💞அத்தியாயம் 25💞

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

“காட்! என்னால சித்தார்த்தோட பார்வைய ஃபேஸ் பண்ண முடியல… எவ்ளோ ஈசியா பிரபோஸ் பண்ணிட்டான்… ஒவ்வொரு தடவை அவன் கண் சிமிட்டுறப்போ ஹார்ட்ல மினி ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கு… அவனோட பார்வைய சந்திக்கிறப்போ அவன் கண்ணுல மின்னுற காதல் எனக்குள்ள வித்தியாசமான குழப்பத்த உண்டாக்குது”

                                                                 -ஷான்வி

நீண்டநாட்களுக்குப் பின்னர் தங்களின் வீட்டைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு நின்றாள் ஷான்வி. அவளுடன் நின்றிருந்த அஸ்வினி அவளது கரத்தைப் பற்றி அழுத்த தன்னைச் சமாளித்துக் கொண்டாள். வீட்டினுள் தன்வியுடன் மற்றொரு பெண்மணியின் குரல் கேட்டது. வள்ளியாக தான் இருக்க வேண்டுமென்ற ஊகத்துடன் வீட்டினுள் நுழைந்தனர் அஸ்வினியும் ஷான்வியும்.

அனிகா அவர்களைத் தொடர்ந்தவள் அவர்களுக்கு முன்னர் வீட்டுக்குள் ஓட அவளைக் கண்டதும் தன்வி குதூகலிப்பதும் இவர்களின் செவியில் விழுந்தது.

தன்வியிடம் அனிகா பேசிக் கொண்டிருக்கையில் ஹாலுக்குள் அடியெடுத்துவைத்த இருவரையும் தன்வி ஓடி வந்து கட்டிக் கொள்ள சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தார் வள்ளி. மரியாதை நிமித்தம் அவரை நோக்கிப் புன்னகைத்தவள் “எப்பிடி இருக்கிங்க ஆன்ட்டி?” என்றபடி சமையலறைக்குள் நுழைய அவர் பதிலுக்குப் புன்னகைத்தபடி பேச ஆரம்பித்தார்.

“எனக்கென்னம்மா, ஜோரா இருக்கேன்… மூனு பேருக்கும் ஃப்ளைட்ல வந்த டயர்ட் இருக்கும்… குளிச்சிட்டு வாங்க… சாப்பிடலாம்… அனிகுட்டிய நான் குழந்தையா பாத்தது… எவ்ளோ பெரிய பொண்ணா வளந்துட்டா!” என சரளமாக உரையாட ஆரம்பித்தார்.

ஷான்வி அவரிடம் காபி கேட்க “குளிக்காம பச்சைத்தண்ணி கூட தரமாட்டேன்… ஓடு! போய் குளிச்சிட்டு வா” என்றார் கண்டிப்புடன்.

“அப்போ அஸுக்காவும் அனியும்?” என்று அவர்களைக் கை காட்ட

“ரூல் எல்லாருக்கும் ஒன்னு தான்… அவங்களும் குளிச்சா தான் காபி, சாப்பாடு எல்லாம் கிடைக்கும்” என்றவரைப் பார்த்து வாயைப் பிளந்த ஷான்வி தனது உடமைகளை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

அந்த அறை அவளது சாம்ராஜ்ஜியம். ஒரு பக்கம் அவளுக்கென தந்தை அமைத்துக் கொடுத்த வார்ட்ரோப், அவளுக்காக வாங்கிப் போட்ட மேஜை, சுவரில் அவள் ஒட்டியிருந்த விஸ்வஜித்தின் படங்கள் என இன்னும் அதே பழைய நினைவுகளுடன் இருந்தது.

வள்ளி சொன்னபடி குளித்துவிட்டு அவள் ஹாலுக்கு வர அதற்குள் அனிகாவும் அஸ்வினியும் குளித்து உடைமாற்றி இருக்க தன்வியும் வள்ளியும் உணவுமேஜைக்கு மூவரையும் அழைத்தனர்.

விமானப்பயணத்தின் களைப்பு தீர உண்டவர்கள் வள்ளியின் கைமணத்தைப் பாராட்ட தவறவில்லை. வள்ளி அனிகாவுக்கு ஊட்டிவிட்டபடியே “நாளைக்கு நம்ம எல்லாரும் சேர்ந்து கல்யாணத்துக்கு ட்ரஸ் எடுக்கப்போறோம்… அதனால இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க பொண்ணுங்களா” என்றார். அஸ்வினி அதற்கு சரியென்று தலையாட்ட ஷான்வி எந்தப் பதிலும் சொல்லாமல் விழித்தாள்.

பின்னர் “ஆன்ட்டி! கண்டிப்பா நான் வரணுமா? நீங்க லேடீஸ் எல்லாருமா போய் வாங்கிட்டு வந்திடுங்களேன்” என்றாள். ஆடை வாங்க செல்லும் போது சித்தார்த் கட்டாயம் வருவான். அவன் பாட்டுக்குப் பெரியவர்கள் முன்னிலையில் ஏதேனும் கலாட்டா செய்து வைத்தால் ஷான்வியால் என்ன செய்ய முடியும்?

அனைத்தையும் யோசித்து தான் அவள் இந்த முடிவுக்கு வந்திருந்தாள்.  ஆனால் அவள் யாரை நினைத்து வரத் தயங்குகிறாளோ அவனது தாயார் அவளை விட கெட்டிகாரர்!

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“நாங்களாம் லேடீஸ்னா நீ யாரு? ஒழுங்கா எல்லார் கூடவும் சேர்ந்து வந்து உனக்குப் பிடிச்ச ஷேரிய செலக்ட் பண்ணு”

கண்டிப்பாய் சொன்னவரை பார்த்து மனதுக்குள் “சரியான கறார் கண்ணாத்தா! இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு தன்வி முழிக்கப் போறா!” என்று சொல்லிக் கொண்டாள். வெளியே சொல்லமுடியாதே! அக்காவின் மாமியாரை வெளிப்படையாக பட்டப்பெயர் வைத்து அழைக்கும் தைரியம் இப்போதைக்கு அவளுக்கு இல்லை.

“இல்ல ஆன்ட்டி! யூஸ்வலா எனக்கு ஷாப்பிங் போறது பிடிக்காது… நீங்களே உங்களுக்குப் பிடிச்ச மாதிரி எடுத்துட்டு வாங்க… எனக்கு நோ பிராப்ளம்” என்று சொல்லி இளித்து வைத்தாள் ஷான்வி.

“இது உன் அக்காவோட கல்யாணமா இல்ல என் அக்காவோட கல்யாணமா? உனக்குப் பிடிச்சத நீ தான் செலக்ட் பண்ணணும்”

“ஆன்ட்டி எனக்கு பிளாக் கலர் தான் பிடிக்கும்” என அவள் சொன்னதும் அனிகாவுக்கு ஊட்டுவதை நிறுத்தியவர்

“ஆனா கல்யாணத்துக்கு கருப்பு கலர் கட்ட கூடாது சின்ன மருமகளே! சிண்டுக்கு முண்டா பேசாம ட்ரஸ் எடுக்க எங்க எல்லாரோடவும் வரணும்… அவ்ளோ தான்… தனும்மா உன் தங்கச்சிக்குச் சொல்லிப் புரிய வை” என்று அவளின் வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

“எனக்குனு இருக்கிறது நீ, அஸுக்கா, தேஜூ மூனு பேரு தானே! நீயும் வர மாட்டேனு சொன்னா என்ன அர்த்தம் ஷானு? உனக்கு இன்னும் என் மேல உள்ள வருத்தம் போகலயா?” என தன்வி சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டபடி கேட்டு வைக்க மானசீகமாய் தன் தலையில் அடித்துக் கொண்டாள் ஷான்வி.

அஸ்வினியும் “நம்ம ஊருக்கு வந்திருக்கோம்… எல்லாருமா சேர்ந்து வெளியே போய் ஷாப்பிங் பண்ணிட்டு அப்பிடியே நாளைக்கு ஹோட்டல்ல சாப்பிடலாம்னு ப்ளான் பண்ணுனேன்… நீ இப்பிடி சொன்னா என்ன அர்த்தம்?” என அங்கலாய்க்க

“ஷானுக்கா நம்ம போகலாம்கா… ப்ளீஸ்கா” என்று அனிகா செல்லம் கொஞ்ச, வள்ளி அவளது பதிலை எதிர்பார்த்துக் கையில் சாத உருண்டையுடன் காத்திருந்தார்.

“சரி சரி! நான் வர்றேன் தாய்க்குலங்களே… ஆனா ஒன்னு ஒரு நாள் முழுக்க கடைக்குள்ள சுத்துனிங்கனா அவ்ளோ தான்… போனோமா, ட்ரஸ் எடுத்தோமா, வந்தோமானு இருக்கணும்” என்று கொஞ்சம் பிகு செய்துவிட்டுச் சம்மதித்தாள் அவள்.

நால்வரின் முகத்திலும் மகிழ்ச்சி மின்னியது. அப்போது வீட்டுக்குள் யாரோ வரும் அரவம் கேட்க தேஜஸ்வினியுடன் வந்தார் கார்த்திக்கேயன். அவரைக் கண்டதும் அஸ்வினியும் ஷான்வியும் எழுந்து நிற்க

“சாப்பிடுறப்போ கடவுளே வந்தாலும் எழுந்திருக்க கூடாதும்மா… அது அன்னத்த அவமதிக்கிற மாதிரி… உக்காருங்க… வள்ளி எனக்கும் ஒரு தட்டை எடுத்து வை” என்று தானும் அவர்களுடன் அமர்ந்தார் கார்த்திக்கேயன்.

தேஜஸ்வினி ஷான்வியின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள் “அமெரிக்கா போனதும் ஒரு ஷேட் கலர் கூடிட்ட ஷானு! கல்யாணம் முடிஞ்சு திரும்புறப்போ நானும் உன்னோட வருவேன்… சென்னை வெயில்ல என்ன தான் சன் ஸ்கிரீன் போட்டாலும் ஸ்கின் டேன் ஆகுதுடி” என்று குறைபட்டாள்.

அவளது பேச்சில் குபீரென நகைத்தாள் ஷான்வி. தன் கழுத்தைக் கட்டியிருப்பவளின் கன்னத்தில் முத்தமிட்டவள்

“உன்னோட நகைச்சுவைய நான் யூ.எஸ்ல ரொம்ப மிஸ் பண்ணுனேன் தேஜூ” என்று சொல்லி கலீரென மீண்டும் நகைக்க, தேஜஸ்வினி அவள் தலையில் செல்லமாக குட்டு வைத்தவள் அஸ்வினியிடம் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்.

வள்ளி கார்த்திக்கேயனுக்குப் பரிமாறி விட்டு அமர அனிகா சித்தியின் மடியில் அமர்ந்துகொள்ள அவளது சிகையை கோதியபடி தாய் தந்தையரைப் பற்றி பேச ஆரம்பித்தாள் தேஜஸ்வினி.

அஸ்வினியோ அவர்களைக் காண தனக்கு விருப்பமில்லை என்று ஒரேயடியாக மறுத்துவிட்டாள். கார்த்திக்கேயன் கூட அவளைச் சமாதானம் செய்ய முயன்றார்.

“குமரன் ரொம்ப மனசொடஞ்சு போயிட்டான்டா அஸு! பேத்தி பிறந்தப்போ பாத்தது! அவ இங்க வந்ததும் என்னெல்லாம் செய்யணும்னு லிஸ்ட் போட்டு வச்சிருக்கான்… அவன் பாசக்காரன்… என்ன எப்போவும் வெளியாளுங்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்கனு யோசிச்சே வாழ்ந்து பழகிட்டான்… நம்ம சமுதாயத்துல முக்கால்வாசி பேரு ‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்களேனு’ பயந்து பயந்து தான் வாழுறவங்க தானே… கொஞ்சம் யோசி”

“அவங்க பேத்திய பாக்கட்டும் அங்கிள்… நான் அதுக்கு தடையா இருக்க மாட்டேன்… ஆனா எனக்கு அப்பா அம்மாவா இனிமே அவங்க நடிக்க வேண்டாம்… வயித்துப்பிள்ளையோட இருந்தவளை அந்த ராட்சசன் கூட போய் வாழாட்டா குடும்பகவுரம் போயிடும்; நீ இப்பிடி விவாகரத்து வாங்குனா தங்கச்சிக்கு கல்யாணம் ஆகாது, நாங்க எல்லாரும் மருந்து குடிச்சு சாகுறோம்னு மனசளவுல எவ்ளோ கஷ்டப்படுத்துனாங்கனு உங்களுக்கு நல்லாவே தெரியும் அங்கிள்… அவங்கள என்னால என்னைக்குமே மன்னிக்க முடியாது”

அவள் பேச்சில் நியாயம் இருப்பதால் யாரும் அவளை வற்புறுத்தவில்லை. மாலை கமலாவும் குமரனும் பேத்தியைப் பார்க்க வந்த போது வள்ளி கார்த்திக்கேயனுடன் அவர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டனர் என்ற செய்தி தன்வியின் மொபைலில் இருந்து அனுப்பப்பட்ட பின்னர் தான் மீண்டும் வீட்டுக்குத் திரும்பினாள்.

அவளை விட வந்த விஸ்வஜித் தன்வியிடம் நாளை தனஞ்செயனுடன் சேர்ந்து தானும் சித்தார்த்தும் மணிகண்டனின் நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருந்தவரைக் காண திருப்பூர் செல்வதாகச் சொன்னவன் பெண்கள் அனைவரும் சென்று ஷாப்பிங்கை முடிக்குமாறு கூறிவிட்டான்.

தன்வி சரியென்று சொல்ல “அஸுவ கொஞ்சம் பாத்துக்கோ தனு… இன்னைக்கு ரொம்ப எமோசனலா இருக்கா… வர்ற வழில அந்த ராஸ்கல் ரோஹன் அவனோட புது பொண்டாட்டி கூட ஜோடியா பைக்ல போறத பாத்துட்டா… அதுக்கப்புறம் அவ முகமே சரியில்ல” என்று தோழியின் மனதை தேற்றும் பொறுப்பை வருங்கால மனைவியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றான்.

தன்வியும் ஷான்வி, தேஜஸ்வினியுடன் சேர்ந்து மாத சஞ்சிகைகளில் வெளியான சில பல மொக்கை நகைச்சுவைகளை அள்ளிவிட்டு அஸ்வினியை ஒருவாறு சிரிக்க வைத்துவிட்டாள். கூடவே விஸ்வஜித்தும் மற்ற இரு ஆண்களும் திருப்பூர் செல்லும் விவரத்தையும் சொல்லிவிட்டாள்.

ஷான்விக்கு நாளை சித்தார்த் வர மாட்டான் என்ற நிம்மதி. அவள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம் வரவும் அஸ்வினி சந்தேகமாய் நோக்க ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்துவைத்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அதன் பின்னர் அனிகாவைத் தூங்கவைத்துவிட்டு அமெரிக்காவில் நடந்த சம்பவங்களை மூன்று பெண்களும் பேசத் துவங்க தேஜன்ஸ்வினி அதை சுவாரசியமாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.

தனஞ்செயனின் அறிமுகம், அஸ்வினியின் மாற்றம், விஸ்வஜித்துக்கு தன்வியின் மீது வந்த காதல், ஷான்வியும் சித்தார்த்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எலியும் பூனையுமாய் அடித்துக் கொள்வது, கிளாராவை எண்ணி உருகும் கென்னடி என அவர்களின் பேச்சு நள்ளிரவு வரை நீண்டது.

மீதமுள்ளவற்றை மறுநாள் பேசிக்கொள்ளலாம். திருமணத்துக்குத் தான் இன்னும் ஒரு வாரம் இருக்கிறதே என்று எண்ணியபடி துயிலில் ஆழ்ந்தனர் நால்வரும்.

மறுநாள் பொழுது புலர்ந்த போது உற்சாகமாய் எழுந்தவர்கள் ஆடை எடுக்கச் செல்லத் தயாராயினர். வள்ளி நல்லநேரத்தில் கிளம்பலாம் என்று சொல்லியிருக்க நான்கு பெண்களும் எளிமையான பாஸ்டல் வண்ணங்களடங்கிய அனார்கலி சுடிதாரில் தயாராக அனிகா அழகாக காட்டன் ஃப்ராக்கில் தயாரானாள்.

கூந்தலை போனிடெயிலாக விட்டிருந்த ஷான்வியை அஸ்வினி பக்கவாட்டில் பின்னலாகப் போடச் சொல்ல அவளும் பின்னல் போட்டுக்கொண்டாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்கு தான் இன்று முற்றிலும் வேறு ஒருத்தியாக இருப்பது போல தோன்றியது.

தன்வியுடன் சேர்ந்து ஹாலின் மையத்தில் மாட்டியிருந்த மணிகண்டன் பூர்ணாவின் புகைப்படத்தின் முன்னே நின்றவள் தன்வியின் மணவாழ்க்கை நல்லபடியாக இருக்கவேண்டுமென பெற்றோரிடம் வேண்டிக் கொண்டாள்.

தன்விக்குப் பெற்றொர் புகைப்படத்தில் சிரிப்பது தன்னை ஆசிர்வதிப்பது போல தோணவும் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தைத் தழுவி ஓடியது.

ஷான்வி அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு நிற்க “அவங்க உங்களோட தான் எப்போவும் இருப்பாங்க கேர்ள்ஸ்… சோ ஸ்மைல் ப்ளீஸ்” என்ற சித்தார்த்தின் குரல் கேட்கவும் தன்வி மகிழ்ச்சியுடனும் ஷான்வி அதிர்ச்சியுடனும் திரும்பினர்.

அவனுக்கே உரித்தான குறும்பு புன்னகையுடன் நின்றிருந்தான் சித்தார்த். அவனது பார்வை ஷான்வியைத் தழுவ வழக்கம் போல அவளுக்குள் வித்தியாசமான உணர்வு குமிழிடத் தொடங்கியது.

“எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல… அதான் நான் திருப்பூர் போகல” என்றவனின் பேச்சை அவளும் நம்பியிருப்பாள்! அவன் வழக்கம் போல கண் சிமிட்டாது இருந்திருந்தால்!

அவனிடம் நலம் விசாரித்தவர்களிடம் “இப்போ கொஞ்சம் பரவால்ல கேர்ள்ஸ்.. கிளம்பலாமா?” என்று பதிலுக்குக் கேட்டான்.

நால்வரும் சரியென தலையாட்ட அனிகாவைத் தூக்கிக் கொண்டவன் “அம்மாவும் அப்பாவும் அண்ணாவோட கார்ல வருவாங்க… நான் அவசரத்துல டாடி காரை எடுத்துட்டு வந்துட்டேன்” என்று அஸ்வினியுடன் கதை பேசியபடியே காரின் பின் கதவைத் திறந்துவிட்டான்.

தன்வியை நடுவில் அமரவைத்துவிட்டு அஸ்வினியும் தேஜஸ்வினியும் அவளுக்கு இடவலமாக அமர்ந்து கொண்டனர். ஷான்வி தான் எங்கே அமர என்று விழிக்க ஒட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் அவளுக்காக முன் கதவைத் திறந்துவிட்டான்.

இவனருகில் அமர்ந்தால் பார்வையாலேயே இம்சிப்பான் என்று யோசித்தவள் அஸ்வினியின் மடியில் சமத்துப்பெண்ணாய் அமர்ந்திருந்த அனிகாவை முன்னே வருகிறாயா என்று கேட்க அவளோ அம்மாவுடன் இருந்து கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டாள்.

வேறு வழியின்றி அவனருகில் அமர கார் சாலையில் வேகம் பிடித்தது. காரில் அவனை நம்பி ஐந்து ஜீவன்கள் இருப்பதை உணர்ந்ததாலோ என்னவோ சித்தார்த்தின் பார்வை சாலையில் மட்டும் பதிந்திருந்தது.

பின்னே இருந்தவர்களின் கேள்விக்கு அவ்வபோது பதில் அளித்தவன் கார் ஓட்டுவதில் மட்டும் கவனமானான்.

இவ்வளவும் ஆடையகம் வரும் வரை தான். அங்கே சென்றதும் வள்ளியுடன் சேர்ந்து மற்றவர்கள் புடவைத் தேர்வில் மூழ்கிவிட ஷான்வி ஒரு ஓரமாய் கார்த்திக்கேயனுடன் அமர்ந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் சித்தார்த்தும் அங்கே வர தந்தையும் மகனும் அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். அவர்களின் பேச்சு சுவாரசியமாய் இருக்க ஷான்வியும் அவர்களுடன் கலந்து கொண்டாள்.

இருவரும் தோழர்களைப் போல பேசிக் கொள்ள தானும் தந்தையும் இப்படி தானே அரட்டை அடிப்போம் என்று பழைய நினைவுகளில் மூழ்கினாள் அவள்.

விஸ்வஜித்திடம் வீடியோ காலில் தான் வாங்கப் போகும் பட்டுப்புடவையைக் காட்டி நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்த தன்வியைப் பார்த்ததும் நிகழ்காலத்துக்குத் திரும்பினாள் ஷான்வி. அதன் பின்னர் அஸ்வினி தங்கள் மூவருக்கும் ஒரே வண்ண பட்டுப்புடவையைத் தேர்ந்தெடுக்க அவளுக்கும் அப்புடவை பிடித்திருந்தது.

அன்றைய ஷாப்பிங் முடிந்து, மூவருக்கும் புடவைக்குச் சட்டை தைக்க அவர்களுக்குப் பழக்கமான தையல்காரப்பெண்மணியிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் போது கார்த்திக்கேயன் வள்ளி மீதும் அவர்களின் புத்திரச்செல்வங்கள் மீதும் அவளுக்குப் பெரும் மதிப்பு உண்டானது. அவர்கள் வீட்டு மருமகளாக தன்வி எவ்வித குறையுமின்றி வாழ்வாள் என்ற நிம்மதி பிறந்தது.

அதே போல திருமணத்தை கோயிலில் எளிமையாக முடித்துக்கொள்ள இருந்ததால் வரவேற்பை பெரிய ஹோட்டலில் வைத்துக் கொள்ளலாம் என்ற சித்தார்த்தின் கோரிக்கையை ஏற்றனர் அனைவரும். நெருங்கியவர்களுக்கு மட்டும் வரவேற்புக்கான பத்திரிக்கை அச்சிடப்பட சித்தார்த்துடன் சேர்ந்து அதை அத்தைக்கும் சித்தப்பாவுக்கும் வைத்துவிட்டு வந்தாள் ஷான்வி.

“என்னடா இன்விடேசன் குடுக்கிறாளேனு அவசரப்பட்டு ரிசப்சனுக்கு வந்துடாதிங்க… நீங்க யாருமே இல்லைனாலும் மணிகண்டனோட பொண்ணுங்க அனாதை இல்லங்கிறது உங்களுக்கு புரியணும்னு தான் இன்விடேசன் குடுத்தேன்.. சோ நீங்களோ உங்க உதவாக்கரை மகனோ, பணத்தாசை பிடிச்ச தம்பியோ ஹோட்டல் பக்கம் வரவே கூடாது… வந்தா நீங்க ரெண்டு மாசம் பண்ணுன கொடுமை எல்லாத்துக்கும் சேர்த்து அசிங்கப்படுவிங்க” என்று அவள் எச்சரித்த போதே சச்சிதானந்தத்தின் முகம் கறுத்தது.

கூடவே திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை என தன்விக்கு சாப்பாடு கொடுக்காது அடித்துத் துன்புறுத்தியது, அதை எதிர்த்துக் கேட்ட ஷான்வியை அறைக்குள் பூட்டிவைத்தது, வார்த்தைக்கு வார்த்தை அனாதை கழுதைகள் என்று குத்திக் காட்டியது என எல்லாவும் நினைவுக்கு வந்தது. தாங்கள் செய்த மிகப்பெரிய தவறு தேஜஸ்வினியை நம்பி வீட்டுக்குள் அனுமதித்தது மட்டும் தான் என்பது காலம் கடந்து அவரது புத்தியில் உறைத்தது.

தங்களுக்கு ஆதரவாய் இருப்பது போல நடித்து தாங்கள் அசந்த நேரத்தில் இரு பெண்களையும் நாட்டை விட்டு அனுப்பி வைத்த அவளது சாமர்த்தியத்தை ஷான்வியின் வாயால் கேட்ட போது செருப்பால் அடித்த மாதிரி இருந்தது சச்சிதானந்தத்துக்கும் சந்திரகலாவுக்கும்.

இதை வேடிக்கை பார்த்த சித்தார்த் அவளை அங்கிருந்து கிளப்பிச் செல்ல முயன்றவன் “பட் சார் ஒரு விசயம்! அண்ணாவோட கல்யாணத்துக்கு நீங்க வர வேண்டாம்.. இன்னும் மூனு வருசம் கழிச்சு எங்க ரெண்டு பேருக்கும் கிராண்டா வெட்டிங் நடக்கும்… அதுல கண்டிப்பா நீங்க கலந்துக்கணும்” என்று சொல்லி கண் சிமிட்டிவிட்டு ஷான்வியைத் தன்னுடன் இழுத்துச் சென்றான்.

அவள் காரில் அமர்ந்ததும் சண்டையிடத் தயாராக அவளை கையமர்த்தியவன் “லிசன்! பிடிக்காதவங்கள கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி தான் எரிச்சல் படுத்தணும்னு அவசியம் இல்ல… சிரிச்சுக்கிட்டே கூட அசிங்கப்படுத்தலாம்… இதுல்லாம் உனக்கு புரியாது ஆங்ரி பேர்ட்” என்று வியாக்கியானம் பேச வழக்கம் போல அவனது பேச்சுத்திறமையின் முன் வாயடைத்துப் போனாள் ஷான்வி.