானவன் என்பதையும் அறிவான். அப்படி இருக்கையில் அவன் ஷான்வியுடன் ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரின் மீதும் விஸ்வஜித்துக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் மனைவி என்ன சொல்வாளோ என்ற தயக்கம் அவனுக்கு.

சித்தார்த் தன்வியிடம் தான் ஷான்வியைக் காதலிப்பதாகச் சொல்லவும் அவளுக்கு அதிர்ச்சி. பின்னர் அவன் தனது காதலை அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் அவளுடன் தங்கியிருப்பதாகச் சொன்னான். கூடவே ரேயானுடன் வெகேசனுக்குச் சென்ற வில்லியம் திரும்பி வந்ததும் அவனது ஃப்ளாட்டுக்குச் சென்றுவிடுவதாக வாக்களித்தான்.

தன்வி தயக்கத்துடன் நிற்கவே “உனக்கு என் மேல நம்பிக்கை இல்லயா அண்ணி? நானும் நம்ம கலாச்சாரத்தை மதிக்கிறவன் தான்… நான் காதலிக்கிறேனே தவிர அக்னிசாட்சியா அவளை என் ஒய்பா ஏத்துக்கிற நாள்ல தான் என் விரல் அவ மேல படும்… உன் ஃப்ரெண்டை நம்புவியா மாட்டியா?” என்று கேட்க அவளது தயக்கம் மட்டுப்பட்டது.

“நான் உன்னை நம்புறேன் சித்து… நீயும் ஷானுவும் வாழ்க்கைல ஒன்னு சேர்ந்தா அதுக்கு முதல்ல சந்தோசப்படுற ஆள் நான் தான்… என் தங்கச்சிக்கு பிடிவாதமும் கோவமும் எவ்ளோ அதிகமோ அவ்ளோ பாசமும் அதிகம்… நீ அவளை நல்லபடியா பாத்துப்பியா?” என்று கேட்க அவனோ

“கண்டிப்பா அண்ணி… அவளுக்கு என் மேல இன்னும் காதல் வரல… அது எனக்கும் தெரியும்… ஆனா என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… அது ஒரு நாள் அவளுக்குப் புரியும்” என்று நம்பிக்கையுடன் உரைத்தான்.

இருவரும் திரும்பி வரும் போது விஸ்வஜித் ஷான்வியிடம் “சார் மோர்னு கூப்பிடாம ஒழுங்கா மாமானு கூப்பிடணும்” என்று அதட்டிக் கொண்டிருந்தான்.

சித்தார்த்தைப் பார்த்தவன் கேலியாய் “என்னடா உன் அண்ணிய சமாதானம் பண்ணிட்டியா? ஒரு நிமிடம் எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவச்சிட்டியே” என்று கிண்டலடிக்க

“அண்ணியார் கிட்ட எல்லா விவரத்தையும் சொல்லிட்டேன்டா அண்ணா… ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கு இந்த சீதாதேவி கிடைச்ச மாதிரி எனக்கும் என் ஊர்மிளா சீக்கிரமே கிடைச்சிடுவா” என்று ஷான்வியை ஓரக்கண்ணால் நோக்கியபடி காதலுடன் உரைத்தான்.

விஸ்வஜித்துக்கும் தன்விக்கும் இருவரையும் நினைத்து இப்போது தான் நிம்மதியானது.

“ஓகே! தனு மார்னிங் ஷானுவ பாக்கணும்னு சொன்னா.. அதான் கூட்டிட்டு வந்தேன்… அவளுக்கு யூனிவர்சிட்டிக்கு டைம் ஆகுதுடா… நாங்க கிளம்புறோம்… ஹோட்டல்ல பாக்கலாம்” என்று விஸ்வஜித் இருவரிடமும் சொல்லிவிட்டு தன்வியுடன் கிளம்பினான்.

அதன் பிறகு இருவரும் ஹோட்டலுக்குச் செல்ல ஆயத்தமாயினர். அதற்குள்ளாகவே ஆயிரத்தெட்டு வாத விவாதங்கள் நடைபெற்று முடிந்தது வேறு விசயம்!